என் தலைக்கு மேல் சரக்கொன்றை - கதை - வாசிப்பு அனுபவம்
- உயிர்மெய்யார்
- 6 hours ago
- 5 min read

என் தலைக்கு மேல் சரக்கொன்றை
சிறுகதைத் தொகுப்பு
முதலில் கதைச் சுருக்கம். பிறகு வாசிப்பு அனுபவம்.
என் தலைக்கு மேல் சரக்கொன்றை - கதைச் சுருக்கம்
ஒரு கல்லறையில் சரக்கொன்றை மரம் ஒன்று மஞ்சள் வண்ண அழகான பூக்களைச் சொரிந்துக் கொண்டிருக்கிறது. கல்லறைகளில் கிரானைட் கற்களைப் பதித்து உயிர்ப்பில்லாத வாசகங்களை எழுதும் பழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு, இந்த உயிர்ப்பான பூக்கள் அந்தக் கல்லறையில் விழுந்து மலர்ச்சியாக இருக்கிறது. அந்தக் கல்லறை லெண்டினா என்ற பெண்ணின் கல்லறை. அந்த மரம் எப்படி அங்கு வந்தது என்பதில் கதைத் தொடங்குகிறது.
லெண்டினா, தரையை நோக்கிக் கொத்துக் கொத்தாய் தலை கவிழ்ந்திருக்கும் கொன்றை மரம் ஒன்றை தன் வீட்டில் நட ஆசைப்படுகிறாள். காம்பவுண்ட் சுவர் ஓரத்தில் நடுகிறாள். தோட்டக்காரர் அறியாமல் பிய்த்துப் போட்டு விடுகிறார். வீட்டின் இன்னொரு புறத்தில் நடுகிறாள். வாயிற் கதவு திறந்திருந்து ஒரு சமயத்தில் மாடுகள் உள்ளே புகுந்து மேய்ந்து விடுகின்றன. மூன்றாவது முறையாக வீட்டின் மறுபுறத்தில் நடுகிறாள். சுகாதரத்துறைப் பணியாளர் தெரியாமல் அதன் மேல் பூச்சிக்கொல்லியை அடித்து சாகடித்துவிடுகிறார். ஆனாலும் கொன்றை மரத்தின் மேல் அவளுக்கிருந்த காதல் போகவேயில்லை.
லெண்டினாவின் கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போய், அவரை அடக்கம் பண்ண கல்லறைக்கு எல்லோரும் போகிறார்கள். பெண்கள் கல்லறை வரும் போகும் பழக்கம் இல்லாவிட்டாலும், லெண்டினா கல்லறைத் தோட்டத்திற்குச் செல்கிறாள். அங்கே இருக்கும் போது அவளுக்கு ஒரு யோசனை வருகிறது. ‘கல்லறையில் அடையாளக் கல் இல்லாமல் ஏன் சரக்கொன்றை மரம் ஒன்றை நடக்கூடாது?. அதுவும் அவளது கல்லறையில்?’ இந்த யோசனையின் போது, அந்த சோகமயமான நேரத்திலும் லேசான ஒரு புன்னகை அவளுக்கு வருகிறது.
லெண்டினாவின் இந்த ரகசியத் திட்டத்தை யார் மூலமாகச் செய்வது? சமையற்காரருக்கு குடும்பம் உண்டு. குடும்பத்தில் ரகசியம் காக்கமுடியாது. தோட்டக்காரருக்கும் அப்படியே. மனைவி இல்லாத கார் ஒட்டுனர் தான் அதற்கு உகந்தவர் என்று முடிவு செய்கிறாள். அவரின் பெயர் பாபு என்கிற மாபு. ஒரு நாள் கல்லறைத் தோட்டத்திற்கு லெண்டினாவும் பாபுவும் செல்கிறார்கள். ஓர் இடத்தைக் கண்டுபிடிக்கிறாள். டவுன் கமிட்டியிடம் அனுமதி வாங்க பாபுவிடம் சொல்கிறாள். பாபுவின் மருமகன் அங்கு வேலை செய்கிறான். முறையான விண்ணப்பம் கேட்கிறான். அதில் யார் கையெழுத்திடுவது எனக் குழம்புகிறாள்.
