top of page

கருஞ் சட்டையும் வெண் தாடியும் கற்றுக் கொடுத்தப் பாடங்கள்



இவர் வாழ்க்கை, என்னை எப்படியெல்லாம் மாற்றியது என்பதை பதிவு செய்வது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம். வாழ்க்கையில் எந்த நிலையிலும் எளிமையாக இருக்க வேண்டும் என்றும், தாய் மொழி மீது, தமிழ் மொழி மீது ஆர்வமும் பற்றும் வைக்க வேண்டும் என்றும், இனமான உணர்வும், தன்மான உணர்வும் பெற்று கலைகள் மூலம் சமூக மாற்றப் பணிகளை எப்படிச் செய்யவேண்டும் என்றும் கற்றுக்கொடுத்த ஆசானுக்கு ஒரு கட்டுரை எழுதுவது ஓர் இன்பகரமானப் பணி. அதுவும் அவரது நூற்றாண்டு விழா மலரில் வெளியிட!

 

உயர்விலும் எளிமை வேண்டும்

1981ம் வருடம் MERG என்கிற கல்வி மேம்பாட்டு நிறுவனத்தையும் அதன் ஒரு பகுதியான Catherine Activity பள்ளியையும் நடத்தி வந்த திரு. சுப்பு என்பவர் மூலமாகத்தான் திரு. கலைவாணன் எனக்கு அறிமுகமானார். நானும் கலைவாணனும் இணைந்து அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். பயிற்சியின் நிறைவில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் கலைவாணன்.

 

அங்கு தான் அவரைச் சந்தித்தேன். ஜிப்பா போட்டிருந்தார். கருப்பு நிறத் துண்டு கழுத்தில் அனாயசமாகக் கிடந்தது. பிற்காலத்தில் வைத்திருந்த வெள்ளைத் தாடி அப்பொழுது இல்லை. தன் பேரப்பையனுக்கு ஏதோ பாட்டு சொல்லிக்கொண்டிருந்தார். ஆரம்ப அறிமுகத்திற்குப் பிறகு, அவர்களுடைய வீட்டிற்கு முன்புறம் இருந்த இன்னொரு வீட்டிற்கு, அவர் எங்கள் இருவரையும் அழைத்துச் சென்றார். அந்த வீடு முழுவதும் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சிக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் அங்கு இருந்தன. ஒரு நீண்ட பொருள், துணி போட்டு மூடி வைத்து சுவற்றில் சாய்த்து இருந்தது. அது என்ன என்று கேட்டேன். அவரே சொன்னார்:

 

“ ஒங்களுக்குக் காபி போட்டு குடுத்தாங்களே அவங்க தான் கலைவாணன் அம்மா, மரகதம்’னு பேரு. எங்களுக்கு 54ல்ல அண்ணா தலைமையில கல்யாணம் நடந்துச்சு. 58ல்ல கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய வில்ல, அவரோட மனைவி டி.ஏ. மதுரம் அம்மா ‘முத்துக்கூத்தா, இதை நீ வச்சுக்க’ ன்னு சொல்லி என்னுட்ட குடுத்தாங்க. கலைவாணா, அந்தத் துணிய எடுத்துட்டு வில்லை காமி” என்றார். எனக்குத் தலை சுற்றியது. எவ்வளவு உயர்ந்த கலைஞரோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அப்பொழுது தான் வந்தது.

 

வீட்டிலிருந்து கீழே இறங்கி ஒரு தேநீர் கடையில் நின்று நானும் கலைவாணனும், வடையைத் தின்றுக் கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். ‘அதுக்குத்தான் ஒங்களுக்கு கலைவாணன்’னு பேரா’ என்றேன். ஆமாம் என்று தலையாட்டியவர் தன் அப்பா எழுதிய சிலப் பாடல்களை எனக்குப் பாடியேக் காண்பித்தார். நாடோடி மன்னன் படத்தில் வரும் ‘செந்தமிழே வணக்கம்’ ‘சம்மதமா, நான் உங்க கூட வர சம்மதமா?’ அரசகட்டளை படத்தில் வரும் ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்’ என்று பல பாடல்களைத் தொடர்ந்து பாடினார். அப்பொழுது தான் எனக்கு ஒரு விடயம் புரிந்தது. உயர்விலும் எளிமை வேண்டும். இது தான் நான் கலைமாமணி ந.மா. முத்துக்கூத்தன் ஐயா அவர்களிடம் கற்றுக்கொண்ட முதல் பாடம்.

