நாற்பத்தியொரு ஸ்தூபிகள் - ஈராக்கின் கிறிஸ்து - சிறுகதைத் தொகுப்பு - கதைச் சுருக்கமும் வாசிப்பு அனுபவமும்
- உயிர்மெய்யார்
- Jul 29
- 3 min read
Updated: Aug 2

கதைச் சுருக்கம்
ஒரு மகன். மதிய நேரம். மருத்தவமனையில் இருக்கிறான். ஒரு படுக்கையருகே நிற்கிறான். படுக்கையில் அப்பொழுதுதான் இறந்து போன அம்மா. சூடானிய முகம். வெள்ளையும் இல்லாத, கருப்பும் இல்லாத மா நிறம்.
கொஞ்சம் ஃப்ளாஷ் பேக். காலையில் நினைக்கிறான். “ஒரு வேளை இன்று என் அம்மா இறந்து போனால்?”. முந்தைய நாட்களில் உறங்கும் போதும் கைபேசியை தலைக்கருகே வைத்திருக்கிறான். அந்தச் செய்தி எப்பொழுது வரும்? ஒரு வாரமாகவே, செவிலியர்களிடம் அம்மாவின் உடல்நிலையைப் பற்றிக் கேட்கும் போது, அவர்கள் என்ன சொல்வது என்று குழம்பித்தான் போனார்கள்.
பார்வையாளர் நேரம் இல்லாத போதும் பணம் வாங்கிக்கொண்டு உள்ளே விடுகிற, அல்லது கூட கொஞ்சம் நேரம் இருக்க அனுமதிக்கிற காவல்காரன், எல்லோரையும் வெளியே போகச் சொல்லிச் சத்திமிட்டுக்கொண்டே வருகிறான்.
மறுபடியும் அம்மா பற்றிய நினைவு வருகிறது. அவன் சிறுபிள்ளையாக இருக்கும் போது சேட்டை செய்யும் பொழுதெல்லாம் அவனைத் தண்டிக்க அவள் தயங்கியதேயில்லை. இருந்தாலும் சற்று நேரத்திற்குப் பிறகு அவனுக்குக் கதைகள் சொல்வாள். மசூதிகளில் உள்ள ஸ்தூபிகள் பற்றிச் சொல்வாள். அவர்கள் ஊரில் இருக்கும் ஐம்பத்தொரு மசூதிகளில் நாற்பத்தியொரு மசூதிகளில் தான் ஸ்தூபிகள் இருக்கிறதென்று சொல்வாள். அப்படிப்பட்ட தாய், ஹஜ் யாத்திரை போய் வந்த வயதானவர்கள் தான் அதிகமாக வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்குப் போவதால், தன்னை முதியோராக காட்டிக் கொள்ள விருப்பமில்லாத அவள் மசூதிக்குச் செல்வதில்லை.
திரும்ப மருத்துவமனையைப் பார்க்கிறான். அது ஓர் ஆங்கிலேய மருத்துவமனை. காலனியாதிக்கக் காலத்தில் அது சுத்தமாகவும், இரைச்சலின்றி இருந்ததாகவும் அவனது மாமா சொல்லியிருக்கிறார். ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. வெளியே பார்க்கிறான். மூடிய கதவுகளின் இரும்புக்கம்பி பாளங்களுக்கிடையே ஓர் இளம் பெண் தன் முகத்தைப் பதித்த வண்ணம், கதவு திறப்பதற்காக காத்திருக்கிறாள். காவல்காரனின் இருக்கையில் யாரும் இல்லை. மருத்துவர் வந்து பார்த்துவிட்டு விரைவாகத் திரும்புகிறார்.
மறுபடியும் அம்மாவின் நினைப்பு. இவனை திருமணக்கோலத்தில் பார்க்க அவள் ஆசைப்படுகிறாள்.
