top of page

நயனக்கொள்ளை - கதை வாசிப்பு அனுபவம்

Updated: Aug 9

ree

எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய “நயனக்கொள்ளை” சிறுகதைத் தொகுப்பு - சந்தியா பதிப்பகம், சென்னை - 83. (2023)

 


நயனக்கொள்ளை

 

உயிர்மெய்யார்

06.08.2025

மெல்பர்ன்


பாவண்ணன் ஒரு கில்லாடி.

 

அவரின் கதைகளை மரநிழலில் நின்று படித்தால் எட்டி குளம் தெரியும். அதே கதையைக் குளக்கரையில் நின்று படித்தால் குளத்தின் மேலோட்டத்தில் இருக்கும் அல்லிப்பூ தெரியும். சற்றே குளத்தில் இறங்கி, நீரில் மூழ்கிப் படித்தால் அல்லிப்பூவின் வேர் தெரியும். கொஞ்சம் நீரிலிருந்து மேலே பார்த்தால் நீல வானத்தில் மேகங்கள் நெளிவது தெரியும்.

 

அதாவது பாலிலிருந்து தயிர், தயிரிலிருந்து வெண்ணைய்யும் மோரும், வெண்ணையிலிருந்து நெய், நெய்யிலிருந்து வாசம் என கதை வாசிப்பு அனுபவம் இருக்கிறது. மேலோட்டமாகப் படித்தால் அது பால். ஆழ்ந்து போகும் போது அது நெய்யின் வாசனை.

 

அழகிய உவமானங்களை (metaphors), நெய்யின் வாசனையாக, கதைகளில் வீச விட்டிருக்கிறார் பாவண்ணன். உவமைகளை (similies) அல்லிப்பூவின் மென்மை போல உலவ விட்டிருக்கிறார். கதையமைப்பை திருவையாறு அசோகாவைப் போல கட்டமைத்திருக்கிறார் பாவண்ணன். கருத்துகளை தென்னங்கீற்றின் தென்றல் போல தெறிக்கவிடுகிறார் பாவண்ணன்.

 

மெல்பர்ன் வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள் அனைவருமே அந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசித்து விட்டு 2025 ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி நரேவாரனில், அதன் எட்டாவது ஆண்டு விழாவில் சந்தித்து வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டோம். அதில் பகிரப்பட்ட உவமானங்களையும் உவமைகளையும், கதையைமைப்பையும் கருத்துக்களையும் இங்கே எழுதுகிறேன்.

 

கதையைப் படிக்காதவர்களுக்காக கதைச் சுருக்கத்தை முதலில் கொடுத்து விடுகிறேன்.

 

நயனக்கொள்ளை கதைச்சுருக்கம் இது தான்.

 

பக்கவாதத்தால் படுத்திருக்கிறார் அப்பா. 658 பாட்டு உள்ள திருவாசகத்தை இரண்டு மூன்று முறைப் படித்துவிட்டு இன்றும் திரும்ப அதையேப் படித்துக் கொண்டிருக்கிறார். அப்பாவோடு முன்பு நடைப்பயிற்சிக்குப் போகும் அருணாச்சலம் மாமா, இப்பொழுதெல்லாம் நடந்துவிட்டு அப்பாவைப் பார்க்க வருவார். இவன் கொடுக்கும் தேநீரை அருந்திக் கொண்டே, அரசியல், சினிமா, இன்னும் மற்ற விஷயங்கள் என்று பேச்சு நீளும். ஒரு நாள் லண்டன்லேருந்து கிரிஜா வருவதாக அருணாச்சலம் மாமா கூறுகிறார். இவனுக்கு மனதுக்குள் ஏதோ செய்கிறது என்று கதை புதுச்சேரியில் தொடங்குகிறது.

 

கிரிஜா வருகிற நாளன்று அருணாச்சலம் மாமா வீட்டிற்கு வருகிறார். திருவாசகத்தில் உள்ள ஒரு பாட்டிற்குப் பொருள் கேட்கிறார். அதில் நயனக்கொள்ளை என்றச் சொல் வருகிறது. திருட்டு என்றால் பகுதியாக எடுப்பது என்றும் கொள்ளை என்றால் எல்லாவற்றையும் வாரி சுருட்டிக் கொள்வது என்றும் அப்பா பொருள் கொடுக்கிறார். இவன் வீட்டில் வெள்ளையம்மா என்கிற சமையல்கார அம்மா இருக்கிறார்.

