top of page

கஸ்தூர்பா - ஒரு நினைவுத் தொகுப்பு - நூல் வாசிப்பு அனுபவம்

Updated: Sep 11

ree

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பற்றி நிறையச் சொல்லப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டிருக்கிறது. பேசப்பட்டிருக்கிறது. காட்டப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், தேவைக்கு அதிகமாகவே அது நடந்திருக்கிறது. ஆனால் அவரது மனைவி கஸ்தூர்பா பற்றி மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் குறையை, சுசிலா நய்யார் எழுதி பாவண்ணன் தமிழாக்கம் செய்து, சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்ட  ‘கஸ்தூர்பா - ஒரு நினைவுத் தொகுப்பு’ என்கிற நூல் சற்றே நிவர்த்தி செய்கிறது. இருந்தாலும், அந்த நூலைப் படித்த மாத்திரத்தில் கஸ்தூர்பா மற்றும் காந்தி பற்றிய படிமங்கள் உயர்ந்தனவா அல்லது தாழ்ந்தனவா என்பதே கேள்வி. அவர்களைப் பற்றி ஏற்றி வைத்திருக்கிற பொது பிம்பங்களில் இந்த நூல் விரிசலை காணவைக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு மாத்திரம் அல்ல, வாசகர் வட்டத்தில் வேறு சிலருக்கும் வந்தது.

 

வாசகர் வட்டத்தில், நான்கு முக்கிய விடயங்கள் கேள்வி கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

ஒன்று கஸ்தூர்பாவை கணவனுக்குச் சேவை செய்யும் ஓர் இலட்சிய இந்தியப் பெண்ணாக/மனைவியாக வடிவமைத்தது பற்றி.

இரண்டாவது கஸ்தூர்பாவை ஒரு முழுமையான சநாதனியாக காட்டுவது பற்றி.

மூன்றாவது கஸ்தூர்பாவின் கொள்கைத் தெளிவின்மை பற்றி.

நான்காவது கஸ்தூர்பா மேலும் மற்றவர்கள் மேலும் காந்தியின் கடுமையான போக்கு பற்றி.

 

இந்தியாவின் இலட்சியப் பெண்/மனைவி

இந்த நூலாசிரியர் (சுசிலா நய்யார்) தன் கோடை விடுமுறைக்கு சேவா ஆசிரமத்திற்குப் போன போது, கஸ்தூர்பா தன் காலணிகளை அவருக்குக் கொடுக்கிறார். அவரது அறையை சுத்தம் செய்துக் கொடுக்கிறார். அவரது மகன் (தேவதாஸ்) உடல் நலம் குன்றிய போது அவரை சிம்லாவுக்கு அழைத்துச் சென்று அக்கறையோடு கவனித்துக் கொள்கிறார். சில நேரம் மற்றவர்கள் கழுவி வைத்துவிட்டுச் செல்லும் தட்டுகளை எடுத்து கஸ்தூர்பா கழுவி வைக்கிறார்.

 

காந்தியடிகள் காலை நடைக்குப் போகும் போது குளித்துவிட்டு, ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரத்திற்கு இராமாயணத்தையோ, பகவத் கீதையையோப் படிக்கிறார். காலை நடை, மாலை நடை, மூன்று வேளை உணவு, ஓய்வு, காலைப் பிரார்த்தனை, மாலைப் பிரார்த்தனை, வாசிப்பு, பாடல், ஊர்க்கதை, படுக்கை என்று நூலாசிரியர் வரிசைப்படுத்துகிறார்.

 

 “ஓர் இலட்சிய இந்தியப் பெண் எப்படி இருப்பார்? கணவனுக்குச் சேவை செய்வார். தாயுள்ளத்தோடு மற்றவர்களுக்கு உதவி செய்வார். பக்தி ததும்ப பகவத் கீதைப் படிப்பார். சுற்றி இருப்பதை சுத்தம் செய்துக் கொண்டே இருப்பார் என்கிற பிம்பத்தை கட்டமைக்க கஸ்தூர்பாவை பயன்படுத்தியதாகத் தெரிகிறது” என்று ஒரு வாசகர் கூறினார்.

