top of page

டெய்லர்

Updated: Oct 17

ree

 

காலால் தடக் தடக்’கென்று மிதித்துக் கொண்டிருந்த தையல் மிஷின்கள் இரண்டை, போன வருடம் தான் விற்று விட்டு, மேற்கொண்டு கடன் வாங்கி, கரண்ட்டில் ஓடும் மிஷினை வாங்கியிருந்தார் அவர். அவசரம் அவசரமாக ஒரு சட்டையைத் தைத்துக் கொண்டிருந்தார். மெஷின் ஓடும் மெல்லிய ஒலி கேட்டது. இருக்கிற ஒரே டியூப் லைட்டின் ஒலியில் குனிந்து தைத்துக் கொண்டிருந்தார். எதிரே ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் சற்றே கோபமாக உட்கார்ந்திருந்தார். அவரது பார்வை டெய்லர் மேலேயே இருந்தது. அவரைச் சட்டை செய்யாமல் டைலர் சட்டையைத் தைத்துக் கொண்டிருந்தார்.

 

நினைப்பு முழுவதும், சரிந்து விழுந்திருந்த கடையின் முன்கூரையின் மேலேயே இருந்தது டெய்லருக்கு. இரண்டு நாட்களுக்கு முன் ‘சட சட’வென பெய்த மழையில், முப்பது வருடத்திற்கு மேலிருந்த அந்தக் கூரை தடாலென விழுந்திருக்கிறது. நல்ல வேளை! அப்பொழுது யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை.

 

அந்த முன் கூரையை எடுத்துக் கட்ட வேண்டும். துணிகளைத் தைக்க நல்ல மேசை வாங்க வேண்டும். ஆறாவது படிக்கும் தன் மகள், வல்லம் ஏகௌரியம்மன் கோவில் திருவிழாவில் கேட்ட கழுத்து மணியை வாங்கித் தரவேண்டும். தையல் மிஷினை விற்ற இடத்திலிருந்து காசு வரவேண்டும். வந்தவுடன் இதையெல்லாம் செய்யவேண்டும்.

 

நினைப்பு வெவ்வேறு பக்கங்களில் போனாலும், கவனம் சட்டை மேலேயே இருந்தது. சின்னதும் பெரிதுமாய் இருந்த சாமி போட்டோக்களின் முன் வைக்கப்பட்டிருந்த ஊதுபத்திகளிலிருந்து நறுமணம் வந்துக் கொண்டிருந்தது. இது எல்லாமே சட்டைக்காகக் காத்திருக்கும் மனிதரை சாந்தப்படுத்தவில்லை. எதையும் பேசாமல் கோபமாகவே இருந்தார்.

 

அப்பொழுது டெய்லரின் நண்பர் கண்ணன் உள்ளே வந்தார். “என்ன மாப்ள.... நெத்தியல பிளாஸ்திரி?” என்று கேட்டுக் கொண்டே, கீழே கிடந்த தினத்தந்தி பேப்பரை மேய்ந்தார்.

 

நெத்தியில் பிளாஸ்திரி கதை தெரியவேண்டுமென்றால், நேற்று மாலை நடந்த சம்பவம் தெரிந்திருக்க வேண்டும்.

 

*********

 

உற்றுப் பார்த்தார்.

 

கடிகார முள் ஆறு மணியைத் தொட்டிருந்தது. உடனே தையற் மிஷினிலிருந்து எழுந்தார். பாதி சட்டை மிஷினிலேயே தொங்கிக் கொண்டிருந்தது. அன்றைக்கு ஏழு மணிக்கு வந்து சட்டையை வாங்கிக் கொள்கிறேன் என்று, போன ஞாயிற்றுக் கிழமையேச் சொல்லிப் போயிருந்தார் அந்தப் பெரியவர். “ம்ஹூம்!….அத அப்பறம் பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவசரம் அவசரமாகக் கடையை விட்டு வெளியே வந்தார். கடையைச் சாத்தவில்லை. ஆஸ்பெஸ்டாஸ் முன் கூரை ஒரு பக்கம் சாய்ந்து விழுந்திருந்தது. அதில் குனிந்து வந்து, எதிரே சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சைக்கிளை ‘படக்’ கென்று இழுத்தார். ரோட்டுக்கு எடுத்து வந்து, ஏறி உட்கார்ந்து, ‘சலக் சலக்’ கென்று மிதிக்க ஆரம்பித்தார். இன்னும் நான்கு நிமிடங்கள் ஓட்டினால் ‘அந்தக்’ கடைக்குப் போய்விடலாம். ஆர்வத்தோடு மிதித்தார்.

