top of page

ஊதுகாய் - பாரம்பரிய விளையாட்டு 20

Updated: Jun 13


தேவையானப் பொருட்கள்: அதிக எண்ணிக்கையில் புளியங்கொட்டைகள்.

 

விளையாட்டு: நீங்களும் உங்கள் தங்கையும் விளையாடுவதாக வைத்துக்கொள்வோம். சாட் பூட் திரி போட்டு, யார் முதலில் ஊதுவது என்று முடிவு செய்யுங்கள். நீங்கள் முதலில் ஊதுவது என்று முடிவு ஆவதாக வைத்துக்கொள்வோம். மூன்றுமுறை புளியங்கொட்டை குவியலை ஊத வேண்டும். அதிலிருந்து காய்கள் சிதறி ஓடும். தனித்தனியாக உள்ள காய்களை, மற்ற காய்களை தொட்டுவிடாமல், எடுத்துக் கொள்ளலாம். அடுத்து உங்கள் தங்கை ஊதுவார். இப்படி மாறி மாறி ஊதி எடுத்துக்கொள்ள வேண்டும். யார் அதிகக் காய்களை எடுக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர் ஆவார்.

 

கூடுதல் தகவல்: வண்டி பசை செய்வதற்கு புளியங்கொட்டைகளைத் தான் பயன்படுத்துவர். போஸ்டர் ஒட்டுவதற்கும் புளியங்கொட்டைகளைக் கொண்டு செய்யப்படுகின்ற பசை தான் பயன்படுத்துவர். புளியங்கொட்டை அதிக மாவுச்சத்து (ஸ்டார்ச்) கொண்டது. துவர்ப்பாக இருக்கும். பிள்ளைகளுக்கு வயிற்றில் பூச்சி வந்து விட்டால் இதைக் கொடுப்பார்கள். புளியங்கொட்டைகளை வறுத்து இடிச்சி, தோலை நீக்கிவிட்டு, ஊறவைத்து, சிறிதளவு உப்பு போட்டு காலை உணவாகவும் உண்ணலாம்.  புளியங்கொட்டை, தாள் மற்றும் வெந்தயம் போட்டு அரைத்து சிறு பாத்திரங்களாக செய்யலாம். புளியமரம் தெற்கு அமெரிக்காவிலிருந்து வந்த மரம். தமிழகத்தில் கொடம்புளி என்ற புளிதான் இருந்தது.

 

பழமொழிகள்: தமிழில் புளி (tamarind) மற்றும் புளியங்காய் (tamarind fruit) ஆகியவை அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்கள் என்பதால், அவை தொடர்பான பழமொழிகள் (proverbs) மக்களின் அனுபவத்தையும் ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன. புளியின் புளிப்புத்தன்மை, அதன் பயன்பாடு, மற்றும் அதன் இயல்பு ஆகியவை பெரும்பாலும் உருவகமாக (metaphorically) பயன்படுத்தப்படுகின்றன.

 

மங்கும் காலத்தில் மாங்காய், பொங்கும் காலத்தில் புளி - நிறைய புளி காய்த்தால் அந்த வருடம் நல்ல மழைப் பெய்யும். நிறைய மாங்காய் காய்த்தால் அந்த வருடம் வறட்சியாக இருக்கும்.

 

புங்கமரம் புளியமரம் புண்ணியவான் வச்ச மரம்

அரசமரம் ஆலமரம் அரசாள்வான் வச்ச மரம்

ஒரு கணவன் மனைவிக்கிடையே சண்டை. கணவன் ஓடிப்போய் புங்கமரக்குச்சியை ஒடிக்கிறான். முடியவில்லை. புளியமரக்குச்சியை ஓடிக்கிறான். முடியவில்லை. கணவனுக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. பக்கத்தில் உள்ள அரசமரக்குச்சியை ஒடிக்கிறான். எளிதாக ஒடிக்க வருகிறது. மனைவியை அடிக்கிறான். ஆலமரக்குச்சியை ஒடிக்கிறான். அதுவும் எளிதாக ஒடிக்க வருகிறது. அதைக் கொண்டும் மனைவியை அடிக்கிறான். அடி வாங்கிய மனைவி புங்க மரத்தையும் புளிய மரத்தையும் வைத்த புண்ணியவான்களை வணங்குகிறாள். ஏனென்றால் அவைகளை எளிதாக ஒடிக்க முடியவில்லை. ஆனால் அரச மரத்தையும் ஆல மரத்தையும் வைத்த ஆட்களை திட்டுகிறாள். அவைகளை எளிதாக ஒடிக்க முடிந்தது. அதனால் மனைவி சொல்கிறாள்: ‘ புங்கமரம் புளியமரம் புண்ணியவான் வச்ச மரம்

அரசமரம் ஆலமரம் அரசாள்வான் வச்ச மரம்’ என்கிறாள்.

 

"புளி விழுங்கினவன் தண்ணீர் கேட்பானா?"- தவறு செய்தவன் அதை மறைக்க முயல்வான் அல்லது உதவி கேட்க மாட்டான். அதாவது, புளியின் புளிப்பை விழுங்கியவன் தண்ணீர் கேட்காமல் அமைதியாக இருப்பது போல, தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் மௌனமாக இருப்பவனைக் குறிக்கிறது. எ.கா: "அவன் திருடியது தெரிந்தும் பேசாமல் இருக்கிறான், புளி விழுங்கினவன் தண்ணீர் கேட்பானா?"

 

"புளியங்காய் மரத்தில் ஏறி விழுந்தது போல" - எளிதாகக் கிடைக்க வேண்டிய ஒன்றை கஷ்டப்பட்டு பெறுவது அல்லது தேவையில்லாத முயற்சி செய்வது. அதாவது, புளியங்காய் மரத்தடியில் கிடைக்கும் போது, மரத்தில் ஏறி விழுந்து அவதிப்படுவது போல—முட்டாள்தனமான முயற்சியைக் குறிக்கிறது. எ.கா: "அவன் பக்கத்து வீட்டில் கிடைக்கும் பொருளை தூரம் போய் வாங்கினான், புளியங்காய் மரத்தில் ஏறி விழுந்தது போல."

 

"புளி கரைத்தால் புழு உருண்டு வரும்" - ஒரு விஷயத்தை ஆராய்ந்தால் உண்மை வெளிப்படும். அதாவது, புளியை நீரில் கரைத்தால் அதில் உள்ள புழுக்கள் தெரிய வருவது போல, ஒரு பிரச்சினையை ஆராயும்போது மறைந்திருக்கும் உண்மைகள் வெளிவரும். எ.கா: "அவன் பேச்சை ஆராய்ந்தால் தான் உண்மை தெரியும், புளி கரைத்தால் புழு உருண்டு வரும்."

 

"காட்டுலே புலியும், வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்" - காட்டில் புலி எப்படி ஆபத்தானதோ, அதேபோல வீட்டில் புளி அதிகமாக உட்கொள்ளப்பட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது புளியின் புளிப்புத்தன்மையை உருவகமாகக் கொண்டு, எதையும் அளவுக்கு மீறினால் தீமை என்ற எச்சரிக்கையை வலியுறுத்துகிறது. 

 

"போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே" - ஒருமுறை போன நோயை (காய்ச்சல்) மீண்டும் புளி சாப்பிட்டு திரும்ப அழைக்காதே. இது புளி உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, காய்ச்சலை மீண்டும் வரவழைக்கும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page