சிற்றிலக்கியங்களில் உயிர்மெய்யம்
- உயிர்மெய்யார்

- Aug 11
- 9 min read
Updated: Aug 12

முன்னுரை
உயிர்மெய்யம் என்கிற தமிழர் வாழ்வியல் மெய்யியல் எப்படி சிற்றிலக்கியங்களில் பிரதிபலிக்கிறது என்பதை இக்கட்டுரை அலசுகிறது. உயிர்மெய்யம் என்றால் என்ன?அதற்கு மனிதநேயம், உயிர்மநேயம், மெய்மநேயம் ஆகிய மூன்றையும் பற்றிய புரிதல் வேண்டும்.
முதலில் மனிதநேயம். மனிதநேயம் என்பது மனிதர்களிடையே இரக்கம், பரிவு, அன்பு, புரிதல், காதல் மற்றும் மற்றவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் பண்பாகும். இது பிறரின் துன்பங்களை உணர்ந்து கொள்வதில் துவங்கும். பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையில் தொடரும். அனைவரையும் சமமாக மதிக்கும் உயர்ந்த குணத்தையும் கொண்டிருக்கும். சாதி, மதம், இனம், பால், நிறம், மொழி, அல்லது பிற வேறுபாடுகளைக் கடந்து, மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் பண்பு தான் மனித நேயம். அப்படியானால் உயிர்மநேயம் என்றால் என்ன?
உயிர்மநேயம், மனிதநேயத்தை விட சற்றேப் பரந்த பொருள் கொண்டது. ஏனெனில் இது மனிதர்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கியது. அதனால் உயிர்மநேயம் என்பது அனைத்து உயிரினங்களிடமும் காட்டும் அன்பு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிற உயிர்வாழிகள் மீது காட்டப்படும் நேயம். உயிர்மநேயம் என்பது, அனைத்து உயிரினங்களின் மீது உள்ள இரக்கம் மற்றும் மரியாதையைக் குறிக்கிறது. அனைத்து உயிர்களின் மதிப்பை உணர்ந்து கொள்வது உயிர்மநேயம். அனைத்து உயிர்களின் நலனுக்கு பங்களிக்கும் மனப்பான்மையே உயிர்மநேயம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. (திருக்குறள். 322) என்று திருவள்ளுவர் கூறுகிறார். கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் என்று மு. வரதராசன் அவர்கள் இதற்கு பதவுரை எழுதியுள்ளார். மெய்மநேயம் என்றால் என்ன?
மெய்மநேயம் என்பது ஆறு, மலை, கடல் போன்ற இயற்கை வளங்கள், கருவிகள், சுற்றுச்சூழல், மொழி, இசை, கட்டிடங்கள், கலை, இலக்கியங்கள் போன்ற உயிரற்ற பொருட்கள் மீது காட்டப்படும் அன்பு, மரியாதை, அக்கறை மற்றும் பொறுப்புணர்வைக் குறிக்கிறது. ஆக, உயிர்மெய்யம் என்றால் என்ன?
உயிர்மெய்யம் என்பது மனிதநேயத்தையும், உயிர்மநேயத்தையும், மெய்மநேயத்தையும் உள்ளடக்கியது. இந்த ‘உயிர்மெய்யம்’ எப்படி தமிழர் வாழ்வியல் முறையாக இருந்திருக்கிறது என்பதை தொல்காப்பியம் வழி அறியலாம்.
முதற்பொருள் யாது? எனில்
‘முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே’
என்றும்,
கருப்பொருள் யாது? எனில்
‘தெய்வம் உணாவே மா மரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ் வகை பிறவும் கரு என மொழிப’ என்றும்,
உரிப்பொருள் யாது? எனில் ‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே’ என்றும் மொழிவார் தொல்காப்பியர்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலமும், இளவேனில், முதுவேனில், கார், குளிர், முன்பனி, பின்பனி என ஆறு பெரும் பொழுதுகளும், காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என ஆறு சிறு பொழுதுகளும் முதற் பொருளாகும். தெய்வம், மக்கள், உணவு, விலங்கு, பூ, மரம், பறவை, ஊர், நீர், பறை, பண், யாழ், தொழில் ஆகியவகைளும், அவ்வகை பிறவும் கருப்பொருள் ஆகும். புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் போன்ற ஒழுக்கங்களும் அதன் நிமித்தம் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களும் உரிப்பொருள் ஆகும்.
இப்படி உலகையும், வாழ்வையும் மூன்று பிரிவுகளாக தொல்காப்பியம் பிரிக்கிறது. இதில் கருப்பொருளில் சொல்லப்பட்ட மக்கள், அவர்களுக்குள் இருக்கவேண்டிய நேயம், மனித நேயம். மற்றபடி கருப்பொருளில் சொல்லப்பட்ட தெய்வம், விலங்கு, பூ, மரம், பறவை, போன்றவற்றின் மீது காட்டப்பட வேண்டிய நேயம் உயிர்மநேயம். அவற்றைத் தவிர்த்து முதற்பொருளான நிலமும் பொழுதும், கருப்பொருளில் மீதமான உணவு, ஊர், நீர், பறை, பண், யாழ், தொழில் போன்றவைகளில் காட்டப்பட வேண்டிய நேயம் மெய்மநேயம்.
