top of page

தெற்கு ஆஸ்திரேலியாவின் பரோஸா பள்ளத்தாக்கின் கதை - SBS Tamil Australia Radio

Updated: Jun 13

ree

இது நமது ஆஸ்திரேலியா - தொடர் 2

பரோஸா பள்ளத்தாக்கு (பரோஸா வேலி)

 

SBS Radio Tamil -இல் இக்கதையைக் கேட்க......கீழ்க்கண்ட நீல நிற இணைப்பைச் சொடுக்கவும்.



ஓர் இனம் புலம் பெயர்கிறது.

 

பிறந்த இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகிறது. அப்பொழுது அந்த இனம் என்ன செய்கிறது? அதன் பண்பாட்டைச் சுமந்துச் செல்கிறது. புகுந்த நிலத்திற்குத் தன் வாழ்வியலை, அறிவை, திறத்தை, பழக்க வழக்கத்தை, கலை இலக்கியத்தை, சடங்கு சம்பிரதாயங்களை, திருவிழாக்களை, வழக்காறுகளை, சாமிகளை, நம்பிக்கைகளை எடுத்துச் செல்கிறது. அவைகளை முடிந்த அளவு பின்பற்ற முனைகிறது.

 

அப்படி ஜெர்மனியிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்த ஒரு சமூகம் வாழும் இடம் தான் பரோஸா வேலி. பரோஸா பள்ளத்தாக்கு சௌத் ஆஸ்திரேலியாவின் ஒயின் சொர்க்கம். அது எப்படி ஒயின் சொர்க்கமானது என்பது சுவாரஸ்யமான கதை.

 

ஜெர்மனியிலிருந்து ஒரு கப்பல் பயணம்

1842 ஆம் வருடம். ஜெர்மனியின் சிலேசியா என்ற பகுதியிலிருந்து சிலர் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர முடிவு செய்கின்றனர். ஒரு கப்பல் நீண்ட பயணத்திற்கு தயாராகிறது. அதில் ஜோகான் (Johann Frederick August Fiedler) என்பவர் கவனிக்கப்பட வேண்டியவர். அவர் தன் பிள்ளைகளைப் பார்த்து,

      “ நாம ஒரு புதிய பூமிக்குப் போகப் போறோம். புதிய பூமி. புதிய வானம். அங்க எல்லா வளமும் இருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் தேனும் பாலும் ஓடும்.” என்று பெருமிதத்தோடுச் சொல்கிறார்.

 

‘ஒளி மயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது’ என்று பாட மட்டும் தான் இல்லை. மற்றபடி அவரோட உடல் மொழி அப்படித்தான் இருக்கிறது. எல்லோரும் அவருடைய வார்த்தைகளில் மயங்கிப் போகிறார்கள்.

 

கடல் பயணம் முழுக்க அதே பேச்சு. ஆஸ்திரேலியா எப்படி இருக்கும்? தாங்கள் கேள்விப்பட்டிருந்து கங்காரு எப்படி இருக்கும்? அதன் காடுகள், பள்ளத்தாக்குகள், மலைகள், கடற் கரைகள்….இப்படி ஆஸ்திரேலியாவைப் பற்றியே கப்பல் பயணம் முழுக்க இருக்கிறது.

 

ஆஸ்திரேலியா வந்தாச்சு

ஒரு நாள். ஆஸ்திரேலியா வந்து இறங்குகிறார்கள். சௌத் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு என்கிற நகரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற ஒரு பள்ளத்தாக்கில் வந்து இறங்குகிறார்கள். ஜோகான் தன் குடும்பத்தோடு வந்து இறங்குகிறார். புது இடம். அங்கு ஏற்கனவே பூர்வீகக் குடிகளும் சில ஐரோப்பியர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்கிறார்கள்.

 

“ இந்த இடத்திற்கு, இந்த பள்ளத்தாக்கிற்கு என்ன பெயர்?”

