சுசிலா நய்யாரின் "கஸ்தூர்பா - ஒரு நினைவுத் தொகுப்பு" - நூல் சுருக்கமும் வாசிப்பு அனுபவமும்
- உயிர்மெய்யார்

- Jun 7
- 16 min read
Updated: Jun 13

தமிழில்: பாவண்ணன், சந்தியா பதிப்பகம், சென்னை - 83.
முதற்பதிப்பு: 2019 - ISBN: 978-93-87499-76-8
மெல்பர்ன் வாசகர் வட்டம் - 2025 மே
முன்னுரை
இக்கட்டுரை நான்குப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
முதற் பகுதியில் (ஆரம்ப காலம்) நூலாசிரியர் சுசிலா நய்யாரின் கோடை விடுமுறைகளில் கஸ்தூர்பாவோடு பழகிய நிகழ்வுகள் சொல்லப்பட்டு அதில் வாசகர்களின் கருத்துகளும், கேள்விகளும், உரையாடல்களும் பதிவு செய்யப்படுகின்றன.
இரண்டாவது பகுதியில் (ஆசிரம வாழ்க்கை), கஸ்தூர்பாவின் ஆசிரம வாழ்க்கைப் பற்றியும்
மூன்றாவது பகுதியில் (சிறை வாழ்க்கை), கஸ்தூர்பாவின் சிறை வாழ்க்கைப் பற்றியும் சுருக்கங்கள் கொடுக்கப்பட்டு வாசகர்களின் உரையாடல்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றன.
நான்காவது பகுதியில் (சொந்த அனுபவங்கள்), மகாராஷ்டிர மாநில சேவா ஆசிரமத்திற்கும், அப்போதைய பீஹார் மாநில ராஜ்கோட் பகுதிக்கும், ஒரிஸ்ஸா மாநில பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கும் நான் சென்ற சொந்த அனுபவங்களைப் பற்றி இந்த நூலைப் படிக்கும் போது எழுந்த எண்ணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
நூலைப் படிக்காதவர்கள், கஸ்தூர்பாவின் வாழ்க்கையை ஓரளவு தெரிந்துக் கொள்ளும் வண்ணமும், வாசகர் வட்ட நண்பர்களின் கருத்துக்களைப் புரிந்துக் கொள்ளும் வண்ணமும் இரண்டையும் ஆங்காங்கே இணைத்து கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
முதலில் நூலாசிரியரின் ஆரம்ப காலம்!
*********
முதற் பகுதி
ஆரம்ப காலம்
சுசிலா நய்யாரின் (நூலாசிரியரின்) அம்மா, சுசிலா நய்யாரின் அண்ணனை (பியாரிலால்ஜி) சபர்மதி ஆசிரமத்திலிருந்து திருப்பி அனுப்பும்படிக் கேட்கப் போகிறார். ஆனால் பா (கஸ்தூரிபா) வோடு பழகியதும், நாட்டிற்காக அவர் செய்யும் தியாகத்தைத் தெரிந்துக் கொண்டதும், ‘நாலஞ்சு வருடத்துக்கு வச்சிகிட்டு அப்பறம் என்னுட்ட அனுப்பிடுங்க’ என்று காந்தியடிகளிடம் சொல்கிறார்.
விடுமுறைக் காலத்தைக் கழிக்க, லாகூரிலிருந்து அகமதாபாத்திற்கு, சுசி தன் அண்ணனோடு, 1929 ஆம் ஆண்டு செல்கிறார். ஆசிரமத்தில் குஜராத்தியும், மராத்தியும் தான் பேசிக்கொள்கிறார்கள். உடைந்த இந்துஸ்தானி மொழியில் பா சுசியிடம் பேசுகிறார்.
பாவின் பரிவும் சுத்தமும்
அண்ணன் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் தொந்தரவு செய்யவேண்டாம் என்கிறார். சுசி துணி துவைக்க, கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆட்களை ஏற்பாடு செய்கிறார். சுசி காலணி இல்லாமல் நடப்பதைப் பார்த்து தன்னுடைய பயன்பாட்டுக்காக வைத்திருந்த புதிய காலணிகளைக் கொடுக்கிறார். அதேப் போல பாவின் சுத்தம் பற்றிய கண்ணோட்டமும் உற்று நோக்கவேண்டியதாகிறது. அவரது அறை எப்பொழுதுமே சுத்தமாக இருக்கிறது என ஆசிரியர் எழுதுகிறார்.
கேள்வியும் உரையாடலும்
வாசகர் 1: இங்கு பாவின் பரிவு பற்றிச் சொல்லவேண்டும். மற்றவர்கள் மேல் வைத்திருக்கிற இயற்கையான அக்கறையும் வெளிப்படுகிறது. அவரது தாயுள்ளம் தெரிகிறது.
வாசகர் 2: ஓர் இந்தியப் பெண்மணி எப்படி இருப்பார் என்று தெரிகிறது.
காந்தியும் கற்றலும்
ஒரு முறை காந்தியடிகளைப் பார்க்க ஒரு கூட்டம் வருகிறது. காந்தி சுசியைப் பார்த்து, “ஆசிரமத்தை சுற்றிக் காண்பிப்பாயா? நீ முழுவதுமாகப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்கிறார். சுசி பார்த்தது இல்லை. அதற்கு காந்தி, ‘ஆங்கிலப் பெண்ணாக இருந்தால் இந்நேரம் துணிச்சலாக சுற்றிப் பார்த்திருப்பார். நம் இந்தியப் பெண்களுக்குத் துணிச்சல் தேவை. சுற்றி இருப்பவர்கள், சுற்றி இருப்பவைகள் பற்றிய விழிப்புணர்வு தேவை. கூச்சம் கூடாது.” என்கிறார். இது நல்ல படிப்பினை. சுசியின் செயலில் மாற்றம் வருகிறது. வெளிநாட்டு ஆடைகளை வாங்குவதை நிறுத்திவிட்டு, சுசி கதராடைகளை உடுத்தத் துவங்குகிறார். அதையே துவைத்துத் துவைத்துப் போட்டு உடுத்திக்கொள்ளத் துவங்கினார்.
பாவுக்கு ஆடம்பரம் பிடிக்கவில்லை
1930. கோடை விடுமுறை. உப்புசத்தியாக்கிரகப் போராட்ட விளைவாக காந்தியும் சசியின் அண்ணனும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். பா பல கிராமங்களுக்குப் பயணம் செய்து விடுதலைப்போராட்டத்தின் அவசியத்தை சாமான்ய மக்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். மிகவும் தளர்ந்து போகிறார். அவரது மகன்கள் (மணிலால், ராம்தாஸ்) அடைக்கப்பட்ட சபர்மதி சிறைக்குச் சென்று பார்க்கிறார். சுசி முதன் முறையாக சிறையைப் பார்க்கிறார். 1930. பஞ்சாபில் உள்ள குஜராத் சிறைச்சாலை. பாவின் மகன் (தேவதாஸ்) அடைக்கப்பட்டிருக்கிறார். குஜராத் ரயில் நிலையத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் சுசியின் கிராமம். பாவிற்கு ஊர்வலம், ஆடம்பரம் பிடிக்கவில்லை. ஆடம்பரம் தேவையில்லை என்கிறார்.
காந்தியின் சிறைவாசம்
1931. கோடை விடுமுறை. இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்துக் கொள்ள காந்தியடிகள் சிம்லாவில் போய் வைய்ஸ்ராயைப் பார்த்து விட்டு, அங்கிருந்து தனி ரயிலில் பம்பாய் துறைமுகம் சென்று, கப்பலில் லண்டன் செல்கிறார். பம்பாயில் சுசி அவருக்கு விடைக் கொடுக்கிறார். 1932ல் நடந்த மாநாட்டில் பங்கெடுத்து விட்டு திரும்பும் போது மறுபடி காந்தியடிகளை சிறைப்பிடிக்கின்றனர். உடல் சார்ந்த துன்பங்களைக் கடந்து, சிறையில் அடைபட்டிருக்கும் செயலே ஒருவரை அச்சத்தில் அமிழ்த்தி விடுகிறது என்று ஆசிரியர் வருத்தப்படுகிறார்.
1935. கோடை விடுமுறை. வார்தா ஆசிரமம். மகன்வாடியில் காந்தியடிகளோடு தங்கல். 1936ல் பாவின் மகன் (தேவதாஸ்) உடல் நலம் குன்றியதால் அவரையும் சுசியின் அண்ணனையும் சிம்லாவுக்கு அழைத்துச் சென்று அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார் பா.
