ஆஸ்திரேலிய புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பண்பாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் சவால்களும் தீர்வுகளும்
- உயிர்மெய்யார்

- May 10
- 18 min read
Updated: Jun 13
ஆஸ்திரேலிய புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பண்பாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் சவால்களும் தீர்வுகளும்
ஒரு வாழைத் தோட்டத்திலிருந்து, வாழைக் கட்டையொன்றைப் பறித்து, வெகு தூரம் பயணித்து வந்து, ஒரு புது இடத்தில் நட்டு வைத்தேன். அது துளிர்த்து வந்தது. சுருட்டிக்கொண்டு வெளி வந்த பச்சைச் பசேல் என்ற இலை, விரித்து அழகூட்டியது. ஆனால் சில நாட்களில் காற்றில் கிழிந்தது. மழையில் நனைந்தது. குளிரில் நடுங்கியது. இந்த புது வாழைக் கன்று வளர்ந்து குலைத் தள்ளுமா?
இருங்கள். அதற்குப் பதில் கண்டுபிடிக்குமுன், ஒரு சுவையான நிகழ்வை சுவைத்துவிட்டு, ஆய்வு பூர்வமான கட்டுரைக்குப் போகலாம்.
“இந்தாங்க…சக்கரைப் பொங்கல எடுத்துக்குங்க” என்று யாரோ என்னிடம் சொல்ல, நானும் என் குடும்பத்தாரும் சர்க்கரைப் பொங்கலை எடுத்து வாயில் போடுகிறோம். ஆஹா! என்ன ருசி!! சுற்றிப் பார்க்கிறேன். ஒரே கோலாகலம். ஓரே கொண்டாட்டம். 2025 ஜனவரி 18 விக்டோரியாவில் உள்ள பிரபல கால்ஃபீல்ட் ஒட்டப்பந்தயக் களத்தில் தான் இந்த ஆர்ப்பாட்டம். எங்கு பார்த்தாலும் மலர்ந்த தமி்ழ் முகங்கள். இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென் ஆப்பிரிக்கா என்று பல இடங்களில் தங்கள் வேர்கள் இருந்தாலும் இங்கு ஆஸ்திரேலியாவில் முளைவிட்டு வளர்கிற முகங்கள். அந்தக் காட்சியைக் கொஞ்சம் நீங்களும் கண்ணாரப் பார்த்துவிடுங்கள். இந்தக் கட்டுரைக்கும் அந்தக் காட்சிக்கும் நிறையப் பொருத்தங்கள் இருக்கின்றன.
மெல்பர்னில் பொங்கல் விழா
வாருங்கள் அந்தக் குடும்பத்தைத் தொடர்வோம். போகிப் பொங்கல், தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்ற விவரம் உள்ள சுவரொட்டிகளைத் தாண்டிச் சென்று சேலை, வேட்டியுடன் வந்திருக்கும் இவர்கள் குடும்பத்துடன் சமூகப் பொங்கல் வைத்துக்கொண்டிருக்கின்றனர். கரும்பு கட்டப்பட்ட பின்னணியில், புள்ளிக் கோலம் போட்ட தரையில், வண்ணம் தீட்டப்பட்ட பானையில் மஞ்சளும் இஞ்சியும் கட்டி, பால், அரிசி, சக்கரைப் போட்டு பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூக்குரல் இடுகின்றனர். ஒரு பக்கம் தப்பிசையை சிலர் முழங்கிக்கொண்டிருக்க, ஒலிவாங்கியில் இரு இளையோரோடு, தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் கரைத்து ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து கபடியும் கிளித்தட்டும் விளையாடுகிற இளைஞர்களையும் இளைஞிகளையும் ஊக்குவித்து விட்டு, வரிசையாக உள்ள உணவுப் பந்தல்களை நோட்டம் விட்டு விட்டு, நீர் மோர் குடிக்கின்றனர்.
பக்கத்திலே ஏறு தழுவுதல் காட்சியாக்கப்பட்டிருக்கிறது . இசைக்கேற்றாற் போல் சிலர் உடல் வளைத்து கும்மியாட்டம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, மெல்போன் வாசகர் வட்டத்தில் யாரோ பேசுவதை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். கம்பங்கூழ் வாங்கி குடித்து விட்டு, தமிழ் நூல்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டு, தாமிரபரணி அகழாய்வு பற்றிய கண்காட்சியை ஆர்வமாகப் பார்க்கின்றனர். குழந்தைகளின் முகங்களில் வர்ணம் பூசிக்கொண்டு, வரிசையாக இருக்கிற பொம்மை செய்கிற இடம், பானை செய்கிற இடம், அவற்றில் வர்ணம் பூசுகிற இடம், துணி விக்கிற இடம், சர்பத் கடை, வடை சமோசா கடை, கடலைமிட்டாய் கடை, குழந்தைகள் விளையாட்டு அரங்கம் என்று ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டு, பாட்டு கச்சேரி நடக்கும் இடத்திற்கு வருகிறார்கள். சுற்றிவரும் ராட்டினம் ஒரு பக்கம், தமிழ் சினிமா பாடல்கள் மறுபக்கம், பரதநாட்டியம் இன்னொரு பக்கம்.
தமிழ் மொழியில் சிறந்து விளங்குகிற மாணவர்களுக்குப் பரிசளிக்கும் விழாவில் பங்கெடுக்கின்றனர். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ரியல் எஸ்டேட் காரர்கள், சாமி படங்கள் விற்பனை செய்வோர், மளிகைக் கடை வைத்திருப்போர், சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள், போன்று பல்வேறு துறையில் உழைப்பில் உயர்ந்தவர்கள் தங்களுக்கென்று வைத்திருந்த பந்தல்களையும் பார்த்துவிட்டு, மெல்லிசை கச்சேரியைக் கேட்டுவிட்டு, ஒயிலாட்டம் பார்த்துவிட்டு, தமிழையும், தமிழரையும், விழாவையும் விட்டுப் போக மனமில்லாமல் அதோ போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
இப்படி, பண்பாட்டுத் திருவிழாக்கள், மொழி, இலக்கியம், இசை, நடனம், உணவு மற்றும் மத நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தமிழ்ச் சமூகம் தங்கள் பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முயற்சித்து வருகிறது. தமிழ் மொழிப் பள்ளிகள் மூலம் மொழியைப் பாதுகாக்கிறது. சமூக அமைப்புகள், கல்வி முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் பண்பாட்டு தொடர்ச்சியை வளர்ப்பதிலும், பண்பாட்டு பிணைப்புகளாக செயல்படுவதிலும், கூட்டு அடையாளத்தையும் தலைமுறைகளுக்கு இடையேயான உறவுகளையும் பலப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதே நேரத்தில், பல்கலாச்சார சமூகத்தில் தமிழ்ச் சமூகம் பண்பாட்டு அடையாளத்தை பராமரிப்பதில் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்தக் கட்டுரை ஆராய்கிறது, அதாவது மொழி இழப்பு, தலைமுறைகளுக்கு இடையேயான பரிமாற்றம் மற்றும் உலகமயமாக்கலின் தாக்கம் ஆகியவைகளைப் பற்றி அலசுகிறது.
முதலில் ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய பொதுவான தரவுடன் துவங்குவோம்.
ஆஸ்திரேலிய தமிழ்ச் சமூகம்
ஆஸ்திரேலியாவில், 1901 ஆம் ஆண்டு, 800 இந்தியர்கள் தான் இருந்ததாக Non Resident Indians[1] அறிக்கைக் கூறுகிறது. அதே 1901ம் ஆண்டு Immigration Restriction Act 1901[2] என்ற ஒரு சட்டத்தை, புதிதாக உருவாகியிருந்த ஆஸ்திரேலியா அரசாங்கம், தனது புதிய பாராளுமன்றத்தில் இயற்றியது. அதன் பிரகாரம் வெள்ளையர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவிற்கு வந்து குடியுரிமை பெறலாம் என்ற நிலை இருந்தது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால், ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு குடியேறிய வெள்ளையர்கள் குறைந்து போனதால், 1966 ஆம் ஆண்டு, அதுவரைப் பேணப்பட்டு வந்த “வெள்ளை ஆஸ்திரேலியா” கொள்கையை, பிரதமர் ஹரால்ட் ஹோல்ட்[3] முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இருந்தாலும், கொள்கை ரீதியான முடிவு யதார்த்தத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவில்லை. ஆனால், 1973 ம் ஆண்டு பிரதமர் விட்லாம் கொண்டு வந்த பல்லின ஆஸ்திரேலியக் கொள்கை தான் மற்ற இன மக்களும் ஆஸ்திரேலியாவில் குடியேறி வாழ வழி வகுத்தது. அதனடிப்படையில், தற்பொழுது கிட்டத்தட்ட 200 நாடுகளிலிருந்து மக்கள் இங்கு வந்து குடியேறியிருக்கிறார்கள். அப்படி, ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை, 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[4], சுமார் 95,404 ஆகும்.