“ பரோஸா பள்ளத்தாக்கு”

பரோஸா பள்ளத்தாக்கு என்று அவர்கள் தங்கள் வாயுக்குள் முணுமணுத்துக் கொள்கிறார்கள்.  ஜோகானின் மகள் கேட்கிறாள்.

“அப்பா! இந்த எடத்துக்கு ஏம்ப்பா பரோஸா வேலி’ன்னு பேரு வச்சிருக்காங்க”

அதைக் கேட்ட ஒரு ஐரோப்பிய உள்ளூர் வாசி பதில் கூறுகிறார்.

“ 1811ல பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் ஸ்பெயின்ல இருக்கற பரோஸா-ங்கற எடத்துல போர் நடந்துச்சு. அதுல பிரிட்டிஷார் ஜெயிச்சுடுறாங்க. அதோட நினைவா 1837ல கர்னல் வில்லியம் லைட் என்பவர் இந்தப் பள்ளத்தாக்குக்கு பரோஸா வேலி -ன்னு பேரு வச்சாரு.’

“அதுக்கு முன்னாடி?...” என்று ஜோகானின் மகள் கேட்க

ஒரு பூர்வீகக் குடி பெண்மணி ஆர்வத்தோடு பதில் கூறுகிறார்.

“ அதுக்கு முன்னாடி… ஆயிரக்கணக்கான வருடங்களா …இங்க பேராமங்க், காட்ஜூரி, கௌர்ணா-ங்ற பூர்விகக் குடிகள் வாழ்ந்துட்டு வர்றோம். இந்த பள்ளத்தாக்குக்குன்னு பேரு இல்ல. ஆனா நீர்த்துளை-ன்னு பொருள்படுற ‘டனூண்டா’ (Tanunda), சாவடி அல்லது கூடும் இடம்-ன்னு பொருள் படுற ‘நுரியோட்பா’ (Nuriootpa) போன்று இந்தப் பகுதியில் உள்ள இடங்களுக்குப் பூர்வீகக் குடி பெயர்கள் இருக்கு. அவைகள் இன்னமும் அப்படியே அழைக்கப்படுது” என்று முகத்தில் பெருமிதத்துடன் சொல்கிறார்.

 

புது வீடு

ஜெர்மனியின் சிலேசியா பகுதியிலிருந்து வந்தவர்கள், ‘இந்த பரோஸா வேலி தான் இனி நம் புது வீடு’ என்று சொல்லி அங்கே குடியமர்கிறார்கள்.

 

புதிய இடம். புதிய சூழல். புதிய மக்கள்.

நிறைய மழை. நிறைய வெயில். நிறைய குளிர். நிறைய காற்று. புதிதாகக் குடியேறிய சிலேசியன்கள் கொஞ்சம் தடுமாறித் தான் போகிறார்கள். பெற்றோர்கள் தங்களுக்குள் ஆலோசனைச் செய்துக் கொள்கிறார்கள்.

      “புது இடத்துக்கு வந்தாச்சி. என்ன தொழில் செய்றதுன்னு தெரியலையே. ‘தேனும் பாலும் ஓடும் சொன்னீங்களே...இவ்வளவு கஷ்டப்படுறதுக்கா ஜெர்மனியிலேர்ந்து இங்க வந்தோம்’-னு கேக்குற பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்றது” என்று பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள். சோகம் சூழல் முழுக்க அப்பியிருக்கிறது.

 

__________

 

புதுத் தொடக்கம்

ஜோஹன், தன் வழக்கமான மாலை நடையை முடித்து வீட்டிற்கு வருகிறார். அவரது முகத்தில் என்றுமில்லாத மலர்ச்சி தென்படுகிறது. “நாங்க கவலையா இருக்கோம் நீங்க சிரிச்சுகிட்டே வர்றீங்களே” என்று அவரிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர், “நான் வாக்கிங் போயிருந்தேன். இந்தப் பகுதி மண்ணைப் பாத்தேன். குளம், குட்டை, கால்வாய்களைப் பார்த்தேன். எல்லாமே ஒயின் தயாரிப்புக்கு ஏற்றதா இருக்கு. இந்தக் குளிரும் அதுக்கு சாதகமா இருக்கும். நாம இனி ஒயின் தயாரிக்கலாம். அவரவர்களுக்குத் தெரிந்தகளைச் செய்யலாம்” என்கிறார். எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

