ஏன் ஈரானின் IRGC அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஆஸ்திரேலியா அறிவித்தது?
- உயிர்மெய்யார்

- Sep 4
- 5 min read

ஈரானின் Islamic Revolutionary Guard Corps (IRGC) இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஆஸ்திரேலியாவின் யூத சமூகத்திற்கு எதிராக குறைந்தது இரண்டு தாக்குதல்களை நடத்தும் பின்னணியில் இருப்பதாக ஆஸ்திரேலிய உளவுத்துறையான ASIO ஆஷியோ தீர்மானித்ததையடுத்து, ஆஸ்திரேலிய அரசு IRGC அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்வதாக அறிவித்துள்ளது.
மெல்போர்னில் உள்ள ஒரு யூத வழிபாட்டு தலம் மற்றும் சிட்னியில் உள்ள யூத உணவகம் மீதான தாக்குதல்கள் "IRGC ஆல் இயக்கப்பட்டன" என்று ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு உளவு நிறுவனம் ASIO "நம்பகமான சான்றுகள்" வைத்திருப்பதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறினார்.
அதைத் தொடர்ந்து, ஈரானுக்கான தூதர் அஹ்மத் சதேகி தூதரகத்தை விட்டு வெளியேறினார். ஆனால் அவர் ஊடகத்திற்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஈரானின் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பகாய் ஆஸ்திரேலியாவை கடுமையாக விமர்சித்தார். “ஆஸ்திரேலிய அரசால் கூறப்பட்ட குற்றச்சாட்டை தாம் முற்றிலும் நிராகரிப்பதாகவும், யூத எதிர்ப்பு என்பது எமது கலாச்சாரம், வரலாறு அல்லது எமது மதத்தில் இடமில்லை” என்றும் அவர் கூறினார்.
[[FARSI THEN ENGLISH VO: "This is a new development. My colleagues are investigating the issue and our response. But the accusation made is completely rejected. Technically, the concept called antisemitism has no place in our culture, history or religion. This is a Western and European phenomenon."]]
அந்த வகையில் ஆஸ்திரேலிய அரசு IRGC அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்திருப்பதும், ஆஸ்திரேலியாவுக்கான ஈரான் நாட்டின் அதிபர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டிருப்பதும் உலகின் முக்கிய செய்தியாக மாறியுள்ளது.
இந்த பின்னணியில் , ஆஸ்திரேலியா தடை செய்திருக்கும் IRGC அமைப்பின் தொடக்கம், நோக்கம், கட்டமைப்பு, செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றியும், அந்த அமைப்பை ஆஸ்திரேலிய அரசு தடை செய்யக் காரணங்கள் என்ன? என்பது பற்றியும், அதனால் வரப்போகிற சாத்தியமான விளைவுகள் பற்றியும் பார்ப்போம்.
முதலில் IRGC அமைப்பு எப்படி உருவானது என்பதைப் பார்ப்போம்.
IRGC அமைப்பின் தொடக்கத்தைத் தெரிந்துக் கொள்ள 1979 ஆம் ஆண்டிற்குச் செல்லவேண்டும். ஈரானில் இஸ்லாமியப் புரட்சி நடந்தது. 1979 ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதியன்று ஈரானில் ஷாவின் முடியாட்சி தூக்கியெறியப்பட்டது. அந்தப் புரட்சியைத் தலைமையேற்று நடத்தியவர் அயத்துல்லா அலி கோமேனி. புதிய அரசியல் சட்டம் உருவானது. அவரே நாட்டின் அதிபருக்கும் மேலான பதவியாக ஈரானின் தலைமை இஸ்லாமிய மதகுருவாக அரசியல் சட்டப்படி மாறினார்.
ஈரானின் இஸ்லாமிய குடியரசை பாதுகாக்க அயத்துல்லா அலி கோமேனியால் தான் IRGC அமைப்பு தொடங்கப்பட்டது. அப்பொழுது ஆயத்துல்லா அலி கோமெய்னி, “நம் நாட்டில் எழுந்த புரட்சியின் விளைவாகக் கிடைத்த இஸ்லாமிய அரசைப் பாதுகாக்கவேண்டும். ஈரானை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு ஓர் அமைப்பு இருக்கவேண்டும். அந்த அமைப்பு ஈரானின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்காது. ஏனென்றால் அது முந்தைய மன்னராட்சிக்கு விசுவாசமாக இருந்து இராணுவம். அதனால், புதிய இஸ்லாமிய குடியரசுக்கு விசுவாசமாக இருக்கும் அமைப்புத் தேவை. அது நேரடியாக ஈரானின் சமய உயர் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதனால் IRGC அமைப்பைத் தொடங்குகிறோம்” என்று கூறினார்.