 

“ஓர் இந்திய மனைவி தன் கணவனுக்கு எப்படி ‘absolute surrender’ ஆக நடந்துக் கொள்வாரோ அப்படியே பல சமயங்களில், கஸ்தூர்பா நடந்துக் கொள்கிறார். கணவனுக்குச் சேவை செய்வதே எல்லைவற்றையும் விட மிகப்பெரிய சேவை என நம்பும் இலட்சிய இந்து மனைவியின் அடையாளமாக அவர் திகழ்ந்தார் என்றே நூலாசிரியர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்” என்று அந்த வாசகர் கூறினார்.

 

கஸ்தூர்பாவும் சநாதனமும்

ஒரிசா மாநிலத்தில், பூரி நகரத்தில் உள்ள, ஹரிஜனங்கள் உள்ளே நுழையமுடியாத ஜெகந்நாதர் ஆலயத்திற்கு கஸ்தூர்பாவும் சில தோழிகளும் போகிறார்கள். இவர்கள் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்கு போய்விட்டு வந்ததைக் கேள்விப்பட்டதும் காந்தி மன உளைச்சலுக்குள்ளாகிறார். கஸ்தூர்பா மன்னிப்புக் கேட்கிறார்.“காந்தி ஒரு தலைவர் என்பதனால் அவருடைய மனைவியும் அவருடைய கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கென்று சில நம்பிக்கைகள் இருக்கலாம். அது அவரது சுதந்திரம்” என்று ஒரு வாசகர் சொன்னார்.

 

“தன் மனைவியைக் கூடப் பேசி மாற்ற முடியாதவர், எப்படி மற்றவர்களுக்குப் பிரசங்கம் வைக்கலாம்?” என்று இன்னொரு வாசகர் கேட்டார். “இதற்குப் பின்னால் ஓர் அரசியல் இருக்கிறது. ஹரிசனங்களைக் கோவிலுக்குள் நுழையவிட வேண்டும் என்று காந்தி சொன்னதே, அவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியே போய்விடக்கூடாது என்ற அக்கறையில் தானே தவிர, மற்றபடி அவர் சனாதன தர்மத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் தான்.” என்று ஒரு வாசகர் விளக்கினார்.

 

கஸ்தூர்பாவும் காந்தியும் சநாதன முறைப்படி வைசிய குலத்தில் பிறந்தவர்கள். ஆனால் கஸ்தூர்பா  பிராமணர்களுக்கு தனியாக ஒரு சிறப்பு இடம் அளித்தே வந்திருக்கிறார். அதற்கு இரண்டு நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டினார் ஒரு வாசகர்.

 

“காந்தியின் அந்தரங்க காரியதரிசி மகாதேவ தேசாய். அவர் ஒரு பிராமணர். அவர் சிறையில் இறந்து போக, சிறையின் ஓர் ஓரத்திலேயே அடக்கம் செய்யப்படுகிறார். கஸ்தூர்பா, அவர் சமாதியை கோயிலாக நினைத்து தினம் பூசை புனஸ்காரங்களைசெய்கிறார். அது மட்டுமல்ல, விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஒரு பிராமணனை அழைத்து வந்து கொன்று விட்டோம். பிராமணக் கொலை நம்மை சும்மா விடாது என்று நூலாசிரியரிடம் கஸ்தூரிபா புலம்புகிறார்.” என்ற நிகழ்வைச் சொன்னார்.

 