 

ஆம்! பரோஸா பள்ளத்தாக்கின் மண் ஒரு புதையல் மாதிரி. ஒரு பொக்கிஷம். பகலில் வெயில் சூடாகவும், மாலையில் குளிராகவும் இருக்கும் வானிலை திராட்சைத் தோட்டங்களுக்கு மிகவும் நல்லது. அடுத்த நாளே சிலர் திராட்சைத் தோட்டம் போட குழி வெட்டுகிறார்கள். சிலர் ஜெர்மன் ரொட்டி செய்யத் துவங்குகிறார்கள். சிலர் ஜெர்மன் பாணியில் இறைச்சிக் கடை வைக்க வேண்டியதைச் செய்கிறார்கள். சிலர் பாலாடைக் கட்டி செய்யும் பணியில் தீவிரமாக இறங்குகிறார்கள். ஜோஹன் குடும்பம் புகழ்மிக்க Shiraz தேயிலைத் தோட்டத்தை உருவாக்கி, Shiraz ஒயின் செய்யத் துவங்குகிறார்கள்.

 

முன்னேற்றம்

சில வருடங்களுக்குப் பிறகு 1849ல் யாலும்பா ஒயின் நிறுவனம் ஒயின் தயாரிப்பில் இறங்குகிறது. யாரும் சோம்பலாக இல்லை. கடுமையாக உழைக்கிறார்கள். தோட்டங்களைப் பராமரித்து அவர்களின் கைகள் பழுத்துப் போகின்றன. இருந்தாலும் விடாப்பிடியாக நிலத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். பெரிய பெரிய மரப் பீப்பாய்களில் ஒயினை புளிக்க வைத்த வண்ணம் இருக்கின்றனர்.

 

ஒரு நாள் ஜோஹானின் நண்பர் அவரைப் பார்க்க வருகிறார். ஜோஹானின் ஷிராஸ் ஒயினை ஒரு கிளாஸில் வாங்குகிறார். வானில் உயர்த்திப் பிடிக்கிறார். “இது நம் பரோஸா ஷிராஸ்! இதற்கு ஈடு இணை ஏதும் இல்லை” என்று சொல்லிவிட்டு அருந்துகிறார். எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துப் போகிறார்கள்.

1850 களில் பரோஸ்ஸாவின் ஒயின்கள் ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய அளவில் பேசப்படுகின்றன. 1900 களில் உலகம் முழுக்க அவை பரவலாயின.

 

காத்திருந்த அதிர்ச்சி

இந்த நேரத்தில் பரோஸா பள்ளத்தாக்கு வாசிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென்று முதல் உலகப் போர் வருகிறது. தொழில் நசிந்து போகிறது. பெரிய அளவில் வணிகம் நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் வருகிறது. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும் என்ற நிலமை.

 

ஆனால் பரோஸா மக்கள் அசரவில்லை.


பரோஸா வெறும் ஒயின் தயாரிப்பு இடமாக மட்டும் இல்லை. இந்த ஜெர்மன் குடியேறிகள் தங்கள் பண்பாட்டை இங்கு பதிக்கத் துவங்கியிருந்தனர். டனூண்டா, ஆங்கஸ்டன், நூரியூட்பா போன்ற கிராமங்களில் அவர்களது தனிப்பட்ட நாகரிகம் வெளிப்படையாகத் தெரிந்தது. டனூண்டாவில் ஒரு தேவாலயத்தில் எல்லோரும் கூடினர். ஜெர்மன் பாடல்களைப் பாடினர். முதல் முதல் குடியேறிவர்களின் வைராக்கியத்தைப் பற்றிப் பேசினர். ஒயின் குடித்துக் கொண்டாடினர். மனம் தளராமல் தங்கள் தொழிலில் ஈடுபட உறுதி பூண்டனர்.

