top of page

என் தலைக்கு மேல் சரக்கொன்றை - டெம்சுலா ஆவ் - எம்.ஏ. சுசீலா - வாசிப்பு அனுபவம்

ree

என் தலைக்கு மேல் சரக்கொன்றை

(ஆசிரியர் - டெம்சுலா ஆவ்; தமிழில் - எம்.ஏ. சுசீலா; முதல் பதிப்பு - 2009; தமிழில் முதல் பதிப்பு - 2022; நற்றிணைப் பதிப்பகம்)

 

இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கதையைப் படிக்கும் போது, என் மனதில் ஏற்பட்ட எண்ணங்களையும் வாசகர் வட்டத்தில் குறிப்பிடப்பட்ட கருத்துக்களையும் முதலில் எழுதுகிறேன். அக்கதைகளின் சுருக்கங்கள் பின்பகுதியில் இருக்கின்றன. கதைச் சுருக்கங்களைப் படித்து விட்டு, வாசிப்பு அனுபவத்தைப் படிப்பது நலம்.

 

வாசிப்பு அனுபவம்

 

பிரம்மபுத்திரா

என் தலைக்கு மேல் சரக்கொன்றை என்கிற கதை இந்தியாவில் பிரம்மபுத்திரா ஆறு பாயும் நாகலாந்தில் நடப்பதாகத் துவங்குகிறது. நான் திரிபுரா மாநிலத்திற்கு ‘சமூக மாற்றமும் அதற்கான தகவல்தொடர்பு நுட்பங்களும்’ என்ற பயிற்சி கொடுப்பதற்காகப் போயிருந்தேன். நான் தங்கியிருந்த அறையிலிருந்து பிரம்மபுத்திரா ஆறு தெரிந்தது. கடல் போல் காட்சியளித்தது. உலகத்தின் ஒரு பக்கம் தொடங்கி, உலகத்தின் மறு பக்கத்துக்கு ஆரவாரமாக ஓடிக்கொண்டிருந்தது போல் ஒரு பிரம்மை எனக்கு. அந்த பிரம்மபுத்திரா ஆற்றை கண்கொட்டாமல் ஓர் இரவு முழுக்கப் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன். அவ்வளவு வசீகரம் அந்த ஆற்றுக்கு உண்டு!

 

லெண்டினா என்கிற நடுத்தர வயதுப் பெண்ணின் கதை இது. தன் கணவன் இறந்து அவனைக் கல்லறைக்கு எடுத்துச் சென்ற போது தான் அவைகளைக் கவனிக்கிறாள். அழகழகான கற்களைக் கொண்டு பிரம்மாண்டமாக அலங்கரித்த கல்லறைகள். அவைகளை அவளுக்குப் பிடிக்கவில்லை. மரணம் என்பது இயக்கமற்ற ஒரு விதமான சாவு அல்ல. அது உயிர்ப்புடன் கூடிய வேறு விதமான வாழ்வு என்று அவள் நினைத்திருக்க வேண்டும். அதனால் தன் கல்லறையில் கற்கள் வேண்டாம். பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை மரம் நடப்படவேண்டும் என்று நினைக்கிறாள். அது நட்டாளா? பூத்துக் குலுங்கியதா என்பது தான் கதை.

 

டெம்சுலா ஆவ், வித்தைத் தெரிந்த எழுத்தாளர். அதோடு எம்.ஏ.சுசீலா ஆகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர். கதை மாந்திரங்களின் பெயர்கள் தவிர, மற்றவை தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

 

மரணம்

இந்தக் கதையில் முதல் பாராவிலேயே இப்படி எழுதுகிறார். ‘தன் இருப்பைப் பறித்துக் கொண்ட மரணத்தை வென்றபடி தான் நிலையாக இருப்பதான ஒரு பொய்த் தோற்றத்தை உண்டாக்க மனிதர்கள் முயன்று கொண்டிருக்கும் அப்படிப்பட்ட ஓரிடத்தில், (கற்கள் நடப்பட்ட கல்லறைத் தோட்டத்தைத் தான் சொல்கிறார்) பூத்துச் சொரியும் அந்தக் கொன்றை மரம் இருக்க லெண்டினா ஆசைப் படுகிறாள்.

 

“ஏன் இறந்த பின்னும், மனிதர்கள் தன் பெயர் என்றைன்றைக்கும் நிலையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்?” லெண்டினாவின் ஆசையும் அப்படிப்பட்டது தானா? எனக்கு மகாபாரதத்தில் இருந்த ஒரு கிளைக் கதை ஞாபகத்திற்கு வருகிறது. யுதிஷ்டிரன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரும் பாண்டவர்கள். அவர்களை நோக்கி ஒரு பிராமணன் ஓடி வருகிறான். பூசைக்காக தான் காய வைத்திருந்த புல்லை ஒரு மான் தனது கொம்பில் மாட்டிக் கொண்டு ஓடிவிட்டது என்று அழுகிறான். அதனைப் பிடித்து, புல்லை கொண்டு வந்து தாருங்கள் என்று கெஞ்சுகிறான். யுதிஷ்டிரன் தன் சகோதரர்களை வெவ்வேறு திசைக்கு அனுப்புகிறான். அவர்கள் எவ்வளவு தேடியும் அந்த மான் கிடைக்கவில்லை. எல்லோருக்கும் தாகம் எடுக்கிறது. தண்ணீரைத் தேடி நகுலனை அனுப்புகிறான் யுதிஷ்டிரன். தூரத்தில் ஒரு குளம் இருக்கிறது. நகுலன் தண்ணீர் குடித்து விட்டு அண்ணன்களுக்கு தண்ணீர் எடுத்துப் போகலாம் என்று குளத்தில் இறங்குகிறான். அப்பொழுது ‘தண்ணீரைக் குடிக்காதே. என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு குடி’ என்கிற ஓர் அசரீரி கேட்கிறது. அதனை அசட்டை செய்ததால் நகுலன் இறந்து போகிறான். அது போலவே, சகாதேவன், பீமன், அர்ஜூனன் எல்லோரும் அந்த அசரீரீயை அசட்டை செய்து குளத்தில் இறங்க எத்தனிக்க,  அவர்கள் எல்லோரும் இறந்து போகிறார்கள். தம்பிகள் யாரும் வராததைக் கண்ட யுதிஷ்டிரன், அவனே நேராக அந்தக் குளத்திற்குப் போகிறான். அசரீரீ குரலை நோக்கி ‘நீ யார்?’ என்று கேட்கிறான். அப்பொழுது யட்சன் தோன்றுகிறான். யட்சன் பல கேள்விகளைக் கேட்கிறான். அதற்கு யுதிஷ்டிரன் பதில் அளிக்கிறான். அதில் ஒரு கேள்வி - ‘யுதிஷ்டிரா! எது உன்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது? அதற்கு அவனுடைய பதில் ‘தினமும் பாடையில் பிணம் செல்வதைப் பார்த்தும், வாழ்க்கை சாஸ்வதமானது என்று மக்கள் நினைத்துக்கொண்டு, அன்றாட வாழ்வில் கவனம் செலுத்துவது தான் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.’ என்கிறான். இப்படிப் போகும் அந்தக் கதை. ’மரணத்தை வென்று தாங்கள் நிலையாக இருப்பதாகப் பொய்ப் பாசாங்கு காட்ட எண்ணும் மனித முயற்சிகளிலிருந்து விடுபட்ட அப்படி ஒரு சூழலில்’ என்று தான் கதையை முடித்திருப்பார் ஆசிரியர்.

 

மரணம் பற்றிய நினைவு என்னைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டேயிருக்கிறது.

 

ஒரு தடவை என் தந்தையாரிடம் கேட்டேன். என் தந்தையார் தன் 96வது வயதில் காலத்தில் கரைந்துப் போனார். அவர் உயிரோடு இருக்கும் போது ஒரு மழை நாளில், தஞ்சாவூரில் அவரிடம் கேட்டேன். ‘உங்களுக்குச் சாவைக் கண்டு பயம் வருவது உண்டா?’ அவர் உதட்டோரம் சிறிய புன்னகையைத் தவழ விட்டுக்கொண்டே சொன்னார்: “ஒன்று நடக்குமோ? நடக்காதோ? வருமோ? வராதோ? எனக் கணிக்க முடியாத பொழுது பயம் வரும். ஆனால் மரணம் நிச்சயம் நடக்கக் கூடிய ஒன்று. நிச்சயமான ஒன்றைப் பற்றிய பயம் எதற்கு?” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு, வாழ்நாள் முழுவதும் என் நெற்றியில் எழுதி ஒட்டிய ஒரு வாசகத்தைச் சொன்னார். “பட்டினத்தாரின் பாட்டு கேள்விப் பட்டிருக்கியா? ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’. இதுவே ‘கவலை என்னை கவர்ந்து விடாமல், பயம் என்னைப் பற்ற விடாமல்’ வாழ்வில் வழி நடத்துகிறது” என்றார். மேன்மக்கள் மேன்மக்களே! அவரது கொஞ்சம் ஞானம் எனக்கும் வந்துவிடாதா? அப்படிப்பட்ட ஞானம் ஓர் இரண்டு வயது குழந்தையிடமிருந்து நான் கற்றேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

 

மலேசியாவில் பினாங்கு நகரில் வசிக்கும் பேராசிரியர் முனைவர் சிவக்குமார், அவரது மனைவி செல்வி குடும்பம் எங்களுக்கு மிகவும் தெரிந்தக் குடும்பம். அவர்களது மகன் தான் ஞாலன். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு, ஞாலன் இரண்டு வயதுக் குழந்தையாக இருந்த பொழுது, அவன் சொன்னான்: “எனக்குப் பிடிக்கவில்லை. நான் அன்பு செய்கிற மனிதர்கள் ஏன் சாக வேண்டும்? அது எனக்குப் பிடிக்கவில்லை” என்றான். நான் அசந்து போனேன். அது தானே! ஏன் சாக வேண்டும்? சாவை வெல்லவே முடியாதா? உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதற்குப் பதில் ஆண்ட்ரு சொன்னான்.

 

என் சித்தப்பா பையன் மில்டனின் மகன் தான் ஆண்ட்ரு. அவன் சொன்னான்: “பெரியப்பா! நான் மரணிக்கப் போவது இல்லை. நாங்கள் ஓர் ஆய்வு செய்துக் கொண்டிருக்கிறோம். சாகாமல் இருப்பது எப்படி என்று ஆய்வு செய்துக் கொண்டிருக்கிறோம். நான் முதுமை அடைவதற்குள், அதில் வெற்றிக் கண்டு விட்டோமென்றால், நான் சாகமாட்டேன்.” அப்படி ஓர் ஆராய்ச்சி நடந்துக் கொண்டிருக்கிறது என்றே எனக்குத் தெரியாது. பிறகு அது பற்றித் தேடும் போது பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. எடுத்துக்காட்டுக்கு ஒன்று சொல்கிறேன். மீதியை நீங்களேத் தேடிக் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.

 

ஆமசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) வயது மூப்பை எதிர்க்கும் ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமான ஆல்டோஸ் ஆய்வகங்கள் (Altos Labs) என்ற பயோடெக் ஸ்டார்ட்அப்பில் 42 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளார். இந்த ஆராய்ச்சி நிறுவனம் மனித ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கும், வயது மூப்பால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்கும், செல்களை மறு நிரலாக்கம் (biological reprogramming) செய்யும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடலை இளமையாக்குவதற்கும் முயற்சிக்கிறது. இதன் மூலம் மரணத்தை தாமதப்படுத்துவது அல்லது வயது தொடர்பான பிரச்சினைகளை மாற்றியமைப்பது இலக்காக உள்ளது என்று கண்டேன்.

 

ஆச்சரியம்! லெண்டினா இறந்தும் வாழ முயற்சித்தாள். அதற்குச் சாட்சியாக அவளது கல்லறையில் சரக்கொன்றை மரம் இன்றும் பூத்துக் குலுங்கிக்கொண்டே இருக்கிறது. இப்பொழுது மனிதர்கள் இறக்காமல் வாழ முயற்சிக்கிறார்கள். இதற்குச் சாட்சி என்னவாக இருக்கும்? இவர்களின் லட்சியம் நிறைவேறுமா?

 

லட்சியம்

லெண்டினா, பல தடவை ஆசைப்பட்டும் சரக்கொன்றை மரத்தை அவர் வீட்டில் வளர்க்க முடியவில்லை. லட்சியத்தில் கண்ணாய் இருப்பவள். தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டே இருக்கிறாள். இது தான் வெற்றிக்கு அடிப்படை. தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டே இருப்பது. கணவர் இறக்க, அவரது சடலத்தைக் கல்லறைக்குத் தூக்கிச் செல்லும் போது பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருந்துவிடுவதும், கல்லறைக்குப் போக அனுமதி இல்லாமல் இருப்பதும், ‘அட! அங்கயுமா?’ என்று நினைக்கத் தோன்றியது. பெண்களை ஏன் மயானத்திற்குள் செல்ல இந்தச் சமூகம் அனுமதி மறுத்தது. ஆனால் லெண்டினா வித்தியாசமானவள். அந்த நியாயமற்றப் பழக்கத்தை மீறி கல்லறைத் தோட்டத்திற்குப் போகிறாள். தொடர் முயற்சி மட்டுமல்ல, துணிவுடன் முடிவெடுப்பதும் ஓர் இலட்சியவாதிக்கு அழகு போலும்! அப்பொழுது தான் கல்லறைகளில் அடையாளக் கல்லைத் தவிர்த்து, பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை மரம் நடுவது பற்றி யோசிக்கிறாள்.

 

உறவு

அந்தக் கல்லறைத் தோட்டத்திலேயே ஓரிடம் பார்க்கிறாள். அதில் சிக்கல் வரும் பொழுது, பக்கத்தில் இருந்த ஓர் இடம் அவளுக்கு வருகிறது. அந்த இடத்தை வாங்கி விடுகிறாள். ஆனால் அங்கு, அவளுக்கென்று ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு சரக்கொன்றை மரத்தை நடவேண்டும். அது இரகசியமாகவும் இருக்க வேண்டும். தன் இரகசியத் திட்டத்தை தன் மகிழுந்து ஓட்டுநர் மூலமாகச் செய்ய முடிவெடுக்கிறாள். பாபு என்ற அந்த ஓட்டுநரும் அதைச் செவ்வனே செய்கிறார். வாசகர் வட்ட நண்பர்கள் பலர் லெண்டினாவுக்கும் ரவிக்கும் இடையே புனையப்பட்ட புனித உறவை மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். உறவுகள் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகிறது. வளர்கிறது. இதற்கு இவர்கள் இருவரின் உறவே சாட்சி. பாபு சொன்னபடியே சரக்கொன்றை மரத்தை நடுகிறான். லெண்டினா இறந்து போகிறாள். இனி மலர்களைப் பார்க்கிற பொழுதெல்லாம் லெண்டினாவின் நினைவு வரும்!

 

உயிர்மநேயம்

ஒரு வேட்டைக்காரரின் கதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு வாசகர் ஒரு நிகழ்வைப் பகிர்ந்துக் கொண்டார். சென்னை மெரினா பீச்சில் மீன் வாங்கப் போகும் போது, அந்த மீன்களின் கண்களைப் பார்க்கும் போது, ஒரு பரிதாபம் தொற்றிக் கொள்ளும் என்று வருத்தத்துடன் சொன்னார். அதைப் போல இம்சனோக் அந்த யானையைக் கொன்ற பிறகு, அதன் கண்களில் கண்ணீர் தேங்கியிருப்பதைப் பார்க்கிறார். ‘அந்த மிருகம் தன்னை அழித்தவரிடம் ஏதோ ஒரு செய்திச் சொல்ல எண்ணியது போல…’ என்று எழுதுகிறார் கதாசிரியர். இம்சனோக்கின் வேட்டைத் தொழிலில் தான் சுட்ட மிருகங்களைப் பற்றி இதுவரை வேறு எந்த விதமாகவும் நினைத்துப் பார்த்தில்லை. ‘அதற்கான உரிமை தாராளமாகத் தனக்கு உண்டு என்று மட்டுமே அவர் நினைத்து வந்தார்.’