ஆஸ்திரேலியாவிற்கு மட்டுமல்ல, காலங்காலமாக, தமிழர்கள் உலகம் முழுதும் பயணித்துக் கொண்டேயிருந்திருக்கிறார்கள். தரை மூலமாக. தண்ணீர் மூலமாக. தெற்காசிய நாடுகளில் பலவற்றை மூன்று நான்கு நூற்றாண்டுகளாக தமிழர்கள் தங்கள் நிர்வாகத்தில் வைத்திருந்திருக்கின்றனர். எகிப்திலிருந்து சீனா வரை, இந்தியா, இலங்கை, மலேசியா வழியாக ‘சில்க் சாலை’ நீண்டிருந்த போது, தமிழர்கள் பயணித்திருக்கிறார்கள். பிறகு, ஆங்கிலேயர்கள் இந்த நாடுகளைத் தங்கள் காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த போது, பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளுக்கு தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டதும், பயணப்பட்டதும் நாம் அறிந்ததே. ஆனால், புலம் பெயர்தல் அதிகமானது எப்பொழுது தெரியுமா?
1948ல் உருவான General Agreement on Tariffs and Trade (GATT)-ஐ அடிப்படையாகக் கொண்டு 1995ல் செயல்படத் துவங்கிய World Trade Organisation (WTO), இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உருவான World Bank (1944), International Monetary Fund (IMF - 1944-45) போன்ற நிறுவனங்களின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய உலகமயமாக்கம், தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம், இயந்திரமயமாக்கம் எல்லாம் தொடங்கியது. உற்பத்தி, வியாபாரம், பொருளாதாரம், போக்குவரத்து, தொழிற்நுட்பம் எல்லாம் மாறத் துவங்கிய பொழுது தமிழர்கள் மற்ற நாடுகளுக்கு குடிபெயர்வது அதிக எண்ணிக்கையில் ஆனது.
அதுவே ஆஸ்திரேலியாவிலும் நடந்தது. அது காலனியாதிக்கத்தில் ஆங்கிலேயர்களால் பல்வேறு பணிகளுக்காக அவர்களின் காலனி நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதிலிருந்து வேறுபட்டு நின்றது. இலங்கையில் இனஅழிப்புப் போர் காலத்தில் தமிழர்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் குடியேறினார்கள். இன்றைக்கு இணையத்தில் முன்னேறி செயற்கை நுண்ணறிவில் முன்னேற்றம் துவங்கியிருக்கிற இந்தக் காலத்தில் புலம் பெயர்தல் இன்னும் கூடுதலாக இருக்கிறது.
இப்படி பல நாடுகளிலிலுந்து வெவ்வேறு காலகட்டங்களில் ஆஸ்திரேலியாவிற்கு, புலம் பெயர்ந்து வந்திருக்கிற தமிழர்களின் வாழ்க்கை, உலகமயமாக்கப்பட்ட இந்தச் சூழலில், பல்லின மக்கள் வாழும் தேசத்தில் அமைதியான ஓடமாக இருக்கிறதா? அல்லது புயலுக்கு நடுவே தள்ளாடும் ஓடமாக இருக்கிறதா?
அதையும் பார்த்துவிடுவோம்.
உலகமயமாக்கமும் சில உண்மைகளும்
எந்த ஒரு சமூகமும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு புலம் பெயரும் பொழுது, தன் சொந்த இடத்தில் அது விட்டு விட்டு வந்த தன் பண்பாட்டு அடையாளத்தைப் புகுந்த இடத்தில் பின்பற்றவும் பாதுகாக்கவும் முயற்சிக்கிறது. அப்படித் தன் பண்பாட்டைப் பாதுகாக்கப் பல வழிகளைக் கையாண்டாலும், புது இடத்தில் பல சவால்களையும் அது காண வேண்டியிருக்கிறது. இது புலம் பெயர்ந்த எல்லா சமூகங்களின் அனுபவமாகவே இருக்கிறது.
இந்த அனுபவத்தை ‘மானுடவியல் மற்றும் சமூகவியல்’ ஆய்வுகளில் பரவலாக பலர் ஆய்வு செய்திருக்கின்றனர். உலகமயமாக்கல் புலம்பெயர் சமூகங்களுக்கு பல வாய்ப்புகளையும் அதே நேரத்தில் பல சவால்களையும் உருவாக்கியுள்ளது என்று அர்ஜூன் அப்பாதுரை (1996)[5] குறிப்பிடுகின்றார். உலகமயமாக்கல் அவர்களின் உறவுகளைத் தங்களுக்குள் பராமரித்துக் கொள்ள உதவுகிறது என்றும் மேலும் அது அவர்களின் பண்பாட்டு ஒருங்கிணைப்புக்கு உதவுகிறது என்றும் ஆணித்தரமாக விளக்குகிறார்.
1980 களில் என் நண்பரின் இளவல் ஒருவரும் அவருடைய பக்கத்துவீட்டுக்காரரும் திருச்சியிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குப் புலம் பெயர மனு அளித்தார்கள். நண்பரின் இளவலுக்கு வீசா கிடைத்துவிட்டது. பக்கத்து வீட்டுக்காரருக்கு கிடைக்கவில்லை. நண்பரின் இளவல் ஒரு ஆங்கிலோ இந்தியர். பக்கத்து வீட்டுக்காரர் தமிழர். அப்பொழது அது சரியாகப் புரியவில்லை. இப்பொழுது புரிகிறது. இன்றைக்கு என் குழந்தைகளும் புலம் பெயர்ந்து, நாங்கள் இங்கு வாழும் போது, எங்கள் வலப் பக்க அண்டை வீட்டாரும், இடப் பக்க அண்டை வீட்டாரும் தமிழர்களே!
அப்படி, உலகமயமாக்கல் ஆஸ்திரேலியாவிற்கு தமிழர்களின் புலம்பெயர்வை எளிதாக்கியுள்ளது, ஆஸ்திரேலியாவின் கல்வி முறையையும் உலகளாவிய வலையமைப்புகளையும் பயன்படுத்தி, 80% தமிழர்கள் உயர்நிலைப் பள்ளியை முடித்து மருத்துவம், வணிகம் மற்றும் கல்வியில் தொழில்முறை வல்லுநர்களாக உயர்ந்துள்ளனர். தமிழ் திருவிழா ஆஸ்திரேலியா 2025 போன்ற நிகழ்வுகள் மூலம் தைப்பொங்கலை கொண்டாடி, பல கலாச்சார பரிமாற்றத்தில் பல்வேறு சமூகங்களை ஈடுபடுத்தி, ஆஸ்திரேலியாவின் பல கலாச்சார பண்பாட்டை தழுவ உதவுகிறது.
உலகமயமாக்கல் ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் போன்ற குழுக்களை இலங்கையில் தமிழ் இனப்படுகொலை பிரச்சினைகளை எடுத்துரைக்கவும், உள்ளூர் கவலைகளை உலகளாவிய மனித உரிமைகள் இயக்கங்களுடன் இணைக்கவும் உதவியுள்ளது. டிஜிட்டல் தளங்கள் மற்றும் சர்வதேச அனுபவங்கள் மூலம் தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்துடன் இணைந்திருக்கவும், புதிய சந்தைகளை ஆராயவும் வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
அதே சமயம், உலகமயமாக்கல் தமிழர்களை ஆஸ்திரேலிய சமூகத்தில் ஒருங்கிணைவதற்கு அழுத்தம் கொடுக்கிறது, இது அவர்களின் பாரம்பரிய மதிப்புகளை பாதிக்கிறது. இளைய தலைமுறைகள் ஆங்கிலத்தை முன்னுரிமையாகக் கொள்கிறார்கள். மேற்கத்திய பண்பாட்டின் செல்வாக்கு, தமிழ் மொழி மற்றும் பாரம்பரியங்களை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு அது சவாலாக இருக்கிறது. இங்கேயே பிறந்து வளர்கிற தமிழ்க் குழந்தைகளில் பலர் தமிழ் மொழியை திக்கித் திணறிப் பேசுகின்றனர். சிலர் மறந்து விடுகின்றனர். வெகு சிலரே தமிழ் மொழியை ஆழமாகக் கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பொருளாதார மற்றும் தொழில்முறை தளங்களில் உலகளாவிய போட்டி, தமிழ் சமூகத்திற்கு தங்கள் தனித்துவத்தை நிலைநாட்டுவதில் சவாலை ஏற்படுத்துகிறது. உலகமயமாக்கல், தமிழ் பாரம்பரியங்களுடன் போட்டியிடும் மேற்கத்திய பண்பாட்டு செல்வாக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, இளைய தமிழர்கள் பாரம்பரிய தமிழ் இசை அல்லது திரைப்படங்களை விட உலகளாவிய ஐரோப்பிய, அமெரிக்க, கொரியன் பண்பாட்டை முன்னுரிமையாகக் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. இது நெட்ஃப்ளிக்ஸ் காலம். சொந்த பண்பாட்டு அடையாளத்தை நீர்த்துப்போகச் செய்ய வெளி சவால்கள் நிறைய இருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில் ஆஸ்திரேலிய புலம் பெயர் தமிழர்கள் தங்கள் பண்பாட்டை எந்தெந்த வழிகளில் காக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு முன்பு என்னென்ன சவால்கள் இருக்கின்றன என்றும், அந்தச் சவால்களை முறியடிக்க என்னென்ன தீர்வுகள் இருக்கின்றன என்றும் பார்ப்போம். முதலில் ஊடகங்களால் ஏற்படும் வசதிகளையும் அதே நேரம் வரும் சங்கடங்களையும் அலசுவோம்.
