top of page

வீதி நாடகம் - தேடல் முதல் நேற்று வரை

Updated: Dec 19, 2021



1982 ல் திருநெல்வேலி கிராம யாத்திரை, ஊட்டி வன யாத்திரை, கன்னியாகுமரி கடல் யாத்திரை.


1983ல் கொடைக்கானல் மனித உரிமை யாத்திரை, கீழப்பாட்டம் பயிற்சி என்று, யாத்திரைகள் மற்றும் பயிற்சிகளுக்குப் பிறகு பிரான்சிசும், தேடலில் இருந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கலை யாத்திரைகளும், பயிற்சிகளும் நடத்தினோம். நடத்திக் கொண்டு இருக்கிறோம். அதையெல்லாம் இங்கு குறிப்பிட்டால், “ போதும். போதும். போதும். லிஸ்ட் ரொம்ப பெருசா போய்ட்டு இருக்கு” என்று வடிவேலு பாணியில் நீங்கள் சொல்லிவிடுவீர்கள் என்பதால், வரலாறை சுருக்கிச் சொல்லிவிடுகிறேன். (இன்னொரு பதிவில் தேடலின் நீட்சியை சொல்கிறேன்.)


தஞ்சை பகுதியில், ‘மகிழம்பூ’ என்கிற கலைக்குழுவை உருவாக்கி, அதற்கு சில பயிற்சிகளைக் கொடுத்து, ‘வறட்சி கலையாத்திரை’ சென்றோம். மகிழம்பூ, வடிவில் சிறிதாக இருக்கும். ஆனால் வாசனை ஏழூருக்கு அடிக்கும். நம்மாழ்வார் தான் அதற்குப் பெயர் வைத்தது.


அடுத்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர் பகுதிகளில் இருந்த சமூக செயற்பாட்டு குழுக்கள் இணைந்து ‘சங்கிலி’ என்ற அமைப்பை வைத்திருந்தார்கள். அந்த குழுக்களில் உள்ள கலைஞர்களை இணைத்து, ‘காக்கா’ கலைக்குழு என்கிற கலைக்குழுவை உருவாக்கி, கும்பகோணம் பகுதியில் ‘விழிப்புணர்வு கலையாத்திரை’ நடத்தினோம்.


தொடர்ந்து தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதியில் பணி செய்த தன்னார்வ அமைப்புகள் இணைந்து ‘மருதம்’ என்கிற கூட்டமைப்பை வைத்திருந்தார்கள். அவர்களோடு இணைந்து ‘மனித நேய மாட்டுவண்டிப் பயணம்’ என்கிற 15 நாள் தொடர்ந்த ‘இயற்கை விவசாய விழிப்புணர்வு’ யாத்திரை நடத்தினோம்.

சென்னையைச் சேர்ந்த ROAD என்கிற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது உஸ்மான், சென்னையில் துவங்கி, கன்னியாகுமரி வந்து திரும்ப சென்னை செல்ல, வடிவமைத்து, ஜனநாயகம், சுற்றுச் சூழல் போன்ற கருத்துக்களில் நாடகம், பாடல்களை அமைத்து ‘சுதந்திரப் பயணம்’ ஒன்றை ஒருங்கிணைத்தார். அதற்கு தேடல் உறுதுணையாக இருந்தது.


திருச்சியைச் சேர்ந்த அந்தியோதயா என்கிற அமைப்பின் ஜெகந்நாதன், சுற்றுச்சூழல் கருத்துக்களை மையமாக வைத்து ‘பசுமைப் பயணம்’ ஒன்றை தமிழக அளவில் நடத்தினார். தேடல் பயிற்சி அளித்தது.


1986ல், திருச்சி, முத்தரசநல்லூரில் இருந்த Peoples Solidarity Association அமைப்பைச் சேர்ந்த ஜான் பீட்டர் முன்னெடுப்பில் துவங்கப்பட்ட Tamil Nadu Arts and Science Centre (TASC) அமைப்பில் திருவையாறு கலையாத்திரை, நாமக்கல் கலையாத்திரை, மதுரை கலையாத்திரை என, மக்களுக்கு ‘கலை மூலம் அறிவியலை’ கொண்டு செல்ல நடத்தப்பட்டது. தடைசெய்யப்பட்ட மருந்துகள், ஊடகங்களின் மேலாண்மை, நலவாழ்வு போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.


