ஸோனி - கதைச் சுருக்கமும் - வாசிப்பு அனுபவமும்
- உயிர்மெய்யார்
- 3 hours ago
- 3 min read

ஸோனி - கதைச் சுருக்கம்
பெற்றோர்களுடன் தங்கிச் செல்வதற்காக மகள், அந்தக் கிராமத்திற்கு வருகிறாள். வெவ்வேறு விடுதலைப் போராட்டக் குழுக்களிடையே சண்டை நடக்கிறது. ஸோனியை, அவன் வீட்டில் வைத்து ஒரு குழுவினர் சுட்டுவிட்டதாக, மருமகள் இவளுக்கு போன் செய்கிறாள். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக ஸோனி இவள் வாழ்வில் இல்லை. இப்பொழுது பிரிவுத் துயரம் கடுமையாகத் தாக்குகிறது.
அந்தக் கடைசி நாளை நினைத்துப் பார்க்கிறாள். ஆயுதங்கள் வாங்க சீனாவுக்கு அவன் ஒரு குழுவினரோடு செல்ல வேண்டும். இருவரும் தனியே இருந்தார்கள். உடல் வேட்கைத் தீர்ந்ததும் கட்டியணைத்தபடியே இருந்தார்கள். காலை எழுந்து சென்று விடுகிறாள். அவன் பிரிந்து செல்கிறான். வெறுமை.
ஒரு நகரத்திற்கு வந்து விடுகிறாள். தேசிய நாளிதழ் ஒன்றில் அவளுக்கு வேலை. விடுதலைக் குழுத் தலைவன் ஒருவன் ஒரு பெண் போராளியைத் திருமணம் செய்துக் கொண்டான் என்ற செய்தி அவளை உலுக்கியது. ஸோனியை வெறுத்தாள். வழித் தவறி இன்பக்களியாட்டங்களில் ஈடுபட்டாள். அவளது அண்ணன் வந்து மீட்டெடுக்க, வீட்டில் ஸோனியின் கடிதங்கள் இருந்தன. ‘என்னைத் தடுத்திருக்கலாமோ நீ’ என ஒரு கடிதம். அவனும் ஒரு சராசரி மனிதன் தான் என நினைக்கிறாள். இரண்டு முறை அவனை இழந்தாள். முதல் முறை இலட்சியத்தால். இரண்டாம் முறை இப்பொழுது மரணத்தால். அண்ணன் ஒரு உறை கொடுக்கிறான். அதில் ஒரு கணிணி ஃப்ளாப்பி இருந்தது. அதை ஒரு வங்கி லாக்கரில் வைத்துவிட்டு வந்துவிடுகிறாள் என்று கதை முடிகிறது.
ஸோனி வாசிப்பு அனுபவம்
நான் மதுரையில் இருந்த போது ‘இது நாடகமல்ல’ என்றொரு மேடை நாடகம் எழுதினேன். சதங்கை கலைக்கல்லூரியில் அந்த நாடகத்தைப் போட்டார்கள். அதில் கதாநாயகன் பெயர் ‘அபேதன்’. கதாநாயகியின் பெயர் ‘யதார்த்தா’. பேதங்கள் இல்லா உலகம் வேண்டும் என்று விரும்பும் லட்சியவாதி அபேதன். மாறுபாடுகளும் வேறுபாடுகளும் நிறைந்தது தான் உலகம். அதை ஏற்று வாழ்வது தான் வாழ்க்கை என்று எண்ணுபவள் யதார்த்தா. இருவருக்குள்ளும் ஒரு காதல் இருக்கும். ஆனால் கருத்து மோதல்கள் இருந்துக் கொண்டே இருக்கும். போலீஸ் இல்லாத சமூகம் இருக்கமுடியும் அல்லது இருக்கவேண்டும் என்று நினைப்பவன் அபேதன். குற்றங்களைத் தடுக்க போலீஸ் தேவை என்று ஒத்துக் கொள்ளுபவள் யதார்த்தா. மேடையில் அறம் பேசி விட்டு, இருட்டில் லஞ்சம் கேட்கும் அரசியல்வாதியை வெறுப்பவன் அபேதன். அரசியலுக்கும் நமக்கும் காத தூரம் என்று வாழ்பவள் யதார்த்தா. அபேதனுக்கு வேலை இல்லை. யதார்த்தா ஓர் அரசியல்வாதியிடம் போகச் சொல்லி சிபாரிசு செய்வாள். அவன் போக மாட்டான்.
