top of page

The Akubra Hat - Australia's icon

SBS Radio Tamil -இல் இக்கதையைக் கேட்க......கீழ்க்கண்ட நீல நிற இணைப்பைச் சொடுக்கவும்.



ree



Akubra hat பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது ஆஸ்திரேலியாவின் ஓர் உண்மையான சின்னம் என்று உங்களுக்குத் தெரியுமா? Akubra hat ஓர் அகலமான விளிம்புடைய தொப்பி. ஆஸ்திரேலியாவின் சப்அர்பன் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளாக இருந்தாலும், மாட்டுப் பண்ணையில் பணி செய்பவர்களாக இருந்தாலும், ஹாலிவுட் நட்சத்திரிங்களாக இருந்தாலும்…இப்படி பல்வேறு வாழ்க்கைப் பணிகளில் இருப்பவர்கள் பயன்படுத்தும் Akubra hat எப்படி ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது என்று தெரிந்துக் கொள்ள வேண்டாமா? ஒரு கோப்பை தேநீரை எடுத்துக்கொள்ளுங்கள். அமைதியாக அமருங்கள். Akubra hat, அகுப்ரா தொப்பியின் வரலாறு, பயன்பாடு, அதன் தனித்தன்மை எல்லாவற்றையும் நான் சொல்கிறேன்.

 

Benjamin Dunkerley என்ற இளைஞர் 1840ல் இங்கிலாந்தின் Cheshire பகுதியில் பிறக்கிறார். அவர் 1874 ஆம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு குடி பெயர்ந்தார். இங்கிலாந்திலேயே அவர் தொப்பிகள் செய்பவராக இருந்தார். Akubra hat-ன் வரலாறு 1870களில் தொடங்குகிறது.

 

ஒரு நாள் Benjamin Dunkerley தன் மனைவி Harriet மற்றும் ஆறு குழந்தைகளிடம் சொன்னார்: “இங்க நிறைய முயல்கள் இருக்கின்றன. அவைகளின் ரோமங்களை சேகரிக்கலாம். முயல்களின் ரோமங்களை வைத்து தொப்பிகள் செய்யலாம்” என்றார். அவர் மனைவியும் அது சிறந்த யோசனை என்று ஒப்புக்கொண்டார்.

 

1876 ஆம் ஆண்டு Benjamin Dunkerley, David Glenhill என்பவருடன் இணைந்து டாஸ்மேனியாவின் ஹோபார்ட் அருகே உள்ள Glenorchy என்ற இடத்தில் தொப்பிகள் செய்யும் ஆலையை நிறுவினார். 1895ல் மெல்பர்னில் கடை திறந்தார்.

 

1900 ஆம் ஆண்டு மறுபடி மனைவியை அழைத்து, “நாம் சிட்னியில் ஒரு தொப்பி கடை வைப்போம். ஆஸ்திரேலியாவின் எல்லா பருவங்களுக்கும் ஏற்றாற் போல அந்த தொப்பிகள் இருக்கும்” என்று சொல்லி சிட்னியில் ஒரு கடையைத் துவங்கினார்.

 

அப்பொழுது தான் கதையில் ஒரு ட்விஸ்ட் நடந்தது. ஒரு திருப்பு முனை. சரியாக 1912 ஆம் ஆண்டு அது நடந்தது. Benjamin Dunkerley ன் மருமகன் Stephen Keir தொழிற்சாலைக்கும் கடைக்கும் வந்து பார்த்துவிட்டு, “மாமா! இதை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போகலாம்” என்றார். “எப்படி?” என்று கேட்டார் Benjamin Dunkerley. “நகரத்தில் இருப்பவர்களும், கிராமத்தில் இருப்பவர்களும், கடலோரம் இருப்பவர்களும், பாலைவனத்தில் இருப்பவர்களும் என எல்லோரும் விரும்பி வாங்கற தொப்பியா நம்ம செய்யனும். உறுதியாவும் இருக்கனும். அழகாகவும் இருக்கனும். ஆஸ்திரேலியாவில் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. மழை காலத்தில் நிறைய மழை பெய்கிறது. குளிர் காலத்தில் கடுங்குளிராக இருக்கிறது. எல்லா பருவத்திற்கும் ஏற்றாற் போல நாம் தொப்பிகள் செய்யலாம். வெயில், மழை, தூசி எல்லாவற்றையும் தாங்கனும்” என்றார் Stephen Keir. “ நல்ல யோசனை மாப்பிள்ளை. வெறும் தொப்பி இல்லை. அது உயிர் காக்கும் கருவி. அப்படித்தானே!” என்று சொல்லி உடனே வேலையை ஆரம்பித்தார்கள்.

 

ABC Australia Akubra hat செய்யப்படும் தொழிற்சாலைக்குச் சென்று ஓர் ஆவணம் தயாரித்தார்கள். அந்த ஆவணத்தில் கூறிய படி, முதலாம் உலகப் போரில் ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு தொப்பிகள் செய்து கொடுத்தார்கள். 2016 ஆம் ஆண்டுக்குள் இருபது இலட்சம் தொப்பிகளை ஆஸ்திரேலிய இராணுவத்திற்கு மட்டும் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

1920 போல பொருளாதார மந்தம் வந்தது. நூற்றுக்கணக்கான பணியாட்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போர் வந்தது மறுபடியும் ஆஸ்திரேலிய இராணுவத்திற்கு தொப்பிகள் செய்யத் துவங்கினார்கள்.