அதற்கு ஆதாரமாக இன்னொரு வாசகர் ஓர் இணைப்பைக் கொடுத்து உரையாடலைத் துவக்கி வைத்தார். அவர் கருத்து இது தான். “காந்தியும் கஸ்தூர்பாவும் வைசிய சமூகத்தில் பிறந்தாலும், வைதீக அல்லது வர்ணாஸ்ரம, அதாவது சாதியத்தை உள்ளடக்கிய பிராமணீய முறைப்படி வளர்ந்தவர்கள். பகவத் கீதை உட்பட்ட மகாபாரத, ராமாயணக் கதைகளை அவர்கள் தொடர்ந்து படிப்பதாக இந்த நூலில் சொல்லப்படுகிறது. மகாதேவ் தேசாய் சிறையில் இறந்த பிறகு, பிராமணனைக் கொன்றால் பெரும்பாவம் நம்மைத் தொடரும் என்று கஸ்தூரிபா கூறுகிறார். அதற்கு மனுதர்ம சாஸ்திரம் 11:126 ஐப் படிக்கவேண்டும். பிராமணரைக் கொலை செய்வதை பஞ்சமகாபாதகங்களில் முதலிடத்தில் உள்ள மகாபாதகம் எனக் கூறுகிறது அந்த மனுதர்ம சாஸ்திர சுலோகம். இது தர்மசாஸ்திரங்களின் படி மோட்சம் பெறுவதைத் தடுக்கும் பாவமாகக் கருதப்படுகிறது.” என்றார்.

 

அந்த வாசகர் தொடர்ந்து, “இன்று நடக்கும் அரசியல் நடப்புகளுக்கு காந்தியும் சில துவக்க வேலைகளைச் செய்திருக்கிறார். கற்பனைக் காந்திக்கும் கற்பனை பகத்சிங்குக்கும் நடந்த நையாண்டி உரையாடலில் வரும் செய்தியைக் கவனியுங்கள். அந்த உரையாடல், செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் மேலோங்கி வருகிற இக்காலக்கட்டத்தில் எல்லோரும் இணைந்து சமத்துவ சமூகத்தை உருவாக்கப் பாடுபடவேண்டும் என்ற கருத்தோடு நிறைவு பெறுவதையும் கவனியுங்கள்.” என்றார்

 

இது ஒரு நிகழ்வு. இன்னொரு நிகழ்வையும் இரு வாசகர்கள் சுட்டிக்காட்டினார்கள். அது என்ன நிகழ்வு?

 

ஆகாகான் மாளிகை முகாமில் பல சிப்பாய்கள் இருந்தார்கள். அவர்களின் நடுவே ஒரு பிராமண சிப்பாயும் வேலை செய்து வந்தார். கஸ்தூர்பா அந்த பிராமண சிப்பாய்க்கு, பாலோ, பழமோ அப்படி ஏதாவதோ கொடுத்துக் கொண்டே இருப்பார். மற்ற சிப்பாய்கள் பெரிய அதிகாரியிடம் போய் முறையிட்டார்கள். பெரிய அதிகாரி அப்படி செய்யக்கூடாது என்று தடுத்த போதும், என் பங்கிலிருந்து தானே அந்தப் பிராமணருக்குக் கொடுக்கிறேன் என்று சொல்வார். பிராமணர்களுக்கு கொடை கொடுப்பது பாக்கியம் இல்லையா என கஸ்தூர்பா கேட்டார். (மனுதர்ம சாஸ்திரம் முதல் அத்தியாயம், 88-91 சுலோகம் பிராமணர்கள் தெய்வீக ஞானத்தின் பிரதிநிதிகள் எனக் கருதப்படுவதால் அவர்களுக்கு நிலம், தங்கம், உணவு, கால்நடைகள் போன்றவற்றை தானமாக கொடுப்பது மோட்சம் அடைய உதவும் என்று சொல்கிறது. மனுதர்ம சாஸ்திரம் பத்தாவது அத்தியாயம் ஒரு படி மேலே போய், பிராமணருக்கு நிலம் தானமாகக் கொடுப்பவன் பூமியையே தானமாகக் கொடுத்தவனுக்குச் சமம் என்று கூறுகிறது)

 

கஸ்தூர்பாவின் கொள்கைத் தெளிவின்மை  

ஒரு வாசகர் நுணுக்கமான ஒன்றை கவனித்திருந்தார். அவர் சொன்னார், “ஒரு தடவை கஸ்தூர்பாவும் நூலாசிரியர் சுசிலாவும் பூனாவுக்குச் செல்ல வேண்டி, பம்பாய் ரயில் நிலையத்தில் அமர்ந்திருப்பார்கள். பூனாவுக்குப் போக வேண்டும். ரயில் நிலையத்தில் எல்லாம் வழக்கம் போல நடந்துக்கொண்டிருக்கிறது. விடுதலைப் போராட்டம் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