தமிழ் இலக்கியங்களில் அறம், பொருள், இன்பம், வீடு என்பன தமிழ் இலக்கியத்தில் பாடு பொருளாய் அமைந்திருக்கின்றன. மனிதநேயமும் உயிர்மநேயமும் என்பது அறத்தின் வழியே இன்பம் பெறுவது. மெய்மநேயம் பொருளின் வழி இன்பத்தை பெறுவது. பக்தி இலக்கியம் வந்தபிறகு வீடு என்கிற பாடு பொருள் உருவாகிறது. ஆக, அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை சேர்ந்து ‘உயிர்மெய்யம்’ என்கிற மெய்யியல் ஆக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்ல. தமிழர் வாழ்க்கையை அகம், புறம் எனவும் பிரித்தனர் என்பது அறிந்ததே. மனித நேயமும், உயிர்மநேயமும் அக வாழ்க்கையையும், மெய்மநேயம் புற வாழ்க்கையையும் குறிக்கும். ஆக, அக வாழ்க்கையும் புற வாழ்க்கையும் இணைந்து, ‘உயிர்மெய்யம்’ என்கிற மெய்யியல் புனையப்பட்டிருக்கிறது.
அப்படி, மனிதநேயமும், உயிர்மநேயமும், மெய்மநேயமும் இணைந்தும், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் உட்பட்டும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை சேர்ந்தும், அகம், புறம் என்ற வாழ்வியல் வெளிப்பட்டும், உயிர்மெய்யம் என்கிற கருத்தாக்கம் தமிழர்களின் வாழ்வியல் முறையாக இருந்திருக்கிறது என்று புலனாகிறது. அதற்கு சிற்றிலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன. இக்கட்டுரை, சிற்றிலக்கியங்கள் எப்படி உயிர்மெய்யத்தை (மனிதநேயம், உயிர்மநேயம், மெய்மநேயம்) வெளிப்படுத்தி வந்திருக்கின்றன என்று ஆய்வு செய்கிறது. முதலில் மனிதநேயம் சிற்றிலக்கியங்களில் எப்படி வெளிப்படுகிறது என்று ஆய்கிறது.
மனித நேயம்
மனித உறவுகள் நேயத்தால் பின்னப்படுகிறது. மனித நேயம், முதலில் பெற்றோரை மதித்தலில் துவங்குகிறது. தாய் தந்தையரைப் போற்றி வாழ வேண்டும் என்பதே சிறந்த அறப்பண்பு ஆகும். பெற்றோரைப் போற்றி வணங்க வேண்டும் என்பதை,
“எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக் கண்டெழுதல் காலை இனிது” (இனி.நாற்.பா.19:3-4)
என்று இனியவை நாற்பது அறிவிக்கிறது. அடுத்து உற்றாரை வரவேற்பதிலும், அவர்களை ஓம்புவதிலும் மனித நேயம் இருக்கிறது.
தமிழரின் தலைச்சிறந்த பண்பாடு விருந்தோம்பல் ஆகும். இல்லத்திற்கு புதிதாக வருபவர்களை வரவேற்று உண்டி முதலியவற்றால் உபசரிக்கும் பாங்கே விருந்தோம்பல் ஆகும். விருந்தோம்பல் பற்றிய செய்தியை ஒரு பாடலில் பூதஞ்சேந்தனார் கூறியுள்ளார். பொதுவாக எல்லா இலக்கியங்களும் விருந்தோம்பல் பற்றிய செய்திகளை கூறியுள்ளன. ஆனால் இனியவை நாற்பது விருந்தோம்பலில் யார் இல்லத்து விருந்து சிறந்தது என்பதை பதிவுச்செய்துள்ளது. இதனை
“எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படும் கற்றா உடையான் விருந்து” (இனி.நாற்.பா.39:3-4)
என்ற பாடலடிகள் பாலை மிகுதியாகக் கறக்கும் ஆவுடையான் அளிக்கும் விருந்து மிகவும் இனிது என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளதை அறியமுடிகிறது.