 

நெற்றியில் பட்டை. அதன் நடுவே சிகப்புக் குங்குமம். முகம் முழுக்க கறுப்பும் வெள்ளையுமாய் தாடி. ஓடிசலான உடம்பு. இறுக்கமான ஒரு சட்டை. கொஞ்சம் அழுக்கேறிய பேண்ட். தீர்க்கமானக் கண்கள். எதிர் காற்றில் முடி பறந்துக் கொண்டிருந்தது.

 

சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தார். இருந்தது. இதோ கடை வந்துவிட்டது.

 

‘சொர்க்கம்’ என்று எழுதியிருந்த பெயர்ப் பலகையில் பள பளவென லைட்டுகள் தொங்கின. என்றும் போல இன்றும் கூட்டம் அதிகம் தான். கம்பிகளுக்குள் கையை விட்டு பணத்தை நீட்டியபடி பத்துப் பதினைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். எதிரே இருந்த வேப்பமரத்தடியில் சைக்கிளை நிறுத்தி விட்டு கூட்டத்தில் போய் கலந்துக் கொண்டார். ஓர் இடுக்கு இருந்தது. அதில் கையை விட்டு ‘சின்னது’ என்று சத்தமாகச் சொன்னார். கூடவே சுண்டு விரலை தூக்கிக் காண்பித்தார். ஆட்காட்டி விரலைத் தூக்கியிருந்தால் “ஆஃப்”. சுண்டு விரல் என்றால் “குவார்ட்டர்”. சின்னது என்று சொன்னது காதில் விழாவிட்டாலும், தூக்கியிருக்கும் சுண்டு விரலைப் பார்த்து அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற திருப்தியில் கூட்டத்துக்கிடையே குனிந்தபடியே கையை நீட்டிக் கொண்டிருந்தார்.

 

நினைப்பு கடைப் பக்கம் போனது. கடையைத் திறந்து போட்டு வந்து விட்டோம். கல்லாப் பெட்டி திறந்து தான் இருந்தது. ஆனால் பரவாயில்லை. அதில் தான் ஒன்றும் இல்லையே. சட்டைக்காரர் வந்து உட்கார்ந்திருப்பாரோ? என்ன சொல்லி சமாளிக்கலாம். இன்றைக்கு முழுக்க கரண்ட் இல்லையென்று சொல்லி விடலாமா? வேண்டாம். உடம்பு சரியில்லை என்று சொல்லி விடுவோம். நாளைக்கு முதல் வேலையாக முடித்துக் கொடுப்பது என்று தலையில் சத்தியம் செய்துவிடலாம். என்றெல்லாம் யோசித்துக் கொண்டே கையை நீட்டியபடி இருந்தார். தட்டையான சிறிய பாட்டில் ஒன்று அவர் கையில் திணிக்கப்பட்டது. கையில் இருந்த காசைப் பிடுங்கிக் கொண்டார்கள். இன்னொருவர் தொந்தியையும், மற்றொருவர் நெஞ்சையும், தொடாமல் அவர் கையை எடுக்கலாம் என்று இழுத்தால்…ம்ஹூம்! நடக்கவில்லை. ஆனால் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

 

மஞ்சுளா! மஞ்சுளாவைப் பார்க்காமல் எப்படி போவது?

 

“என்ன டெய்லரே! துணி மணி தக்கிறியோ இல்லையோ….ஆறு மணி ஆனா ஆஐராயிடுற… வழக்கம்போல டம்ளரும், தண்ணி பாக்கெட்டுமா?” இடுப்பில் செருகி இருந்த முந்தானையைச் சரிசெய்துக் கொண்டே, பார்வையில் கொஞ்சம் காந்தத்தைக் கலந்துக் கேட்டாள்.