1987ல், TASC மூலமாக, நான் பாதல்சர்கார் வீட்டிற்குச் சென்று மூன்று மாதங்கள் தங்கியிருந்தது ஆகச்சிறந்த அனுபவம். சேவியர் என்கிற இளைஞரோடு கல்கத்தா போனேன். பாதல்சர்க்காரின் ARENA தியேட்டர் குழுவோடு பயணம். பாதல்சர்க்கார் முதலில் ஒரு கருவை நாடகக் குழுவினருக்குச் சொல்வார். நாடகக்குழுவினர் அதைச் சொந்தமாக நடிக்க முற்படுவர். அதிலிருந்து நாடக ஸ்கிரிப் உருவாகும். அவருடைய குழுவிற்கு பத்து நாட்கள் பயிற்சி கொடுத்தார். அதில் கலந்துக்கொண்டு அவருடைய குழுவோடு, கல்கத்தா கிராமங்களில் பயணித்து நாடகங்கள் போட்டது மறக்கமுடியாத அனுபவம்.


தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள செயற்பாட்டு குழுக்களை இணைத்து இயங்கிய SAM என்கிற அமைப்பின் தமிழகம் தழுவிய மாநாடுகளில் நாடகங்கள் போடப்பட்டன. அதில் குறிப்பாக, திண்டுக்கல் CEDA Trust அந்தோணிசாமி, பாலசுப்ரமணி, சிவப்பிரகாசம் ஆகியோரின் முன்னெடுப்பில், தமிழகத்தின் நீர் மேலாண்மைக்கு தனிப்பட்ட அமைச்சகம் தேவை என்பதை வலியுறுத்தும் வண்ணம், தமிழகம் தழுவிய யாத்திரை நிகழ்த்தப்பட்டது. கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் துவங்கி, சென்னை கடற்கரை காந்தி சிலையில் முடிந்தது.


தமிழக மரபுசார் நீர் மேலாண்மையில், மரபு சார் நெற்பயிர்கள் ஆளுயுரம் வளர்ந்தன. வயலிலும், வாய்க்காலிலும் நண்டிலிருந்து பல உயிர்களின் உயிர்மை இருந்தது. இப்பொழுது நவீன நீர் மேலாண்மையில் அவைகள் காணப்படவில்லை. நாட்டிலிருந்து நன்னீர், ஆறுகள் வழியாக கடலில் வீணாகப் போய் சேர்கின்றன என்கிற வாதத்திற்கு எதிராக, அவைகள் அப்படிப் போய்ச் சேர்ந்தால் தான், கடலில் உயிரனங்கள் வாழும் போன்ற கருத்துக்கள் நாடகங்கள் வாயிலாக வைக்கப்பட்டன.

நீர் வளங்கள் அழிந்தால் பண்பாடு அழியும் என்கிற நோக்கில் பல நாடங்களை போட்டுக்கொண்டு, கன்னியாகுமரியிலிருந்து மூன்று கலைக்குழுக்கள், மூன்று வழிகளில் யாத்திரை செய்து, சென்னை வந்தடைந்தது. ஆனந்து, செல்வி அவர்களின் ‘முரசு’ கலைக்குழு நாகர்கோயில், கோயமுத்தூர், நீலகிரி, சேலம், தருமபுரி என்று மேற்கு தொடர்ச்சி மலை வழியாகவும், மதிவாணன், லதா அவர்களின் ‘அரும்புகள்’ கலைக்குழு திருநெல்வேலி, மதுரை, திருச்சி என தமிழகத்தின் மையப்பகுதியான சமவெளிப்பகுதி வழியாகவும், சோக்கோ கலைக்கழு திருச்செந்தூர், நாகப்பட்டினம், கடலூர் என்று கடற்கரை வழியாகவும் கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேலாக பயணம் செய்தோம். (இன்று நீர் மேலாண்மைக்காகவே ஓர் அமைச்சகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.)


சென்னை ROAD நிறுவனம், MERG Trust, MASOS GUILD, ASSEFA PLAN SEED TRUST, நிறுவனத்திலிருந்து, மதுரை SIRD நிறுவனம் வரை பல தன்னார்வக்குழுக்களுக்கு நாடகப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.


1989-90களில் பிரான்சிஸ் தான் என்னை மதுரை சதங்கை கலைமையத்தில் சேர்த்துவிட்டார். சதங்கை மூலமாக மலேசியா சென்று மலேசிய இளைஞர்களுக்கு நாடகப் பயிற்சி வழங்கப்பட்டது.


