மீசை என்பது வெறும் மயிர் - நாவல் - ஆதவன் தீட்சண்யா
- உயிர்மெய்யார்

- Sep 3
- 15 min read
Updated: Sep 3

வாசிப்பு அனுபவம்
மலேசியா
என் மலேசியப் பயணம் முடிந்து, ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பி மெல்பர்ன் வாசகர் வட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டிய நான், இந்தியாவிற்குப் பயணம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். அது எப்படி நடந்தது தெரியுமா?
திருமதி. ப்ரிஜா உய்மே அவர்களை மலேசியத் தலைநகரம் கோலாம்பூரில் தான் சந்தித்தேன். என் நண்பர் முனைவர் குமரன்வேலு செயலாளராக இருக்கும் மலேசியத் தமிழ் அமைப்புகளின் பேரவை நடத்திய “உலக மொழிகளும் உயிர்மொழித் தமிழும்” என்கிற பன்னாட்டு மாநாட்டில் கலந்துக் கொள்ளத் தான் ப்ரிஜா உய்மே கொரியாவிலிருந்து வந்திருந்தார்.
ஹாலந்து நாட்டின் ஹெய்டன் பல்கலைக்கழக பேராசிரியரும் என் நண்பருமான விம் டெய்சரிங் தான் ப்ரிஜா உய்மேயை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நான் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ்கிறேன் என்று என்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டேன். அதற்கு ப்ரிஜா உய்மே அழகு தமிழில், “வணக்கம் நண்பரே” என்றார். ஒரு கணம் ஆடிப் போனேன். அவரது கொஞ்சு தமிழ் தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயில் மணியைப் போல் இனிமையாக ஒலித்தது. திருவையாறு அசோகாவை நாக்கில் வைத்தது போல் நாக்கில் உருகி ஓடியது. என் அதிர்ச்சியைப் புரிந்துக் கொண்ட ப்ரிஜா உய்மே, காலில் சலங்கைக் கட்டி ஆடும் தெருக்கூத்து நாயகியின் ஜதியில், “கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள உறவு பற்றியது தான் என் ஆய்வு” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
மாநாட்டு உரைகளிலும், கலந்துரையாடல்களிலும் எங்கள் நேரம் கரைந்துப் போனது.
அன்று மாலை முனைவர் குமரன்வேலு என்னை அழைத்து, “ப்ரிஜா உய்மேயோடு இன்னும் சிலர் சேர்ந்து பத்துமலை முருகன் கோயில் போகிறோம். வருகிறீர்களா?” எனக் கேட்டார். நானும் விம் டெய்சரிங்கும் வருவதாக ஒப்புக் கொண்டோம். தொல்காப்பிய அழகியல் போல வளைந்து நெளிந்த மலைகளின் முன்னே திருக்குறளின் பொருளியல் போல முருகன் கம்பீர அழகுடன் நின்றார். மேலே ஏறி முருகனைத் தரிசித்துவிட்டு கீழே சற்றே அமர்ந்திருந்த போது, “ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலைப் படித்திருக்கிறீர்களா?” என்ற வசீகரக் குரல் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. கேட்டது ப்ரிஜா உய்மே தான். இல்லை என்று தலையசைத்தேன். உடனே அவர் கைப்பையைத் திறந்து அந்தப் புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார். படியுங்கள் என்றார்.
எனக்கு எல்லாமே அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. அதைப் பார்த்த விம் டெய்சரிங், “ப்ரிஜா உய்மே ஒரு வித்தியாசமானப் பெண். பன்முகத்தன்மையுள்ளவர். எழுத்தாளர். கவிஞர். விமர்சகர். நாடகவியலாளர், தத்துவவியலாளர். சொல்லிக்கொண்டே போகலாம். அவரைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறதா?” என்று வினவினார். நான் ஆம் என்று தலையசைத்தேன்.
அன்று இரவே அந்த நூலைப் படித்து முடித்துவிட்டேன்.
அடுத்த நாள்.
“ப்ரிஜா உய்மே! இந்த நாவல் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றேன். “ இன்று மாலை, ஐஸ் கச்சாங் சாப்பிட்டுக் கொண்டே பேசலாமே” என்றார். மாநாட்டில் ஏதேதோ பேசினார்கள். ஆனால் என் மனம் மட்டும் கரும்புச் சக்கையைச் சுற்றும் ஈயைப் போல அந்த நூல் மேலும், அதைப் பற்றி ப்ரிஜா உய்மேயிடம் பேச வேண்டியவைகளைப்பற்றியும் அசைப் போட்டுக் கொண்டே இருந்தது.
மாலை.
ஐஸ் கச்சாங் அவருக்கு. செண்டோல் எனக்கு. சிரிப்புடன் என்னைப் பார்த்தார். நூலைப் படித்துவிட்டேன் என்று நான் சொன்னதும், அதைப் பற்றி என் கருத்தை அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். என் கருத்திற்குப் பதிலாக நான் கேள்வியைத் தான் எடுத்து வைத்தேன்.
இனி, எங்கள் உரையாடல்.
நான்: ட்ரம்ஸ்டருடனான உரையாடலில் ஒன்றைக் கவனித்தீர்களா? நந்தஜோதி பீம்தாஸ், தன் முதல் புத்தகத்தில் முதல் பக்கத்தை 0 என்று துவங்கி, அடுத்தடுத்த பக்கங்களை -1, -2 என்று தொடர்ந்து 7400 பக்கங்கள் எழுதியுள்ளதைப் பற்றி அவர் கேட்டதற்கு சிறப்பான பதிலைக் கொடுத்திருக்கிறார் பார்த்தீர்களா?
ப்ரிஜா உய்மே: அது சரி! அதற்கு முன், ட்ரம்ஸ்டர் யார் தெரியுமா?
நான்: யாரோ ஒரு எழுத்தாளர் என்று தான் நினைக்கிறேன்.
ப்ரிஜா உய்மே: இல்லை. அது ஒரு கற்பனைக் கதாபாத்திரம். ட்ரம்ஸ்டர் என்றால் “மோளம் அடிப்பவன்” என்று ஆதவன் தீட்சண்யாவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். ஆங்கிலத்தில் சொன்னதும் நாம் வாயைப் பிளந்துக் கொண்டு அது யாரோ ஒரு பெரிய பத்திரிக்கையாளர், எழுத்தாளர் என்று நினைக்கும் நம் மனநிலையை பகடி செய்வதன் மூலம் எள்ளி நகையாடுகிறார்.
நான்: ஓ! அப்படியா?...நான் கூட அப்படித் தான் நினைத்தேன். செருப்பைக் கழற்றி அடிக்கிறாற் போல் இருக்கிறது.
ப்ரிஜா உய்மே: நீங்கள் கேட்ட பக்க எண்கள் பற்றிய கேள்விக்கு…ஆமாம். அழகான பதில் கொடுத்திருப்பார் நந்தஜோதி பீம்தாஸ். இதுவரை சமூகத்தில் அநீதிக்கும் சமத்துவமின்மைக்கும் எதிரான நூல்களுக்கு எதிர்வினையாற்ற இப்படி எண்ணிட்டிருக்கிறார்.
நான்: அப்படி எண்ணிட்டது கண்டு எனக்கு முதலில் தூக்கிவாரிப் போட்டது! இப்படி எண்ணிடுவது பற்றி கேள்விப்படுவது இதுவே முதல் முறை. ஒரு சமூகப் பழக்கத்தை எதிர்த்து அப்படி ஒரு பழக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு எவ்வளவு கோபத்தைத் தேக்கி வைத்திருக்கவேண்டும் அவர். என் முதல் சல்யூட்! இன்னொன்றைக் கவனித்தீர்களா?
ப்ரிஜா உய்மே: என்ன?
நான்: நூலில் பிரசுரிப்பதற்கு அவருடைய ஒளிப்படம் கேட்டதற்கு….