 

“ஒனக்கென்னம்மா…வெளக்குல வந்து விழற விட்டிலாட்டாம் நாங்க வந்து விழுறோம். அதுல ஓன் வயித்த கழுவுற….டம்ளர், தண்ணி பாக்கெட்டோட… சின்ன வெங்காயம் போட்டு செமயா நெத்திலி ஒன்னு வறுத்திருப்பியே…அதுல பத்து ரூபாய்க்கு குடு.” பக்கத்தில் இருந்த கல்லில் உட்கார்ந்தார் டெய்லர்.

 

“அது என்னவோ வாஸ்தவம் தான்யா!…ஒன்ன மாதிரி ஆளுங்க வரலன்னா…என் மவளுக்கு பள்ளிக்கூட பீசு கட்டமுடியுமா நானு…” நெத்திலிய எடுத்து சின்ன வாழை இலையில வைத்துக் கொடுத்தாள் மஞ்சுளா.

 

ஒரு தடவைப் பார்த்தால் மறு தடவைப் பார்க்கத் தூண்டும் முகம் மஞ்சுளாவினுடையது. எப்பொழுதும் தலை வாரி, மல்லிகைப் பூ வைத்து, நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்திருப்பாள். முப்பந்தைந்து நாற்பது வயது தான் இருக்கும். வலது ஓரத்தில் இருந்த தெத்துப் பல் கூடுதல் அழகு. சாதாரணமாகப் பேசும் போதே கன்னத்தில் குழி விழுவதால், அதற்காகவே அவளிடம் பேச்சுக் கொடுப்பது அங்கு வருபவர்களின் வழக்கம்.

 

டம்ளரை ஓரிடத்தில் வைத்து, வலது கையால் பாட்டிலைத் திருகி அதை ஊற்றி, வாயில் வைத்துப் பிய்த்த தண்ணி பாக்கெட்டிலிருந்து இடது கையால் டம்ளரில் சரியாகப் பீய்த்து அடிப்பது ஒரு கலை. பாட்டிலை மூடி வைத்து விட்டு, ஒரே மடக்கில் வாயில் இறக்கி விட்டு, நெத்திலியை வைத்துக் கடித்தால்….சொர்க்கம் தான். டெய்லருக்கு அது கை வந்த கலை.

 

“முந்தா நாள் பேய் மாதிரி மழை பேஞ்சிது பாத்தியா?” என்று மஞ்சுளா தான் பேச்சைத் துவக்கினாள்.

 

“அத ஏன் கேக்கற! மழையில, கடை முன்னாடி கூரை பிச்சிகிட்டு சாஞ்சிடுச்சி....அத தூக்கி வச்சி கட்டனும்னா...ஐயாயிரம் ஆறாயிரம் கேக்கறான்…எல்லாத்தையும் மாத்தனுமாம்” ஒரு மடக்கு குடித்து விட்டு, சின்ன நெத்திலி ஒன்ன எடுத்து வாயில் போட்டார்.

 

அப்பொழுது திடீரென ஒரு சத்தம். ஒருவர் பாட்டிலைத் தூக்கி இன்னொருவர் மேல் எறிந்தார். அது அவரது நெற்றிப் பொட்டில் அடித்து, இரத்தம் வெளிவர, அவர் பக்கத்தில் இருந்த இரும்பு நாற்காலியை எடுத்து பாட்டில் எறிந்தவர் மேல் வீசினார். அது கோணக்க மாணக்கப் போய் எங்கேயோ விழுந்தது. இதிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம். பாட்டிலை வீசியவர் இப்பொழுது தான் குடிக்க வந்தவர். குறி தப்பவில்லை. ஆனால் நாற்காலியை எறிந்தவரோ ஏற்கனவே குடித்துவிட்டு போதையில் இருப்பவர். நாற்காலி தள்ளாடி போய் விழுந்தது

 

“வந்தமா…குடிச்சமா…போனமா…ன்னு இல்லாம இவன்க பண்ற சேட்டைய பாரு” என்று அலுத்துக் கொண்டாள் மஞ்சுளா.