ஊடகங்களும் சில ஊக்கங்களும்
ஊடகங்கள் எதற்கு உதவியாக இருக்கின்றன? நான் ஆஸ்திரேலிய ஊடகமான SBSக்கு அவ்வப்பொழுது பாட்காஸ்ட்களும், கட்டுரைகளும் வழங்குவேன். SBS வானொலியில் ஒருவர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒரு நிகழ்வைப் பற்றித் தமிழில் கொடுக்கும் பொழுது, என்னையறியாமலேயே, முகத்திற்கு முகம் பார்க்காமலேயே அவரோடு ஒன்றிவிடுகிறேன். முகத்திற்கு முகம் பார்த்துத் தான் இனச் சமூகப் பிணைப்பு உண்டாக வேண்டும் என்றில்லை. இனச் சமூகப் பிணைப்பு, கற்பனையிலும் உருவாகும். அதைத் தான் ஊடகங்கள் செய்கின்றன.
ஊடகங்களின் இத்தகையத் தன்மையை, பெனடிக்ட் ஆண்டர்சன் (2016)[6] விரிவாக விவரிக்கிறார். அச்சு ஊடகம் மூலம், ஒருவருக்கொருவர் முகத்திற்கு முகம் பார்த்திராத ஓரின மக்கள், தாங்கள் இந்தியர்கள் என்றோ, மலேசியர்கள் என்றோ, இந்தோனேசியர்கள் என்றோ நினைத்துக்கொள்கின்றனர் என்று எழுதுகிறார். அதற்கும் மேலாக மின்னணு ஊடகமான காணொளி மற்றும் சினிமா போன்றவைகள் மூலமாக தங்களுக்குள் நட்சத்திரப் பிரபலங்களை (அரசியல், சினிமா, விளையாட்டு, போன்ற துறைகளில்) உருவாக்கி அவர்களைப் பின்பற்றவும் செய்கிறார்கள் என்கிறார். சமீபத்திய சமூக ஊடக பிரபலங்கள் மூலமும் தற்போதைய சமூக ஊடக காலத்தில் அந்தப் பிணைப்பு தேசிய சமூகங்களுக்குள் நடைபெறுகிறது என்பதை கண்கூடாகப் பார்க்கலாம். ஆஸ்திரேலியாவில் இன்ஸ்டாகிராம், இணையப் பக்கங்கள், வலையொளி, பாட்காஸ்ட் என்று பல ஊடகவியலாளர்கள் இயன்ற அளவு பாரம்பரிய பண்பாட்டைக் காக்க முயற்சி செய்து வருகின்றனர்.
ஆறு மொழிகளில் துவங்கி, தற்பொழுது, அறுபத்தெட்டு மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கும் SBS[7] வானொலி நிலயம், இந்த வருடம் (2025ல்) ஐம்பது வயதை எட்டுகிறது. தமிழ் மொழியை ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களிடையே உயிர்ப்புடன் வைத்திருக்க SBS உதவி வருகிறது. மேலும், தமிழ் இசை, இலக்கியம், கலை மற்றும் பண்பாடு பற்றிய நிகழ்ச்சிகள் மூலம், இளைய தலைமுறையினர் தங்கள் பாரம்பரியத்துடன் இணைந்திருக்க உதவுகிறது.
AUS தமிழ் டிவி உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதன் மூலம், பாரம்பரிய நிகழ்ச்சிகள், பேட்டிகள் மற்றும் ஆவணப்படங்கள் மூலம் தமிழ் ஆஸ்திரேலியர்கள் தங்கள் பாரம்பரியத்தை வெளிப்படுத்த முடிகிறது, இது சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்துகிறது. இந்த ஊடகங்கள் தமிழ் ஆஸ்திரேலியர்களுக்கு தங்கள் கதைகளை பகிர்ந்து கொள்ளவும், 2025 தமிழ் திருவிழா ஆஸ்திரேலியா போன்ற பண்பாட்டு திருவிழாக்களை முன்னிலைப்படுத்தவும், பரந்த பார்வையாளர்களுடன் ஈடுபடவும் வாய்ப்புகளை வழங்குகின்றன.
இதனால் பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் தெரிந்துகொள்ளுதல் அதிகரிக்கிறது. தமிழ் அகதி உரிமைகள் மற்றும் வரலாற்று ஒடுக்குமுறைகள் போன்ற பிரச்சினைகளை விழிப்புணர்வு செய்ய ஊடகங்கள் கருவியாக உள்ளன. தமிழ் அகதி கவுன்சில் போன்ற குழுக்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் கொள்கைகளைப் பரப்பவும், பொதுஜனப் பார்வையை விரிவுபடுத்தவும் செய்கின்றன. தமிழ் ஊடகச் சேனல்கள் உள்ளூர் வணிகங்கள் மற்றும் கலைஞர்கள் பரந்துபட்ட பார்வையாளர்களை அடைய உதவி செய்கின்ற., சமூகத்திற்குள் பொருளாதார வளர்ச்சியை அவை ஆதரிக்கின்றன.
அதே நேரம் ஊடகங்கள் மூலம், புலம் பெயர் சமூகங்கள் பல சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. தவறான தகவல்களைத் தருவதன் மூலம் பொதுமக்களிடையே பாரபட்சமான கருத்துருக்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த போது, சில பெருநிறுவன ஊடகங்கள் தமிழர்களை அபாயகரமாகச் சித்தரித்தது பொது மக்களை குழப்பமடைய வைத்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என Stu Harrison (2009)[8] கூறுகிறார். இந்திய ஊடகங்களுக்கும் பாகிஸ்தானிய ஊடகங்களுக்கும் இடையே நடக்கிற செய்தி மோதல், மெல்பர்னில் இரு சார்பு மக்களும் தங்கள் வாதங்களை பொது வெளியில் வைக்க முயல்வதில் முடிகிறது. இஸ்ரேல்-ஹமாஸ், ரஷ்ய-உக்ரைன் போர்ச் செய்திகளும் இவ்வேலையையேச் செய்கிறது.
வெகுசன ஊடகங்கள் சொல்லாத செய்தியால் அல்லது திரித்துச் சொல்கிற செய்தியால் பலர் மருத்துவ மற்றும் நலச் சேவைகளைப் பெறுவதில் பின்தங்கி விடுகின்றனர். அதில் அதிகம் பாதிப்படுவது அகதிகளாக வரும் தமிழர்கள் தான் என்று Silove. D et al. (1999)[9] அன்று எழுதியது இன்றும் அதிகம் மாறவில்லை என்பது Mylvaganam & Hiller (2018)[10] கூற்றில் தெரிகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை, மன வலிகளை ஊடகங்கள் சரியாக பிரதிபலிக்கவில்லை என்பது மட்டும் அல்ல, முக்கிய ஊடகங்களில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாததும் தான் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. அதற்கு சாட்சியாக, ஊடகவியலாளர் ரெபேக்கா ஹோல்டு, நிரோமி டி சொய்சா போன்றவர்களின் உதவியுடன் பிரியா எழுதியுள்ள Home to Biloela: The Story of the Tamil Family that Captured our Hearts[11] என்ற நூல் இருக்கிறது. அவருடைய கதையை மிகச் சுருக்கமாக எழுத்தாளர் ஜேகே[12] தன் முகநூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். தமிழர்களின் பிரச்னைகளை, அகதிகளின் குடியமர்வு கொள்கைகளை, நியாய தர்மத்தோடு பெரு ஊடகங்கள் காட்டியிருக்கின்றனவா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.
Tamil Muzahakkam, Australian Tamil Broadcasting Corporation, SBS Tamil Services, Global Tamil Vision TV, Tamil Osai Magazine, Tamil Australian, Mellinam போன்ற, வானொலி, தொலைக்காட்சி, மற்றும் பத்திரிக்கை போன்ற ஊடகங்கள், தமிழ் மொழியையும், தமிழப் பண்பாட்டையும் காக்க பெருமளவில் பயன்படுகிறது. அதுமட்டுமல்ல. இணையப் பக்கங்கள், எக்ஸ் கணக்குகள், முகநூல் பக்கங்கள், வலையொளி காணொளிகள், லிங்க்ட் இன் போன்ற சமூக ஊடகங்களையும் இளையோர் பலர் பயன்படுத்தி மரபையும் மொழியையும் காத்து வருகின்றனர் (Subramaniyan. C, 2014)[13].
ஊடகங்கள் மூலம் தமிழர் வாழ்வியல் மட்டுமல்ல, தமிழ் மொழியும் பாதுக்காக்கப்படுகிறது என்பது உண்மை. ஊடகவழி மட்டுமல்ல தமிழ் மொழி மற்ற பல வழிகளிலும் பாதுகாக்கப்படுகிறது. எப்படி என்று பார்ப்போம்.