இப்படி பெற்றோர், உற்றார் என்று மட்டும் இல்லாமல், மற்றவர் எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்பதை,
“பங்கமில் செய்கையை ராகிப் பரிந்துயார்க்கும் அன்புடைய ராதல் இனிது” (இனி.நாற்.பா.10:3-4)
என்ற பாடல் வரியில் குற்றமில்லாத ஒழுக்கமுடையவராய், யாவர்க்கும் அன்புடையவராயிருத்தலே நல்லது என்ற கருத்தை வலியுறுத்திக் கூறியிருப்பதை வைத்து அறிய முடிகிறது. பிறருக்கு உதவி செய்தல் என்பது மனிதனுக்கு இருக்க வேண்டிய பண்புகளுள் ஒன்று ஆகும். இனியவை நாற்பது தன்னை அடைந்தவரது விருப்பம் அழியாமல் உதவி செய்வது நல்லது என்று கூறுகிறது. இதனை,
“நச்சித்தற் சென்றார் நசை சொல்லா மாண்பினிதே” (இனி.நாற்.பா.27:1)
என்ற பாடலடி மூலம் அறியலாம்.
அதோடு கூட மனிதர்களுக்குள்ளே இருக்கும் காதலையும் சிற்றிலக்கியங்கள் வர்ணிக்கின்றன.
“செக்கச் சிவந்த கழுநீரும், செகத்தில் இளைஞர் ஆருயிரும், ஒக்கச் செருகும் குழல்மடவீர், உம்பொற் கபாடம் திறமினோ” (கடைதிறப்பு. 74)
என்ற கடைதிறப்பு பாடல் மூலம் அறியலாம். ‘பெண்கள் கூந்தலில் செங்கழுநீர் மலர்களைச் செருகுகின்றார்கள். அவர்கள் செங்கழுநீர் மலர்களை மட்டுமல்லாது, இவ்வுலகத்தில் வாழும் இளைஞர்களின் உயிர்களையும் சேர்த்து செருகுகிறார்கள். கலிங்கப் போர் முடிந்து வீரர்கள் சோழ நாடு திரும்புகின்றனர். ஆனால் தாம் வருவதாகக் கூறிய காலம் கடந்து பணி முடிந்து வருகின்றனர். காலம் கடந்து வருவதால் மகளிர் ஊடல் கொள்கின்றனர். தம் கணவனை எதிர்கொண்டு வரவேற்காமல் கதவைத் தாழிட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் புலவர் மகளிரைக் கதவு திறக்க வேண்டுகிறார். அதுவே கடைதிறப்பு பகுதியாக வருகின்றது. காதலும் ஊடலும் கணவன் மனைவியின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக சிற்றிலக்கியங்கள், முக்கியமாக பரணி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.’ என்று சுரேஷ் மற்றும் செல்வகுமார் தங்கள் ‘செங்காந்தள் - அன்பு’ என்கிற நூலில் குறிப்பிடுகின்றனர்.
அதே போன்று மடல் இலக்கியமும் அகப்பொருள் சார்ந்த சிற்றிலக்கிய வகை ஆகும். இது காதல் குறித்த ஓர் இலக்கியமாக அமைகின்றது. மடல் ஏறுதல் என்ற பொருளை விளக்கும் நிலையில் அமையும் இலக்கிய வகை ஆதலால் இது மடல் இலக்கியம் எனப்படுகிறது. வழக்கமாக தலைவன் தான் மடல் ஏறுவான். ஆனால் பெரிய திருமடல் என்ற இலக்கியத்தில் திருமங்கையாழ்வார் தலைவி மடல் ஏறுவதாக பாடியுள்ளார்.
“என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும், பொன்இயலும் மேகலையும் ஆங்குஒழியப் போந்தற்கு” (பெரி. திரு. 46)
என்ற பாடலில், தன் மனமும் அறிவும் தலைவன் வசம் சென்றதாகவும், அதனால் அவள் கை வளையல்களும் மேகலை என்று அணிகலனும் கழன்று வீழ்ந்ததாகவும் குறிப்பிடுகின்றாள். தொடர்ந்து, அவன் அழகில் மயங்கி, பலவாறு துன்பம் அடைந்து, அவனை அடைவதற்காக மடல் ஏற முற்பட்டதை,
“….மற்று இவை தான், உன்னி உலவா உலகுஅறிய ஊர்வன்நான், முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளிபரந்த, மன்னிய பூம்பெண்ணை மடல்” (பெரி. திரு. 78)
என்று திருமங்கையாழ்வார் உரைக்கிறார் என ரங்கநாதாசார்யர் சுவாமிகள் தன் ‘திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமடல் - இனிய எளிய விளக்கம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இப்படி பெற்றோரை வணங்குவதிலும், உற்றாரை உபசரிப்பதிலும், மற்றவருக்கு உதவுவதிலும், இணையரோடு இன்பமாக இருப்பதிலும் மனித நேயத்தை சிற்றிலக்கியங்கள் சிறப்பாகப் பேசுகின்றன. சரி! உயிர்மநேயத்தை எப்படி புலப்படுத்துகின்றன?