 

“இரு…இந்த ரஷ்யா உக்ரைன் சண்டைய நான் நிறுத்திட்டு வாரேன்..” என்று எழுந்து ஸ்டெடியாக நிற்க முயன்ற டெய்லர் நேராக இரத்தம் ஒழுகும் நபரிடம் கொஞ்சம் குளறியபடியேச் சென்றார்.

 

அடிபட்ட நபர் நழுவும் வேட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே, “மவனே! மறுபடி கள்ளுக்கடைய தொறங்கடா’ன்னு சொன்னா பாட்டில தூக்கி வீசுவியா? இதக் குடிச்சி கொடலு வேகுதுடா…” என்று கத்தினார். வேட்டி எல்லாம் ரத்தம்.

 

“யோவ்! அரசாங்கத்துக்கு எதிரா நீ செயல்படுறியா?...வேற வருமானத்துக்கு அரசாங்கம் என்ன செய்யும்?” என்று கொதித்தார் வெத்து பாட்டிலைத் தூக்கி எறிந்து விட்டு, தன் பாட்டிலிலிருந்து அநாயசமாகக் குடித்த இளம் குடிகாரர்.

 

டெய்லர் இரண்டு பேரையும் விலக்கினார்.

 

“அண்ணா! அண்ணா! சண்டையே நமக்கு ஆகாதுண்ணா. வன்முறை கூடாதுங்கண்ணா. மனிதர்கள் மனிதர்களாக வாழனும்ணா, மனித நேய பண்பாடு ரொம்ப முக்கி..”

 

“போடா…கம்னாட்டி….” என்று சொல்லி இரண்டு பேருமே டெய்லரைத் தள்ளி விட்டார்கள். தடுமாறி கீழே விழும் போது, நாற்காலி நுனி டெய்லரின் நெற்றியில் பட….

 

 

********

நெத்தியில என்ன பிளாஸ்திரி என்று கேட்ட கண்ணனுக்கு பதில் சொன்னார் டெய்லர்.

 

“அத யான் கேக்குறீங்க? நேத்து நான் ஒரு பெரிய களேபரத்தையே நிறுத்திட்டேன். இல்லாட்டி ‘வெட்டு குத்து’ன்னு போயிருக்கும்....நான் இருந்து தடுத்ததால பல பேரு இன்னக்கி உயிரோடு திரியிறானுங்க...பஞ்சாயத்து பண்ணி சமாதானம் செஞ்சா....இதெல்லாம் சகஜம் தான!…என்ன சொல்றீங்க?.... ஒரு நினைவுச் சின்னம் தான் கண்ணா” என்று தலையைத் தூக்காமலேயே, சட்டையைத் தைத்துக் கொண்டே சொன்னார் டெய்லர்.

 

இருந்தாலும் ஒரே ஒரு தடவை, தைத்த சட்டைக்காகக் காத்திருக்கும் அந்தப் பெரியவரை மின்னல் வேகத்தில் பார்த்ததைக் கண்ணன் பார்க்கவில்லை. ஆனால் அந்தப் பெரியவர் பார்த்தார்.  அவருக்கு வார்த்தைகள் முட்டிக் கொண்டு வந்தன.

 

“ஆமா! ஊருக்குப் போகனும். சட்டையை முடித்துக்குடுயா’ன்னு படிச்சிப் படிச்சச் சொன்னேன். கேக்கல. சண்டைய நிறுத்துனாராம். சமாதானம் பண்ணுனாராம்…கதை உடுறான் பாரு” என்ற மிகப் பெரிய வசனத்தை, ஒரு சின்ன கண்ணசைவில் காண்பித்தார் அந்தப் பெரியவர். டெய்லருக்கு அது புரிந்து எச்சிலை விழுங்கிக் கொண்டார். நல்லவேளை! கண்ணன் இந்த நாடகத்தைப் பார்க்கவில்லை. பேச்சை மாற்றலாம் என்று டெய்லர், “ பையனைப் புதுப் பள்ளிக்கோடத்துல சேக்கனுமின்னு சொன்னியே! சேத்துட்டியா கண்ணா?” என்று கேட்டார்.