இஸ்லாமிய சமய பின்னணியில் துவக்கப்பட்ட IRGC அமைப்பின் நோக்கம் என்னவென்று பார்ப்போம்.
ஈரான் அரசியலமைப்பின் 150-வது பிரிவு IRGC-யின் முக்கிய நோக்கத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஈரானில் உள்ள இஸ்லாமிய குடியரசின் ஒருமைப்பாட்டை வெளிநாட்டு தலையீடுகளிலிருந்து பாதுகாக்கவேண்டும். ஒரு வேளை ஈரானில் இராணுவப் புரட்சி நடந்தால் அதைச் சமாளிக்கவேண்டும். மேலும், புரட்சியின் கருத்தியல் அடித்தளங்களை அசைக்கிற மற்ற இயக்கங்களை ஒடுக்கவேண்டும். ஆக, சுருங்கச் சொன்னால், உள்நாட்டு பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடு, இஸ்லாமிய ஒழுக்கத்தைச் செயல்படுத்துதல், இஸ்லாமிய புரட்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் போன்றவையே IRGC யின் நோக்கமாக இன்றுவரை இருக்கிறது.
IRGC அமைப்பின் கட்டமைப்பு மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. அதற்கென்று தனி தரைப்படை (ground force), கடற்படை, வான்வழிப் படை, nuclear protection, உளவுத்துறை, Quds Force என்ற குத்ஸ் படை, மற்றும் உள்நாட்டு ‘பாசிஜ்’ போராளிக்குழு ஆகியவற்றை இயக்கும் மாபெரும் அமைப்பாக மாறியிருக்கிறது. ஏறக்குறைய ஈரான் ராணுவத்திற்கு இணையாக அல்லது அதைவிட பலம் பொருந்திய அமைப்பாக IRGC இருக்கிறது, இயங்கி வருகிறது.
IRGC அமைப்பின் செயல்பாடுகள் என்னவென்று பார்ப்போம்.
1980 களில் நடந்த ஈரான்-ஈராக் போரில் IRGC அமைப்பு தன் தீவிரமான கருத்தியலை புகுத்தியதாகவும், புதுப்புதுப் போர்த் தந்திரங்களை வகுத்துக் கொடுத்ததாகவும் அறியப்படுகிறது.
IRGC யின் கீழ் இயங்கும் Basij Militia என்கிற தன்னார்வ இராணுவ வீரர்களைக் கொண்ட படையில் 3,00,000 (மூன்று லட்சம்) பேர் இருக்கிறார்கள். இது உள்நாட்டு பாதுகாப்பு, சமூக சேவைகள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களை அடக்குவதில் ஈடுபடுகிறது.
Quds Force என்கிற முதன்மை சிறப்பு செயல்பாட்டு அலகில் (Elite special operations unit) கிட்டத்தட்ட 5000 பேர் இருக்கிறார்கள். இந்த குத்ஸ் படை லெபனானில் உள்ள Hezbollah, ஈராக்கில் உள்ள Shia, ஏமனில் உள்ள Houthis, சிரியா மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள Hamas போன்ற படைகளுடன், மேற்கத்திய மற்றும் இஸ்ரேலிய செல்வாக்கை எதிர்ப்பதற்காக, கூட்டு சேர்ந்துக்கொள்கிறது.
எடுத்துக்காட்டாக, 1994 ஆம் ஆண்டு பியூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு யூத சமூக மையத்தின் மீது குண்டு வெடிப்பு நடந்தது. அடுத்து 2020 ஆம் ஆண்டு யுக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதிலெல்லாம் IRGC க்கு தொடர்பு இருப்பதாகவும், உலகம் முழுவதும் மறைமுகத் தாக்குதல்கள் மற்றும் சதி முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Aerospace Force என்கிற விண்வெளிப் படை ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் வான் பாதுகாப்பு முறைகளை நிர்வகிக்கிறது. அதே நேரம், IRGC அமைப்பின் கடற்படை, வளைகுடா பகுதியில் வேகமாக தாக்கும் படகுகள், கப்பல்கள் மற்றும் ஏவுகணைகளுடன் செயல்படுகிறது. அது 2025 ஆம் ஆண்டு, AI-இணைக்கப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெளியிட்டு தனது கடற்படைத் திறனை IRGC வெளிப்படுத்தியது.