உயிர்மநேயம்
திருநெல்வேலி ஜில்லாவில் சீவலப்பேரி என்று வழங்கும் முக்கூடலில் கோயில் கொண்டிருக்கும் அழகர் மீது பாடப்பட்டது முக்கூடற்பள்ளு எனச் சொல்லப்படுகிறது. தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு ஆகிய மூன்றும் கலக்குமிடமே முக்கூடல். அதில் சூழலியலின் அழகை,
“ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி - மலை
யாள மின்னல், ஈழ மின்னல்
சூழ மின்னுதே!
நேற்று மின்றும் கொம்பு சுற்றிக்
காற்றடிக் குதே - கேணி,
நீர்ப்படு சொறித் தவளை
கூப்பிடு குதே,
சேற்று நண்டு சேற்றைக் குழைத்
தேற்றடைக் குதே - மழை
தேடி யொரு கோடி வானம்
பாடி யாடுதே!
போற்று திரு மாலழகர்க்
கேற்றமாம், பண்ணைச் - சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித்
துள்ளிக் கொள்வோமே” (முக்கூடற் பள்ளு) என்று முக்கூடற் பள்ளு விவரிக்கிறது.
ஆற்றில் நாளை வெள்ளம் வரப்போகிறது, அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகின்றன. மலையாள நாடு (கேரள நாடு) இருக்கின்ற மேற்குத் திசையிலிருந்தும், இலங்கை நாடு (ஈழநாடு) இருக்கின்ற கிழக்குத் திசையிலிருந்தும் மின்னல்கள் சூழ்ந்து மின்னுகின்றன. நேற்றும் இன்றும் காற்று பலமாகச் சுழன்று அடிக்கிறது. கிணற்றுத் தண்ணீரில் கிடக்கும் சொறித்தவளைச் சத்தமிட்டு மழை வரப்போகும் செய்தியை மக்களுக்குச் சொல்கிறது. மழை வெள்ளம் வந்து நிரம்பினால் சேற்றில் வாழும் நண்டு என்ன ஆகும்? அதற்காக அந்த நண்டு முன்னெச்சரிக்கையாக அந்தச் சேற்றைக் கொண்டே தன்னுடைய வளையை (வாசலை) அடைக்கிறது. மழையைத் தேடி ஒரு கோடி வானம்பாடி பறவைகள் விண்ணில் மகிழ்ச்சியாகப் பாடித் திரிகின்றன. எல்லோரும் போற்றி வழிபடுகின்ற அழகர் கோயில் திருமாலை பண்ணையில் வேலை செய்து சேரியில் (சேர்ந்து) வாழ்கின்ற பள்ளர்களாகிய நாம் அனைவரும் மழையை வரவேற்று ஆடிப் பாடுவோம், துள்ளி ஆடுவோமே என்று மேற்கண்ட பாடலுக்கு பொதுவன் ‘மழைக்குறி தென்றல்’ என்ற நூலில் விளக்கம் தருகிறார். ஆறும், மழையும், காற்றும், கிணறும், தவளையும், நண்டும், வானம்பாடிகளும், மக்களும் இணைந்து தற்சார்பு வாழ்க்கை வாழ்வது தான் உயிர்மநேயம் என்று பொருள். ஒன்றின் மீது ஒன்று பற்று வைப்பதே அதற்குக் காரணம்.
“அண்டவுயி ரத்தனையு மாருலகிலற் பற்றுவிக்கக், கண்டவர்கள் பற்(று) என்று கண்டிசைத்தார்”
என்ற பாடலில், ‘அன்பே! அண்டத்தில் உள்ள உயிர்கள் அனைத்தையும், உலகப்பொருள்களில் பற்று வைக்குமாறு செய்கின்றாய். அதைக் கண்டு தான், அன்பே! உனக்கு ‘பற்று’ என்று பெயர் வைத்தார் என்று பி. என். இராசமாணிக்கம் பிள்ளை அவர்கள் எழுதிய ‘அன்பு விடு தூது’ என்று நூலில் அழகாக விவரிக்கிறார். அப்படி பற்று வைத்த உயிர்மநேயத்தோடு வாழும் மக்கள் வாழ்கிற நாடு எப்படிப்பட்ட வளமான நாடாக இருக்கும்?
அதைக் குறவஞ்சியில் தோழி குறத்தியின் வருகையைக் கூறியதும், குறத்தி தன் நாட்டு வளத்தைக் கூறும்போது தெரிந்துக் கொள்ளலாம்.