 

சுற்றி இருப்பவர்களை தன் திறமையாலும், அறிவாலும், கடப்பாட்டு உணர்வாலும், கொள்கைப் பிடிப்பாலும் அசத்திக் கொண்டேயிருப்பார். இரண்டாம் முறையாக நான் அசந்து போனது அவரோடு மஹாராஷ்டிரா போன போது தான்.

 

மொழி உணர்வுப் பேண வேண்டும்

1982ம் வருடம் மஹாராஷ்டிரா வார்தாவில் உள்ள சேவா கிராமத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்திற்கு ஐயாவோடும் கலைவாணனோடும் சேர்ந்து, நானும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும், மற்ற சில சமூக செயற்பாட்டாளர்களும் சென்றோம். அங்கு யாருக்கும் தமிழ் பேசத் தெரியவில்லை. மராத்தி மொழி தான். ஏதோ எனக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்ததால், அப்படி இப்படி பேசி, பொழுது கழிந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு பயணத்தைத் தொடர்ந்தோம். வார்தா ஆசிரமத்திலிருந்து, தானாக முன்வந்து நிலம் தானம் செய்யும் ‘பூதான் இயக்கத்தை’ உருவாக்கிய, சர்வ சேவா பண்ணைகளின் முன்னோடி, வினோபா பாவே அவர்களின் ஆசிரமத்திற்குப் போனோம். அது பவுனார் கிராமத்தில் ‘தாம்’ ஆற்றங்கரையில் இருந்தது. பெரிய பெரிய கற்பாறைகளின் நடுவே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஐயா ஒரு பாறையிலும் நானும் கலைவாணனும் இன்னொரு பாறையிலும் உட்கார்ந்திருந்தோம். வேறு சிலர் அடுத்தடுத்த பாறைகளில் உட்கார்ந்திருந்தனர். மொழி பற்றிய பேச்சு வந்தது. அப்பொழுது முத்துக்கூத்தன் ஐயா சொன்னது இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ‘எந்த மொழியை வேணுன்னாலும் கத்துக்கலாம். ஆனா யாருக்கும் அவுங்க அவுங்க தாய் மொழி ரொம்ப முக்கியம். அது தான் அவுங்க அடையாளம். அதுவும் நம்ம தமிழ் மொழி இருக்கே.. அதனோட சிறப்பைப் புரிஞ்சிக்கனும். ஏன்னா, அது தான் நம்ம பண்பாடு. நம்ம அதுல தான் தெளிவா சிந்திக்கிறோம். எளிமையா வெளிப்படுத்துறோம். அது தான் இயல்பா வர்றது. சின்ன குழந்தைங்கள பாருங்க!….தாய்மொழியில சீக்கிரமா கத்துப்பாங்க. ஆழமா கத்துப்பாங்க.’ ஐயா பேசப் பேச தமிழ் மொழி மேல அவருக்கிருந்த காதல் எனக்கு புரிந்தது மட்டுமல்ல, எனக்கும் தமிழ் மொழி மேல் காதல் பிறந்தது. அந்த ஆற்றில் ஜில்’னு காற்றை பருகிக்கொண்டே அவர் தொடர்ந்து பேசியதை எல்லோரும் வாய் பிளந்து கேட்டோம். ‘தமிழ் மொழிய நல்லா கத்துகிட்டோம்னா, பல மொழிகள எளிதா கத்துக்கலாம். மொழி உணர்வு இல்லாதவங்க வெறும் சடலம் தான்’னு முடிச்சப்போ, எனக்கு சுறுக்குன்னுச்சு. அதிலிருந்து தான் தமிழ் இலக்கியங்கள் பக்கம் என் பார்வை போனது. மொழி உணர்வு பேணுவது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்தது. அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் தமிழ்ப் பெயர்களைக் கேட்கும் போது எனக்குப் பொறாமையாக இருக்கும். பிற்காலத்தில் எனக்கு நானே ‘உயிர்மெய்யார்’ என்று பெயர் வைத்துக் கொண்டதற்கும் இது ஒரு காரணம் தான். தாய் மொழி, தமிழ் மொழி மேல் மாறாக் காதல் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொண்டது இரண்டாம் பாடம். பிற்காலங்களில் பாவேந்தர் பாரதிதாசனின் ‘புரட்சிக்கவி’ நாடகத்தையும், அறிஞர் அண்ணாவின் ‘சந்திரமோகன்’ நாடகத்தையும், ஈ.வெ. இராமசாமி அவர்களைப் பற்றி ‘பெரியாருள் பெரியார்’ என்ற வரலாறையும், இன்னபிற தமிழறிஞர்களின் கருத்துக்களையும், பொம்மலாட்டமாகவும் வில்லுப்பாட்டாகவும் ஐயா நிகழ்த்தும் போது அவர் தமிழ் மொழி மீது வைத்திருந்த பற்று வெள்ளிடை மலையாகத் தெரிந்தது.