ப்ரிஜா உய்மே: ஆமாம். முகம் இழந்த, முகம் அழிக்கப்பட்ட கோடானு கோடி பேர் இருக்கும் இந்த உலகில், என் முகத்தை யாருக்குக் காட்டி என்ன செய்யப்போகிறீர்கள்? என்று நந்தஜோதி பீம்தாஸ் கேட்பார்.
நான்: எவ்வளவு தெளிவான மனிதர்!
ப்ரிஜா உய்மே: அவரது பூர்வீகம் பற்றிக் கேட்டதற்கு அவருடைய பதிலும் ஆழமானதாக இருக்கும் இல்லையா?
நான்: ஆமாம். துண்டு நிலமும், தலைசாய்க்க கூரையும், பிள்ளைகள் விளையாட மர நிழலும் இல்லாத எங்களுக்கு எது பூர்வீகம்? பிறந்த ஊர் தான் பூர்வீகமா? அப்படியானால் ஊர் என்ற ஒன்று எங்களுக்கு இல்லையே. காற்று திருப்பியடிக்காத பள்ளமான சேரியே நாங்கள் பிரசவிக்கப்பட்ட இடம் என்று நந்தஜோதி பீம்தாஸ் சொல்வார். ப்ரிஜா உய்மே! உங்களுக்குப் பூர்வீகம் எது?
ப்ரிஜா உய்மே: (சிரித்துக்கொண்டே) எது என் பூர்வீகம்? பிறந்து வளர்ந்த ஊரா? என் தாத்தா பாட்டி ஓரிடத்திலிருந்து கிளம்பிப் பஞ்சம் பிழைக்க வந்தாரே அந்த இடமா? என் இனத்தார் வடக்கிலிருந்து தெற்கிற்கோ, தென் கோடியிலிருந்து வடக்கிற்கோ நகர்ந்தனரே அது தானா? என் மூதாதையர் அந்தக் கண்டத்திலிருந்து இந்தக் கண்டத்திற்கு ஊர்ந்து வந்தனரே அதுவா? நான் இருக்கும் இந்த பூமி சுற்றும் பால்வெளியா? பால்வெளி கொண்ட அண்டமா? இன்னும் 95% அண்டவெளியை மனிதகுலம் அறிந்ததாக இல்லை என்கிறார்களே. எது என் பூர்வீகம்?
நான்: ப்ரிஜா உய்மே! நீங்களும் நந்தஜோதி பீம்தாஸ் போலவே பேசுகிறீர்கள். சாதியம் பற்றி இந்த நூல் ஆழமாகப் பேசுகிறது. உங்கள் ஊரில் சாதியம் இருக்கிறதா?
ப்ரிஜா உய்மே: எல்லா இடங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. பிரிவினைகள் இருக்கின்றன. ஆனால் சாதியம் என்பது தான் இருப்பதிலேயே மிகவும் கொடுமையான ஏற்றத்தாழ்வு. பிறப்பினால் ஏற்றத்தாழ்வைப் பார்க்கிறது. அது உயர்வு, தாழ்வு என்றும் புனிதம், தீட்டு என்றும் பிரிக்கிறது. ஆட்களை நான்கு வர்ணங்களாகவும், பல சாதிகளாகவும், சாதிகளுக்குள் உட்பிரிவுகளாகவும் பிரிக்கிறது. உங்கள் ஊரில் எப்படி?
நான்: சாதியம், எங்கள் மூளைகளில் கீறல் கீறலாக கோடு கிழித்து, தோல்களில் இரத்தம் தோயத் தோயப் பிரிவினையைத் திணித்து, கால்களில் கண்ணுக்குத் தெரியாத சங்கிலியைப் பிணைத்து, வெளிவர முடியாத சிறைகளுக்குள் எங்களைப் புதைத்து வைக்கிறது.
கோயில் கர்ப்பக்கிரகம் புனிதத்திற்குள் புனிதம் என்றும் அங்கே ஒரு சாரார் மட்டுமே உட்புக முடியுமென்றும் சொல்கிறது. சிலர் இதுவரை போகலாம் என்றும், மற்றும் சிலர் அதற்குள் போகக்கூடாது தீட்டு என்றும் பிரிக்கிறது. கிராமத்தை அக்கிரஹாரம் என்றும் அதில் ஒரு சாரார் மட்டுமே குடியிருப்பது என்றும், சிலர் ஊரில் இருப்பது என்றும், மற்றும் சிலர் சேரியில் இருப்பது என்றும் அவர்கள் அக்ரஹாரத்திலோ, ஊரிலோ பிரவேசிக்கக்கூடாது என்றும் பிரிக்கிறது.
பொதுக்கிணறு, ஊரணி, வாய்க்கால், குளம், ஆறு என்று படித்துறைகள் பிரித்து வைக்கப்படுகின்றன. உணவில் இதை இவர்கள் சாப்பிடக்கூடாது, அது தீட்டு. அந்தத் தீட்டை இவர்கள் சாப்பிடலாம் எனப்பிரிக்கிறது. இவர்கள் பேசுவது வேற மொழிப் பிரவாகம். அவர்கள் பேசுவது வேற மொழி உபயோகம். நூலைப் படிக்கும் அவர் நூலுக்குச் சொந்தமானவர். ஆனால் இவர், நூலைப் படித்தால் வாயில், கேட்டால் செவியில், பார்த்தால் கண்ணில் உலோகத்தைக் காய்ச்சி ஊற்றப்பட வேண்டியவர்.
அவர் துண்டை அங்கு போடுவார். இவர் துண்டை இங்கு திணிப்பார். அவருக்கு நிலம் தானமாகக் கிடைக்கும், ஆனால் உழைக்க மாட்டார். இவர் உழைத்து இரத்தம் சிந்துவார் ஆனால் நிலம் சொந்தமாக இருக்காது. அவரது சாமி நிறைய நகைப் போட்டிருக்கும். சிவப்பாய் இருக்கும். மீசை இருக்காது. நெய்யும் பொங்கலும் சாப்பிடும். ஆனால் இவரது சாமி கருப்பாய் இருக்கும். மீசை பயங்கரமாய் இருக்கும். கறியும் சாராயமும் சாப்பிடும். அவரது சாமி எல்லாத் தெருவிலும் ஊர்வலம் வரும். ஆனால் அந்த தெருவுக்கு மட்டும் போகாது. முனையிலேயே நின்று தரிசனம் மட்டும் தரும்.
இவரது மேளம் புனிதமானது. அவரது பறைத் தீட்டானது. இவரது இசை மேலான கருநாடகம். அவரது இசை நாட்டுப்புறத் தெம்மாங்கு. இவரது நடனம் அரங்கத்தில் ஆடும் பரதநாட்டியம். அவரது நடனம் தெருவில் ஆடும் கும்மியும் கோலாட்டமும். அவர்கள் திருமணத்தில் சாதம், சாம்பார், ரசம், மோர், பாயாசம், அப்பளம் வடை என சைவ விருந்து. இவர்கள் கலியாணத்தில் சோறு, ஆட்டுக்கறிக் கொழம்பு, குடல் வறுவல் இத்யாதி என அசைவச் சாப்பாடு.
சாதியம் சகல இடத்திலும் இருக்கிறது.
(இருவரும் எழுந்து நடந்தோம். ஹோட்டலுக்குள்ளேயே ஒரு நீச்சல் குளம் இருந்தது. அங்கு இருந்த நாற்காலிகளில் அமர்ந்தோம். மாலைக் காற்று ஜில்லென்று அடித்தது. ப்ரிஜா உய்மே தன் கண்ணாடியைச் சரி செய்து விட்டு மேலே பறந்து சென்ற பறவைகளைப் பார்த்தபடி இருந்தார். அவருடைய மௌனத்தைக் கலைக்க விரும்பாமல் நீல நிற நீச்சல் குளத்தில் தென்றல் விழுந்து எழுப்பிய சிறு அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.)