 

கஸ்தூர்பாவுக்கு அது கவலையாக இருக்கிறது. தன் கணவரின் முயற்சி பாழாகிவிடுமோ என்று கவலைப்படுகிறார். எல்லாப் போராட்டக் களத்திலும் இது இயல்பாக நடப்பது தான். கொள்கைப் பிடிப்போடு ஒரு தலைவர் இருப்பார். அவரைப் பின்பற்றித் தொண்டர்கள் பலர் இருப்பர். இதில் எதிலும் சம்பந்தப்படாமல் பொது மக்களின் வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கும். ஆனால் கஸ்தூர்பாவுக்கு இது புரியவில்லை” என்றார்.

 

கஸ்தூர்பாவின் கொள்கைத் தெளிவின்மைக்கு இன்னொரு பகுதியும் சான்று பகர்கிறது.

 

மகாதேவ் தேசாயின் மரணத்திற்குப் பிறகு கஸ்தூர்பா மிகவும் தளர்ந்துப் போய்விடுகிறார். ‘ஆங்கிலேயர்கள் மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கத்தைக் கொண்டுள்ளார்கள். அவர்களை எதிர்க்க வேண்டாம் என்று கூறினேன். நம் நாடு பெரிய நாடு அவர்கள் இருந்து விட்டுப் போகட்டுமே. அவர்களை ஏன் வெளியே போ என்கிறீர்கள்’ என்ற காந்தியிடம் கஸ்தூர்பா கேட்கிறார்.

 

‘என்னை மன்னிப்புக்கடிதம் எழுதச் சொல்கிறாயா?’ என்று காந்தி கேட்டு விட்டு, ‘நானும் அதைத்தான் கூறுகிறேன். அவர்கள் இருக்கட்டும். ஆனால் ஆட்சியாளராக அல்ல. சகோதரர்களாக’ என்று காந்தி பதிலளிக்கிறார். தேசாயின் மரணத்திற்குப் பிறகு தானும் சிறையிலேயே இறக்க வாய்ப்பிருப்பதாகவும், இளம் வயது பிள்ளைகளெல்லாம் சிறைப்பட்டிருக்கிறார்கள் என்றும் கஸ்தூர்பா வருத்தப்படுகிறார். விடுதலைப் போராட்ட கொள்கைகளில் கஸ்தூர்பாவுக்கு இருந்த தெளிவு அவ்வளவு தான்.

 

காந்தியின் கடுமையானப் போக்கு

காந்தி, தான் பேசிய பல கொள்கைகளை தன் வாழ்வில் கடைப்பிடிக்க முயற்சித்தார் என்றே அறிந்திருக்கிறோம். அதற்காகவே அவரது மனபலம் பாராட்டப்படுகிறது. அதற்கு மாறாக இந்த நூலில் காந்தி கஸ்தூர்பாவிடமும் மற்றவர்களிடமும் கடுமையாக நடந்துக் கொள்வதும், சிடுசிடுப்பதும், பொறுமையிழப்பதும் இன்ன பிறவும் பதிவு செய்யப்படுகிறது.

 

எடுத்துக்காட்டாக அவரது பேரன் கனுவை, அவரது கண்காணிப்பில் சற்று நேரம் விட, அதை செய்யமுடியாமல் பொறுமையிழந்து கனுவின் தாயாரிடம் உடனே அனுப்பி வைப்பார். “இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு குழந்தையை நிர்வாகம் செய்யமுடியாதவராக காந்தி இருந்திருக்கிறார். இந்த அனுபவத்தை பதிவு செய்யும் அளவுக்கு, நூலாசிரியருக்கே ஆச்சரியமாக இருந்ததா? அவ்வளவு பொறுமை இல்லையா? குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் விதத்தில் தான் ஓர் ஆண் என்று காந்தி நிருபித்துவிட்டாரா?” என்று ஒரு வாசகர் ஆச்சரியப்பட்டார்.