 

தமிழகத்தில் தமிழர்களின் திணையியல் வாழ்க்கைப் பண்பாட்டைப் பற்றிப் பேசுவதோடு, நூறு பேர் இணைந்து நடத்துகிற தாளாண்மை கூட்டுப் பண்ணைக்கு தலைமையேற்று நடத்தும் இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன் என் நண்பர். அவர் கூறுவார்: “இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களின் மேலும் தங்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் அவைகளை என்னவேணுமென்றாலும் செய்யலாம் என்றும் பார்க்கிற பார்வை ‘மனிதர்களை மையப்படுத்திய’ Anthropocentric பார்வை. ஆனால் அது உயிர்களின் பன்முக நிலையை மதிக்காது. ‘எல்லா உயிர்களுக்கும்’ மதிப்பளிக்கும் உயிர்மைப் பார்வை வேண்டும். மனிதன் இயற்கையின் ஓர் அங்கம் மட்டுமே. உயிர்களுக்கிடையேயான சங்கிலியும் உறவும் அறுந்து போக அனுமதிக்கக் கூடாது” என்று சொல்வார்.

 

இரையும் உணவும்

அந்தப் பார்வை இருந்தால் இரைக்கும் உணவுக்கும் உள்ள வேறுபாடு தெரியும். இரைக்கும் உணவுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இரை இயற்கையாகக் கிடைப்பது. மிருகங்கள் ஒன்றையொன்று இரையாக்கும். உணவோ செய்யப்படுவது. மனிதர்கள் தான் உணவைத் தயாரிக்க முடியும். ஆனால் இன்று, இரையைத் தாண்டி, உணவைத் தாண்டி, வேட்டை நடக்கிறது. சிறு கூட்டம் பெருங்கூட்டத்தை நோக்கிய வேட்டை. சாப்பாட்டிற்காகச் செய்வது உணவு. விற்பதற்காகச் செய்வது கொலை. இது வாழ்வையும், உலகையும், உயிர்களையும் பார்க்கின்ற பார்வையில் இருக்கிறது. எல்லா உயிரினங்களுக்கும் மதிப்பு உண்டா? எல்லா உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமா?

 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தானே நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. உலகம் எல்லா உயிரனங்களும் வாழும் ஓரிடம். It is a shared space என்று ஒரு வாசகர் சொன்னது எவ்வளவு உண்மை? ஐநா சபை நீடித்த நிலைத்த வளர்ச்சிக் குறியீடுகளை அறிமுகப்படுத்தி, பல்லுயிர் காக்க திட்டம் தீட்டுகிறது. அதில் கையெழுத்திட்ட அதே தேசங்கள் பல்லுயிரைச் சுரண்டுகிறதே! இந்தத் தள்ளாட்டம் ஏன்?

 

சுயமரியாதை

கதையிலும் யானையைக் கொன்ற பிறகு இம்சனோக்கிற்கு ஒரு தள்ளாட்டம் வரும். ‘…நிலத்தின் மீது யார் ஆதிக்கம் செலுத்துவது என்று காலங்காலமாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போட்டிக்கு நடுவே இந்தக் குறிப்பான சம்பவத்தில் (யானையைச் சுட அரசாங்கம் கூறி அவர் சுட்ட சம்பவத்தில்) அவர் ஏன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்?’ என்ற தள்ளாட்டம் வரும். தள்ளாட்டம் கூடாது. யார் செய்யச் சொன்னாலும் செய்ய மறுக்க வேண்டும்.

 

அப்படி இம்சனோக் மறுத்த சம்பவம் உண்டு. அது அவர் சுயமரியாதையுடன் நடந்த ஓர் அனுபவம். அது என்ன? அரசாங்கத்தின் ஆணையை ஏற்று அந்த யானையைக் கொல்ல, இம்சனோவிற்கு துப்பாக்கியும் வெடிமருந்தும் கொடுக்கப்பட்டது. இத்தனை நாட்களுக்குள் யானையைக் கொன்று விட வேண்டும் என்றும், இல்லையென்றால் வேட்டை உரிமம் ரத்து செய்யப்படலாம் என்ற ‘லேசான அச்சுறுத்தலும்’ கொடுத்த போது அவருக்கு அது பிடிக்கவில்லை. இந்த ‘சாகி’புகளுக்கு என்ன தெரியும் என்று அலுத்துக்கொள்கிறார்.  பிறகு யானையைக் கொன்ற பிறகு அரசாங்கம் வெகுமதியைக் கொடுத்து, துப்பாக்கியையும் அவரையே வைத்துக் கொள்ளச் சொல்லும். இம்சனோக் வெகுமதியை வாங்கிக் கொள்வார். ஏனென்றால் அது அவர் செய்த வேலைக்கு ஊதியம். ஆனால் அரசு கொடுக்கும் துப்பாக்கியை வாங்க மறுத்து விடுவார். ஏனென்றால் அது அவரை அரசாங்கத்திற்கு நிரந்தர ‘அடிமை’யாக ஆக்கிவிடும் என நினைப்பார். தன் வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் தனக்குத் தேவை என்பதில் உறுதியாக இருப்பார். தன்மானம் பெரிது என்று முடிவெடுப்பார்.

 

தற்சார்பு

என் உணவை நான் தீர்மானிக்க முடிகிறதா? உடையை? தொழிலை? கல்வியை? மருந்தை? யாரோ முடிவு செய்கிறார்கள். பாமயன் சொல்வது போல திணையியல் வாழ்க்கை யாரையும் வலுக்கட்டாயமாக சார்ந்திராத வாழ்க்கையாக இருக்க வேண்டும். அல்லது இப்படிச் சொல்லலாம். வாழ்க்கை தற்சார்பு வாழ்க்கையாக இருக்கவேண்டும். அதைத் தான் சாதுர்யமாக, அரசாங்கம் கொடுக்கும் துப்பாக்கியை மறுப்பதில், இம்சனோக் செய்திருப்பார்.

 

கதையை மறுவாசிப்பு செய்யும் போது, விலங்குகளின் பார்வையில் படித்த போது, கண்ணீர் தான் வந்தது. ஒரே ஒரு எடுத்துக்காட்டுக் கொடுக்கிறேன்.


குரங்கு நேயம்

குரங்குக் கூட்டத்தின் தலைமைக் குரங்கான அந்த ஆண்குரங்கை, இம்சனோக் கொல்லும் போது, ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடக்கிறது. இம்சனோக் துப்பாக்கியின் விசையை அழுத்துகிறார். குண்டு குரங்கின் கொழுத்த பக்கவாட்டுப்பகுதியிலேயே பாய்கிறது. ‘குடிசையில் இருந்து ஒற்றைக் கதவு வழியாகத் தன் கூட்டம் முழுவதும் வெளியேறிச் செல்லும் வரை, அது அங்கேயே அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தது’ என்று கதாசிரியர் எழுதுகிறார். தானியங்களைத் தின்று தீர்க்கும் அந்தக் கொடூரக் குரங்குகள் செத்து மடியட்டும் என்று அது வரை இருந்த எண்ணம், இப்பொழுது திசை மாறி ‘ஐயோ! தன் குடும்பத்தாரைக் காப்பாற்ற, தன்னையே தியாகம் செய்திருக்கிறதே. என்ன மனிதநேயம்?’ என்று நினைக்கத் தோன்றுகிறது.  (மனித நேயம் - என்று வேண்டுமென்றே எழுதியிருக்கிறேன். அதை விட உயர்வாக எழுத வேண்டுமென்றால் ‘குரங்கு நேயம்’ என்று தான் எழுத வேண்டும்.) அப்படிப்பட்ட குரங்கு நேயம் கொஞ்சமாவது இருந்தால், இந்திய, பாகிஸ்தானிய, ரஷ்ய, உக்ரைன், இஸ்ரேல், ஹமாஸ் எல்லைப்பகுதிகளில் அது இருந்திருக்குமே. மனித குலமே! உன்னை அந்த குரங்கு சபிக்கட்டும்.

 

யானைக்குப் பிறகு குரங்கு. அதற்குப் பிறகு பன்றி. பன்றியைக் கொன்ற பிறகு இம்சனோக்கிற்கு கொடுங்கனவுகள் வரத் தொடங்குகின்றன. மனப்பிறழ்வு நடக்கிறது. வீட்டுக்குள்ளேயே பதுங்கிக் கிடக்கிறார். யானையைக் கொன்றது சரியா? குரங்கைச் சுட்டது சரியா? பன்றியை சாகடித்தது சரியா? என்று மனக்குழப்பம் கொள்கிறார். பல நேரங்களில் நாம் செய்வது சரியா? இல்லையா? என்று நமக்கும் மனக்குழப்பம் வரும், அதையே இந்தக்கதை பிரதிபலிக்கிறது என்று ஒரு வாசகர் சொன்னபோது என் மனதிற்குள் பலமாக தலையசைத்தேன். எனக்குச் சரியாகப் படுவது உங்களுக்குச் சரியாகப் படுவது இல்லை. இந்த மதத்திற்குச் சரியெனப் படுவது அந்த மதத்திற்கு தவறெனப் படுகிறது. இந்தச் சமூகத்திற்கு நல்லது என்று படுவது அந்தச் சமூகத்திற்கு கெட்டதாகப்படுகிறது. இந்தக் குழப்பம் இம்சனோக்குக்கு மட்டும் இல்லை. இந்த மனித குலத்திற்கே இருக்கிறது.

 

கடைசியில் தான் நச்சு பாயிண்ட் என்று ஒரு வாசகர் சொல்லிவிட்டு சொன்னார்: தன் முடியிலிருந்து கொஞ்சம் முடியைப் பிய்த்து பன்றியைச் சுட்ட இடத்தின் அருகே இருந்து ஓடையில் தூக்கி எறிந்து, அதனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, பன்றியின் பல்லையும், தன் துப்பாக்கியையும், வேட்டைக்காரன் என்ற மமதையையும் ஒரே சேர ஒரு குழியில் போட்டு புதைத்துவிடுகிறார் என்று சொன்னார். அது தனக்குத் தானே அவர் செய்து கொண்ட ஈமச் சடங்கு என்று இன்னொரு வாசகர் சொன்னார்.

 

மனிதகுலம், தான் வாழும் இயற்கைச் சூழலை, தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயலும் வரை சுரண்டலாம் என்கிற வக்கிரப் புத்தியை எப்பொழுது புதைக்கும்?

 

போராட்டக்குழுக்கள்

ஒரு வாசகர் சொன்னது, இதுவரை எல்லோரும் பார்த்தப் பார்வையைப் புரட்டிப் போட்டது. அவர் சொன்னார்: எந்தப் போராட்டக் களத்திலும் பல குழுக்கள் தோன்றும். யானை போன்று சில. குரங்கு போன்று சில. பன்றி போன்று சில. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு உலகப் பார்வையும், கொள்கையும், யுத்தியும், செயல்பாடும் இருக்கும். பல கோணங்களில் போராட்டம் இருக்கும். ஆனால் ஆதிக்கச் சக்தி ஒரு குழுவைக் கொண்டே மற்றக் குழுவை தீர்த்துக் கட்டும். அதற்குத் தானே துப்பாக்கியும் வெகுமதியும் கொடுக்கும். கடைசியில் ஓரிரு குழுவில் வந்து நிற்கும். சரியாகச் சொல்லப் போனால் ஒரு குழுவில் வந்து நிற்கும்.

 

இப்பொழுது ஆதிக்கச் சக்திக்கு அதனை அழித்தொழிக்க எளிதாகும். இது வெறும் காட்டில் நடக்கும் வேட்டை இல்லை. போராட்டக் குழுக்களுக்கு இடையே நடக்கிற வேட்டை. ஆக யானை, குரங்கு, பன்றி எல்லாம் உருவகங்கள் தான். அதனால் தான் யானையின் கண்களில் ஆதங்கம் தெரிந்தது. குரங்கு தன் இனத்தாரை காப்பாற்றி விட்டு கடைசியில் தலை சாய்க்கிறது. பன்றியை சுட்ட இடமே யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்த போராட்டக் களத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இதன் உண்மை புலப்படும். எளிதாகப் புரிய 39 போராளிக் குழுக்கள் இருந்த இலங்கையோடு இணைத்துப் பாருங்கள் என்றார். அவர் சொல்லி முடிக்கும் போது, ஆமாம்! இந்தக் கதை ஏன் முழுக்க முழுக்க ஒரு metaphor ஆக இருக்கக்கூடாது.

 

அப்படியென்றால் கதையாசிரியர் ஒரு genius தானே! வாசகன் மட்டும் என்ன கொக்கா? சில நேரம் அவன் ‘அதையும் தாண்டிய புனிதமான genius’ ஆக இருந்துத் தொலைகிறானே!

 

குழந்தைப்பருவம்

விமானத் தளத்தை விற்றச் சிறுவன் கதை ஒரு சிறுவனது கதை. போக்கன் மாங்க் அந்தச் சிறுவனது பெயர். அஸ்ஸாம். பழங்குடி இனம். வீட்டிலிருந்து ஓடி வந்து விடுகிறான். அவனது சொந்த அப்பா வீட்டிற்குத் திரும்பி அழைக்கும் போது, மனம் வலிப்பது போல் ஒரு சொற்றொடர். “இதுக்கும் கூட அம்மாவை அடிக்கிறதுதானே நீங்க” என்கிறான். ‘அவன் எதிர்த்துப் பேசுவதைப் பார்த்து பயந்து போன தந்தை ஒரு வார்த்தைக் கூட பதில் பேசாமல் வெளியேறினார்’.

 

போக்கன் மாங்க்ன் அப்பாவிடம் கேட்டேன்: உங்கள் மனைவியை அடிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? அவள் பெண் என்பதால் நீங்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாமா? சில நேரம் போதைப் பொருட்களை அருந்தி விட்டு, கன்னா பின்னாவென்று அடிக்க உங்களால் எப்படி முடிகிறது? உங்கள் இயலாமையை இப்படி அடித்துத் தான் பிரகடனப்படுத்தவேண்டுமா? பாருங்கள். உங்கள் ஒரே மகன் ஓடிவிட்டான். என்ன செய்யப் போகிறீர்கள்?

 

அதற்கு அவர் அப்பா குளறியபடியே பதில் சொன்னார்: எங்கள் கிராமத்தில் முக்கால்வாசி பேர் அப்படித்தான். காலங்காலமாக அடித்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது தான் எங்களுக்கு வசதி. இதை விட்டுவிட மாட்டோம். சரி நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உடல் நலம் கெடுக்கும் போதைப் பொருட்களை அரசாங்கமே உற்பத்தி செய்து தங்கள் ‘குடிமக்களுக்கு’ விநியோகம் செய்யலாமா? அவர்களைப் போய்க் கேட்க உங்களுக்கு வக்கு இல்லை. என்னைக் கேட்க வந்துவிட்டீர்கள் என்று காரித் துப்பாதக் குறையாச் சொல்லிவிட்டு பயணம் ஆனார்.

 

குடி என்ற ஆயுதம்

எங்கள் கிராமத்தில் எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார். காலையிலேயே சாராயப்பாட்டிலின் முன் தான் கண் விழிப்பார். எப்பொழுதும் கண் சிவப்பாக இருக்கும். போதை ஏறி விட்டால், எல்லோரையும் சவட்டு மேனிக்குத் திட்டித் தீர்ப்பார். பல முறை அவரது மனைவி கை ஒடிந்து, கால் ஒடிந்து, கண்ணாபொறப்புல காணாம பொயிடுவாங்க. பிறகு வந்து சேர்ந்துக் கொள்வார்கள். அவர் ஒரு முறை என்னிடம் சொன்னார்: ‘இப்படி தெருவுல நின்னு உதார் உட்டாத்தான் எல்லோரும் நமக்கு பயப்படுவாங்க’ என்றார். ஆண்களுக்கு ‘குடி’ ஓர் ஆயுதம். அரசாங்கத்திற்கும் அது ஓர் ஆயுதம். அந்த கண்றாவியால் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும். (கொசுறு செய்தி: இப்பொழுது அவர் நடக்க முடியாமல், கல்லீரல் வீங்கி, வாரத்திற்கு இரு முறை இரத்தம் மாற்றிக் கொண்டு, பேச முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்)

 

போக்கன் மாங்க் கேட்ட ஒரு சிறு கேள்வி, பல எண்ணங்களைக் கிளறி விட்டது.