ப்ரிஜா உய்மே: (திடீரென மௌனத்தைக் கலைத்து) விருது!….. நந்தஜோதி பீம்தாஸ் விருதுகளை வாங்க மறுக்கிறார் பார்த்தீர்களா?.
நான்: ஆமாம்! தான் வாங்குவதன் மூலம், இதுவரை விருது பெற்றவர்கள் சரியானவர்கள் தான் என்று ஆகிவிடும் என்பதால் அதை மறுக்கிறார் என்பதாகச் சொல்லப்படுகிறது. விருதுகள் மீது அவருடைய விமர்சனம் சரி என்று தான் நான் நினைக்கிறேன்.
மறுபடியும் அமைதியாக இருந்தோம். நீச்சல் குளம் அருகே, ஒரு குழந்தை, வெவ்வேறு வர்ணங்கள் பூசப்பட்ட பெரிய பலூன் ஒன்றை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த பாக்கு மரங்களில் தொங்கிய மின் விளக்குகள் பளிச்’சென்று எரியத் தொடங்கியது.
ப்ரிஜா உய்மே: (அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டே) ட்ரம்ஸ்டரின் இன்னொரு கேள்வி எனக்குப் பிடித்திருந்தது.
நான்: என்ன கேள்வி?
ப்ரிஜா உய்மே: நந்தஜோதி பீம்தாஸின் குழந்தைப் பருவத்தைப் பற்றியக் கேள்வி. அதற்கு அவருடைய பதில் துன்பம் தோய்ந்த பதிலாக இருக்கிறது. நான் எதைச் சொல்கிறேன் என்று தெரிகிறதா?
நான்: ஆம். நந்தஜோதி பீம்தாஸின் குழந்தைப் பருவம் துக்ககரமான குழந்தைப்பருவமாக இருந்திருக்கிறது. எங்கள் ஊரில் இன்னும் பல குழந்தைகளின் அனுபவம் அப்படித்தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை குழந்தைப்பருவம் ஒரு விளையாட்டுப் பருவம். இயற்கையை, மனிதர்களை ரசிக்கும் பருவம். மகிழ்ச்சி பொங்கும் குதூகலப் பருவம். அப்படியெல்லாம் தான் இருக்க வேண்டும்.
ஆனால் இவருக்கு, “வெட்டப்பட்ட சிறகுகளுடன் ஜீவித்திருப்பது ஒரு பறவையின் இயல்புக்கு எந்தளவுக்கு விரோதமானதோ அதற்கு நிகரானது தான் அந்தப் பருவமும்” என்று வேதனைப்படுகிறார். “கடவுளாலும், மதங்களாலும், இலக்கியங்களாலும், சட்டதிட்டங்களைப் பற்றிப்பிடித்திருக்கிற அரசுகளாலும் கைவிடப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்த எந்த ஒரு குழந்தையும் எதிர்கொண்ட துன்ப துயரங்களுக்கு இரையானவன் தான் நானும்” என்று ஆதங்கப்படுகிறார்.
நீ அந்த தெருவில் இருந்து வருகிறாய். நீ அந்த சாதி. உங்கள் தெருவிற்கென்று ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட விடமாட்டோம். அப்படிக் கட்டினால் அதை எரிப்போம். மீண்டும் எழுப்பினால், ஆசிரியர்கள் வந்து பாடம் சொல்லிக்கொடுக்க மாட்டார்கள். எங்கள் பள்ளிக்கூடத்தில் உங்களுக்கு இடமில்லை. அப்படியே அரசு பள்ளிக்கூடத்தில் வந்து சேர்கிறாயா? அப்படியானால் பள்ளிக்கூடத்தில், வகுப்பில் ஓர் ஓரமாய் உட்கார்.
எங்கள் தெரு வழியாக நடக்காதே. வேறு வழியின்றி நடக்க வேண்டியிருந்தால் செருப்பைக் கழற்றி விட்டு நட. தலை முண்டாசை அவிழ்த்து அக்குளுக்குள் வை. எங்கள் தண்ணீர் பம்பில் தண்ணீர் அடித்துக் குடிக்காதே. நாங்கள் கும்பிடும் கோவிலுக்கு வா. ஆனால் எட்டியே நில். எங்களில் யாராவது இறந்து போனால் உன் தந்தை வந்து பறையடிக்கட்டும். என்றெல்லாம் ஒரு குழந்தை இன்னொரு குழந்தைக்கு சொல்லுகிற சமூகத்தில் அந்த குழந்தைக்கு என்ன வலி ஏற்படும்.
ப்ரிஜா உய்மே: ……………. (மௌனமாக…தரையில் விரலால் ஏதோ கோலம் போல் போட்டுக்கொண்டிருந்தார். பதில் ஏதும் சொல்லவில்லை.) குழந்தைகளும், பட்டியலினத்தவரும், மலைவாழ் மக்களும், மலையக மக்களும், சிறுபான்மையினத்தவரும்….. வெவ்வெறு காலகட்டத்தில்…வெவ்வேறு இடங்களில்…வெவ்வேறு விதமான அடக்குமுறைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆட்படுகிறார்கள் இல்லையா?
நான்: (அவருடைய மனவலியைப் புரிந்துக் கொண்டு) ஆமாம்! பல நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறார். திண்ணியத்தில் மலத்தை திணித்து, கண்டியில் குடியுரிமை அற்று, கேரளாவில் வனத்துறையால் பாலியல்வன்முறைக்கு ஆட்பட்டு, வாச்சாத்தியில் பழங்குடிப் பெண்கள் வன்புணர்வு வசப்பட்டு, ஆந்திராவில் சுண்டூருவில் அட்டூழியத்தில் அடிபட்டு, மகாராஷ்டிரா கயர்லாஞ்சியில் கொல்லப்பட்டு, கீழவெண்மணியில் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மதுரை மேலவளவில், திருநெல்வேலியில், லஷ்மன்பூரில், பதானி தோலாவில், கரமச்சேடில், குஜராத்தில்….
நான் சொல்லச் சொல்ல, ப்ரிஜா உய்மேயின் நாசி துடிதுடித்தது. முகத்தில் இரத்தம் ஊறி கண்களில் கோபம் கொப்பளித்தது.
ப்ரிஜா உய்மே: இப்படிச் செய்யலாமா?
நான்: எப்படி?
ப்ரிஜா உய்மே: நான் இந்தியாவிற்குச் சென்று ஆதவன் தீட்சண்யாவைப் பார்க்கப் போகிறேன்….உங்கள் பயணத்திட்டம் எப்படி?
நான்: (சற்றே யோசித்து விட்டு) வேறு வேலை? இரண்டு பேருக்கும் நானே டிக்கெட் புக் பண்ணிவிடுகிறேன்.
இப்படித்தான் நடந்தது. என் மலேசியப் பயணம் முடிந்து, ஆஸ்திரேலியாவிற்குத் திரும்ப வேண்டிய நான், இந்தியாவிற்குப் பயணம் ஆனேன். ஒரு பக்கம் ஆதவன் தீட்சண்யாவைப் பார்க்கப் போகிறோம் என்ற பரபரப்பு. இன்னொரு பக்கம் நந்தஜோதி பீம்தாஸைப் பற்றி அவரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளப் போகிறோம் என்ற துடிதுடிப்பு. வானூர்தி வானில் எழும்பியதுமே தூங்கிப் போனேன்.