 

மேலும் வளர்ச்சி

பரோஸாவின் பென்ஃபோல்ட்ஸ் என்ற ஒயின் நிறுவனம் உலகின் மிகச்சிறந்த ஒயின் தயாரிப்பு நிறுவனமாக உயர்கிறது. அதே நேரம் ஜேக்கப் க்ரிக் என்ற மற்றொரு ஒயின் நிறுவனமும் சிறப்பான நிறுவனமாக வளர்கிறது. Artisans of Barossa - போன்ற பல ஒயின் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படத் துவங்கின. இப்படி பல தொழில்கள் முன்னேறி வருகிற நேரத்தில், 1990களில் உலகமயமாக்கத்தால் பல நாடுகளிலிருந்தும் போட்டி வரத் துவங்கிவிட்டது.

 

சற்றே திகைத்துப் போனாலும், பரோஸா மக்கள் அசரவில்லை. பரோஸா விண்டேஜ் ஃபெஸ்டிவல் என்ற ஒரு திருவிழாவை, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடத் துவங்கியதை, மாபெரும் கொண்டாட்டமாக மாற்றி, ஒயினை சுவைத்து, பாடல் பாடி, நடனமாடுகின்றனர். இன்று வரை அந்தத் திருவிழா கொண்டாடப் பட்டு வருகிறது.

 

பரோஸ்ஸா இன்று

இன்று, பரோஸ்ஸா வேலி 150-க்கும் மேற்பட்ட ஒயின் தயாரிப்பு நிலையங்களைக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நீங்கள் பரோஸா பள்ளத்தாக்கிற்குப் போனால், அந்த திராட்சைத் தோட்டங்களில், நீங்கள் ஒயின் சுவைப்பு (வைன் டேஸ்டிங்) அனுபவிக்கலாம்.

 

பென்ஃபோல்ட்ஸ் (Penfolds) திராட்சைத் தோட்டம்

ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற ஒயின் தயாரிப்பு நிலையங்களில் ஒன்று இது. இது உலகத்தரம் வாய்ந்த கிரேஞ்ச் ஷிராஸுக்கு புகழ்பெற்றது. அங்கு மாகில் எஸ்டேட் என்ற ஓர் எஸ்டேட் இருக்கிறது. அதைச் சுற்றிப் பார்க்கலாம். அங்கிருக்கும் மதுபான அறைகளைப் பார்க்கலாம். Cabernet Sauvignon போன்ற சிவப்பு ஒயின்களையும் Chardonnay போன்று வெள்ளை ஒயின்களையும் சுவைத்துப் பார்க்கலாம். இது 180 ஆண்டு பழமையான ஒயின் தயாரிப்பு நிலையம் என்பது இதன் சிறப்பம்சம்.

 

யாலும்பா (Yalumba) திராட்சைத் தோட்டம் 

1849இல் நிறுவப்பட்ட ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான குடும்ப திராட்சைத் தோட்டம் இது. உங்களைச் சுற்றிக் காண்பிப்பார்கள். ஒயின் செய்யும் இடத்தையும், பீப்பாய்கள் தயாரிக்கப்படும் இடத்தையும் சுற்றிக் காண்பிப்பார்கள். யாலும்பா அன்லாக்டு என்ற சுற்றுலாவில் நீங்கள் பங்கெடுத்தால் ஒயின் பற்றிய வரலாறு அதன் தயாரிப்பு முறைகளைப் பற்றி நன்கு கற்றுக் கொள்ளலாம்.

 

ஜேக்கப்ஸ் க்ரீக் (Jacob’s Creek) பார்வையாளர் மையம் 

இந்த மையத்திற்கு நீங்கள் சென்றால், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒயின்களை சுவைக்கலாம். திராட்சைத் தோட்டத்தைக் கண்களால் துழாவியபடியே அங்கு உள்ள உணவகத்தில் உணவு உண்ணலாம். ஒயின் தயாரிப்பு பயிலரங்கங்கள் நடத்தப்படுகின்றன. அதில் பங்கேற்கலாம். நீங்களே உங்கள் சொந்த ஒயினை உருவாக்க கற்றுக் கொடுப்பார்கள்.