சுண்ணாம்பு

அவன் சுறுசுறுப்பானப் பையன். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவன் வேலைசெய்யும் வீட்டிற்கு சுண்ணாம்பு அடிப்பான். நான் தஞ்சையில் இருக்கும் போது, என் தந்தையார் பொங்கலுக்கு முன்பு ஒரு வாளியில் சுண்ணாம்பு வாங்கி வருவார். அதில் தண்ணீரை ஊற்றுவார். அப்பொழுது அது குழம்பு கொதிப்பது போல் கொதிக்கும். அதை குழந்தைகள் நாங்கள் ஆர்வமாகப் பார்ப்போம். பிறகு தென்னை மரத்திலிருந்து விழுந்த தென்னம் பாளையின் பின் பகுதியை நசுக்கி, ஒரு பிரஸ் போல (தூரிகை) அப்பா ஆக்குவார். ஆளுக்கொரு தூரிகை. நானும் என் அக்காக்களும் சின்ன சின்ன டப்பாக்களில் கொதித்து ஆறிய சுண்ணாம்பை ஊற்றிக்கொள்வோம். அப்பா பெரிய செவுரு. நான் சின்ன செவுறில் அடிப்பாகம். உயரத்திற்கேற்றாற் போல அக்காக்கள் இடத்தைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மண் செவற்றில் புதிதாக வெள்ளை அடித்ததும், குளித்து முடித்து பவுடர் பூசிய முகமாக, வீடு மிளிரும். அந்த வாசனை இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. இப்பொழுது அதே வீடு. அப்பா இல்லை. இரண்டு மூன்று பெயிண்டர்கள் வந்து கலர் கலராக, பிளாஸ்டிக் பிரஸ்ஸில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் புது சட்டை அணிந்து, கரும்பு தின்றுக்கொண்டே, தொலைக்காட்சியில் நடிகரின் ‘அறிவு பூர்வமான’ பேட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

 

கதை இந்த இடத்திற்கு வந்ததும், பழைய மற்றும் புதிய பொங்கல் நினைவுகள் வந்து, புத்தகத்தை சற்று மூடி வைத்து விட்டேன். இயற்கையோடு இயைந்த வாழ்வு, மூச்சு முட்டி பாதாளத்தில் விழுந்துக் கொண்டிருக்க, மனித குலம் நெகிழி வண்டியில் ஏறி, மூச்சு இறைக்க இறைக்க பயணிப்பதாக ஒரு காட்சி வந்தது. வலியோடு திரும்ப கதையைப் படிக்கத் துவங்கினேன்.

 

நாகர்கள் தமிழர்களா?

அமெரிக்க சிப்பாய்கள், ஒரு விமானதளத்தை, தற்காலிகமாக அவர்களது இராணுவ முகாமாக மாற்றியிருப்பார்கள். அந்த இடத்திற்கு, தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து, எதேச்சையாக டிரக்கில் ஏறியதால், போக்கன் மாங்க் போய்விடுவான். ‘உன் பெயரென்ன?’ கமாண்டர் கேட்பார். ‘நான் ஒரு நாகா’ என்று அவன் பதிலளிக்கிறான். பல நாட்களாக இந்த விடயத்தை யாரிடமாவது கேட்க வேண்டும் என்று இருந்தேன். உங்களுக்கு விபரம் தெரிந்தால் கூறுங்கள். என் கேள்வி இது தான். நாகர்கள் என்பவர்கள் தமிழர்களா?

 

எங்கள் தஞ்சாவூர் மன்னார்குடி அருகில் உள்ள வடகரவயல் கிராமத்தில், எங்கள் குலதெய்வம் ‘நாகமாரியம்மன்’ தான். அந்த ஊரில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அந்த ஊர் எல்லைக்குட்பட்ட பகுதியில்  பாம்பு யாரையும் கடிக்காது என்பதே அந்த நம்பிக்கை. பல விவசாயிகளும், ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள பாம்பு கோவிலுக்கு பால் வார்த்துவிட்டுத் தான், நெல் விதைக்கப் போவார்கள். குளத்திலோ, வாய்க்காலிலோ, வயல் வரப்பிலோ பாம்பைப் பார்த்துவிட்டால் அதை அடிக்கக் கூடாது என்பது அந்த ஊர் மரபு. பல இடங்களில் இரண்டு பாம்புகள் சுற்றி இருப்பது போல் கல்லை வைத்து சாமி கும்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். தமிழர்களுக்கும் நாகங்களுக்கும் உள்ள உறவு தான் என்ன?

 

அது ஏன் தமிழகத்தில் நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகூர், நாகமலை புதுக்கோட்டை, நாகக்குடையான் என்ற ஊர்ப்பெயர்கள் இருக்கின்றன. அப்படியானால் நாகலாந்து போக்கன் மாங்க் எனக்கும் பேரனாவானா? இலங்கையில் நாகதீபம் என்று ஒரு தீவு இருப்பதாக அறிகிறேன். இலக்கியத்தில் தேடினேன். முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற பெயரில் ஒரு புலவர் இருந்திருக்கிறார். உதியஞ்சேரலை சேர மன்னனைப் பற்றி அவர் பாடியுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் சொன்னார்: அண்ணல் அம்பேத்கர் - குமரி முதல் இமயம் வரை, மொகஞ்சாதாரோ-ஹரப்பா முதல் மேகாலாயா- நாகலாந்து வரை பரவியுள்ள இடத்தில் நாகர்கள் வாழ்ந்தனர் என்றும் அவர்களின் தாய்மொழி ‘தமிழ்’ என்றும் குறிப்பிடுகிறார். அதனால் தமிழர்கள் என்கிற நாகர்கள் இந்தியா முழுக்க பரவி வாழ்ந்திருக்கின்றனர் என்று கூறினார்.

 

சென்னையில் உள்ள என் நண்பர் ஓவியர் சுமன் அவர்களிடம் இது குறித்துப் பேசினேன். அவர் சொன்னார்: இந்திய ‘ஆதிசேஷன்’ பற்றிய புராணங்களையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆதிசேஷன் வைகுண்டத்தில் திருமாலின் பஞ்சணையாகக் காட்சியளிக்கிறார். ‘வாசுகி’ திருப்பாற்கடலை கடையும் போது, தேவர்களும் அசுரர்களும் வாசுகியைக் கயிறாகக் கொண்டு அமிர்தத்தைப் பெற்றனர். வாசுகி தான் சிவன் கழுத்தில் மாலையாகவும் திகழ்கிறாள். எப்படியோ நாகம் நம்மோடு மட்டுமல்ல நம் சாமிகளோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றார்.

 

திருச்சியில் உள்ள ஒரு நண்பர் பைபிளிலிருந்து எடுத்துக்காட்டு கொடுத்துச் சொன்னார்: பைபிளில் - பாம்பு ஏவாளிடம், "நீங்கள் அதை உண்ணும்போது உங்கள் கண்கள் திறக்கப்படும், நீங்கள் தேவனைப்போல நன்மை தீமை அறிந்தவர்களாவீர்கள்" (ஆதி. 3:5) என்று சொல்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. படைக்கப்பட்டவைகளில் பாம்பு தான் பகுத்தறிவோடு இருந்திருக்கிறது. அதோடு நிற்கவில்லை. எண்ணாகமம் 21-ல், இஸ்ரவேலர்கள் தங்கள் பயணத்தைப் பற்றி முறையிட்ட பிறகு, கடவுள் அவர்களைத் தண்டிக்க "நெருப்புப் பாம்புகளை" அனுப்புகிறார். அவை கடித்து பலரைக் கொல்கின்றன. பின்னர், மோசே ஒரு தூணில் வெண்கலப் பாம்பை உயர்த்தி வைக்கிறார், அதைப் பார்க்கும் எவரும் குணமடைகின்றனர். இன்றைக்கும் மருத்துவர்கள் சின்னம் தூணில் இருக்கும் பாம்பாகவே இருக்கிறது என்று சொல்லிவிட்டு சொன்னார், ‘ஸ்நேக்’ என்கிற ஆங்கில வார்த்தையும் ‘நாக்’ அல்லது ‘நாகம்’ என்கிற சொல்லிலிருந்து தான் வந்திருக்கவேண்டும், அதே போல நீக்ரோ என்ற வார்த்தைக்கும் ‘நாக்’ என்ற வார்த்தைக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்றார். 


வானவில் பாம்பு

அட! நாகப்பாம்போடு மனிதர்களுக்கு இத்தனைத் தொடர்பா? சமீபத்தில் ஆஸ்திரேலிய பூர்வீகக் குடிகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் குறிப்பிட்ட வானவில் பாம்பு பற்றிய கனவுக் கதையை இங்கு சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

 

ஆஸ்திரேலிய பழங்குடிமக்களிடையே நிலவும் ஒரு வாய்மொழிக் கதை இது. இக்கதைக் குறித்து 6000 வருடத்திற்கு முந்திய பாறைச் சித்திரங்கள் உள்ளன. கதை இது தான். அது பூமி தட்டையாக இருந்த காலம். கனவுக் காலம். அப்பொழுது பூமிக்கே வடிவம் கொடுத்த பெரிய பாம்பு இருந்தது. அதற்கு வானவில் பாம்பு என்று பெயர். அது தரையை முட்டி வெளிப்பட்டு யானை, கரடி, சிங்கம் போன்ற பல்வேறு வகையான விலங்குகளை எழுப்பிவிடுகிறது. அது வளைந்து நெளிந்து போகிற இயக்கத்தால் மலைகளையும், பள்ளத்தாக்குகளையும், சிற்றோடைகளையும், ஆறுகளையும் உருவாக்குகிறது. பூமி முழுதும் சறுக்கி விளையாடுகிறது. அதனால் பூமித்துவாரங்களை நிரப்பி, சுத்தமான நீரை வழங்குகிறது. அதன் பிறகு, பூமியை வடிவமைத்த களைப்பில் ஒரு நீர்த்தேக்கத்தில் சுருண்டு படுத்து இன்று வரை இளைப்பாறுகிறது.

 

அதனால் பழங்குடிமக்கள் “நீர்த்தேக்கங்களை தொந்தரவு செய்யக்கூடாது. இவைகளின் ஆற்றல் மிகப்பெரியது. எல்லாவற்றையும் உருவாக்கிய வானவில் பாம்பு இங்கு இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. அதனால் நீர்நிலைகளை மிகுந்த மரியாதையுடன் நடத்தவேண்டும்” என்று அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். சில நேரம் வானவில் பாம்பின் செய்கை கணிக்க முடியாதவாறு இருக்கிறது. வறட்சி, சூறாவளி, வெள்ளம் என்பனவற்றையும் கொண்டு வருகிறது. அதீத மழை பெய்யும் பொழுது அது தங்கியிருக்கும் நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. அப்பொழுது சூரியன் அதன் வண்ணமயமான உடலைத் தொட, வானவில் பாம்பு எழுந்துக் கொள்கிறது. தரையில் இருந்து எழும்பி வானத்தில் உலவும் மேகங்கள் வழியாக பயணித்து மற்றொரு நீர்த்தேக்கத்திற்குப் போகிறது. அப்படி அந்த பாம்பு மேகங்களுக்கிடையே பயணிக்கும் போது பலவண்ணங்களில் வானவில் தோன்றுகிறது. “அதோ! வானவில் பாம்பு ஒரு நீர்த்தேக்கத்திலிருந்து கிளம்பி, இன்னொரு நீர்த்தேக்கத்தை நிரப்ப போய்க்கொண்டிருக்கிறது” என்று பேசிக்கொள்கிறார்கள்.

 

“நமக்கு எப்பொழுதும் இப்படித்தான் வாழ்வளிக்கும் நீர் கிடைக்கிறது. பெரும் வறட்சியின் போதும் சில நீரூற்றுகள் வறண்டு போகாததற்கு இதுவே காரணம்.” என்றும் “ வானவில் பாம்பு இப்படி வெவ்வேறு இடங்களுக்கு பயணப்பட்டுக் கொண்டே இருப்பதால் தான் வெவ்வேறு பருவங்கள் வருகின்றன” என்றும் “இப்படித்தான் சூரியனும், நிலமும், நீரும், காற்றும் தங்களுக்குள் உறவாடிக்கொள்கின்றன” என்றும் பழங்குடிகள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

 

இப்படிப் பலவேறு வாய்மொழிக் கதைகள் உலவுகின்றன. அவர்களுடைய கதைகளிலிலும், பாடல்களிலும், நடனங்களிலும், ஓவியங்களிலும் வானவில் பாம்பு இன்றும் உலா வந்துக் கொண்டே இருக்கிறது. இது போன்றக் கதைகளை பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் வாழ்கிற நிலமும் பொழுதும் குறித்த பிரக்ஞை, அதில் இருக்கிற நீர், காற்று, தீ, வான் போன்றவைகளின் இயல்புகள், அதில் வாழ்கிற விலங்குகள், பறவைகள், பூச்சிகள் குறித்த தரவுகள் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.

 

இப்பொழுது கதைக்குள் செல்வோம்.

 

‘உன் பெயரென்ன?’ என்று கமாண்டர் கேட்டதற்கு போக்கன் மாங்க் ‘நான் ஒரு நாகா’ என்று பதிலளித்ததால் வந்த வினை சென்ற சில பத்திகள். கதைத் தொடர்கிறது.

 

நிலம்

வாசகர் வட்ட நண்பர் சொன்னது போல அவன் ஒரு street smart. கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இராணுவ முகாமில் தவிர்க்கமுடியாத ஓர் ஆளாக ஆகிவிடுகிறான். ஆனால் போர் முடிந்து வெள்ளைக்கார சிப்பாய்கள் நாடு திரும்புகிற நேரம் வந்துவிட்டது. இப்பொழுது கமாண்டர் ‘அந்த விமானத் தளம் உனக்குத்தான். அதோடு கிடக்கிற கழிவுப்பொருட்களும் உனக்குத்தான்’ என்று எழுதி ஒரு பேப்பரை அவன் கையில் செருகிவிட்டு, எல்லோரும் முகாமை விட்டு சென்று விடுகிறார்கள். அதற்குள் அவன் பக்கத்தில் இருக்கும் கிராமத்தினரோடு பழகியிருப்பான். வெள்ளைக்காரர்களோடு பழகுபவன் என்பதால் அவனுக்கு அவர்கள் மத்தியில் ஒரு மரியாதை. அடுத்து என்ன செய்வது என்று அவன் யோசிப்பான். பழுதாகிப் போன பழைய விமானத்தின் கழிவுப் பொருட்களை அந்த கிராம விவசாயிகளுக்கு விற்கலாமா என ஒரு கணம் யோசிப்பான்.

 

ஒரு விவசாயிக்கு எந்த விடயம் மிகவும் மதிப்புள்ளதாகத் தோன்றும்? என்ற கேள்வியை கதாசிரியர் கேட்டுவிட்டு பதிலாக ‘நிலம்’ என்று எழுதுகிறார். ஆகவே, அந்தச் சிறுவன் அந்த விமானத்தளத்தை கிராம மக்களுக்கு விற்றுவிடுவது என்று முடிவெடுக்கிறான். நிலம்! தொல்காப்பியர் சொல்வது போல முதற்பொருள் நிலமும் பொழுதும். நிலம் ஐம்புலன்களால் உணரக்கூடியது. பொழுது ஆறாவது புலனால் அறியக்கூடியது.

 

அந்த நிலத்தை ஐநூறு ரூபாய்க்கு விற்றுவிட்டு முன்பின் அறிமுகமில்லாத ஓர் இடத்தை நோக்கிக் கிளம்பிவிட்டான் போக்கன் மாங்க். சில நாட்கள் கழித்து அரசாங்கத்திலிருந்து பெரிய அதிகாரி வந்து கேட்டபோது, சிறுவன் கொடுத்த ஆவணத்தைக் காண்பிக்க அவர் சிரிக்கிறார். அப்படியெல்லாம் அதை அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்ற போது, மக்கள் வெட்கத்தோடு தலையைத் தொங்கப் போட்டார்கள் என்று கதை முடிகிறது. வாசகர் வட்ட நண்பர் ஒருவர் கேட்டார்: அது எப்படி? அந்தக் கிராமத்து மக்கள் அவ்வளவு முட்டாளாகவா இருந்தார்கள்?