**********
இந்தியா
திருச்சிராப்பள்ளி வானூர்தி மையத்தில் இறங்கியதுமே, மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறைப் பேராசிரியர் குமாரசாமி எங்களுக்காக மகிழுந்தை வைத்துக் கொண்டு காத்திருந்தார். அவருடன் ஆய்வு மாணவர் திரு. எஸ். கிஷோர் குமார் வந்திருந்தார். ஆதவன் தீட்சண்யா மதுரை புத்தகத்திருவிழாவிற்கு வந்திருப்பதாகவும் அவரோடு கலந்துரையாட நேரம் வாங்கியிருப்பதாகவும் குமாரசாமி ஐயா கூறினார். பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நானும் ப்ரிஜா உய்மேயும் தங்க, மொழியியல் துறைத் தலைவர் பேராசிரியர் உமாராஜ் அவர்களும் முனைவர் சண்முகமும் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதிகாலை. பல்கலைக்கழகம் அருகே நாகமலை அமைதியாகப் படுத்திருந்தது. அழகிய தோகையுடன் கூடிய மயில்களின் நடமாட்டத்தின் மத்தியில் சிலர் நடைப்பயணம் செய்துக் கொண்டிருந்தனர். சற்றே சாரலுடன் நாள் துவங்கியது. செக்காணூரணி வழிப் போகும் பேருந்துகள் சீறிப் பாய்ந்தபடி இருந்தன.
காலை உணவை ராஜம்பாடியில் உள்ள உமா மெஸ்ஸில் முடித்து விட்டு, என்னையும் ப்ரிஜா உய்மேயையும் அழைத்துக்கொண்டு புத்தகத்திருவிழா நடக்கும் தமுக்கம் மைதானத்திற்குப் போனார்கள். ஆதவன் தீட்சண்யா இரு கரம் நீட்டி எங்களை வரவேற்றார். ப்ரிஜா உய்மே, தான் எழுதிய “செம்பவளம்” என்ற நூலை அவருக்குப் பரிசாகக் கொடுத்தார். அப்பொழுது தான் நான் எதையுமே எடுத்துச் செல்லவில்லை என்று உரைத்தது. குளிரூட்டப்பட்ட கட்டிடத்தில் புத்தக விற்பனை சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த நண்பர்கள் அழகு அண்ணாவி, ராமர், டிராமா செல்வம், வேல்முருகன், சந்தியாகு, பிரான்சிஸ், அறிவுமணி, அபர்ணா போன்றோர் வந்திருந்தனர். சிறிய கூட்டமாக மாறிவிட்டது. எல்லோரும் கட்டிடத்தின் அமைதியான ஒரு பகுதியில் அமர்ந்தோம். “மீசை என்பது வெறும் மயிர்” என்கிற நூலைக்குறித்து கிஷோர் குமார் கேள்விகள் கேட்பது என்றும், தேவைப்பட்டால் மற்றவர்கள் கடைசியில் கருத்துத் தெரிவிக்கலாம் என்றும் முடிவு செய்து கொண்டோம்.
கிஷோர் குமார்: மீசை என்பது வெறும் மயிர் - என்கிற நாவலின் தலைப்பிலிருந்து தொடங்கலாம் என்றிருக்கிறேன். அப்படி பெயர் வைக்கும் போது மற்றவர்கள் என்ன சொன்னார்கள்?
ஆதவன் தீட்சண்யா: மயிர் என்பது அருவெறுப்பாக இருக்கிறதா? மயிரை அழகுபடுத்திக் கொள்ளத்தானே அதிக நேரம் செலவிடுகிறீர்கள். அது கொட்டக்கூடாது என்றும் கருப்பாக இருக்கவேண்டும் என்றுதானே விரும்புகிறீர்கள். நரைக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறீர்கள். இந்த நாவலுக்குப் பெயர் வைக்கும் போது, மயிர் வேண்டாம், கூந்தல், கேசம் அல்லது முடி என்று ஏன் வைக்கக்கூடாது என்று பலர் கேட்டார்கள். மயிர் என்ற ஒரு சொல்லுக்காக என் புத்தகத்தை உனக்குத் தொட அருவருப்பாக இருந்தால், அதைத் தொடதே என்கிற அறிவிப்பே அந்தத் தலைப்பு. இந்தப் புத்தகத்தை வைத்துக்கொள்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்.
(நான் ப்ரிஜா உய்மேயைப் பார்த்தேன். தன் கொரியக் கண்களை அகலத் திறந்த வண்ணம், சிறு புன்னகையுடன் அமர்ந்திருந்தவர் என்னைப் பார்த்து, புருவங்களை சற்றே உயர்த்தினார். நான் புன்னகைத்து விட்டு இரண்டாவது கேள்விக்காகக் காத்திருந்தேன்.)
கிஷோர் குமார்: நாடு திரும்பா எழுத்தாளர் வரிசை என்றால் என்ன?
ஆதவன் தீட்சண்யா: சொந்த நாட்டில் இருக்கமுடியாமல், புலம் பெயர்ந்து வேறு பண்பாடுகள் மத்தியில் வாழும் கலைஞர்கள் (எழுத்தாளர்கள் உட்பட), தாங்கள் விட்டுச்சென்ற மண்ணின் பிரச்னைகளை எழுதி வருபவர்களையும், சொந்த நாட்டிலேயே இருந்தாலும், அவ்வாழ்க்கை முறையோடு ஒட்டமுடியாமல் அதை விமர்சனப் பூர்வமாக எழுதி வருபவர்களையும் ‘நாடு திரும்பா எழுத்தாளர்’ என்று குறிப்பிடுகிறேன்.
சொந்த நாட்டின் பிரச்னைகளிலிருந்து நழுவி, தப்பித்து, ஓடி ஒளிகிற மனப்பான்மை இல்லை அது. பிரச்னைகளை எதிர்த்துப் போராடவேண்டும் என்பதே சரி. ஆனால், பரம்பரை பரம்பரையாக, தன் மூதாதையர்கள் வாழ்ந்துக் கொண்டிருந்த நாட்டில், நிலத்தில், தேசத்தில், தகுதியையோ, திறமையையோ, ஆற்றலையோ முன்னிலைப் படுத்தாமல், பிறந்த சாதியை முன்னிலைப்படுத்தும் பொழுது, “எங்கேயாவது கண்காணாத இடத்திற்குப் போய்விடலாமா?” என்கிற மனநிலை வருமே அந்த மனநிலை உள்ளவர்கள் எல்லோருமே நாடு திரும்பா எழுத்தாளர் பட்டியலில் உள்ளவர்கள் தான்.
எடுத்துக்காட்டாக, தலித் விளையாட்டு வீராங்கனைகள் அதிகமாக இருக்கும் இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி, ஒலிம்பிக்கில் செமி ஃபைனலில் தோற்கும் போது, அந்த தோல்வியைக் கொண்டாடுகிற சமூகத்தைக் கண்டு அந்தப் பெண்களின் மனநிலை என்னவாக இருக்கும்? அவர்கள் எதற்கு நாடு திரும்ப வேண்டும் என்று நினைக்கத் தோன்றுமில்லையா?
கிஷோர் குமார்: மொழி பெயர்ப்பின் அரசியல் என்கிற கட்டுரையில் நையாண்டியும் கோபமும் வெளிப்படுகிறதே?
ஆதவன் தீட்சண்யா: தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கோ, மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கோ செய்யப்படுகிற மொழிபெயர்ப்புகளில் ஆழமான அரசியல் இருக்கிறது. எதை யாருக்கு எங்கு சேர்க்கப்படவேண்டும் என்று யார் முடிவெடுப்பது? அப்படி முடிவெடுப்பதில் ஓர் அரசியலும் ஒரு சார்புத் தன்மையும் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு தொகுப்பாளர் அல்லது மொழிபெயர்ப்பாளர் ஒரு நூலைத் தேர்ந்தெடுக்கும் போது எப்படித் தேர்ந்தெடுப்பார்? அவரது பின்புலம், அவரது சமூகக் கண்ணோட்டம், அரசியல் பார்வை, தனிநபர் சார்ந்த விருப்பு வெறுப்புகள் எல்லாம் சார்ந்து தான் தேர்ந்தெடுப்பார். நேஷனல் புக் டிரஸ்ட் அல்லது சாகித்ய அகாடமி விருது என்றெல்லாம் பார்க்கும் போது எல்லாவற்றிற்கும் ஒரு சார்புத் தன்மை இருக்கிறது. இல்லையா?
