top of page

Kangaroo Islands எனப்படுகிற கங்காரு தீவு



 

இன்று உங்களை ஒரு சொர்க்கத்திற்கு அழைத்துப் போகப் போகிறேன். அது ஒரு காட்டு சொர்க்கம். கரடு முரடான சொர்க்கம். அங்கு நீங்கள் வனவிலங்குகளைப் பார்க்கலாம். உங்கள் கண்களை அகல விரிக்க வைக்கும் சிறு குன்றுகளைப் பார்க்கலாம். வாயைப் பிளக்க வைக்கும் பாறைகளைப் பார்க்கலாம். இந்த இடத்திற்கு ஒரு தடவையாவது போய் வர வேண்டும் என்பது ஒவ்வொரு ஆஸ்திரேலியரின் கனவு இலக்காக இருக்கும். அது ஒரு தீவு. நான் எந்த இடத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்று கண்டுபிடித்து விட்டீர்களா? ஒரு துப்பு தந்தால் நீங்களே கண்டு பிடித்து விடுவீர்கள். அந்தத் தீவில் நிறைய கங்காருக்கள் இருக்கும். ஆமாம்! நீங்கள் நினைப்பது சரி தான். கங்காரு தீவு. ஆஸ்திரேலியாவில் டாஸ்மேனியா மற்றும் மெல்வில் தீவுகளுக்குப் பிறகு பெரிய மூன்றாவது தீவு இந்த கங்காரு தீவு.

 

கங்காரு தீவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கதையைக் கொண்டது. உள்ளூர் மக்கள் கங்காரு தீவை “KI” என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். இந்தக் கங்காரு தீவில் Kaurna, Ngarrindjeri, Narungga போன்ற பூர்விகக் குடிகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறனர். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னரே இந்தத் தீவு அவர்களின் புனித இடமாக திகழ்ந்தது. அந்தப் பூர்விகக்குடி மக்களின் கற்களாலான கருவிகள் நிறைய அங்கு கண்டு பிடிக்கப்படுகின்றன. அது மட்டுமல்ல, shell middens எனப்படுகிற தொல்தளங்கள் நிறைய உள்ளன. அவை பொதுவாக கடற்கரைகள் அல்லது ஆறு, வாய்க்கால் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கின்றன. அவை பூர்வீகக்குடி மக்கள் உணவு மற்றும் முகாம்களின் எச்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. ஆஸ்திரேலிய மெயின் லேண்ட் பூர்வீகக் குடி மக்களின் மொழியில் Karta Pintingga என்றால் இறந்தவர்களின் தீவு, Island of the Dead என்று அழைக்கப்பட்டது. 1800 களின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் வந்த போது அந்தத் தீவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

பிரித்தானிய ஆய்வாளர் Matthew Flinders என்பவர், 1802 ஆம் ஆண்டு, அவரது குழுவினரோடு இந்தத் தீவிற்கு வந்தார். அவர் தன் குழுவினரைப் பார்த்துச் சொன்னார், “இந்தத் தீவில் வந்து இறங்கி விட்டோம். எல்லோரும் நன்கு சாப்பிடுங்கள். நன்கு ஓய்வெடுங்கள்” என்று சொன்னார். அந்தக் குழுவில் ஒருவர், “ Mr. Flinders! ஆனால் நாம் சாப்பிடுவதற்கு இறைச்சி ஒன்றும் இல்லை” என்றார். அதற்கு இன்னொருவர், “வேட்டையாடி வரலாம்” என்றார். Flinders-ம் சரி என்றார். அந்தக் குழுவினர் வேட்டையாடி வந்ததோ கங்காருக்கள் தாம். எங்கு பார்த்தாலும் கங்காருக்கள் தான் அலைந்தன. திரும்பி வந்து Flinders இடம் சொன்னார்கள்: “Mr. Flinders! எங்கு பார்த்தாலும் கங்காருக்கள் தான் ஓடித் திரிகின்றன. நம் விருந்துக்கு அவைகளைத் தான்  வேட்டையாடி வந்தோம்” என்றார்கள். அப்பொழுது Matthew Flinders அந்தத் தீவிற்கு கங்காருத் தீவு என்று பெயரிட்டு அழைத்தார். ஒரு புறம் பிரித்தானிய ஆய்வாளர் Matthew Flinders அந்தத் தீவுக்கு பெயர் வைத்து குடியேற்றத்தைத் துவக்கிவைத்தார். அதே சமயம் மறு புறம் பிரெஞ்சு ஆய்வாளர் Nicolas Baudin கங்காரு தீவின் வரைபடத்தை நுணுக்கமாக ஆராய்ந்து வரைபடத்தை வரைந்தார். அதனால் தான் அந்த தீவின் பல இடங்களுக்கு பிரெஞ்சு பெயர்கள் உள்ளன.

