எண்ணெய், போர் & ஆபத்து: 2026 மத்திய கிழக்கு நெருக்கடி உலகெங்கும் தமிழ்க் குடும்பங்களை எப்படி பாதிக்கிறது
- உயிர்மெய்யார்

- 6 days ago
- 5 min read
ஹோர்முஸ் நீரிணை, ஹோர்முஸ் ஜலசந்தி - Strait of Hormuz திறப்பும் மூடலும், வளைகுடாப் பகுதியில் நடக்கும் போர், போர் நிறுத்தம் எல்லாம் உங்களையும் என்னையும் எப்படி பாதிக்கிறது என்று இன்று அலசப்போகிறோம்.
ஒரு குளத்தில் ஒரு கல்லை வீசுகிறீர்கள். என்ன நடக்கிறது? வளையம் வளையமாக அதன் விளைவுகளைப் பார்க்கிறோம். சிறிய வளையம், பிறகு அதைவிட பெரிய வளையம், பிறகு அதைவிடப் பெரிய வளையம் என குளத்தின் கரை வரை அதன் பாதிப்பு இருக்கிறதைப் பார்க்கிறோம். அதற்கு ripple effect என்று பெயர். சிற்றலை விளைவு என தமிழ்ப்படுத்தலாம்.
அதைப் போலத்தான் இன்றைக்கு மத்திய கிழக்கில் நடக்கிற மோதல்கள். போர். ஹோர்முஸ் நீரிணை, ஹோர்முஸ் ஜலசந்தி - Strait of Hormuz - மூடலும் திறப்பும்.
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய கிழக்கில் நடக்கும் ஒரு மோதல், இப்போது நமது சமையலறைகள், வங்கிக் கணக்குகள், வேலைகள் மற்றும் கனவுகளை நேரடியாகத் தொடுகிறது.
தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா, வளைகுடா நாடுகள், இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா உட்பட எங்கும்.
ஹோர்முஸ் நீரிணை, ஹோர்முஸ் ஜலசந்தி - (Strait of Hormuz) பிப்ரவரி 28 முதல் கிட்டத்தட்ட மூடப்பட்டது. நேற்று, இரு வார போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி என்ன சொன்னார்? அடுத்த இரண்டு வாரங்களுக்கு, ஈரான் இராணுவத்துடன் ஒருங்கிணைப்பில் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து சாத்தியம் என்று கூறினார். ஆனால் இஸ்ரேல் லெபனானுடனான போரை நிறுத்தாததால், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்காத நிலை இன்றைக்கு நிலவுகிறது.
என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? இதன் விளவுகள் எப்படி இருக்கும்? நாம் செய்ய வேண்டியது என்ன? என்று இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
என்ன நடக்கிறது?
இலங்கையை எடுத்துக் கொள்வோம்.
கற்பனை செய்துக் கொள்ளுங்கள். கொழும்பில் ஒரு தமிழ்க் குடும்பம் 15 லிட்டர் பெட்ரோலுக்கு மணிக்கணக்கில் காத்திருக்கிறது. தந்தை வேலைக்கு செல்ல முடியாமல், தினசரி ஊதியத்தை இழக்கிறார், சோர்வுடன் வீடு திரும்புகிறார். வடக்கு மாகாணத்தில், விவசாயிகள் டிராக்டர்கள் மற்றும் பாசன பம்புகளுக்கு அதிக டீசல் செலவை எதிர்கொள்கின்றனர்; இது காய்கறி விலையை உயர்த்துகிறது.
இலங்கை தனது பெட்ரோலியத்தின் கிட்டத்தட்ட அனைத்தையும் இறக்குமதி செய்கிறது. விநியோகம் தடைபட்டதால், மார்ச் நடுப்பகுதியில் அரசு கடுமையான எரிபொருள் ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இருசக்கர வாகனங்களுக்கு வாரத்திற்கு 5 லிட்டர். மகிழுந்துகளுக்கு 15 லிட்டர், பேருந்துகளுக்கு 60 லிட்டர் மட்டுமே.