 

எப்பொழுது நாம் முட்டாளாக இல்லை!

 

தேசியவாதக் குழுக்கள்

ஒரு கடிதம் என்கிற கதையைப் படிக்கும் போது, இந்தியாவில் காரித்தாஸ் இந்தியா என்கிற சேவை நிறுவனத்தின் அழைப்பின் பேரில், சமூக சேவகர்களுக்கு தகவல் தொடர்பு குறித்தப் பயிற்சிக் கொடுப்பதற்காகத் திரிபுரா சென்றிருந்த நினைவு வந்தது. பத்து நாள் பயிற்சி. கிழக்கிந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து சமூக சேவகர்கள் வந்திருந்தார்கள். சமூக மாற்றத்திற்கான செய்தித் தொடர்பு எப்படி இருக்கவேண்டும் என்பது தான் பயிற்சிப் பொருண்மை. அந்தப் பயிற்சியை என் நண்பர் ஒரு கிறித்துவப் பாதிரியார் தான் ஏற்பாடு செய்திருந்தார். அங்கிருக்கிற ஒரு பள்ளியின் தாளாளர் அவர். அவர் சொன்னார்: “இங்கே பல தேசியவாதக் குழுக்கள் இருக்கின்றன. சில சமயம் அவர்கள் என் அலுவலகத்திற்கு வருவார்கள். மேசையின் மேல் துப்பாக்கியை வைப்பார்கள். அவர்களுக்குத் தேவையான நன்கொடை கேட்பார்கள். கொடுத்தால் நாம் தப்பித்தோம்” என்றார். மாலை 6 மணிக்கு மேல் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் போக எங்களை அனுமதிக்கவில்லை. அப்பொழுது தான் கிழக்கிந்தியாவில் இந்திய இராணுவம், இந்திய அரசாங்கம், மக்கள், தலைமறைவு தேசியவாதிகள் குழுக்கள் பற்றியெல்லாம் அறிந்துக் கொள்ள முடிந்தது. மக்கள் இவர்களுக்கிடையே படும் பாடுகள் பற்றியும் தெரிந்துக்கொள்ள முடிந்தது. அவைகளை அப்படியே இந்த சிறுகதைத்தொகுப்பில், சில கதைகளில் கதையாசிரியர் கொண்டு வந்திருக்கிறார். அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று தான் ‘ஒரு கடிதம்’ கதையும்.

 

பயிற்சி முடிந்து நான் திரும்பியபிறகு எனக்கு ஒரு போன் வந்தது. ஒரு மாலை வேளை அந்தப் பாதிரியார் பைக் ஓட்டிக் கொண்டு போன போது, மர்மமான முறையில் சுடப்பட்டு இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்கிறது? ‘ஒரு கடிதம்’ கதையைப் படித்த பொழுது எனக்கு திரிபுரா நினைப்பு தான் இருந்தது.

 

மக்கள் ஆதரவு

‘பொதுவாகவே அந்தக் கிராம மக்கள் சாதுவான குணம் உள்ளவர்கள் தான். மேலிருக்கும் அரசாங்கம், தலைமறைவு அரசாங்கம் ஆகிய இரண்டோடும் எந்தச் சிக்கலும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கே அவர்கள் பெரிதும் முயன்றார்கள். கறிகாய், அரிசி முதலிய சாமான்களை வாங்க எப்போதாவது கிராமத்துக்கு வரும் இராணுவ நபர்களோடும் அவர்கள் இணக்கமான உறவையே பேணி வந்தார்கள்’ என்று கதை போகிறது. வாசகர் வட்டத்தில் ஒரு வாசகர் கூறினார். “போராட்டக் குழுக்கள் எல்லாமே மக்களின் ஆதரவு இல்லாமல் போராட முடியாது. மக்களே எல்லோருக்கும் ஆதாரம். நம்ம ஊர் மம்பட்டியான் கதையிலிருந்து இன்றைக்கு இருக்கிற எல்லா குழுக்களுக்கும் இது நிதர்சனமான உண்மை.” இதைச் சொல்லிவிட்டு ஒன்று சொன்னார். ஒரு சண்டையில் அதிகம் இழப்பதும் சாமான்ய மக்களே என்றார். எவ்வளவு உண்மை!

 

இன்னொரு வாசகர் ஆழமான விமர்சனம் ஒன்றை வைத்தார். இந்த ஆசிரியர் எளிய மக்களுக்கானப் பார்வையை, அவர்களுக்கான எழுத்தை எழுதியது போல் தெரியவில்லை. அரசாங்கத்தில் பதவியில் இருந்ததாலோ என்னவோ, அங்கிட்டும் பழுதில்லாமல் இங்கிட்டும் பழுதில்லாமல் எழுதியது போலவே தெரிகிறது. கிட்டத்தட்ட அரசாங்கம் பக்கமே அவர் சாய்வு தெரிகிறது என்றார். பிறகு தான் கவனித்தேன். ஆம்! சாகித்ய அகாடமியின் பொதுக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். வாசகருக்கு 360 டிகிரி சுதந்திரம் இருக்கத்தானே செய்யும். எல்லா பக்கங்களையும் பார்த்து சுதந்திரமாக தன் எண்ணத்தை வெளியிட ஒரு வாசகன் முயல்வது சரி தானே! தொடர்ந்து கூறினார். இரோம் ஷர்மிளா போன்றோர் மக்களின் விடுதலைக்காக போராடிய உண்மையான போராளி.

 

அது யார் அந்த இரோம் ஷர்மிளா?

 

இராம் சானு ஷர்மிளா

இராம் சானு ஷர்மிளா. இந்த வருடம் (2025) அவருக்கு 53 வயது இருக்கும். மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்றொரு பெயரும் அவருக்குண்டு. எழுத்தாளர். கவிஞர். செயற்பாட்டாளர். 2000ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினார். Armed Forces (Special Powers) Act என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. அதை காரணமாக வைத்து மணிப்பூரின் தலைநகரான இம்பாலில், பேருந்துக்காகக் காத்திருந்த பத்து அப்பாவி மக்களை இந்திய இராணுவம், கோழிக்குஞ்சுகளை கொத்திக் கிழித்துத் தூக்கிப் போடுவது போல் சுட்டுத் தள்ளியது. அதை நேரடியாகப் பார்த்த இராம் சானு ஷர்மிளா Armed Forces (Special Powers) Act என்ற சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தான் தன் உண்ணாவிரதத்தை துவங்கினார். ஒரு நாள் இரு நாட்கள் அல்ல. ஒரு வாரம் இரு வாரங்கள் அல்ல. ஒரு மாதம் இரு மாதங்கள் அல்ல. 16 வருடங்கள். பல தடவை சிறையிலடைக்கப்பட்டு, மூக்கு வழியே குழாயைப் பொருத்தி வலுக்கட்டாயமாக நீர் உணவை ஊற்றினார்கள். 2016 ஆகஸ்ட் 9 ம் தேதி தான், பதினாறு வருடங்களுக்குப் பிறகு, உண்ணாவிரதத்தை முடித்து தானாக உணவு உண்ணத் தொடங்கினார். 2017ல் கெவின் குட்டினோ என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டு பெங்களூருவில் வாழ்ந்து வருகிறார். சமீபத்திய மணிப்பூர் பிரச்னை குறித்து காட்டமாக எழுதியும் பேசியும் வருகிறார். இதெல்லாம் சாத்தியமா? என்று அவரது வாழ்க்கையைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

 

கதைக்குள் வருவோம்.

 

தன் மகன் படிக்க வசதியில்லாததால், அவனுக்குப் படிக்க வைத்திருந்த பணத்தையும், தலைமறைவு போராளிகள் பிடுங்கிக்கொண்டதால், அந்த மகன் படிக்க வழியில்லாமல் போகிறது. அவனே பிற்காலத்தில் ஒரு போராளியாக மாறி விடுகிறான். அவன் யாரென்று தெரியாமல் அவனை அடித்து சாகடிக்கிறார்கள். அவன் சட்டைப்பையில் இருந்து தான் அந்தக் கடிதம் எடுக்கப்படுகிறது. அது தன் படிப்புக்காக பணம் அனுப்பச் சொல்லி தன் தந்தைக்கு எழுதிய கடிதமாக இருந்தது. ஒரு நிகழ்வு இப்படித்தான் ஒரு கதையாகிறது. அந்த நிகழ்வில் நடந்த சோக வலி, எழுத்தின் மூலம் வாசகனுக்கு கடத்தப் படும் போது அது இலக்கியமாகிறது.

 

சிலரின் அதிகாரப் பசிக்கு, பலர் இரையாக வேண்டுமா?

 

மூன்று பெண்கள் கதையில் வரும் பெண்களில் வாழ்க்கையிலிருந்து காமம், காதல், கற்பு போன்ற விடயங்களைப் பற்றிப் பேசலாம்.


காமம்

பொள்ளாச்சி வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வந்த காலையில் இதைப் பற்றி எழுதுவது ஒரு நகைமுரண் தான். காமம் என்கிற செறிவான தமிழ்ச் சொல் இன்றைக்கு கற்பழிக்கப்பட்டு வேறு ஓர் அர்த்தத்தில் பொது புத்தியில் புலங்குவது வருத்தத்துக்குரியதே! புலன்களால் தூண்டப்பட்டு, மனதளவில் அன்பில்லாமல் உடல்உறவு வைப்பதை காமம் என்று இன்றைக்குப் பொருள் கொள்ளப்படுகிறது. அப்படி இந்தக் கதையில் பாட்டியை (லிபோக்டுலாவை) ஓர் உள்ளூர் கவுன்சிலர் அவளது விருப்பமின்றி உடல்உறவு கொண்டு விடுவார். அதை இன்றைய பொருளில் ‘காம’த்தால் உந்தப்பட்டு அந்த ஆண் செயல்பட்டிருக்கிறார் என்று வைத்துக்கொண்டு, ‘காம’த்தைப் பற்றி கொஞ்சம் அலசுவோம்.

 

காமம் பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களில், தத்துவத்தில், மற்றும் மத நூல்களில் ஆழமான உணர்வுகளையும், மனித இயல்புகளையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காமம் என்ற சொல், பொருள், புகழ், அதிகாரம் போன்றவைகளைக் குறித்த தீவிர ஆசையை குறிக்கிறச் சொல்லாகக் கையாளப்பட்டிருக்கிறது. இதற்கும் பாலியல் ஆசைக்கும் தொடர்பு இருக்கவேண்டிய அவசியமில்லை. சங்க இலக்கியத்தில், காமம் முக்கியமாக காதல் உணர்வாகவும், ஆண்-பெண் இடையேயான ஈர்ப்பாகவும் சித்தரிக்கப்படுகிறது. அகநானூறு மற்றும் குறுந்தொகை போன்ற நூல்கள் காதலர்களின் உணர்ச்சிகளை இயற்கையுடன் இணைத்து விவரிக்கின்றன. அறம், பொருள், இன்பம் (காமம்) என்ற மூன்று வாழ்வியல் களங்கள் இலக்கியங்களில் சொல்லப்பட்டன.  பிறகு சமயம் சார்ந்த பக்தி இலக்கியங்கள் வரும்போது வீடு (மோட்சம்) சேர்க்கப்பட்டது.

 

‘மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார்’ (திருக்குறள் 1289) என்கிற குறள் நினைவு கூறத்துக்கது.

 

மெய்யின் தீரா மேவரு காமமொடு

எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி (அகநானூறு, 28) என்கிறது அகநானூறு.

 

லிபோக்டுலாவிற்கும் உள்ளூர் கவுன்சிலருக்குமான (மெரென்சஷிக்குமான) அந்த உறவை பட்டும் படாமலும் கதாசிரியர் சொல்லிப் போகிறார். “வெகு நாட்களுக்கு முன் மெரென்சஷி என்னிடம் பலவந்தமாக உறவு கொண்டதை நான் உங்களிடம் சொல்லியிருந்தாலும், அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கும் போது என்னுள் சீற்றத்தைக் காட்டிலும் அதிகமாக எழுவது, நான் முதலில் எதிர்ப்புக் காட்டியதையும் மீறி அவனால் என்னோடு எப்படி உறவு கொள்ள முடிந்தது என்று அந்த அபத்தமான சக்தியைப் பற்றித்தான்” என்று லிபோக்டுலா சொல்கிறாள். அப்போது ஏன் விலகி ஓடவில்லை என்று அவள் பலமுறை அவளுக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறாள். இந்த இடத்தை மிகவும் நுட்பமாகவும் நுணுக்கமாகவும் அணுகவேண்டும். அவளின் வாழ்க்கை ஒரு dark secret என்று ஒரு வாசகர் சொன்னார்.

 

இன்னொரு வாசகர் சொன்னார்: அகலிகைக் கதைக் கேட்டிருக்கிறோம். அவள் மாதிரி லிபோக்டுலாவும் சிறிது நேர எதிர்ப்பிற்குப் பிறகு உடல்உறவிற்கு இசைந்து இடம் கொடுத்துவிட்டாளோ என்ற அச்சம் வருகிறது. முதலில் எதிர்ப்புக்காட்டி பிறகு ‘அபத்தமான சக்தி’ யால் அவளும் ஒத்துக்கொண்டு உடல் உறவில் ஈடுபட்டாளோ? என்று கேட்டார்.

 

அந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்த குரல் இன்னொரு வாசகரிடமிருந்து வந்தது. அவர் சொன்னார்: “இது போன்ற வன்புணர்வு நேரங்களில், பெண்களை நோக்கி கேள்வி கேட்பவர்கள் ஏன் ஆண்களை நோக்கி எந்தக் கேள்வியும் கேட்பதில்லை? உங்களுக்குத் தெரியுமா? ஒரு தடவை என் கழுத்தில் இருந்த செயினை ஒருவன் திடீரென பறித்துக் கொண்டு ஓடினான். நான் அப்படியே கல்லாக நின்று விட்டேன். அதிர்ச்சி! பறிக்கிற கையை நோக்கி ஒரு குத்து விடக்கூட என் கை எழவில்லை. அந்தக் கணம்! சிலையாய் நின்றேன். பாதிக்கப்படுவர்களை நோக்கியே ஏன் கேள்விக் கணைகள் வந்து விழுகின்றன. ஏன் அந்த victim blaming மனோபாவம்? அவள் விரும்பி இணங்கினாளா? அல்லது முடியும் மட்டும் எதிர்த்தாளா? பலமா எதிர்க்கலையோ? என்பதைப் பிறகு விவாதிப்போம். துணிந்து வன்புணர்வில் ஈடுபடும் அந்த ஈனனை நோக்கி (அந்தக் கவுன்சிலரை நோக்கி) இப்படி வலுவானக் கேள்விகள் ஏன் எழுப்பப்படவில்லை? ஆண்கள் என்றில்லை. பெண்களும் பெண்கள் மேலேயே பழியைப் போடுவது ஏன்?”

 

வாசகர் வட்டம் கொஞ்சம் ஸ்தம்பித்துத்தான் போனது. அதானே! ஆணாதிக்க வேர்கள் எவ்வளவு ஆழமாய் இறங்கியிருக்கிறது! நமக்குள் திணிக்கப்பட்டிருக்கிற இப்படிப்பட்ட கருத்துருக்களை கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் இந்திரனை விட்டுவிடுவோம். அகலிகையை கல்லாக்கி, இராமனின் பாதத்திற்காகக் காத்திருப்போம்.