 

“பல நேரங்களில் காந்தி ஒரு கறாரான பேர்வழியாகவே இந்த நூலில் சொல்லப்படுகிறது. அதை கொள்கைப் பிடிப்பு என்று சொல்வதா? இல்லை ஒரு வகைத் திமிர் என்று சொல்வதா? பொதுக் கூடத்திலும் படுக்க மாட்டேன், சிறப்பு ஏற்பாடுகள் செய்த அறையிலும் படுக்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். தன்னை மற்ற ஆசிரமவாசி போலவே பார்க்கவேண்டும் என்பது சரி தான். அந்தக் கொள்கைப் பிடிப்பு அவரைக் கோபக்கார மனிதராக வெளிப்படுத்தியதா?” என்று ஒரு வாசகர் கேள்வி எழுப்பினார்.

 

“ஒரு தடவை கஸ்தூர்பாவின் உடல் நலம் நலிந்துப் போகிறது. உடல்நிலை மோசமான நிலையிலும் அவரை, வார்தாவிலிருந்து டில்லிக்கு இரயிலில் தனியாக அனுப்பிவிடுகிறார் காந்தி. முதுமையடைந்த ஒருவரை காந்தி தனியாக ரயிலில் வெகு தூரம் பயணம் செய்ய வைத்திருப்பது சுசிலாவுக்கே (நூலாசிரியருக்கே) சரியானதாகப் படவில்லை. காந்தி, தன் மனைவி மேல் அக்கறையோடு இருந்தாரா என்ற கேள்வி எழும்புவதற்கும், இல்லை என்று சந்தேகப்படுவதற்கும் இது வழி கோலுகிறது” என்று இன்னொரு வாசகர் சொன்னார்.

 

மற்றொரு வாசகர் மிகவும் வருத்தப்பட்டு, “எதற்காக இந்த நூல் எழுதப்பட்டது என்ற ஓர் அடிப்படைக் கேள்வி எழும்புகிறது. காந்தியின் முன்னுரையே ஏமாற்றத்தை அளிக்கிறது. காந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் தான் சுசி இந்நூலை எழுதுகிறார். கஸ்தூர்பா பிடிவாதக்காரி என்றும், இருந்தாலும் தன் பொதுச் சேவையில் பங்கெடுக்க, தான் சொன்ன பிரம்மச்சாரியத்தை அவர் கடைப்பிடித்தார் என்றும் காந்தி முன்னுரையில் எழுதியிருப்பது எனக்கு ஆச்சரியம் கொடுக்கிறது.” என்று அந்த வாசகர் நொந்துக்கொண்டார்.

 

இன்னொரு வாசகர், “கஸ்தூர்பாவையும் சுசியையும் காந்தியை சிறை வைத்திருக்கிற ஆகாகான் மாளிகையில் உள்ள சிறைமுகாமுக்கு கொண்டு வருகிறார்கள். கஸ்தூர்பாவைப் பார்த்தவுடன் ‘காந்தியுடன் நான் இருக்கவேண்டும்’ என்று அரசாங்கத்திடம் முறையிட்டு அவர் வந்திருக்கிறாரோ என்று தவறாக நினைத்து கஸ்தூர்பாவிடம் காந்தி சிடுசிடுக்கிறார். அப்படி இல்லை, அரசாங்கமே இப்படி செய்திருக்கிறது என்று தெரிந்துக்கொண்டு அமைதியாகிறார். தன் மனைவி இப்படித்தான் செய்திருப்பார் என்று அவசரப்பட்டு கணித்து கோபப்படுகிறாரா? அல்லது காந்தியே கொஞ்சம் சிடுமூஞ்சி தானா?” என்று கேட்டார்.

 

காந்தி தன் மனைவி மீதான கடுமையான போக்குக்கை அனுசரித்தார் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு காண்பிக்கலாம்.