எரிபொருளைச் சேமிக்க வேண்டி, பொதுத் துறை, பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் எல்வாவற்றிற்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறை என இலங்கை அறிவித்தது. ஒரு வாரத்திற்கு நான்கு நாட்கள் தான் வேலை. பொது நிகழ்ச்சிகள் பல ரத்து செய்யப்பட்டன. பெட்ரோல் நிலையங்களில், மணிக்கணக்கில், நீண்ட வரிசைகள் காணப்பட்டன. ஏப்ரல் இறுதி வரை சில ஏற்றுமதிகள் உறுதி செய்யப்பட்டாலும், நெருக்கடி நீடித்தால் ஆழமான பற்றாக்குறை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார வீழ்ச்சியைக் கண்டது. இப்பொது இந்த எரிபொருள் தட்டுப்பாடு, பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும் என்பது போல, இலங்கையை மீண்டும் பலவீனப்படுத்துகிறது.
மலேசியாவின் தற்போதைய நிலைமை என்ன?
மலேசியா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு தான் என்றாலும், கச்சா எண்ணெயில் பெரும் பகுதியை (கிட்டத்தட்ட 40-69%) மத்திய கிழக்கிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. எனவே மலேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே 2026 வரை எரிபொருள் விநியோகம் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்துள்ளது. ஜூன் மாதம் முதல் எரிபொருள் பெரிய சவாலாக இருக்கும் என்று பொருளாதார அமைச்சர் Akmal Nasir தெரிவித்தார்.
Petronas உடன் இணைந்து மாற்று விநியோக ஆதாரங்களை தேடுதல், பிற நாடுகளுடன் ஒத்துழைப்பு, எரிசக்தி பல்வகைப்படுத்தல் என அரசு சில முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மத்திய வங்கி (Bank Negara) பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. PM Anwar Ibrahim ஈரான் அதிபருடன் பேசி, மலேசியக் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான பாதையைப் பெற்றுள்ளார். சில மலேசிய டேங்கர்கள் ஏற்கனவே பாதுகாப்பாக சென்றுள்ளன.
உணவு விலை 50% வரை உயரலாம் என்றும், சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களின் எரிபொருள் செலவு மொத்த செலவில் 50% வரை செல்லலாம் என்றும் மலேசிய வர்த்தக சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பணவீக்கம் (Inflation) 1.4% (பிப்ரவரி 2026) இல் ஆக இருந்தாலும், எண்ணெய் விலை உயர்வு காரணமாக 2.1–3.9% வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள பெரிய இந்திய/தமிழ் சமூகத்தின் (குறிப்பாக சிறு வியாபாரங்கள், உணவகங்கள், போக்குவரத்து, விவசாயம் சார்ந்தவர்கள் ஆகியோரின்) வாழ்க்கைச் செலவு (cost of living) அதிகரிப்பால் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். உணவு, போக்குவரத்து, அன்றாட பொருட்கள் விலை உயர்வு குடும்ப பட்ஜெட்டை ஏற்கனவே அழுத்த ஆரம்பித்து விட்டன.
இந்தியா & தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர். கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 45% மற்றும் எல்பிஜியில் 90%க்கு மேல் மத்திய கிழக்கிலிருந்து வருகிறது. உலக விலை உயர்வு டீசல், பெட்ரோல், உரங்கள், போக்குவரத்து ஆகியவற்றை விலை உயர்த்துகிறது. இது தமிழ்நாடு முழுவதும் உணவு மற்றும் பொருட்களின் விலையை உயர்த்துகிறது.
ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது?
மெல்போர்னில், ஒரு தமிழ் உணவக உரிமையாளர் டீசல் விலை உயர்வைப் பார்த்து, டெலிவரி மற்றும் பொருட்கள் செலவை அதிகரிக்கிறார் – விலை உயர்த்துவதா அல்லது ஊழியர்களை குறைப்பதா என்ற கடினமான தேர்வு.
Asian-refined diesel and jet fuel, ஆசிய சுத்திகரிப்பு டீசல் மற்றும் ஜெட் எரிபொருளைத் தான் ஆஸ்திரேலியா பெரிதும் நம்பியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை பெட்ரோல் நிலையங்களை பாதித்துள்ளது; போக்குவரத்து செலவுகள் உயர்ந்துள்ளன.