திரும்ப மருத்துவமனை. அறையை விட்டு வெளியேறுகிறான். நடைக்கூடத்தில் மனிதர்கள் நிரம்பி வழிகிறார்கள். அந்த இளம் பெண் அங்கேயே நின்றிருக்கிறாள். காவல்காரனின் இருக்கை காலியாகத்தான் இருக்கிறது என்போதோடு கதை நிறைவு பெறுகிறது.
வாசிப்பு அனுபவம்
ஒரு தாய் என்றாலே அவள் தன் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பற்றிக் கனவு காணுபவளாகவே இருக்கிறாள்.
என் அம்மாவை இங்கு நினைத்துக்கொள்கிறேன். என் அம்மா, கடும் பொருளாதார நெருக்கடியிலும், ஒன்பது பிள்ளைகளைப் பெற்று அதில் தலைச்சன் பையன் இறந்து மீதி இருந்த எட்டு குழந்தைகளையும் வளர்க்க வேண்டியக் கட்டாயத்தில், ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு கனவு வைத்திருந்தாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் எல்லாப் பிள்ளைகளுக்கும் பெயர் சூட்டுவதிலிருந்து, பள்ளியில் சேர்ப்பதிலிருந்து, பாடம் சொல்லிக்கொடுப்பதிலிருந்து, குளிப்பாட்டி, சோறூட்டி, நல்ல ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பது வரை அவர் செய்வது, நான்காவது பிள்ளையாகப் பிறந்து, மகன்களில் பெரிய பையனாக இருந்து நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
அப்பாவின் அரசாங்க வேலையால் அடிக்கடி பணி இட மாற்றத்தை அழகாகக் கையாண்டு, அம்மாவோடு பிறந்த ஏழு பேரோடு வளர்ந்து, அப்பாவோடு பிறந்த ஆறு பேரோடும் வாழ்ந்து, ஒன்பது பிள்ளைகளைப் பெற்று, தனது 92 ஆவது வயதிலும் இன்றைக்கும் (2025) வாழ்ந்துக் கொண்டிருக்கும் அம்மாவை நினைத்தால் வியப்பே மேலிடுகிறது.
அப்பாவின் சகோதர, சகோதரிகளுக்குப் பிறந்த குழந்தைகளையும் விட்டுக் கொடுக்காமல், அம்மாவின் சகோதர, சகோதரிகளுக்குப் பிறந்த குழந்தைகளையும் விட்டுக் கொடுக்காமல், எல்லா நல்ல நிகழ்ச்சிகளிலும், கெட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று இத்தனை பௌர்ணமியையும் அமாவாசையையும், அம்மா கடந்து வந்திருப்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது.
என் அம்மா என்ன கனவு கொண்டிருந்திருப்பார்? என்றைக்காவது இந்த வறுமை ஒழியாதா? பிள்ளைகள் நன்கு படித்து நல்ல வேலைக்குப் போய், ஒழுக்கமான உயர்ந்த குடும்பங்களைக் கட்ட வேண்டும் என்று தான் தினமும் பிரார்த்தித்திருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவ்வளவையும் ஓய்வின்றி செய்தார். அது மட்டுமல்ல, அவர் கனவு ஒவ்வொன்றாக நிறைவேறும் போதும் அதனைப் பார்த்து மகிழ்ச்சியுற்றிருக்கிறார்.
என் மனைவியை ஓர் அம்மாவாக எண்ணிப் பார்க்கிறேன். ஓர் தாய் என்றால் அதற்கு மிகப் பொருத்தமான ஓர் ஆளை இவ்வுலகத்தில் காட்டுங்கள் என்றால், கொஞ்சமும் தயக்கமில்லாமல் என் மனைவியை நோக்கி என் விரல்கள் நீளும்.
ஏன் அப்படி?