IRGC அமைப்பு, ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு ட்ரோன்களை வழங்கியுள்ளது என்றும், இந்த ஆண்டு ஏப்ரலில் இஸ்ரேலில் முன்னெப்போதும் இல்லாத ‘நேரடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது என்றும் கூறப்படுகின்றன.
ஈரானின் உள்நாட்டிலேயே அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த பல போராட்டங்களை IRGC அடக்கியுள்ளது. குறிப்பாக 2009, 2019, மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஈரானில் தன்னிச்சையாக எழுந்த மக்கள் போராட்டங்களை அடக்குவதில் IRGC அமைப்பு முக்கியப் பங்கை வகித்தது எனச் சொல்லப்படுகிறது.
IRGC அமைப்பின் விரிவாக்கத்தை சற்று விரிவாக பார்ப்போமா?
ஈரானின் IRGC அமைப்பு குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. 2000 ஆவது ஆண்டுகளில், இது 31 மாகாண பிரிவுகளாக மறுசீரமைக்கப்பட்டு, செயல்பாடுகளை பரவலாக்கி உள்நாட்டு கட்டுப்பாட்டை மேம்படுத்தியது. இன்று, இது வழக்கமான ஆயுதப்படைகளுக்கு இணையாக இயங்குகிறது. ஈரானின் உயர்ந்த தலைவர், அயதுல்லா அலி கோமெய்னிக்கு நேரடியாக அறிக்கை அளிக்கிறது. ஈரானின் சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் IRGC அமைப்பு பரந்த செல்வாக்கை செலுத்தி வருகிறது. மேற்சொன்ன ராணுவ நடவடிக்கைகளைத் தாண்டி, ஈரான் நாட்டின் கட்டுமானம், ஆற்றல், தொலைத்தொடர்பு, உணவுத்துறை போன்றவற்றில் முன்னணி நிறுவனங்கள் மூலம் ஈடுபட்டு பொருளாதார ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அரசியல் ரீதியாக, IRGC-யின் பல முன்னாள் உறுப்பினர்கள் அமைச்சரவை பதவிகள் மற்றும் தூதரக பதவிகளை வகிக்கின்றனர்.
இந்த நிலையில்தான் இப்பொழுது ஆஸ்திரேலிய அரசு IRGC அமைப்பைத் தடை செய்திருக்கிறது.
ஆஸ்திரேலிய அரசு IRGC அமைப்பை ஏன் தடை செய்துள்ளது என்பதை இனி விரிவாக பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தகுந்த இரண்டு யூத எதிர்ப்புத் தாக்குதல்கள் நடந்தன. அக்டோபரில் சிட்னியில் ஒரு kosher restaurant இல் தீ வைக்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பரில் மெல்போர்னில் Adass Israel எனும் யூத வழிபாட்டுத் தலம் - Synagogue க்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டு ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவங்களின் பின்னணியில் இருப்பது ஈரானின் IRGC என்று ஆஸ்திரேலிய உளவு அமைப்பு ASIO முடிவு செய்ததுதான் மிகப் பெரிய திருப்பம்.
“யூத எதிர்ப்பு சம்பவங்களுக்கு IRGC காரணமாக இருக்கலாம். மற்ற பல சம்பவங்களிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம். மெல்போர்னில் உள்ள பிரதிநிதிகள் மூலம் ஒரு யூத வழிபாட்டுத் தலத்தில் குண்டு வீச அவர்கள் விரும்பினால் அது முற்றிலும் சாத்தியம்” என்று ASIO தலைவர் மைக் பர்கெஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
“யூத சமூகத்தை வேண்டுமென்றே குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் ஒரு புனித வழிபாட்டுத் தலத்தை அழித்தது, மில்லியன் கணக்கான டாலர்கள் சேதத்தை ஏற்படுத்தியது, மேலும் எங்கள் சமூகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியது” என்று ஆஸ்திரேலிய யூத நிர்வாகக் குழுவின் இணை நிர்வாக இயக்குநர் அலெக்ஸ் ரிவ்சின் கூறியுள்ளார்.