 

தன் கடைசி காலக்கட்டத்தில், கஸ்தூர்பா உடல் நலம் குன்றிய நிலையில், நெய்யுடன் சேர்த்து கத்திரிக்காய் உணவைக் கேட்கிறார். மற்றவர்கள் வேண்டாம் என்று சொல்ல விடயம் காந்திக்குச் செல்கிறது. காந்தி, ‘உன் ஆரோக்கியத்துக்காக உன் நாவை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்கிறார். கஸ்தூர்பாவோ கோபித்துக்கொண்டு சமைத்த உணவை இனி நான் சாப்பிடவே மாட்டேன் என்று சொல்லி, வெறும் பழம், பால், தேன், வெந்நீர் என்று சாப்பிடத்துவங்குகிறார். காந்தியிடம் மற்றவர்கள் அதை முறையிட, ‘அது அவருக்கு நல்லது தான்’ என்று கூறி விடுகிறார்.

 

1943. பிப்ரவரி 19-20. கஸ்தூர்பாவுக்கு இரவு முழுவதும் ஆக்‌ஸீஜன் கொடுக்கப்படுகிறது. மருந்துகள் நிறுத்தப்படுகின்றன. பஜனை மட்டும் தொடர்ந்து பாடப்படுகிறது. இனி உணவும் வேண்டாம். மருந்தும் வேண்டாம். தேனும் வெந்நீரும் போதும். ராம நாமம் போதும். என்று காந்தியடிகள் கூறிவிடுகிறார். கீதையின் வரிகள் வாசிக்கப்படுகின்றன.

 

ஒரு வாசகர் சொன்னார், “ காந்தி இந்து மதத்தின் மீதும், சனாதனக் கொள்கை மீதும் வைத்திருந்த அதீத பற்று எல்லாக் காலத்திலும் வெளிப்பட்டது போல, மருந்து வேண்டாம் ராம நாமம் போதும் என்றும், கீதையை தொடர்ந்து வாசியுங்கள் அவர் அதைக் கேட்கட்டும் என்றும் சொல்வது மூலம் தெள்ளத் தெளிவாகிறது. காந்தி மீதும் கஸ்தூர்பா மீதும் வைத்திருந்த சில நல்ல அபிப்ராயங்கள் கூட இப்பொழுது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவர்கள் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் சற்று சிதைந்தே போகிறது.” என்று சொன்னார்.

 

இயற்கையாக ராமநாமத்தைச் சொல்லிக்கொண்டே இறக்கலாம் என்பது காந்தியின் எண்ணம். உயிரோடு இருக்கும் போது பென்சிலின் ஊசி போட்டுக் காப்பாற்ற முயற்சித்தால் என்ன என்பது மற்ற பலருடைய எண்ணம். மூன்று மணிக்கொரு முறை ஊசி வழியாக பென்சிலின் போடவேண்டும் என்று டாக்டர் கில்டர் மூலம் தெரிந்துக் கொண்டு அதை வேண்டாம் என்று காந்தி கூறிவிடுகிறார். பேரன் கனு காந்தியையும் பாவையும் ஒரு நிழற்படம் எடுக்க ஆசைப்பட்டான். காந்தி வேண்டாம் என்று மறுத்துவிடுகிறார். சற்று நேரத்தில் காந்தியின் மடியில் பாவின் உயிர் பிரிந்தது.

 

பொதுவான கேள்விகளும் உரையாடலும்

வாசகர் 1: இந்த நூலை எதற்காக இந்த வாசகர் வட்டம் தேர்ந்தெடுத்தது என்று எனக்குள் கேள்வி எழும்பியது. Worthless.

 

வாசகர் 2: வழக்கமாக நான் முன்னுரைகளைப் படிப்பதில்லை. ஏனென்றால் முழு விபரத்தையும் முன்கூட்டியே அறிய எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் இந்த நூலுக்கு காந்தி எழுதிய முன்னுரையைப் படித்தேன். அதுவே எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

 

வாசகர் 3: ஒரு தலைவர் இருந்தால், அவருடைய குடும்பத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அது கேள்விக்கேட்கப் படவேண்டிய பழக்கம். அதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். நமக்குத் தெரிந்த ஒருவர் நூல் எழுதிவிட்டார் என்பதற்காக, அதை உயர்த்திப் பிடிப்பது என்பது நல்ல பழக்கமா? எதையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் பழக்கம் தானே சிறந்தது.