 

அகலிகைக் கதை

அதென்ன அகலிகைக் கதை? என்று கேட்பவர்களுக்கு, அதன் கதைச் சுருக்கம். கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் அகலிகை படலத்தில் 17 பாடல்களில் இக்கதை வருகிறது. அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்த போது காமதேனு என்ற பசு, ஐராவதம் என்ற வெள்ளை யானை, இன்னும் பல அபூர்வ சக்தி கொண்ட பொருட்கள் தோன்றியது போல அகலிகை என்ற அழகானப் பெண்ணும் கடலிலிருந்து தோன்றினாள். அவளை மணந்துக் கொள்ள இந்திரன் உட்பட எல்லோரும் விரும்பினார்கள். ஆனால் நாரதரின் செயலால் கௌதம முனிவர் அவளை மணந்துக் கொண்டார். காமத்தை அடக்கமுடியாமல், இந்திரன், ஒரு நாள் அதிகாலை இரண்டு மூன்று மணிக்கு கௌதம முனிவரின் குடிலுக்கு வெளியே நின்று கொண்டு சேவல் போல் கூவினார். முனிவரோ விடிந்துவிட்டது என்று நினைத்து, குடிலை விட்டு வெளியே வர, இந்திரன் கௌதம முனிவர் போல் மாறி அகலிகையை தொட்டார். அப்போதே தன் கணவர் இல்லையென்று தெரிந்து அதிர்ச்சியுற்றாள். வான்மீகி ராமாயணம், வந்திருப்பவன் இந்திரன் என்று தெரிந்தும் அவனுடன் கூடி மகிழ்ந்திருந்தாள் என்று குறிப்பிடுகிறது. கம்பரோ ‘நெஞ்சால் பிழை செய்தவள் அல்ல’ என்று கூறுகிறார். முழுதும் விடியாததைக் கண்ணுற்ற முனிவர் குடிலுக்குத் திரும்பி வர, இந்திரன் பூனை வடிவெடுத்து நழுவுகிறான். முனிவரும் பெண்ணையே கல்லாக்குகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ராமரின் பாதம் பட (வான்மீகி), ராமரின் கால் தூசி பட (கம்பர்) கல்லால் சபிக்கப்பட்டிருந்த அகலிகைப் பெண்ணாகிறாள். இது தான் கதை.)

 

இலக்கியப் பிரியர்களுக்கு இன்னும் சில தரவுகள். கிரேக்கத் தொன்மக் கதையில் Zeus என்னும் கடவுள் Amphitryon என்பவரின் மனைவி Alcmne ஐ நயவஞ்சகமாக அடைகிறான். எப்படி? இந்திரனின் அதே தந்திரம். அவளது கணவனைப் போல் வேடமிட்டு வந்து ஏமாற்றுகிறான். அவர்களுக்குப் பிறந்த குழந்தை தான் Heracles.

 

புராணத்தில் வரும் அகலிகைக் கதையைத் தழுவி புதுமைப்பித்தன் சாப விமோசனம் என்ற ஒரு சிறுகதை எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள். இராமனின் பாதம் பட்டு கல்லிலிருந்து பெண்ணாக சாப விமோசனம் பெற்ற அகலிகை, சீதையைச் சந்திக்கிறாள். அப்பொழுது சீதையுடன் உரையாடுகிறாள் அகலிகை. பதினான்கு வருடம் வனவாசமிருந்து திரும்பும்போது அயோத்தி மக்களுக்குத் தான் புனிதமானவள் என்று காண்பிக்கத் தன்னை இராமன் தீக்குளிக்கச் சொன்னதாகச் சீதைச் சொல்கிறாள். அகலிகை திடுக்கிடுகிறாள். வெகுண்டு எழுகிறாள்.  'என்னை உயிர்ப்பித்த இராமனா இப்படிச்செய்தான்' என்று மனம் ஒடிந்து போகிறாள். அதனால் அகலிகை மீண்டும் கல்லாகிப்போனாள் என்று புதுமைப்பித்தன் கதையை முடிக்கிறார். இராமன் தீக்குளிக்கத் தேவை இல்லையோ?

 

இந்த ஆழ்மன ஆணாதிக்க கருத்துரு விஷயத்தில் மனிதர்களும் கடவுள்களும் ஒன்றாக இருக்கிறார்களோ? அதனால் தானோ என்னவோ, லிபோக்டுலா (பாட்டி)யை வன்புணர்வு செய்த உள்ளூர் கவுன்சிலர் மேல் கல்லெறியாமல், இவளும் விரும்பியே ஈடுபட்டிருப்பாளோ? என்ற விமர்சனம் வருகிறது. ஒரு வாசகர் சொன்னது போல பாட்டிகளின் அந்தக் காலங்கள் மாறி, மகள்கள் படிக்கச் செல்வதும், வேலைக்குப் போவதும், காதலிப்பதும் இந்தக் காலத்தில் இயல்பாகி விட்டது. காமம் பற்றிப் பார்த்தோம். இப்பொழுது காதல் பற்றியும் பார்த்துவிடுவோம்.

 

காதல்

கேள்வி கேட்க முடியாமல் பாதாளத்தில் இருந்த பாட்டிகள் காலம் போய், பள்ளத்திலிருந்து மேலே ஏறி தரையில் நடக்கிற மகள்கள் காலம் இது. அப்படித்தான் லிபோக்டுலாவின் (பாட்டியின்) மகள் மெடம்லா படிப்பாள். படிக்கப் போன இடத்தில் காதலிப்பாள். அது அவளது சுதந்திரம். கூண்டை விட்டுப் பறந்து தன் இணையைத் தேர்ந்தெடுத்த பறவை மெடம்லா. அவளது இணை இம்சுடெம்ஜன். இந்தப் பையன் வேறு யாருமல்ல. அந்தக் கவுன்சிலரின் சொந்தப் பையன். மெடம்லா’வும் அதே கவுன்சிலருக்குப் பிறந்த (லிபோக்டுலாவுக்கு) பொண்ணு. அப்படியென்றால் மெடம்லாவும் இம்சுடெம்ஜனும் அக்கா தம்பிகள். அது தெரியாமல் காதலிக்கிறார்கள். பாட்டியின் பரம இரகசியம் உடைந்து விடாமல் இருக்க, தனது பழையக்கதை தெரிந்துவிடாமல் இருக்க, அப்படி காதலர்கள் இருவரும் இணைந்துவிட்டால், அக்காவையும் தம்பியையும் திருமணம் செய்து வைத்ததை செரிக்க முடியாமல் காலம் பூரா தான் தவிக்க வேண்டியதை தவிர்க்க, காதலனின் அப்பாவிடம் ( அதான்! அந்த கவுன்சிலரிடம்) யாருக்கும் தெரியாமல் சென்று கல்யாணத்தை நிறுத்திவிடுகிறாள். ஒரு வாசகர் சொன்னது போல, இது மர்ம முடிச்சுகளும், திகைக்க வைக்கும் திருப்பங்களும் நிறைந்த அட்டகாசமான திரைக்கதை வடிவம் கொண்ட சிறுகதை. நீங்கள் படித்துப் பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்.

 

மெடம்லா காதலில் தோல்வியுறுகிறாள். தோல்வியுற வைக்கப்படுகிறாள். வேறு திருமணமே வேண்டாம் என்று கடைசி வரை இருந்துவிடுகிறாள். மார்த்தாவைப் (பேத்தியைப்) பார்த்ததும், தன் வேலையையும் தியாகம் செய்து அவளைத் தத்து எடுக்கிறாள். மெடம்லாவின் வாழ்க்கை தியாகம் செய்வதிலேயே கழிகிறது. எனக்குத் தெரிந்து பலப் பெண்களின் வாழ்க்கை, பிறருக்காகத் தங்கள் சுகங்களைத் தியாகம் செய்யும் வாழ்க்கையாகவே இருக்கிறது. அந்தச் சிலுவையை அவர்கள் விரும்பி சுமப்பதாக பலர் எண்ணுவது தான் அபத்தம் என்று நினைக்கிறேன்.

 

கணவன் மேல் காண்பிக்க வேண்டிய காதல் தன் மகள் மேல் காட்டுகிற பாசமாக மிளிர்கிறது. தான் தத்து எடுத்த தாய் என்று உண்மையை உடைத்து மகளிடம் சொன்னபோது, மகள் (மார்த்தா) கண்ணீரோடு அணைத்துக்கொள்கிறாள். அப்பொழுது அந்தப் பாசம், தாய்மையாக மாறியது. காதலின் மெல்லிய சிலிர்ப்பை தியாகத்திலும், பாசத்திலும், தத்துத் தாய்மையிலும் அவள் அனுபவிக்கத் துவங்குகிறாள்.

 

பாட்டியின் இருட்டான கதைக்குப் பிறகு மகளின் காதல் தியாகத்தில் முடிய பேத்தியின் (மார்த்தாவின்) காலம் இன்னும் கொஞ்சம் சுதந்திரம் பெற்ற காலமாக மாறியிருக்கிறது. எப்படி என்று பேச ஆரம்பித்தால் கற்பு பற்றிப் பேச வேண்டும்.

 

கற்பு

காமம் என்றச் சொல் எப்படி புரிதலில் திரிந்து போய் கிடக்கிறதோ, அப்படியே கற்பு என்ற சொல்லும் நிறம் மாறிக் கிடக்கிறது. அது என்னவோ உடல் சார்ந்த ஒன்றாகவே சமூகத்தில் பார்க்கப்படுகிறது. அதுவும் கற்பு என்பது பெண்களுக்கு உரிய கன்னித்தன்மை என்றும் அது அழிக்கப்படவோ, காக்கப்படவோ வேண்டியது என்றும் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் ‘அப்படி, இப்படி’ இருக்கலாம் என்றும் கற்பு என்பது ஆண்களுக்கு இல்லை என்றும் தான் பொதுவான புரிதலாக இருக்கிறது. கற்பு எனப்படுவது சொல்திறம்பாமை என்ற கருத்தும், இருபாலாருக்கும் பொதுவில் வைப்போம் என்ற குரலும் உங்களுக்குக் கேட்கிறதா?

 

இக்கதையில் திருமணத்திற்கு முன்பே மார்த்தா கர்ப்பமாகிப் பிள்ளைப் பெறுகிறாள். இது சரியா? கொஞ்சம் இருங்கள். குடும்பம் என்ற நிறுவனம் ஏற்படுவதற்கு முன்பு, இனக்குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்து திரிந்த போது, மார்த்தா அப்படிச் செய்திருந்தால் அது ஒரு கேள்வியாக உருவெடுத்திருக்குமா?

 

ஒரு வாசகர் சொன்னார்: “எனக்கென்னவா இந்தக் கதாசிரியர் ‘டெம்சுலா ஆவ்’ ஒரு பெண்ணியவாதி என்று நினைக்கிறேன். அவர் படைத்திருக்கிற பெண் கதை மாந்தர்கள் எல்லோரும் இருக்கிற social norms-களை உடைக்கிறார்கள். பழையன கழிந்து புதியன புகுத்தல் - இயற்கை தானே! அது என்னவோ பெண்களுக்கு அது இயல்பாக வருகிறது என்று நான் நினைக்கிறேன்”.

 

காமம், காதல், கற்பு, அன்பு, பந்தம்,பாசம், தாய்மை, தியாகம் என்று ஒரு காவியத்திற்குத் தேவையான அத்தனை பொருண்மைகளையும் சுமந்து நிற்கிறது ‘மூன்று பெண்கள்’ சிறுகதை.

 

இளநீரும் இளம்பெண்ணும்

ஓர் எளியக் கேள்விக் கதையைப் படித்துவிட்டு, இலங்கையச் சேர்ந்த ஒரு வாசகர் ஒரு நிகழ்வை மன வலியுடன் பகிர்ந்தார். அவர்கள் கிராமத்தில் ஒரு குடும்பம் இருந்தது. அவர்கள் வீட்டின் முன் ஒரு தென்னை மரம் இருந்தது. அந்தக் குடும்பத்தின் தலைவி அந்தத் தென்னை மரத்தை நன்றாகப் பராமரித்து வந்தாள். அதுவும் நன்றாகக் காய்த்தது. சில சமயம் சிங்கள இராணுவ வீரர்கள் அவ்வழியே போகும் போது, தாகத்திற்காக இளநீர் கேட்பார்கள். அந்தப் பெண்மணி ஓர் ஆளை அழைத்து இளநீரைப் பறித்துக் கொடுப்பாள். இரண்டு மூன்று தடவைகள் இப்படி நடந்தது. போராட்டக்காரர்கள் ஒரு தடவை இதைப் பார்த்துவிட்டார்கள். அந்த அம்மாவை அழைத்துக் கண்டித்தார்கள். சரி இனி இது போல் நடக்காது என்று உறுதியளித்தார். அடுத்த வாரம் இரண்டு போராட்டக்காரர்கள் ஏதோ ஒரு வேலையாக அந்தக் கிராமத்தில் வந்து தங்கினர். இராணுவ வீரர்கள் எதேச்சையாக அந்த கிராமம் வழி போகும்போது அந்தப் பெண்மணி வீட்டிற்கு வந்தனர். இளநீர் கிடைக்குமா? என்று கேட்டனர். அவளுக்குத் தர்ம சங்கடம். இல்லை என்று சொல்ல முடியவில்லை. இனி இதுபோல் நடக்காது என்று உறுதியளித்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. தவித்தாள். இராணுவ வீரர்களுக்குச் சந்தேகம் வந்தது. இளநீரைப் பறித்து கொடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டாள். இராணுவ வீரர்கள் இளநீர் குடிப்பதைப் போராட்ட வீரர்கள் நேரடியாகப் பார்த்தனர். அடுத்த வாரம் அந்தப் பெண்மணி சுடப்பட்டு தென்னை மரத்தடியில் கிடந்தாள் என்று வாசகர் சொன்ன போது வாசகர் வட்ட நண்பர்கள் எல்லோரும் ஒரு வித மனவலியை அனுபவித்தது அந்த கனத்த மௌனத்தில் சப்தமாகக் கேட்டது எனக்கு.

 

எந்த நிலத்திலும், எந்தக் காலத்திலும் சாமான்ய மக்களே பாதிக்கப்படுகின்றனர்.

 

இன்னொரு வாசகர் கூறினார்: “எந்த போராட்டக் குழுவும் தனியே வளர்ந்து விட முடியாது. மக்களின் ஆதரவு இல்லையென்றால் அவர்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.” ஆம்! அது எவ்வளவு உண்மை! சாமான்ய மக்கள் சாதாரண மக்கள் அல்லர். பல்துறை அறிவும், திண்ணிய துணிவும் கொண்டவர்கள்.

 

சமயோசித புத்தி

இந்தக் கதையில் கதை நாயகியின் பெயர் இம்டோங்க்லா. தலைமறைவு சக்திகள் கிராம மக்களிடம் அரிசி மற்றும் மற்றப் பொருட்களை வாங்கும் போது ஒருவரால் தர இயலவில்லை. அவனைச் சித்ரவதைக்கு உட்படுத்த ஆயத்தமாகும் போது, இம்டோங்க்லா சமயோசிதமாக யோசித்து, கடனாக வாங்கிய அரிசியை திருப்பிக்கொடுப்பது போல் நடிக்கிறாள். என்னே அவளது சமயோசித புத்தி!

 

துணிவு

அது மட்டுமல்ல. அவளது துணிவு மெச்சத்தகுந்தது. தீவிரவாதிகளுக்குத் துப்பு கொடுக்கிறான் என்று சந்தேகப்பட்டு இம்டோங்க்லாவின் கணவனை இராணுவம் தூக்கிப் போய் விடுகிறது. அடித்துச் சித்திரவதைச் செய்கிறார்கள். கிழக்கிந்திய பிரதேசத்தில் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறதாம். ஒரு பெண், ஒரு ஆணின் முன், தன் மேலாடையைக் கழற்றி பகடி செய்தால், அது அந்த ஆணின் ஆண்மையை கேலி செய்வதாகப் பொருளாம். இம்டோங்க்லா இராணுவத் தலைவனிடம், தன் கணவனை விடுவிக்கச் சொல்கிறாள். முடியாது என்று கேப்டன் சொல்கிறான். துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, ‘கேப்டன் அவளை நெருங்கியதும், அவள் எழுந்து நின்று தன் மேலாடையை அகற்றப் போவது போல் பாவனை செய்தாள். ஒரு மனிதனின் ஆண்மையற்ற செயலைச் சுட்டிக்காட்டும் வகையில், அவனை இழிவுபடுத்தும் குறியீடாக நாகன் இனப் பெண்கள் கையாளும் மிக அவமானகரமான சிறுமைப்படுத்துதல் அது என்பது அவனுக்குத் தெரியும்.’ என்று கதாசிரியர் எழுதுகிறார். இம்டோங்க்லா காரி துப்புகிறாள்.