************
இரண்டாம் பகுதி
ஆசிரம வாழ்க்கை
1937. காந்தியின் உடல்நிலை குன்றுகிறது. கல்கத்தாவில் சுகாதாரம் மற்றும் பொது ஆரோக்கியத்துக்கான அனைத்திந்திய நிறுவனத்தில் படித்துக்கொண்டிருந்த சுசி, ஒரு மாதம் விடுப்பெடுத்துக்கொண்டு காந்தியைப் பார்த்துக்கொள்ள சேவாகிராமத்துக்கு வருகிறார். ஆனால் இரண்டு வருடங்கள் அங்கு தங்க வேண்டி வருகிறது. பாவுடன் அவருடைய அறையிலேயே தங்கிக்கொள்கிறார்.
பாவின் பரிவும் குணமும்
பல நேரம் சுசியின் படுக்கையை பாவே சுருட்டி வைக்கிறார். தாமதத்தையும் மறதியையும் அவரால் தாங்க முடியவில்லை. ஆகாகான் மாளிகை - பாவின் பெட்டி இரு பூட்டுகள் கொண்டவை. ஒரு தடவை ஒரு பொருளை எடுத்துக்கொடுத்து விட்டு நன்கு பூட்டிய பூட்டை பூட்டிவிட்டார் சுசி. சரியாகப் பூட்ட முடியாத பூட்டைப் பூட்டாமல் விட்டு விட்டார். சில நாட்களுக்குப் பிறகு, பாவின் பெட்டியிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொடுத்த பிறகு, “நான் பூட்டிக்கொள்கிறேன்” என்று சொன்ன போது, “ஒரு பூட்டை அப்படியே விடமாட்டாய் அல்லவா?” என்று சொல்கிறார் கண்கள் மின்ன. காந்தியடிகளுக்கு காலை உணவு தயார் செய்து ஆசிரத்து சிறுமிகளில் யாராவது ஒருவர் கொண்டு போய் கொடுப்பார். சில நேரம் மற்றவர்கள் கழுவி வைத்துவிட்டுச் செல்லும் தட்டுகளை எடுத்து பா கழுவி வைப்பார்.
பாவின் வாசிப்பு
காந்தியடிகள் காலை நடைக்குப் போகும் போது குளித்துவிட்டு, ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரத்திற்கு இராமாயணத்தையோ, பகவத் கீதையையோப் படிப்பார். காலை நடை, மாலை நடை, மூன்று வேளை உணவு, ஓய்வு, காலைப் பிரார்த்தனை, மாலைப் பிரார்த்தனை, வாசிப்பு, பாடல், ஊர்க்கதை, படுக்கை என்று நூலாசிரியர் வரிசைப்படுத்துகிறார்.
காந்தியின் பொறுமையின்மை
வழக்கமாக, பேரன் கனுவை (மகன் ராமதாஸின் மகன்) பா பார்த்துக் கொள்வார். 1938ல் ராஜ்கோட் சத்தியாகிரக போராட்டத்தில் பா கலந்துக்கொள்கிறார். அதனால் கனுவை காந்தி பார்த்துக்கொள்கிறார். தன் பாட்டி ‘மோத்தி பா’ வேண்டும் என்று அழுகிறான். எளிதாக அமைதிப்படுத்திவிடலாம் என்று காந்தி நினைக்கிறார். ஒரு செபமாலையைக் கொடுத்து, அதில் உள்ள கொட்டைகளை எண்ணிக் கொண்டு வா. அப்பொழுது மோத்தி பா எதிரில் காட்சியளிப்பார் என்று சொல்கிறார். கனு எண்ணுகிறான். ம்ஹூம்! வரவில்லை. அழுகிறான். டேராடூனில் கன்னியா குருகுலத்தில் தங்கியிருந்த கனுவின் தாயாரிடம் அவனை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறார்.
கேள்வியும் உரையாடலும்
வாசகர் 1: “இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு குழந்தையை நிர்வாகம் செய்யமுடியாதவராக காந்தி இருந்திருக்கிறார். இந்த அனுபவத்தை பதிவு செய்யும் அளவுக்கு, நூலாசிரியருக்கே ஆச்சரியமாக இருந்ததா? அவ்வளவு பொறுமை இல்லையா? குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் விதத்தில் தான் ஓர் ஆண் என்று காந்தி நிருபித்துவிட்டாரா?
காந்தியின் கறாரும் பாவின் நெகிழ்வும்
1937. காந்தி கல்கத்தாவுக்கு வருகிறார். ரத்த அழுத்தம் சீரற்ற நிலை. மீரா பென் தன் குடிலை காந்திக்குக் கொடுக்க முன் வந்ததால் அதில் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதை காந்தி ஏற்கவில்லை. கடைசியில் பா தன் அறையில் படுக்க ஏற்பாடு செய்து பிரச்னையை முடித்து வைக்கிறார். ஜூஹூவில் இரு மாத காலம் தங்கியிருக்கிறார். 1939ல் உடல்நிலை சீர் பெறுகிறது. சேவாகிராமத்துக்குத் திரும்புகிறார். பா தலைமைத்தாதி போல குடிலிலும், நடைபயிலும் போதும் கூடவே இருக்கிறார்.
கேள்வியும் உரையாடலும்
வாசகர் 1: பல நேரங்களில் காந்தி ஒரு கறாரான பேர்வழியாகவே இந்த நூலில் சொல்லப்படுகிறது. அதை கொள்கைப் பிடிப்பு என்று சொல்வதா? இல்லை ஒரு வகைத் திமிர் என்று சொல்வதா? பொதுக் கூடத்திலும் படுக்க மாட்டேன், சிறப்பு ஏற்பாடுகள் செய்த அறையிலும் படுக்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். தன்னை மற்ற ஆசிரமவாசி போலவே பார்க்கவேண்டும் என்பது சரி தான். அந்தக் கொள்கைப் பிடிப்பு அவரைக் கோபக்கார மனிதராக வெளிப்படுத்தியதா?
பூரி ஜெகந்நாதர் கோவில் நுழைவு
1939. சேவா சங்கத்தின் ஆண்டு விழா. ஒரிசாவில் உள்ள டெலாங் போகிறார். பாவும் துர்காபென்-னும் மற்றும் சில தோழிகளும் கூடப் போகிறார்கள். அருகிலேயே ஜெகந்நாதர் ஆலயம். அது ஹரிஜனங்களுக்காகத் திறந்துவிடப்படாத கோவில். இருந்தாலும் பாவும், பென்னும் மற்றவர்களும் பூரிக்குப் போய் ஜெகந்நாதரை வழிபட்டார்கள். ஆனால் மகன் (தேவதாஸ்) உள்ளே நுழையவில்லை. இவர்கள் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்கு போய்விட்டு வந்ததைக் கேள்விப்பட்டதும் காந்தி மன உளைச்சலுக்குள்ளாகிறார். பா மன்னிப்புக் கேட்கிறார். தான் தான் போதிய அளவுக்கு பாவிடம் சொல்லவில்லையென்று காந்தி வருத்தப்படுகிறார். மகாதேவ தேசாயிடமும் (துர்கா பென்னின் கணவரிடமும்) கேள்வி கேட்கிறார். இந்த விஷயத்தில் அழுத்தம் திருத்தமாக துர்காவிடம் தேசாய் நடந்திருக்கவேண்டும் என்று காந்தி சொல்கிறார்.
கேள்வியும் உரையாடலும்
வாசகர் 1: “காந்தி ஒரு தலைவர் என்பதனால் அவருடைய மனைவியும் அவருடைய கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கென்று சில நம்பிக்கைகள் இருக்கலாம். அது அவரது சுதந்திரம்”
வாசகர் 2: “தன் மனைவியைக் கூடப் பேசி மாற்ற முடியாதவர், எப்படி மற்றவர்களுக்குப் பிரசங்கம் வைக்கலாம்?”
வாசகர் 3 : “ஹரிசனங்களை கோவிலுக்குள் நுழையவிட வேண்டும் என்று காந்தி சொன்னதே, அவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியே போய்விடக்கூடாது என்ற அக்கறையில் தானே தவிர, மற்றபடி அவர் சனாதன தர்மத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் தான்.”
பா வின் தனித்தன்மை
1938-39. சேவாகிராமத்தில் காலரா நோய். சிறிது காலத்திற்கு முன்பு தான் வார்தா மகளீர் ஆசிரமத்தில் காலரா வந்து பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதனால் காந்தி எல்லோரையும் தடுப்பூசிப் போடச் சொன்னார். ஆனால் பா போட்டுக்கொள்ளவில்லை. போடாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். பா தனிமைப்பட தயாராக இருந்தார்.