 

செப்பல்ட்ஸ்ஃபீல்டு  (Seppeltsfield) திராட்சைத் தோட்டம் 

பாரா டவ்னி என்று அழைக்கப்படுகிற, 100 ஆண்டு பழமையான இந்த வரலாற்றுப் புகழ்பெற்ற திராட்சைத் தோட்டத்தைச் சுற்றிப்பார்க்கலாம். உங்கள் பிறந்த ஆண்டைச் சொன்னால், அந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒயினை உங்களுக்குத் தருவார்கள். அதை நீங்கள் பருகலாம்.

 

வோல்ஃப் பிளாஸ் (Wolf Blass) பார்வையாளர் மையம்

இங்கு தயாரிக்கப்படும் ஒயின்கள் பல விருதுகளைப் பெற்றிருக்கின்றன. சிறப்பாக பெற்ற பிளாக் லேபிள் ஒயின் பிரசித்திப் பெற்றது. இங்கும் ஒயினை சுவைக்கலாம். சுற்றுலாவில் பங்கேற்கலாம்.

 

பரோஸ்ஸா விவசாயிகள் சந்தை (ஆங்கஸ்டன்) Barossa Farmers Market (Angaston)

ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும், உள்ளூர் பாலாடைக்கட்டி, ஆலிவ் எண்ணெய், கையால் செய்த ரொட்டி, புதிய பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் நிரம்பிய கடைகளைப் பார்வையிடலாம். உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் பேசலாம். இது உணவு ஆர்வலர்களின் சொர்க்கம்.

 

டனுண்டா மற்றும் ஆங்கஸ்டன் (Tanunda and Angaston) கிராமங்கள்

இந்தக் கிராமங்களில் ஜெர்மன் பண்பாட்டின் தாக்கம் நிறைய இருக்கும். ஜெர்மன் கலையம்சத்துடன் கூடிய கட்டிடங்களைப் பார்க்கலாம். Langmeil Lutheran Church ஒரு வரலாற்று தேவாலயம். பூக்கடைகள் உங்களைப் பார்த்துச் சிரிக்கும். ஜெர்மன் பாணி ரொட்டி கிடைக்கும். பேக்கரி ஐட்டங்கள் கிடைக்கும்.

 

நூரியூட்பாவின் (Nuriootpa) பாரம்பரியம் மற்றும் கலை

தெற்கு ஆஸ்திரேலிய கலைஞர்களின் படைப்புகளைக் காட்டும் பரோஸ்ஸா ரீஜீனல் கேலரி உங்கள் லிஸ்டில் இருக்க வேண்டிய ஒன்று. Nuriootpa Linear Park-இல் ஒரு சாவகாசமான நடை ஒன்றைப் போடலாம்.

 

பெத்தானி (Bethany) கிராமம்

ஜெர்மனியிலிருந்து கப்பலில் பயணம் செய்து பரோஸாவில் குடியேறிய முதல் குடியேற்றவாசிகளின் இருப்பிடத்தைப் பார்க்கலாம். கல்லால் ஆன வீடுகளைப் பார்க்கலாம். பெத்தானி ரிசர்வ் பிக்னிக் போவதற்கு ஏற்ற இடம்.

 

பரோஸ்ஸா விண்டேஜ் ஃபெஸ்டிவல்  (Barossa Vintage Festival)

இந்த திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். அது ஒற்றைப்படை ஆண்டுகளில் தான் நடக்கும். எடுத்துக் காட்டாக இந்த வருடம் (2025) மார்ச் மாதத்தில் நடந்தது. அடுத்த விழா 2027ல் நடக்கும். ஏழு நாட்களுக்கு நடக்கும் இந்தத் திருவிழாவில் பரோஸாவின் ஒயினையும், உணவையும், இசையையும், பண்பாட்டையும் கொண்டாடி மகிழ்கின்றனர். ஒயின் சுவைப்பு நிகழ்வு மறக்க முடியாத ஒன்று.