 

கிரிஜாவின் நினைப்பில் இவன் இருக்கிறான். பள்ளி, கல்லூரி, இசை கற்றுக் கொள்ளும் இடம் என்று கிரிஜா அவன் போகிற இடத்திற்கெல்லாம் வருகிறாள். ‘நான் உன் கூடவே இருக்கனும்னு நெனச்சேன்’ என்று சொல்கிறாள். குளித்துவிட்டு வெள்ளையம்மா செய்த உப்புமாவை அப்போவோடு சாப்பிடுகிறான். பிறகு ஆன்லைன் வழி சேவை செய்யும் தன் கடைக்குச் செல்கிறான். சங்கரன் கடையில் உதவியாக இருக்கிறான். கடைக்குச் சென்று கணிணியைத் திறந்தால் கிரிஜாவிடமிருந்து ‘உன்னிடம் பேசவேண்டும்’ என்ற ஒற்றைவரியில் ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது.

 

எழுந்து சங்கரனிடம் சொல்லிவிட்டு அருகில் இருக்கிற வேதபுரிஸ்வரர் கோயிலுக்குச் செல்கிறான். கிரிஜாவுடன் நின்றிருந்த, உட்கார்ந்திருந்த, பேசிக்கொண்டிருந்த இடத்திலெல்லாம் நின்று, உட்கார்ந்து, தனக்குள் பேசிக்கொண்டே இருக்கிறான். கிரிஜாவின் விரிந்த கண் வழி இதயத்திற்குச் சென்று, மனதிற்குள் நுழைந்து, ஆசைகளைப் பற்றி…என்று பேசியிருந்த அனுபவத்தில் திளைத்திருக்கிறான். இருவரும் மேல் படிப்பிற்கு லண்டன் கேம்பிரிட்ஜ் செல்லவேண்டும் என்று பேசி வைத்திருந்தார்கள். ஆனால் அப்பாவின் திடீர் உடல் நலக் குறைவினால் அவனால் போகமுடியாமல் போகிறது. கிரிஜா மட்டும் லண்டன் புறப்பட்டுவிட்டாள்.

 

பதினொன்னரை மணிக்கு கடையிலிருந்து வீட்டிற்குச் சென்று அப்பாவிற்கு பணிவிடைகள் செய்கிறான். அம்மாவுக்குப் பிடித்த ஜெகசிற்பியனின் நாவல் ஒன்றைப் பற்றி அப்பா சொல்கிறார். கடைக்குப் போய்விட்டு மறுபடி ஒரு மணிக்கு வீட்டிற்கு வருகிறான். யூடீயூபில் கேட்டுக்கொண்டிருந்த சந்திரபாபு போன்று தன் அலுவலகத்தில் இருந்து ஒரு நபரைப் பற்றி அப்பா சொல்கிறார். இருவரும் சாப்பிடுகிறார்கள். வடிவேலு நகைச்சுவையைக் கேட்டுக்கொண்டே! அப்பொழுது வாசலில் கார் நிற்கும் சத்தம். திறந்தால் கிரிஜா!!

 

அதே விழிகள். அதே முகம். அதே புன்னகை. ‘என்ன அப்படியே உட்கார்ந்திருக்கே! இறங்கி வா’. ‘ம்ஹூம்! என்னை இறக்கி விடு’. அவள் கையைப் பற்றுகிறான். அந்த ஆதாரத்தோடு தன் இரண்டு கால்களையும் கீழே இறக்கி, பின் தானாக வீட்டிற்குள் நடந்தாள். அப்பாவிடம் பேசிக்கொண்டே, முகக் கண்ணாடியைக் கழட்டும் போது தான் இருவரும் கவனித்தார்கள். ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த கார் விபத்தில் ஒரு கை, கால், கண் எல்லாம் போன கதையை விவரித்தாள். ஒரு வகுப்புத் தோழன் தான் செயற்கை கை, கால், கண் எல்லாம் பொருத்தியதாகச் சொன்னாள்.