 

பேப்பரில் முழுகிய கண்ணன் அதிலிருந்து எழாமலேயே, “சேத்துட்டேன் மாப்ள. இன்னும் மூணு வாரத்துல பள்ளிக்கூடம் தொடங்கிடும்” என்றார்.

 

சட்டை ஒருவாறு தைத்து முடித்தாகிவிட்டது. எடுத்து உதறி அயர்ன் பண்ணப் போனார் டெய்லர். அப்பொழுது, கண்ணன், “இந்தப் பகுதியிலேயே நீ தாம்பா, சொன்னாச் சொன்ன டயத்துக்கு துணியை தச்சி குடுப்ப…” என்று எதேச்சையாகச் சொன்னார்.

 

அப்பொழுது அந்தப் பெரியவர் எதையும் பேசாமல், கண்ணில் தேக்கி வைத்திருந்த ரௌத்ரம் முழுவதையும் டெய்லர் மீது வீசினார். இப்பொழுது எதையும் பேசி கெடுத்து விடக்கூடாது என்று தான் டெய்லர் நினைத்தார். ஆனால் கண்ணன் விடவில்லை. “என்ன நா சொல்றது? ஒவ்வொருத்தர் நேரமும் முக்கியம் இல்லயா…வாக்கு தானய வாழ்க்கை…” என்றார். ஆமா என்று வெறும் தலையை மட்டும் அசைத்து வைத்துவிட்டு அயர்ன் பண்ணினார் டெய்லர்.

 

“என்ன பெரியவரே! நான் சொல்றது கரெக்ட் தானே?” என்று கண்ணன் கேட்டதும், தொண்டை வரை அடைத்து வைத்திருந்த வார்த்தைகளைக் கொட்ட எத்தனித்த பெரியவரிடம் “இந்தாங்க சட்டை…” என்று டெய்லர் சொல்லித் தடுக்க, சூடான பார்வையை மட்டும் கக்கி விட்டு, காசைக் கொடுத்து விட்டு நகர்ந்தார்.

 

கண்ணன் கிளம்பத் தயாரானார்.

 

“எங்க கெளம்பிட்ட?”

 

“பையனுக்கு யூனிஃபார்ம் வாங்கனும். ஃபீஸெல்லாம் கட்டிட்டேன். யூனிஃபார்முக்கு தோது பண்ணத்தான் கெளம்புனேன்…மச்சான் ஒருத்தர் வரச்சொன்னாரு…என்ன யோகமுன்னு பாத்துட்டு வாரேன்…”

 

“ இரு போகலாம்…டீ சாப்டு ஒரு தம் போட்டு போவலாம்.. என்ன அவசரம்?” என்று சொல்லிக்கொண்டே டைலர், அந்தப் பெரியவர் கொடுத்த காசை சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

 

இருவரும் தெரு முக்கத்தில் இருந்த நாயர் கடைக்குச் சென்றார்கள்.

 

“ஒனக்கென்னப்பா.. ஒண்டிக்கட்டை வாழ்க்கை…குடும்பம் இருந்தாலும் நீ சந்நியாசி மாதிரி தான். கடையே கெதியா இருப்ப…” கண்ணன் டீயை உறிஞ்சுக் கொண்டே சொன்னார்.

 

“இருக்கறது ஒரே வாழ்க்கை…அதை சந்தோஷமா வாழனும்…நீங்க வாழறது எல்லாம் ஒரு வாழ்க்கையா?….” என்று கேட்டுக் கொண்டே டைலர் டீயை ஒரு கையில் குடித்துக் கொண்டே, சிகரெட்டை இன்னொரு கையால் ஊதினார்.

 

“ஆபிஸ்ல வாங்குன கடனுக்கு சம்பளத்த பிடிச்சிடுறாங்க. வீட்டுக்குப் போனா, பொண்டாட்டி அது இல்ல இது இல்ல’ன்னு பஞ்சப் பாட்டு பாடுறா…மூணு புள்ளங்க…பையன இங்கிலீஷ் மீடியத்துல சேக்கனும்னு அடம்…லோ லோ’ன்னு அலையறேன்….”கண்ணன் டீ கிளாஸை நாயரிடம் கொடுத்தார்.