கிஷோர் குமார்: புனைவு எழுத்தை சிறப்பாகக் கையாளுகிறீர்கள். உள்ளதை உள்ளபடி சொல்வதற்கும் புனைவு எழுத்திற்கும் என்ன வேறுபாடு என்பதைச் சொல்லுங்கள்.
ஆதவன் தீட்சண்யா: என்னைப் பொறுத்த வரையில், எழுத்து என்பது, 'சுருங்கக் கூறி விளங்க வைக்க வேண்டும்'. வண்டி வண்டியாக, தண்டி தண்டியாக எழுத வேண்டிய அவசியம் என்ன? புனைவு என்பது 'உங்களுக்குத் தெரியாத ஒன்றைச் சொல்வது' தான். உங்களுக்கும் எனக்கும் தெரிந்ததையே சொல்வதற்கு தேவை என்ன வந்திருக்கிறது? உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு நான் எதற்கு? உள்ளதின் மறுபக்கத்தை எடுத்துக் காட்டுவதே ஓர் எழுத்தாளரின் வேலை. உள்ளது மாறவே மாறாது என்பதன் அல்பத்தனத்தை எடுத்துக்காட்டுவதே ஓர் எழுத்தாளரின் வேலை. மாறி மாறி இந்தச் சமூகம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. இனியும் மாறும் என்று எடுத்துச் சொல்வதே ஓர் எழுத்தாளனின் வேலை.
விளைவுகள் பற்றி எழுதுவது என் வேலையில்லை. விளைவுகளுக்கான காரணங்கள் பற்றி எழுதுவதே என் வேலை. இருப்பதை அப்படியே பிரதிபலிப்பது என் வேலையல்ல. அதை மாற்றுவதற்கான தீர்வுகளை யோசிப்பதே என் வேலை.
கிஷோர் குமார்: நீங்கள் நாவல் என்பதன் வடிவத்தை உங்கள் படைப்பாற்றலுக்கு ஏற்று மாற்றியுள்ளீர்கள். அது எப்படி நடந்தது?
ஆதவன் தீட்சண்யா: என் கதையை எனக்கு எப்படித் தோணுதோ அப்படிச் சொன்னால் போதும். அதற்கென்று ஒரு வரைமுறையெல்லாம் தேவையில்லை. என் மீது சுமத்தப்பட்டிருக்கிற போலியான கற்பிதங்களைக் களைத்துப் போடவேண்டும். அதற்கு நான் யார் என்று என்னை நான் கண்டு கொள்ளவேண்டியிருக்கிறது. சாதிகள் உருவானது சமீபத்திய காலக் கட்டத்தில் தான். நான் அதற்கு முந்தைய, மனித மாண்புகளுக்கு மதிப்பிருந்த, காலக்கட்டித்திற்குப் போகிறேன். அங்கிருந்து இன்றைய நிலையைப் பார்க்கும்போது எல்லாமே அபத்தமாகத் தெரிகிறது. அதை பகடி செய்கிறேன். நாவல் கூட அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதை நான் நிராகரித்து, அதன் வடிவத்தை நானே தீர்மானிக்கிறேன்.
கிஷோர் குமார்: ஒரு கேள்வி இருக்கிறது. தனிநபர்களைப் பற்றி எழுதுவதா? சமூகத்தைப் பற்றி எழுதுவதா? “Individual is a bundle of social relationships.” - என்று மார்க்ஸ் கூறுகிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஆதவன் தீட்சண்யா: தனிநபர்கள் சமூகத்தில் உள்ள பண்பாட்டு வாழ்வியலை வாழும் மனிதர்கள். ஆகவே சமூகத்தின் வாழ்வியலைப் பற்றி எழுதுவதே என் வேலை.
(அதற்குள் ராமரும் அறிவும் எல்லோருக்கும் கொரிக்கவும், அருந்தவும் எதையதையோ கொண்டு வந்தார்கள். அப்பொழுது ப்ரிஜா உய்மே தான் ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று கேட்டார்.)
ப்ரிஜா உய்மே: கிஷோர் குமார் சொன்னது போல நாவலின் வடிவத்தை புரட்சிகரமாக மாற்றியுள்ளீர்கள். சந்திப்பு, நேர்காணல், நாவலின் சுருக்கத்தை மொழிபெயர்த்தல் என்று பயன்படுத்தியிருக்கிறீர்கள். இந்த நாவல் பிறந்து வளர்ந்த விதத்தை விவரிக்கமுடியுமா?
ஆதவன் தீட்சண்யா: நிச்சயமாக. எல். இளையபெருமாள் கமிஷன் அறிக்கையில், ஓர் இராணுவ சிப்பாய் மீசையுடன் கிராமத்திற்கு திரும்பி வருவார். அதைப் பார்த்த உயர் சாதியினருக்கு அது பொறுக்காது. அதனால், அவர்கள் சிப்பாயின் மீசையை தீய்த்தார்கள் என்ற குறிப்பு இருந்தது. அதுவே இந்தக் கதை எழுதுவதற்கு உந்துதலாக இருந்தது.
இந்த நூலின் கடைசியில் வருகிற மீசையைப் பற்றிய கதையைத் தான் நான் முதலில் தொடங்கினேன். அதற்குப் பத்து வருடங்கள் ஆனது. மீசை வெறும் மயிர் தான். ஆனால் அது வெறும் மயிராகப் பார்க்கப்படவில்லை. அதை ஆதிக்கச் சாதியின் அடையாளமாகப் பார்த்திருக்கிறார்கள். நான் மட்டுமே வைக்கவேண்டிய இந்த அடையாளத்தை இவன் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார்கள். அதைத் தான் கதையாக எழுதத் துவங்கினேன். பிறகு தான் நந்தஜோதி பீம்தாஸ் கதைக்குள் வருகிறார். அவர் கதைக்குள் வந்ததும் கதை சந்திப்பு, நேர்காணல், மொழிபெயர்ப்பு என்று பல வடிவங்களை நாவல் எடுத்துக்கொண்டது.
பேராசிரியர் ஆ. சிவசுப்ரமணியம் “குடுமி” பற்றிய கட்டுரையை எனக்கு அனுப்பியிருந்தார். இந்த நூல் அச்சிற்குப் போவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பு அந்தத் தகவலை நாவலில் சேர்த்தேன். குடுமி இருந்தால் சாமி எளிதாக பிடித்துச் சொர்க்கத்திற்குத் தூக்கிச் சென்று விடுவார் என்று நினைத்து ஒரு கூட்டம் குடுமி வளர்த்ததாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கூடி இருந்த சிலரும் சில கேள்விகளைக் கேட்டார்கள். எல்லாவற்றிற்கும் பொறுமையாகப் பதில் சொன்னார் ஆதவன். பிறகு இரவு உணவு சாப்பிட அழைத்துச் சென்றார்கள். தனக்கு இரவு உணவு வேண்டாம் என்று ப்ரிஜா உய்மே கூறிவிட்டார். என் காதருகில் வந்து, “எனக்கு இன்னும் திருப்தியில்லை. நாம் ஏன் நந்தஜோதி பீம்தாஸை போய் பார்க்கக்கூடாது. தீட்சண்யாவிடம் கேளுங்கள். எங்கள் கொரிய தமிழ்ச் சங்கம் போக்குவரத்து செலவை ஏற்றுக்கொள்ளும்” என்று சொன்னார்.
என் நெற்றியைச் சுருக்கி, நிச்சயமாகவா என்பதைப் போல் அவரைப் பார்த்தேன். அவர் கண்களை விரித்து தலையை வேகமாக மேலும் கீழும் அசைத்தார். தீட்சண்யாவிடம் கேட்டே விட்டேன். “அதற்கென்ன! தாராளமாக போகலாம். ஆனால் என்னால் வர முடியாது. நீலம் பண்பாட்டு மையத்தில் ஒரு நூல் வெளியீடு இருக்கிறது. அதற்காகச் சென்னைக்குப் போகவேண்டும். பா. இரஞ்சித் அவர்கள் என்னைத் தான் சிறப்புரையாற்ற அழைத்திருக்கிறார். நீங்கள் வருகிறீர்கள் என்று வேண்டுமென்றால் நந்தஜோதி பீம்தாஸிடம் சொல்லி வைக்கிறேன்.” என்றார்.
