ஒரு கடிதம் - கதைச் சுருக்கமும் - வாசிப்பு அனுபவமும்
- உயிர்மெய்யார்

- May 15
- 3 min read
Updated: Jun 13

ஒரு கடிதம் - கதைச் சுருக்கம்
கிராமச் சாலைப் போட்ட வருமானத்தை, கிராமத்தார்களிடமிருந்து பறிக்க ‘தலைமறைவு அரசாங்கத்தின்’ பெயரால் சிலர் கேட்கின்றனர். துப்பாக்கி ஏந்திய போராளிகள் கொடுத்த லிஸ்டில் ஒருவன் பெயர் மட்டும் இல்லை. அவனுக்கு அவன் வீட்டு தரையை சீரமைக்க, மரம் கடன் வாங்கி விட்டான். அதற்கு கொடுக்க வேண்டும். அவன் மகன் தேர்வு எழுதப் பணம் அனுப்ப வேண்டும். அதனால் போராளிகளுக்கு அவன் பணம் கொடுக்க முடியவில்லை. போராளிகள் அவனை தாறுமாறாக அடிக்கிறார்கள். கிராம மக்கள், தலைமறைவு சக்திகள், அரசாங்க ஏஜெண்ட்கள் மற்றும் இந்திய இராணுவத்தினர் ஆகியோரை சமாளிக்க வேண்டியிருக்கிறது.
கிராமத்தலைவர் வீட்டில், இளைஞர்களும் பெரியவர்களும் ஆலோசனை நடத்துகிறார்கள். கீழ்க்கண்ட முடிவுகளை எடுக்கிறார்கள். இனி தலைமறைவு சக்திகளுக்கு வரி கொடுப்பதில்லை. சம்பளம் பெறாமல் அரசாங்கத்திற்கு வேலை செய்வதில்லை. இந்திய இராணுவ சிப்பாய்களுக்கு தங்கள் விளைப்பொருட்களை விற்பதில்லை.
ஒரு நாள். ஒருவன் கிராமத்திற்கு புதிதாக வருகிறான். தன் கணவன் கடத்தப்பட்டு தனியாளாக இருக்கும் மூதாட்டியிடம் தலைவர் வீட்டிற்கு வழி கேட்கிறான். ஆனால் அவளோ இளைஞர்கள் கூடியிருக்கும் கூடாரத்திற்கு வழி காட்டி விடுகிறாள். போகிற வழியில், நாகர் இன மக்கள் பயன்படுத்தும் மரப் பிடியுள்ள கத்தியான ‘தாவோ’ என்கிற கத்தியோடு, அவசர கால வரி தரவேண்டும் என்று கிராமத்து மக்களை மிரட்டுகிறான். இளைஞர் கூட்டம் அவனைச் சுற்றி மடக்குகிறது. அவன் துப்பாக்கியால் சுடுகிறான். நல்ல வேளை அது தப்பிவிடுகிறது. இளைஞர்கள் அவனை அடிக்கிறார்கள். துவண்டு விழுகிறான். உயிர் ஊசலாடுகிற நிலையில் காட்டுக்குத் தூக்கிச் செல்லுகிறார்கள். மலை முகட்டில் இருந்து தூக்கி எறியும் முன் அவன் பாக்கெட்டில் இருந்து 49 ரூபாய் பணத்தையும் ஒரு கடிதத்தையும் ‘நீளக் காலன்’ (நீளமாக கால் உள்ளவன்) எடுக்கிறான். துப்பாக்கியையும் அவனையும் தூக்கி எறிகிறார்கள். தன் தேர்வுக்கான கட்டணத்தை உடனே அனுப்புமாறு தந்தையிடம் கெஞ்சிக் கேட்டிருந்த கடிதத்தை நீளக் காலன் படித்து சோகமயமானதாக கதை முடிகிறது.
