top of page

அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி - பாரதி கிருஷ்ணகுமார் - நூல் வாசிப்பு அனுபவம்


அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி

 

நூலாசிரியர் - பாரதி கிருஷ்ணகுமார்

The Roots, Coimbatore (2011 – முதல் பதிப்பு)

 

 

வாசிப்பு அனுபவம்

அண்டத்தில் உள்ள உயிரினங்களில் மேலானவை இவை, கீழானவை இவை, என்றுப் பிரித்துப் பார்ப்பது சரியல்ல. எல்லா உயிரினங்களும் சமம் என்பதே சரி. எல்லா உயிரினங்களுக்கும் சமமமான மதிப்பு கொடுப்பதே சரி. பன்றி என்கிற விலங்கு அசிங்கமான, அருவருக்கத்தக்க விலங்கு என்கிற பொருள் கொள்வது போல் மகாகவி பாரதியார் எனப்படுகிற எட்டயபுரம் சுப்பிரமணிய பாரதி அவர்கள் ஒரு கவிதையில் எழுதியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

 

அது என்ன கவிதை? அது எந்த பொருளில் கையாளப்பட்டது? அது எந்த நூலில்.

 

பன்முக ஆளுமை திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள், கோயமுத்தூர் தி ரூட்ஸ் பதிகப்பம் மூலமாக, டிசம்பர் 2011ல் (முதல் பதிப்பாக) வெளியிட்ட ‘அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி’ என்ற நூலில் தான் அக்கவிதை வெளியிடப்பட்டு உள்ளது. அதுகுறித்த ஆய்வையும் அவர் செய்துள்ளார்.

 

பாரதியார், 1909 ஆம் ஆண்டு ‘இந்தியா’ பத்திரிக்கையில் ‘கவிதாதேவி அருள்வேண்டல்’ (அல்லது ‘கவிதா தேவிக்கு வேண்டுகோள்’ ‘கவிதா தேவி - அருள்வேண்டல், ‘கவிதைக் காதலி’) என்கிற தலைப்பில் 172 வரிகளில் இரண்டு பகுதியாக வெளியிட்ட கவிதையை, 1987 ஆம் ஆண்டு, பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ‘பாரதி பாடல்கள் - ஆய்வுப் பதிப்பு’ என்கிற நூலில் வெளியிட்டது. அந்தக் கவிதையின் இரண்டாம் பகுதியில், எட்டையபுரம் மன்னரிடம் தான் பணி செய்த எட்டு ஆண்டுகளில் ‘அருந்தவப் பன்றி’ போல இருந்ததாக சொல்லப்படுகிறது.

 

என்ன பொருளில் சொல்லப்பட்டது?

 

உயர்ந்த நிலையில் இருந்த ஒரு முனிவன் தாழ்வுற்று பன்றியாகிறான். அப்படி பன்றியானால் தன்னை வெட்டி விடுமாறு தன் மகனிடம் முன்பே கூறிவிடுகிறான். பன்றியான தன் தந்தையை வெட்ட மகன் வரும்பொழுது, அந்த இழிவான வாழ்க்கையே உகந்ததாக இருப்பதாகச் சொல்லி தந்தை பன்றியாக இருக்கவே முடிவு செய்கிறான். அப்படி கவிதை எழுதாமல் இருந்த எட்டு ஆண்டுகளில் (1898-1904) தான் அந்த அருந்தவப் பன்றி போல இருந்ததாக பாரதியார் எழுதியதை வைத்து நூலாசிரியர் ஆய்வு செய்ய முனைந்திருக்கிறார்.

 

அதற்கு பல்வேறு நூல்களிலிருந்தும், கவிதைத் தொகுப்புகளிலிருந்தும், கட்டுரைகளிலிருந்தும் சான்றுகளைத் தேடி முன்வைக்கிறார் நூலாசிரியர். ஆய்வு நூலுக்குரிய தன்மைகள் எல்லாம் நூலில் காணப்படாவிட்டாலும், பாரதியாரின் வாழ்க்கையைச் சற்றே ஆவணம் செய்து, மற்றவர்கள் விட்டுவிட்ட, அருந்தவப் பன்றியாக இருந்த அந்த எட்டு ஆண்டுகள் பற்றிய பார்வையும், கூடுதல் ஆய்வும் தேவை என்று முடித்திருப்பது சிறப்பு.