கேள்வியும் உரையாடலும்
வாசகர் 1: பல நேரத்தில் பாவின் தனித்தன்மை வெளிப்படுகிறது. காந்தி நிறையக் கொள்கைகளை தன் தொண்டர்களுக்கு எடுத்துச் சொல்கிறார். ஆனால் பா தான் நம்புகிற விஷயத்தையே செய்கிறார். இது அவரது துணிவுக்குச் சான்று.
ராஜ்கோட் போராட்டம்
1938. பர்தோலி சென்று ஒரு மாத காலம் காந்தி இருந்தார். ராஜ்கோட் தாகூர்களைத் எதிர்த்துப் போராட்டம். பாவின் ஊர் ராஜ்கோட். பா, சில நண்பர்களோடு சிறையில் அடைக்கப்படுகிறார். பல கடிதங்களை பா எழுதுகிறார். ராஜ்கோட்டில் காந்தி உண்ணாவிரதத்தைத் துவங்குகிறார். சுசி மூலம் அதைக் கேள்விப்பட்ட பா தானும் சிறையில் உண்ணாவிரதம் இருக்கிறார். திடீரென காந்தி உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு, சிறையிலிருந்து பா வந்து இறங்குகிறார். அவரை இறக்கிவிட்டு சிறை வாகனம் திரும்பிவிடுகிறது. சிறைக்கே போகவேண்டும் என்று காந்தி சொல்ல, பா போகிறார். சிறை மூடி இருக்கிறது. சாலையோரமாகவே தங்கி விடுகிறார். காந்தி இது குறித்து கடிதம் எழுத, நண்பர்களோடு பா விடுதலையாகிறார்.
கேள்வியும் உரையாடலும்
வாசகர் 1: இதைப் போல பல நேரங்களில் காந்தி பாவின் மீது கடுமையாக நடந்துக் கொண்டிருக்கிறார்.
வாசகர் 2: ஓர் இந்திய மனைவி தன் கணவனுக்கு எப்படி ‘absolute surrender’ ஆக நடந்துக் கொள்வாரோ அப்படியே பா நடந்துக் கொள்கிறார்.
பா உடல் நலக் குறைவு
சுசி முதுநிலை மருத்துவப்படிப்பை டெல்லியில் படித்துக்கொண்டிருக்கிறார். பா மிகவும் உடல்நிலை மோசமாகி வார்தாவிலிருந்து டில்லி வந்துவிட்டார். முதுமையடைந்த ஒருவரை தனியாக ரயில் ஏற்றிவிட்டது தவறு என்று மகாதேவ தேசாய்க்கு சுசி கடிதம் எழுத, அவர் காந்தி தான் அனுப்பினார் என்று பதிலளிக்க, அப்படியானால் காந்தி செய்தது தவறு என்று மறுகடிதம் எழுதுகிறார் சுசி. டில்லியில் உள்ள தேவதாஸ் வீட்டில் தங்கியிருக்கிறார். சில காலம் சுசி அறையில் தங்குகிறார். ஈஸ்டர் விடுமறைக்கு பம்பாய் போகலாம் என சுசி திட்டமிட, காந்தி வார்தா வரவேண்டும் என்று தந்தி அடிக்கிறார். பா போய்வரச் சொன்னாலும், அவரது உடல்நிலையைக் கணக்கிலெடுத்து, வார்தா வரமுடியாது என்று காந்திக்கு கடிதம் எழுதிவிட்டு, பா வுடனே தங்கிவிடுகிறார். சில நாட்கள் கழித்து, உடல் நலம் சீரானதும் வார்தாவிற்குப் போகிறார் பா.
கேள்வியும் உரையாடலும்
வாசகர் 1: எதற்காக இந்த நூல் எழுதப்பட்டது என்ற அடிப்படைக் கேள்வி எழும்புகிறது. காந்தியின் முன்னுரையே ஏமாற்றத்தை அளிக்கிறது. காந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் தான் சுசி இந்நூலை எழுதுகிறார். பா பிடிவாதக்காரி என்றும், இருந்தாலும் தன் பொதுச் சேவையில் பங்கெடுக்க, தான் சொன்ன பிரம்மச்சாரியத்தை அவர் கடைப்பிடித்தார் என்றும் காந்தி முன்னுரையில் எழுதியிருப்பது எனக்கு ஆச்சரியம் கொடுக்கிறது.
வாசகர் 2: முதுமையடைந்த ஒருவரை காந்தி தனியாக ரயிலில் வெகு தூரம் பயணம் செய்ய வைத்திருப்பது சுசிக்கே சரியானதாகப் படவில்லை. காந்தி, தன் மனைவி மேல் அக்கறையோடு இருந்தாரா என்ற கேள்வி எழும்புவதற்கும், இல்லை என்று சந்தேகப்படுவதற்கும் வழி கோலுகிறது.
1942. சுசி டில்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் ஆய்வேடு எழுதியபடி பதிவாளராக வேலை செய்து வருகிறார். பம்பாயில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு. ஏகாதிபத்திய அரசு இந்தியாவிற்கு விடுதலைத் தரவேண்டும் என்ற தீர்மானம். காந்தி கைது. பிர்லா மாளிகையில் பா இருக்கிறார். அன்று மாலை சிவாஜி பூங்காவில் காந்தி பேசுவதாக இருந்தது. அவர் கைது செய்யப்பட்டதால் பா பேசுவதாக ஏற்பாடு. பா உட்பட எல்லோரும் கைது.
**************
மூன்றாம் பகுதி
சிறை வாழ்க்கை
பாவின் சிறை வாழ்க்கையும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும்
சிறை. பாவுக்கு இரவு முழுக்க வயிற்றுப்போக்கு. அவருக்கு சிறப்பு உணவு கொடுக்க சிறை நிர்வாகம் மறுத்துவிடுகிறது. சுசி மிகவும் வருத்தப்படுகிறார். சிறப்பு உணவோ, மருந்தோ வேண்டுமென்றால் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார்கள். பாவிடம் சுசியிடமும் பணம் இல்லை. வெளியில் யாருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முடியாது என்றும் சொல்லிவிடுகிறார்கள். சிறையில் அவர்கள் அறை துர்நாற்றம் அடிக்கிறது. பாவுக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு. அதோடு காந்தியின் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுமா என்கிற கவலையும் சேர்ந்து அவரை சோர்வடையவைத்தது. சிதல்தாஸ் என்கிற காவல் அதிகாரி பணம் (ரூ.5) கொடுத்து உதவுகிறார். இரண்டாடுகளுக்குப் பின்பு பம்பாயில் அவரைப் பார்க்கும் பொழுது அந்த ஐந்து ரூபாயை சுசி, சிதல்தாஸூக்கு திருப்பிக் கொடுக்கிறார். ஆனால் அவர் அதை வாங்கிக் கொள்ளவில்லை. அதை ஹரிஜன நலநிதிக்கு சுசி அளித்துவிடுகிறார். இருவரையும் விடுதலை செய்து பம்பாய் ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து, ரயிலில் பூனா செல்ல அமர வைத்திருக்கிறார்கள். ரயில் நிலையத்தில் எல்லாம் வழக்கம் போல நடந்துக்கொண்டிருக்கிறது. விடுதலைப் போராட்டம் பற்றி யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. பாவுக்கு அது கவலையாக இருக்கிறது. தன் கணவரின் முயற்சி பாழாகிவிடுமோ என்று கவலைப்படுகிறார். ரயில் பூனாவுக்குச் செல்கிறது.
கேள்வியும் உரையாடலும்
வாசகர் 1: எல்லாப் போராட்டக் களத்திலும் இது இயல்பாக நடப்பது தான். கொள்கைப் பிடிப்போடு ஒரு தலைவர் இருப்பார். அவரைப் பின்பற்றித் தொண்டர்கள் பலர் இருப்பர். இதில் எதிலும் சம்பந்தப்படாமல் பொது மக்களின் வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கும். ஆனால் பாவுக்கு இது புரியவில்லை.
காந்தியின் சிடுமூஞ்சித்தனம்
பாவையும் சுசியையும் ஆகாகான் மாளிகையில் உள்ள சிறைமுகாமுக்கு கொண்டு வருகிறார்கள். அங்கே தான் காந்தியை சிறைவைத்திருக்கிறார்கள். பா’வைப் பார்த்தவுடன் ‘காந்தியுடன் நான் இருக்கவேண்டும்’ என்று அரசாங்கத்திடம் முறையிட்டு அவர் வந்திருக்கிறாரோ என்று தவறாக நினைத்து பாவிடம் காந்தி சிடுசிடுக்கிறார். அரசாங்கமே இப்படி செய்திருக்கிறது என்று தெரிந்துக்கொண்டு அமைதியானார். பாவின் உடல் நலம் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. அங்கே கொசு மற்றும் பூச்சித் தொல்லை இருந்ததால், பா காந்திக்கு விசிறிக் கொண்டேயிருந்தார்.