கதை வாசிப்பு அனுபவம்
இந்தியாவில் காரித்தாஸ் இந்தியா என்கிற சேவை நிறுவனத்தின் அழைப்பின் பேரில், சமூக சேவகர்களுக்கு தகவல் தொடர்பு குறித்தப் பயிற்சிக் கொடுப்பதற்காகத் திரிபுரா சென்றிருந்தேன். பத்து நாள் பயிற்சி. கிழக்கிந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து சமூக சேவகர்கள் வந்திருந்தார்கள். சமூக மாற்றத்திற்கான செய்தித் தொடர்பு எப்படி இருக்கவேண்டும் என்பது தான் பயிற்சிப் பொருண்மை. அந்த பயிற்சியை என் நண்பர் ஒரு கிறித்துவப் பாதிரியார் தான் ஏற்பாடு செய்திருந்தார். அங்கிருக்கிற ஒரு பள்ளியின் தாளாளர் அவர். அவர் சொன்னார்: இங்கே பல தேசியவாதக் குழுக்கள் இருக்கின்றன. சில சமயம் அவர்கள் என் அலுவலகத்திற்கு வருவார்கள். மேசையின் மேல் துப்பாக்கியை வைப்பார்கள். அவர்களுக்குத் தேவையான நன்கொடை கேட்பார்கள். கொடுத்தால் நாம் தப்பித்தோம் என்றார். மாலை 6 மணிக்கு மேல் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் போக எங்களை அனுமதிக்கவில்லை. அப்பொழுது தான் கிழக்கிந்தியாவில் இந்திய இராணுவம், இந்திய அரசாங்கம், மக்கள், தலைமறைவு தேசியவாதிகள் குழுக்கள் பற்றியெல்லாம் அறிந்துக் கொள்ள முடிந்தது. மக்கள் இவர்களுக்கிடையே படும் பாடுகள் பற்றித் தெரிந்துக்கொள்ள முடிந்தது. அவைகளை அப்படியே இந்த சிறுகதைத்தொகுப்பில், சில கதைகளில் கதையாசிரியர் கொண்டு வந்திருக்கிறார். அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று தான் ஒரு கடிதம் கதையும்.
பயிற்சி முடிந்து நான் திரும்பியபிறகு எனக்கு ஒரு போன் வந்தது. ஒரு மாலை வேளை அந்தப் பாதிரியார் பைக் ஓட்டிக் கொண்டு போன போது, மர்மமான முறையில் சுடப்பட்டு இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்கிறது? ‘ஒரு கடிதம்’ கதையைப் படித்த பொழுது எனக்கு திரிபுரா நினைப்பு தான் இருந்தது.
‘பொதுவாகவே அந்தக் கிராம மக்கள் சாதுவான குணம் உள்ளவர்கள் தான். மேலிருக்கும் அரசாங்கம், தலைமறைவு அரசாங்கம் ஆகிய இரண்டோடும் எந்தச் சிக்கலும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கே அவர்கள் பெரிதும் முயன்றார்கள். கறிகாய், அரிசி முதலிய சாமான்களை வாங்க எப்போதாவது கிராமத்துக்கு வரும் இராணுவ நபர்களோடும் அவர்கள் இணக்கமான உறவையே பேணி வந்தார்கள்’ என்று கதை போகிறது. வாசகர் வட்டத்தில் ஒரு வாசகர் கூறினார். போராட்டக் குழுக்கள் எல்லாமே மக்களின் ஆதரவு இல்லாமல் போராட முடியாது. மக்களே எல்லோருக்கும் ஆதாரம். நம்ம ஊர் மம்பட்டியான் கதையிலிருந்து இன்றைக்கு இருக்கிற எல்லா குழுக்களுக்கும் இது நிதர்சனமான உண்மை. இதைச் சொல்லிவிட்டு ஒன்று சொன்னார். ஒரு சண்டையில் அதிகம் இழப்பதும் சாமான்ய மக்களே என்றார். எவ்வளவு உண்மை!
இன்னொரு வாசகர் ஆழமான விமர்சனம் ஒன்றை வைத்தார். இந்த ஆசிரியர் எளிய மக்களுக்கானப் பார்வையை, அவர்களுக்கான எழுத்தை எழுதியது போல் தெரியவில்லை. அரசாங்கத்தில் பதவியில் இருந்ததாலோ என்னவோ, அங்கிட்டும் பழுதில்லாமல் இங்கிட்டும் பழுதில்லாமல் எழுதியது போலவே தெரிகிறது. கிட்டத்தட்ட அரசாங்கம் பக்கமே அவர் சாய்வு தெரிகிறது என்றார். பிறகு தான் கவனித்தேன். ஆம்! சாகித்ய அகாடமியின் பொதுக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். வாசகருக்கு 360 டிகிரி சுதந்திரம் இருக்கத்தானே செய்யும். எல்லா பக்கங்களையும் பார்த்து சுதந்திரமாக தன் எண்ணத்தை வெளியிட ஒரு வாசகன் முயல்வது சரி தானே! தொடர்ந்து கூறினார். இரோம் ஷர்மிளா போன்றோர் மக்களின் விடுதலைக்காக போராடிய உண்மையான போராளி.