லட்சக்கணக்கான தமிழர்கள் (மற்றும் பரந்த இந்திய டயாஸ்போரா) வளைகுடாவில் பணிபுரிகின்றனர். தொடர்ந்த போரும், மோதலும் இருக்கும் பட்சத்தில் லட்சக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழப்பர். construction, hospitality, and retail – sectors - இல் இருக்கும் பலர் தங்கள் வருமானங்களை வீட்டிற்கு அனுப்புகின்றனர்.
கனடா அல்லது இங்கிலாந்தில் இரண்டாம் தலைமுறைத் தமிழ் இளைஞர்கள், தங்கள் பெற்றோர்களுக்குப் பண அனுப்புவது குறைந்து போகிறது. சிலருடைய கல்விச் செலவிற்கு, பல்கலைக்கழகங்களுக்கு கட்டணம் கட்டுவதற்கு அல்லாடும் நிலை வருகிறது. தாயகத்திலிருந்து பெற்றோரோ, உறவினர்களோ அவர்களை வந்த சந்திப்பதோ, இல்லை அந்த இளைஞர்கள் தங்கள் தாயகத்திற்குச் செல்வதோ பாதிக்கப்படுகிறது.
இந்தத் தகவல்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. இவை பொது மக்கள் தினமும் செய்யும் பயணங்களைப் பாதிக்கின்றன. பள்ளிக் கட்டணங்களைப் பாதிக்கின்றன. மருத்துவச் சிகிச்சைகளைப் பாதிக்கின்றன. குடும்ப பட்ஜெட் பாதிக்கப்பட்டு, குடும்பங்கள் பெரும் கடன் சுமைக்குத் தள்ளப்படும் நிலைக்கு ஆளாகின்றன.
அவை நீண்ட பயணங்கள், அதிக பள்ளிக் கட்டணங்கள், தாமதமான மருத்துவ சிகிச்சைகள், அழுத்தமான குடும்ப பட்ஜெட் ஆகியவற்றில் போய் முடிகின்றன.
ஏன் நடக்கிறது?
முதலில் கொஞ்சம் வரலாறு.
எப்போதுமே புவிசார் அரசியலில், ஹோர்முஸ் நீரிணை ஒரு வெடிகுண்டாக இருந்து வந்திருக்கிறது.. ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ள இந்த ஹோர்முஸ் நீரிணை, உலகின் மிக முக்கியமான கடல் சந்திப்புப் பகுதிகளில் ஒன்று. பல தசாப்தங்களாக, பெர்சிய வளைகுடாவில் ஏதேனும் பதற்றம் ஏற்பட்டால் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது – 1973 எண்ணெய் நெருக்கடி, 1990 வளைகுடா போர் அல்லது 2019 டேங்கர் தாக்குதல்களை நினைவில் கொள்ளுங்கள்.
2026 ஆரம்பத்தில், அமெரிக்கா/இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்த மோதல் பிப்ரவரி இறுதியில் நேரடித் தாக்குதல்களுக்கு வழிவகுத்தது. மார்ச் தொடக்கத்தில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறம்பட தடுத்தது அல்லது கடுமையாக கட்டுப்படுத்தியது. சர்வதேச எரிசக்தி ஏஜென்சி The International Energy Agency, இதை உலக எண்ணெய் சந்தைகளில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய இடையூறு biggest disruption என்று அழைத்தது. எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100–115க்கு மேல் உயர்ந்தது; சில சந்தைகளில், ஒரு மாதத்தில் 59% உயர்ந்ததாக சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?
இது வெறும் “மற்றொரு மத்திய கிழக்கு போர்” அல்ல. குளத்தில் கல் எறியப்படும் ripple effect எனப்பார்த்தோம் அல்லவா?
எரிசக்தி குறைவான அல்லாத முற்றும் இல்லாத நாடுகளுக்கு இது பேரிடியாக அமைகிறது. அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், வியாபாரத்தின் மீதும், நிறுவனங்களின் மீதும் எதிர்பாராத கனமான வரிச்சுமை வந்து விழுகிறது.