மொழியும் சில வழிகளும்
புலம்பெயர் சமூகத்திற்கு, தாய் மொழி, அதன் அடையாளத்தின் மூலக்கல்லாக பார்க்கப்படுகிறது. அதிலும் சிறப்பாக பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான, மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான, செம்மையான தமிழ் மொழி, புலம் பெயர் தமிழர்களுக்கு அடையாளம் மட்டுமல்ல, அவர்களது உயிராகவும், உயிருக்கு மேலாகவும் பார்க்கப்படுகிறது. சுரேஷ் கனகராஜா (2013)[14] தன் ஆய்வுக்கட்டுரையில் புலம்பெயர் சமூகங்களில் தமிழ் மொழிப் பள்ளிகளின் பங்கை வலியுறுத்துகிறார். மொழியை மட்டுமல்லாமல் பண்பாட்டு மதிப்பீடுகள், இன வரலாறு ஆகியவற்றை கற்பிப்பதிலும் அவற்றின் முக்கியத்துவத்தை அவர் குறிப்பிடுகிறார். அவரது ஆய்வில் பங்கு பெற்ற பெரும்பான்மையான இளைஞர்கள் ஆங்கிலமே தங்களது முதன்மை மொழித்திறமை என்றும் ஆனால் அது அவர்களின் இன அடையாளத்திற்கும் தமிழ்ச் சமூகத்தினரோடு உறவு கொள்வதற்கும் இடையூறாக இல்லையென்றும் வலியுறுத்தியதாகக் கூறுகிறார். பல்வேறு நடைமுறைகள் மூலம் இந்த இளைஞர்கள் தங்களது தாய் மொழியை தங்களது அடையாளமாக வைத்துக் கொள்கிறார்கள் என்றும் அது தங்களது சமூக அமைப்புக்கு ஒரு நெகிழ்வான வளமாக அமைகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் பதிவு செய்கிறார்.
சமூக மொழிப் பள்ளிகளின் பங்கை Shanmugam. K. (2023)[15] விவரிக்கிறார். அவை, புலம் பெயர்ந்த மக்களுடைய குழந்தைகள், தம் இனப் பண்பாட்டை அறிந்துக் கொள்வதற்கும், வரலாற்றைத் தெரிந்துக்கொள்வதற்கும், தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்குமான வழியாக இருக்கிறது என்கிறார் அவர். நியூ சௌத் வேல்ஸ்-ல் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் தமிழைக் கற்றுக் கொள்வதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தமிழ் இலக்கியம், கவிதை, வரலாறு பற்றிய பாடங்கள் இளம் தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கிறார்.
சமூகத்தால் நடத்தப்படும் பள்ளிகள், எடுத்துக்காட்டாக, சிட்னி தமிழ்ப் பள்ளி, பாரதி பள்ளி போன்றவைகள் வாராந்திர வகுப்புகளை வழங்கி தமிழைப் படிக்கவும், எழுதவும், பேசவும் கற்பிக்கின்றன. மேலும் தமிழ் கவிதை மற்றும் வரலாறு போன்ற பண்பாட்டு கல்வியையும் அவைகள் உள்ளடக்கியிருக்கின்றன. இளைய தலைமுறைகளுக்கு மொழியைக் கடத்த அது ஏதுவாக இருக்கிறது. ஆஸ்திரேலிய தமிழ் சங்கம் போன்ற குழுக்கள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தமிழ் மொழிப் பயிற்சி வகுப்புகளை நடத்தி, பரந்த அளவிலான ஈடுபாடு மற்றும் எழுத்தறிவை வளர்க்கின்றன.
அதே நேரம், சில சவால்களும் இருக்கின்றன.
இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினர் ஆங்கிலத்தை முன்னுரிமையாகக் கொள்கின்றனர். பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகளில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவதால் தமிழ் மொழித் திறனில் வீழ்ச்சி ஏற்படுகின்றது. இளையத் தமிழர்கள் மொழியிலிருந்து துண்டிக்கப்பட்டதாக உணர்கின்றனர். உலகமயமாக்கப்பட்ட கலாச்சார நெறிமுறைகளை விரும்பி, தமிழ் மொழி வகுப்புகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்பு குறைவதால் இது தெளிவாகிறது. சில பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகின்ற போதிலும், முதன்மை கல்வி முறையில், தமிழ்க் கலைத்திட்டம் இணைக்கப்படாமல் இருப்பது சிரமத்தை அதிகரிக்கிறது. உலகளாவிய ஊடகங்கள் மற்றும் மேற்கத்திய பண்பாட்டின் செல்வாக்கு தமிழ் மொழி பயன்பாட்டுடன் போட்டியிடுகின்றன, இளைய தலைமுறைகள் ஆங்கில ஊடகங்களை நோக்கித் திரும்புவதால் தினசரி தமிழ் ஈடுபாடு குறைகிறது. பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை வீட்டில் தமிழ் பேச ஊக்குவிப்பதில் சிரமப்படுகின்றனர், குறிப்பாக பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகளில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தும்போது அது அதிகமாகிறது.
ஊடகங்கள் மற்றும் மொழி குறித்த வாய்ப்புகளையும் சவால்களையும் தெரிந்துக் கொண்டோம். அதே நேரம் பண்பாட்டு கடைப்பிடிப்பில் சமயங்களும் தன் பங்கைச் செய்கின்றன. எப்படி என்று பார்ப்போம்.
சமயங்களும் சில சம்பிரதாயங்களும்
மதநடைமுறைகள் பண்பாட்டுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை Perera, N. (2023)[16] விளக்குகிறார். 2016 முதல் 2021ம் ஆண்டிற்குள் ஆஸ்திரேலியாவிற்குள் குடிபுகுந்தவர்களில் அதிகமாக எந்தெந்த நாட்டிலிருந்து வந்தார்கள் தெரியுமா என்ற கேள்வியை அவர் கேட்டுவிட்டு, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து பதிலையும் அவர் தருகிறார். முதல் இரண்டு இடங்களை நேபாளமும் இந்தியாவும் பெறுகிறது. இந்த இரண்டு நாட்டிலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்றும், ஆஸ்திரேலியாவில் இந்து மதம் வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும் குறிப்புத் தருகிறார்.
ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் தோன்றும் வண்ணமயமான கோவில் முகடுகளில் இந்து மதத்தின் வளர்ச்சி தெளிவாக பிரதிபலிக்கிறது என்கிறார். ஒரு குறிப்பிட்ட நாளில், கோவிலின் உணவகப் பகுதியில் ஆங்கிலத்தைத் தவிர இன்ன பிற பதினான்கு மொழிகள் பேசப்பட்டன என்றும் அவற்றில் பொதுவானவை தமிழ், குஜராத்தி மற்றும் ஹிந்தி எனவும் பதிவு செய்கிறார். தமிழ் மொழியின் இருப்பு எதிர்பார்த்ததே என்றும், ஏனெனில் இக்கோவில் முக்கியமாக இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்தோரால் ஒரு தமிழ் இந்து கடவுளை வழிபடவும், தமிழ் கலாச்சாரத்தை கொண்டாடவும், அதைப் பரப்பவும் ஒரு தளமாக நிறுவப்பட்டது எனவும் குறிப்பிடுகிறார்.
ஆங்கிலமே முதன்மையாக இருக்கிற ஆஸ்திரேலிய சமூகத்தில், வரும் தலைமுறைகளுக்கு தமிழ் மொழியும் பண்பாடும் சீராக வளர வேண்டுமென்றால், தமிழுக்கான ஒரு பாதுகாப்பான தளம் உருவாக்கப்பட வேண்டும் என கோவில் தோற்றுவித்தவர்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர் என்று அவர் நம்புகிறார். கோவில் சடங்குகள், திருவிழாக்கள் மற்றும் சமூகக் கூட்டங்கள் சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துகின்றன. சிட்னியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவில் போன்ற கோவில்கள் பண்பாட்டுப் பிணைப்புகளாக செயல்படுகின்றன. அவை பொங்கல் (அறுவடை திருவிழா) மற்றும் தீபாவளி (ஒளி திருவிழா) போன்ற திருவிழாக்களை நடத்துகின்றன, அங்கு சமூக உறுப்பினர்கள் சடங்குகளை நிறைவேற்றவும், பாரம்பரிய உணவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், தங்கள் பாரம்பரியத்தைக் கொண்டாடவும் ஒன்று கூடுகின்றனர்.
இந்த நிகழ்வுகள் குழந்தைகளுக்கு தமிழ் மத நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள ஓர் இடத்தை வழங்குகின்றன. கோயில்கள் வழிபாட்டு இடங்கள் மட்டுமல்ல, தமிழ் அடையாளத்தை வலுப்படுத்தும் பண்பாட்டு மையங்களாகவும் உள்ளன. அவை தலைமுறைகளுக்கு இடையேயான தொடர்பை வழங்குகின்றன, அங்கு மூத்தவர்கள் இளைய உறுப்பினர்களுக்கு சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களைக் கற்றுக்கொடுக்கின்றனர். பாரம்பரிய தேர் இழுத்தல், அங்கப் பிரதஷ்டம் செய்தல், மொளப்பாரி எடுத்தல், நாதஸ்வரம் வாசித்தல், மேளம் அடித்தல், அக்கினிச்சட்டி தூக்குதல், நீர்மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்குதல் போன்ற நிகழ்வுகள் தங்கள் பண்பாட்டு வேர்களை நினைவுப் படுத்தி, உற்சாகத்தைக் கொடுக்கின்றன.
இதே வேலையைக் கலைகளும் செய்கின்றன.