அப்பொழுது தான் அவளது கணவரின் (கேலாங் - அவரது பெயர்) நண்பரின் மகன் அவளைச் சந்திக்கிறான். அவனுக்குப் பொருளாதாரப் பிரச்னை. கல்லறைத் தோட்டத்திற்குப் பக்கத்தில் ஒரு நிலம். அதனை அவன் விற்க வேண்டும். அவள் பேசி வாங்கி விடுகிறாள். மகன்கள், மருமகள்கள் எதிர்த்துக் கேட்க, கணவருக்கு கல்லறைக் கட்டும் போது ‘யார் செலவு செய்வது’ என்று அவர்களுக்குள் நடந்த உரையாடலை வெளிப்படுத்தி வாயை அடைக்கிறாள்.
டவுன் கமிட்டி ஆட்கள் அவளைச் சந்திக்கிறார்கள். கற்சின்னங்களை எழுப்பாமல் பூக்களைச் சொரியும் மரங்களை நடுபவர்களே பயன்படுத்தலாம் என்றும் லெண்டினா முதல் நபராக இருப்பார் என்றும் சொல்லி டவுன் கமிட்டிக்கு அந்த நிலத்தை எழுதிக் கொடுக்கிறாள். அங்கு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து ஒரு சரக்கொன்றை மரத்தை நடுகிறாள்.
லெண்டினா நோய்வாய்ப்படுகிறாள். பாபு சரக்கொன்றை மரத்தை பார்த்து வந்து சேதி சொல்வான். பணிப்பெண், மருமகள்கள், மகன்கள் எல்லோரும் நல்லபடியாகப் பழகுவார்கள். ஒரு மரம் சற்றே வளர்ந்து பூ பூத்தது. ஆனால் குட்டையாக இருக்கும். பாபு சொல்லவில்லை. அடுத்த மே மாதம். நன்கு பூத்துவிட்டது. பாபு அந்தச் செய்தியைச் சொல்ல அவள் அறைக்குள் போவான். ‘நீ ஒன்றும் சொல்லவேண்டாம். என் நாடி நரம்புகளில் அதை நான் உணர்ந்துவிட்டேன்’ எனப் படுத்திருந்த லெண்டினா சொல்கிறாள். போய்ப் பார்க்கிறாள்.
ஒரு நாள் மரணிக்கிறாள். அங்கே புதைக்கப்படுகிறாள். சரக்கொன்றை மரம் பூத்துக் குலுங்கிக்கொண்டிருக்கிறது.
என் தலைக்கு மேல் சரக்கொன்றை - வாசிப்பு அனுபவம்
கதை இந்தியாவில் பிரம்மபுத்திரா ஆறு பாயும் நாகலாந்தில் நடப்பதாகத் துவங்குகிறது. நான் திரிபுரா மாநிலத்திற்கு ஒரு பயிற்சி கொடுப்பதற்காகப் போயிருந்தேன். நான் தங்கியிருந்த அறையிலிருந்து பிரம்மபுத்திரா ஆறு தெரிந்தது. கடல் போல் காட்சியளித்தது. உலகத்தின் ஒரு பக்கம் துவங்கி, மறு பக்கத்துக்கு ஆரவாரமாக ஓடிக்கொண்டிருந்தது போல் ஓர் பிரம்மை எனக்கு. அந்த பிரம்மபுத்திரா ஆற்றை கண்கொட்டாமல் ஓர் இரவு முழுக்கப் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன். அவ்வளவு வசீகரம் அந்த ஆற்றுக்கு உண்டு!
லெண்டினா என்கிற நடுத்தர வயதுப் பெண்ணின் கதை இது. தன் கணவன் இறந்து அவனைக் கல்லறைக்கு எடுத்துச் சென்ற போது தான் அவைகளைக் கவனிக்கிறாள். அழகழகான கற்களைக் கொண்டு பிரம்மாண்டமாக அலங்கரித்த கல்லறைகள். அவைகளை அவளுக்குப் பிடிக்கவில்லை. மரணம் என்பது இயக்கமற்ற ஒரு விதமான சாவு அல்ல. அது உயிர்ப்புடன் கூடிய வேறு விதமான வாழ்வு என்று அவள் நினைத்திருக்க வேண்டும். அதனால் தன் கல்லறையில் கற்கள் வேண்டாம். பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை மரம் நடப்படவேண்டும் என்று நினைக்கிறாள். அது நட்டாளா? பூத்துக் குலுங்கியதா என்பது தான் கதை.