 

இவன் அவள் கையைப் பற்றிக் கொள்கிறான். கிரிஜா மேசை மீதிருந்த திருவாசக நூலைப் பார்த்துவிட்டு, ‘நம்ம மணிவாசகர் ஐயா நடத்திய திருவகவல் பகுதி அப்பப்ப ஞாபகத்துல வரும். ஏதோ கொள்ளைன்னு ஒரு பாட்டுல ஒரு வார்த்தை வருமே….’ எனக் கேட்க, அப்பா ‘ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து..’ என்று பாட, கிரிஜாவின் பார்வை இவன் மீது விழுந்து நிலைத்தது என்று கதை நிறைவுற்றது.


இக்கதையில் உள்ள உவமானங்கள், உவமைகள், கதையமைப்பு உத்திகள் மற்றும் கருத்துகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 

உவமானங்கள்

ஒரு வாசகர் அந்தக் கதையின் தொடக்கத்தில் உள்ள உவமானத்தை அழகுற எடுத்துச் சொன்னார்:

அன்றைக்கு கிரிஜா லண்டனிலிருந்து வருகிற நாள். அவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு கோயிலுக்கு மகா செல்கிறான். அங்கு ஒரு காட்சியைப் பார்க்கிறான். கோபுரத்தில் இரண்டு புறாக்கள் ஒன்றையொன்று பார்த்தபடி சுற்றிச்சுற்றிப் பறப்பதும், விளையாடுவதுமாக இருக்கின்றன. ஒரு வட்டச்சுற்றின் முடிவில் ஒரு புறா (மகா என்கிற இளைஞன்) திரும்பி வந்து அமர்ந்து மற்றொரு புறாவை (கிரிஜாவை) எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதுவோ (கிரிஜாவோ) கோபுரத்தின் ஏழடுக்குகளையும் தொட்டுவிட்டு (லண்டனுக்குப்) பறந்து மறைந்துவிடுகிறது.

 

வேறு சில நிகழ்வுகளும் உவமானங்கள் போலவே உள்ளன.

 

மகாவின் அப்பா, ஜெகசிற்பியனின் ‘கிளிஞ்சல் கோபுரம்’ நூலை வாங்கித் தரச் சொல்லுவார். ஏனென்றால் அவருடைய முதல் மாத சம்பளத்தில் வாங்கிப் படித்த புத்தகம் அது. அதில் “அன்புள்ள அபிராமிக்கு” என்று எழுதி அவருடைய மனைவிக்குப் பரிசாகத் தருவார். அவருடைய மனைவி நூலைப் படித்து விட்டு “மிகவும் பிடிச்சிருக்கு” என்று சொல்வார். (இதுவரை மகாவுக்கும் கிரிஜாவுக்கும் இடையிலான அன்பை விவரிப்பது). ஆனா அந்த நூலை மகாவின் அம்மா பத்திரமா எடுத்து வைக்காம, “எங்கேயோ காணாம போயிடுச்சி…” என்று சொல்லிவிடுவார். (கிரிஜா ஆறு வருடங்கள் தொடர்பில்லாமல் காணாமல் போனது போல.)

 

இன்னொரு நிகழ்வைச் சொல்கிறேன்.

 

மகாவின் அப்பா, தொலைக்காட்சியில் நடிகர் சந்திரபாபுவின் ஆட்டத்தைப் பார்த்தவிட்டு, அவரது அலுவலகத்தில் ஒருவர் அதே போல வளைந்து நெளிந்து டான்ஸ் ஆடுவார், சேட்டை செய்வார், மேடையில் எல்லோரையும் தொடர்ந்து மகிழ்விப்பார், என்று பழைய நினைப்பைப் பகிர்வார். (இதுவரை மகாவுக்கும் கிரிஜாவுக்கும் இடையிலான அன்பை விவரிப்பது). ஆனா, இப்ப எங்க இருக்காரோ தெரியலை என வருத்தப்படுவார். (கிரிஜா ஆறு வருடங்கள் தொடர்பில்லாமல் காணாமல் போனது போல).

 

வேறொரு காட்சியை எடுத்துக்கொள்வோம்.