கலைகளும் சில கண்ணோட்டங்களும்
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வாழ்பவர்கள் மத்தியில், நடனம், இசை போன்ற கலைகளை மையமாக வைத்து செய்த ஆய்வில், கலாச்சார அடையாளம், உணர்வு, பிரதிநிதித்துவம் பற்றியெல்லாம் Mudhan, J.S. (2019)[17] புதிய கண்டுபிடிப்புகளைத் தருகிறார். தமிழர்களுக்கிடையேயான செய்தித் தொடர்பும் உறவும் பாரம்பரிய நிகழ்த்துக்கலைகளைத் தொடர்ந்து காத்துவருவதில் அடங்கியிருக்கிறது என்ற மிக முக்கியமான முடிவை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
அதனால் தமிழ்ச் சமூகம், கலாச்சார பாரம்பரியங்களைத் தொடர்ந்து புதுப்பிக்கும் வேலையிலும் மீளுருவாக்கம் செய்யும் வேலையிலும் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருகிறது என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் இன்னொரு ஆய்வில்[18], மொழி இழப்பு மற்றும் மேற்கத்திய பண்பாடு இளைய தலைமுறைகளை பாதிக்கும் செல்வாக்கு ஆகியவை பண்பாட்டு தொடர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க தடைகளாக உள்ளன என்றும் அவற்றுள் சமத்துவம் (Equality), உள் அடக்குதல் (Inclusion), பொருளாதார வளர்ச்சி (Economic Growth) மற்றும் சமூக திறன் மற்றும் மூலதனம் கட்டுதல் (Building capacity and social captial) சார்ந்த சவால்கள் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க சவால்களாக உள்ளன என்று Babacan, H. (2005) குறிப்பிடுகிறார்.
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் 13 ஆண்டுகளாக சிட்னியில் சித்திரைத் திருவிழா நடத்தி வருகிறது. தமிழ் நாட்டிலிருந்து நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் கலந்துக் கொள்கின்றனர். தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கரகம் எடுக்கிறார்கள். கோலாட்டம் அடிக்கிறார்கள். கும்மியாட்டம் ஆடுகிறார்கள். காவடி தூக்குகிறார்கள். வேட்டியணிந்து சிறார்களும் இளையோர்களும் வலம் வருகிறார்கள். அலகு குத்துகிறார்கள். கபடி ஆடுகிறார்கள். இவையெல்லாம் உற்சாகம் கொடுக்கின்றன. பரதநாட்டியம் மற்றும் கர்நாடக இசை போன்ற செம்மையான கலைகள் பண்பாட்டு பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கப்படுகின்றன.
மெல்பர்னில் நடைபெறும் தமிழ் பெஸ்ட் போன்ற வருடாந்திர பண்பாட்டு திருவிழாக்கள் இந்தக் கலைகளைக் காட்சிப்படுத்துகின்றன. இளைய தலைமுறைகளின் பங்கேற்பை அவைகள் ஊக்குவிக்கின்றன. தமிழ்த் திரைப்படம், தமிழ் மொழி, இசை மற்றும் மதிப்புகளை அவைகள் காட்சிப்படுத்துவதன் மூலம் பண்பாட்டுப் பாதுகாப்பில் அவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திரைப்படங்கள் பெரும்பாலும் சமூக நிகழ்வுகளில் திரையிடப்படுகின்றன. அதனால் அவைகள் பெரிய அளவில் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.
தமிழ்ச் சமூகம், திருவள்ளுவர் விழா, சித்திரை விழா, பொங்கல் விழா, பட்டிமன்றம், இசை விழா, நாட்டிய நிகழ்ச்சிகள், வாசகர் வட்டங்கள் போன்றவைகளை நடத்திவருவதால், அது தன் மரபையும் பண்பாட்டையும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைக்கு அவைகளைக் கடத்திக் கொண்டே இருக்கிறது. முனைவர் ஜெயமோகன் போன்ற தமிழ் நாடகக் கலைஞர்களும், முனைவர் சந்திரிகா போன்ற பாடகர்களும் தமிழ்க் கலைகளுக்கு உயிர் கொடுத்து வருகிறார்கள். பிறந்த நாள், பூப்பு நீராட்டு விழா, திருமண விழா, தகன நிகழ்ச்சிகள் போன்ற குடும்ப விழாக்களும் நிகழ்ச்சிகளும் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியைச் செவ்வனே செய்கின்றன என்று Subramaniyan. C, (2014)[19] சொல்கிறார்.
கலை மற்றும் மொழி வளர்ப்புக்கு தமிழ்ச் சமூக அமைப்புகள் பெருமளவில் உதவி செய்கின்றன.
சமூக அமைப்புகளும் சில சாதனைகளும்
ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகள், பண்பாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலும், மொழி கல்விக்கு ஆதாரங்களை வழங்குவதிலும், ஒரு கூட்டு அடையாள உணர்வை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த அமைப்புகள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, தமிழ்ப் பண்பாட்டை, பட்டறைகள் மற்றும் கண்காட்சிகள் மூலம் மேம்படுத்துகின்றன. மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் ஆஸ்திரேலியப் பிரிவு, சிலப்பதிகாரத்தை குறு நாடகமாக இந்த வருடம் அரங்கேற்றியது.
ஆஸ்திரேலிய தமிழர்கள், வருடத்தில் சில முறை நடக்கும் கலாச்சார விழாக்களை விட, சுறுசுறுப்பான, உயிர்ப்புள்ள சமூக வாழ்க்கையை விரும்புகின்றனர் என்றும் அதனால் தமிழ்ச் சமூகத்தின் ஆர்வமும் தேவையும் உயர்ந்து வருகின்றன என்றும், ஆய்வு செய்து கண்டுபிடித்தின் அடிப்படையில், 2011ம் ஆண்டு நிறுவப்பட்டது தான் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்[20]. பன்முக பண்பாட்டு ஆஸ்திரேலியாவில், தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டை ஒரு முதன்மைப் பண்பாடாக (mainstram culture) ஆக்குவது தான் இவர்களின் குறிக்கோளாகும்.
தமிழ்ப்பள்ளிகளும், தமிழ் கலை, இலக்கிய, கலாச்சார அமைப்புகளும், மத அமைப்புகளும், வணிக நிறுவனங்களும், தமிழ் மொழி மற்றும் தமிழரின் இருப்பை உறுதி செய்துக் கொண்டே இருக்கின்றன. தமிழ் மொழிக்கான நூல்கள், இணைய வழி வளங்கள், மொழிப் பாடங்கள் என மொழி வளர்ச்சிக்கான வளங்களை அவைகள் உற்பத்தி செய்துக் கொண்டே இருக்கின்றன. சமூக அமைப்புகளும், வெவ்வேறு துறை வல்லுநர்களும் அதற்கு உறுதுணையாக இருந்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த முயற்சி, ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழர்களுக்குள் ஓர் ஒற்றுமையை அவைகள் உருவாக்குகின்றன.
இருந்தாலும், அன்றாட வாழ்வில், அதிகரித்துக்கொண்டே போகும் ஆங்கிலப் பயன்பாடு தமிழ் மொழிக்கும், தமிழ் சமூக அமைப்புகளுக்கும் பெரும் சவாலாகவே இருக்கிறது. அது மட்டுமல்ல, பல்லின வாழ் ஆஸ்திரேலிய சூழலில், தமிழ் மரபும் பண்பாடும் சிறிது சிறிதாக வலுவிலக்கும் அபாயமும் இருக்கிறது. ஆஸ்திரேலிய பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி இல்லாததும் வெந்த புண்ணில் வேலைச் சேர்க்கிறது. இந்தச் சவால்களை முறியடிக்க, தமிழர்கள் கூடுதல் வலுவான சமூக அமைப்புகளை உருவாக்க வேண்டும். இருக்கும் அமைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவுத் தரவேண்டும். பெற்றோர்களும், முதியவர்களும் இளைய தலைமுறையினர்க்கு தமிழ்ப் பண்பாட்டை, பாரம்பரிய உணவை, மரபு சார்ந்த மருந்தை, தமிழ் அறத்தைச் சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். பொதுப் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக ஆக்க அரசாங்கத்திற்கு வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதோடு கிடைக்கிற எல்லா தொழிற்நுட்பங்களையும் இதற்கு பயன்படுத்தவேண்டும் (Wnzlnc, 2024).[21]
The Australian Tamil Professional Association (ATPA)[22] போன்ற சமூக அமைப்புகள், தமிழர்களையும், பல்துறை தமிழ் வல்லுநர்களையும், வெகுஜன ஆஸ்திரேலிய சமூகத்தோடு இணைக்கும் பாலமாக அமைகிறது. மேற்கத்திய பண்பாட்டையும் தமிழ் பண்பாட்டையும் ஒரு தராசின் இரு தட்டுகள் போல வைத்துக் கொள்ளலாம் என்றும், புலம் பெயர்ந்து பல்லின சமூகத்தில் வாழும் போது, சொந்த பண்பாட்டை விட்டுவிடத் தேவையில்லையென்றும், இந்த அமைப்புகள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
தமிழ்ச் சமூக அமைப்புகளும், சமயங்களும், ஊடகங்கள் வழி மொழி மற்றும் கலை வளர்ப்புக்கும் பாதுகாப்புக்கும் எப்படியெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றுப் பார்த்தோம். அதற்கு அரசியல் பங்கெடுப்பும், பொருளாதார கட்டமைப்பும், தொழிற்நுட்பத்தின் பங்கும் என்னென்ன என்று இனி ஆராய்வோம்.