ஆகாகான் மாளிகை சிறைமுகாமில் இருந்து கொண்டு காந்தி, பம்பாய் கவர்னர் சர் ரோஜர் லும்லே-க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். தினசரி செய்தித் தாள் வேண்டுமென்றும், சர்தார் வல்லபாய் பட்டேல் தன்னோடு தங்க வேண்டும் என்றும், அவருக்கு உதவியாக பட்டேலின் மகள் மணிபென் இருக்கவேண்டும் என்றும் எழுதுகிறார். பட்டால் வந்தால் சிரித்துப் பேசி காந்தியை உற்சாகமாக வைத்திருப்பார் என்று பாவும் சுசியும் நினைத்தார்கள். பாவின் உடல் நிலையின் இன்னும் முன்னேற்றம் வந்தது.
மகாதேவ் தேசாய் மரணம்
சரோஜினி நாயுடுவும் அந்தச் சிறையில் இருந்தார். பா நாயுடுவைப் பார்க்க அவரது அறைக்குச் சென்றார். மகாதேவ தேசாய் அவர் கூட இருந்தார். காலை நடைக்குப் பிறகு காந்திக்கு சுசி மசாஜ் செய்து கொண்டு வேறு ஓர் அறையில் இருந்தார். அப்பொழுது சிறைத்துறையின் உயர் அதிகாரியான கர்னல் பண்டாரி சிறைக்கு வந்தார். அவர் நாயுடுவின் அறைக்குச் சென்றார். எல்லோரும் சிரித்துப் பேசுவது வேறு அறையில் இருந்து சுசிக்கும் காந்திக்கும் கேட்டது. திடீரென பேச்சு சத்தம் நின்று, சுசியைக் கூப்பிட்டார்கள். சுசி ஓடிச் சென்று பார்க்கும் போது, தேசாயிக்கு வலிப்பு வந்து, மூட்டுகள் அதிர்ந்து கோணலாயின. காந்தி வந்தார். தேசாயின் மூச்சு நின்றது. மகாதேவ் தேசாயின் இறுதி ஊர்வலத்தைப் பார்க்க பா விரும்பினார். அந்த மாளிகையில் ஓர் ஓரத்தில் அவரை அடக்கம் செய்தார்கள். அவர் சமாதியை ஒரு கோயிலாக நினைத்து வணங்கினார் பா.
பாவின் கற்றலும் எளிமையும்
எதிர்பாரா மரணங்கள் கவலையைக் கொடுக்கும். சிறைச்சாலையில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதை மறக்கடிக்க காந்தி தான் எப்பொழுதும் பயன்படுத்தும் ‘கால அட்டவணை’ப் பழக்கத்தை பாவுக்கும் சுசிக்கும் கொடுத்தார். அவர்களுக்காக கால அட்டவணைகளைத் தயாரித்தார். குஜராத்தி, கீதை, நிலவியல், வரலாறு எனப் பாடங்களை எடுத்தார். அப்பொழுது பாவுக்கு 74 வயது. இராட்டை சுற்றிக் கொண்டே பஞ்சாபில் ஓடும் ஆறுகளின் பெயர்களை எழுதி மனப்பாடம் செய்துக்கொண்டிருந்தார். அடுத்த நாள் காந்தி கேட்கும்போது அவரால் சரியாக எல்லாப் பெயர்களையும் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து கற்றலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். சரோஜினி நாயுடுவும் அங்கு இருந்தார். காந்தியும் பாவும் இணைந்து சில பாடல்களைப் பாடும் போது நாயுடு கிண்டல் செய்வார். எப்பொழுதும் மிகக் குறைந்த உடைமைகளோடு இருத்தல் என்னும் இலட்சியத்தோடு இருந்தார்.
பாவின் மதப் பற்று
பாவுக்கு மதம் சம்பந்தப்பட்ட நூல்களைப் படிப்பது பிடிக்கும். துளசி தாசர் இராமயணத்தைப் படிக்கும் போது நீண்ட விவரணைகள் வரும் போது, ‘இதெல்லாம் நடந்திருக்குமா?....துளசி தாசருக்கு நிறைய நேரம் இருந்திருக்கிறது இப்படி எல்லாம் எழுத’ என்று சொல்வார். பாகவத புராணத்தை தொடர்ந்து ஆறு நாட்கள் சுசி அவருக்குப் படித்துக் காண்பி்த்திருக்கிறார். ஏழாவது நாள் போக வில்லை. அதைப் பா கண்டு கொள்ள மாட்டார் என்று சுசி நினைப்பார். அதைப் போய் அவரிடம் விளக்கவுமில்லை. அன்றிலிருந்து சுசியின் அண்ணன் படித்துக் காண்பிக்கிறார். பிறகு யோசிக்கும் போது இப்படி சுசி எழுதுகிறார்: நாம் அனைவருமே கணங்களின் உயிரனங்கள் என்கிற தங்க விதியை மறந்து விட்டேன். மற்றவர்களுக்கு சேவை செய்ய கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விடக்கூடாது. அப்படி ஒரு முறை தவறிப் போகிற வாய்ப்புகள் பிறகு ஒருபோதும் கிட்டாமலேயே போய்விடும்.
கேள்வியும் உரையாடலும்
வாசகர் 1: “நாம் அனைவருமே கணங்களின் உயிரனங்கள் என்கிற தங்க விதியை மறந்து விட்டேன்.” என்ற சொற்றொடர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பொருள்பொதிந்த சொற்றொடர்.”
இந்தியாவின் இலட்சிய மனைவி
ஆகாகான் மாளிகையில் உள்ள சிறைச்சாலை முகாமில் பாவுக்கு ஏகாதசி எப்பொழுது வரும் என்று தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டார். காந்தி சிறை நிர்வாகத்திடம் காலண்டர் ஒன்று கேட்டார். அது வருவது மாதிரி தெரியவில்லை. அதற்குள் ஒரு காலண்டரையேத் தயாரிக்க காந்தி சொல்லிக்கொடுக்கிறார். அதை வைத்து ஏகாதசியைக் கணித்தார்கள். ஒரு மாதம் கழித்து ஒரு காலண்டர் கொடுத்தார்கள். கணவனுக்குச் சேவை செய்வதே எல்லைவற்றையும் விட மிகப்பெரிய சேவை என நம்பும் இலட்சிய இந்து மனைவியின் அடையாளமாக அவர் திகழ்ந்தார். தினந்தோறும் 300 முதல் 500 சுற்றுகள் ராட்டை சுற்றுவார். அதன் குறியீட்டுப் பொருளையும், ஆக்கபூர்வமான திட்டங்களின் முக்கியத்துவத்தையும் அவர் புரிந்துக் கொண்டிருந்தார்.
பாவின் சநாதனத்தனம்
பாவால் தீண்டாமை உணர்விலிருந்து முற்றிலுமாக விடுபட இயலவில்லை என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டாலும், சுசி அப்படி உணரவில்லை. நம் அனைவரையும் கடவுளே பிறக்க வைத்தார். இதில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று வேறுபாடு எங்கிருந்து வந்தது? என்று பா கேட்பார். இருந்தாலும் சில கொள்கைகளிலிருந்து பாவால் வெளியே வர முடியவில்லை. எடுத்துக்காட்டு. ஆகாகான் மாளிகை முகாமில் ஒரு பிராமண சிப்பாய் இருந்தார். அவருக்கு பாலோ, பழமோ கொடுத்துக் கொண்டே இருப்பார். மற்ற சிப்பாய்கள் பெரிய அதிகாரியிடம் முறையிட்டு, அவர் தடுத்த போதும், என் பங்கிலிருந்து தானே அந்தப் பிராமணருக்குக் கொடுக்கிறேன் என்று சொல்வார். சேவாகிராமில் ஹரிஜன வேலைக்காரர்களை தன் குடும்ப உறுப்பினர்களைப் போலவே நடத்தினார். சிறையில் இருந்த இஸ்லாமிய சிப்பாய்களிடமும் நன்றாகவேப் பழகினார். வரலாற்றில் இஸ்லாமியர்கள் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களைப் படிக்கும் போது வருத்தப்படுவார்.
கேள்வியும் உரையாடலும்
வாசகர் 1: இந்த அத்தியாயத்தைப் படிக்கும் போது எனக்குக் கோபம் வந்தது. பல சிப்பாய்கள் இருக்கும் போது, பிராமண சிப்பாயிக்கும் மட்டும் பா பழமோ பாலோ கொடுப்பது ஏன்? கணவரும் சில நேரம் பாவும் பேசுவது சமத்துவம். ஆனால் நடத்தையில் உயர்வு தாழ்வு காண்பிப்பது எவ்வளவு தூரம் நியாயம்?