இந்தியாவிலிருந்து அந்தத் தீவிற்குப் பயணித்தோம்.
தீவு
கற்பனையிலேயே கண்டிருந்த நந்தஜோதி பீம்தாஸ் இப்பொழுது எங்களுக்கு எதிரே சுருட்டு பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ப்ரிஜா உய்மே அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு கனவுலகத்தில் இருப்பது போல இருந்தது. நாவலில் சொல்லப்பட்ட பெரும் எழுத்தாளரோடும், கொரியாவிலிருந்து தமிழ் மீதும் எழுத்து மீதும் தீராக் காதல் கொண்ட ஓர் எழுத்தாளரோடும் நான் உட்கார்ந்திருப்பது எனக்கே ஒரு பிரம்மையை உண்டுபண்ணியது.
“யூஜின் நூலகத்துக்கு ஒரு கொரிய நண்பர் வருவார். நான் இந்தியாவைப் பற்றியும், இலங்கையைப் பற்றியும் பேசுவேன். அவர் தெற்காசிய நாடுகளின் அரசியலைப் பற்றிப் பேசுவார்…..” என்று சொல்லிவிட்டு சற்றே கடந்த காலத்திற்குச் சென்றார் நந்தஜோதி பீம்தாஸ்.
“உங்கள் முதல் கதையை ஆதவன் தீட்சண்யாவின் நேர்காணலில் குறிப்பிட்டிருந்தீர்கள்…” ப்ரிஜா உய்மே உரையாடலைத் துவக்கினார்.
“கடலும் கரையும்….” என்று அந்தக் கதையின் பெயர் அவரது வாயில் கசிந்தது.
மௌனம் சற்று நேரம் காலத்தை மெதுவாகத் தின்றது.
நான் குறுக்கிட்டு, “அந்தக் கதையின் சுருக்கத்தைச் சொல்கிறேன். இப்பொழுது அதை எழுதினால் எப்படி முடித்திருப்பீர்கள் என்று சொல்லமுடியுமா?” என்றேன்.
வான மேகங்களைப் பார்த்துக்கொண்டிருந்த அவர் பார்வை என் மீது பதிந்தது. இருவருமே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் தொடர்ந்தேன்.
“உங்கள் கதை இது தான். இடும்பன் - தீப்பாஞ்சி குடும்பத்தினர் (மூத்த மகன் சடையன் மற்றும் கைக்குழந்தையோடு) கங்காணியோடு கரைக்கு வருகின்றனர். தோணி வருகிறது. நிறையக் கூட்டம். அடித்துப் பிடித்து ஏறுகின்றனர். இடும்பன் ஒரு பொதியை எடுக்கக் கரைக்கு திரும்பி ஓடும் போது தோணி கிளம்பி விடுகிறது. அடுத்தத் தோணியில் ஏறிப் போகிறான். தீப்பாஞ்சியும் பிள்ளைகளும் கிடைக்கவில்லை. சில காலம் கழித்து, இன்னொரு பெண்ணுடன் இடும்பன் வாழ்கிறான். அப்பொழுது தீப்பாஞ்சி எப்படியோ அங்கு வருகிறாள். இன்னொரு பெண்ணுடன் வாழும் இடும்பனைத் திட்டிவிட்டு, அவள் இன்னொரு ஆளைக் கல்யாணம் செய்துக் கொள்வதாக கதை நிறைவுறுகிறது”
“ அந்த முடிவு அப்படியே இருக்கட்டுமே! “ என்றார் ப்ரிஜா உய்மே. நந்தஜோதி பீம்தாஸ் தொடர்ந்தார்.
“ஆதவன் தீட்சண்யாவிடம் பேசும் போது ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். கண்டியில் என் நண்பர் முத்துலிங்கம் இருக்கிறார். அவர் மலையக மக்களோடு 40, 50 வருடங்களாக அவர்களது உரிமைக்காகப் போராடி வருகிறார். 2024 ஆம் ஆண்டில் மலையகம் 200 என்று மிகப்பெரிய நினைவு நாளை நடத்தினார். அப்பொழுது தமிழ்நாட்டிலிருந்துச் சென்ற சேரிவாசிகளைக் கடல் தின்றது போக, காட்டு வழி போனபோது மிருகங்களும், நோய்களும் தின்றது போக எஞ்சியவர்கள் எஸ்டேட்டுகளுக்குப் போனார்கள் என்ற கதையைக் காட்சியப்படுத்தினார்கள். அங்கே மாட்டுக்கொட்டகைக்கும் சிறியதான சிறைச்சாலைகள் போன்ற வீடுகளில் கொத்தடிமையாய் இருந்ததையும் நூலாக வெளியுட்டுள்ளார்கள். அங்கிருந்துத் தப்பிக்க வழித் தெரியவில்லை. அப்படித் தப்பிக்க முயற்சிப்பவர்களைப் பிடித்து, அடித்துக் கொன்று, தேயிலைத் தூருக்கடியில் உரம்போல புதைக்கப்பட்டார்கள் என்பதையும் பல காலம் கழித்து, சங்கங்கள் அமைத்த போது, துரைமார்கள் அத்து மீறிப் போன போது, அவர்களைக் கொன்று அதே தூருக்கடியில் புதைத்து முன்கணக்குகளை சீர் செய்தார்கள் என்பதையும் ஆதவனிடம் நான் சொன்னேன். அதை முத்துலிங்கம் ஆவணப்படுத்தி, வரலாற்றை சமகால மக்களுக்கு நினைவூட்டியிருக்கிறார்”.
சுருட்டு தீர்ந்து விட்டது.
“ உங்கள் நாவல்….”
“ அது நாவலா?...”
“ இல்லையா?...”
“ ம். அப்படிச் சொல்ல விருப்பமிருந்தால் சொல்லிக்கொள்ளுங்கள்…”
“ மனிதத் தலைகளுடன் உள்ள நாய்கள். நாய்த்தலையுடன் உள்ள மனிதர்கள் - என்பதைப் படிக்கும் போது அது ஒரு கற்பனை என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மனித உடலும் மிருகத்தின் தலையும், மிருகத்தின் தலையும் மனித உடலும் கொண்ட புராண இதிகாசத் தொன்மக் கதைகள் இருக்கும் போது அது ஏன் இருக்கக் கூடாது? யானைத் தலையும் மனித உடலும் கொண்ட விநாயகரை எடுத்துக்காட்டாகக் காண்பிக்கிறீர்கள். சரி தான். அதைப் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டதால் விநாயகர் இயல்பான கடவுளாகத் தெரிகிறார். தொடர் கற்பிதம் எப்படி வேலை செய்கிறது பார்த்தீர்களா?”
“ ம்…” அடுத்த சுருட்டை எடுத்து பற்ற வைத்தார்.
“ எச்சரிக்கையை எதிர்த்தோரது குடியிருப்புகளின் மீது தமது குலச் சின்னமான தீச்சட்டிகளை வீசி கொளுத்தியழித்து கொக்கரித்திருக்கிறார்கள் - எனக் குறிப்பிடும் போதும், 'இதிலொரு கோஷ்டி தாங்கள் நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் ஆகவே எப்போதும் எதையாவது எரித்துக் கொண்டேதான் இருப்போம் என்று அடம் பிடிக்கிறார்கள்' என்று குறிப்பிடும் போதும் வன்னியர்களைக் குறிப்பிடுகிறீர்கள் எனப்புரிகிறது”
“ நம்மைச் சுற்றி நடப்பவைகளை நுணுக்கமாகக் கவனிப்பது ஓர் எழுத்தாளனுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது.”