அரசியலும் சில அரசாங்கங்களும்
இந்தக் கட்டுரையை எழுதும் போது (2025 மே) ஆஸ்திரேலியாவில் 48வது பொதுத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி உருவாகிறது. ஆனால் தமிழர்களின் பங்களிப்பும் பிரதிநிதித்துவமும் அதிகம் இல்லை. சிட்னியில் தமிழச்சியான அஷ்வினி அம்பிகைப்பஹர் மட்டும் தான் இந்த முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதுவே பெரிய தாவல் தான். ஓர் பெண்ணாகவும், ஒரு தமிழச்சியாகவும் அது பெரிய சாதனை தான். அவர், ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. “தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அவுஸ்திரேலியாவில், இளம் தலைமுறையைச் சேர்ந்த ஆளுமை மிக்க பெண், அஷ்வினி அம்பிகைபாகர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி, எமது சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.” என்று மூத்த எழுத்தாளர் முருக பூபதி (2025)[23] தெரிவிக்கிறார்.
அதற்கு முன்பு, மேற்கு ஆஸ்திரேலியாவின் ரிவர்ட்டன் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜகதீஷ் கிருஷ்ணன்[24] அவர்கள் சட்டமன்றத்தில் அவருடைய தாய் மொழியான ‘படுகா’ மொழியிலும், அவர் புலம்பெயர்ந்த மாநிலமான தமிழகத்தை பிரதிநிதிப்படுத்தி ‘தமிழ்’ மொழியிலும் தன்னை அறிமுகப்படுத்திப் பேசினார். அப்பொழது கணியன் பூங்குன்றனார் எழுதிய செய்யுளிலிருந்து ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்ற பதத்தைச் சொல்லி வேற்றுமையில் ஒற்றுமை என்கிற தமிழ் அறத்தை பிரகடனப்படுத்தினார்.
டாக்டர் மிஷெல் அனந்தராஜா[25], லேபர் கட்சியின் சார்பில் ஹிகின்ஸ் தொகுதியில் வெற்றி பெற்ற மருத்துவர் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர், தனது "சிக்கலான அடிப்படை" பின்னணியை விளக்கி, தனது மருத்துவ பணி எப்படி அரசியலாக மாறியதாகக் கூறுகிறார். 11 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த இவர், தென்கிழக்கு மெல்போர்னில் உள்ள ஹிகின்ஸ் தொகுதியில் வெற்றி பெற்றார். எஸ்பிஎஸ் தமிழ் பேட்டியில், இவர் தனது வெற்றியை "மிகவும் கௌரவமானது" என்றும், கொவிட்-19 தொற்றுநோயின் போது முன்கள மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் பிரச்சினையாக மாறியதை அடுத்து, ஹெல்த் கேர்இ வொர்க்கர்ஸ் ஆஸ்திரேலியாவை நிறுவி, இதற்காக பல கட்டுரைகள் எழுதி மற்றும் லேபர் கட்சியுடன் இணைந்து 2022 மே 21 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர், பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பன்முகத்தன்மை அரசாங்கத்தில் சிறந்த முடிவுகளைத் தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தமிழர்கள் முடிவெடுக்கும் இடங்களுக்குச் செல்வது இப்பொழுது தான் துவங்கியிருக்கிறது. Migrant Resource Centres, Immigration and Mutli-cultural Affairs, Community Relation Commission போன்ற அரசாங்கத்துறைகளும் தமிழ்ச் சமூக இணைப்புக்கு வழிகோலுகிறது (Subramaniyan. C, 2014)[26].
அரசாங்கத்தில் தமிழர்களின் பங்கு இப்பொழுது தான் துவங்கியிருந்தாலும், பொருளாதாரத்தில் கணிசமாக உயர்ந்திருக்கிறார்கள்.
பொருளாதாரமும் சில பொறுப்புகளும்
தமிழர்கள், பொதுவாக இலங்கையிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் வேலை தேடியும், புதிய வாழ்க்கையைத் தேடியும் பல்லின மக்களின் வாழ்வை ஆதரிக்கும் ஆஸ்திரேலியாவிற்கு வந்தார்கள் என்றும், விவசாயம், கட்டுமானப் பணிகள், நெசவுத் தொழில் போன்றத் துறைகளில் சேர்ந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார். துவக்கத்தில் சிட்னி, மெல்பர்ன், பிரிஸ்பேன் போன்ற இடங்களில் வாழத்துவங்கினார்கள் என்றும் பிறகு மற்ற நகரங்களுக்கும் சென்று தங்கள் வெற்றிக் கொடிகளை நாட்டுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறார். இந்தியக் கடைகள், மலேசிய உணவகங்கள், சீறீலங்கா மளிகைக் கடைகள் என பரவலாக காணக் கிடைப்பது, தமிழர்கள் பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறார்கள் என்பதற்கு ஒரு சாட்சி தான் Wnzlnc.A. (2024)[27].
வழக்கறிஞர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், உரிமை பெறுநர்கள் (Franchisees), சொத்து மேம்பாட்டாளர்கள் (Property Developers), அசையா சொத்து முகவர்கள் (Real Estate Agents), பண மாற்றாளர்கள் (Money Changers), மசாலாக் கடைகள் (Spice Shops), செய்தி நிறுவனங்கள் (News Agencies), குழந்தை பராமரிப்பு மையங்கள் (Child Care Centres), முதியோர் பராமரிப்பு மையங்கள் (Aged Care Centres), சிறு, குறு, பேரங்காடிகள் (Super Markets) என வல்லுநர்களும் வணிகர்களும் தமிழ்ச் சமூகத்தில் வளர்ந்து வருகிறார்கள். பிருந்தா சிவலன் போன்ற நரம்பியல் வல்லுநர்களும், டாக்டர் ஜெயமோகன் போன்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர்களும், டாக்டர் மனமோகன் போன்ற இதய வல்லுநர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள் (Subramaniyan. C, 2014).[28]
தொழிற்நுட்பமும் சில தொடங்கல்களும்
உலகளாவிய இணைப்புள்ள இக்காலத்தில், வெளிநாடு வாழ் மக்கள் குழுக்கள் தங்கள் பண்பாட்டு மரபுகளையும் வழமைகளையும், மொழி மற்றும் மற்ற நடைமுறைகளையும் பாதுகாப்பதற்கு சமூக ஊடகங்கள் ஒரு முக்கியமான கருவியாக மாறியுள்ளன என்கின்றனர் Panchal & Mago (2024)[29]. டிஜிட்டல் தளங்களின் எழுச்சி பண்பாட்டு பாதுகாப்பிற்குப் புதிய வழிகளை வழங்கியுள்ளது என்றும் இணையதளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தமிழ் வானொலி நிலையங்கள் புலம்பெயர்ந்தவர்களுக்கு தமிழ் இலக்கியம், இசை மற்றும் திரைப்படங்களை அணுக உதவுகின்றன என்றும் இது ஒரு கூட்டு அடையாள உணர்வை வளர்க்கிறது என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஆயினும், உலகமயமாக்கலின் தாக்கம் பெரும்பாலும் பண்பாட்டு நடைமுறைகளை நீர்த்துப்போகச் செய்யவும், இளைய தலைமுறைகள் பாரம்பரிய பழக்கவழக்கங்களை பராமரிப்பதை விட மேற்கத்திய கலாச்சாரத்தை மேற்கொள்ளவும் செய்வதால் இதை கவனமாக அணுகவேண்டும் என்றும் வாதிடுகிறார்கள்.
டிஜிட்டல் தளங்களின் எழுச்சி, தமிழ் புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் பண்பாட்டுடன் இணைந்திருக்க உதவியுள்ளது. தமிழ் மெய்நிகர் அகாடமி போன்ற இணையதளங்கள் ஆன்லைன் மொழி படிப்புகளை வழங்குகின்றன, அதே நேரத்தில் சமூக ஊடக குழுக்கள் தமிழ் இசை, இலக்கியம் மற்றும் திரைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றன. தமிழ் வானொலி நிலையங்கள் மற்றும் யூடியூப் சேனல்களும் பண்பாட்டு உள்ளடக்கத்திற்கு அணுகலை வழங்குகின்றன, தலைமுறைகளுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கின்றன. டிஜிட்டல் தளங்கள், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் உலகளாவிய பார்வையாளர்களுக்கு தமிழ் திரைப்படங்களை வழங்குவதன் மூலம், தமிழ் திரைப்படங்களின் அணுகலை மேலும் அதிகரித்துள்ளன.
வழிகள்-சவால்கள்-தீர்வுகள் - சுருக்கமாக
ஆஸ்திரேலிய புலம்பெயர் தமிழர்கள் தங்கள் பண்பாட்டைத் பேணும் சிறப்பான வழிகள் என்னென்ன?
• சிட்னி தமிழ் பள்ளி போன்றவை மூலம் மொழி, இலக்கியம் மற்றும் வரலாற்றை கற்பித்து மொழியை பாதுகாக்கின்றனர். பாரதி தமிழ்ப் பள்ளி போன்ற வாராந்திர தமிழ்ப்பள்ளிகள் மூலம்இ ளைய தலைமுறைக்கு மொழி, இலக்கியம், பண்பாடு கற்பிக்கின்றனர். Sydney, Melbourne போன்ற நகரங்களில் தமிழ் நூற்களஞ்சியங்கள் துவங்கப்பட்டுள்ளன.
• 2025 தமிழ் திருவிழா ஆஸ்திரேலியா போன்றவை தைப்பொங்கல், தீபாவளி, தமிழ் வருடப் பிறப்பு போன்ற விழாக்களைக் கொண்டாடி, பாரம்பரிய நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன.
• ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில், முருகன் கோயில்கள் மற்றும் சிவன் கோயில்கள் தமிழர் சமயச் செயல்பாடுகளுக்கு மையமாக இருக்கின்றன.