“மாவினன் கனியை மந்திகள் அருந்தித்,
தாவியே லாகு தாண்டிடும் பொழுதில்,
உதிர்கனி மதுக்கள் ஒதுங்கியே கால்வா,
யதனிலே நிரம்பி ஆறெனப் பரவி,
வயல்களிற் பாய மகிழ்தெழுந் துழவர்,
இயல்புடன் உழுதே எழிலுடன் நாற்று,
நடக்கதிர் தோறும் நாழிநெல் வகுப்பாய்த்,
திடப்பட விளையுஞ் சிறந்தமா நகரம்”
என்ற குறவஞ்சிப் பாடல் அழகாக விவரிக்கிறது. மந்திகள் மாங்கனிகளைத் தின்று, மரத்திற்கு மரம் இலகுவாக தாண்டிக் கொண்டிருக்கும் வேலையில், அவர்கள் தின்ற மாங்கனி சாறு கால்வாயில் நிரம்பி ஆறெனப் பரவுகிறதாம். அது வாய்க்கால் வழி வந்து வயல்களில் பாய்வதைப் பார்த்து மகிழ்ந்த உழவர் பெருமக்கள், தங்கள் நிலத்தை உழுது, நாற்று நட, அந்த நெற்கதிர்கள் சிறப்புற விளைகிறதாம். அப்படிப்பட்ட ஊரிலிருந்து வருவதாக குறத்தி சொல்கிறாள் என்று தத்துவலிங்கன் தன் ‘பொய்யாமொழியீசர் குறவஞ்சி’ யில் குறிப்பிடுகிறார்.
இப்படி பல்லுயிர்களையும் ஓம்பவேண்டும் என்பதை, ‘இனியவை நாற்பதில் அரசன், அவனது படை, ஒற்றர், அரசனுக்கு ஒற்று ஆசாயும் பண்பு, முறைச்செய்து தண்டனை அளிக்கும் பண்பு, விருப்பு வெறுப்பின்றி எல்லா உயிர்களையும் சீர் தூக்கிப் பார்க்கும் பண்பு ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்பதை,
“ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் முன்இனிதே,
முற்றான் தெரிந்து முறை செய்தல் முன்இனிதே,
பற்றிலனாயல் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல்,
வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது” (இனி.நாற்.பா.36) என்ற பாடலால் அறியமுடிகிறது.
மனிதர்களுக்குள் நேயத்தையும், பல்லுயிரைப் பேணும் நேயத்தையும் இப்படி சிற்றிலக்கியங்கள் கூறும் போது, மெய்மநேயத்தைப் பற்றியும் சிறப்புற விளக்குகிறது.
மெய்மநேயம்
உணவும் உழவும்
மெய்மநேயம் முதலில் உணவில் துவங்குகிறது. உணவு உண்டாக்கப்படும் உழவில் துவங்குகிறது. உழவர்கள் அறுவடைக்குப் பின், அடுத்த உழவுக்கு விதை நெல்லைப் பாதுகாத்து வைப்பதில் துவங்குகிறது. உழவர் அறுத்த ஒரு கைப்பிடி நெற்கதிருக்கு அரி என்று பெயர். மூன்று அல்லது நான்கு அரிகளின் தொகுதியைக் கோட்டு என்று அழைப்பர். அக்கோட்டினைத் தலைப்பு மாற்றிக் கட்டிய பின் கட்டுகளை நெற்களம் கொண்டு சேர்ப்பர். கட்டுகளை வைக்கோலால் முறுக்கி, தலைக்கு மேல் சுழற்றி, கருங்கல்லில் அடித்து, நெல்மணிகளைப் பிரித்தெடுப்பர். அதனை
“தலையுதிரி நெல்லடித்து மலைபோல வேகுவித்து” (வையாபுரிப் பள்ளு 189:8)
என்னும் பாடலடி குறிப்பிடுகிறது. அது மட்டுமல்ல, அந்நெல் குவியலைப் பொலி என்றும் அழைப்பர். பொலியில் நெல் அளப்பதற்கு முன் தெய்வத்திற்கு வழிபாடு செய்வர். இதனைக்,
“கோட்டைங் கரனை முனம் வைத்தே” (வையாபுரிப் பள்ளு 158)
என்று பிள்ளையாரை வழிபட்டதைத் திருமலை முருகன் பள்ளு எடுத்து இயம்புகிறது என்று முனைவர் சே. கரும்பாயிரம் ‘விதை நெல் உறங்கும் கோட்டை’ என்ற கட்டுரையில் தெளிவு படுத்துகிறார்.
கோட்டை என்பது இருபத்தொரு மரக்கால் அளவு கொண்டதாகும். அளந்த நெல்லை பாதுகாத்தல் என்பது அவசியமாகும். கோட்டையில் விதை நெல்லை வைப்பதற்கு முன்னர் சில தினங்கள் வெயிலில் காய வைப்பர். காய்ந்த விதை நெல்லைப் பிரியின் மேல் வைக்கோல் பரப்பியவற்றுள் கொட்டுவர். பின்னர் நேருக்கு நேர் இருக்கும் பிரிகளை எடுத்து ஒன்றோடு ஒன்று கட்டிய உடன் சாணியை இட்டு மெழுகுவர். இதற்குக் கோட்டை கட்டுதல் என்று பெயர். இதனை,
“வாரியதை விரைகளெல்லாங் கோட்டைகட்டி” (கண்ணுடையம்மன் பள்ளு. 59)
என்று முத்துக்குட்டி புலவர் எழுதிய கண்ணுடையம்மன் பள்ளு குறிப்பிடுகிறது என்று சுந்தரம். சொ. சொ. மீ. எடுத்துரைக்கிறார்.