 

அப்படி பாரதியாரின் வாழ்வை ஆவணம் செய்ததில் சில சுவையான நிகழ்வுகள் சுட்டப்பட்டிருக்கின்றன.

 

 

பாரதியாரின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள்

•  பாரதியாரின் பதினோராவது வயதில் (1893 ஆம் ஆண்டு), குரு குகதாசப் பிள்ளை, விருதை சிவஞான யோகியாருக்கு அறிமுகம் செய்து வைக்க, யோகியார் பாரதியின் கவி புனையும் ஆற்றலைக் கண்டு ‘பாரதி’ (கலைமகள்) என்று பெயர் சூட்டியுள்ளார். மற்றபடி பாரதியின் தாத்தா முதல் தங்கை வரை குடும்ப விபரம் கொடுக்கப்படுகிறது.

•  பாரதியாரின் தந்தை சின்னச்சாமி அய்யர், எட்டயபுர மன்னரின் ஆதரவில், எட்டயபுரத்தில் ‘எட்டயபுரம் காட்டன் ஜின்னிங் பேக்டரி லிமிடெட்’ என்கிற பஞ்சாலை ஒன்றை நிறுவுகிறார். அதே காலக் கட்டத்தில் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரு ஹார்வி, பிராங்க் ஹார்வி இருவரும் இணைந்து ‘கோரல் மில்ஸ்’ (பின்னாளில் மதுரா கோட்ஸ்) என்கிற பஞ்சாலையை உருவாக்கினர். ஆங்கிலேயரின் ஆட்சியில் பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யர் தன் பஞ்சாலையை நடத்த முடியாமல் செல்வமெல்லாம் தொலைத்து விடுகிறார்.

•  பத்து வயது நிறைந்த பாரதியார் ஒரு பெண்ணின் மீது காதல் வயப்படுகிறார். பதினான்கு வயதில் குழந்தைத் திருமணம். மனைவி செல்லம்மாவுக்கு ஏழு வயது.

•  திருநெல்வேலியில் ‘ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளி’யில் ( இன்றைய இந்துக் கல்லூரியில்) சேர்ந்து கணிதமும் ஆங்கிலமும் படிக்கிறார். அப்பொழுது அந்தக் கல்வி முறையைப் பற்றி பாரதி கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்: ‘மயக்கமும், ஐயமும், செய்கை அனைத்திலும் அசிரத்தையும், வாதும், பொய்ம்மையும், நிரம்பிய விலங்குகள் வாழும் இடமே பள்ளிக்கூடம்.’ ‘நரித்தனம் மிக்க அடிமைகள், தாதர்கள், நாயைப் போலத் திரியும் ஒற்றர்கள், சோற்றைப் பெரிதெனக் கருதி உயிரையே விற்கும் பேடிகள், இச்சகம் பேசுவோர் போன்ற மாக்கள் பயில்வதே கல்வி.’

•  பாரதியும், பாட்டி பாகீரதியும் (பாரதியின் பதினைந்தாவது வயதில்) காசியில் உள்ள பாரதியின் அத்தை குப்பம்மாள் வீட்டிற்குப் போகின்றனர்.

•  காசி வாழ்வின் போது பாரதியாரின் அகத்தில் விடுதலை உணர்வும், புறத்தில் குடுமி களைந்து, மீசை வைத்து, முண்டாசு மாற்றமும் நிகழ்கிறது. இங்கிலாந்து ராணி விக்டோரியா இறந்து ஏழாவது எட்வர்டு மன்னர் பதவியேற்றதை மகாப் பிரம்மாண்டமாக கொண்டாடிய கர்ஸ்ன் பிரபுவின் அழைப்பை ஏற்று சென்ற எட்டயபுரம் ஜமீன்தார் காசிக்குச் சென்று, பாரதியின் மாமா கிருஷ்ணசிவனின் பொறுப்பில் இருந்த சிவமடத்தில் தங்கியிருந்தார். அப்பொழுது பாரதியைப் பார்த்து சமஸ்தானத்திற்கு வந்துவிட கோரினார். அதன்படி அங்குச் சென்ற பாரதிக்கு பூரணாதி லேகியமும், கஞ்சா பானமும் சாப்பிடும் பழக்கம் வந்துவிட்டது. கைக்கட்டி சேவகம் செய்யப் பிடிக்காமல், ஆறாண்டு கால வனவாசம் முடிந்து எட்டயபுரத்தை விட்டு வெளியேறி மதுரைக்கு வருகிறார் பாரதி.