 

இருவரும் பேசிக் கொண்டே டெய்லர் கடைக்கு வந்தனர். டெய்லரிங் கடையின் முன் ஒரு வில்வ மரம் இருந்தது. டெய்லர் இரண்டு வில்வ இலைகளைப் பறித்து, சிவனுக்கு வைத்து விட்டு, “இப்படி வந்து உக்காரு. மரத்தைப் பாத்தியா? அந்த மரத்தோட பேசி இருக்கியா? நீ பேசுனா அது பேசும். அந்த அறிவு உங்களுக்கு இல்ல…இயற்கையோட இயற்கையா வாழறது ஒங்களுக்குத் தெரியல… நீங்க எல்லாம் என்ன சாப்டுறீங்கன்னாவது உங்களுக்குத் தெரியுமா? என்ன உடை உடுத்துறீங்கன்னாவது தெரியுமா? எவனோ ஒருத்தன் ஒனக்காக முடிவு பண்றான். இன்னொருத்தனுக்கு அடிமையா இருக்கோம்னு தெரியாமயே சினிமாக்காரன் பின்னாடியும், அரசியல் வாதி பின்னாடியும், சாமியார்ங்க பின்னாடியும் திரியிறீங்க…”

 

“அப்பா! ஞானி மாதிரி பேசாத…வூட்டு டார்ச்சர்னு வெளிய வந்தா…நீ வேற டார்ச்சர் பண்ணாத…”

 

“ ம்! அதான்!… யோசிக்கவே பயப்படுற சோம்பேறி கூட்டமா சமூகம் வளர்ந்துடுச்சு…” என்று சொல்லிக் கொண்டே, “அம்பது அறுபது வருசத்துக்கு முன்னாடி காட்டன் துணி தான் இருந்துச்சி… பாலியஸ்டர், லினன், சில்க், வுல்லன்’னு சிந்தெடிக் வகையறா வந்துச்சி…எல்லாத்துலயும் இரசாயனம்… இது ஒரு ஜிகினா வாழ்க்கை…ஒங்கள மாத்த முடியாது…” என்று தொடர்ந்தார்.

 

“நானும் ஒன்ன சாதாரண டெய்லர்ன்னு நெனச்சேன்…ஆனா பேசதறதெல்லாம் பெரிய தத்துவமா இருக்கய்யா…எப்புடி?”

 

“அப்படி கேளு…” என்று சொல்லிவிட்டு ஒரு பிளவுஸ் பீஸை எடுத்தார். நிதானமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

 

“ நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ எங்கத் தெருவுல டெக்ஸோ’ன்னு ஒருத்தர் இருந்தாரு.”

 

“அது என்னய்யா டெக்ஸோ’ன்னு பேரு…”

 

“அவர் பேரு என்னவோ தெரியல. ஆனா அவருக்கு பட்டப் பேரு டெக்ஸோ…அவர் மதுரையில ய கல்லூரியில படிக்கும் போது, கல்ச்சுரல் எக்சேன்ஜ்ல வந்த வெளிநாட்டுப் பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாரு. அவங்களுக்கு புள்ள இல்ல. நான் தான் அவங்களுக்குப் புள்ள…அவங்க இல்லாட்டி நான் இல்ல…”

 

“ஓ! அது தான் கடைக்குப் பேரு டெக்ஸோ டெய்லரிங்’கா?”

 

“ டெக்ஸோ’வோட மனைவி வெளிநாட்டுக்குப் போனாங்க. அப்போ ஜெர்மனியில இருக்கற ஒரு யுனிவர்சிட்டியில ஆராய்ச்சி பண்ண எனக்கு மாசம் சம்பளம் குடுத்தாங்க… சைவம், வைணவம், ஜைனம், பௌத்தம், கிராமத்து சிறு தெய்வங்கள்’னு எல்லாத்தையும் பத்தி நூற்கள்ல தரவுகள் எடுத்துக் குடுக்கனும். அப்பத்தான் மேட்டுக்குடி மக்களோட தெய்வங்கள் பெரிய பெரிய கோயில்கள்ல படுத்துகிட்டு ஜாலியா இருக்கறதையும், ஏழைப்பட்ட மக்களோட தெய்வங்கள் கூரை கூட இல்லாம மழையிலயும் வெயில்லயும் நனையறது பத்தி படிச்சேன். நா கேக்கறன்? கடவுள்’னு ஒருத்தர் உனக்கு எதுக்கு தேவ? பயம். என்ன ஆயிடுமோ’ன்னு பயம். அதுக்கு அவர் முன்னாடி கை கூப்பி நிக்கற... உள்ளார உணர்ந்து கும்புடுறியா? இல்ல...”

