ஒரு வேட்டைக்காரரின் மரணம் - கதை - வாசிப்பு அனுபவம்
- உயிர்மெய்யார்
- 14 minutes ago
- 4 min read

ஒரு வேட்டைக்காரரின் மரணம் - கதைச் சுருக்கம்
இம்சனோக் ஒரு வேட்டைக்காரர். பழைய துப்பாக்கிக்கு எண்ணெய் போடுவதில் கதைத் துவங்குகிறது. வயல்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றியைக் கொன்றாக வேண்டும்.
ஏற்கனவே இம்சனோக் முரட்டுத்தனமாக ஒரு யானையைச் சுட்டு வீழ்த்தியிருந்தார். ஒரு படையுடன் கிளம்பி யானை வரும் இடத்திற்கு வருகிறார். காத்திருக்கிறார். யானை எதையெதையோ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. பிறகு அசையாமல் நிற்கிறது. சுட்டபிறகு யானை போய் விழ ஒரு குழியை வெட்டியிருக்கிறார்கள். யானை இவர்களைப் பார்த்து விட்ட மாதிரி இருக்கிறது. இவரோடு வந்தவர்கள் எல்லோரும் ஓடி விடுகிறார்கள். இவரை நோக்கி வரும் யானையைச் சரியான இடத்தில் சுடுகிறார். யானை இறக்கிறது. அதற்காக அரசாங்கத்திடமிருந்து பரிசுத் தொகை கிடைக்கிறது. ஒரு துப்பாக்கியும் வெகுமதியாக கிடைக்கிறது. ஆனால் பரிசுத் தொகையை வாங்கிக் கொண்டு, துப்பாக்கியை வேண்டாம் என்று மறுத்து விடுகிறார்.
சில காலத்திற்கு முன்பு, அறுவடை செய்யும் தானியங்களை பலக் குரங்குகள் நாசம் செய்து வந்தன. முக்கியமாக ஓர் தலைமை ஆண் குரங்கு. பெண்களையும் குழந்தைகளையும் பயமுறுத்தின. வயலுக்கும், கிராமத்திற்கும் இடையே ஒரு குடிசையைக் கட்டி அதில் தானியங்களை வைத்திருப்பார்கள். அதைச் சுட்டு வீழ்த்தி தானியங்களைக் காக்கவேண்டும். ஒரு தந்திரம் செய்கிறார். முதலில் சுதந்திரமாக குரங்குகளை உலவ விடுகிறார் இம்சனோக். துப்பாக்கியை எடுத்துக் கொண்டுப் போய் அந்த ஆண் குரங்கைச் சுடுகிறார். அது அடிபட்டும், தன் குடும்பத்தினரைக் காப்பாற்றிவிட்டு, கதவோரத்தில் விழுந்து விடுகிறது. அந்த ஆண் குரங்கை காட்சிக்கு வைக்கின்றனர். குரங்கின் ஆவி அவரைத் தொல்லை செய்த வண்ணம் இருக்கிறது.
யானைக்குப் பிறகு குரங்கு. இப்பொழுது பன்றி. பன்றியைச் சுடத்தான் துப்பாக்கியை சரி செய்துக் கொண்டிருக்கிறார். தன் மருமகனை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் போகிறார். சிறிது ஓய்வெடுக்கிறார்கள். திடீரெனப் பன்றி பாய்கிறது. சுடுகிறார். விழுகிறது. எழவில்லை. மருமகன் பயந்து ஓடிவிடுகிறான். இம்சனோக் பின்னால் பார்த்துக் கொண்டே ஓடி வருகிறார். இருவரும் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். பன்றியின் உடலைப் பார்த்து எடுத்து வர கிராமத்து இளைஞர்கள் காட்டிற்குப் போகிறார்கள். ஆனால் அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இம்சனோக் நோய் வாய்ப்படுகிறார். பன்றி பற்றி கொடுங்கனவு அவரைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இம்சனோக்கும் அவரது மனைவியும் காட்டிற்குச் சென்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அவர் சுட்ட இடத்திற்கருகே உள்ள ஓர் ஓடைக்கருகே கரடியின் பல், எலும்பு எல்லாம் கிடக்கிறது. தன் மயிரில் ஒரு கற்றைப் பிடுங்கி எறிகிறார். இருவரும் திரும்பி வருகிறார்கள். வீட்டிற்கு வந்து இம்சனோக் பன்றியின் பல், துப்பாக்கி, வேட்டைக்காரர் என்ற எண்ணம் எல்லாவற்றையும் அவரது வீட்டுத் தோட்டத்தில் புதைக்கிறார் என்று கதை முடிகிறது.