 

கிரிஜா வரப்போகிற நாளில், மகா தன் அலுவலகத்தில் அமர்ந்து கணிப்பொறியில் மின்மடல்களைப் பார்த்துக் கொண்டிருப்பான். அவனது வேலையே வாடிக்கையாளர்கள் அனுப்பும் நிரல்வரிசையை (Program sequence) திருத்தி அனுப்பவுதே. அன்றைக்கு ஒரு நிரல்வரிசை வந்திருக்கும். “அந்த நிரல்வரிசையை மேலோட்டமாகப் பார்த்த போது, அதைச் செப்பனிடுவது மிகமிக எளிது என்றே தோன்றியது. ஆனால் வேலையில் இறங்கிய பிறகு தான் அதன் ஆழம் புரிந்தது. பிழையின் தடத்தை அறிய முடியவில்லை. அதற்குத் தீர்வு காண்பது பெரிய சவாலாக இருக்கப் போகிறது” என்று அவனுக்குத் தோன்றுகிறது. மேலோட்டமாகப் படித்தால் அவன் வேலையை விவரிப்பது போலத் தெரியும். ஆனால் உண்மையில் கிரிஜாவுடனான அவன் உறவு அந்த நிரல்வரிசை மாதிரி. செப்பனிடுவது எளிது போலத் தோன்றினாலும், அதற்குத் தீர்வு காண்பது பெரிய சவாலாக இருக்கப் போகிறது என்று முன்கூட்டியே கோடிட்டுக்காட்டுகிறார் பாவண்ணன்.

 

எல்லா உவமானங்களையும் தூக்கி சாப்பிடும் உவமானம் மகாவின் அப்பா கதாபாத்திரம். அப்பா கதாபாத்திரமே ஓர் உவமானம் தான்.

 

உச்சக்கட்டக் காட்சியில் கிரிஜா ஒரு கை, ஒரு கால் இயக்கமின்றி வருவதற்கு முன்பே, மகாவின் அப்பாவை அப்படித்தான் காட்சிப்படுத்தியிருப்பார் பாவண்ணன். மகா தான், அப்பாவின் பின்னால் நின்று கொண்டு, தன் இரண்டு கைகளையும் வைத்து அப்பாவைத் தூக்கி கழிவறைக்குக் கொண்டு செல்வான். அவருக்கு உணவு எடுத்து வைத்து, மருந்து மாத்திரை எடுத்துக் கொடுத்து…இப்படி அவருடைய இயலாத நிலையை கண் முன்னே எடுத்து வைத்துக்கொண்டே வருவார் பாவண்ணன்.

 

ஓரிடத்தில் மகாவின் அப்பா திருவாசகம் படித்துக் கொண்டிருப்பார். “இயக்கம் இல்லாத வலது கை தொங்க, வரிகளின் கீழே இடது கைவிரல் மட்டும் நகர்ந்துக் கொண்டிருந்தது” என்று எழுதியிருப்பார். பின்பு கிரிஜா வந்ததும், “உடம்புல வலதுபக்கம் முழுக்க அடி. ஒரு கை, ஒரு கால், ஒரு கண் எல்லாம் போச்சி” என்பாள். இருவருக்கும் வலது பக்கமே இயக்கம் இல்லை என்பதை கவனியுங்கள்.  பின்பு கிரிஜா வந்து விட்ட போது கூட அவள் நடையை “அப்பாவின் நடை போல வளைந்து தயங்கி நடக்கும் நடை” என்று எழுதுவார்.

 

இப்படி உவமானங்களை கதை முழுக்க பாவண்ணன் பயன்படுத்தியிருக்கிறார்.

பாவண்ணன் கில்லாடி தானே!

அதைப் போலவை உவமைகளையும் சொல்லலாம்.

 

 

உவமைகள்

 

இன்னொரு வாசகர் தனக்குப் பிடித்தப் பகுதியாகக் கீழ்க்கண்ட சொற்றொடரை (உவமைகளைக்) கோடிட்டுக் காட்டினார். அது மகா, கிரிஜாவின் கண்களைப் பார்த்து வியப்புறும் போது வருகின்ற சொற்றொடர்கள்.  “வளைந்த ஓடக்கரையின் மதிலென இமைகள்…ஈரம் மின்னும் கருவட்டம். நடுவில் பால்நிறத்தில் சுடர்விடும் ஓர் ஒளிப்புள்ளி. அடர்ந்த ஒரு குன்றின் மீது ஏற்றிவைக்கப்பட்ட தீபமென எரியும் புள்ளி”.