தாய் என்றால் அளவிடமுடியாத, அடைக்குந் தாழ் இல்லாத அன்பு என்று தானே பொருள். என் மனைவியும் அப்படித்தான். அவரோடு பழகியிருந்தீர்களென்றால், நிச்சயம் உங்கள் தலையை வேகமாக “ஆமாம்! ஆமாம்!!” என்ற ஆட்டுவீர்கள். கொடுப்பது தான் அவரது வாழ்க்கைத் தத்துவம். எதுவாக இருந்தாலும் கொடுக்க வேண்டும். அதுவும் எளிய மக்கள் என்றால், இல்லாதவர்கள் என்றால், மனம் கசிந்து உருகிவிடுவார். கையில் காதிலிருந்து கழற்றிக் கொடுப்பதிலிருந்து, பையில் பணத்தில் மிச்சம் வைக்காமல் கொடுக்கக் கூடிய மனசு.
இவரும் ஒரு தாயாக கனவு கண்டார். தன் பிள்ளைகள் உலகிலேயே கவனிக்கக்கூடிய ஆட்களாக உயர வேண்டும். அதே நேரம் மனித நேயமிக்க, ஒழுக்கமிக்க, பண்புள்ள மனிதர்களாக வாழ வேண்டும். இது தான் அவர் கண்ட கனவு. அதற்காக இருபத்தி நான்கு மணி நேரமும் ஓயாது உழைத்தார். உழைக்கிறார். அதில் ஒரு சிறப்பு என்னவென்றால், அந்த உழைப்பை மகிழ்ச்சியோடு, சிரிப்பலைகளோடு செய்வார்.
இன்னும் பல தாய்களைப் பற்றி என்னால் சொல்ல முடியும். கட்டுரையின் அளவு கருதி என் அம்மாவோடும், என் மனைவியோடும் நிறுத்திக் கொள்கிறேன்.
இந்தக் கதையில் வரும் அந்தத் தாயின் கனவும் அந்த மகனின் இழப்பும் வலியைக் கொடுக்கிறது. ஒழுக்கமான மனிதனாக வளரவேண்டும் என்பதிலிருந்து, அவனுக்கு ஒரு திருமணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்பது வரை அவள் கனவு கண்டாள். ஆனால், அதைப் பார்க்காமலேயே மரணித்தது மனதிற்குள் சோகத்தை வரவழைக்கிறது. வாயிலில் ஒரு இளம்பெண்ணை கதையாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். கடைசி வரை அவளுக்கு வாயில் திறக்கப்படாமலேயே இருக்கிறது. ஒருவேளை, அவனுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கான குறியீடோ?
அவன் சிறுவனாக இருந்தபொழுது, அவனுக்குப் பலக் கதைகளைச் சொல்கிறாள். அப்படிச் சொன்ன கதைகளில் ஒன்று தான் நாற்பத்தியொரு ஸ்தூபிகள் பற்றிய கதை. மசூதிகளில் உள்ள ஸ்தூபிகள் பற்றிச் சொல்வாள். அவர்கள் ஊரில் இருக்கும் ஐம்பத்தொரு மசூதிகளில் நாற்பத்தியொரு மசூதிகளில் தான் ஸ்தூபிகள் இருக்கிறதென்று சொல்வாள்.
கதைக் களமான மருத்துவமனைக்கு வருவோம். காலனியாதிக்கக் காலத்தில் அது சுத்தமாகவும், இரைச்சலின்றி இருந்ததாகவும் அவனது மாமா சொல்லியிருக்கிறார். ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. வெள்ளக்காரன் இருந்தப்ப எல்லாம் நல்லா இருந்துச்சி என தமிழகத்திலும் சிலப் பெரியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். காலனியாதிக்க காலம் சிறப்பாக இருந்ததாகவே ஒரு கருத்து கட்டமைக்கப்படுகிறதே ஏன்? இப்பொழுது நிலமை மிகவும் மோசமாகிக்கொண்டே வருகிறது என்று சொல்வது மெய்தோனோ?
மருத்துவமனையில் வாயிற் காப்போன், பணம் வாங்கிக்கொண்டு, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத வேளையிலும் உள்ளே விடுகிறான். அல்லது கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு, வெளியேற வேண்டிய நேரத்தைத் தாண்டியும் உள்ளே இருக்க அனுமதிக்கிறான். அறபு உலகத்தில் லஞ்சம்!
கதை மனசை என்னவோ செய்கிறது!
*********
תגובות