ஒரு வேட்டைக்காரரின் மரணம் - வாசிப்பு அனுபவம்
மெல்பர்ன் வாசகர் வட்டத்தில் ஒருவர் ஒரு நிகழ்வைப் பகிர்ந்துக் கொண்டார். சென்னை மெரினா பீச்சில் மீன் வாங்கப் போகும் போது, அந்த மீன்களின் கண்களைப் பார்க்கும் போது, ஒரு பரிதாபம் தொற்றிக் கொள்ளும் என்று வருத்தத்துடன் சொன்னார். அதைப் போல இம்சனோக் அந்த யானையைக் கொன்ற பிறகு, அதன் கண்களில் கண்ணீர் தேங்கியிருப்பதைப் பார்க்கிறார். ‘அந்த மிருகம் தன்னை அழித்தவரிடம் ஏதோ ஒரு செய்தி சொல்ல எண்ணியது போல…’ என்று எழுதுகிறார் கதாசிரியர். இம்சனோக்கின் வேட்டைத் தொழிலில் தான் சுட்ட மிருகங்களைப் பற்றி இதுவரை வேறு எந்த விதமாகவும் நினைத்துப் பார்த்தில்லை. ‘அதற்கான உரிமை தாராளமாகத் தனக்கு உண்டு என்று மட்டுமே அவர் நினைத்து வந்தார்.’
தமிழகத்தில் தமிழர்களின் திணையியல் வாழ்க்கைப் பண்பாட்டைப் பற்றிப் பேசுவதோடு, நூறு பேர் இணைந்து நடத்துகிற தாளாண்மை கூட்டுப் பண்ணைக்கு தலைமையேற்று நடத்தும் இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன் என் நண்பர். அவர் கூறுவார்: இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களின் மேலும் தங்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் அவைகளை என்னவேணுமென்றாலும் செய்யலாம் என்றும் பார்க்கிற பார்வை ‘மனிதர்களை மையப்படுத்திய’ Anthropocentric பார்வை. ஆனால் அது உயிர்களின் பன்முக நிலையை மதிக்காது. ‘எல்லா உயிர்களுக்கும்’ மதிப்பளிக்கும் உயிர்மைப் பார்வை வேண்டும். மனிதன் இயற்கையின் ஓர் அங்கம் மட்டுமே என்றும், உயிர்களுக்கிடையேயான சங்கிலியும் உறவும் அறுந்து போக அனுமதிக்கக் கூடாது என்றும் சொல்லுவார்.
அந்தப் பார்வை இருந்தால் இரைக்கும் உணவுக்கும் உள்ள வேறுபாடு தெரியும். இரைக்கும் உணவுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இரை இயற்கையாகக் கிடைப்பது. மிருகங்கள் ஒன்றையொன்று இரையாக்கும். உணவோ செய்யப்படுவது. மனிதர்கள் தான் உணவைத் தயாரிக்க முடியும். ஆனால் இன்று, இரையைத் தாண்டி, உணவைத் தாண்டி, வேட்டை நடக்கிறது. சிறு கூட்டம் பெருங்கூட்டத்தை நோக்கிய வேட்டை. சாப்பாட்டிற்காகச் செய்வது உணவு. விற்பதற்காகச் செய்வது கொலை. இது வாழ்வையும், உலகையும், உயிர்களையும் பார்க்கின்ற பார்வையில் இருக்கிறது. எல்லா உயிரினங்களுக்கும் மதிப்பு உண்டா? எல்லா உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமா?
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தானே நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. உலகம் எல்லா உயிரனங்களும் வாழும் ஓரிடம். It is a shared space என்று ஒரு வாசகர் சொன்னது எவ்வளவு உண்மை? ஐநா சபை நீடித்த நிலைத்த வளர்ச்சிக் குறியீடுகளை அறிமுகப்படுத்தி, பல்லுயிர் காக்க திட்டம் தீட்டுகிறது. அதில் கையெழுத்திட்ட அதே தேசங்கள் பல்லுயிரைச் சுரண்டுகிறதே! இந்தத் தள்ளாட்டம் ஏன்?