 

ஐயாவோடு பயணிக்கும் போது நம் எண்ணங்கள் மாறும், நம் பேச்சு மாறும், நம் செயல்பாடு மாறும். இந்த சமுதாயத்தை, உலகை, வாழ்க்கையை நோக்கும் பார்வை மாறும். அப்படிப்பட்ட மிக முக்கியமான பார்வை மாற்றம் அவரோடு பெங்களூர் போன போது நடந்தது.

 

இனமான உணர்வு வேண்டும்

1984ம் வருடம். கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள Indian Social Institute-ல் ஒரு தேசிய அளவிலான கலை மற்றும் பொம்மலாட்டப் பயிற்சி. OXFAM India என்கிற நிறுவனம் நடத்தியது. அதற்கு கலைமாமணி ந.மா. முத்துக்கூத்தன் ஐயா, அவர் மகன் கலைவாணன் மற்றும் நான், மூவரும் தான் பயிற்சியாளர்கள். பத்து நாட்களும் ஐயாவோடு பயணித்தது ஒரு வாழ்நாள் வரம். அவர் பயிற்சியாளர்களைக் கையாளும் விதம் அலாதியானது. எல்லோருக்கும் மதிப்புக் கொடுத்து, அவர்களுக்கு உள்ளேயிருக்கும் கலைத்திறமையை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரே! அவர் சொல்வார்: “எல்லோருக்குள்ளும் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறான். பயிற்சியாளருடைய வேலை, நமக்குத் தெரிந்ததை அவர்களுக்குள் புகுத்துவது கிடையாது. அவர்களின் திறமையை அவர்களுக்கேப் புரியவைத்து அந்தத் திறமையை வெளிக்கொணர்வது தான்.” என்பார். பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திலிருந்து சற்றுத் தள்ளி, மில்லர்ஸ் ரோடும் பென்சன் ரோடும் சந்திக்கிற இடத்தில் ஒரு தேநீர் கடை இருந்தது. இப்பொழுது இருக்கும் மேம்பாலம் அப்பொழுது இல்லை. பயிற்சி முடிந்த பிறகு, அந்த தேநீர் கடையில் தான் நாங்கள் மூவரும் உட்கார்ந்து பல விடயங்களைப் பேசிக்கொண்டிருப்போம். 80களில் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் பிரச்னை மூண்டிருந்த காலம். கன்னட மொழியை முதன்மை மொழியாக வினாயக கிருஷ்ண கோகாக் கமிட்டி அறிவித்து, அப்போதைய முதலமைச்சர் திரு. ஆர். குண்டுராவ் அவர்கள் அதனைச் செயல்படுத்தினார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அந்த இயக்கத்தில் செர்ந்து அதை வலுப்படுத்தினார். கர்நாடகாவில் இருந்த தமிழர்கள் தங்கள் மொழி உரிமை பாதிக்கப்படுகிறது எனப் போர்க்கொடி தூக்கினர். இது குறித்தப் பேச்சு வந்தது. முத்துக்கூத்தன் ஐயா சொன்னார்: “எல்லா இனங்களுக்கும் அவரவர் இனத்தைப் பற்றிய பெருமை இருக்கும். ஆனால் தமிழருக்குரிய பெருமையை நாம் உணர வேண்டும். இரண்டாயிரம் மூவாயிரம் வருடத்திய சங்க இலக்கியம் போன்ற, தமிழர்களின் அறிவு, அறம், வீரம், அன்பு போன்று பண்புகளை விளக்கும் இலக்கியங்கள் வேறு எந்த இனத்திற்கு இருக்கிறது? தொல்காப்பியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருக்குறள் போன்ற ஒரு நூல் வேறு எங்கும் உண்டா? ஓகமும் கூத்துகளும் நாட்டியமும் கட்டிடக் கலையும் வானவியலும் என்று அடுக்கிக்கொண்டே போகலாமே! தெற்காசியாவையேக் கட்டியாண்ட தமிழ் மன்னர்கள் உதித்த இனம் நம் இனம். சித்த மருத்துவத்தைக் கண்டு பிடித்த இனம். ஒரு காலத்தில் நாகர்கள் என்ற பெயரில் தமிழர்கள் சிந்து சமவெளி உட்பட இந்தியா முழுக்க வாழ்ந்தனர் என்றும் அவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் அண்ணல் அம்பேத்கர் சொல்லியிருக்காரு. நம்ம ஒவ்வொருவருக்கும் நம் இன உணர்வு வேண்டும். பெரியார் சொல்ற தன்மான உணர்வு வேண்டும்” கையில் வைத்திருந்த தேநீர் பெங்களூர் குளிரில் ஆறிப் போயிருந்தது. ஆனால் நெஞ்சு சூடாக இருந்தது. மூன்றாம் பாடம் இனமான உணர்வு.