 

ஓடக்கரையின் மதிலென இமைகள்! எவ்வளவு அழகான கற்பனை.

 

இதைப் போலவே இன்னும் சில உவமைகள்.

 

அவள் கண்களின் இமைகள் மூடித்திறக்கும் போது, அவனது மனம் “புயல்காற்றில் சுழலும் மரக்கிளையென சுழன்ற”தாம். அவள் கண்கள் “பெரிய குளங்களைப் போல”… “பெரிய கடல்…பெரிய பள்ளத்தாக்கு…பனிமூடிய பெரிய மலைக்குன்று” என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது.

 

ஐந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிற மின்மடலில், ‘உன்னுடன் பேச வேண்டும்’ என்ற ஒற்றைவரிக்குக் கீழே ஜா என்ற எழுத்து இருந்தது. அந்த ஜா, ஓர் இறகு போல, மகாவின் நெஞ்சில் அசைந்து அசைந்து இறங்கிக்கொண்டிருந்ததாம்.

 

மற்றொரு வாசகர் இதை சொல்லும் போது, “அட!” என்றிருந்தது. கிரிஜா லண்டனுக்குப் போகும் முன் ஒரு தடவை மகா அவளைச் சந்திந்த போது, அவளது கண்களைப் பற்றிப் பேச்சு வந்தது. மகா சொல்வான். “உனக்கு கிரிஜான்னு பேர் வச்சிருக்கக் கூடாது” என்று சொல்லிவிட்டு வேறு பல பெயர்களைச் சொல்வான். விசாலாட்சி, அம்புஜாட்சி, பங்கஜாட்சி, மீனாட்சி, காமாட்சி, இந்திராட்சி, நீலாயதாட்சி என்று பட்டியல் நீளும். அதை ஆழமாகப் பார்த்த அந்த வாசகர் சொன்னார் “இந்த பெயர் கொண்ட ஆட்சிகளின் கண்கள் அழகான விசாலமான, விரிந்த, மீன்போன்ற கண்கள்” என்றார்.

 

அட! ஆமாம்!!

 

அப்படி அழகாக, முன் பாதி கதையில் விவரிக்கப்பட்ட, கண்களில் ஒன்றின் பார்வையை, விபத்திற்குப் பிறகு இழந்த பிறகு, “….மற்றொரு கண் சிற்பத்தின் கண்ணைப் போல் அசைவின்றி காணப்பட்டது” என்று எழுதுகிறார்.

 

பாவண்ணன் கில்லாடி தானே!

 

உவமானங்களையும் உவமைகளையும் வைத்து விளையாடிய பாவண்ணன், கதையமைப்பிலும் சபாஷ் வாங்குகிறார்.

 

கதையமைப்பு

 

ஒரு கதையில் முன்அமைப்பு (Set up), முரண்பாடுகளின் வளர்ச்சி (Development), தீர்வு (Resolution) என்று மூன்று நிலை இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்தக் கதையில் பாவண்ணன் முன்அமைப்பில் தன் திறமையெல்லாம் காட்டியிருப்பார்.

 

முதல் காட்சியிலேயே, மகாவுடைய அப்பாவின் நண்பர், கிரிஜாவின் வருகையை அறிவிக்கும் போது, “குடும்பத்தோட தான வருது?” என்று மகாவின் அப்பா கேட்பார். “புருஷன் கொழந்தையோட தான் கண்டிப்பா வரும். அந்த ஊருலயே ஒரு பையன புடிச்சிப் போய் கல்யாணம் செஞ்சிக்கப் போறதா தகவல் வந்திச்சி” என்ற உரையாடல் வரும். அப்பொழுது வாசகர்களுக்கு ஒரு கேள்வி வரும். கிரிஜாவுக்கு திருமணம் அயிடுச்சா இல்லையா? என்று. பின்பு உச்சக்கட்டக் காட்சியில் (Climax-இல்), வரப்போகும் அதிர்ச்சிக்கு முன்அமைப்பில் (Set up-இல்) இப்படி தரவுகளையும், நிகழ்வுகளையும் தூவிக் கொண்டே போகவேண்டும்.