“எல்லோரது பொதுப் பயன்பாட்டுக்கும் வணக்கத்துக்கும் உரியதாய் இருந்த நெருப்பை கும்பலொன்று கைப்பற்றிக் கொண்டதிலிருந்து தான் விசயம் வேறு திசைக்குத் திரும்பியிருக்கிறது - என்று எழுதும் போது வேள்விகள் செய்ய பிராமணர்கள் அக்னி குண்டத்தில் தீ வளர்ப்பதைச் சுட்டுகிறீர்களா?”
“ அப்படி புரிந்துக்கொள்கிறீர்களா?”
“ ஆம். தமது பூர்வீகப் பிரதேசத்திலிருந்து பால் நிறத்தில் கிளம்பியவர்கள் இப்பொழுது மஞ்சளும் கோதுமையும் மருவிய நிறத்திலான தோலுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தான் இங்கு மவுசு அதிகம் எனக் குறிப்பிடுவதும் பிராமணர்களைத்தான் என்று நினைக்கிறேன். இவர்களில் சில பொலி காளைகள் வளர்த்தெடுக்கப்படுகிறார்கள் எனவும், அவர்களிடம் முதலிரவு நாளில் புதுப் பெண்ணை அனுப்பிவைக்கவும் சாஸ்திரம் அனுமதிக்கிறது என்றும் குறிப்பிடுவது, திருமணம் அன்று பிராமணர்கள் சொல்லும் மந்திரத்தைச் சுட்டுகிறீர்கள் என்று பொருள்படுகிறது.”
“ இது எளிதில் புரிந்துக் கொள்ளும் வண்ணமே இருக்கிறது. இல்லையா?”
“ இடுப்புத் துணியை ஆண்கள் கணுக்காலுக்கு கீழேயும், பெண்கள் தோளுக்கு மேலேயும் அணியக்கூடாது என்று விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை எதிர்த்து இந்தியாவின் தென்கோடியில் ஒரு பகுதியினர் போராட்டம் நடத்தி பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு வெற்றி பெற்றதாக அங்கிருந்து வந்த பாதிரியார் சொல்லக் கேட்டதாகச் சொல்வது சாணார்கள் (பனையேறி நாடார்கள்) மற்றும் ஈழவப் பெண்களின் ஆடை அணியும் உரிமைக்காக, நம்பூதிரிப் பார்ப்பனர்களையும், நாயர் மற்றும் வேளாளர்களையும் எதிர்த்து, திருவிதாங்கூரில், நடத்தப்பட்ட தோள் சீலைப் போராட்டத்தை (பெண்கள் கச்சின் மீது அணியும் மேல்முண்டே தோள்சீலை எனப்படுவது) சுட்டுகிறீர்கள் தானே?”
நந்தஜோதி பீம்தாஸ் எழுந்து தன் வேட்டியைச் சரி செய்து கொண்டு, “புட்டும், ஆட்டுக் கறியும் இருக்கிறது சாப்பிடலாமா?” என்றார். சாப்பிட்டோம்.
“ஒரு சாரார் உடலில் எங்கும் முடி முளைக்காமல் இருந்தார்கள். கண்ணிமைகளில் கூட முடி இல்லை. அதனால் கண்கள் மூடாமலேயே இருந்தார்கள். அதனால் நன்றாக காவல் காக்க முடியும் என்று பெருமையடித்தார்கள் என்று சொல்லும் போது வானத்தில் தேவர்கள் கண்ணிமைக்காமல் இருக்கிறார்கள் என்ற புராணத்தைச் சுட்டுகிறதாக நான் புரிந்துக்கொண்டேன்…”
“குடுமிப்பிடிச் சண்டை பற்றிக் குறிப்பிடும் போது, ‘வர்ணாசிரம முறையை’ ச் சுட்டி, குடுமி இருந்தால் கடவுள் தூக்கிக்கொள்வார் என்றால் தேங்காய்கள் தானே அதிகம் சொர்க்கத்திற்குப் போகும் என்று கிண்டல் வேறு செய்கிறீர்”
“ஆளாப்பரம்பரையினர் சவரம் செய்யவோ, முடியை சிரைத்துக் கொள்ளவோ, மீசையை அலங்காரம் செய்துக் கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை. தினமும் சாவடிக்கு வந்து தாங்கள் எதையும் செய்யவில்லை என்று ஆளாப்பரம்பரையினர் நிருபிக்க வேண்டியிருக்கிறது. இன்றிரவு களவெடுக்கப் போகவில்லை என்று காட்டுவதற்காக ஒவ்வொரு இரவும் காவல் அலுவலகத்தில் கைரேகை வைத்ததுடன், அங்கேயே விடியும்வரை படுத்திருந்து விட்டு வந்த தங்களது பூர்வீக ஞாபத்திலிருந்து இந்த வழக்கத்தை மீட்டெடுத்த ஆளும் பரம்பரை அதைச் சற்றே மாற்றி இப்பொழுது ஆளாப்பரம்பரை மீது திணித்திருந்தது - என்று குறிப்பிடுவது கள்ளர், மறவர், அகமுடையார் என்ற தேவர் சமூகமான முக்குலத்தோரையா?”
நாங்கள் தான் மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தோம். நந்தஜோதி பீம்தாஸ் எதற்கும் பதில் சொல்லாமல் நாங்கள் பேசுவதையேக் கேட்டுக்கொண்டிருந்தார்.
“இடுப்புக்கீழே மீசை வளர்த்தனர் என்ற உவமானம், ஆளாப்பரம்பரையினரின் அமுக்கி வைக்கப்பட்டு எப்பொழுதும் எழத் தயாராக இருக்கும் போராட்டக் குணத்தைக் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்கிறேன்.”
“சாராயம் கொஞ்சம் இருக்கிறது. சாப்பிடலாமா?” என்றார்.
தூங்கி விட்டோம். காலையில் எழுந்து அவரிடம் விடை பெறத் தேடினோம். அவரைக் காணவில்லை. நாங்கள் படகில் ஏறிவிட்டோம்.
“ கொரியா வாருங்கள். என் விருந்தாளியாக இருந்துவிட்டு பிறகு ஆஸ்திரேலியாவிற்குப் போகலாம்” என்றார் ப்ரிஜா உய்மே. தட்டமுடியவில்லை.
தென்கொரியா
“ஆதவன் தீட்சண்யாவை பார்த்து விட்டோம். நந்தஜோதி பீம்தாஸையும் பார்த்துவிட்டோம். அவர்களைப் பார்த்த அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது” என்று சியோலின் அழகிய சாலைகளில் ஊரும் கார்களைப் பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் கையில் கிம்ச்சியையும் பிபிம்பாப்பையும் கையில் வைத்துக்கொண்டு ப்ரிஜா உய்மே கேட்டார்.
“ரவி தர்ம கீத் எழுதிய சுத்த ரத்தத்தில் அழுகும் தொப்புள் கொடி கதையை அவர் வாசித்துக்கொண்டிருந்தார் என ஆதவன் சொல்கிறார் இல்லையா? அந்தக் கதை என்னை மிகவும் தொட்டிருந்தது. அதைப் பற்றி நந்தஜோதி பீம்தாஸிடம் கேட்க மறந்து விட்டேன்” என்று அங்கலாய்த்தேன்.
“ ஆம்! அந்தக் கதையில், பிரசவ வார்டில் வேலை செய்யும் ஆயா தேவி தான் முக்கிய கதை மாந்தர். அவரைப் போலவே சில ஆயாக்கள் ஒன்று கூடி ஒரு முடிவு எடுக்கிறார்கள். வெவ்வேறு சாதியினருக்குப் பிறக்கும் குழந்தைகளை மாற்றி மாற்றி வைக்கிறார்கள். குழந்தைகள் வெவ்வேறு சாதி குடும்பங்களில் வாழ்கிறார்கள். இப்படி இருபது முப்பது வருடங்களாகச் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை ஒரு நாள் கண்டுபிடித்து தேவியைப் பிடித்து விடுகிறார்கள். விசாரணை நடக்கிறது. விசாரணை இப்பொழுது தேவியிடம் என்பதற்கு மறுதலையாக தேவி சமூகத்தை விசாரணைச் செய்வதாகத் தளமாற்றம் செய்கிறது என்று எழுதுகிறார்.
