NASA Artemis இரண்டு – சந்திரனை நோக்கிய வரலாற்றுப் பயணம்
- உயிர்மெய்யார்

- Apr 2
- 3 min read

NASA's Artemis II moon rocket lifts off from the Kennedy Space Center's Launch Pad39-B Wednesday, April 1, 2026, in Cape Canaveral, Fla. (AP Photo/Chris O'Meara) Source: AP / Chris O'Meara
NASA Artemis இரண்டு – சந்திரனை நோக்கிய வரலாற்றுப் பயணம்!
ஆஸ்திரேலியாவில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி காலையாக இருக்கும் போது, அமெரிக்காவில் ஏப்ரல் ஒன்று மாலையில், ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள Kennedy Space Center-ல் இருந்து, NASAவின் Artemis II மிஷன் நிலவுக்கு வெற்றிகரமாக லான்ச் ஆனது. நாசாவின் முதல் முயற்சியான அப்பல்லோவிலிருந்து, 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மனிதர்கள் சந்திரனை நோக்கி பயணம் செய்யும் முதல் குழு பயணம் இது!
இன்றைய செய்தித்தொகுப்பில், Artemis இரண்டின் வரலாறு, அதன் முக்கியத்துவம், மனித குலத்துக்கு ஏற்படும் தாக்கம், ஆஸ்திரேலியாவுக்கு – குறிப்பாக நமது தமிழ் சமூகத்துக்கு – என்ன பயன் என்பதை தெரிந்துக் கொள்ளப் போகிறோம்.
1969-ஆம் ஆண்டு, Apollo 11 மிஷன் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் வைத்தார். அது மனிதகுலத்தின் மிகப் பெரிய தருணம். அவர் நிலவில் இறங்கும் போது ‘இது ஒரு மனிதனின் சிறிய காலடியாக இருக்கலாம். ஆனால் நம் மனிதகுலத்துக்கு ஒரு பெரிய பாய்ச்சல்.’ என்று சொன்னார்.
ஆனால் அதற்குப் பிறகு... 50 ஆண்டுகள் காத்திருந்து இப்போது NASAவின் Artemis திட்டம் வந்தது. ஆர்ட்டெமிஸ் என்று இந்த விண்கலத்திற்கு எப்படி பெயர் வைத்தார்கள் தெரியுமா?Artemis என்பது கிரேக்க புராணத்தில் நிலவு தேவதையின் பெயர். Apollo-வின் சகோதரி. இந்தத் திட்டம் வெறும் சந்திரனுக்குப் போய் வருவது மட்டும் அல்ல. அதன் இலக்கு என்ன தெரியுமா? நிலவில் வாழ அடிப்படை உள் கட்டமைப்புகளைக் கட்டுவது. அப்படி உள்கட்டமைப்புகளைக் கட்டி தொடர்ந்த ஆய்வுகளை மேற்கொள்வது. அப்படி ஆய்வுகளை மேற்கொண்டு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது. இவைகள் தான் ஆர்டிமிஸ் இரண்டின் இலக்குகள்.
2022 ஆம் ஆண்டு Artemis I ரோபோ மிஷன் வெற்றி பெற்றதன் பின்னணியில் இப்போது 2026 ஆன் ஆண்டில் Artemis இரண்டின் முதல் குழு பயணம் நடக்கிறது. அடுத்து 2028 ஆம் ஆண்டில் Artemis III-ல் சந்திரனில் மீண்டும் மனிதர்கள் இறங்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த Artemis இரண்டின் பயணத்தில் இரண்டு விசேடங்களைக் கவனிக்கவேண்டும். முதல் விசேடம், இந்தப் பயணத்தில், முதன்முதல் நிலவுக்குப் பயணம் செய்யும் பெண்மணியாக Christina Hammock Koch திகழ்கிறார். அவர் விண்கலத்தில் அமர்ந்துக்கொண்டு நமது முழு சூரியக் குடும்பம் எப்படி உருவானது என்பதற்கான சாட்சியாக நிலவு இருக்கிறது என்றும் அந்த நிலவை நோக்கியப் பயணம், மனிதகுலம் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் முதல் படிக்கல்லாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் அங்கு கடந்த கால உயிரின் அறிகுறிகளை நாம் கண்டுபிடிக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் சூரியக் குடும்பம், பால்வெளி, அண்டம் எல்லாம் எப்படி உருவாகின்றன என்ற இரகசியங்களைத் தெரிந்துக்கொள்ளும் அறிவியல் பாதையாக இருக்கும் என்றும் கூறினார்.
இரண்டாவது விசேடம் என்னவென்றால் வெள்ளை இனம் சாராத (Person of color) Victor J Glover என்பவர் பைலட்டாக இருக்கிறார் என்பது தான். இந்தப் பயணத்தைத் தொடங்கும் போது கட்டிடத்தின் வெளியே அவர்களது குடும்பத்தினர் நின்றுக் கொண்டிருந்ததாகவும், நேரடியாக அவர்களிடம் தன் அன்பை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். மேலும் அனைவரும் வாகனத்தில் ஏறும் முன் அவர் தன் பிரார்த்தனையைச் செய்துவிடுவதால் லான்ச் டைம்லைனில் முழு கவனத்துடன் இருக்க முடியும் என்றும் கூறினார்.