 

“சாமி! அறுக்காத…போனவன நிறுத்தி…..டீ வாங்கிக் குடுத்து……..ஓன் சித்தாந்தத்தையும் வேதாந்தத்தை என்னுகிட்ட அவுத்த வுடாத…நா வாரேன்…”என்று சொல்லிவிட்டு கண்ணன் கிளம்பிவிட்டார்.

 

கண்ணன் போனதும், மொபைலில் ஏதோ ஒரு சாமி பாட்டை போட்டு, ஸ்பீக்கரில் வைத்துக் கொண்டு அடுத்து பிளவுஸ் பீஸ் ஒன்றை எடுத்தார். ஸ்கேல் இருந்தது. சாக் கட்டியைக் காணவில்லை. டிராயரைத் திறந்தார். அதில் போபின், எலாஸ்டிக், கத்திரிக்கோல், பட்டன்கள், என்று பலப் பொருட்கள் இருந்தன. ஆனால் சாக்பீஸ் கட்டி காணவில்லை.

 

அப்பொழுது இரண்டு பேர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து இறங்கினர்.

 

அதிலிருந்து இறங்கிய ஒரு பெண், “என்ன டெய்லரே! குனிஞ்சி வரவேண்டியிருக்கு. முன் ஷீட்டை சரி பண்ணலயா? யார் தலையியல விழப் போகுதோ..பயந்துகிட்டே உள்ள நுழைய வேண்டியிருக்கு...” என்று சொல்லிக் கொண்டே, பையிலிருந்து சிலத் துணிகளை எடுத்துக் கொடுத்தார். “அடுத்த வாரம் தான் கெடைக்கும்…பரவாயில்லையா?” என்றார் டெய்லர். அதற்குள் வண்டி ஓட்டிவந்த ஆள் உள்ளே நுழைந்தார். “எல்லாம் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டா இருக்கு…ஒரு பக்கம் தொங்கிகிட்டு இருக்கு… சீக்கிரம் சரி பண்ணுங்க ஜி” என்று சொன்னார். எல்லாவற்றுக்கும் ஒரு சிரிப்பைப் பதிலாகக் கொடுத்து விட்டு, “செய்ய வேண்டியது தான்… செஞ்சிடலாம்” என்று சொன்னார் டைலர். அளவுத் துணியை வாங்கிக் கொள்ள இருவரும் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டார்கள்.

 

மறுபடி தேடத்துவங்கினார். சாக்பீஸ் கிடைக்கவில்லை. எங்கே போய் தொலைஞ்சது? சரி...மணி ஆறாக இன்னும் அரை மணி நேரம் இருக்கு என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே கண்ணன் வந்துவிட்டார்.

 

“நல்ல வேளை! மச்சான் இருந்தார். அடுத்த மாசம் கண்டிப்பா குடுத்துடனும்னு சொல்லி யூனிஃபார்ம் துணி வாங்க பணம் குடுத்தார். கலெக்டர் ஆபீஸ்ல தான் வேலை. மேசைக்கு மேல, மேசைக்கு கீழ, மேசைக்கு சைடுல’ன்னு….”கண்ணன் தொடர்வதற்குள்

 

“ஏன்யா! கஷ்ட நேரத்துல உதவி செஞ்சிருக்கான் ஒரு மனுஷன். அப்பயும் கம்ப்ளெய்ண்டா? இந்த சமூகம் ஒரு கம்ப்ளைய்ண்ட் சமூகமா மாறிடுச்சி” என டைலர் சொன்னார்.