இந்த நிலை நீடிக்குமானால், எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகளில் பொருளாதார செயல்பாடுகள் குறைந்த போகும். வேலை இழப்பு அதிகரிக்கும். சமூகத்தில் அமைதியின்மை கூடும் என்று IMF, UNCTAD, Oxford Economics போன்ற அறிக்கைகள் எடுத்துரைக்கின்றன.
ஆக, நாம் செய்யவேண்டியது என்ன?
தனிப்பட்ட/குடும்ப அளவில்:
- எரிசக்தி சேமிப்பு பழக்கங்களை ஏற்றுக்கொள்ளலாம். Fossil Fuel என்று சொல்லப்படுகிற புதைப்படிவ எரிபொருட்களான பெட்ரோல், டீசல் போன்றவற்றின் பயன்பாட்டைக்குறைக்கலாம். அதற்கு மாற்றாக, renewable energy என்று சொல்லப்படுகிற புதுப்பிக்கத் தக்க எரிபொருட்களைப் பயன்படுத்த துவங்கலாம். எடுத்துக்காட்டாக, சூரிய அடுப்பைச் செய்யலாம்.
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம். அத்தியாவசியமற்ற பயணங்களை குறைக்கலாம். சேமிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்தலாம்.
சமூக அளவில்:
- கோவில்கள், பள்ளிகள், சங்கங்கள், மற்றும் ஆன்லைன் குழுக்களில் ஆற்றல் குறித்தும், போர்கள் குறித்தும் விழிப்புணர்வு கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யலாம். பணவீக்கத்தின் போது, இது போன்ற நெருக்கடி நிலை போது எப்படி பட்ஜெட் செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறலாம். எரிபொருள் சாராத வியாபாரங்களைச் செய்யவும், புதுப்பிக்கத் தக்க எரிசக்தியில் வியாபாரம் செய்யவும் திறன்களை வளர்க்க ஊக்குவிக்கலாம். எடுத்துக்காட்டாக, சூரிய அடுப்பு செய்து விற்கலாம்.
நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதிக கவனம் செலுத்த வலியுறுத்தலாம். சமூக சோலார் திட்டங்களை உருவாக்கலாம்.
முடிவாக
நண்பர்களே, 2026 மத்திய கிழக்கு நெருக்கடி ஒரு கடினமான உண்மையை நினைவூட்டுகிறது. நமது ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் நடப்பது உலகெங்கும் தமிழ் வீடுகளில் எதிரொலிக்கிறது. விலையேற்றமும், கடன் சுமையும், கூடுதல் வரி விதிப்பால் வரும் கஷ்டமும் உங்களையும் என்னையும் வெகுவாகப் பாதிக்கிறது. பல சிரமங்களை எதிர்கொள்ள வைக்கிறது.
ஆனால் நம்பிக்கை விடவேண்டாம். வரலாறு நமக்கு என்ன காட்டுகிறது? சிரமங்களை எதிர்கொள்ளும் மனித சமூகம் ஒற்றுமையுடன், புதிய சிந்தனையுடன், முற்போக்கு சிந்தனையுடன், போராடி வெற்றி பெற்று முன்னேறுவதையே வரலாறு நமக்கு காட்டுகிறது.
தமிழர்களாக நமக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எங்கு புலம் பெயர்ந்து போனாலும், மொழியைக் கட்டிக் காக்கிறோம். நம் பண்பாட்டை கட்டிக் காக்கிறோம். நெருக்கடிகளைச் சந்தித்து மீண்டும் மீண்டும் வெற்றிகரமாய் எழுகிறோம். அது போல இந்தத் தருணமும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது. யதார்த்தமாக செய்யவேண்டியது என்ன, கூட்டாக செய்ய வேண்டியது என்ன என்று உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய தருணம் இது. இயற்கையைச் சார்ந்த வாழ்வியல் முறையை, நம் தமிழர் பண்பாட்டை முன்னிருத்த வேண்டிய காலம் இது. சங்ககால தமிழரின் வாழ்வியல் முறையான திணையியல் வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டிய காலம் இது. அதற்கான உரையாடலைத் துவங்குவோம்.
நன்றி.
Comments