[["These attacks that deliberately targeted the Jewish community destroyed a sacred house of worship, caused millions of dollars of damage, and sent terror throughout our community."]]
ஆஸ்திரேலியா இப்படி ஒரு வெளிநாட்டு இராணுவப் பிரிவை தடைசெய்வது அதாவது IRGC அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பது இதுவே முதல் முறை.
ஆஸ்திரேலிய அரசு IRGC-ஐ விரைவில் தடை செய்யாமல் கால தாமதப்படுத்தியதற்காக லிபரல் கட்சியைச் சேர்ந்த Michaelia Cash சேனல் 7 க்கு அளித்த பேட்டி ஒன்றில் அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.
“இரண்டரை வருடங்களுக்கு முன்பே நாங்கள் நடவடிக்கை எடுக்கக் கோரினோம். ஆஸ்திரேலியாவில் உள்ள ஈரானிய சமூகம் இரண்டரை வருடங்களுக்கு முன்பே நடவடிக்கை எடுக்கக் கோரியது. ஆனால் இந்த அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. இந்த அமைப்பை தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வாருங்கள்” என்று Michaelia Cash கூறினார்.
[["We demanded action two and a half years ago. The Iranian community here in Australia demanded action two and a half years ago, and this government did nothing. So here is a clear message to Mr Albanese: bring on the legislation to list this organisation today. You have the resources to do this, and we will assist you in passing it, just like we told you we would do two and a half years ago."]]
இந்த தடை மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் IRGC செயல்படுவதை அல்லது அந்த அமைப்பு நிதி திரட்டுவதைத் தடுப்பதற்கும் இந்தத் தடை உதவும். மட்டுமல்ல ஆஸ்திரேலியா ஈரானின் தூதர் அகமது சதேகி வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஈரானின் IRGC அமைப்பின் தடை ஏற்படுத்தப்போகும் நீண்ட கால விளைவு என்னவாகவிருக்கும் என்று நாம் நினைக்கலாம்.
ஆஸ்திரேலியாவில் IRGC அமைப்புடன் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம். IRGC-யுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு ஏற்படலாம். அந்த அமைப்பிற்கு ஆதரவு வழங்குவோருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
அதைவிட மேலாக ஆஸ்திரேலியா – ஈரான் உறவு தீவிரமாக பாதிக்கப்படும். மறுபடி உறவு மேம்பட நீண்டகாலம் பிடிக்கலாம். அதற்கு நேர் மாறாக ஆஸ்திரேலியா பிற நாடுகளுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக இயங்கலாம். எடுத்துக்காட்டாக, அமெரிக்கா, டொனால்ட் டிரம்பின் முதல் நிர்வாகத்தின் போது, 2019 ஆம் ஆண்டில் IRGC ஐ அமெரிக்காவில் ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்தார். 2024 ஆம் ஆண்டில் கனடாவும் அதைத் தொடர்ந்தது. IRGC-ஐ தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் திட்டமிட்டுள்ளன. இத்தகைய நாடுகளுடன் IRGCக்கு எதிராக ஆஸ்திரேலியா செயல்படக்கூடும்.
ஆனால், இதற்கு ஈரானின் பதிலடி நடவடிக்கைகளையும் நாம் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், இந்த தடை அறிவிப்பை ஈரான் கடுமையாக எதிர்த்துள்ளது. ஈரானில் உள்ள ஆஸ்திரேலிய தூதரை ஈரான் வெளியேற்றலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பொருளாதார ரீதியாக பதிலடி கொடுக்கலாம். இது ஆஸ்திரேலியாவில் உள்ள ஈரானிய பின்னனிகொண்ட சமூகத்தை பாதிக்கலாம். ஈரானின் அணு ஆயுத முயற்சிகள் துரிதமாகலாம். இப்படி பலவற்றை நாம் எதிர்பார்க்கலாம்.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சியை பாதுகாக்க உருவாக்கப்பட்ட IRGC இன்று உலகளாவிய செல்வாக்குள்ள ராணுவ-அரசியல்-பொருளாதார சக்தியாக மாறியுள்ளது. அதனை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த ஆஸ்திரேலியாவின் முடிவு இருதரப்பு உறவுகளைத் தகர்க்கும் முக்கிய திருப்பமாக உள்ளது. இது சட்ட, தூதரக, சமூக ரீதியாக ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதே உண்மை.
********



Comments