அது யார் அந்த இரோம் ஷர்மிளா? ஆய்வு செய்ததில் கிடைத்தவை கீழே.
இராம் சானு ஷர்மிளா. இந்த வருடம் (2025) அவருக்கு 53 வயது இருக்கும். மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்றொரு பெயரும் அவருக்குண்டு. எழுத்தாளர். கவிஞர். செயற்பாட்டாளர். 2000ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினார். Armed Forces (Special Powers) Act என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. அதை காரணமாக வைத்து மணிப்பூரின் தலைநகரான இம்பாலில், பேருந்துக்காகக் காத்திருந்த பத்து அப்பாவி மக்களை இந்திய இராணுவம், கோழிக்குஞ்சுகளை கொத்திக் கிழித்துத் தூக்கிப் போடுவது போல் சுட்டுத் தள்ளியது. அதை நேரடியாகப் பார்த்த இராம் சானு ஷர்மிளா Armed Forces (Special Powers) Act என்ற சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தான் தன் உண்ணாவிரதத்தை துவங்கினார். ஒரு நாள் இரு நாட்கள் அல்ல. ஒரு வாரம் இரு வாரங்கள் அல்ல. ஒரு மாதம் இரு மாதங்கள் அல்ல. 16 வருடங்கள். பல தடவை சிறையிலடைக்கப்பட்டு, மூக்கு வழியே குழாயைப் பொருத்தி வலுக்கட்டாயமாக நீர் உணவை ஊற்றினார்கள். 2016 ஆகஸ்ட் 9 ம் தேதி தான், பதினாறு வருடங்களுக்குப் பிறகு, உண்ணாவிரதத்தை முடித்து தானாக உணவு உண்ணத் தொடங்கினார். 2017ல் கெவின் குட்டினோ என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டு பெங்களூருவில் வாழ்ந்து வருகிறார். சமீபத்திய மணிப்பூர் பிரச்னை குறித்து காட்டமாக எழுதியும் பேசியும் வருகிறார். இதெல்லாம் சாத்தியமா? என்று அவரது வாழ்க்கையைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
கதைக்குள் வருவோம்.
தன் மகன் படிக்க வசதியில்லாததால், அவனுக்குப் படிக்க வைத்திருந்த பணத்தையும், தலைமறைவு போராளிகள் பிடுங்கிக்கொண்டதால், அந்த மகன் படிக்க வழியில்லாமல் போகிறது. அவனே பிற்காலத்தில் ஒரு போராளியாக மாறி விடுகிறான். அவன் யாரென்று தெரியாமல் அவனை அடித்து சாகடிக்கிறார்கள். அவன் சட்டைப்பையில் இருந்து தான் அந்தக் கடிதம் எடுக்கப்படுகிறது. அது தன் படிப்புக்காக பணம் அனுப்பச் சொல்லி தன் தந்தைக்கு எழுதிய கடிதமாக இருந்தது. ஒரு நிகழ்வு இப்படித்தான் ஒரு கதையாகிறது. அந்த நிகழ்வில் நடந்த சோக வலி, எழுத்தின் மூலம் வாசகனுக்கு கடத்தப் படும் போது அது இலக்கியமாகிறது.
சிலரின் அதிகாரப் பசிக்கு, பலர் இரையாக வேண்டுமா?
***********
என் தலைக்கு மேல் சரக்கொன்றை
(ஆசிரியர் - டெம்சுலா ஆவ்; தமிழில் - எம்.ஏ. சுசீலா; முதல் பதிப்பு - 2009; தமிழில் முதல் பதிப்பு - 2022; நற்றிணைப் பதிப்பகம்)
உயிர்மெய்யார்
(பேரா. முனைவர். ஜான் பிரிட்டோ பரிசுத்தம்)
15.05.2025, மெல்பர்ன்
துணை நூற்பட்டியல்
1. Kalathil, J. (2016). The world’s longest hunger strike ends. Human Rights. Fair Planet. https://www.fairplanet.org/story/the-worlds-longest-hunger-strike-ends/



Comments