பறத்தல் - கதைச் சுருக்கமும் - வாசிப்பு அனுபவமும்
- உயிர்மெய்யார்

- May 17
- 1 min read
Updated: Jun 13

பறத்தல் - கதைச் சுருக்கம்
முட்டைக்கோஸ் செடிக்கடியில் சூரிய ஒளியில் இருந்த கம்பளிப் பூச்சியை, ஜானி எடுத்து இருட்டான ஓர் அட்டைப் பெட்டியில் போட்டு, தன் அறையில் வைக்கிறான். அவனுக்கு அந்தக் கம்பளி பூச்சி அழகாகத் தெரிகிறது. ஜானியின் தங்கைக்கு அது அசிங்கமாகத் தெரிகிறது. அவன் அதற்கு ‘டிராகன்’ என்று பெயர் வைக்கிறான்.
அவன் அட்டைப் பெட்டியைத் திறக்கும் போது வெளிச்சம் இருக்கும். மூடி இருக்கும் போது இருள் இருக்கும். துவக்கத்தில் அதிக வெளிச்சமும் குறைந்த இருளும் இருந்தது மறைந்து, குறைந்த வெளிச்சமும் அதிக இருளும் இருக்கிற காலம் வரும். ஜானிக்கு உடல் நிலை மோசமாகிவிடும்.
ஒரு நாள். அது வண்ணத்துப் பூச்சியாகிவிடும். அவனுக்கு அந்த மாற்றம் அழகாகத் தெரியவில்லை. தங்கை ‘வெகு அழகு’ என்கிறாள். அவன் மூச்சு நின்று போகிறது. அது பறந்து போகிறது.
பறத்தல் - வாசிப்பு அனுபவம்
ஒரு வாசகர் மிக அழகாகச் சொன்னார்: Existential Crisis பற்றிய சிறப்பான பதிவு இந்தக் கதை. கம்பளிபூச்சியின் படலம் முடிகிறது. பட்டாம்பூச்சியின் படலம் தொடங்குகிறது. எதையும் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டியதில்லை என்றார். எனக்கு என்னவோ, இந்தச் சிறுகதைத் தொகுப்பின் முதல் கதை நினைவுக்கு வருகிறது. ‘என் தலைக்கு மேல் சரக்கொன்றை’. லெண்டினாவின் கணவர் இறந்துப் போகிறார். சரக்கொன்றை திட்டம் பிறக்கிறது. லெண்டினா மறைந்துப் போகிறாள். சரக்கொன்றை மலர்ந்து நிற்கிறது. ஒரு வேட்டைக்காரரின் மரணம் கதையை எடுத்துக்கொள்வோம். யானை, குரங்கு, பன்றி எல்லாம் இறந்து போகிறது. ஆனால், பன்றியின் பல்லையும், துப்பாக்கியையும், வேட்டைக்காரன் என்ற திமிரையும் புதைத்துவிட்டு, வேட்டைக்காரர் புதிய மனிதராகப் பிறக்கிறார். கம்பளிபூச்சியிலிருந்து பட்டாம்பூச்சிக்குப் பயணம். விமானத் தளத்தை விட்டு சிப்பாய்கள் வெளியேற்றம். விமானத் தளத்தை விற்று சிறுவன் புதிய வாழ்க்கைக்குப் போகிறான். ஒரு கடிதம் கதை. கடிதத்தைக் கொண்டு வந்த போராட்ட வீரன் மரணம். ஆனால் நீளக்காலான் விஷயம் அறிந்து அந்த நினைவைத் தூக்கிச் சுமந்த நிலைக்கு மாறுகிறான். மூன்று பெண்கள் கதை. பாட்டியின் எதிர்பாரா உறவில் மகளின் வாழ்க்கைத் துவக்கம். மகளின் தியாகத்தில் பேத்தியின் வாழ்க்கைப் பயணம். பேத்தியின் காதலில் புதிய குழந்தையின் சுவாசம் தொடக்கம். கம்பளிபூச்சியிலிருந்து பட்டாம்பூச்சிக்குப் பயணம். ஓர் எளிய கேள்வி கதை. அவளுக்குக் கெட்ட கனவு வருகிறது. கணவனை இழுத்துச் சென்ற இராணுவ கேப்டனிடம் மேலாடையை அவிழ்ப்பதாக பாவனை செய்து, கணவனை மீட்டு புதிய துணிவான வாழ்க்கைக்குப் பயணம். ஸோனி கதை. ஸோனி மரணம். காதலி காதலிலிருந்தும், அவனது நினைவிலிருந்தும் வெளிவந்து, ஃப்ளாப்பியை லாக்கரில் பூட்டிவிட்டு, தெளிவான வாழ்க்கைக்குப் பயணம். இப்படி ஒரு வாசகர் சொன்னது போல ஒரு நாவலைப் பிச்சிப் பிச்சிப் போட்டு சிறுகதைகளை எழுதினார்களா? அல்லது சின்ன சின்ன கதைகளைச் சேர்த்தால் ஒரு நாவல் உருவாகும் அளவுக்கு சிறுகதைகளை எழுதினார்களா?
கதையில் இன்னொரு விடயம் எனக்குப் பிடித்திருந்தது.
கண்ணோட்டம். கதையின் துவக்கத்தில் தங்கச்சிக்கு கம்பளிப் பூச்சி அருவருப்பாகத் தெரியும். ஆனால் ஜானிக்கு கம்பளிப்பூச்சி அழகாகத் தெரியும். கம்பளிப்பூச்சி பட்டாம்பூச்சியானதும் ஜானிக்கு அது அருவருப்பாகத் தெரியும். தங்கச்சி அதன் அழகைக் கண்டுத் துள்ளிக் குதிப்பாள். ஒவ்வொருத்தரின் உலகப் பார்வையும் வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொருவருடைய உலகப் பார்வையும், அந்த இடத்தில், காலத்தில், கொடுக்கப்பட்ட அறிவு, அனுபவம், நம்பிக்கைகள், கருத்தாக்கங்கள், உறவு ஆகியவைகளால் தீர்மானிக்கப்படுகிறது. கொஞ்சம் பொறுமை இருந்தால் புரிதல் தானாக வரும்.
ஒரு வாசகர் சொன்னார்: பறத்தல் கதை நம்பிக்கையைக் கொடுக்கிறது. கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் பிரச்னைகளையும் போராட்டங்களையும் பேசிவிட்டு, கடைசிக் கதையில் ‘கவலைப்படாதீர்கள். நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். கம்பளிப் பூச்சி ஒரு நாள் பட்டாம் பூச்சியாக மாறும்’ என்று ஆசிரியர் சொல்வது போல இருக்கிறது என்றார்.
எனக்கு கம்பளிபூச்சியும் அழகு! பட்டாம்பூச்சியும் அழகு!!
உங்களுக்கு?
என் தலைக்கு மேல் சரக்கொன்றை
(ஆசிரியர் - டெம்சுலா ஆவ்; தமிழில் - எம்.ஏ. சுசீலா; முதல் பதிப்பு - 2009;
தமிழில் முதல் பதிப்பு - 2022; நற்றிணைப் பதிப்பகம்)
உயிர்மெய்யார்
17.05.2025, மெல்பர்ன்
**********



Comments