top of page

மதுரையில், தேடல் வீதி நாடக இயக்கம் தொடக்கம்

Updated: Dec 19, 2021


தஞ்சாவூர்.

வளம்பக்குடி கிராமம்.

1982. ஜனவரி மாதம்.

பொங்கல் நேரம்.


“ ஜான்! உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கு.”

“ யார்கிட்டேயிருந்து?”

“ யாரோ… பிரான்சிஸ்’ன்னு போட்டிருக்கு. மதுரையிலேர்ந்து.”

மதுரை பஸ் நிலையத்தில் இறங்கி RCPED என்கிற மக்கள் கல்வி மற்றும் வளர்ச்சிக்கான வளமையம் நோக்கி நடந்தேன். அண்ணன் சுரபிமணி அவர்கள் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தார். நான் போய் சேர்ந்த போது, பிரான்சிஸ் அங்கு காத்திருந்தார். அவருடன் சுப்புவும் இருந்தார். (பின்னாளில் SAND என்கிற தன்னார்வ அமைப்பை நடத்தி வந்தவர் சுப்பு.)


“ இவர் தான் இராஜ மதிவாணன். நிஜ நாடக இயக்கம் என்கிற அமைப்பில் உறுப்பினர். கோயமுத்தூரில் அவர்களது நாடகத்தைப் பார்த்தேன். நமது முயற்சிக்கு உதவி செய்ய முடியுமா? என்று கேட்டேன். வந்துவிட்டார்.” என்று பிரான்சிஸ் அறிமுகப்படுத்தினார்.


“ வணக்கம்” என்று சொல்லி மதியும் நானும் கை குலுக்கிக் கொண்டோம்.


காலை உணவு சாப்பிட்டோம்.


சற்று நேரத்தில் இன்னொருவர் வந்து எங்களோடு சேர்ந்துக் கொண்டார்.


“ இவர் தான் அல்போன்ஸ். கன்னியாகுமரியிலிருந்து வருகிறார். KK group என்று ஊட்டியில் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். என்னோடு பெங்களூரு பயிற்சியில் பங்கெடுத்துக் கொண்டார்.”


“ வணக்கம்” என்ற சொல்லி புன்னகையை பரிமாறிக் கொண்டோம்.

“ இது பிரபா…”

“ பிரபாவைத் தெரியும், MERG சுப்பு அண்ணா வைத்திருக்கும் Catherine Activity School-ல் சந்தித்திருக்கிறேன்.” கை குலுக்கல்.

தமிழகத்தில் வீதி நாடகத்தை எப்படி அறிமுகப்படுத்துவது? எப்படி குழுவாகச் செயல்படுவது என்று ஆலோசிக்கத்தான் இந்தக் கூட்டம். அவருடைய அனுபவத்தைப் பகிர்வதற்காக நிஜ நாடக இயக்கத்தைத் தோற்றுவித்தவரான ஐயா மு. ராமசாமி வந்திருந்தார். கூட்டம் தொடங்கியது. ஒவ்வொருவரும் அவரவர் கருத்தைக் கூறினார்கள். மு. ராமசாமி ஐயா அவர்கள், கல்லூரி வளாகங்களிலேயே இந்த நவீன நாடகங்களை போடுவது எவ்வளவு சிரமமாக இருக்கிறது என்பது பற்றியும், அதில் உள்ள சாதக பாதக அம்சங்களை சீர் தூக்கி பார்க்க வேண்டியதன் அவசியம் பற்றியும், அனுபவம் இல்லாமல் இப்படி நடவடிக்கைகளில் இறங்கும் போது உண்டாகும் சிக்கல்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.


மதிய உணவிற்கு களைந்தோம்.


சரியான தெளிவு ஏற்படவில்லை. மனதில் குழப்பம் இருந்தது. மதிய உணவை முடித்துவிட்டு, அவரவர்கள் பஸ் பிடித்து ஊர்களுக்குத் திரும்பலாம் என்கிற நிலைமைக்கு சூழல் வந்து கொண்டிருந்தது. சாப்பிடும் போதே பிரான்சிஸ் பேசினார்.

“ எதுக்கு குழப்பம்? என்ன தயக்கம்? என்ன சங்கடங்கள் வருதுன்னு போய் பார்த்தா தானே தெரியும். நான் தயார். யார் யார் வருகிறீர்கள்? “ எனக் கேட்டார். ஒருவர் ஒருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டோம்.

சரி! முயற்சி செய்து பார்த்துவிடுவோம். பிரான்சிஸ் அன்றைக்கு நம்பிக்கை கொடுக்க வில்லையென்றால், இனி நான் எழுதப் போகும் எந்த அனுபவமும் நடந்திருக்காது.


மதியம் கூடினோம்.

குழுவாகச் செயல்படுவது எனத் தீர்மானித்தோம். குழுவிற்கு பெயர் சூட்ட வெவ்வேறு பெயர்களை ஆலோசித்தோம். மக்களின் பிரச்னைகளுக்கு காரணங்களைத் தேடுகிறோம். அவைகளுக்கானத் தீர்வுகளை மக்களிடமே தேடுகிறோம். நமது வாழ்க்கையின் பொருளையும் இந்த செயல்பாட்டோடு சேர்ந்து தேடுகிறோம். அதனால் ‘தேடல்’ என வைக்கலாம் என நான் பரிந்துரைத்தேன்.


எல்லோரும் பாராட்டி, “நல்லாயிருக்கு…தேடல்’னே பேரு வச்சிடலாம் என ஒத்துக்கொண்டார்கள். உடனே பிரான்சிஸ் ‘தேடல்’ என்ற மூன்று எழுத்துக்களைக் கொண்டு, ஒரு மனிதன் கைகளை உயர்த்தியபடி ஓடுவதாக ஒரு படம் வரைந்தார். அதுவே குழுவின் லோகா’வானது. இராஜ மதிவாணன் குழுவுக்கானப் பாடலை எழுதத் துவங்கினார். அவ்வப்போது மற்றவர்களின் கருத்துக்களை வாங்கிக் கொண்டு தேடலின் அறிமுகப் பாலை எழுதி முடித்தார்.

“தேடித்தேடிப் பழகிப்போச்சுங்க - எங்க வாழ்க்கையெல்லாம்

தேடல் தேடும் வேலையாச்சுங்க

அம்மா அப்பா அன்பைத் தேடி

அறிவு வளர பள்ளி தேடி

பள்ளியிலே கல்வி தேடி - இப்படி, இப்படி

தேடித்தேடிப் பழகிப்போச்சுங்க” என்று பாடல் துவங்கும்.


1982 பிப்ரவரி மாதம் திருநெல்வேலியில் உள்ள ராஜவல்லிபுரத்தில் பத்து நாட்களுக்கு வீதி நாடக கிராம யாத்திரை போவது என முடிவெடுத்தோம். கூடியிருக்கிற (பிரான்சிஸ், சுப்பு, மதிவாணன், அல்போன்ஸ், பிரபா, ஜான் பிரிட்டோவாகிய நான்) ஆறு பேரும் ஆளுக்கொரு நபரை அழைத்து வருவது என முடிவெடுத்தோம்.


ஆனால் கையில் ஒரு பைசா இல்லை. அந்த யாத்திரை சாத்தியமாயிற்றா? நடந்தது என்றால் எப்படி?


*************


( தொடரும்...)

17 views0 comments
bottom of page