அந்தப்பள்ளியை தமிழ் மடம் என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். அதன் ஒரிஜினல் பெயர் ‘போன் செக்கூர்ஸ் பள்ளி’. Bon Secours சபை கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படுகிற பள்ளி. மேரிஸ் கார்னரில் இருந்த சேக்ரட் ஹார்ட் பள்ளி, வெளி மாநிலத்து கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படுவதாலும், போன் செக்கூர்ஸ் பள்ளி, தமிழ் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படுவதாலும், அந்தப் பள்ளிக்கு தமிழ் மடம் என்று பெயர் வந்திருக்கலாம்.
தமிழ் மடத்தில் தான் என்னை மூன்றாவது வகுப்பில் சேர்த்திருந்தார்கள். எங்கள் பள்ளியின் அருகில் தான் புகழ்பெற்ற வீரமாமுனிவர் முன்னின்று கட்டிய வியாகுலமாதா கோவில் இருக்கிறது.
1967ல் நான் மூன்றாம் வகுப்பில் (என் ஆறாவது வயதில்) அந்தப்பள்ளியில் சேர்ந்தேன். மேற்கே பார்த்தவாறு, அதாவது வியாகுலமாதா கோவிலைப் பார்த்தவாறு கன்னியாஸ்திரிகள் தங்குமிடம், கான்வென்ட் இருந்தது. அதை ஒட்டி பின்புறம் ஏழை மாணவர்கள் தங்குவதற்காம போர்டிங் இருக்கும். கான்வெட்டை ஒட்டி வடதென் புறமாக நான்கு வகுப்புகள் நடப்பது போல ஓர் ஓட்டுக் கட்டிடம் இருந்தது. அது சின்ன கட்டிடம். அதன் வடமூலையில் தான் என் வகுப்பு இருந்தது.
அந்த ஓட்டுக் கட்டிடத்தை ஒட்டி, கீழ மேல் புறமாக இன்னொரு ஒட்டுக் கட்டிடம் இருந்தது. அது பெரிய கட்டிடம். சின்ன கட்டிடத்தில் சின்ன வகுப்புகள். பெரிய கட்டிடத்தில் எட்டாம் வகுப்பு வரை பெரிய வகுப்புகள். எங்கள் சின்ன கட்டிடத்தின் நேர் எதிர்ப்புறம், கிழக்கே கழிவறையும் குடிநீருக்கான தொட்டியும் இருக்கும்.
பள்ளிக்கு கால்சட்டையும், சட்டையும் போட்டுக்கொண்டு, மஞ்சள் பையில் சிலேட்டும், சில நோட் புத்தகங்களும் எடுத்துப் போவோம். வாய்ப்பாடு புத்தகம் நிச்சயம் இருக்கும். வீட்டிலிருந்து கிளம்பி, நேராக நடந்து, ஆரோக்கியராஜை அழைத்துக்கொண்டு, இருதயபுரம் போஸ்ட் ஆபீஸ் வருவேன். நாஞ்சிக்கோட்டை ரோட்டை குறுக்கே கடந்து, பாஸ்கா மேடையருகே இறங்கி, அந்த மைதானத்தில் நடந்து, வியாகுல மாதா கோவிலின் முன்புறம் உள்ள கேட்டில் நுழைந்து வகுப்புக்குச் செல்வேன்.
மூன்றாம் வகுப்பு ஆசிரியையின் பெயர் பாக்கியம் டீச்சர். எப்பொழுதும் கையில் குச்சி வச்சிருப்பார். அவரைப்பார்த்தாலே பயம் தான். அவர் பெயரைச் சொன்னாலே பயம் தான். பள்ளியிலிருந்து கல்லூரி வரை நான் முதல் பெஞ்சில் தான் அமர்ந்திருப்பேன். பாக்கியம் டீச்சர் கண்டிப்பாக இருந்தாலும், பாடம் நன்றாக சொல்லிக் கொடுப்பார். இவர் பள்ளியின் பக்கத்தில் இருந்த பாத்திமா நகரிலிருந்து வருவார்.
நான்காம் வகுப்பு ஆசிரியை மனோன்மணி டீச்சர். இவர் நாஞ்சிக்கோட்டை ஊருக்கு முன்பு இருந்த ‘மறியல்’ என்கிற இடத்திலிருந்து வருவார். இவர் புன்சிரிப்புடன் பாடம் நடத்துவார். எங்களை பக்கத்தில் அழைத்து, தோளில் கையைப் போட்டு அன்புடன் பேசுவார். நான்காம் வகுப்பு, பெரிய கட்டிடத்தில் இருந்தது. அங்கு போனதும் ஏதோ உயர்ந்த இடத்திற்குப் போய்விட்டதாக உணர்ந்தேன்.
இடைவேளை நேரங்களில் ஓடிப்பிடித்து விளையாடுவோம். போன் செக்கூர்ஸ் கன்னியாஸ்திரிகள் தோட்டப் பராமரிப்பை நன்றாகச் செய்வார்கள். கட்டிடங்களின் அருகில் நல்ல செடிகளை வளர்த்திருந்தார்கள். அதில் ஒளிந்து பிடித்து விளையாடுவோம். பிற்காலத்தில் சின்ன ஓட்டு கட்டிடம் இருந்த இடத்தில் மூன்று நான்கு மாடிக்கட்டிடம் கட்டி உள்ளார்கள். அதேப் போல பெரிய ஒட்டு கட்டிடத்தையும் இடித்துவிட்டு மூன்று நான்கு மாடிக்கட்டிடம் கட்டி உள்ளார்கள்.
போன் செக்கூர்ஸ் மாணவர்கள் படிப்பில் மாத்திரம் அல்ல, ஒழுக்கத்திலும் பக்தியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். அதனால் கண்டிப்புடன் இருப்பார்கள். அப்பொழுது துறவி ஆடை அணிந்து, இடுப்பில் கயிற்றை கச்சையாக தொங்க விட்டிருப்பார்கள். கயிற்றின் இரு முனையிலும் பெரிய முடிச்சுகள் போடப்பட்டிருக்கும்.
மாணவர்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கயிற்றுக் கச்சையால் சிலரை அடிப்பதைப் பார்த்திருக்கிறேன். ‘சுள்’ ளென அடி வாங்கிய பிள்ளைகள் கதறுவார்கள். அவர்கள் திருந்த அந்த அடிகள் உதவியிருக்கக் கூடும் என அவர்கள் நினைத்திருக்கலாம்.
சில நேரம் பள்ளி கட்டிடங்களில் இடம் இல்லாமல், வியாகுலமாதா கோவில் உள்ளே சில வகுப்புகள் நடக்கும். மூன்றாம் வகுப்பையும், நான்காம் வகுப்பையும் அங்கு முடித்து விட்டு, மேரீஸ் கார்னர் அருகே, சேக்ரட் ஹார்ட் பள்ளியின் பின்புறம் உள்ள தூய அந்தோணியார் உயர்நிலைப்பள்ளிக்கு ஐந்தாம் வகுப்பில் அம்மா வந்து சேர்த்து விட்டார்கள். நான் பதினோராவது படித்து முடிக்கும் வரை, ஏழு வருடங்கள், அந்தப் பள்ளியில் தான் படித்தேன்.
அந்தப் பள்ளி என்னை பலவாறாக மாற்றியது.
*****
Comments