பாவின் கொள்கைத் தெளிவின்மை
தேசாயின் மரணத்திற்குப் பிறகு பா மிகவும் தளர்ந்துப் போய்விட்டார். ‘ஆங்கிலேயர்கள் மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கத்தைக் கொண்டுள்ளார்கள். அவர்களை எதிர்க்க வேண்டாம் என்று கூறினேன். நம் நாடு பெரிய நாடு அவர்கள் இருந்து விட்டுப் போகட்டுமே. அவர்களை ஏன் வெளியே போ என்கிறீர்கள்’ என்ற காந்தியிடம் பா கேட்கிறார். ‘என்னை மன்னிப்புக்கடிதம் எழுதச் சொல்கிறாயா?’ என்று காந்தி கேட்டு விட்டு, ‘நானும் அதைத்தான் கூறுகிறேன். அவர்கள் இருக்கட்டும். ஆனால் ஆட்சியாளராக அல்ல. சகோதரர்களாக’ என்று காந்தி பதிலளிக்கிறார். தேசாயின் மரணத்திற்குப் பிறகு தானும் சிறையிலேயே இறக்க வாய்ப்பிருப்பதாகவும், இளம் வயது பிள்ளைகளெல்லாம் சிறைப்பட்டிருக்கிறார்கள் என்றும் பா வருத்தப்படுகிறார்.
மகாதேவ் தேசாயின் மரணத்திற்குப் பிறகு காந்தி அரசாங்கத்தின் கொடுமைகளையும், மக்கள் படும் கஷ்டங்களையும் பற்றி கவலைப்படத் துவங்கினார். சிறைக்குள்ளிருந்து எப்படி ஆறுதல் கொடுக்க முடியும்? வைசிராய்க்கு கடிதம் எழுதினார். எங்கே, உண்ணாவிரதம் செய்யத் தொடங்கப் போகிறேன் என்று எழுதி விடுவாரோ என்று பா நினைத்து அது மட்டும் வேண்டாம் என்று கூறினார். காந்தி சிரித்தார். ஏனென்றால் அதைத் தான் எழுதியிருந்தார். எல்லோரும் சொன்னதைக் கேட்டு ‘உண்ணாவிரதம்’ என்பதை நீக்கிவிட்டார். ஆனால் அரசாங்கம் அதிகாரப்போதையில் திளைத்திருந்தது. ஆகவே காந்தியின் கடிதங்களை அது கண்டுகொள்ளவேயில்லை. காந்தி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். பாவால் அதைத் தாங்க முடியாது என்று மீரா பென், சரோஜினி நாயுடு உட்பட எல்லோரும் நினைத்த போது, பா ‘அவரால் வேறு எப்படி தன் எதிர்ப்பைக் காண்பிக்க முடியும்’ என்று பதிலுரைத்தார். உண்ணாவிரதம் இருப்பது கிட்டத்தட்ட முடிவாயிற்று.
கேள்வியும் உரையாடலும்
வாசகர் 1: பாவின் சநாதன குணம் மறுபடி தீவிரமாக வெளிப்படுகிறது. தேசாய் ஒரு பிராமணர் என்றும், அவரை விடுதலைப் போராட்டத்தில் இழுத்து சிறையில் மரணம் வரைக் கொண்டு போனது நமது பாவம். ஒரு பிராமணரை இப்படி இறக்க வைத்திருக்கக் கூடாது என்று பா அழுது புலம்புகிறார்.
பாவின் உடல் நலக் குறைவும் பிடிவாதமும்
1943. பிப்ரவரி. காந்தி 21 நாள் உண்ணாவிரதம். 1943. மார்ச். பாவிற்கு வலிப்பு நோய். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வலிப்பு. பிறகு நுரையீரல் நிமோனியா. குடல் நோய். பாவை கவனித்துக் கொள்ள மனு வந்தாள். சிறைவாசத்தின் போது டென்னிகாய்ட், கேரம் விளையாடுகிறார்கள். பிங்பாங் ஆட்டம் விளையாடுகிறார்கள். பாவுக்கு நன்கு சமைக்கத் தெரியும். ஒரு முறை பா உடல் நலம் குன்றி இருக்கும் போது, நெய்யுடன் சேர்த்து கத்திரிக்காய் உணவைக் கேட்கிறார். மற்றவர்கள் வேண்டாம் என்று சொல்ல விடயம் காந்திக்குச் செல்கிறது. காந்தி, ‘உன் ஆரோக்கியத்துக்காக உன் நாவை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்கிறார். அவர் கோபித்துக்கொண்டு சமைத்த உணவை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லி, வெறும் பழம், பால், தேன், வெந்நீர் என்று சாப்பிடுகிறார். காந்தியிடம் அதை முறையிட, ‘அது அவருக்கு நல்லது தான்’ என்று கூறி விடுகிறார்.
ஒரு மிடறு விளக்கெண்ணெய் வேண்டுமென பா கேட்கிறார். இறப்பதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு. சுசிலா மறுக்க, காந்தி மறுக்க, டாக்டர் கில்டர் மறுக்க, கெய்சுவால் காந்தி மறுக்க, அவர் மனமுடைகிறார். மறுபடியும் சுசியிடம் பிடிவாதமாகக் கேட்க, விளக்கெண்ணையுடன் சேர்த்து திரவ ஃபேரபின்னைக் கொடுக்கிறார்கள்.
சாதாரண ஆட்கள் இந்த வலிமையான அரசாங்கத்தை என்ன செய்து விட முடியும்? சிறைக்குள் இருப்பவர்கள் யாரும் யாருக்கும் கடிதம் எழுதக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துவிட்டது. பிறகு சில நாட்களுக்குப் பிறகு அரசாங்க கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு கடிதம் எழுதலாம் என்று சொன்னது. எடுத்துக்காட்டாக, தாங்கள் இருக்கும் இடத்தைச் சொல்லக்கூடாது. அரசியல் விடயங்கள் இருக்கக் கூடாது. ஆனால் காந்தி அதை ஏற்கவில்லை. அதனால் யாரும் கடிதம் எழுத வேண்டாம் என்று கூறி விட்டார். அதனால் சுசி தன் தாயிக்கு கடிதம் எழுதவில்லை. இது குறித்து பா காந்தியிடம் முறையிடுகிறார். சுசிக்காக பாவே அவருடைய குடும்பத்தினர்க்கு கடிதம் எழுதுகிறார்.
1943. அக்டோபர் இரண்டாம் நாள். காந்தி சிறையில் கொண்டாடப் போகும் இரண்டாவது பிறந்த நாள். சுசியின் இரண்டாவது அண்ணனின் மனைவிக்கு மகள் பிறந்து இறந்து போகிறாள். பிள்ளைப் பிறக்கப் போகும் செய்தி தாங்கிய தந்தியும், பிள்ளை இறந்த செய்தி தாங்கிய செய்தியும், அண்ணனின் கடிதமும் பிள்ளை இறந்து பத்து நாட்களுக்குப் பிறகு சுசிக்கு கிடைக்கிறது. சுசி, அவளது தாயைப் போய் பார்த்து வர பரோல் கேட்டு கிடைக்கவில்லை. அவ்வளவு அராஜகம்!
பா உடல் நலம் வெகுவாகக் குன்றிப் போகிறார். ஆங்கில மருத்துவத்தை நிறுத்தி விட்டு ஆயூர்வேத மருந்துகளுக்கு மாறுகிறார்கள். லாகூரிலிருந்து வைத்தியராஜ் சிவசர்மா வருகிறார். இருந்தாலும் சரியாகவில்லை. முகாமிற்குள் வைத்தியர் இருக்கக்கூடாது எனச் சொல்ல, சிவசர்மா வாயிலுக்கு வெளியே காரில் படுத்துக்கொள்கிறார். இரவில் வைத்தியரை அழைக்க வேண்டுமென்றால், பல பேரை எழுப்ப வேண்டியிருக்கிறது. மூன்று நாளைக்குப் பிறகு, காந்தி கடிதம் எழுதிய பிறகு, உள்ளே தங்க அனுமதிக்கப்படுகிறார். பாவின் மகன்கள் பார்க்க வருகிறார்கள். வசதியான மகன் (தேவதாஸ்) எப்பொழுது வேண்டுமென்றாலும் வந்து பார்க்கலாம். வசதி குறைந்த மகன் (ஹரிலால்) வாரத்திற்கு ஒரு முறைதான் வரலாம் என்பதை பா வெறுக்கிறார்.