 

வாசகர் 4: காந்தி என்ற தலைவர் எப்படி உருவானார்? ஆங்கிலேயர்களுக்குக் காந்தியோடு பேசுவது எளிதாக இருந்தது. தீவிரவாத பக்கம் சாராமல், மிதவாதியாக இருந்தது ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக இருந்தது. முகம் கொடுக்க முடியாத ஒரு தலைவர் உருவாகிவிடக்கூடாது என்று ஆங்கிலேய அரசாங்கம் பல முனைப்புகளைச் செய்தது. இருந்தாலும் காந்தியின் மனபலம் உறுதியாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளால் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவை உதறிவிட்டுப் போகவேண்டியிருந்தது.

 

வாசகர் 5: முதல் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடையே தான் காந்தி மற்றும் கஸ்தூர்பா வாழ்க்கை சொல்லப்படுகிறது. அதே காலக்கட்டத்தில் தான் ஜெர்மானியர்களுக்கும் யூதர்களுக்குமான போராட்டம் நடக்கிறது. ஆனால் அதைப்பற்றி நிறையச் சொல்லப்படவில்லை. ஏன்? ஆங்கிலேய அரசுக்கு அதைப்பற்றிய செய்தி தெரியும். சுபாஷ் சந்திர போஸ் நாஜிக்களோடு கைகோர்க்க ஜெர்மனி வரைப் போகிறார் என்ற ஒற்றை செய்தி தான் தெரியும். பல செய்திகள் இப்படித்தான் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

 

வாசகர் 6: “நாம் அனைவருமே கணங்களின் உயிரினங்கள் என்கிற தங்க விதியை மறந்து விட்டேன்.” என்ற இந்நூலில் வரும் சொற்றொடர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பொருள்பொதிந்த சொற்றொடர்.”


உடைந்த பிம்பங்கள் 

ஒரு வாசகர் நேரடி உரையாடலின் நீட்சியாக,  “Kasturba: The unheard voice behind Gandhi” என்ற ஓர் ஆங்கிலக்கட்டுரையை புலனத்தில் அனுப்பி வைத்தார். அந்தக் கட்டுரையில், பாரம்பரிய இந்துப் பெண்ணாக வளர்ந்த கஸ்தூர்பா தன் கணவனுக்கு தன் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணிப்புச் செய்தவராக வாழ்ந்தார் என்றும் அவரின் ஆரம்பகால திருமண வாழ்க்கையில் காந்தியின் பாரம்பரிய ஆணாதிக்க நடத்தைக் காரணமாக அவர்களது உறவில் பல சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் குறிப்பிடப்படுகிறது. சொல்லப் போனால், அவரது கர்ப்பக் காலங்களில் கூட காந்தியின் வெளி வேலைகள் நிமித்தம், கஸ்தூர்பா புறக்கணிப்புக்கு உள்ளானார் என்றும் இருந்தாலும் தன் கணவனுக்கு விசுவாசமாகவே அவர் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

 

இப்படி அவரது தியாகத்தால் தான் காந்தி தனது மற்றப் பணிகளில் கவனம் செலுத்த முடிந்தது என்றும், தான் மிகவும் புறக்கணிக்கப்பட்டதாக கஸ்தூர்பா உணர்ந்தாலும், காந்தியின் பிரம்மச்சரிய உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார் என்றும் அந்தக் கட்டுரை குறிப்பிடப்படுகிறது. கஸ்தூர்பாவின் கதை ஒரு தலைவர் உருவாவதற்கு எப்படி சான்றாகிறது என்பதற்கு சாட்சி என்று நிறைவு பெறுகிறது.

 

மொத்தத்தில் காந்தி மற்றும் கஸ்தூர்பா பற்றிய பிம்பங்கள் குறித்து மறுவாசிப்பு செய்ய இந்த நூல் உதவி செய்ததாகவே கருதுகிறேன்.

 

*****

 

References

 

1. Patel, H.S. (2017). Kasturba: The unheard voice behind Gandhi. International Journal of English Language. Volume V, Issue VII. ISSN:2321-7065.

 

2.  Singh, G. (2025). Gandhi-Bhagat Singh dialogue. Life/Philosophy. Countercourrents.org. Retrieved https://countercurrents.org/2025/06/gandhi-bhagat-singh-dialogue/

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page