 

எனக்கு மொழி உணர்வும், இன உணர்வும், மான உணர்வும் அறிமுகமான இடமாயிருந்த கோட்டூர்புரம் பிறகு காட்டாங்குளத்தூருக்கு மாறியது. ஆம்! ஐயா காட்டாங்குளத்தூருக்கு குடும்பத்தோடு குடியேறிவிட்டார்.

 

காட்டாங்குளத்தூர் வீட்டிற்கு ‘கூத்தர் குடில்’ என்ற அழகிய பெயரைச் சூட்டியிருந்தார்கள். பீஹார் பயணத்திற்கு நீங்களும் வர்றீங்க என்று என்னையும் அழைத்துச் சென்ற போது தான் ‘உச்சக்கட்ட பாடம்’ நடந்தது. நான்காம் பாடம்! அது என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.

 

கலைத்திறன் கைவர வேண்டும்

1990ம் வருடம். தமிழக அரசின், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழகத்திலிருந்து, ஐயாவின் பொம்மலாட்டக் குழுவையும், மதுரை ஓம் பெரியசாமி கரகாட்டக் குழுவினரையும் அழைத்துக்கொண்டு பீஹார் இயல் இசை நாடக மன்றத்தினரோடு நிகழ்ச்சிகள் நடத்துவதாகத் திட்டம். என் வேலை, ஒவ்வொரு இடத்திலும், பொம்மலாட்ட நிகழ்ச்சியில் சொல்லப்படும் கருத்துக்களையும், தமிழ்ப் பாரம்பரியக் கலைகள் பற்றியும் ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லவேண்டும். மாடாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம் என்று பலவகை ஆட்டம் ஆடும் கலைஞர்கள் 15 பேரை மதுரையிலிருந்து அழைத்துக்கொண்டு, ஓம். பெரியசாமி ஐயாவின் மகன்கள் மதுரைவீரனும் அவர் அண்ணனும் வந்திருந்தனர். பொம்மை ஆட்டுபவர், ஆர்மோனியம், தபேலா உட்பட இசைக்குழுவினர், ஒலி, ஒளி, மேடை அமைப்போர் என்று முத்துகூத்தன் ஐயாவின் பொம்மலாட்டக் குழுவினர் 15 பேர் சென்னையிலிருந்து கிளம்பினர். இயல் இசை நாடக மன்றத்திலிருந்து திரு. பாலு மற்றும் ஒருவர். அவர்களோடு நான்.

 