 

உச்சக்கட்டக் காட்சியில் கிரிஜாவின் முகத்தில் ஒரு கண் சிதைந்து, பார்வையற்றுப் போனதை வெளிப்படுத்தும் முன், அதற்கு வாசகர்களைத் தயார்படுத்துகிறார் பாவண்ணன்.

 

கிரிஜா அன்றைக்கு வரப்போகிறாள் என்று தெரிந்ததும், மகாவுக்கு கிரிஜாவைப் பற்றிய பல நினைவுகள் வந்தாலும், “அவள் ‘முகம்’ மேலெழுந்து வந்தது” என்று எழுதி வாசகர்களின் கவனத்தை அவள் முகத்திற்கு கொண்டு வருகிறார். 

 

ஒரு தடவை, கல்லூரியில் அவர்களுக்குள் ஓர் உரையாடல் நடக்கும். “உன் கண்ணு இப்ப மாறியிருக்குது. நேத்து பாத்த கண்ணு மாதிரி இல்ல” என்று மகா சொல்ல, “தெனம் மாத்தி வச்சிக்கிறதுக்கு கண்ணு என்ன ஸ்டிக்கர் பொட்டுன்னு நெனச்சிட்டியா?” என்று சொல்லி கிரிஜா சிரிக்க, அந்த சிரிப்பில் கண்களில் கண்ணீர்த்துளிகள் தேங்கி நிற்கும்.

 

முதலில் முகம். பிறகு கண்.

 

அவனது அலுவலகத்திற்குப் போகத் தயாராகும் போது, புகைப்படத்தில் காலம் சென்ற அவனது “அம்மாவின் கண்களைப் பார்த்தபடி திருநீற்றைத் தொட்டுப் பூசிக்கொண்டு” வெளியே வருவான்.

 

அன்றைக்கு, கோவிலில் ஒரு தூணோரத்தில் அமர்வான். அப்பொழுது முன்பு நடந்த காட்சி ஒன்று அவனுக்கு நினைவுக்கு வரும். முன்பு ஒரு நாள் கோவிலில் சைவத் திருமுறைகள் வகுப்பிற்குப் பிறகு, ‘நயனக்கொள்ளை’ என்றால் எல்லாவற்றையும் மொத்தமாக வாரி எடுத்துக் கொண்டு போவது என்ற விளக்கத்தைக் கேட்டுவிட்டு, மகாவும், கிரிஜாவும் பேசிக் கொள்வார்கள். “ கொள்ளையடிச்சிட்டு போகறதுக்கு கண்ணுல என்ன புதையலா இருக்குது?” என்று கிரிஜா கேள்விக் கேட்பாள். அப்பொழுது தான் மேற்சொன்ன கண் பற்றிய உவமைகள் எல்லாம் பேசப்படும்.

 

மகா மற்றும் கிரிஜாவிற்கிடையே காதல் இருந்ததா? என்பதற்கு, லண்டன் போகும் முன் கிரிஜா, மகாவிடம் சொல்லும் ஒரு சொற்றொடரில் தெரிந்துக் கொள்ளலாம். “ஒன்னுத்துக்கும் கவலப்படாதடா... ரெண்டே ரெண்டு வருஷம் பொறுத்துக்கோ.... திரும்பி வந்ததும் அப்பாவ நாம ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கலாம், என்ன?” என்பாள்.

 

அவனுக்கு கடைசியாக மின்மடலில் வந்த ஒற்றைவரியைப் படிக்கும் போது, “அந்த வரி அவள் கண்களைப் போல் விரிந்திருந்தன. அப்புறம் அப்புறம் என்று என்னைச் சீண்டிய கண்கள்” என்று எழுதுவார் பாவண்ணன்.

 

இப்படித்தான், கிரிஜாவின் கண்களைப் பற்றி, பல இடங்களில் சொல்லிக் கொண்டே வந்து, உச்சக்கட்டக் காட்சியில் அவளது ஒரு கண் சிதைந்து, இயக்கமற்ற செயற்கைக் கண்ணாக இருக்கிறது என்று சொல்லும் போது, வாசகனின் இதயத்தில் ஈட்டியாக அது இறங்குகிறது. (கதை எழுத வேண்டும் என்று நினைப்போருக்கு இது ஒரு நல்ல டிப்ஸ்! (ஒரு வாசகர் கூட சொன்னார். “நான் கூட கதை எழுதிவிட முடியும் என்று நம்பிக்கையைக் கொடுக்கிறார் பாவண்ணன்” என்று).