கேள்வியும் உரையாடலும்
வாசகர் 1: காந்திக்கு ஆங்கில மருத்துவத்தின் மேல் இருக்கும் மரியாதையை விட ஆயூர்வேத வைத்தியத்தின் மேல் மரியாதை இருக்கிறது. இயற்கை வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று காந்தி நினைத்துத்தான் கத்திரிக்காய் விடயத்திலும், விளக்கெண்ணய் விடயத்திலும் கறாராக இருந்திருக்கிறார். இது அவருடைய கொள்கைப் பிடிப்புக்கு ஒரு சிறந்து எடுத்துக்காட்டு.
பா வின் கடைசிக் கட்டம்
1943. பிப்ரவரி 19-20. இரவு முழுவதும் ஆக்ஸீஜன் கொடுக்கப்படுகிறது. மருந்துகள் நிறுத்தப்படுகின்றன. பஜனை மட்டும் தொடர்ந்து பாடப்படுகிறது. இனி உணவும் வேண்டாம். மருந்தும் வேண்டாம். தேனும் வெந்நீரும் போதும். ராம நாமம் போதும். என்று காந்தியடிகள் கூறிவிட்டார். காந்தி பாவின் படுக்கை அருகிலேயே அதிக நேரம் செலவிடுகிறார். கீதையின் வரிகள் வாசிக்கப்படுகின்றன. நெஞ்சு வலி வருகிறது. அதற்கு, காந்தியின் அனுமதியுடன் சுசி மருந்து கொடுக்கிறார்.
கேள்வியும் உரையாடலும்
வாசகர் 1: காந்தி இந்து மதத்தின் மீதும், சனாதனக் கொள்கை மீதும் வைத்திருந்த அதீத பற்று எல்லாக் காலத்திலும் வெளிப்பட்டது போல, மருந்து வேண்டாம் ராம நாமம் போதும் என்றும், கீதையை தொடர்ந்து வாசியுங்கள் அவர் அதைக் கேட்கட்டும் என்றும் சொல்வது மூலம் தெள்ளத் தெளிவாகிறது.
வாசகர் 2: காந்தி மீதும் கஸ்தூர்பா மீதும் வைத்திருந்த சில நல்ல அபிப்ராயங்கள் கூட இப்பொழுது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவர்கள் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் சற்று சிதைந்தே போகிறது.
1943. பிப்ரவரி 21. பாவின் படுக்கை அருகே காந்தி அமரும் போது பா காந்தியின் மேல் சாய்ந்துக் கொள்வார். டாக்டர் கில்டர், ‘நிமோனியா தொற்று நோய். காந்திக்கும் பரவும் அபாயம் இருக்கிறது’ என்றார். ஆனால் காந்தியிடம் யார் சொல்வது? வாயிலிருந்து வரும் சளியைத் துடைக்க, சிறு துணிகள் பயன்படுத்தப்பட்டன. அதை சில நேரம் காந்தி அலசி காயப் போடுவார். காந்திக்கு இயற்கை வைத்திய முறையில் ஆர்வம் உண்டு. ஹைட்ரோபதி முறையில் காலிலும் இடுப்பிலும் தண்ணீரையும் வெந்நீரையும் மாற்றி மாற்றி ஊற்றுவார். பா அவரது வேலையச் செய்யச் சொன்னாலும் கேட்காமல் இதைச் செய்வார். ரத்தத்தில் யூரியாவின் அளவு கூடிக்கொண்டே போனது. மனக்குழப்பத்தின் அடையாளங்கள் தென்பட்டன.
பிப்ரவரி 22. அவரது அறையிலேயே இருந்த போதும், ‘என் அறைக்கு அழைத்துப்போ’ என்று சொல்லும் அளவுக்கு மனக்குழப்பம் வந்துவிட்டது. வாயைக் கூட கழுவில்லை. விழுங்குவதில் சிரமம். தேவதாஸ் கொண்டு வந்திருந்த கங்கை நீரில் துளசி போட்டு கொஞ்சம் பருகக் கொடுத்தார் காந்தி. இயற்கையாக ராமநாமத்தைச் சொல்லிக்கொண்டே இறக்கலாம் என்பது காந்தியின் எண்ணம். உயிரோடு இருக்கும் போது பென்சிலின் ஊசி போட்டுக் காப்பாற்ற முயற்சித்தால் என்ன என்பது மற்ற பலருடைய எண்ணம். மூன்று மணிக்கொரு முறை ஊசி வழியாக பென்சிலின் போடவேண்டும் என்று டாக்டர் கில்டர் மூலம் தெரிந்துக் கொண்டு அதை வேண்டாம் என்று காந்திக் கூறிவிட்டார். பேரன் கனு காந்தியையும் பாவையும் ஒரு நிழற்படம் எடுக்க ஆசைப்பட்டான். காந்தி வேண்டாம் என்று மறுத்துவிட்டார். சற்று நேரத்தில் காந்தியின் மடியில் பாவின் உயிர் பிரிந்தது. இந்து மத முறைப்படி இறந்தவர்களின் உடலை வடக்குத் தெற்காக மீராபென் மாற்றி வைத்தார். சுசிலா ஒரு சிலையைப் போல நின்றார். பிறகு, காந்தி, மனு, சந்தோக்பென், சுசிலா நால்வரும் பாவைக் குளிப்பாட்டுகிறார்கள். சிறைக் கண்காணிப்பாளர் தனக்காக கொஞ்சம் சந்தனக்கட்டைகள் வைத்திருப்பதாகவும் அதை உடல் தகனம் செய்யத் தயாராயிருப்பதாகவும் சொல்லிக் கொடுத்தார். பாவின் உடல் அதில் தகனம் செய்யப்பட்டது. பின்னர் தெரிந்துக்கொண்டது, உண்ணாவிரதத்தில் ஒரு வேளை காந்தி இறந்தால் அவரது தகனத்துக்காக வாங்கி வைப்பட்ட சந்தனக்கட்டைகளாம் அவைகள். மகேதாவ் தேசாய் கல்லறைக்கு அருகில் பாவின் கல்லறை. பலரும் அஞ்சலி செலுத்தினர்.
நூல் முற்றிற்று
******
பொதுவான கேள்விகளும் உரையாடலும்
வாசகர் 1: இந்த நூலை எதற்காக இந்த வாசகர் வட்டம் தேர்ந்தெடுத்தது என்று எனக்குள் கேள்வி எழும்பியது. “Worthless”.
வாசகர் 2: நாம் நன்கு தெரிந்தவரின் வேறு சில பக்கங்களையும் தெரிந்துக் கொள்ள இப்படிப்பட்ட நூற்கள் பயன்பெறும்.
வாசகர் 3: வழக்கமாக நான் முன்னுரைகளைப் படிப்பதில்லை. ஏனென்றால் முழு விபரத்தையும் முன்கூட்டியே அறிய எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் இந்த நூலுக்கு காந்தி எழுதிய முன்னுரையைப் படித்தேன். அதுவே எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
வாசகர் 4: ஒரு தலைவர் இருந்தால், அவருடைய குடும்பத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அது கேள்விக்கேட்கப் படவேண்டிய பழக்கம். அதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். நமக்குத் தெரிந்த ஒருவர் நூல் எழுதிவிட்டார் என்பதற்காக, அதை உயர்த்திப் பிடிப்பது என்பது நல்ல பழக்கமா? எதையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் பழக்கம் தானே சிறந்தது.
வாசகர் 5: காந்தி என்ற தலைவர் எப்படி உருவானார்? ஆங்கிலேயர்களுக்குக் காந்தியோடு பேசுவது எளிதாக இருந்தது. தீவிரவாத பக்கம் சாராமல், மிதவாதியாக இருந்தது ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக இருந்தது. முகம் கொடுக்க முடியாத ஒரு தலைவர் உருவாகிவிடக்கூடாது என்று ஆங்கிலேய அரசாங்கம் பல முனைப்புகளைச் செய்தது. இருந்தாலும் காந்தியின் மனபலம் உறுதியாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளால் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவை உதறிவிட்டுப் போகவேண்டியிருந்தது.
வாசகர் 6: முதல் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடையே தான் காந்தி மற்றும் கஸ்தூர்பா வாழ்க்கை சொல்லப்படுகிறது. அதே காலக்கட்டத்தில் தான் ஜெர்மானியர்களுக்கும் யூதர்களுக்குமான போராட்டம் நடக்கிறது. ஆனால் அதைப்பற்றி நிறையச் சொல்லப்படவில்லை. ஏன்? ஆங்கிலேய அரசுக்கு அதைப்பற்றிய செய்தி தெரியும். சுபாஷ் சந்திர போஸ் தான் நாஜிக்களோடு கைகோர்க்க ஜெர்மனி வரைப் போகிறார் என்ற ஒற்றை செய்தி தான் தெரியும். பல செய்திகள் இப்படித்தான் இருட்டடிப்பு செய்யப் பட்டிருக்கிறது.