• பரதநாட்டியம், கர்நாடக இசை போன்றவற்றை பயிற்றுவித்து, தமிழ் பெஸ்ட் போன்ற நிகழ்வுகளில் காட்சிப்படுத்துகின்றனர்.
• தமிழ் மெய்நிகர் அகாடமி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தமிழ் இலக்கியம், இசையை அணுகி பரப்புகின்றனர். Facebook, WhatsApp போன்ற சமூக ஊடகக் குழுக்கள் மூலம் தமிழ் உரையாடல் மற்றும் நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. தமிழ் இணைய இதழ்கள், சமூக ஊடகக் குழுக்கள், யூட்யூப் சேனல்கள் இயங்குகின்றன.
• SBS தமிழ், AUS தமிழ் டிவி மூலம் தமிழ் செய்திகள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மொழி பயன்பாட்டை வலுப்படுத்துகின்றனர்.
• ஆஸ்திரேலிய தமிழ் சங்கம். மெல்பர்ன் வாசகர் வட்டம் போன்றவை பண்பாட்டு நிகழ்வுகள், வாசிப்பு அனுபவங்கள், மற்றும் மொழிப் பயிற்சிகளை ஏற்பாடு செய்கின்றன. சமையல் மற்றும் தொன்மைக் கலைகளைப் பற்றிய பட்டறைகளை நடத்தி, பாரம்பரிய உணவு, மருந்து, கைவினைக் கலை போன்றவைகளை அடுத்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகின்றனர்.
• கிலித்தட்டு, கபடி போன்ற மரபு வழி விளையாட்டுக்களைத் திருவிழாக்களில் அறிமுகப்படுத்தி பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கின்றனர்.
• தமிழ்க் கலை/இலக்கிய மன்றங்கள் மூலம் நாடகம், இசை, கவிதை போட்டிகள் மூலம் படைப்பாற்றலை ஊக்குவிக்கின்றனர்.
• தமிழ் சினிமாவை சமூக நிகழ்வுகளில் திரையிடுவதன் மூலம் மொழி மற்றும் பண்பாட்டு மதிப்புகளை பரப்புகின்றனர்.
• மசாலா கடைகள், தமிழ் புத்தகக்கடைகள், உணவகங்கள் போன்ற தமிழ் வணிக நிறுவனங்கள் மூலம் பண்பாட்டு இணைப்பு நடைபெறுகிறது.
• தமிழ் பெஸ்ட் போன்ற நிகழ்வுகளில் தமிழல்லாதவர்களை அழைத்து, பண்பாட்டு புரிதலை மேம்படுத்துகின்றனர்.
• Tamil Doctors Association, IT Professionals Network போன்ற தொழில்முறை வலையமைப்புகள் மூலம் இணைப்புகள் உருவாகின்றன.
ஆஸ்திரேலிய புலம்பெயர் தமிழர்கள், தங்கள் மொழி, மரபு மற்றும் பண்பாட்டைப் பேணுவதில் எதிர் கொள்ளும் முக்கிய சவால்கள் என்னென்ன?
• எந்த பன்முக கலாச்சார சமூகத்திலும் வாழும் ஓர் இனத்தவர், தங்கள் பண்பாட்டை முதன்மை பண்பாட்டோடு ஒன்றிணைத்து செல்வதில் ஓர் அழுத்தத்தை உணர்வார்கள். இது இயல்பு. அந்த அழுத்தத்தை மூத்த தலைமுறையினர் இயல்பாக கடந்தாலும், இளைய தலைமுறையினர் முதன்மை பண்பாட்டிற்கு வழி கொடுத்து, தங்கள் பாரம்பரிய பண்பாட்டிற்கு விடை கொடுக்கும் நடைமுறையைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
• வீடுகளில் தமிழர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது குறைந்தால், குழந்தைகளின் தமிழ் மொழி திறன் குறைகிறது. அதனால் மரபு சார்ந்த உணவு, மருந்து, இலக்கியம், கலை போன்றவைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது கடினமாகிறது.
• பல இடங்களில் தமிழ்ப்பள்ளிகள், நூலகங்கள், கலாச்சார மையங்கள் போன்ற வளங்கள் இல்லை. இது தமிழ்க்கல்வி பெறுவதற்கும், தமிழில் கல்வி பெறுவதற்கும் இடையூறாக இருக்கிறது. அதனால் மரபியல் அறிவு பரவலாக்கப்படுவதில் சிக்கல் வருகிறது.
• தமிழர்கள் வெவ்வேறு இடங்களில் சிதறி இருப்பதால் கலை, கலாச்சார நிகழ்வுகளையும் திருவிழாக்களையும் ஒருங்கிணைப்பது கடினமாகிறது.
• மூத்த தலைமுறையினருக்கும் இளைய தலைமுறையினருக்கும், வாழ்வியல் கண்ணோட்டத்தில் முரண்பாடுகள் இருக்கும் பட்சத்திலும், பண்பாட்டு விழுமியங்கள் குறித்து மாறுபட்ட பார்வைகள் இருக்கும் பட்சத்திலும், பாரம்பரிய நடைமுறைகளின் தேவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு, விவாதங்கள் எழும்புவதால், இளைய தலைமுறையினர் ‘புகுந்த வீட்டில்’ உள்ள புதிய சமூகத்துடன் ஒருங்கிணைவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
• புலம் பெயர்ந்த இடத்தில், வேலைக்குச் செல்வதும், பணம் சம்பாரிப்பதும், சொத்துக்கள் வாங்குவதும் தமிழ்க் குடும்பங்களுக்கு முதன்மைத் தேவையாக இருப்பதால், அந்தப் பொருளாதார கட்டுப்பாடுகள் காரணமாக, கலாச்சார நடவடிக்கைகளில் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்வது இரண்டாம் பட்சமாக ஆகிவிடுகிறது.
• ஊடகங்களில் தமிழர்கள் குறித்து தவறான செய்திகளும், பிரதிநிதித்துவமும் பரவும் போது, தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை அது மிகவும் பாதிக்கிறது.
• சொந்த காரணங்களாலும், பொருளாதாரக் காரணங்களாலும், தாய்நாட்டுடனான தொடர்பு குறைந்து ஒரு கட்டத்தில் அறுந்து போகிற போது, பண்பாட்டுடனான இணைப்பு பலவீனப்பட்டு, மங்கிப் போகிறது.
ஆஸ்திரேலிய புலம்பெயர் தமிழர்களின் பண்பாட்டு பாதுகாப்பு வழிகளைத் தொடர்ந்து செய்வதற்கும் சவால்களை முறியடிப்பதற்குமான தீர்வுகள் என்னென்ன?
• குழந்தைகள் ஆங்கிலத்தை முக்கியமாகக் காண்பதைக் குறைக்க, அன்றாட வாழ்க்கையில், வீட்டில், குடும்பத்தில், சிறுவர் பேசும் சூழலில் தமிழ் மொழியைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தலாம். தலைமுறைகளுக்கிடையேயான கலாச்சாள பிளவை சமன்படுத்த, மூத்தவர்கள் தங்கள் குழந்தைகளிடம் தமிழ் கதைகள், பழமொழிகள், விடுகதைகள் போன்றவற்றைப் பகிர வேண்டும்.
• டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்த வேண்டும். தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு உள்ளடக்கங்களை ஆன்லைன் தளங்களில் (எ.கா., தமிழ் மெய்நிகர் அகாடமி) மேலும் புதுமையாக வழங்குவதன் மூலம் இளைய தலைமுறையை ஈர்க்கலாம், உதாரணமாக, கேமிஃபிகேஷன் மற்றும் மொபைல் ஆப்ஸ் மூலம் மொழி கற்றலை சுவாரஸ்யமாக்கலாம்.
• பள்ளிகளில் தமிழ் கல்வியை ஒருங்கிணைக்க வேண்டும். ஆஸ்திரேலிய பள்ளிகளின் முக்கிய பாடத்திட்டத்தில் தமிழை ஒரு பாடமாக இணைப்பதற்கு ஆஸ்திரேலிய தமிழ் சங்கம் போன்ற அமைப்புகள் அரசுடன் ஒத்துழைத்து, மொழி இழப்பு சவாலை எதிர்கொள்ளலாம்.
• இளையோரை ஈடுபடுத்தும் நிகழ்வுகளை அதிகப்படுத்தவேண்டும். பண்பாட்டு திருவிழாக்களில் (எ.கா., தமிழ் திருவிழா ஆஸ்திரேலியா) இளைஞர்களுக்கு ஈர்க்கக்கூடிய நவீன இசை, பாப் கலாச்சாரம் மற்றும் சமூக ஊடகப் போட்டிகளை இணைப்பதன் மூலம் தலைமுறை இடைவெளியைக் குறைக்கலாம்.
• பல கலாச்சார ஒத்துழைப்பை விரிவாக்க வேண்டும். பல கலாச்சார நிகழ்வுகளில் (எ.கா., தமிழ் பெஸ்ட்) மற்ற சமூகங்களுடன் இணைந்து பண்பாட்டு பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தி, புரிதல் மற்றும் ஆதரவை அதிகரிக்கலாம். முதன்மை கலாச்சாரத்தின் அல்லது பெரும்பான்மை கலாச்சாரத்தின் அழுத்தம் போக Aussie BBQ மற்றும் பொங்கல் விழா அல்லது Tamil-Aboriginal கலை கூட்டு நிகழ்ச்சி போன்ற ஹைப்ரிட் நிகழ்வுகளை நடத்தலாம்.