 

1830களில் கங்காரு தீவு தான் தெற்கு ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலியாவின் முதல் சுதந்திரக் குடியேறிய காலனியாக மாறியது. சீல் வேட்டையாடுபவர்கள், திமிங்கல வேட்டையாடுபவர்கள், மற்றும் விவசாயிகள் இங்கு கடைகளை அமைத்தனர். ஆரம்பகால குடியேறிகளுக்கு வாழ்க்கை அவ்வளவு சுலபமாக இல்லை. எங்கு பார்த்தாலும் கடினமானப் பாறை! தூசி படிந்து மண்! உலகத்தோடு ஒட்டாத தனிமை! வாழ்க்கை கடினமாகத் தான் இருந்தது. கரடு முரடாகத்தான் இருந்தது.

வனவிலங்கு சொர்க்கம்

 

இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது. கங்காரு தீவு ஒரு கனவு இடமாக மாறி விட்டது. யாருக்குத் தெரியுமா? வனவிலங்கு ஆர்வலர்களுக்கு! சாகசப் பிரியர்களுக்கு!! தீவின் நான்கில் மூன்று பகுதி தேசிய பூங்காவாக இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட பகுதி. பூர்வீக உயிரினங்களுக்கு ஒரு புகலிடமாக இருக்கிறது. ஓடித் திரியும் கங்காருக்கள் ஒரு புறம். யூகலிப்டஸ் மரங்களில் ஓய்வெடுக்கும் கோலாக்கள் மறு புறம். காட்டில் நடக்கும் எகிட்னாக்களும், அரிய பளபளப்பான கருப்பு காக்கடூக்கள் இன்னொரு புறம். இப்படி வித்தியாசமான உயிரினங்களை திரும்பிய பக்கமெல்லாம் பார்க்கலாம். அப்படி கங்காரு தீவு ஒரு வனவிலங்கு சொர்க்கமாக மாறிவிட்டது. இன்னும் சீல் விரிகுடாவில் கடல் சிங்கங்கள் கூடுவதைப் பார்க்கலாம். மாலையில் சிறிய பெங்குவின் கடற்கரைகளில் நடப்பதைப் பார்க்கலாம்.

அப்படி மாய மந்திர ஜாலமான ஒரு இடமாக திகழும் சீல் விரிகுடாவை நீங்கள் ஒரு முறை கட்டாயமாகப் பார்க்கவேண்டிய இடம். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆஸ்திரேலிய கடல் சிங்கங்கள் கூட்டம் கூட்டமாக வாழும் இடம் இது. உலகின் வேறு எங்கிலும் அவை கிடையாது. பல ஆண்டுகளாக தீவு தனிமைப்பட்டு இருந்த காரணத்தால் நரிகள் போன்ற உயிர்க்கொல்லி மிருகங்கள் இல்லாத இடமாகவும் இருக்கிறது. அதனால் உள்ளூர் மிருகங்கள் சுதந்திரமாகப் பலுகிப் பெருகின. ஆனால் 2020ல் பெருங்காட்டுத் தீ பரவியது. தீவில் கிட்டத்தட்ட பாதி காடும் அதில் வாழ்ந்த உயிரினங்களும் எரிந்து சாம்பலாயின.

 

இயற்கை ஈர்ப்புகள்

50 கோடி ஆண்டுகளாக இயற்கை என்கிற சிற்பி, கொஞ்சம் கொஞ்சமாக, நிதானமாக, காற்றையும், நீரையும் கொண்டு, பாறைகளில் செதுக்கிய அற்புதமான அழகிய இயற்கை சிலைகளைப் பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் கங்காரு தீவில் உள்ள Flinders Chase National Parkக்குப் போக வேண்டும். ஒரு abstract art gallery-ஐப் பார்த்த வியப்பு உங்கள் கண்களில் அப்படியே ஒட்டிக்கொள்ளும். பெரிய பெரிய கிரானைட் பாறைகள். அவைகளை Remarkable Rocks என்று அழைக்கிறார்கள். தெற்கு பெருங்கடலில் உள்ள ஒரு குன்றின் மேல் உள்ள இந்த Remarkable Rocks, கதிரவன் மறையும் போது, ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும். ஒன்று அந்தக் காட்சி உங்களை ஒரு கவிஞராக்கும் அல்லது பேச்சற்று போகும் நிலைக்கு கொண்டு போகும்.