கடைசியில் தேவியும் மற்றவர்களும் சிறைப்படுத்தப்படுத்தப்படுகின்றனர். ஆனால் அவர்கள் ஒரு நாள் சிறையிலிருந்து வெளி வரக் கூடும். ஆனால் மற்றவர்கள் தாங்களே சிறையாகவும் அதற்குள் மாட்டிக்கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்று கதையை நிறைவு செய்கிறார்.”
“சமூகக் கட்டுமானத்தை பழுதாகக் கட்டிவிட்டு அதில் சிலர் சுகவாசியாகவும் பலர் அடிமைப்பட்டும் வாழ்கிற கொடுமையை அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். என்னுடைய எழுத்து எதையும் காப்பிரைட் செய்யவில்லை. எல்லாமே காப்பிலெப்ட்தான் என்று பீம்தாஸ் கூறியதை நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது”
அப்பொழுது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினேன்.
“வணக்கம். நான் தான் முத்துக்கிருஷ்ணன் பேசறேன். மதுரையிலேர்ந்து…”
“வணக்கம் ஐயா! நல்லா இருக்கீங்களா?”
“நல்லா இருக்கேன். நீங்க மதுரை வந்து ஆதவன் தீட்சண்யாவோடு கலந்துரையாடல் செஞ்சப்ப நான் ஊர்ல இல்ல. சிங்கப்பூர் போயிருந்தேன். அங்க நண்பர்களோட பசுமை நடை செய்தோம். இப்ப எங்க இருக்கீங்க?”
“கொரியாவுல இருக்கேன். ப்ரிஜா உய்மே உங்களுக்கு பரிச்சயம் தானே?”
“ஆமா! அவங்க எழுதிய “செம்பவளம்” நாவல் படிச்சிருக்கேன்…என்னோட வாழ்த்தை அவருக்கு சொல்லுங்க..”
“என்ன திடீர்னு தொலைபேசியில் அழைப்பு?”
“மெல்பர்ன் வாசகர் வட்டத்துல ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவல் படிச்சிட்டு வாசிப்பு அனுபவத்தை எல்லோரும் பகிர்ந்துகிட்டாங்க. நீங்க மிஸ்ஸிங். அது தான் அது பத்தி சில விஷயம் உங்க கிட்ட பேசலாமுன்னு…”
“தாராளமா…இதோ..ஸ்பீக்கர்ல போடுறேன். ப்ரிஜா உய்மேயும் கேக்கட்டும்.”
“ வணக்கம் ப்ரிஜா உய்மே! நலம் தானே?”
“ நலம் தான். நீங்க ஒருமுறை கொரியாவுக்கு வாங்க. உங்க பசுமை நடையை இங்கயும் நடத்தலாம்…”
“ நிச்சயமா…நந்தஜோதி பீம்தாஸ் யார் தெரியுமா?”
“ சொல்லுங்க…”
“ ஆதவன் தீட்சண்யா ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க நினைத்தார். அந்தக் கற்பனைக் கதாபாத்திரம் காலத்தின் சாட்சியாக இருப்பவர். வரலாற்றின் பக்கங்களைத் தெரிந்தவர். அதில் இருக்கும் உவப்பான விஷயங்களை மட்டுமல்ல, அதில் இருக்கும் கஷ்டங்களையும் பேசக் கூடியவர். பிரச்னைகளுக்கானத் தீர்வை சொல்லக்கூடியவர்.
அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை உருவாக்க, இந்த மாதிரியான ஒடுக்குமுறையை தங்களில் வாழ்நாளில் எதிர்த்துப் போராடியவர்களின் கூட்டு முகமாக நந்தஜோதி பீம்தாஸ் கதாபாத்திரத்தை உருவாக்கினார். நந்தன் என்பதிலிருந்து நந்த, ஜோதி ராவு பூலேயிலிருந்து ஜோதி, பீமராவ் அம்பேத்கரிலிருந்து பீம், அயோத்திதாச பண்டிதரிலிருந்து தாஸ் என்று பெயர்களை உருவி நந்தஜோதி பீம்தாஸ் என்று அந்தக் கதாபாத்திரத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்.”
“நாங்களும் நந்திஜோதி பீம்தாஸ் வாழ்ந்த தீவிற்கு ஒரு கற்பனைப் பயணம் செய்தோம். அவரோடு ஒரு கற்பனை உரையாடல் நடத்தினோம்….”
“ அப்படியா? நல்லது. நந்தஜோதி பீம்தாஸ் என்கிற கதாபாத்திரம் உருவானதும், அவரை ஒரு நாடு திரும்பா எழுத்தாளராக பாவித்து, ஏதோ ஒரு தனித் தீவில் இருப்பதைப் போல் புனைந்திருக்கிறார் ஆதவன். அவருடைய நாவலை ஆதவன் தீட்சண்யா மொழி பெயர்ப்பது போலவும், அவரை ஆதவன் சந்திப்பது போலவும், அவருடன் டிரம்ஸ்டர் (“மோளம் அடிப்பவன்”) என்பவர் நேர் காணல் எடுத்தது போலவும், ஆதவனே நந்த ஜோதி பீம்தாஸூடன் நேர் காணல் எடுத்தது போலவும், அவரைப் பற்றி மற்ற பத்திரிக்கைகள் பாராட்டி வெளியிட்ட செய்திகள் போலவும் நாவல் வேறு வேறு வடிவங்களை உருவாக்கிக் கொண்டது. இது சிறப்பு இல்லையா?”
“ ஆமாம்!… மிகச் சிறப்பு. சமூகக் கற்பிதங்களை உடைத்து வெளிவரத் துடிக்கும் பொருண்மைக்கு, வடிவக் கற்பிதங்களை உடைத்து சுதந்திரமாக எழுதியிருக்கிறார்…”
“…எப்பொழுது மெல்பர்னுக்கு பயணம்?”
“நாளைக்கு..”
ஆஸ்திரேலியா
மெல்பர்ன் வாசகர் வட்டத்தில் “மீசை என்பது வெறும் மயிர்” நாவலைப் பற்றி என் வாசிப்பு அனுபவத்தை பகிர முடியாத விடயத்தை சாந்திக்கு முன்பே தெரிவித்து விட்டேன். ஆதவன் வாசகர்களைப் பற்றி சொன்னது இன்னும் என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கிறது. “வாசகர் என்பவரை புனிதப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம். அவர் மகா கெட்டிக்காரர். அவர் எல்லாவற்றையும் கண்டுபிடித்து விடுவார் என்றெல்லாம் சொல்கிறோம். அப்படியல்ல. ஒவ்வொரு வாசகரும் பொருளாதார, சாதி, மதம் போன்ற பல்வேறு வேறுபாடுகளுக்கு இடையே வளர்ந்து, தனக்கென்று ஒரு சார்பு நிலையை வைத்திருப்பவர். புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பதும் அந்த சார்பு நிலையைக் கொண்டே தேர்ந்தெடுக்கிறார். கருத்துக்களையும், விமர்சனங்களையும் அந்த கண்ணோட்டத்திலேயே தெரிவிக்கிறார்” என்று சொன்னார்.
ஆம்! அது சரியே!
ஒவ்வொரு வாசகர் வட்ட அனுபவத்திலும் அது நிரூபணமாகியே வந்திருக்கிறது.
ம்!
எனக்குள் இருக்கும் வாசகனை, நாவலின் பொருண்மை, 'பளேர், பளேர்' என செருப்பால் அடித்தது.
எனக்குள் இருக்கும் எழுத்தாளனை, நாவலின் வடிவம், 'நீ எழுதுறது தான் எழுத்து... சும்மா எழுது' என விடுதலை செய்தது.
நன்றி ஆதவன்!
**********



Comments