உடையும் ஆபரணங்களும்
உணவிலும், உழவிலும் துவங்குகிற மெய்மநேயம், உடையிலும் ஆபரணத்திலும் மிளிர்கிறது. அதனை சிங்கன் சிங்கி உரையாடலில் பார்க்கலாம். திருக்குற்றாலக் குறவஞ்சியில் சிங்கனிடம் சொல்லாமல் சிங்கி குறி சொல்லச் சென்றுவிட்டு, பல பரிசுகளைப் பெற்று வரும் காட்சியில் சில ஆபரணங்களின் வரிசை சொல்லப்படுகிறது.
“இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்,
எங்கே நடந்தாய் நீ சிங்கி - எங்கே நடந்தாய்,
கொத்தார் குழலார்க்கு வித்தார மாகக்,
குறிசொல்லப் போனனடா சிங்கா - குறிசொல்லப்….”
“காலுக்கு மேலே பெரிய விரியன்,
கடித்துக் கிடப்பானேன் சிங்கி - கடித்து,
சேலத்து நாட்டிற் குறிசொல்லிப் பெற்ற,
சிலம்பு கிடக்குதடா சிங்கா - சிலம்பு…” என்ற வரிசையில்,
சிலம்புக்கு மேலே உள்ள திருகு கோலத்து நாட்டார் கொடுத்த தண்டை என்றும், காலில் புழுப் போல நெளிகிறது பாண்டியன் மகள் இட்ட பாடகம் என்றும், காலிலே தவளை போல் இருப்பது குற்றாலத்துப் பெண்கள் அணிவித்த கெச்சம் என்றும், சுண்டு விரலிலே குண்டலப் பூச்சி போல் இருப்பது கண்டி தேசத்தார் போட்ட பீலி என்றும், மெல்லிய பூந்தொடையில் வாழைக் குருத்தைப் போல் இருப்பது நெல்வேலியார் தந்த சல்லடைச் சேலை என்றும், இடுப்பில் சாரைப்பாம்பு போல இருப்பது சோழன் மகள் தந்த தங்க அரைஞாண் என்றும், மார்பிற்கு மேலே கொப்புளம் போல் இருப்பது காயலார் தந்த முத்தாரம் என்றும் கழுத்தில் பாம்பு போல் இருப்பது காயங்குளத்தார் கொடுத்த சவடியென்றும், திருக்குற்றாலக் குறவஞ்சி - பகுதி நான்கில், குறவனிடம் குறத்தி சொல்கிறாள் என்று புலியூர்க் கேசிகன் அவரது ‘திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
மொழியும் பெருமையும்
உணவு, உழவு, உடை, ஆபரணங்கள் போன்ற பொருட்களைத் தாண்டி, பண்பாட்டின் அடையாளமான மொழி மீதும் நேயம் வேண்டும். மொழியைத் தூதாக விடும், ‘மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது’ என்ற சிற்றிலக்கியத்தில் மொழியின் பெருமையையும் அதனை நேசிக்க வேண்டிய அவசியத்தையும் புலவர் ம. அய்யாசாமியின் நூலில் அள்ளிப் பருகலாம். எடுத்துக்காட்டிற்குச் சில.
“தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே, என் முத்தமிழே - புத்திக்குள்” (தெளிந்த அமுதமாய், அமுதத்தைக் காட்டிலும் உயர்ந்த முத்தியைத் தருகின்ற கனி போன்ற தமிழே! என் முத்தமிழே)
“உண்ணப்படும் தேனே, உன்னோடு உவந்துரைக்கும் விண்ணப்பம் உண்டு; விளம்பக்கேள் - மண்ணில்” (அறிவால் உண்ணப்படும் தேன் போன்று உள்ளாய். உன்னிடம் மகிழ்ச்சியுடன் நான் கூறும் வேண்டுகோள் ஒன்று உள்ளது. அதைக் கூறக் கேட்பாயாக.) என்று சொல்லிவிட்டு துவங்குகிறார்.
“குறம் என்று பள்ளுஎன்று கொள்வார் கொடுப்பாய்க், குறவு என்று மூன்றினத்தும் உண்டோ - திறம்எல்லாம்” (தமிழே! உன்னிடத்து, குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர் சிறப்பு கொள்வர். அவற்றை எடுத்துப் படிக்க நீ கொடுப்பாய். அதனால் உனக்குத் தாழ்வு என்று ஏதேனும் பாவின் மூன்று இனங்களிலும் உண்டோ?)
“வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த உனைச், சிந்துஎன்று சொல்லியநாச் சிந்துமே - அந்தரமேல்”(பாவின் எல்லாத் திறங்களும் வந்து பொருந்தி எந்நாளும் சிந்தா (கெடாத) மணியாய் இருக்கும் உன்னைச் சிந்து (ஒரு பாவின் பெயர்) என்று கூறிய அப்பெயர் நின் பெருமைக்குத் தகுமோ? தகாதல்லவா? அவ்வாறு கூறிய நாவானது கெடுமே.)