**********
ஒரு வாசகர் நேரடி உரையாடலின் நீட்சியாக, “Kasturba: The unheard voice behind Gandh” என்ற ஓர் ஆங்கிலக்கட்டுரையை புலனத்தில் அனுப்பி வைத்தார். அந்தக் கட்டுரையில், பாரம்பரிய இந்துப் பெண்ணாக வளர்ந்த கஸ்தூர்பா தன் கணவனுக்கு தன் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணிப்புச் செய்தவராக வாழ்ந்தார் என்றும் அவரின் ஆரம்பகால திருமண வாழ்க்கையில் காந்தியின் பாரம்பரிய ஆணாதிக்க நடத்தைக் காரணமாக அவர்களது உறவில் பல சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் குறிப்பிடப்படுகிறது. சொல்லப் போனால், அவரது கர்ப்பக் காலங்களில் கூட காந்தியின் வெளி வேலைகள் நிமித்தம், கஸ்தூர்பா புறக்கணிப்புக்கு உள்ளானார் என்றும் இருந்தாலும் தன் கணவனுக்கு விசுவாசமாகவே இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
அந்தக் கட்டுரை, இப்படி அவரது தியாகத்தால் தான் காந்தி தனது மற்றப் பணிகளில் கவனம் செலுத்த முடிந்தது என்றும், தான் மிகவும் புறக்கணிக்கப்பட்டதாக கஸ்தூர்பா உணர்ந்தாலும், காந்தியின் பிரம்மச்சரிய உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார் என்று குறிப்பிடப்படுகிறது. கஸ்தூர்பாவின் கதை ஒரு தலைவர் உருவாவதற்கு எப்படி சான்றாகிறது என்பதற்கு சாட்சி என்று நிறைவு பெறுகிறது.
*******
ஒரு வாசகர், வாட்ஸ்அப் மூலம் ஓர் இணைப்பைக் கொடுத்து உரையாடலைத் துவக்கி வைத்தார். அவர் கருத்து இது தான்: காந்தியும் கஸ்தூர்பாவும் வைசிய சமூகத்தில் பிறந்தாலும், வைதீக அல்லது வர்ணாஸ்ரம, அதாவது சாதியத்தை உள்ளடக்கிய பிராமணீய முறைப்படி வளர்ந்தவர்கள். பகவத் கீதை உட்பட்ட மகாபாரத, ராமாயணக் கதைகளை அவர்கள் தொடர்ந்து படிப்பதாக இந்த நூலில் சொல்லப்படுகிறது. மகாதேவ் தேசாய் சிறையில் இறந்த பிறகு, பிராமணனைக் கொன்றால் பெரும்பாவம் நம்மைத் தொடரும் என்று கஸ்தூரிபா கூறுகிறார். அதற்கு மனுஸ்மிருதி 11:126ஐ மேற்கோள் காட்டுகிறார். [The Manusmriti regards the murder of a Brahmin to be the greatest of sins, and the highest of the mahapatakas (mortal sins)]. பிராமண சிப்பாய் மேல் கஸ்தூர்பா தனிக்கவனம் செலுத்துகிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
இன்று நடக்கும் அரசியல் நடப்புகளுக்கு காந்தியும் சில துவக்க வேலைகளைச் செய்திருக்கிறார் என்ற கற்பனைக் காந்திக்கும் கற்பனை பகத்சிங்குக்கும் நடந்த நையாண்டி உரையாடலில் வரும் செய்தியை கவனிக்கச் சொல்கிறார். அந்த உரையாடல், செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் மேலோங்கி வருகிற இக்காலக்கட்டத்தில் எல்லோரும் இணைந்து சமத்துவ சமூகத்தை உருவாக்கப் பாடுபடவேண்டும் என்ற கருத்தோடு நிறைவு பெறுவதை கவனிக்கச் சொல்கிறார்.
********
நான்காம் பகுதி
என் சொந்த அனுபவங்களும் சிந்தனைகளும்
மஹாராஷ்டிரா - காந்தி சேவாகிராம் ஆசிரமத்திற்கு போயிருந்த போது…
மஹாராஷ்டிரா வார்தாவில் உள்ள சேவா கிராமத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்திற்கு, கிட்டத்தட்ட 40, 50 சமூக செயற்பாட்டாளர்களோடு நானும் சென்றிருந்தேன். அது நடந்தது 1982ம் வருடம். ஓடு போட்ட குடில்கள். அங்கங்கே நிழல் தரும் மரங்கள். ‘பாபா குடி’ என்று எழுதியிருந்த ஒரு குடிலுக்குப் போனோம். 1936லிருந்து 1940 வரை இந்த ஓட்டு வீட்டில் தான் காந்தி இருந்திருக்கிறார். ‘பா குடி’ என்று ஒரு வீடு தனியாக இருந்தது. அது கஸ்தூர்பா தங்கியிருந்த வீடு. விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்கு பல கட்டங்கள் இருந்தன. தியான குடில் தனியாக இருந்தது. ஜெபம் செய்ய ஒரு மைதானம் இருந்தது. காந்தி வீட்டில் அவர் சாய்ந்து உட்காரவும், படுக்கவும் தோதுவாக ஒரு படுக்கை இருந்தது. பக்கத்திலேயே அவர் பயன்படுத்திய கட்டை மேசை, இத்யாதி பொருட்கள் இருந்தன. அவர் காலடி பட்ட இடம், அவர் மூச்சுக் காற்று சுழன்ற இடம், பல தலைவர்கள் அவரைச் சந்தித்த இடம் என நினைக்கும் போது, அந்த வயதில் உடம்பு புல்லரித்தது. கஸ்தூர்பா-வைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்லப்படவில்லை. அங்கு தங்கியிருந்த ஒருவர் அந்த இடத்தைச் சுற்றிக் காண்பிக்கும் போது பல விடயங்கள் சொன்னார்.
“காந்தி, ஒரு தினசரி காலண்டர் பக்கத்தைக் கிழித்து, டியர் பிர்லா எங்களுக்கு இது வேண்டும் என்றோ, எங்களுக்கு இவ்வளவு வேண்டும் என்றோ எழுதி அனுப்பினார் என்றால், கோஷ்லா பிர்லா உடனே அனுப்பிவைப்பார். பிர்லா குடும்பம் இல்லையென்றால் காந்தியின் பல சத்தியாகிரகப் போராட்டங்கள் வெற்றி பெற்றிருக்காது” என்றார். அவர் ஒரு குச்சியைக் காண்பித்து, “இது என்ன கம்பு எனத் தெரிகிறதா?” என்றுக் கேட்டார். “தெரியவில்லை” என்றோம். “துவக்கத்தில் ஆசிரமத்தில் பல பாம்புகள் வரும். ஆனால் அந்தப் பாம்புகளை அடித்துக் கொல்லக்கூடாது என்று காந்தி சொல்லிவிடுவார். இந்தக் கம்பு வைத்துப் பிடித்து வளைத்து சாக்கில் போட்டு தூரப் போய் விடச் சொல்லிவிடுவார்” என்று சொன்னார். “பரவாயில்லை. பிரச்சாரம் செய்கிற அஹிம்சைக் கொள்கையை தன் வாழ்க்கையிலும் பெருமளவு கடைப்பிடிக்க முயற்சித்திருக்கிறார்” என்று நினைத்துக்கொண்டேன்.
ஒரிஸ்ஸா - பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு போயிருந்த போது….
புவனேஷ்வருக்கு போய்ச் சேர்ந்தேன். 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி. டில்லியில் உள்ள காரித்தாஸ் இந்தியா என்கிற சமூக மேம்பாட்டு நிறுவனம் என்னை அழைத்திருந்தார்கள். ஒரிஸ்ஸாவில் பழங்குடி மக்களிடையே சமூக மாற்றத்திற்காகப் பணி புரியும் 42 சமூக சேவகர்களுக்கு தகவல் தொடர்பு பயிற்சி கொடுக்கத்தான் என்னை அழைத்திருந்தார்கள். புவனேஷ்வரில் உள்ள லொயோலா பள்ளியில் பயிற்சி. பயிற்சியின் இடையில் ஊர் சுற்றிப் பார்க்க என்னை அழைத்துச் சென்றார்கள்.