இப்படி இழுபறியாகப் போகும் இரண்டு மூன்று காட்சிகள் போக, திடீரென சிலர் வந்து அபேதனை அடித்து நொறுக்குவார்கள். ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்க, டைரக்டர் தான் அடிக்கச் சொன்னார் என்று சொல்லுவார்கள். அபேதன் திரைக்குப் பின்னால் நின்றுக் கொண்டிருக்கும் நாடக டைரக்டரை, திரைக்கு முன்னால் கூப்பிடுவான். ‘என்ன? திடீர்னு அடி தடி காட்சி?” என்று கேட்பான் அபேதன். “சுவாரஸ்யமே இல்லாம நாடகம் போனா, மக்கள் எழுந்து போயிடுவாங்க. அவுங்களுக்குப் பிடிக்குமேன்னு ஓர் எதிர்பாராத காட்சி” என்பார் நாடக டைரக்டர். கலைகள் எப்படி பிஸினசாகப் போய்விட்டது என்று சலித்துக்கொள்வான் அபேதன். கலைகள் மக்களை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் இல்லையா என்பாள் யதார்த்தா.
பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் கம்பெனிகளுக்கு வேலையாட்களை தயாரித்துக்கொடுக்கின்றன, உண்மையான கல்வி எங்கும் இல்லை என்பான் அபேதன். படித்தால் தானே நல்ல வேலை கிடைக்கும் என்பாள் யதார்த்தா. மாயையில் வைத்திருக்கின்றன மதங்கள் என்பான் அபேதன். வாழ்க்கையில் நம்பிக்கைத் தேவையில்லையா எனக் கேட்பாள் யதார்த்தா. ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் முறியும்.
கடைசியில் பார்வையாளர்களிலிருந்து ஓர் இளைஞன் மேடைக்கு வருவான். டைரக்டரை மறுபடி திரைக்கு முன் அழைப்பான். அபேதன் போல் கண்மூடித்தனமாக லட்சியவாதியாக இருக்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? அல்லது யாதார்த்தாவைப் போல் இயல்பு வாழ்க்கையில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவேண்டும் என்று சொல்கிறீர்களா? என்று கேட்பான். ஏன் மூன்றாவதாக ஒன்று இருக்கக் கூடாது? லட்சியத்தை மனதில் வைத்துக்கொண்டு, யதார்த்த வாழ்வையும் வாழும் மூன்றாவது பாதையை ஏன் நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது என்று டைரக்டர் சொல்லுவார்.
அப்பொழுது பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகர் எழுந்து, ‘அப்படி நினைத்திருந்தால் இளைஞர்களைக் கேள்வி கேட்கச் சொன்னதற்காக, விஷம் கொடுக்கப்பட்டு, அதை விரும்பி அருந்திய ஒரு சாக்ரடீஸ் மெய்யியல் பேசியிருக்கமாட்டார். அப்படி நினைத்திருந்தால் அனைவரையும் அன்பு செய்யச் சொன்னதற்காக, சிலுவையில் உயிர் நீத்த ஒரு இயேசு உதிர்த்திருக்க மாட்டார். அஹிம்சையை போதித்துக்கொண்டே விடுதலைக்காகப்ப போராடியதற்காக, சிறையில் தள்ளப்பட்ட காந்தி உருவாகியிருக்கமாட்டார். ஒரு ஃபிடல் காஸ்ட்ரோ, ஒரு பகவத்சிங், ஒரு லெனின் என்று பட்டியல் நீளும். அவர்கள் என்ன செய்தார்கள். நாலாவது பாதை இருக்கிறது. உங்களால் முடிந்த அளவு லட்சியத்தைக் கொண்டு யதார்த்தத்தை மாற்ற தொய்வின்றி செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்’ என்று ஆவேசத்துடன் தன் உணர்வுகளைக் கொட்டுவார்.