1993-94 களில் CARITAS India வின் ஒருங்கிணைப்பில் Art for Recreation and Transformation (ART) என்ற அமைப்பின் மூலமாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிஸா, அஸ்ஸாம், மத்தியபிரதேசம், திரிபுரா போன்ற மாநிலங்களுக்குச் சென்று நாடகம் மற்றும் தகவல் தொடர்பு பயிற்சிகள் நடத்தப்பட்டன். CARITAS India நடத்திய Development Dynamics Course (DDC) என்கிற சமூக செயற்பாட்டாளர்களுக்கானப் பயிற்சியில் கலைப்பயிற்சி நடத்தப்பட்டது. அப்படி 25 பயிற்சிகளில், இந்தியா முழுவதிலுமிருந்து வந்திருந்த 1500 சமூக செயற்பாட்டாளர்களுக்கு வீதிநாடக உத்திகள் கடத்தப்பட்டன.

இராஜ மதிவாணன், மத்திய அரசின் நேரு யுவ கேந்திராவில் பணியேற்று, ஆயிரக்கணக்கில் கிராம இளைஞர்களை சந்தித்து அவர்களுக்கு, தன்னம்பிக்கை கொடுத்து, நாடகப்பயற்சி அளித்துள்ளார்.


சுரேஷ் தர்மா, Black Theatre என்கிற அமைப்பைத் துவங்கி, குழந்தைகள் உரிமைகள் முதல் அனைத்து சமூக நல பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து பல நாடகங்களை உருவாக்கி, பயிற்சிகள் நடத்தி, யாத்திரைகளில் பங்கெடுத்தார்.


1998 வாக்கில், National Education Group மூலமாக தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3000 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சந்தித்து, குழந்தை மையக் கல்வி பற்றி நாடகம் மற்றும் கலைப்பயிற்சி நடத்தப்பட்டது.


மதுரையில் PEEL அமைப்பின் சார்பில் Y.David ஐயா அவர்களின் ஒருங்கிணைப்பில் ‘சூடான பூமி’ (Global Warming) என்கிற அடிப்படையில் ஒரு திட்டம் நடைப்பெற்றது. அதன் விழிப்புணர்வுக்காக, SOCO Trust ன் கலைக்குழு சார்பாக நாடகப்பயிற்சிகள் நடத்தப்பட்டு, நாடகங்கள் போடப்பட்டன. அதில் சூடான பூமி என்கிற கருத்தை விட ‘சூடாக்குகிறோம் பூமியை’ (Warming the Globe) என்று, பழியை மனிதர்கள் மீது போட்டு நாடகங்கள் போட்டது, பல விவாதங்களுக்கிடையேயும், சிறப்பாகப் பார்க்கப்பட்டது.


2002ல் பிரான்ஸ், அல்பேனியா, இலங்கை, சிங்கப்பூர் சென்று நாடகம் மற்றும் கலைப்பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

சிவகாசியில் இருந்த போது, ASSEFA/PLAN அமைப்பின் மூலமாக எம். புதுப்பட்டியில் நாடகப்பயிற்சி கொடுத்த போது, பயிற்சி எடுத்த பாலசுப்ரமணியன் என்ற இளைஞர் இன்று ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ பாமயனாக நம்மிடைய மிளிர்ந்து வருகிறார்.


2004 வாக்கில் மலேசிய நாட்டின், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அழைப்பில், கிட்டத்தட்ட 2000 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு நாடகம் மற்றும் கலைப்பயிற்சி வழங்கப்பட்டது.


லேட் டோக் கல்லூரி, மீனாட்சி கல்லூரி, அருளானந்தர் கல்லூரி, Madurai Institute of Social Sciences, செந்தமிழ் கல்லூரி, மன்னர் கல்லூரி, தருமபுரி அரசு கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், போன்ற எண்ணற்ற பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நாடகப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

கன்னியாகுமரியில் உள்ள ‘கன்யா’ பெண்கள் அமைப்பு உட்பட பல பெண்கள் அமைப்புகளுக்கு நாடகப்பயிற்சிகள் நடத்தப்பட்டது. மதுரையில் முனைவர் அழகு அன்னாவி அவர்களின் முன்னெடுப்பில் நடத்தப்படும் ‘கூடல் கலைக்குழு’ விற்கு நாடகப் பயிற்சி மற்றும் பறை, ஒயில், கரகம், கும்மி போன்ற மரபுசார் கலைப்பயிற்சிகள் நடத்தப்பட்டன.