“முற்றுஉணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்; நீ, குற்றம்இலாப் பத்துக்குணம்பெற்றாய் - மற்றொருவர்” (வானத்தின் மேல் உள்ள எல்லாவற்றையும் முழுவதும் உணர்ந்த தேவர்களும் இராசகம், தாமதம், சாத்துவிகம் என்று முக்குணங்களைப் பெற்றுள்ளார்கள். நீ பத்துக் குற்றங்கள் இல்லாமல் பத்துக்குணங்களை (அழகுகளை)யும் பெற்றுள்ளாய்.)
“ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோ, நீ, நோக்கிய வண்ணங்கள் நூறுஉடையாய் - நாக்குஉலவும்” (ஒருவரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள், வெண்மை, செம்மை, கருமை, மொன்மை, பசுமை என்ற ஐந்தாகும். அவற்றிற்கு மேல் இல்லை. நீ அனைவரும் கண்ட நூறு வண்ணங்களைப் பெற்றிருக்கிறாய்.)
“ஊனரசம் ஆறு அல்லால் உண்டோ செவிகள் உணவு, ஆன நவரசம் உண்டாயினாய் - ஏனோர்க்கு” (நாக்கிலே தோன்றி மறையும் குறைபாடு உடைய உணவின் சுவைகள் ஆறு அன்றி வேறு உண்டோ? காதால் கேட்டு உணரும் சுவை ஒன்பதை நீ பெற்றுள்ளாய்.)
“அழியா வனப்புஒன்றுஅலது அதிகம் உண்டோ, ஒழியா வனப்பு எட்டு உடையாய் - மொழிவேந்தர்’ (தமிழைப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்று அல்லாமல் அதிகம் உள்ளதோ? ஆனால் நீ, நீங்காத அழகு எட்டைப் பெற்றுள்ளாய்).
“வாங்கு பொருள்கோள் வகை மூன்றே பெற்றார்நீ ஓங்கு பொருள்கோள் வகை எட்டு உள்ளாயே - பாங்கு பெற” (எல்லோராலும் பாராட்டப்படும் அரசர், பொருள் கைப்பற்றிக் கொள்ளும் முறை மூன்றே ஆகும். நீ பாடலில் பொருள் கொள்ளும் முறை எட்டைப் பெற்றுள்ளாய்.)
“ஓர் முப்பால் அன்று ஐம்பால் உள்ளாய் உனைப் போலச், சீர் முப்பதும் படைத்த செல்வர்ஆர் - சேரமான்” (அழகு பொருந்திய மூன்று பிரிவான அறம், பொருள், இன்பம் அல்லாமல் நீ (ஆண், பெண், பலர், ஒன்று, பல) ஐம்பால்களிலும் உள்ளாய். உன்னைப் போல முப்பது சீர் (சிறப்பு)களையும் பெற்ற செல்வர் யார் உள்ளனர்? அப்படி உயர்ந்த மொழியை நம் உயிரினும் மேலாகக் கட்டிக் காக்க வேண்டும் என்ற உணர்வு மேலிட வைக்கிறது இச்சிற்றிலக்கியம்.
இசையும் இனிமையும்
உணவில் துவங்கி மொழியில் நடைபயிலும் மெய்மநேயம், இசையிலும் பயணிக்கிறது. சிற்றிலக்கியங்களில் அந்தாதி, கலம்பகம், உலா, அம்மானை, மணிமாலை முதலிய தொண்ணூற்று ஆறு வகையான பிரபந்தகளில் பிள்ளைத்தமிழும் ஒன்று. நாகை மாவட்டம் எட்டிக்குடியில் வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு பிள்ளைத் தமிழ் பாடிய கவியரசு கோவை கு. நடேச கவுண்டர் பாடிய பிள்ளைத்தமிழில் சிறுபறைப் பருவத்தில் முருகப் பெருமானை சிறுபறை முழக்கச் சொல்லும் போது தமிழ் இசையின் அருமையை அறியலாம்.
“தூவார் மறையின் பொருள்முழங்கத்,
துய்ய சிவநூற் றுறைமுழங்கத்
துகளில் பிறபல் கலை முழங்கத்;
தொண்டர் மலர்வாய்ச் சொல்முழங்கத்;
தேவா ரங்கள் முதலாய,
தெய்வத் தமிழ்மா லைகள்முழங்கத்;
தெவிட்ட வமுதா யருணகிரி,
செப்பு முனது புகழ்முழங்க;
உனையே நனைந்துன் னடியவர்கட்,
கூட்டு வாரின் சொன்முழங்க;
மூவா வெட்டிக் குடிமுருகா,
முழக்கி யருள்க சிறுபறையே;
முழுமா ணிக்கத் திரளொளியே,
முழக்கி யருள்க சிறுபறையே” என்று பாடியதன் மூலம் அறியலாம்.