கதையிலும் யானையைக் கொன்ற பிறகு இம்சனோக்கிற்கு ஒரு தள்ளாட்டம் வரும். ‘…நிலத்தின் மீது யார் ஆதிக்கம் செலுத்துவது என்று காலங்காலமாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போட்டிக்கு நடுவே இந்தக் குறிப்பான சம்பவத்தில் (யானையைச் சுட அரசாங்கம் கூறி அவர் சுட்ட சம்பவத்தில்) அவர் ஏன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்?’ என்ற தள்ளாட்டம் வரும். தள்ளாட்டம் கூடாது. யார் செய்யச் சொன்னாலும் செய்ய மறுக்க வேண்டும்.
அப்படி இம்சனோக் மறுத்த சம்பவம் உண்டு. அது அவர் சுயமரியாதையுடன் நடந்த ஓர் அனுபவம். அது என்ன? அரசாங்கத்தின் ஆணையை ஏற்று அந்த யானையைக் கொல்ல, இம்சனோவிற்கு துப்பாக்கியும் வெடிமருந்தும் கொடுக்கப்பட்டது. இத்தனை நாட்களுக்குள் யானையைக் கொன்று விட வேண்டும் என்றும், இல்லையென்றால் வேட்டை உரிமம் ரத்து செய்யப்படலாம் என்ற ‘லேசான அச்சுறுத்தலும்’ கொடுத்த போது அவருக்கு அது பிடிக்கவில்லை. இந்த ‘சாகி’புகளுக்கு என்ன தெரியும் என்று அலுத்துக்கொள்கிறார். பிறகு யானையைக் கொன்ற பிறகு அரசாங்கம் வெகுமதியைக் கொடுத்து, துப்பாக்கியையும் அவரையே வைத்துக் கொள்ளச் சொல்லும். இம்சனோக் வெகுமதியை வாங்கிக் கொள்வார். ஏனென்றால் அது அவர் செய்த வேலைக்கு ஊதியம். ஆனால் அரசு கொடுக்கும் துப்பாக்கியை வாங்க மறுத்து விடுவார். ஏனென்றால் அது அவரை அரசாங்கத்திற்கு நிரந்தர ‘அடிமை’யாக ஆக்கிவிடும் என நினைப்பார். தன் வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் தனக்குத் தேவை என்பதில் உறுதியாக இருப்பார். தன்மானம் பெரிது என்று முடிவெடுப்பார்.
என் உணவை நான் தீர்மானிக்க முடிகிறதா? உடையை? தொழிலை? கல்வியை? மருந்தை? யாரோ முடிவு செய்கிறார்கள். பாமயன் சொல்வது போல திணையியல் வாழ்க்கை யாரையும் வலுக்கட்டாயமாக சார்ந்திராத வாழ்க்கையாக இருக்க வேண்டும். அல்லது இப்படிச் சொல்லலாம். வாழ்க்கை தற்சார்பு வாழ்க்கையாக இருக்கவேண்டும். அதைத் தான் சாதுர்யமாக, அரசாங்கம் கொடுக்கும் துப்பாக்கியை மறுப்பதில், இம்சனோக் செய்திருப்பார்.
கதையை மறுவாசிப்பு செய்யும் போது, விலங்குகளின் பார்வையில் படித்த போது, கண்ணீர் தான் வந்தது. ஒரே ஒரு எடுத்துக்காட்டுக் கொடுக்கிறேன்.