 

பாவண்ணன் கில்லாடி தானே!

 

காட்சிகளின் கோர்வையில் உணர்வு மேலோங்க, சில கருத்துகளையும் திணித்து வைத்திருக்கிறார்.

 

கருத்து

 

உங்களுக்குத் தெரியும். ஒரு கதை, வாசகரின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப வேண்டும். அவர் மனதில் பல எண்ண அலைகளை உருவாக்க வேண்டும். அந்த உணர்வுகளும், எண்ணங்களும் சேர்ந்து வாசகரின் வாழ்க்கை அனுபவத்தை மேம்படுத்த வேண்டும். அப்படி இந்தக் கதையைப் படிக்கும் போது இரண்டு கருத்துகள் என் மனதில் பட்டன.

 

ஒன்று, நான் என் வாழ்க்கையை வாழ்கிறேன். என் குழந்தைப் பருவம் வேறு. என் சூழ்நிலை வேறு. நான் சந்தித்த மனிதர்கள் வேறு. வாழ்க்கையைப் பற்றிய என் கருத்துரு வேறு. என் உலகக் கண்ணோட்டம் வேறு. எனக்குக் கிடைக்கிற அனுபவங்கள் வேறு. என் குடும்பம் வேறு. என் கனவுகள் வேறு. என் நம்பிக்கைகள் வேறு. ஆனால், நான் சந்திக்கிற மனிதர்களின் சூழ்நிலையும், கண்ணோட்டமும், அனுபவங்களும், கனவுகளும் வேறு வேறு.

 

கிரிஜாவின் வாழ்க்கைச் சூழல் போல, ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் மாறிக் கொண்டேயிருக்கிறது. ஒருவரை நான் சந்திக்கும் போது “பனிமலையின் நுனி போல” த்தான், அவரைப் பற்றி நான் தெரிந்துக் கொள்ள முடிகிறது. ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அந்த பனிமலைநுனி மாறிக் கொண்டேயிருக்கிறது. கிரிஜாவிற்கு விபத்து நடந்து, தொடர்பு அற்றுப் போன பொழுது, மகா வருத்தப்படுகிறான்.

 

மற்றவர்களைப் பற்றித் தெரியாமலேயே, அவர்களின் நிலை புரியாமலேயே நான் கோபப்படுகிறேன். வருத்தப்படுகிறேன். இதை மாற்றவேண்டும். மகிழ்ச்சியான உறவுகளுக்கு மிகமிகத் தேவை தகவல்தொடர்பு.

 

இரண்டாவது, அம்மா இறந்த பிறகு, இயலாத அப்பாவைப் பார்த்துக் கொள்ள வேண்டி, மகா லண்டனில் படிக்கவேண்டிய தன் உயர் படிப்பைத் தியாகம் செய்கிறான். அதுமட்டுமல்ல, கிரிஜாவுடனான காதலும் கேள்விக்குறியாகிறது. பெற்றோர்களின் நலனில் அக்கறைக் கொள்ளும் குழந்தை மகா! ஒரு வாசகர் “ஓரிண்டு தலைமுறைகளுக்கு முந்திய கதையைப் படிப்பது போல இருந்தது” என்று சொன்னார். அப்படியானால் மகா இந்தத் தலைமுறை குழந்தை இல்லையோ?

 

நிறைவாக, மெல்பர்ன் வாசகர் வட்டத்தில் இருந்த ஏறக்குறைய எல்லா வாசகர்களுமே ‘நயனக்கொள்ளை’ கதையை மெச்சினர். சிலர் அந்த நூலின் முகப்பு அட்டையைப் பாராட்டினர். அந்த ஓவியத்தில் உள்ள பெண்ணின் ஒரு கண் கேசத்தால் மூடியிருக்கும். விரிந்த இன்னொரு கண் உங்களை ஏதோ செய்யும்.

 

(நயனக்கொள்ளை என்ற சொல் திருவாசகத்தில் வருகின்ற சொல். நயனம் என்றால் கண்)

 

நயனக்கொள்ளை!

ஏமாற்றவில்லை!!

 

********

 

 

Comments


© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page