 

இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே நிர்வாணமாக கொடுமைப்படுத்தப்பட்ட மணிப்பூர் மகள் தான் நினைவுக்கு வருகிறாள். மேலாடை கழற்றப் போவது போல் பாவனை செய்வதே ஒரு மனிதனின் ஆண்மையற்ற செயலை சிறுமைப்படுத்துவது, அவமானப்படுத்துவது என்றால், முழுவதும் கழற்றப்பட்ட அவல நிலையில் இருந்த பெண்ணின் நிலை, அதற்குக் காரணமான அத்தனைப் பேரையும் சிறுமைப்படுத்தவில்லையா? அவள் கூனிக்குறுகி, கூசிப்போன நிலையில் நடக்க வைத்த அத்தனைப் பேருக்கும் அவமானமாக இல்லையா? இம்டோங்க்லா அந்தக் கேப்டனை நோக்கி மட்டுமல்ல, என்னையும் நோக்கித் தான் காரித் துப்புகிறாள்.

 

ஒரு வாசகர் சொன்னார்: “ச. பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டி’ நாவலை ஞாபகப்படுத்தியது இது. வீரப்பன் தேடுதல் வேட்டையில் நடந்த பல அதிகார வன்முறைகளுக்குச் சாட்சியாக சோளகர் தொட்டி இருந்தது” என்றதும் இன்னொரு வாசகர் ஓடி வந்து மறுத்தார். “வீரப்பன் கதையையும் விடுதலைக்காகப் போராடும் குழுக்களையும் நேர்கோட்டில் வைக்காதீர்கள்” என்று சினந்தார்.

 

போராட்டக்காரர்கள் - இராணுவ வீரர்கள் - அரசு அதிகாரிகள் - மக்கள்

மக்களைச் சுற்றி பலரும் இருக்கிறார்கள். தீவிரவாதிகள் அல்லது தேசியவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் போராட்டக்காரர்கள் ஒரு புறம். இராணு வீரர்கள் மறு புறம். அரசாங்க அதிகாரிகள் இன்னொரு புறம். இம்டோங்க்லா கேட்டாள்: “டேய்! எங்ககிட்டே இருந்து உங்களுக்கு என்ன தாண்(டா) வேணும்?” மக்களுக்கு விடுதலைத் தரப்போகிறோம் என்று தான் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர். மக்களைக் காப்பாற்றப் போகிறோம் என்று தான் இராணுவ வீரர்கள் முகாமிடுகின்றனர். மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கப் போகிறோம் என்று தான் அரசாங்கமும் அதிகாரிகளும் பதவியில் இருக்கின்றனர். ஆனால் இம்டோங்க்லா போன்றவர்கள் இவர்களுக்கிடையே ஆலையில் இட்ட கரும்பாக படாத பாடுபடுகின்றனர்.

 

கேப்டனின் சொத்தான ஒரு தீப்பெட்டியை அவள் எடுத்து வந்து விடுகிறாள். சிகரெட்டுக்கு தீ வைக்க முடியாமல் அவன் கோபத்தின் உச்சத்திற்குப் போகிறான். “எதிர்ப்பு என்று வந்து விட்டால் எப்படியெல்லாமோ காண்பிப்போம்” என்கிறாளா, சரியான நேரத்தில் சமயோசிதமாக அரிசியைக் கொடுத்து, அண்டை வீட்டுக்காரனைக் காப்பாற்றிய, மேலாடையைக் கழற்றப் போவது போல் பாவனைக் காண்பித்து அவன் சொரணையை பகடி செய்த, இம்டோங்க்லா?

 

அந்த இலங்கையில் இளநீர் கொடுத்தப் பெண் தான், மறுவாழ்வு பெற்று, இம்டோங்க்லாவாக வந்திருப்பாளோ?

 

அபேதன்

ஸோனி கதை என் மேடை நாடக அனுபவத்தை கிளறி விட்டது. நான் மதுரையில் இருந்த போது ‘இது நாடகமல்ல’ என்றொரு மேடை நாடகம் எழுதினேன். சதங்கை கலைக்கல்லூரியில் அந்த நாடகத்தைப் போட்டார்கள். அதில் கதாநாயகன் பெயர் ‘அபேதன்’. கதாநாயகியின் பெயர் ‘யதார்த்தா’. பேதங்கள் இல்லா உலகம் வேண்டும் என்று விரும்பும் லட்சியவாதி அபேதன். மாறுபாடுகளும் வேறுபாடுகளும் நிறைந்தது தான் உலகம். அதை ஏற்று வாழ்வது தான் வாழ்க்கை என்று எண்ணுபவள் யதார்த்தா. இருவருக்குள்ளும் ஒரு காதல் இருக்கும். ஆனால் கருத்து மோதல்கள் இருந்துக் கொண்டே இருக்கும். போலீஸ் இல்லாத சமூகம் இருக்கமுடியும் அல்லது இருக்கவேண்டும் என்று நினைப்பவன் அபேதன். குற்றங்களைத் தடுக்க போலீஸ் தேவை என்று ஒத்துக் கொள்ளுபவள் யதார்த்தா. மேடையில் அறம் பேசி விட்டு, இருட்டில் லஞ்சம் கேட்கும் அரசியல்வாதியை வெறுப்பவன் அபேதன். அரசியலுக்கும் நமக்கும் காத தூரம் என்று வாழ்பவள் யதார்த்தா. அபேதனுக்கு வேலை இல்லை. யதார்த்தா ஓர் அரசியல்வாதியிடம் போகச் சொல்லி சிபாரிசு செய்வாள். அவன் போக மாட்டான்.

 

கலை

இப்படி இழுபறியாகப் போகும் இரண்டு மூன்று காட்சிகள் போக, திடீரென சிலர் வந்து அபேதனை அடித்து நொறுக்குவார்கள். ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்க, டைரக்டர் தான் அடிக்கச் சொன்னார் என்று சொல்லுவார்கள். அபேதன் திரைக்குப் பின்னால் நின்றுக் கொண்டிருக்கும் நாடக டைரக்டரை, திரைக்கு முன்னால் கூப்பிடுவான். ‘என்ன? திடீர்னு அடி தடி காட்சி?” என்று கேட்பான் அபேதன். “சுவாரஸ்யமே இல்லாம நாடகம் போனா, மக்கள் எழுந்து போயிடுவாங்க. அவுங்களுக்குப் பிடிக்குமேன்னு ஓர் எதிர்பாராத காட்சி” என்பார் நாடக டைரக்டர். கலைகள் எப்படி பிஸினசாகப் போய்விட்டது என்று சலித்துக்கொள்வான் அபேதன். கலைகள் மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் இல்லையா என்பாள் யதார்த்தா.

 

கல்வி

பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் கம்பெனிகளுக்கு வேலையாட்களை தயாரித்துக் கொடுக்கின்றன, உண்மையான கல்வி எங்கும் இல்லை என்பான் அபேதன். படித்தால் தானே நல்ல வேலை கிடைக்கும் என்பாள் யதார்த்தா. மாயையில் வைத்திருக்கின்றன மதங்கள் என்பான் அபேதன். வாழ்க்கையில் நம்பிக்கைத் தேவையில்லையா எனக் கேட்பாள் யதார்த்தா. ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் முறியும்.

 

வாழ்க்கை

கடைசியில் பார்வையாளர்களிலிருந்து ஓர் இளைஞன் மேடைக்கு வருவான். டைரக்டரை மறுபடி திரைக்கு முன் அழைப்பான். அபேதன் போல் கண்மூடித்தனமாக லட்சியவாதியாக இருக்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? அல்லது யாதார்த்தாவைப் போல் இயல்பு வாழ்க்கையில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவேண்டும் என்று சொல்கிறீர்களா? என்று கேட்பான். ஏன் மூன்றாவதாக ஒன்று இருக்கக் கூடாது? லட்சியத்தை மனதில் வைத்துக்கொண்டு, யதார்த்த வாழ்வையும் வாழும் மூன்றாவது பாதையை ஏன் நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது என்று டைரக்டர் சொல்லுவார்.

 

அப்பொழுது பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகர் எழுந்து, ‘அப்படி நினைத்திருந்தால் இளைஞர்களைக் கேள்வி கேட்கச் சொன்னதற்காக, விஷம் கொடுக்கப்பட்டு, அதை விரும்பி அருந்திய ஒரு சாக்ரடீஸ் மெய்யியல் பேசியிருக்கமாட்டார். அப்படி நினைத்திருந்தால் அனைவரையும் அன்பு செய்யச் சொன்னதற்காக, சிலுவையில் உயிர் நீத்த ஒரு இயேசு உதிர்த்திருக்க மாட்டார். அஹிம்சையை போதித்துக்கொண்டே விடுதலைக்காகப்ப போராடியதற்காக, சிறையில் தள்ளப்பட்ட காந்தி உருவாகியிருக்கமாட்டார். ஒரு ஃபிடல் காஸ்ட்ரோ, ஒரு பகவத்சிங், ஒரு லெனின் என்று பட்டியல் நீளும். அவர்கள் என்ன செய்தார்கள். நான்காவது பாதை இருக்கிறது. உங்களால் முடிந்த அளவு லட்சியத்தைக் கொண்டு யதார்த்தத்தை மாற்ற தொய்வின்றி செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்’ என்று ஆவேசத்துடன் தன் உணர்வுகளைக் கொட்டுவார்.

 

 இந்த நான்கில் உங்கள் வாழ்க்கை எந்தப் பாதையில் பயணிக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று டைரக்டர் சொல்ல, திரை மூடப்படும். அந்த நாடகத்தைப் பார்க்க கத்தோலிக்க பேராயர் வந்திருந்தார். அவர் தான் சிறப்பு அழைப்பாளர். கதையாசிரியராகவும், அபேதனாகவும் நடித்த என்னை அழைத்தார். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் இயக்குநருக்கு உதறல் வந்து விட்டது. என்னைப் பார்த்து முறைத்தார்.  “நீங்க தான் நாடகத்தை எழுதியதா?” என்று கேட்டார் பேராயர். “ஆமாம்” என்றேன் மெதுவாக. அதற்குள் நிறுவன இயக்குநர், “ ஆண்டவரே! ரிகர்சலில் இல்லாததெல்லாம், மேடையில் போட்டுவிட்டார்கள். இனி இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவரைச் சமாதானப் படுத்தினார்.

 

 “நோ! நோ! இங்க வாப்பா” என்று என்னை முன்னுக்கு அழைத்து, “நான் என் வாழ்க்கையில் பார்த்த நாடகங்களில் ஆகச் சிறந்து நாடகம் இதுதான். இது நாடகமல்ல என்று இதற்கு பொருத்தமான பெயரும் இட்டிருக்கிறீர்கள். என் வாழ்க்கையில் நான் என்னதான் செய்துக்கொண்டிருக்கிறேன் என்று என்னை சிந்திக்கவைத்து விட்டீர்கள்.” என்றார்.  புன்னகைக்கலாமா இல்லையா எனத் தெரியாமல் மத்திமமாக ஒரு சிறு புன்னகையைப் படர விட்டேன். நிறுவன இயக்குநர் முகம் கடுகு தாளிக்கத் தயாராக இருந்தது. பேராயரை சாப்பிடப் போகலாம் என்று மடை மாற்றினார் இயக்குநர்.

 

“அபேதா! வாங்க… என்னோட சாப்பிடுங்க. இன்னும் இதப்பத்தி ஒங்களோட பேசனும்” என்று என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். பின்னால் வந்த இயக்குநர் முகம் எப்படி போனது என்று தெரியவில்லை.

 

குழி பறிப்புகள்

சரி. ஸோனி கதைக்கு வருகிறேன். ஸோனி இன்னொரு அபேதன். அவன் காதலியின் பார்வையில் தான் கதையே எழுதப்பட்டிருக்கிறது. போராட்டக் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் இடையிலும் நடக்கும் ‘குழி பறிப்புகளை’ கதை சொல்லி நகர்கிறது. மெல்லிய காதல் உணர்வு, மாற்றுக் கருத்துக்களால் பிரிவு, போராட்டக் குழுவில் இருக்கும் இன்னொரு பெண்ணுடனான நட்பு, இந்த வேலைக்கு வந்திருக்கக்கூடாதோ என்கிற மனக்குழப்பம், நம்பிக்கையை வெளிப்படுத்தும் கடிதம், ஆனால் அதைக் காப்பாத்தாத இயல்புக்காரி என்று கதை முழுக்க பல உணர்வு வெளிப்பாடுகள்.

 

ஒரு வாசகர் சொன்னார்: “இந்தக் கதை உட்பட, இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்த பலக் கதைகளை, கதையாசிரியர் சுதந்திரமாக எழுதினாரா என்ற சந்தேகம் வருகிறது. அரசாங்கத்தில் ஒரு பதவியில் இருந்ததால், இராணுவம், அரசாங்கம், போராட்டக்குழுக்கள் என்று வருகிற போது, எழுத்தாளரின் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவே நான் உணர்கிறேன். உண்மையான போராட்டக் களத்தை கண் முன் கொண்டு வரவில்லை” என்றார்.

 

அபேதா! ஓர் எழுத்தாளனுக்கு எவ்வளவு தூரம் சுதந்திரம் இருக்கிறது?

 

கம்பளிபூச்சியிலிருந்து பட்டாம்பூச்சிக்குப் பயணம்

பறத்தல் கதை குறித்து, ஒரு வாசகர் மிக அழகாகச் சொன்னார்: Existential Crisis பற்றிய சிறப்பான பதிவு இந்தக் கதை. கம்பளிபூச்சியின் படலம் முடிகிறது. பட்டாம்பூச்சியின் படலம் தொடங்குகிறது.  எதையும் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டியதில்லை என்றார்.

 

எனக்கு என்னவோ இந்தச் சிறுகதைத் தொகுப்பின் முதல் கதை நினைவுக்கு வருகிறது. ‘என் தலைக்கு மேல் சரக்கொன்றை’. லெண்டினாவின் கணவர் இறந்துப் போகிறார். சரக்கொன்றைத் திட்டம் பிறக்கிறது. லெண்டினா மறைந்துப் போகிறாள். சரக்கொன்றை மலர்ந்து நிற்கிறது. கம்பளிபூச்சியிலிருந்து பட்டாம்பூச்சிக்குப் பயணம்.

 

அடுத்து ஒரு வேட்டைக்காரரின் மரணம் கதையை எடுத்துக் கொள்வோம். யானை, குரங்குர பன்றி எல்லாம் இறந்து போகிறது. ஆனால் பன்றியின் பல்லையும், துப்பாக்கியையும், வேட்டைக்காரன் என்ற திமிரையும் புதைத்துவிட்டு வேட்டைக்காரர் புதிய மனிதராகப் பிறக்கிறார். கம்பளிபூச்சியிலிருந்து பட்டாம்பூச்சிக்குப் பயணம்.

 

விமானத் தளத்தை விட்டு சிப்பாய்கள் வெளியேற்றம். விமானத் தளத்தை விற்று சிறுவன் புதிய வாழ்க்கைக்குப் போகிறான். கம்பளிபூச்சியிலிருந்து பட்டாம்பூச்சிக்குப் பயணம்.

 

ஒரு கடிதம் கதை. கடிதத்தைக் கொண்டு வந்த போராட்ட வீரன் மரணம். ஆனால் நீளக்காலான் விஷயன் அறிந்து அந்த நினைவைத் தூக்கிச் சுமந்த நிலைக்கு மாறுகிறான். கம்பளிபூச்சியிலிருந்து பட்டாம்பூச்சிக்குப் பயணம்.

 

மூன்று பெண்கள் கதை. பாட்டியின் எதிர்பாரா உறவில் மகளின் வாழ்க்கைத் துவக்கம். மகளின் தியாகத்தின் பேத்தியின் வாழ்க்கைப் பயணம். பேத்தியின் காதலில் புதிய குழந்தையின் சுவாசம் தொடக்கம். கம்பளிபூச்சியிலிருந்து பட்டாம்பூச்சிக்குப் பயணம்.