 

1952 ஆம் ஆண்டு Stephen Keir ஓய்வு பெற்ற போது, அவரது மூத்த மகன் Herbert பொறுப்பெடுத்துக் கொண்டார். 2023 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், Tattarang என்ற private investment company, Akubra வை வாங்கியது. அதற்கு கோவிட் தொற்றுதான் காரணம் என்று முன்னாள் மேனேஜிங் டைரக்டர் Stephen Keir கூறினார்.

 

Akubra என்றால் ஆஸ்திரேலிய பூர்வீகக் குடிகளின் மொழியில் தலைக் கவசம் என்று பொருள். அதனால் Akubra hat என்று அவர்கள் செய்த தொப்பிகளுக்குப் பெயர் வைத்தார்கள்.

 

கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்கள். 1930ஆம் ஆண்டுகள்ல ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசத்துல, சிவப்பு மண்ணுல, மாடுகளை மேய்த்துக் கொண்டு ஒருவர் குதிரையில் வருகிறார். உக்கிரமான வெயில். அப்போ அவர் Akubra hat போட்டு தன் தலையை மறைத்திருக்கிறார். 2.5யிலிருந்து 3 அங்குலம் விளம்பு உள்ள Akubra hat. வெயிலிலிருந்து அவருடைய கழுத்தை மறைக்குது. மழை பெய்தால் அவர் கண்களில் மழைச் சொட்டு விழாது. எப்பொழுதும் அவருக்கு நிழல் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

 

அப்படிப்பட்ட Akubra hat அகுப்ரா தொப்பிகளை எங்கே செய்கிறார்கள் தெரியுமா? New South Wales இல் உள்ள Kempsey என்ற இடத்தில் தான் இவ்வகைத் தொப்பிகளைச் செய்கிறார்கள். ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. அதே குடும்பம் Akubra hat களை தொடர்ந்து செய்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு தொப்பியைச் செய்ய கிட்டத்தட்ட 70 படிகள் இருக்கின்றன.

 

என் பெர்த் நண்பர் ஒருவர் சொன்னார்: “ என் தாத்தா ஒரு Akubra hat வாங்கி வைத்திருந்தார். அதை என் அப்பா பத்திரப்படுத்தி வைத்திருந்தார். சில நேரம் நான் அதை பயன்படுத்துகிறேன். Akubra hat கள் அப்படி நீடித்து உழைக்கும் தன்மை உடையவை. பல தலைமுறைகளைத் தாண்டி உழைக்கின்றன. அதன் தனித்தன்மை என்ன தெரியுமா? சில கூர்மையான மடிப்பு உள்ளவையாகச் செய்யலாம். சில உருட்டப்பட்ட விளிம்பு உள்ளவையாகச் செய்யலாம். கைரேகை போன்று ஒவ்வொரு Akubra hat ஐயும் தனித்தன்மையோடு செய்யலாம்” என்று விவரித்தார்.

 

Akubra hat கள் வெறும் தொப்பிகளா? என்றால் இல்லை. அவை ஆஸ்திரேலியாவின் ஒரு பண்பாட்டுச் சின்னமாக மாறிவிட்டது. பனிச் சொட்டும் மலைகளா? சிம்ஸன் போன்ற பாலைவனங்களா? வான் முட்டும் கட்டிடங்கள் உள்ள நகரமா? நீண்ட புல் வெளி உள்ள சிறு கிராமமா? ஆஸ்திரேலியாவின் மத்தியப் பகுதியா அல்லது நுரையுடன் கூடிய அலைகளைத் தள்ளும் கடற்கரையா? எங்கு பார்த்தாலும் Akubra தொப்பிகளை நீங்கள் பார்க்கலாம். Royal Flying Doctor Service, the Australian Defence Force, அவ்வளவு ஏன் ஒலிம்பிக்ஸ் வீரர்கள் என எல்லோருமே ஒரு வித கௌரவத்துடன் Akubra தொப்பிகளை அணிகின்றனர்.

 

வெள்ளித்திரையை மறக்க முடியுமா? ஹாலிவுட் ‘Akubra தொப்பிகள், Akubra தொப்பிகள்’ என அலைகிறது. Crocodile Dundee என்ற படத்தில் நடித்த Paul Hogan  ஞாபகம் இருக்கிறதா? Akubra தொப்பியைப் பயன்படுத்தி, அதை மிகவும் பிரபலமாக்கிவிட்டார்.

 

ஆஸ்திரேலியர்களுக்கு Akubra தொப்பி என்றால் ஒரு விசேஷம் தான். ஆஸ்திரேலிய திருமண நிகழ்வுக்கு அதை அணியலாம். அல்லது நீண்ட பயணத்திற்கு dusty road trip-க்கு அணியலாம். ஒரு பண்ணையில் பணி புரிய அணியலாம்.

 

என் பூர்வீகக் குடி நண்பர் ஒருவரிடம் Akubra தொப்பிகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார்: “ என்னிடமும் ஒரு Akubra தொப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியர்களின் இதயங்களில் Akubra தொப்பிகள் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. ஏன் தெரியுமா?” “ஏன்?” என்று கேட்டேன். “ it’s practical. அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு உகந்தது. அகலமான விளிம்பு இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அவை 98% UV rays, புற ஊதாக் கதிர்களை தடுத்துவிடும். அதனால் என்ன என்று கேட்கிறீர்களா? தோல் புற்றுநோய் வராமல் இருக்க அவை உதவுகிறது. வெள்ளமா? நெருப்பா? Akubra தொப்பி என் கூடவே இருக்கும். ANZAC உணர்வுக்கு ஒரு ஸ்லவுச் தொப்பி கூட உள்ளது” என்றார்.

 

 

*********

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page