டெம்சுலா ஆவ், வித்தைத் தெரிந்த எழுத்தாளர். அதோடு எம்.ஏ.சுசீலா ஆகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர். கதை மாந்திரங்களின் பெயர்கள் தவிர, மற்றவை தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வாசகர் வட்டத்தில் கிட்டத்தட்ட எல்லோரும் அவரை மெச்சித் தள்ளினார்கள்.
இந்தக் கதையில் முதல் பாராவிலேயே இப்படி எழுதுகிறார். ‘தன் இருப்பைப் பறித்துக் கொண்ட மரணத்தை வென்றபடி தான் நிலையாக இருப்பதான ஒரு பொய்த் தோற்றத்தை உண்டாக்க மனிதர்கள் முயன்று கொண்டிருக்கும் அப்படிப்பட்ட ஓரிடத்தில், (கற்கள் நடப்பட்ட கல்லறைத் தோட்டத்தைத் தான் சொல்கிறார்) பூத்துச் சொரியும் அந்தக் கொன்றை மரம் இருக்க லெண்டினா ஆசைப் படுகிறாள்.
வாசகர் வட்டத்தில் ஒருவர் கேட்டார்: ‘ஏன் இறந்த பின்னும், மனிதர்கள் தன் பெயர் என்றைன்றைக்கும் நிலையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்?’. லெண்டினாவின் ஆசையும் அப்படிப்பட்டது தானா? எனக்கு மகாபாரதத்தில் இருந்த ஒரு கிளைக் கதை ஞாபகத்திற்கு வருகிறது. யுதிஷ்டிரன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரும் பாண்டவர்கள். அவர்களை நோக்கி ஒரு பிராமணன் ஓடி வருகிறான். பூசைக்காக தான் காய வைத்திருந்த புல்லை ஒரு மான் தனது கொம்பில் மாட்டிக் கொண்டு ஓடிவிட்டது என்று அழுகிறான். அதனைப் பிடித்து, புல்லை கொண்டு வந்து தாருங்கள் என்று கெஞ்சுகிறான். யுதிஷ்டிரன் தன் சகோதரர்களை வெவ்வேறு திசைக்கு அனுப்புகிறான். அவர்கள் எவ்வளவு தேடியும கிடைக்கவில்லை. எல்லோருக்கும் தாகம் எடுக்கிறது. தண்ணீரைத் தேடி நகுலனை அனுப்புகிறான் யுதிஷ்டிரன். தூரத்தில் ஒரு குளம் இருக்கிறது. நகுலன் தண்ணீர் குடித்து விட்டு அண்ணன்களுக்கு தண்ணீர் எடுத்துப் போகலாம் என்று குளத்தில் இறங்குகிறான். அப்பொழுது ‘தண்ணீரைக் குடிக்காதே. என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு குடி’ என்கிற ஓர் அசரீரி கேட்கிறது. அதனை அசட்டை செய்ததால் நகுலன் இறந்து போகிறான். அது போலவே, சகாதேவன், பீமன், அர்ஜூனன் எல்லோரும் அந்த அசரீரீயை அசட்டை செய்து குளத்தில் இறங்க எத்தனிக்க, அவர்கள் எல்லோரும் இறந்துப் போகிறார்கள். தம்பிகள் யாரும் வராததைக் கண்ட யுதிஷ்டிரன், அவனே நேராக அந்தக் குளத்திற்குப் போகிறான். அசரீரீ குரலை நோக்கி ‘நீ யார்?’ என்று கேட்கிறான். அப்பொழுது யட்சன் தோன்றுகிறான். யட்சன் பல கேள்விகளைக் கேட்கிறான். அதற்கு யுதிஷ்டிரன் பதில் அளிக்கிறான். அதில் ஒரு கேள்வி - ‘யுதிஷ்டிரா! எது உன்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது? அதற்கு அவனுடைய பதில் ‘தினமும் பாடையில் பிணம் செல்வதைப் பார்த்தும், வாழ்க்கை சாஸ்வதமானது என்று மக்கள் நினைத்துக்கொண்டு, அன்றாட வாழ்வில் கவனம் செலுத்துவது தான் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.’ என்கிறான். இப்படிப் போகும் அந்தக் கதை. ’மரணத்தை வெற்று தாங்கள் நிலையாக இருப்பதாகப் பொய்ப் பாசாங்கு காட்ட எண்ணும் மனித முயற்சிகளிலிருந்து விடுபட்ட அப்படி ஒரு சூழலில்’ என்று தான் கதையை முடித்திருப்பார் ஆசிரியர்.