முடிவுரை
மேற்கண்ட சிற்றிலக்கியங்களை ஆராயும் போது, தமிழர்களின் வாழ்வியல் மெய்யியல் எது என்பது புலனாகிறது. தமிழர்களின் வாழ்வியல் மெய்யியல் ‘உயிர்மெய்யமே’ என்று கருத ஏதுவாகிறது. உயிர்மெய்யம் என்பது தொல்காப்பியம் காட்டிய முதற், கரு, உரிப்பொருளிலும், தமிழர் கலை இலக்கிய பொருண்மையான அறம், பொருள், இன்பம், வீடு என்பதிலும், தமிழர் வாழ்க்கை நெறிகளை உள்ளடக்கிய அறம், புறம் என்ற வாழ்க்கை முறையிலும் பொதிந்துள்ள மனிதநேயமும், உயிர்மநேயமும், மெய்மநேயமும் உள்ளடக்கியது என்பது தெரிகிறது.
ஆகவே, சிற்றிலக்கியங்கள் காட்டும் தமிழர் வாழ்வியல் மெய்யியல் ‘உயிர்மெய்யம்’ என்று கருதலாம்.
*******
துணைநூற்பட்டியல்
1. மு. வரதராசன். கொல்லாமை. அதிகாரம் 33. திருக்குறள். https://www.thirukural.ai/kural/322
2. தொல்காப்பியர். tolkAppiyam of tolkAppiyar. மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம். Project Madurai 2001. https://archive.org/details/pdf-or-331-tholkapiyam/mode/2up?view=theater
3. ஜெனிபர் சு. (07 ஜூன் 2016). இனியவை நாற்பது காட்டும் வாழ்வியல் நெறிகள். தமிழியல் துறை. பாரதிதாசன் பல்கலைக்கழகம். https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3360:2016-06-07-00-36-11&catid=65:2014-11-23-05-26-56
மேற்படி.
மேற்படி.
1. மேற்படி.
2. Suresh, Antony, G. & Selvakumar, Sam, J. B. (2022). செங்காந்தள் - அன்பு. Maheshwari Publishers, Virudhunagar, Tamil Nadu.
3. சுவாமி, ரங்கநாதாசார்யர். (2008). திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமடல் - இனிய எளிய விளக்கம். மணிவாசகர் அப்செட் பிரிண்டர்ஸ். சென்னை. https://archive.org/details/20231126_20231126_1152/page/n3/mode/2up
மேற்படி.
1. பொதுவன். செங்கை. (2019). மழைக்குறி தென்றல். முக்கூடல் பள்ளு. தமிழ்த்துளி. https://vaiyan.blogspot.com/2019/05/35-mukkudal-pallu-35.html
2. பிள்ளை, இராஜமாணிக்கம். பி. என். (1942). அன்பு விடு தூது. ஸ்ரீ ஷண்முகா பிரிண்டிங் ஒர்க்ஸ் பதிப்பகம், திருப்பாதிரிப்புலியூர்.
3. தத்துவலிங்கன். (1980). அருணாசலம். மு; இளங்குமரன். இரா. பொய்யாமொழியீசர் குறவஞ்சி. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். சென்னை. https://archive.org/details/acc.-no.-16018-kuravanji-1950/page/n1/mode/2up
4. ஜெனிபர் சு. (07 ஜூன் 2016). இனியவை நாற்பது காட்டும் வாழ்வியல் நெறிகள். தமிழியல் துறை. பாரதிதாசன் பல்கலைக்கழகம். https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3360:2016-06-07-00-36-11&catid=65:2014-11-23-05-26-56
5. கரும்பாயிரம். சே. (20 நவம்பர் 2022). விதை நெல் உறங்கும் கோட்டை. தமிழ்மணி. தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2022/Nov/20.
6. சுந்தரம். சொ. சொ. மீ. (1976). கண்ணுடையம்மன் பள்ளு. முத்துக்குட்டி புலவர். https://archive.org/details/acc.-no.-2857-kannudayamman-pallu-1976/page/22/mode/2up
7. கேசிகன், புலியூர். (2009). மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி. மூலமும் உரையும். சாரதா பதிப்பகம். சென்னை. https://archive.org/details/pdf-or-397-melakaram-thirikoodarasapak-kavingr...-2009/page/n1/mode/2up
8. அய்யாசாமி. ம. புலவர். (2006). மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது. திருமுடி பதிப்பகம். புதுவை. https://archive.org/details/20250424_20250424_1014/page/18/mode/2up
9. கவுண்டர், நடேச, கு. (1974). எட்டிகுடி முருகன் பிள்ளைத் தமிழ். எட்டிகுடி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வெளியீடு.



Comments