 

ஓர் எளிய கேள்வி கதை. அவளுக்குக் கெட்ட கனவு வருகிறது. கணவனை இழுத்துச் சென்ற இராணுவ கேப்டனிடம் மேலாடையை அவிழ்ப்பதாக பாவனை செய்து கணவனை மீட்டு புதிய துணிவான வாழ்க்கைக்குப் பயணம். கம்பளிபூச்சியிலிருந்து பட்டாம்பூச்சிக்குப் பயணம்.

 

ஸோனி கதை. ஸோனி மரணம். காதலி காதலிலிருந்து, அவளது நினைவிலிருந்து வெளிவந்து, ஃப்ளாப்பியை லாக்கரில் பூட்டிவிட்டு மாறுபட்ட வாழ்க்கைக்குப் பயணம். கம்பளிபூச்சியிலிருந்து பட்டாம்பூச்சிக்குப் பயணம். இப்படி ஒரு வாசகர் சொன்னது போல ஒரு நாவலைப் பிச்சிப் பிச்சிப் போட்டு சிறுகதைகளை எழுதினார்களா? அல்லது சின்னச் சின்னக் கதைகளைச் சேர்த்தால் ஒரு நாவல் உருவாகும் அளவுக்கு சிறுகதைகளை எழுதினார்களா?

 

கதையில் இன்னொரு விடயம் எனக்குப் பிடித்திருந்தது. கண்ணோட்டம். கதையின் துவக்கத்தில் தங்கச்சிக்கு கம்பளிப் பூச்சி அருவருப்பாகத் தெரியும். ஆனால் ஜானிக்கு கம்பளிப்பூச்சி அழகாகத் தெரியும். கம்பளிப் பூச்சி பட்டாம் பூச்சியானதும் ஜானிக்கு அது அருவருப்பாகத் தெரியும். ஆனால் தங்கச்சியோ அதன் அழகைக்கண்டுத் துள்ளிக் குதிப்பாள். ஒவ்வொருவரின் உலகப் பார்வையும் வித்தியாசமாக இருக்கிறது. 

 

ஒவ்வொருவரின் உலகப் பார்வையும், அந்த இடத்தில், காலத்தில், கொடுக்கப்பட்ட அறிவு, அனுபவம், நம்பிக்கைகள், கருத்தாக்கங்கள், உறவு ஆகியவைகளால் தீர்மானிக்கப்படுகிறது. கொஞ்சம் பொறுமையும் அவதானிப்பும் ஆய்வும் இருந்தால் புரிதல் தானாக வரும்.

 

ஒரு வாசகர் சொன்னார்: “ பறத்தில் கதை நம்பிக்கையைக் கொடுக்கிறது. கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் பிரச்னைகளையும் போராட்டங்களையும் பேசிவிட்டு, கடைசிக் கதையில், ‘கவலைப்படாதீர்கள். நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். கம்பளிபூச்சியிலிருந்து பட்டாம்பூச்சிக்கானப் பயணம் வரும்.’ என்று ஆசிரியர் சொல்வது போல இருக்கிறது” என்றார்.

எனக்கு கம்பளிபூச்சியும் அழகு! பட்டாம்பூச்சியும் அழகு!! உங்களுக்கு?

 

********

 

கதைச் சுருக்கங்கள்

 

என் தலைக்கு மேல் சரக்கொன்றை

 

ஒரு கல்லறையில் சரக்கொன்றை மரம் ஒன்று மஞ்சள் வண்ண அழகான பூக்களைச் சொரிந்துக் கொண்டிருக்கிறது. கல்லறைகளில் கிரானைட் கற்களைப் பதித்து உயிர்ப்பில்லாத வாசகங்களை எழுதும் பழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு, இந்த உயிர்ப்பான பூக்கள் அந்தக் கல்லறையில் விழுந்து மலர்ச்சியாக இருக்கிறது. அந்தக் கல்லறை லெண்டினா என்ற பெண்ணின் கல்லறை. அந்த மரம் எப்படி அங்கு வந்தது என்பதில் கதைத் தொடங்குகிறது.

 

லெண்டினா, தரையை நோக்கிக் கொத்துக் கொத்தாய் தலை கவிழ்ந்திருக்கும் கொன்றை மரம் ஒன்றைத் தன் வீட்டில் நட ஆசைப்படுகிறாள். காம்பவுண்ட் சுவர் ஓரத்தில் நடுகிறாள். தோட்டக்காரர் அறியாமல் பிய்த்துப் போட்டு விடுகிறார். வீட்டின் இன்னொரு புறத்தில் நடுகிறாள். வாயிற் கதவு திறந்திருந்து ஒரு சமயத்தில் மாடுகள் உள்ளே புகுந்து மேய்ந்து விடுகின்றன. மூன்றாவது முறையாக வீட்டின் மறுபுறத்தில் நடுகிறாள். சுகாதரத்துறைப் பணியாளர் தெரியாமல் அதன் மேல் பூச்சிக்கொல்லியை அடித்துச் சாகடித்துவிடுகிறார். ஆனாலும் கொன்றை மரத்தின் மேல் அவளுக்கிருந்த காதல் போகவேயில்லை.

 

லெண்டினாவின் கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார். அவரது உடலை அடக்கம் பண்ணக் கல்லறைக்கு எல்லோரும் போகிறார்கள். பெண்கள் கல்லறை வரைப் போகும் பழக்கம் இல்லாவிட்டாலும், லெண்டினா கல்லறைத் தோட்டத்திற்குச் செல்கிறாள். அங்கே இருக்கும் போது அவளுக்கு ஒரு யோசனை வருகிறது. ‘கல்லறையில் அடையாளக் கல் இல்லாமல் ஏன் சரக்கொன்றை மரம் ஒன்றை நடக்கூடாது?. அதுவும் அவளது கல்லறையில்?’ இந்த யோசனையின் போது, அந்த சோகமயமான நேரத்திலும் லேசான ஒரு புன்னகை அவளுக்கு வருகிறது.

 

லெண்டினாவின் இந்த ரகசியத் திட்டத்தை யார் மூலமாகச் செய்வது? சமையற்காரருக்கு குடும்பம் உண்டு. குடும்பத்தில் ரகசியம் காக்கமுடியாது. தோட்டக்காரருக்கும் அப்படியே. மனைவி இல்லாத கார் ஒட்டுனர் தான் அதற்கு உகந்தவர் என்று முடிவு செய்கிறாள். அவரின் பெயர் பாபு என்கிற மாபு. ஒரு நாள் கல்லறைத் தோட்டத்திற்கு லெண்டினாவும் பாபுவும் செல்கிறார்கள். ஓர் இடத்தைக் கண்டுபிடிக்கிறாள். டவுன் கமிட்டியிடம் அனுமதி வாங்க பாபுவிடம் சொல்கிறாள். பாபுவின் மருமகன் அங்கு வேலை செய்கிறான். முறையான விண்ணப்பம் கேட்கிறான். அதில் யார் கையெழுத்திடுவது எனக் குழம்புகிறாள்.

 

அப்பொழுது தான் அவளது கணவரின் (கேலாங் - அவரது பெயர்) நண்பரின் மகன் அவளைச் சந்திக்கிறான். அவனுக்குப் பொருளாதாரப் பிரச்னை. கல்லறைத் தோட்டத்திற்குப் பக்கத்தில் ஒரு நிலம். அதனை அவன் விற்க வேண்டும். அவள் பேசி வாங்கி விடுகிறாள். மகன்களும் மருமகள்களும் எதிர்த்துக் கேட்க, கணவருக்குக் கல்லறைக் கட்டும் போது ‘யார் செலவு செய்வது’ என்று அவர்களுக்குள் நடந்த உரையாடலை வெளிப்படுத்தி வாயை அடைக்கிறாள்.

 

டவுன் கமிட்டி ஆட்கள் அவளைச் சந்திக்கிறார்கள். கற்சின்னங்களை எழுப்பாமல் பூக்களைச் சொரியும் மரங்களை நடுபவர்களே பயன்படுத்தலாம் என்றும் அதி்ல் லெண்டினா முதல் நபராக இருப்பார் என்றும் சொல்லி டவுன் கமிட்டிக்கு அந்த நிலத்தை எழுதிக் கொடுக்கிறாள். அங்கு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து ஒரு சரக்கொன்றை மரத்தை நடுகிறாள்.

 

சில காலம் கழித்து, லெண்டினா நோய்வாய்ப்படுகிறாள். பாபு சரக்கொன்றை மரத்தைப் பார்த்து வந்து சேதி சொல்வான். பணிப்பெண், மருமகள்கள், மகன்கள் எல்லோரும் நல்லபடியாகப் பழகுவார்கள். ஒரு மரம் சற்றே வளர்ந்து பூ பூத்தது. ஆனால் குட்டையாக இருக்கும். பாபு சொல்லவில்லை. அடுத்த மே மாதம். நன்கு பூத்துவிட்டது. பாபு அந்தச் செய்தியைச் சொல்ல அவள் அறைக்குள் போவான். ‘நீ ஒன்றும் சொல்லவேண்டாம். என் நாடி நரம்புகளில் அதை நான் உணர்ந்துவிட்டேன்’ எனப் படுத்திருந்த லெண்டினா சொல்கிறாள். போய்ப் பார்க்கிறாள்.

 

ஒரு நாள் மரணிக்கிறாள். அங்கே புதைக்கப்படுகிறாள். சரக்கொன்றை மரம் பூத்துக் குலுங்கிக்கொண்டிருக்கிறது.

 

************

ஒரு வேட்டைக்காரரின் மரணம்


இம்சனோக் ஒரு வேட்டைக்காரர். பழைய துப்பாக்கிக்கு எண்ணெய் போடுவதில் கதைத் துவங்குகிறது. வயல்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றியைக் கொன்றாக வேண்டும்.

 

ஏற்கனவே இம்சனோக் முரட்டுத்தனமாக ஒரு யானையைச் சுட்டு வீழ்த்தியிருந்தார். ஒரு படையுடன் கிளம்பி யானை வரும் இடத்திற்கு வருகிறார். காத்திருக்கிறார். யானை எதையெதையோ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. பிறகு அசையாமல் நிற்கிறது. சுட்டபிறகு யானை போய் விழ ஒரு குழியை வெட்டியிருக்கிறார்கள். யானை இவர்களைப் பார்த்து விட்ட மாதிரி இருக்கிறது. இவரோடு வந்தவர்கள் எல்லோரும் ஓடி விடுகிறார்கள். இவரை நோக்கி வரும் யானையை சரியான இடத்தில் சுடுகிறார். யானை இறக்கிறது. அதற்காக அரசாங்கத்திடமிருந்து பரிசுத் தொகை கிடைக்கிறது. ஒரு துப்பாக்கியும் வெகுமதியாக கிடைக்கிறது. ஆனால் அதை வேண்டாம் என்று மறுத்து விடுகிறார்.

 

சில காலத்திற்கு முன்பு, அறுவடை செய்யும் தானியங்களை பலக் குரங்குகள் நாசம் செய்து வந்தன. முக்கியமாக ஓர் தலைமை ஆண் குரங்கு. பெண்களையும் குழந்தைகளையும் பயமுறுத்தின. வயலுக்கும், கிராமத்திற்கும் இடையே ஒரு குடிசையைக் கட்டி அதில் தானியங்களை வைத்திருப்பார்கள். சுதந்திரமாக குரங்குகளை உலவ விடுகிறார் இம்சனோக். துப்பாக்கியை எடுத்துக் கொண்டுப் போய் அந்த ஆண் குரங்கை சுடுகிறார். அது அடிபட்டும், தன் குடும்பத்தினரை காப்பாற்றிவிட்டு, கதவோரத்தில் விழுந்து விடுகிறது. அந்த ஆண் குரங்கை காட்சிக்கு வைக்கின்றனர். குரங்கின் ஆவி அவரைத் தொல்லை செய்த வண்ணம் இருக்கிறது.

 

இப்பொழுது பன்றியைச் சுடத்தான் துப்பாக்கியை சரி செய்துக் கொண்டிருக்கிறார். தன் மருமகனை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் போகிறார். சிறிது ஓய்வெடுக்கிறார்கள். திடீரென பன்றி பாய்கிறது. சுடுகிறார். விழுகிறது. எழவில்லை. மருமகன் பயந்து ஓடிவிடுகிறான். இம்சனோக் பின்னால் பார்த்துக் கொண்டே ஓடி வருகிறார். இருவரும் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். பன்றியின் உடலைப் பார்த்து எடுத்து வர கிராமத்து இளைஞர்கள் காட்டிற்குப் போகிறார்கள். ஆனால் அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

இம்சனோக் நோய் வாய்ப்படுகிறார். பன்றி பற்றி கொடுங்கனவு அவரைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.  இம்சனோக்கும் அவரது மனைவியும் காட்டிற்குச் சென்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அவர்  சுட்ட இடத்திற்கருகே உள்ள ஓர் ஓடைக்கருகே கரடியின் பல், எலும்பு எல்லாம் கிடக்கிறது. தன் மயிரில் ஒரு கற்றைப் பிடுங்கி எறிகிறார். இருவரும் திரும்பி வருகிறார்கள். வீட்டிற்கு வந்து இம்சனோக் பன்றியின் பல், துப்பாக்கி, வேட்டைக்காரர் என்ற எண்ணம் எல்லாவற்றையும் அவரது வீட்டுத் தோட்டத்தில் புதைக்கிறார் என்று கதை முடிகிறது.

 

********************

 

விமானத் தளத்தை விற்றச் சிறுவன்

 

அஸ்ஸாம் - ஜோர்ஹாட் - இராணுவ முகாம். அருகில் ஒரு கிராமம். பழங்குடி இன சிறுவன் - போக்கன் மாங்க் அவன் பெயர். ஜீதேன் வீட்டில் வேலை. அவரை ‘அப்பா’ என்று கூட அழைக்கிறான். ஒரு தடவை அவனது சொந்த அப்பா வந்து கூப்பிட்ட போது, ‘நான் வரமாட்டேன். இதுக்கும் அம்மாவ அடிக்க வேண்டியது தானே!’ என்று சொல்லி மறுத்துவிடுகிறான். அதிலிருந்து ஜீதேன் மிக அன்பாக வைத்திருக்கிறார்.

 

ஒரு நாள். லெவல் கிராஸிங்கில், வெள்ளைக்கார சிப்பாய்கள் வந்த டிரக்கில் ஏறிக்கொள்கிறான். அன்றைக்குத் திரும்பிப் போகத் தெரியாததால், அரை குறை ஆங்கிலத்தோடு, அவர்களுடனேயே ஒட்டிக்கொள்கிறான். கமாண்டர் கேட்கிறார் ‘உனக்கு என்ன வேண்டும்?’ அவன் ‘லெப்ட் ரைட்’ மார்ச் பண்ணிக் காண்பிக்கிறான். பல வேலைகளைச் செய்கிறான். பிறகு கமாண்டரின் செல்லப் பிள்ளையாகி விடுகிறான். பேசுவதற்குப் பயன்படும் சிறு இயந்திரம் குறித்து ஆர்வமாக இருக்கிறான்.

 

ஞாயிற்றுக் கிழமை. பக்கத்து கிராமத்துக்குப் போகிறான். மக்களோடு பேசுகிறான். வெள்ளைக்கார சிப்பாய்கள் இராணுவ முகாமை விட்டுப் போய்விட்டால் அவனது எதிர்காலம் என்னாவது? என யோசிக்கிறான். காமாண்டர் கேட்கிறார். ‘ஆர் யு சிக்?’ அவன் சொல்கிறான்: ‘உடம்புல நோ சிக். தலையில சிக்’. இராணுவ முகாமிலிருந்து எல்லோரும் வெளியேறும் காலம் வந்துவிட்டது. அந்தக் காலி இடத்திற்கும் அதில் கொட்டப்பட்டுள்ள கழிவுப் பொருட்களுக்கும் அவன் தான் சொந்தக் காரன் என்று ஒரு துண்டுச்சீட்டு எழுதிக்கொடுத்து விட்டு கமாண்டர் மற்ற சிப்பாய்களுடன் இடத்தைக் காலி செய்கிறார். கிராம மக்களிடம் பொருட்களை விற்பதா? என யோசிக்கிறான். ஒரு விவசாயிக்கு எந்த விஷயம் மிகவும் மதிப்புள்ளதாகத் தோன்றும்? நிலம் தான். அந்த விமானத் தளத்தை ரூ.500 க்கு கிராமவாசிகளிடம் விற்றுவி்ட்டு எங்கோ போய்விடுகிறான்.