 

பரோஸ்ஸா கோர்மெட் வீக்எண்ட்  (Barossa Gourmet Weekend)

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. நிறைய உணவு வகைகளை உண்ணலாம். இரண்டு ஒயின்களை இணைத்து மகிழ்வதைக் காணலாம். வெவ்வேறு உணவு வகைகளைச் சமைப்பதைக் கண்டு களிக்கலாம். உள்ளூர் சமையல்காரர்கள் உங்களை அசத்தி விடுவார்கள்.

 

மற்றவை

பரோஸ்ஸா நீர்த்தேக்கம் ஒரு தனித்துவமான அணை. அதன் வடிவம் மிகச் சிறப்பானது. 140 மீட்டர் தூரத்தில் நீங்கள் மெல்லிய அளவில் பேசினாலும், துள்ளியமாகக் கேட்கலாம். குழந்தைகளுக்கு அது ஒரு வேடிக்கையாக இருக்கும்.

மின்சார மிதிவண்டிகளை எடுத்துக் கொண்டு திராட்சைத் தோட்டங்களையும் மலைகளையும் உலா வரலாம்.  மெங்லர் மலையில் சூரிய மறைவு காட்சிகளைக் கண்டு களிக்கலாம். கங்காருகள், எகிட்னாக்கள் போன்ற உள்ளூர் வனவிலங்குகளைப் பார்க்கலாம். வெவ்வேறு பறவைகளையும், மலர்களையும் பார்ப்பதில் ஆர்வம் இருந்தால் அவையும் காணலாம். ஹாட் ஏர் பலூன்களில் சவாரி செய்யலாம். பள்ளத்தாக்கின் மேலே பறந்து திராட்சைத் தோட்டங்களையும், மலைகளையும், கிராமங்களின் அற்புதக் காட்சிகளையும் கண்டு மகிழலாம்.

 

Barossa Bowland and Mini Golf - இல் விளையாடி மகிழலாம். ஹெலிகாப்படரை வாடகைக்கு எடுத்து வான் வழி, பரோஸாவின் அழகைப் பருகலாம்.

 

பரோஸ்ஸா வேலி, அடிலெய்டிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் (70 கிமீ) உள்ளது, கார் அல்லது வழிகாட்டப்பட்ட சுற்றுலா மூலம் எளிதாக அணுகலாம். எது பயணிக்க சிறந்த நேரம் என்று நீங்கள் கேட்கலாம். வசந்த காலத்தில் (செப்டம்பர்–நவம்பர்) மிதமான வானிலை இருக்கும். நிலம் பூத்துக் குலுங்கும். இலையுதிர் காலம் (மார்ச்–மே) அறுவடைக் காலம். பல வண்ண மரங்களைப் பார்க்கலாம்.

 

நிறைவாக

ஆக மொத்தம், நீங்கள் பரோஸா பள்ளத்தாக்கில் பயணிக்கும் போது Johann Frederick August Fiedler ஐ நினைவில் கொள்ளுங்கள். “நாம புதிய பூமிக்குப் போகிறோம். அங்க எல்லாம் வளமா இருக்கும். தேனும் பாலும் ஓடும். ஒளி மயமான எதிர்காலம் இருக்கும்”  என்ற நம்பிக்கையோடு கப்பலில் ஏறிய குடும்பங்களை நினைவில் கொள்ளுங்கள். தேனும் பாலும் ஓடுகிறதோ இல்லையோ…ஒயின்…ஒயின்…ஒயின் என ஊர் முழுக்க ஓடுகிறது. ஒயின் டேஸ்ட் பண்ணும் போது ஜெர்மனியின் சிலேசியா பகுதியிலேர்ந்து Johann Fiedler போன்று புலம் பெயர்ந்து வந்து தங்களது கடுமையான உழைப்பால் தங்கள் பண்பாட்டை நிலை நிறுத்திய அந்த ஜெர்மானிய சிலேசியன் மக்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

*********

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page