ஒரு மாதம் சுற்றினோம். பாட்னாவில் நித்ய கலா மந்திர் மண்டபத்திலும், ராஜ்கிரில் டவுன் ஹாலிலும், ஜாம்ஷெட்பூரில் மைக்கேல் ஜான் மண்டபத்திலும், சாய் பாஷாவில் பிள்ளை மண்டபத்திலும், ரான்ஜியில் நெல்சன் ஷக்ரிதி கேந்திராவிலும் மற்றும் முஷாஃபர்பூர், பகல்பூர், வைசாலி, ஹசாரிபா, தன்பத், பிகை, ரூர்கெலா என்று பல இடங்களிலிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த அனுபவத்தைப் பற்றித் தனிக்கட்டுரை எழுத வேண்டும். சென்னையிலிருந்து ரயிலில் பயணம். அப்பொழுது ஜார்கண்ட், பீஹாரிலிருந்து பிரியாத நேரம். நக்சலைட்டுகள் பற்றியும், சம்பல் பள்ளத்தாக்கு பற்றியும், பூலான் தேவி மற்றும் மான் சிங் பற்றியும் ஓயாமல் தினத்தாள்களில் வந்துக் கொண்டிருந்த நேரம். ரூர்கெலா மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நக்ஸலைட்களின் செல்வாக்குப் பெற்ற பகுதிகள். பூர்வீகக் குடிகளின் வறுமை, நில உரிமை இழப்பு, கனிம சுரண்டல் எல்லாம் அவர்களின் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தன. நாங்கள் கிட்டத்தட்ட 40 பேர் இருந்ததால் எங்களுக்கென்று ஒரு தனி பேருந்தைக் கொடுத்துவிட்டார்கள். ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும் போது, மாலை ஆறு மணிக்கு மேல், எங்கள் பேருந்து உட்பட மற்ற எல்லா பேருந்துகளும் ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் நின்று விடும். இரவு முழுக்க பேருந்திலேயே இருப்போம். காலையில் தான் பயணத்தைத் தொடர்வோம்.

 

நிகழ்ச்சிகள் இல்லாத நாளில், நாளந்தா பல்கலைக்கழகம் பார்த்தோம். சுற்றி இரும்பு தாதுவும், நிலக்கரியும் இருக்கிற ரூர்கெலாவில் எஃகு ஆலைப் பார்த்தோம். புத்தரி்ன் போதி மரம் உள்ள கயா நகருக்கு வந்தோம். அங்கு தான் நான் குறிப்பிட்ட உச்சக்கட்ட பாடம். அன்றைக்கு முத்துக்கூத்தன் ஐயா எனக்கு புத்தர் போலவேத் தோன்றினார். கயாவில் ஒரு சுனையும் அருவியும் இருந்தது. அந்த இயற்கைச் சூழலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அப்பொழுது ஐயா சொன்னார்: “மனிதன் கருவிகளைச் செய்து, அதனை அவனது மேம்பாட்டிற்கு பயன்படுத்தும் விலங்கு. கூர்மையான கல் ஒரு கருவி. சக்கரம் ஒரு கருவி. மொழி ஒரு கருவி. இசை ஒரு கருவி. இவைகளைப் பயன்படுத்தி கலை இலக்கியம் செய்கிறான். கலை இலக்கியமும் ஒரு செம்மையான கருவி. பாடலை, ஓவியத்தை, கதையை, காவியத்தை, நாடகத்தை, நாட்டியத்தை உருவாக்குகிறான். அவைகளை மனிதகுல மேம்பாட்டிற்குத் தான் பயன்படுத்தவேண்டும். நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்கிற பிரிவினையை எப்பொழுதும் நாம் ஏற்கக் கூடாது. அப்படிப் பிரிவினை ஏற்படுத்துவதற்காக கலையையும் இலக்கியத்தையும் பயன்படுத்தக் கூடாது” என்று சொன்னார். புத்தர் பேசி முடித்த பிறகு, மன்னிக்கவும், முத்துக்கூத்தன் ஐயா பேசி முடித்த பிறகு, அதே பிரமையில் இருந்தேன். என் கலை இலக்கியத் திறமையை மனிதகுல மேம்பாட்டிற்காகவும், மனிதகுலம் சார்ந்திருக்கிற சுற்றுச்சூழலில் வாழும் எல்லா உயிர்களின் மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு பிறந்தது. போதி மரத்தினடியில் கௌதம புத்தருக்கும் மட்டும் தான் ஞானம் பிறக்குமா என்ன?

 