 

*******************

ஒரு கடிதம்

 

கிராமச் சாலைப் போட்ட வருமானத்தை, கிராமத்தார்களிடமிருந்து பறிக்க ‘தலைமறைவு அரசாங்கத்தின்’ பெயரால் சிலர் கேட்கின்றனர். துப்பாக்கி ஏந்திய போராளிகள் கொடுத்த லிஸ்டில் ஒருவன் பெயர் மட்டும் இல்லை. அவனுக்கு அவன் வீட்டு தரையை சீரமைக்க, மரம் கடன் வாங்கி விட்டான். அதற்கு கொடுக்க வேண்டும். அவன் மகன் தேர்வு எழுதப் பணம் அனுப்ப வேண்டும். அதனால் போராளிகளுக்கு அவன் பணம் கொடுக்க முடியவில்லை. போராளிகள் அவனை தாறுமாறாக அடிக்கிறார்கள். கிராம மக்கள், தலைமறைவு சக்திகள், அரசாங்க ஏஜெண்ட்கள் மற்றும் இந்திய இராணுவத்தினர் ஆகியோரை சமாளிக்க வேண்டியிருக்கிறது.

 

கிராமத்தலைவர் வீட்டில், இளைஞர்களும் பெரியவர்களும் ஆலோசனை நடத்துகிறார்கள். கீழ்க்கண்ட முடிவுகளை எடுக்கிறார்கள். இனி தலைமறைவு சக்திகளுக்கு வரி கொடுப்பதில்லை. சம்பளம் பெறாமல் அரசாங்கத்திற்கு வேலை செய்வதில்லை. இந்திய இராணுவ சிப்பாய்களுக்கு தங்கள் விளைப்பொருட்களை விற்பதில்லை.

 

ஒரு நாள். ஒருவன் கிராமத்திற்கு புதிதாக வருகிறான். தன் கணவன் கடத்தப்பட்டு தனியாளாக இருக்கும் மூதாட்டியிடம் தலைவர் வீட்டிற்கு வழி கேட்கிறான். ஆனால் அவளோ இளைஞர்கள் கூடியிருக்கும் கூடாரத்திற்கு வழி காட்டி விடுகிறாள். போகிற வழியில், நாகர் இன மக்கள் பயன்படுத்தும் மரப் பிடியுள்ள கத்தியான ‘தாவோ’ என்கிற கத்தியோடு, அவசர கால வரி தரவேண்டும் என்று கிராமத்து மக்களை மிரட்டுகிறான். இளைஞர் கூட்டம் அவனைச் சுற்றி மடக்குகிறது. அவன் துப்பாக்கியால் சுடுகிறான். நல்ல வேளை அது தப்பிவிடுகிறது. இளைஞர்கள் அவனை அடிக்கிறார்கள். துவண்டு விழுகிறான். உயிர் ஊசலாடுகிற நிலையில் காட்டுக்குத் தூக்கிச் செல்லுகிறார்கள். மலை முகட்டில் இருந்து தூக்கி எறியும் முன் அவன் பாக்கெட்டில் இருந்து 49 ரூபாய் பணத்தையும் ஒரு கடிதத்தையும் ‘நீளக் காலன்’ (நீளமாக கால் உள்ளவன்) எடுக்கிறான். துப்பாக்கியையும் அவனையும் தூக்கி எறிகிறார்கள்.  தன் தேர்வுக்கான கட்டணத்தை உடனே அனுப்புமாறு தந்தையிடம் கெஞ்சிக் கேட்டிருந்த கடிதத்தை நீளக் காலன் படித்து சோகமயமானதாக கதை முடிகிறது.

 

*************

மூன்று பெண்கள்

 

அவனுக்குக் குழந்தைப் பிறக்கிறது. மருத்துவச்சி பிள்ளைப் பிறந்த சேதியைச் சொல்லிவிட்டு போகிறாள். அவன் பார்க்கத் துடிக்கிறான். ஆனால் அவனது மனைவியின் அருகே இரண்டு பெண்கள் உட்கார்ந்து மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் மனைவியோடு சேர்ந்து மூன்று பெண்களின் கதை தான் இது.

 

மார்த்தா (பேத்தி)

‘என் கறுப்பு நிறத்தை மற்றப் பிள்ளைகள் கேலி செய்வார்கள்’ ‘கூலி என்று கூப்பிடுவார்கள்’ என்று கவலைப்படுகிறாள் மார்த்தா. அவளது தலைமுடி வித்தியாசமாக சுருள் முடியாக இருக்கும். பேன்கள் நிறைய இருக்கும். ஒரு நாள் அவளது நண்பி ‘உன் அம்மா உன் நிஜமான அம்மா இல்ல…’ என்று சொல்வாள். பாட்டியிடம் கேட்க அவள் அமைதியாக இருப்பாள். உண்மையான உறவுகளிடம் அனுப்பிவிடுவார்களோ என்று மார்த்தா பயப்படுகிறாள்.

 

மெடம்லா (தாய்)

மார்த்தாவின் தாய். தாய் என இதுவரை நம்பப்பட்டவள். அவளுக்குச் சுகாதார அலுவலகத்தில் பணி. பணி முடிந்ததும் வீட்டிற்கு வருகிறாள். பாட்டியும் மார்த்தாவும் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறாள். அவள் கதை இது தான். மெடம்லாவுக்கு ஒருவனோடு (இம்சுடெம்ஜன்) காதல். திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன் காதலனின் தந்தை ‘இந்தக் கல்யாணம் நடக்காது’ என்று நிறுத்திவிடுகிறார். ஏமாந்து போன மெடம்லா தன் பிரசவ கேஸ்களைப் பார்க்கும் பணியில் ஆழ்ந்துப் போகிறாள். அப்பொழுது தான் மார்த்தாவின் தாய், மார்த்தாவை பிரசவித்து விட்டு, வலிப்பு வந்து, இறந்து போகிறாள்.

 

மார்த்தாவின் அம்மா, தேயிலைத் தோட்ட வேலை செய்யும் மரபினர். ஆப்பிரிக்க இனத்து முகம். சுருள் முடி. மார்த்தாவின் தாய் மரணத்திற்கு தானும் ஒரு காரணம் என்று மெடம்லா நினைக்கிறாள். மார்த்தா ஓர் அனாதை விடுதியில் வளர்கிறாள். அவளைப் பார்க்காமல் மெடம்லாவால் இருக்க முடியவில்லை. வேறு யாரும் மார்த்தாவைத் தத்து எடுக்கும் முன் மெடம்லாவே மார்த்தாவைத் தத்து எடுத்துக் கொள்கிறாள். தத்து எடுத்தால் வேலைப் போய்விடும் என்று தெரிந்தும் தத்து எடுக்கிறாள். அவளது பெற்றோர் வீட்டில் வளர்கிறாள் மார்த்தா. லிபோக்டுலா மெடம்லாவின் தாய், முதலில் மார்த்தாவின் புறத்தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியுற்றாலும், மார்த்தாவின் புன்னகையைப் பார்த்து நன்கு பழகிவிடுகிறார்கள். ஆனால் இன்று பாட்டியும் (லிபோக்டுலாவும்) மார்த்தாவும் ஒருவர் முகம் ஒருவர் பார்க்காமல் உட்கார்ந்திருக்கிறார்கள்.

 

லிபோக்டுலா (பாட்டி)

மார்த்தாவின் பாட்டி. மெடம்லாவின் தாய். மெரன்சஷி (கிராம சபை உறுப்பினர்) லிபோக்டுலாவை பலவந்தப்படுத்தி உடலுறவு கொள்கிறார். அந்த உறவில் பிறந்தவள் தான் மெடம்லா. மெரன்சஷியின் மகன் இம்சுடெம்ஜன். லிபோக்டுலாவின் (தத்து) மகள் மெடம்லா வெளியூரில் நர்ஸூக்காகப் படிக்கும் போது இம்சுடென்ஜனுடன் காதல் வயப்படுகிறாள். ஆனால், லிபோக்டுலாவும் இம்சுடெம்ஜனும் அக்கா தங்கை என அவளுக்குத் தெரியாது. தன் காதலை மெடம்லா அவள் அம்மாவுக்கு (லிபோக்டுலாவுக்கு) தெரிவித்ததும், அவள் அந்தத் திருமணத்தை நிறுத்த முயல்கிறாள். மெரன்சஷியிடம் (தன்னை பலவந்தப்படுத்தி ஒரு மகளை - மெடம்லாவைக்கொடுத்தவரிடம்) சென்று ஒரு கடிதம் எழுதச் சொல்கிறார். அவர் அந்தத் திருமணம் வேண்டாம் என்று கடிதம் எழுதுவதால், மெடம்லாவின் கல்யாணம் நின்று விடுகிறது.

 

இன்று

மார்த்தா (பேத்தி) ஒரு பையனைக் காதலித்து கர்ப்பமாகிறாள். அவளுக்கு குழந்தைப் பிறந்திருக்கிறது. குழந்தையைச் சுற்றி அந்தப் பெண்கள் இருக்க, அவன் பிறந்த குழந்தையைப் பார்க்காமலேயே நழுவிச் செல்வதாகக் கதை முடிவடைகிறது.

 

************

 

ஓர் எளியக் கேள்வி

 

 இம்டோங்க்லா ஒரு கெட்ட கனவைக் காண்கிறாள். தன் கணவனை வீட்டிலேயே இருக்கச் சொல்கிறாள். அவளுடைய அப்பா ஒரு காவ்புரா (தலையாரி). அவள் கணவனும் ஒரு காவ்புரா. அவளுக்கு நான்கு குழந்தைகள். அந்தக் கிராமத்தில் தீவிரவாத சக்திகள், தங்கள் இயக்கத்தில் சேர இளைஞர்கள் கேட்பார்கள். அரசாங்கம், புரட்சிக்காரர்களின் நடவடிக்கைகளைப் பற்றித் துப்புக் கேட்பார்கள். இந்திய இராணுவம் அவர்களின் தேவைகளைக் கேட்பார்கள்.

 

ஒரு நாள். தீவிரவாதிகள் அந்தக் கிராமத்திற்கு வந்து அரிசி உட்பட மற்றப் பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்தார்கள். இம்டோங்க்லாவின் பக்கத்து வீட்டுக்காரன் குறைந்த அரிசி கொடுத்ததால் அவனைத் திட்டிக்கொண்டிருந்தார்கள். உடனே, இம்டோங்க்லா ‘உன்னிடம் கடன் வாங்கிய அரிசியைப் பெற்றுக் கொள்’ என்று சமயோசிதமாகச் சொல்லி கொஞ்சம் அரிசியைக் கொடுக்கிறாள். அப்படிப்பட்ட குணம் உடையவள் அவள்.

 

ஒரு வருடம் இரட்டை வரிக் கேட்டார்கள். இம்டோங்க்லா தீவிரவாதி தலைவர்களிடம் போய் பேசச் சொன்னாள். பட்டாளத்துக்காரங்க அவளது கணவனை, அவன் தலைமறைவுக்காரர்களுக்கு உதவி செய்ததற்காக பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். குளிருக்கு சால்வையை எடுத்துக் கொண்டு அவள் இராணுவ முகாமுக்குச் சென்றாள். அவள் கணவனுக்குச் சால்வையை கொடுத்து விட்டு, அவன் முன் குதிக்கிறாள். இராணுவத் தலைவன் முன், அவளது மேலாடையைக் கழற்றி, அவளைச் சிறுமைப் படுத்துவது போல் முயன்றாள். புகையிலையை நிரப்பி புகை விட்டாள். இராணுவத் தலைவனின் தீப்பெட்டியை எடுத்துக் கொண்டே, ‘எங்க கிட்டே இருந்து உங்களுக்கு என்ன தான் வேணும்?’ என்று கேட்டாள். கேட்டுவிட்டு கணவனோடு வீட்டிற்குத் திரும்பினாள்.

 

இராணுவத் தலைவன் புகைப்பிடிக்க விரும்புகிறான். தீப்பெட்டியைத் தேடுகிறான். அது அங்கு இல்லை என்று கதை முடிகிறது.

 

*************

ஸோனி

 

பெற்றோர்களுடன் தங்கிச் செல்வதற்காக மகள், அந்தக் கிராமத்திற்கு வருகிறாள். வெவ்வேறு விடுதலைப் போராட்டக் குழுக்களிடையே சண்டை நடக்கிறது. ஸோனியை, அவன் வீட்டில் வைத்து ஒரு குழுவினர் சுட்டுவிட்டதாக, மருமகள் இவளுக்கு போன் செய்கிறாள். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக ஸோனி இவள் வாழ்வில் இல்லை. இப்பொழுது பிரிவுத் துயரம் கடுமையாகத் தாக்குகிறது.

 

அந்தக் கடைசி நாளை நினைத்துப் பார்க்கிறாள். ஆயுதங்கள் வாங்க சீனாவுக்கு அவன் ஒரு குழுவினரோடு செல்ல வேண்டும். இருவரும் தனியே இருந்தார்கள். உடல் வேட்கைத் தீர்ந்ததும் கட்டியணைத்தபடியே இருந்தார்கள். காலை எழுந்து சென்று விடுகிறாள். அவன் பிரிந்து செல்கிறான். வெறுமை.

 

ஒரு நகரத்திற்கு வந்து விடுகிறாள். தேசிய நாளிதழ் ஒன்றில் அவளுக்கு வேலை. விடுதலைக் குழுத் தலைவன் ஒருவன் ஒரு பெண் போராளியைத் திருமணம் செய்துக் கொண்டான் என்ற செய்தி அவளை உலுக்கியது. ஸோனியை வெறுத்தாள். வழித் தவறி இன்பக்களியாட்டங்களில் ஈடுபட்டாள். அவளது அண்ணன் வந்து மீட்டெடுக்க, வீட்டில் ஸோனியின் கடிதங்கள் இருந்தன. ‘என்னைத் தடுத்திருக்கலாமோ நீ’ என ஒரு கடிதம். அவனும் ஒரு சராசரி மனிதன் தான் என நினைக்கிறாள். இரண்டு முறை அவனை இழந்தாள். முதல் முறை இலட்சியத்தால். இரண்டாம் முறை இப்பொழுது மரணத்தால். அண்ணன் ஒரு உறை கொடுக்கிறான். அதில் ஒரு கணிணி ஃப்ளாப்பி இருந்தது. அதை ஒரு வங்கி லாக்கரில் வைத்துவிட்டு வந்துவிடுகிறாள் என்று கதை முடிகிறது.

 

***********

பறத்தல்

 

முட்டைக்கோஸ் செடிக்கடியில் சூரிய ஒளியில் இருந்த கம்பளிப் பூச்சியை ஜானி எடுத்து இருட்டான ஓர் அட்டைப் பெட்டியில் போட்டுத் தன் அறையில் வைக்கிறான். அவனுக்கு அந்தக் கம்பளி பூச்சி ஆழகாகத் தெரிகிறது. ஜானியின் தங்கைக்கு அது அசிங்கமாகத் தெரிகிறது. அவன் அதற்கு ‘டிராகன்’ என்று பெயர் வைக்கிறான். அவன் அட்டைப் பெட்டியைத் திறக்கும் போது வெளிச்சம் இருக்கும். மூடி இருக்கும் போது இருள் இருக்கும். துவக்கத்தில் அதிக வெளிச்சமும் குறைந்த இருளும் இருந்தது மறைந்து, குறைந்த வெளிச்சமும் அதிக இருளும் இருக்கிற காலம் வரும். ஜானிக்கு உடல் நிலை மோசமாகிவிடும். ஒரு நாள் அது வண்ணத்துப் பூச்சியாகி விடும். அவனுக்கு அந்த மாற்றம் அழகாகத் தெரியவில்லை. தங்கை ‘வெகு அழகு’ என்கிறாள். அவன் மூச்சி நின்று போகிறது. அது பறந்து போகிறது என்று கதை நிறைவுறுகிறது.

 

*********

Comments


© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page