லெண்டினா, பல தடவை ஆசைப் பட்டும் சரக்கொன்றை மரத்தை அவர் வீட்டில் வளர்க்க முடியவில்லை. லட்சியத்தில் கண்ணாய் இருப்பவள். தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டே இருக்கிறாள். இது தான் வெற்றிக்கு அடிப்படை. தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டே இருப்பது. கணவர் இறக்க, அவரது சடலத்தை கல்லறைக்குத் தூக்கிச் செல்லும் போது பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருந்துவிடுவதும், கல்லறைக்குப் போக அனுமதி இல்லாமல் இருப்பதும், ‘அட! அங்கயுமா?’ என்று நினைக்கத் தோன்றியது. பெண்களை ஏன் மயானத்திற்குள் செல்ல இந்தச் சமூகம் அனுமதி மறுத்தது. ஆனால் லெண்டினா வித்தியாசமானவள். அந்த நியாயமற்றப் பழக்கத்தை மீறி கல்லறைத் தோட்டத்திற்குப் போகிறாள். தொடர் முயற்சி மட்டுமல்ல, துணிவுடம் முடிவெடுப்பதும் ஓர் லட்சியவாதிக்கு அழகு போலும்! அப்பொழுது தான் கல்லறைகளில் அடையாளக் கல்லைத் தவிர்த்து, பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை மரம் நடுவது பற்றி யோசிக்கிறாள்.
அந்தக் கல்லறைத் தோட்டத்திலேயே ஓரிடம் பார்க்கிறாள். அதில் சிக்கல் வரும் பொழுது, பக்கத்தில் இருந்த ஓர் இடம் அவளுக்கு வருகிறது. அந்த இடத்தை வாங்கி விடுகிறாள். ஆனால் அங்கு அவளுக்கென்று ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு சரக்கொன்றை மரத்தை நடவேண்டும். அது இரகசியமாகவும் இருக்க வேண்டும். தன் இரகசியத் திட்டத்தை தன் கார் ஓட்டுநர் மூலமாக செய்ய முடிவெடுக்கிறாள். பாபு என்ற அந்த ஓட்டுநரும் அதைச் செவ்வனே செய்கிறார். வாசகர் வட்ட நண்பர்கள் பலர் லெண்டினாவுக்கும் ரவிக்கும் இடையே புனையப்பட்ட புனித உறவை மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். உறவுகள் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகிறது. வளர்கிறது. இதற்கு இவர்கள் இருவரின் உறவே சாட்சி. பாபு சொன்னபடியே சரக்கொன்றை மரத்தை நடுகிறான். லெண்டினா இறந்து போகிறாள்.
மரணம் பற்றிய நினைவு என்னைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டேயிருக்கிறது.