• மத நிகழ்வுகளை நவீனப்படுத்த வேண்டும். கோயில்களில் (எ.கா., ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில்) நடைபெறும் பொங்கல், தீபாவளி கொண்டாட்டங்களை இளைஞர்களுக்கு ஈர்க்கும் வகையில் டிஜிட்டல் ஒளிபரப்பு மற்றும் இன்டராக்டிவ் அம்சங்களுடன் நவீனப்படுத்தலாம்.
• பாரம்பரிய கலைகளை இளைஞர்களுக்கு பொருத்தமாக்க வேண்டும். தெருக்கூத்து, கரகம், தப்பாட்டம், பரதநாட்டியம், கர்நாடக இசை போன்றவற்றை நவீன இசையுடன் (fusion) இணைத்து, இளைய தலைமுறையை ஈர்க்கும் வகையில் பயிற்சி வகுப்புகளை மறுவடிவமைக்கலாம்.
• ஊடகங்களை வலுப்படுத்த வேண்டும். SBS தமிழ், AUS தமிழ் டிவி போன்றவற்றில் வரும் தற்போதைய நிகழ்ச்சிகளைக் கேட்டு ஆதரவளிக்கலாம். புதிதாக, இளைஞர்களைக் கவரும் நிகழ்ச்சிகளை (எ.கா., ரியாலிட்டி ஷோக்கள், மொழி சவால் நிகழ்ச்சிகள்) அதிகரிப்பதன் மூலம் மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கலாம். தரமான தமிழ் டிஜிட்டல் உள்ளடக்கம் இல்லாமையைத் தீர்க்க ஆஸ்திரேலியத் தமிழர் YouTube கிரியேட்டர் பட்டறை நடத்தலாம். புலம்பெயர்-தாய்நாடுடனான இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க, ஊர்வலம், கோவில் தரிசனம் போன்றவைகளை லைவ்ஸ்ட்ரீம் செய்யும் Virtual Village திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.
• சமூக அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும். ஆஸ்திரேலிய தமிழ் சங்கம் போன்ற அமைப்புகள் உள்ளூர் அரசு மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மொழி மற்றும் பண்பாட்டு பயிற்சிகளை மேலும் பரவலாக்கலாம்.
• பாரம்பரிய விளையாட்டுகளை பிரபலப்படுத்த வேண்டும். கிலித்தட்டு, கபடி போன்ற விளையாட்டுகளை பள்ளிகளில் அறிமுகப்படுத்தி, இளைஞர்களிடையே பங்கேற்பை ஊக்குவிக்கும் போட்டிகளை ஏற்பாடு செய்யலாம்.
• தமிழ் சினிமாவை சமூக ஈடுபாட்டு கருவியாக பயன்படுத்த வேண்டும். தமிழ்த் திரைப்படங்களை சமூக நிகழ்வுகளில் திரையிடுவதோடு, இளைஞர்களை ஈர்க்கும் வகையில் திரைப்பட விவாதங்கள், மொழி கற்றல் பயிற்சிகளை இணைக்கலாம்.
• நிகழ்வுகளுக்கான நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க Local council grants-க்கு அல்லது தமிழ் வணிகர்கள் ஸ்பான்சருக்கு விண்ணப்பிக்கலாம்.
• அரசியல் குரல் மெலிந்து ஒலிப்பதை தீர்க்க ஒருங்கிணைந்த Tamil Lobby Group துவங்கி Yearly Parliament Submission செய்யலாம். அரசின் கவனக்குறைவு அல்லது உதவி இல்லாமையைக் குறைக்க அல்லது நீக்க, தமிழுக்கான மொழி அங்கீகாரம், நிதி ஆதரவு போன்றவற்றுக்காக அரசு முன்வரச் செய்யலாம்.
நிறைவாக
ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சமூகம், மொழிப் பள்ளிகள், மத நிகழ்வுகள், பாரம்பரிய கலைகள், சமூக அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் தங்கள் பண்பாட்டை பாதுகாக்கிறது, இது இளைய தலைமுறையை வேர்களுடன் இணைக்கிறது. இருப்பினும், மொழி இழப்பு, தலைமுறை இடைவெளி மற்றும் உலகமயமாக்கல் போன்றவை பண்பாட்டு தொடர்ச்சிக்கு சவாலாக உள்ளன. இதற்கு இளைஞர்களை ஈர்க்கும் மொழி திட்டங்களும், பாரம்பரியங்களை நவீனப்படுத்தும் உத்திகளும் தேவை. கோயில்கள், இலக்கியம், திரைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் பண்பாட்டு பிணைப்புகளாக செயல்படுகின்றன, பல கலாச்சார புரிதலை மேம்படுத்துகின்றன. உலகமயமாக்கல் வாய்ப்புகளை வழங்கினாலும், பாரம்பரியங்களை அரிக்காமல் இருக்க எச்சரிக்கை தேவை. இதற்கு சமூக அமைப்புகள் மற்றும் கல்வி முயற்சிகளின் ஒருங்கிணைப்பு அவசியம்.
புது இடத்தில் நட்டு வைத்த வாழை, துளிர்த்து, இலை விரித்து வளர்ந்தது. சூழலில் இருந்த காற்றும், மழையும், வெயிலும், பனியும் அதைச் சோதித்தது. ஆனால் வாழைக்குள்ளேயிருந்த உயிர் எல்லாவற்றையும் தாங்கி, ஒரு நாள் குலை தள்ளியது. அந்த வளர்ச்சிக்குக் காரணம், வாழை தன் வேர்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டதும், சுற்றி இருந்து நீர், சூரியன், உரம் போன்ற வாய்ப்புகளை வளைத்துக் கொண்டதும் தான். வாழையடி வாழையாக இங்கும் ஒரு வாழைத் தோப்பு வரும்.
உயிர்மெய்யார்
(இயற்பெயர்: முனைவர். ஜான் பிரிட்டோ பரிசுத்தம்)
மெல்பர்ன், ஆஸ்திரேலியா
10.05.2025
*************
துணை நூற்பட்டியல்
[1] Indians in Australia. (n.d). Non-Resident Indians Online.
[2] The Immigration Restriction Act 1901 National Archives of Australia.
[3] How did the White Australia Policy change over time? Australians Defining Moments.
[4] SBS Australian Census Explorer.
[5] Appadurai, A. (1996). Modernity at Large: Cultural Dimensions of Globalisation.
[6] Anderson, B. R.: (2016). Imagined communities: Reflections on the origin and spread of nationalism
[7] Sanchayan. K. (2025). SBS 50: பதித்த சுவடுகளும், செல்லும் இலக்கும்!
[8] Harrison, S. (2009). Australian media fails Tamils.
[9] Silove, D., Steel, Z., McGorry, P., Drobny, J. (1999). Problems Tamil asylum seekers encounter in accessing health and welfare services in Australia
[10] Mylvaganam. A., Hillier, B. (2018). Shock after border force removes refugee family from community. Tamil Refugee Council
[11] Home to Biloela: The story of the Tamil family that captured our hearts. Allen & Unwin Book Publishers. https://www.allenandunwin.com/browse/book/Priya-Nadesalingam-with-Rebekah-Holt-Home-to-Biloela-9781761069680/
[12] ஜேகே. @ Chandrasegaram Jeyakumran. (2025). பிரியாவின் கதை.
[13] Subramaniyan. C. (2014). Tamil Diaspora in Australia an overview
[14] Canagarajah, S. (2013). Reconstructing heritage language: Resolving dilemmas in language maintenance for Sri Lankan Tamil migrants.
[15] Shanmugam. K. (2023). Community language schools in Australia: investigating the role of textbooks in shaping the construction of cultural identities of Sri Lankan and Indian Tamil students.
[16] Perera, N. (2023). Negotiating linguistic and religious diversity: A Tamil Hindu Temple in Australia.
[17] Mudhan, J.S. (2019). Continuity and change of cultural practices in the performing arts: A case study of the Indian diaspora in Perth.
[18] Babacan, H. (2005). Challenges of Inclusion: Cultural Diversity, Citizenship and Engagement.
[19] Subramaniyan. C. (2014). Tamil Diaspora in Australia an overview.
[20] About us. Tamil Arts and Culture Association Inc.
[21] Wnzlnc.A. (2024). A Vibrant Tapestry: The vitality of Tamil In Australia. Australian Native Tribe.
[22] Sathiyaseelan, I. (2024). How the Australian Tamil Professional Association is Elevating & Connecting the Tamil Community.
[23] முருக பூபதி. (2025). கவிஞர் அம்பியின் பேத்தி அஷ்வினி அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்திற்கு தெரிவு
[24] Jags Krishnan. Parliament of Western Australia
[25] Michelle Ananda-Rajah. Higgins. I represent Australia’s migrant story
[26] Subramaniyan. C. (2014). Tamil Diaspora in Australia an overview.
[27] Wnzlnc.A. (2024). A Vibrant Tapestry: The vitality of Tamil In Australia. Australian Native Tribe.
[28] Subramaniyan. C. (2014). Tamil Diaspora in Australia an overview.
[29] Panchal, Pusti & Mago, Beeno. (2024). Social Media as a Tool for Cultural Preservation among Diaspora Communities.




Comments