கலைவாணன் சொல்வார்: “அப்பா இதுவரை எழுதிய நாற்பதுக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களாக இருந்தாலும் சரி, முன்னூறுக்கும் மேற்பட்ட சமூக விழிப்புணர்வுப் பாடல்களாக இருந்தாலும் சரி, எல்லாமே பகுத்தறிவையும், இனமான உணர்வையும், சமூக மாற்றத்தையும் மையப்படுத்திய பாடல்கள் தான். மேடை நாடக நடிகராக இருந்து சினிமா நடிகராக ஆகி, பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம். ஆர். இராதா, இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராசேந்திரன் ஆகியோரோடு பழகி, நடித்ததால் அவர்கள் சார்ந்திருந்த திராவிட இயக்கக் கொள்கையில் அப்பா ஆழமான அர்ப்பணிப்புக் கொண்டவராக இருந்தார்.  அதனால் தான் ரேடியோவிலும் சரி, தொலைக்காட்சியிலும் சரி, நேரடி பொம்மலாட்ட நிகழ்ச்சிகளிலும் சரி, பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வில்லுப்பாட்டிலும் சரி, மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதி எதிர்ப்பு, பெண்கள் முன்னேற்றம், சுற்றுப்புறச் சுகாதாரம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, குழந்தைகள் முன்னேற்றம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, குடும்ப நலம், வாழ்க்கைக் கல்வி, என்று சமூக மேம்பாட்டிற்குத் தேவையான கருத்துக்களையே கருவாக வைக்கிறோம். இது வெறும் பேச்சில் மட்டும் அல்ல, வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அப்பா சொல்வார். அதனால் தான் அவருடைய திருமணமே சாதி மறுப்புத் திருமணமாக அமைந்தது.” அதைச் சொல்லும் போது கலைவாணன் முகத்தில் அவ்வளவு வெளிச்சம்!

 

கலை இலக்கியங்களைக் கற்று சமூக மாற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அவரிடமிருந்து கற்றுக் கொண்ட பிறகு பல பயிற்சிகளும், நிகழ்ச்சிகளும் நடந்தேறின. எதைச் சொல்வது? எதை விடுவது? சில ஞாபகங்கள் ‘என்னைச் சொல், என்னைச் சொல்…ஐயாவைப் பற்றிய முக்கிய வரலாறு இது’ என்று என்னைத் துரத்துவதால் அவைகளைக் கட்டுரையில் சுருக்கமாகக் கொடுத்து விடுகிறேன். ஐந்தாம் பாடம் எது தெரியுமா?

 

எழுத்தின் வகைத் தெரிய வேண்டும்

1991ம் வருடம். ஐயாவின் மகன் கலைவாணனின் கற்பனைக்கும், கலைத் திறமைக்கும் அளவேயில்லை. ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக எலும்புக்கூடு ஒன்றைச் செய்திருந்தார். ஐயாவின் வீட்டில், அந்த எலும்புக்கூடு பொம்மை, எல்லா பொம்மைகளோடும், பொம்மையோடு பொம்மையாகக் கிடந்தது. ‘பெங்களூருவில் உள்ள இருபது ஆங்கிலப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் பொம்மலாட்டம் போடவேண்டும் ஜான். ஒரு பொம்மலாட்ட ஸ்கிரிப்ட் எழுதித் தரமுடியுமா?” என்று முத்துக்கூத்தன் ஐயா கேட்டார். ‘சரி’ என்று ஒத்துக்கொண்டேன். அப்பொழுது தான் எழுத்தைப் பற்றியும், வெவ்வேறு கலை வடிவங்களுக்கு வெவ்வேறு விதமாக எழுத்து அமைய வேண்டும் என்பதையும் எளிதாகச் சொல்லிக் கொடுத்தார்.

 

“‘அந்த வீரன் ஓடி வந்து அந்த ஆற்றைத் தாண்டினான். சிரமமே இல்லாமல் மலையில் ஏறி, கடலுக்கு வந்தான். கடலில் குதித்து அந்த தீவை அடைய முயற்சித்தான். ஆனால் ஒரு திமிங்கலம் அவனை துரத்தியது. அதனுடன் சண்டையிட்டு அதனைச் சாகடித்தான். தீவை அடைந்ததும் தங்கம் நிறைந்த குகைக்குள் போய் வேண்டியதை அள்ளிக்கொண்டு வந்து, ஒரு பறவையின் மேல் அமர்ந்து ஊர் திரும்பினான்’ என்று நாவலில் வேண்டுமென்றால் எழுதலாம். ஆனால் அதையே பொம்மலாட்டத்தில் காட்சிகளாக வைப்பது மிகமிகக் கடினம். ஆற்றைக் கொண்டு வரவேண்டும். மலையைக் கொண்டு வரவேண்டும். கடலையும் திமிங்கலத்தையும் கொண்டு வரவேண்டும். குகையையும் தங்கத்தையும் காண்பித்து, பறவையில் ஏறிப் பயணிப்பது போல் கொண்டு வரவேண்டும். அதனால் இவைகளை பொம்மலாட்ட உரையாடலில் கொண்டு வரலாம். பொம்மலாட்டத்தில் காட்சிகளை உருவாக்கும் போது கவனமாக உருவாக்க வேண்டும்” என்று முத்துக்கூத்தன் ஐயா கூறினார்.