குரங்குக் கூட்டத்தின் தலைமைக் குரங்கான அந்த ஆண்குரங்கை, இம்சனோக் கொல்லும் போது, ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடக்கிறது. இம்சனோக் துப்பாக்கியின் விசையை அழுத்துகிறார். குண்டு குரங்கின் கொழுத்த பக்கவாட்டுப்பகுதியிலேயே பாய்கிறது. ‘குடிசையில் இருந்து ஒற்றைக் கதவு வழியாகத் தன் கூட்டம் முழுவதும் வெளியேறிச் செல்லும் வரை, அது அங்கேயே அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தது’ என்று கதாசிரியர் எழுதுகிறார். தானியங்களைத் தின்று தீர்க்கும் அந்தக் கொடூரக் குரங்குகள் செத்து மடியட்டும் என்று அது வரை இருந்த எண்ணம், இப்பொழுது திசை மாறி ‘ஐயோ! தன் குடும்பத்தாரைக் காப்பாற்ற, தன்னையே தியாகம் செய்திருக்கிறதே. என்ன மனிதநேயம்?’ என்று நினைக்கத் தோன்றுகிறது. (மனித நேயம் - என்று வேண்டுமென்றே எழுதியிருக்கிறேன். அதை விட உயர்வாக எழுத வேண்டுமென்றால் ‘குரங்கு நேயம்’ என்று தான் எழுத வேண்டும்.) அப்படிப்பட்ட குரங்கு நேயம் கொஞ்சமாவது இருந்தால், இந்திய, பாகிஸ்தானிய, ரஷ்ய, உக்ரைன், இஸ்ரேல், ஹமாஸ் எல்லைப்பகுதிகளில் அது இருந்திருக்குமே. மனித குலமே! உன்னை அந்த குரங்கு சபிக்கட்டும்.
யானைக்குப் பிறகு குரங்கு. அதற்குப் பிறகு பன்றி. பன்றியைக் கொன்ற பிறகு இம்சனோக்கிற்கு கொடுங்கனவுகள் வரத் தொடங்குகின்றன. மனப்பிறழ்வு நடக்கிறது. வீட்டுக்குள்ளேயே பதுங்கிக் கிடக்கிறார். யானையைக் கொன்றது சரியா? குரங்கைச் சுட்டது சரியா? பன்றியை சாகடித்தது சரியா? என்று மனக்குழப்பம் கொள்கிறார். பல நேரங்களில் நாம் செய்வது சரியா? இல்லையா? என்று நமக்கும் மனக்குழப்பம் வரும், அதையே இந்தக்கதை பிரதிபலிக்கிறது என்று ஒரு வாசகர் சொன்னபோது என் மனதிற்குள் பலமாக தலையசைத்தேன். எனக்குச் சரியாகப் படுவது உங்களுக்குச் சரியாகப் படுவது இல்லை. இந்த மதத்திற்குச் சரியெனப் படுவது அந்த மதத்திற்கு தவறெனப் படுகிறது. இந்தச் சமூகத்திற்கு நல்லது என்று படுவது அந்தச் சமூகத்திற்கு கெட்டதாகப்படுகிறது. இந்தக் குழப்பம் இம்சனோக்குக்கு மட்டும் இல்லை. இந்த மனித குலத்திற்கே இருக்கிறது.
கடைசியில் தான் நச்சு பாயிண்ட் என்று ஒரு வாசகர் சொல்லிவிட்டு சொன்னார்: தன் முடியிலிருந்து கொஞ்சம் முடியைப் பிய்த்து பன்றியைச் சுட்ட இடத்தின் அருகே இருந்து ஓடையில் தூக்கி எறிந்து, அதனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, பன்றியின் பல்லையும், தன் துப்பாக்கியையும், வேட்டைக்காரன் என்ற மமதையையும் ஒரே சேர ஒரு குழியில் போட்டு புதைத்துவிடுகிறார் என்று சொன்னார். அது தனக்குத் தானே அவர் செய்து கொண்ட ஈமச் சடங்கு என்று இன்னொரு வாசகர் சொன்னார்.
மனிதகுலம், தான் வாழும் இயற்கைச் சூழலை, தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயலும் வரை சுரண்டலாம் என்கிற வக்கிரப் புத்தியை எப்பொழுது புதைக்கும்?
************
என் தலைக்கு மேல் சரக்கொன்றை – சிறுகதைத் தொகுப்பு
(ஆசிரியர் - டெம்சுலா ஆவ்; தமிழில் - எம்.ஏ. சுசீலா; முதல் பதிப்பு - 2009; தமிழில் முதல் பதிப்பு - 2022; நற்றிணைப் பதிப்பகம்)
உயிர்மெய்யார்
(பேரா. முனைவர். ஜான் பிரிட்டோ பரிசுத்தம்)
ஏப்ரல் 2025, மெல்பர்ன்
Comentários