உலகின் தற்போதைய மிக சக்திவாய்ந்த ராக்கெட் ஆன Space Launch System SLS ராக்கெட், Orion விண்கலத்தை சுமந்து சென்றது. அக்குழுவில் நாசாவைச் சேர்ந்த Reid Wiseman கமாண்டர் ஆகவும், Victor Glover பைலட்டாகவும், பெண் வீரர் Christina Koch மிஷன் ஸ்பெஷலிஸ்ட் ஆகவும், Canadian Space Agencyயைச் சேர்ந்த Jeremy Hansen மற்றொரு மிஷன் ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் செல்கிறார்கள்.
இந்தப் பயணம் மொத்தம் பத்து நாட்கள் கொண்ட பயணமாகும். இவர்கள் சந்திரனைச் சுற்றி வருவார்கள் (lunar flyby), ஆனால் இறங்க மாட்டார்கள். Orion விண்கலத்தின் அமைப்புகள், உயிர் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தையும் சோதனை செய்வார்கள். இது எதிர்காலத்தில் சந்திரனில் தங்கும் மிஷன்களுக்கு அடித்தளமாக அமையும்.
இந்த மிஷன் வெறும் விண்வெளி பயணம் அல்ல. மனிதகுலத்தின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி கொண்டது. சந்திரனின் மண், நீர், பனி, போன்ற வளங்களைப் புரிந்துகொள்ள உதவும். அங்கு சூரிய சக்தி, ஆக்ஸிஜன் போன்றவற்றை உற்பத்தி செய்ய வழி வகுக்கும். மேலும் செவ்வாய் செல்லும் மனிதர்களுக்கு இது “பயிற்சி” மைதானமாக அமையும். உலகெங்கும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் STEM (Science, Technology, Engineering, Math) படிப்பைப் படிக்க ஊக்கம் கொடுக்கும். நானும் ஒரு நாள் விண்வெளிக்குப் போகலாம் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும். அமெரிக்கா, கனடா மட்டுமல்ல – Artemis Accords-ல் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன என்பது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பான CSIRO, ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள ஆண்டெனாக்கள் மற்றும் வசதிகள் மூலம் டிராக்கிங் நிபுணத்துவத்தை வழங்குகிறது. இதில் NASAவின் Canberra Deep Space Communications Complex-ம் அடங்கும்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் நாம் அனைவரும் ஒரு நிமிடம் வெளியே சென்று மேலே பார்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுவதாகவும், சந்திரனைப் பார்த்து, மனிதர்கள் மீண்டும் அங்கு இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய விண்வெளி வீரர் மற்றும் ‘ஆஸ்திரேலியாவின் ஆண்டின் சிறந்த நபர்’ விருது பெற்ற Katherine Bennell-Pegg கூறினார். மேலும் அவர் கூறுகையில், ‘ஆஸ்திரேலியா இந்த முறை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அப்பல்லோ காலத்தில் நாம் கொடுத்த உதவியின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த Artemis மிஷனுக்கு மிக முக்கியமான ஆதரவை நாம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இது ஆஸ்திரேலியர்கள் பெருமையுடன் பார்க்கக்கூடிய மிஷன் ஆகும் என்றும் குறிப்பிட்டார்.
CSIRO (ஆஸ்திரேலிய தேசிய அறிவியல் அமைப்பு) நடத்தும் ‘Canberra Deep Space Communication Complex’ மூலம் நிலவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் விண்வெளி வீரர்களுடன் தொடர்பு வைத்திருக்கும். ரேடியோ அலைகள், டிராக்கிங் – அனைத்தும் இங்கிருந்துதான் நடைபெறுகிறது!
மேலும், Australian National Universityயில் (ANU) உள்ள Quantum Optical Ground Station மூலம் ‘லேசர் கம்யூனிகேஷன்’ சோதனையும் செய்யப்படுகிறது. இது எதிர்காலத்தில் அதிவேக தரவுகளை அனுப்ப உதவும்.
Apollo காலத்திலும் ஆஸ்திரேலிய டிராக்கிங் ஸ்டேஷன்கள் உதவின. இப்போது Artemis-பயணத்திலும் மீண்டும் உதவுகின்றன! Australian Space Agency மூலம் 2030-க்குள் லூனார் ரோவர் அனுப்பத் திட்டம் இருக்கிறதை இங்கு குறிப்படவேண்டும்.
இது நமது பொருளாதாரத்துக்கு புதிய வேலைவாய்ப்புகளைக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பெருகவும் இளைஞர்களுக்கு விண்வெளி துறையில் வாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லலாம்.
இன்று ஆஸ்திரேலிய தமிழ்க் குழந்தைகள் இந்த மிஷனைப் பார்த்து தாங்களும் விஞ்ஞானியாகலாம், பொறியாளர் ஆகலாம், விண்வெளியில் பயணம் செய்யலாம் என்று கனவு காண நிறைய வாய்ப்பு இருக்கிறது.
********



Comments