இந்த நான்கில் உங்கள் வாழ்க்கை எந்தப் பாதையில் பயணிக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று டைரக்டர் சொல்ல, திரை மூடப்படும். அந்த நாடகத்தைப் பார்க்க கத்தோலிக்க பேராயர் வந்திருந்தார். அவர் தான் சிறப்பு அழைப்பாளர். கதையாசிரியராகவும், அபேதனாகவும் நடித்த என்னை அழைத்தார். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் இயக்குநருக்கு உதறல் வந்து விட்டது. என்னைப் பார்த்து முறைத்தார். “நீங்க தான் நாடகத்தை எழுதியதா?” என்று கேட்டார் பேராயர். “ஆமாம்” என்றேன் மெதுவாக. அதற்குள் நிறுவன இயக்குநர், “ ஆண்டவரே! ரிகர்சலில் இல்லாததெல்லாம், மேடையில் போட்டுவிட்டார்கள். இனி இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவரைச் சமாதானப் படுத்தினார்.
“நோ! நோ! இங்க வாப்பா” என்று என்னை முன்னுக்கு அழைத்து, “நான் என் வாழ்க்கையில் பார்த்த நாடகங்களில் ஆகச் சிறந்து நாடகம் இதுதான். இது நாடகமல்ல என்று இதற்கு பொருத்தமான பெயரும் இட்டிருக்கிறீர்கள். என் வாழ்க்கையில் நான் என்னதான் செய்துக்கொண்டிருக்கிறேன் என்று என்னை சிந்திக்கவைத்து விட்டீர்கள்.” என்றார். புன்னகைக்கலாமா இல்லையா எனத் தெரியாமல் மத்திமமாக ஒரு சிறு புன்னகையை படர விட்டேன். நிறுவன இயக்குநர் முகம் கடுகு தாளிக்கத் தயாராக இருந்தது. பேராயரை சாப்பிடப் போகலாம் என்று மடை மாற்றினார் இயக்குநர்.
“அபேதா! வாங்க… என்னோட சாப்பிடுங்க. இன்னும் இதப்பத்தி ஒங்களோட பேசனும்” என்று என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். பின்னால் வந்த இயக்குநர் முகம் எப்படி போனது என்று தெரியவில்லை.
சரி. ஸோனி கதைக்கு வருகிறேன். ஸோனி இன்னொரு அபேதன். அவன் காதலியின் பார்வையில் தான் கதையே எழுதப்பட்டிருந்தது. போராட்டக் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் இடையிலும் நடக்கும் ‘குழி பறிப்புகளை’ கதை சொல்லி நகர்கிறது. மெல்லிய காதல் உணர்வு, மாற்றுக் கருத்துக்களால் பிரிவு, போராட்டக் குழுவில் இருக்கும் இன்னொரு பெண்ணுடனான நட்பு, இந்த வேலைக்கு வந்திருக்கக்கூடாதோ என்கிற மனக்குழப்பம், நம்பிக்கையை வெளிப்படுத்தும் கடிதம், ஆனால் அதைக் காப்பாத்தாத இயல்புக்காரி என்று கதை முழுக்க பல உணர்வு வெளிப்பாடுகள்.
ஒரு வாசகர் சொன்னார்: இந்தக் கதை உட்பட, இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்த பலக் கதைகளை, கதையாசிரியர் சுதந்திரமாக எழுதினாரா என்ற சந்தேகம் வருகிறது. அரசாங்கத்தில் ஒரு பதவியில் இருந்ததால், இராணுவம், அரசாங்கம், போராட்டக்குழுக்கள் என்று வருகிற போது, எழுத்தாளரின் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவே நான் உணர்கிறேன். உண்மையான போராட்டக் களத்தை கண் முன் கொண்டு வரவில்லை என்றார்.
அபேதா! ஓர் எழுத்தாளனுக்கு எவ்வளவு தூரம் சுதந்திரம் இருக்கிறது?
என் தலைக்கு மேல் சரக்கொன்றை
(ஆசிரியர் - டெம்சுலா ஆவ்; தமிழில் - எம்.ஏ. சுசீலா; முதல் பதிப்பு - 2009;
தமிழில் முதல் பதிப்பு - 2022; நற்றிணைப் பதிப்பகம்)
உயிர்மெய்யார்
17.05.2025, மெல்பர்ன்
Comments