Indian People’s Theatre Association (IPTA) என்கிற அமைப்பின் மாநாட்டை, தமிழகத்தில், முதன் முறையாக கூடல் கலைக்குழு நடத்திய பொழுது நாடகம் மற்றும் கிராமியப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

SOCO Trust-ல், Culture and Communication Department இயக்குநராக 40 வருடகாலம் பணியாற்றிக்கொண்டே இவ்வளவு நாடகங்களை உருவாக்கவும், பயிற்சிகள் கொடுக்கவும், கலைக்குழுக்களை உருவாக்கவும், யாத்திரைகள் போகவும் SOCO Trust-ன் இயக்குநர் முகமது பாட்ஷா உறுதுணையாக இருந்தது பாராட்டத்தக்கது. 1982ல், தேடல் துவங்கி திருநெல்வேலி யாத்திரை சென்ற போது, பாட்ஷா நடத்திவந்த ‘ஆசிய நிஜங்கள்’ என்கிற பத்திரிக்கையில் ‘நிஜங்களைத் தேடிச் செல்லும் இளைஞர்கள்’ என்கிற கட்டுரையை எழுதி துவங்கிய அவரது ஆதரவு, இன்றளவும் நீடிப்பது பெருமைக்குரியது. (கோயமுத்தூரில் நிஜநாடக இயக்கம் நாடகம் நடத்திய பொழுது அறிமுகமான இராஜ மதிவாணன், பாட்ஷா அவர்களின் ஆசிய நிஜங்கள் பத்திரிக்கையில் கவிதைகள் எழுதி வந்ததால், வீதி நாடகத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்த விரும்பிய பிரான்சிஸை, முகமது பாட்ஷாவிடம் அறிமுகப்படுத்தி வைத்ததை இங்கு நினைவு கூற வேண்டி இருக்கிறது.)

தமிழக அளவில் TASOS என்கிற அமைப்பு, 32 பல்நோக்கு சமூக பணி மையங்களை ஒருங்கிணைத்து, ஆறு பகுதிகளில் நாடகப் பயிற்சிகளும், நாடக யாத்திரைகளும் நடத்தியது. அதில் முன்னணி ஒருங்கிணைப்பாளர்களும், பணியாளர்களும் கலந்துக்கொண்டனர். அதற்கு SOCO Trust லிருந்து பிரான்சிஸ் பயிற்சியாளராக இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடத்தப்பட்டது.


இந்த நேரத்தில், நம்மிடையே இருந்து, இப்படிப்பட்ட மனிதநேய முயற்சிகளுக்குத் தோள் கொடுத்து இன்றைக்கு காலத்தோடு கரைந்துள்ள நல்உள்ளங்களை இங்கு நினைவு கூர்கிறோம்.


நம்மாழ்வார், அந்தோணிசாமி, ஒய். டேவிட், சிவப்பிரகாசம், சுப்பு, சிவா சாந்தகுமார், முகமது உஸ்மான், பெரிய நாயகசாமி, அருட்சகோதரி ஜோஸ்பீன், மற்றும் சுரேஷ் தர்மா அவர்களுக்கு வீரவணக்கங்கள்.


*****


தமிழகத்தில் நிஜநாடக இயக்கம், பரிட்ஷா போன்ற முன்னெத்தி ஏர்கள், நாடகத்தை புராண கதைகளிலிருந்தும், மேடையின் அனைத்து பரிவாரங்களிலிருந்தும் விடுவித்து, சாதாரண மனிதர்களின் பிரச்னைகளைப் பேச, நவீன வடிவத்தை கொடுத்தது. அதிலிருந்து கற்றுக்கொண்டும்,


இடதுசாரி சிந்தனைகளை, தென்னிந்திய அளவில், சமுதாயா போன்ற வீதி நாடகக் குழுக்களின் வழி, கற்றுக்கொண்டும்,

இந்திய அளவில், பாதல்சர்க்கார் போன்ற ஆளுமைகளின் Third Theatre என்ற முற்றமேடை நாடகத்தின் கூறுகளைக் கற்றுக்கொண்டும்,


தேடல், 1982 தொடங்கி, பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் பிரச்னைகளை, எளிய வீதி நாடகம் வழி கிராமங்களுக்கு எடுத்துச்சென்று சரித்திரம் படைத்தது என்றால் மிகையாகாது.


அதைத் தொடர்ந்து பல வீதிநாடகங்கள். பல வீதிநாடகக் குழுக்கள். பல வீதி நாடகப்பட்டறைகள். பல வீதி நாடக கலையாத்திரைகள்.


எல்லாவற்றிற்கும் துவக்கம் தேடல். தேடலின் துவக்கம் பிரான்சிஸ்.


போன வாரம் அவரிடம் பேசினேன். பிரான்சிஸ் சொன்னார்.

“ நாடகம் இல்லேன்னா நான் இல்ல…”


***********

97 views1 comment

1 Comment


மறக்க முடியாத காலப் புத்தகத்தின் பக்கங்கள். விரைவான நெஞ்சைத் தொடும் பதிவு


Like
bottom of page