 

கங்காரு தீவிற்குப் போய் வந்த என் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்: “நாங்கள் கங்காரு தீவிற்குப் போனோம். Remarkable Rocks பார்த்துவிட்டு அசந்து போய் வந்தோம். அடுத்த நாள் தான் தெரிந்தது அதே பொன்றது தான் Admirals Arch என்கிற இடமும்.. அது கடல் வரைந்த ஓவியம். அலைகளால் செதுக்கப்பட்ட பாறைச் சிலை. கடற்கரையில் நியூசிலாந்து fur seals, முடி நிறைந்த சீல்கள் அலைகளில் விளையாடுவதைக் கண்டோம். நீண்ட தூரம் நடந்து இயற்கையின் அழகைப் பருக வேண்டும் என நினைத்தோம். Ravine des Casoars பாதையைத் தேர்ந்தெடுத்து பயணித்தோம். மன நிறைவாக இருந்தது. கடற்கரை அழகை ரசிக்க வேண்டும் என விரும்பினோம். Vivonne Bay என்கிற இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். தெளிவான நீர்! வெள்ளை மணல்!! ஆஸ்திரேலியாவின் சிறந்த கடற்கரைகளில் இது ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. Hanson Bay என்ற இடத்திற்குப் போனோம். நீங்கள் கங்காரு தீவு போனாலும் Hanson Bay-க்குப் போக மறந்து விடாதீர்கள். அங்கு போய் சிறிய படகுகள் கொண்டு பயணிக்கலாம். மறக்க முடியாத அனுபவம். மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதத்திற்குள் நீங்கள் போனால் திமிங்கலங்கள் இடம் பெயர்வதைக் கூடப் பார்க்கலாம். அடுத்த மாதம் மறுபடி நாங்கள் குடும்பமாக கங்காரு தீவு போகிறோம்” என்றார்.

 

கலாசாரம் மற்றும் உணவு மகிழ்ச்சிகள்

 

கங்காரு தீவு இயற்கை அழகுக்கு மட்டும் பெயர் போனது அல்ல. அது ஒரு துடிப்பான உள்ளூர் பண்பாட்டைக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 4,500 பேர் அங்கு குடியிருக்கிறார்கள். மிகவும் ஒற்றுமையான சமூகமாக இருக்கிறார்கள். Fine Art Kangaroo Island போன்ற art galleries கலைப்பொருட்களின் காட்சியகங்கள் இருக்கின்றன. தீவின் அழகைப் போன்றே, உள்ளூர் மக்களின் கலைத் திறமைகளை அங்கே காணலாம். உலகிலேயே தூய்மையான தேனீக்களிடமிருந்து பெறப்படும் Ligurian honey கிடைக்கும். அமெரிக்கன் ஆறு என்ற ஓர் ஆற்றிலிருந்து fresh oysters, புதிய சிப்பிகள் கிடைக்கும். Dudley Wines போன்ற இடங்களிலிருந்து கிடைக்கும் விருது பெற்ற ஒயின்கள் கிடைக்கும்.

 

கங்காரு தீவு ஏன் முக்கியமானது

ஆஸ்திரேலியர்களின் இதயங்களில் கங்காரு தீவு ஏன் இவ்வளவு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது தெரியுமா? இது ஒரு அப்பழுக்கற்ற ஆஸ்திரேலியா—ஒரு குன்றில் நின்று, ஒரு கடல் சிங்கம் நீரில் மூழ்குவதைப் பார்க்கலாம், அல்லது பூர்விகக் குடிகளின் ட்ரீம்டைம் நேரத்தில் இருந்து மனிதர்களால் தீண்டப்படாத காட்டில் நடக்கலாம். மேலும், இது எளிதாக அணுகக்கூடியது— Cape Jervis, கேப் ஜெர்விஸிலிருந்து 30 நிமிட படகு பயணம் அல்லது 112 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடிலெய்டில் இருந்து விரைவான விமானப் பயணம்.

 

நீங்கள் இயற்கை ஆர்வலரா? உணவு ஆர்வலரா foodie? அல்லது நகரத்திலிருந்து சற்றே ஒரு ஓய்வு வேண்டுமா? கங்காரு தீவு உங்களை நிச்சயம் திருப்திப்படுத்தும். வருடத்திற்கு 140,000 சுற்றுலா வாசிகள் கங்காரு தீவிற்கு வந்து போகிறார்கள். அங்கு நிலத்தின் நாடியை உணரலாம். அதன் இதயத் துடிப்பைக் கேட்கலாம். தெற்கு பெருங்கடலின் அலை ஓசை நடத்தும் இசை நிகழ்ச்சியைக் கேட்கலாம். அதே நேரம் அமைதியாக மரங்களில் உறங்கும் கோலாவின் உறக்கத்தைப் பார்க்கலாம். அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கும் இந்த சொர்க்கத்தை அப்படியே பாதுகாத்து வழங்க வேண்டும். இல்லையா?

 

********

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page