தயா ஆற்றங்கரையில், கலிங்கப் போருக்குப் பிறகு அசோக மன்னனை புத்தர் சந்தித்து போர் குறித்தும் கொல்லாமை குறித்தும் பேசிய ஓர் இடத்தில் இப்பொழுது ஒரு ஸ்தூபம் கட்டியுள்ளார்கள். அருகிலேயே சில பாறைகளில் அசோகர் காலத்து புத்த நெறிமுறைகள் பொறிக்கப்பட்டிருந்தது. அசோகரும் புத்தரும் கால் வைத்த இடமா? மயிர் கூச்செறிய தயா ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தேன். சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கேள்வி கேட்ட புத்தர் கால்வைத்த அந்த இடத்தைப் பார்த்து விட்டு, இடையில் கோனார்க் சூரியக் கோயிலைப் பார்த்து விட்டு, பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குப் போனோம். எங்களோடு ஒரு கிறித்துவப் பாதிரியார், நீண்ட வெள்ளை அங்கியோடு வந்திருந்தார். அவரை உள்ளே விடவில்லை. பக்கத்தில் ‘ONLY HINDUS ARE ALLOWED’ என்கிற பலகை இருந்தது. நாங்கள் மட்டும் உள்ளே போய் வந்தோம். பிரம்மாண்டமான கோயில். கட்டுக்கடங்காதக் கூட்டம்.
இந்த நூலில், பாவும் துர்கா பென்னும் பூரி ஜெகந்நாதர் ஆலயத்திற்குப் போய் வழிபடுகிறார்கள். அது ஹரிஜன மக்களுக்கு திறந்துவிடப்படாதக் கோயில். அதனால் காந்தி பாவிடம் கேட்க, பா மன்னிப்புக் கோரினார். இது நடந்தது 1939 ஆம் ஆண்டு. பா தன்னிச்சையாக, அவருக்குப் பிடித்ததை, அவர் நம்பியதை செய்ததை நினைத்து பெருமைப்படுவதா? இல்லை. பட்டியலின மக்கள் நுழையமுடியாத கோயிலுக்குள் போய் வந்த பாவை மன்னிப்புக் கேட்க வைத்த கொள்கை பிடிப்புள்ள காந்தியை நினைத்து பெருமைப்படுவதா? இல்லை. இறைவனுக்கென்று ஒரு கோயில் கட்டி அதில் சமூகத்தின் ஒரு சாராரை உள்ளே அனுமதிக்காத பக்திமான்களை நினைத்து ‘பெருமைப்படுவதா’?
பீகார் - ராஜ்கோட் நகரத்திற்கு போயிருந்த போது….
தமிழக அரசின், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழகத்திலிருந்து, கலைமாமணி கவிஞர் முத்துக்கூத்தன் பொம்மலாட்டக் குழுவையும், மதுரை ஓம் பெரியசாமி கரகாட்டக் குழுவினரையும் அழைத்துக்கொண்டு பீஹார் இயல் இசை நாடக மன்றத்தினரோடு நிகழ்ச்சிகள் நடத்துவதாகத் திட்டம். 1990 ஆம் ஆண்டு. என் வேலை, ஒவ்வொரு இடத்திலும், பொம்மலாட்ட நிகழ்ச்சியில் சொல்லப்படும் கருத்துக்களையும், தமிழ்ப் பாரம்பரியக் கலைகள் பற்றியும் ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லவேண்டும். மாடாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம் என்று பலவகை ஆட்டம் ஆடும் கலைஞர்கள் 15 பேரை மதுரையிலிருந்து அழைத்துக்கொண்டு, ஓம். பெரியசாமி ஐயாவின் மகன்கள் மதுரைவீரனும் அவர் அண்ணனும் வந்திருந்தனர். பொம்மை ஆட்டுபவர், ஆர்மோனியம், தபேலா உட்பட இசைக்குழுவினர், ஒலி, ஒளி, மேடை அமைப்போர் என்று முத்துகூத்தன் ஐயாவின் பொம்மலாட்டக் குழுவினர் 15 பேர் சென்னையிலிருந்து கிளம்பினர். இயல் இசை நாடக மன்றத்திலிருந்து திரு. பாலு மற்றும் ஒருவர். அவர்களோடு நான்.
ஒரு மாதம் சுற்றினோம். பாட்னாவில் நித்ய கலா மந்திர் மண்டபத்திலும், ராஜ்கிரில் டவுன் ஹாலிலும், ஜாம்ஷெட்பூரில் மைக்கேல் ஜான் மண்டபத்திலும், சாய் பாஷாவில் பிள்ளை மண்டபத்திலும், ரான்ஜியில் நெல்சன் ஷக்ரிதி கேந்திராவிலும் மற்றும் முஷாஃபர்பூர், பகல்பூர், வைசாலி, ஹசாரிபா, தன்பத், பிகை, ரூர்கெலா என்று பல இடங்களிலிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிகள் இல்லாத நாளில், நாளந்தா பல்கலைக்கழகம் பார்த்தோம். சுற்றி இரும்பு தாதுவும், நிலக்கரியும் இருக்கிற ரூர்கெலாவில் எஃகு ஆலைப் பார்த்தோம். புத்தரி்ன் போதி மரம் உள்ள கயா நகர் பார்த்தோம்.
அப்பொழுது ஜார்கண்ட், பீஹாரிலிருந்து பிரியாத நேரம். நக்சலைட்டுகள் பற்றியும், சம்பல் பள்ளத்தாக்கு பற்றியும், பூலான் தேவி மற்றும் மான் சிங் பற்றியும் ஓயாமல் தினத்தாள்களில் வந்துக் கொண்டிருந்த நேரம். ரூர்கெலா மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நக்ஸலைட்களின் செல்வாக்குப் பெற்ற பகுதிகள். பூர்வீகக் குடிகளின் வறுமை, நில உரிமை இழப்பு, கனிம சுரண்டல் எல்லாம் அவர்களின் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தன. நாங்கள் கிட்டத்தட்ட 40 பேர் இருந்ததால் எங்களுக்கென்று ஒரு தனி பேருந்தைக் கொடுத்துவிட்டார்கள். ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும் போது, மாலை ஆறு மணிக்கு மேல், எங்கள் பேருந்து உட்பட மற்ற எல்லா பேருந்துகளும் ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் நின்று விடும். இரவு முழுக்க பேருந்திலேயே இருப்போம். காலையில் தான் பயணத்தைத் தொடர்வோம். கவுர் சேனா, ரன்வீர் சேனா போன்ற பல நிலக்கிழாரிய படைகளுக்குப் பயந்து தான் பயணம் செய்துக் கொண்டிருந்தோம்.
இந்த நூலில் தாகூர்கள் சில அரசியல் உரிமைகளை மக்களுக்கு கொடுப்பதாகக் கூறிவிட்டு பின்வாங்கியதை எதி்ர்த்துப் போராட்டம் நடக்கிறது. இது 1938 ஆம் ஆண்டு நடக்கிறது. பர்தோலி சென்று ஒரு மாத காலம் காந்தி இருந்தார். ராஜ்கோட் தாகூர்களைத் எதிர்த்துப் போராட்டம் வலுக்கிறது. பா’வின் ஊர் ராஜ்கோட். பா, சில நண்பர்களோடு சிறையில் அடைக்கப்படுகிறார். பல கடிதங்களை பா எழுதுகிறார். ராஜ்கோட்டில் காந்தி உண்ணாவிரதத்தைத் துவங்குகிறார். சுசி மூலம் அதைக் கேள்விப்பட்ட பா தானும் சிறையில் உண்ணாவிரதம் இருக்கிறார். திடீரென காந்தி உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு, சிறையிலிருந்து பா வந்து இறங்குகிறார். அவரை இறக்கிவிட்டு சிறை வாகனம் திரும்பிவிடுகிறது. சிறைக்கே போகவேண்டும் என்று காந்தி சொல்ல, பா போகிறார். சிறை மூடி இருக்கிறது. சாலையோரமாகவே தங்கி விடுகிறார். காந்தி இது குறித்து கடிதம் எழுத, நண்பர்களோடு பா விடுதலையாகிறார். பா’வின் இந்த போராட்டக் குணத்தை மெச்சத்தான் வேண்டும்.
1938ல் கஸ்தூர்பா மற்றும் காந்தி இருந்த போதும் ஏழை எளிய மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. 1990ல் நாங்கள் பீஹார் சென்ற போதும் நிலமை மாறவில்லை. 2025ல் மாறியதாகத் தெரியவில்லை.
******
References
1. Patel, H.S. (2017). Kasturba: The unheard voice behind Gandhi. International Journal of English Language. Volume V, Issue VII. ISSN:2321-7065.
2. Singh, G. (2025). Gandhi-Bhagat Singh dialogue. Life/Philosophy. Countercourrents.org. Retrieved https://countercurrents.org/2025/06/gandhi-bhagat-singh-dialogue/



Comments