 

அப்பொழுது தான் ஒவ்வொரு கலை வடிவத்திற்கும் எழுத்தும், காட்சி அமைப்புகளும் எப்படி வேறுபடுகின்றன என்று புலப்பட்டது. மேகம் கலைந்து ஒளி வந்தது போல் உணர்ந்தேன். இன்னொரு போதி மர அனுபவம் தான். இது தான் ஐந்தாம் பாடம். உடனே நானும் என் அரியலூர் நண்பன் ரெக்ஸ்ம் ஸ்கிரிப்ட் எழுதுவதற்காக கொடைக்கானலுக்குப் போனோம். அங்கே கொடைக்கானல் கல்வி மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்த நண்பர் சிவசாந்தகுமாரின் வீட்டில் தங்கி, ஐயாவின் அறிவுரைக்கேற்றாற் போல் ஓர் ஸ்கிரிப்டை எழுதினோம். அதில் கதாநாயகனே அந்த எலும்புக்கூடு தான். பெங்களூர் பள்ளி மாணவர்கள் மத்தியில் கல்வியின் இன்றையக் குறைபாடுகளையும் அதைக் களைய வேண்டிய வழிமுறைகளையும் பற்றி அந்த பொம்மலாட்டம் சிறப்பாக அமைந்தது.

 

கடைசி பாடம். ஆறாவது பாடம். எது எப்படி இருந்தாலும் நகைச்சுவையைச் சேர்த்துச் சொல்லுங்கள் என்று சொன்னது தான்.

 

நகைச்சுவை நயம் புரிய வேண்டும்

“நா மட்டும் குடிக்கேறேன்னு நெனக்காதடி கண்ணம்மா - இது

நாளு ஏழு தலமொறைய நடக்குதடி செல்லம்மா” என்று துவங்கி வரும் பாட்டை எழுதிய ஐயா, பாட்டு முழுதும் நகைச்சுவையாகவே கருத்துக்களை அள்ளித் தெளித்திருப்பார்.

 

“அண்டாவ அடகு வெச்சேன், ஐநூறு மில்லி போட்டேன்

அலேக்கா தூக்குதடி போதை - இது எங்க போற பாதை

நா தண்ணி போட்டா நடப்பேன் - இல்ல

தரையில தான் கெடப்பேன்”

 

என்று ஒரு குடிகாரன் பாடுவது போலவே பாடி குடியினால் ஒரு குடும்பம் படும் கஷ்டத்தைச் சொல்வார். பொம்மலாட்டத்தில் கோமாளியின் கிண்டலுக்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

 

நிறைவாக

நானும் கலைவாணனும் 1990 களின் பின்பகுதியில், மதுரை சதங்கை கலை நிறுவனத்தில் முப்பது நாட்கள் தேசிய அளவிலான கலைப் பயிற்சி கொடுத்த போதும் சரி, 2002ல் மலேசியா சென்று, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அமைத்துக் கொடுத்த மலாய், சீன, தமிழ் ஆசிரியர்களுக்கானப் பயிற்சி கொடுத்த போதும் சரி, 2004-5ல் ஜெர்மனி அந்தேரி ஹில்பேயின் உதவியுடன் நாகப்பட்டினத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பயிற்சிகளும் நிகழ்ச்சிகளும் நடத்திய போதும் சரி முத்துக்கூத்தன் ஐயாவின் குரல் பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

 

அந்தக் குரல் 2005 மே மாதம் 1ம் தேதி மௌனமானது.

 

ஆனால் கலைவாணன், தமயந்தி, அரசு, பகலவன் மூலமாகவும், என்னைப் போன்றோர் மூலமாகவும் அது ஓங்கி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. மொழி உணர்வும், இனமான உணர்வும் கொண்டு, எழுத்தும் கலைத்திறனும் பெற்று, நகைச்சுவைக் கூட்டி இந்த மானுடம் நலம் பெற ஐயாவின் குரல் எங்கள் மூலமாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்.


பேரா. முனைவர். ஜான் பிரிட்டோ பரிசுத்தம்,

மெல்பர்ன், ஆஸ்திரேலியா

28.04.2025

 

************





Comments


© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page