•  பள்ளி வேலையையும் உதறிவிட்டு சென்னை வந்து சுதேசமித்திரன் பத்திரிக்கையில் பணியில் அமர்ந்து பிறகு ‘இந்தியா’ பத்திரிக்கையைத்  தொடங்குகிறார். ஆங்கிலேயர்களிடமிருந்து கைது அச்சறுத்தல் வந்த வண்ணம் இருந்ததால் பிரெஞ்சுக்காரர்கள் ஆண்ட பாண்டிச்சேரிக்கு குடி புகுகிறார். பாண்டிச்சேரி வாழ்க்கைப் பிடிக்காமல், ஆங்கிலேய இந்தியாவிற்குள் நுழைய கடலூரில் கைது செய்யப்படுகிறார். சிறையிலிருந்து வெளி வந்து சொந்த ஊரான கடையத்திற்கு வருகிறார். இரண்டு வருடம் வாழ்க்கை சிரமமாகப் போக, மறுபடி உதவி கேட்டு சமஸ்தானத்திற்கே மடல் எழுதுகிறார். .

•  ‘சின்ன சங்கரன் கதை’யில் எட்டயபுர சமஸ்தான ஜமீன்தாரின் வாழ்க்கையும் அங்கு பாரதியார் பணி செய்தது பற்றியும் சொல்லப்படுகிறது. எட்டயபுரத்து ஜமீன்தாரை ‘திமிங்கல உடலும் சிறிய நாயறிவும்’ கொண்டவர் என்று கூறுகிறார். ஜமீன்தார் அரண்மனையில் நடக்கும் கோழிச் சண்டையில், சமஸ்தானத்தின் போஷணையில், சமஸ்தான கோழி இறந்து போகும் பழக்கம் போல், பாரதியாருக்கும் அந்த மந்த கதி நடக்கிறது.  போதைப் பொருளுக்கு அடிமையாகிறார். காமக் கதைகளைப் பேசி, ஊரார் உழைப்பில் தின்று கொழுக்கும் ஜமீன்தாரைத் துதி பாடி , காமக் கதைகளை சொல்லி, அண்டிப் பிழைத்த சின்ன சங்கரன் (பாரதியார்) என்று அந்தக் கதை செல்கிறது. 1898 முதல் 1904 வரை (15 வயது முதல் 21 வயது வரை) ஆறாண்டுகள் அவர் எழுதவே இல்லை. அந்த ஆறாண்டு கால வாழ்க்கையைத்தான் பன்றியுடன் ஒப்பிட்டு இழிவாகச் சொல்கிறார் பாரதியார்.

 

முடிவு

ஒரு படைப்பாளியின் யதார்த்த வாழ்க்கையும், அதன் சிரமங்களும் அவனது படைப்பு வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்கிற கண்ணோட்டத்தில் பார்க்காலம். அல்லது, மற்றொரு பார்வையில் அந்த வலிகளும், அனுபவங்களும், அவமானங்களும் அவனது படைப்புக்கு தூண்டுகோலாய் அமைகிறது என்றும் அவதானிக்கலாம்.

 

தமிழ் இலக்கியங்களில் (சங்க இலக்கியங்கள் முதல் பக்தி இலக்கியங்கள் வரை), ஏறு எனப்படுகிற காட்டுப்பன்றி, வேட்டை விலங்காகவும், வீரத்தின் அடையாளமாகவும், தினைப்புனத்தை அழிக்கும் தொல்லையாகவும், திருமாலின் வராக அவதாரமாகவும் பன்முகத்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், ஓர் உவமைக்கு என்று எடுத்துக்கொண்டாலும், தவம் செய்வது உயர்வு என்றும் பன்றி வாழ்க்கை தாழ்வு என்றும் கட்டமைப்பது சரியா?

 

*********

 

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page