ஒரு தடவை என் தந்தையாரிடம் கேட்டேன். என் தந்தையார் தன் 96வது வயதில் காலத்தில் கரைந்துப் போனார். அவர் உயிரோடு இருக்கும் போது ஓர் மழை நாளில், தஞ்சையில் அவரிடம் கேட்டேன். ‘சாவைக் கண்டு பயம் வருவது உண்டா?’ அவர் உதட்டோரம் சிறிய புன்னகையைத் தவழ விட்டுக்கொண்டே சொன்னார்: “ஒன்று நடக்குமோ? நடக்காதோ? வருமோ? வராதோ? என கணிக்க முடியாத பொழுது பயம் வரும். ஆனால் மரணம் நிச்சயம் நடக்கக் கூடிய ஒன்று. நிச்சயமான ஒன்றைப் பற்றிய பயம் எதற்கு?” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு, வாழ்நாள் முழுவதும் என் நெற்றியில் எழுதி ஒட்டிய ஒரு வாசகத்தைச் சொன்னார். “பட்டினத்தாரின் பாட்டு கேள்விப் பட்டிருக்கியா? ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’. இதுவே ‘கவலை என்னை கவர்ந்து விடாமல், பயம் என்னைப் பற்ற விடாமல்’ வாழ்வில் வழி நடத்துகிறது” என்றார். மேன்மக்கள் மேன்மக்களே! அவரது கொஞ்சம் ஞானம் எனக்கும் வந்துவிடாதா? அப்படிப்பட்ட ஞானம் ஓர் இரண்டு வயது குழந்தையிடமிருந்து நான் கற்றேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
மலேசியாவில் பினாங்கு நகரில் வசிக்கும் பேராசிரியர் முனைவர் சிவக்குமார் அவரது மனைவி செல்வி குடும்பம் எங்களுக்கு மிகவும் தெரிந்தக் குடும்பம். அவர்களது மகன் தான் ஞாலன். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு, ஞாலன் இரண்டு வயதுக் குழந்தையாக இருந்த பொழுது, சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுது அவன் சொன்னான்: “எனக்குப் பிடிக்கவில்லை. நான் அன்பு செய்கிற மனிதர்கள் ஏன் சாக வேண்டும்? அது எனக்குப் பிடிக்கவில்லை”. அது தானே! ஏன் சாக வேண்டும்? சாவை வெல்லவே முடியாதா? உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதற்குப் பதில் ஆண்ட்ரு சொன்னான்.
என் சித்தப்பா பையன் மில்டனின் மகன் தான் ஆண்ட்ரு. அவன் சொன்னான்: “பெரியப்பா! நான் மரணிக்கப் போவது இல்லை. நாங்கள் ஓர் ஆய்வு செய்துக் கொண்டிருக்கிறோம். சாகாமல் இருப்பது எப்படி என்று ஆய்வு செய்துக் கொண்டிருக்கிறோம். நான் முதுமை அடைவதற்குள், அதில் வெற்றிக் கண்டு விட்டோமென்றால், நான் சாகமாட்டேன்.” அப்படி ஓர் ஆராய்ச்சி நடந்துக் கொண்டிருக்கிறது என்றே எனக்குத் தெரியாது. பிறது அது பற்றித் தேடும் போது பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. எடுத்துக்காட்டுக்கு ஒன்று சொல்கிறேன். மீதியை நீங்களேத் தேடிக் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.
அமசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) வயது மூப்பை எதிர்க்கும் ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமான ஆல்டோஸ் ஆய்வகங்கள் (Altos Labs) என்ற பயோடெக் ஸ்டார்ட்அப்பில் 42 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளார். இந்த ஆராய்ச்சி நிறுவனம் மனித ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கும், வயது மூப்பால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்கும், செல்களை மறு நிரலாக்கம் (biological reprogramming) செய்யும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடலை இளமையாக்குவதற்கும் முயற்சிக்கிறது. இதன் மூலம் மரணத்தை தாமதப்படுத்துவது அல்லது வயது தொடர்பான பிரச்சினைகளை மாற்றியமைப்பது இலக்காக உள்ளது என்று கண்டேன்.
ஆச்சரியம்! லெண்டினா இறந்தும் வாழ முயற்சித்தாள். அதற்குச் சாட்சியாக அவளது கல்லறையில் சரக்கொன்றை மரம் இன்றும் பூத்துக் குலுங்கிக்கொண்டே இருக்கிறது. இப்பொழுது மனிதர்கள் இறக்காமல் வாழ முயற்சிக்கிறார்கள். இதற்குச் சாட்சி என்னவாக இருக்கும்?
(ஆசிரியர் - டெம்சுலா ஆவ்; தமிழில் - எம்.ஏ. சுசீலா; முதல் பதிப்பு - 2009; தமிழில் முதல் பதிப்பு - 2022; நற்றிணைப் பதிப்பகம்)
உயிர்மெய்யார்
(பேரா. முனைவர். ஜான் பிரிட்டோ பரிசுத்தம்)
ஏப்ரல் 2025, மெல்பர்ன்
**********
Comentarios