 

“அப்பா! காந்தி மகானே!.. ஆரம்பிக்காதப்பா ஓன் பிரசங்கத்தை…இந்தா அளவு கால்சட்டை, மேல்சட்டை…யூனிஃபார்ம எப்ப குடுப்ப?”

 

“ எல்லாம் அடுத்த வாரம் தான்…”

 

மணி ஆறாகி விட்டது. சைக்கிள் அந்தக் கடைக்குப் பறந்தது.

 

*********

 

“அப்பா! அந்த ரேவதி இல்ல…அவ ஒரு நெக்லேஸ் போட்டுகிட்டு பள்ளிகோடத்துக்கு வந்தாப்பா…சிவப்பு கலர்ல சூப்பரா இருந்துச்சி..அவங்க அம்மா ஆரம் போடுவாங்களாம்….அவங்க சித்தி அட்டிகை போடுவாங்களாம்…ரொம்ப பீத்திக்காறாப்பா….” பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த டெய்லரின் மகள், கண்கள் அகல விரிய விரிய சொன்னாள்.

 

“அப்பா ஒனக்கு மணி வாங்கித் தாரேன்னு சொல்லியிருக்காருல்ல… சொன்னா சொன்னபடி வாங்கித் தருவாரு….நீ போயி புத்தக மூட்டையைத் தூக்கிட்டு வா கண்ணு” என்று டெய்லரின் மனைவி அவளை அமைதிப் படுத்தினாள்.

 

ஆட்டோ வந்ததும் அதில் பிள்ளையை ஏற்றிவிட்டு, பல்லு விளக்கிக் கொண்டிருந்த கணவனிடம் வந்து, “பிள்ளை தூக்கத்துல கூட கழுத்துல கைய வச்சிகிட்டே தூங்கறா…ஒங்களுக்குப் பல கவலை இருக்கும்….அதப் பத்திக் கவலைப்படாம, நீங்க கடைக்குப் போங்க…ஃப்ளாஸ்க்ல கேப்பை கஞ்சி ஊத்தி வச்சிருக்கேன்…இட்லி கட்டி வச்சிருக்கேன்…சட்னியை தனியா வச்சிருக்கேன்…தனியா மோர் சோறும் வச்சிருக்கேன்” என்று சொன்னாள் டெய்லரின் மனைவி.

 

எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டி விட்டு, சைக்கிளை எடுத்துக் கொண்டு கடையை நோக்கி அழுத்தினார். மனம் பாரமாக இருந்தது.

 

கடையை நெருங்கும் போதே, காலை 9 மணிக்கு, எப்பொழுதும் ஆஜராகும் செல்வமணி அங்கு நின்று கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு, ஒரு புன்னகையுடன், சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு, விழுந்து கிடந்த முன் கூரையின் ஒரு பக்கமாக நுழைந்து, பூட்டைத் திறந்து, ஷட்டரைத் தூக்கினார். ‘இது வரை கடையைப் பாதுகாத்தேன். இனி உன் பொறுப்பு’ என்று சொல்வது போல் இருந்தது, எண்ணெய் போடப்படாத ஷட்டர் மேலே ஏறும் போது வந்த வினோத ஒலி.

 

டெய்லரைத் தொடர்ந்து செல்வமணியும் கடைக்குள் வந்தார்.

 

டெய்லர் இளைஞராக இருந்த போது வரைந்த மாடர்ன் ஓவியங்கள் சில மாட்டப்பட்டிருந்தன. அந்த ஓவியங்களுக்குச் சுற்றி பத்துப் பதினைந்து சாமிப் படங்கள் சின்னதும் பெரிதுமாக இருந்தன.

 

டெய்லர் பூச்சந்தையில் வாங்கி வந்த மல்லிகைச் சரத்தை கொஞ்சம் கொஞ்சம் கிள்ளி ஒவ்வொரு சாமிக்கும் வைத்தார். பக்கத்து வீட்டின் வெளியே இருந்த பைப்பில் தண்ணீர் பிடித்து, எதிரே இருந்த வில்வ மரத்துக்கு சிறிது ஊற்றி விட்டு, கடைக்கு முன்பு தெளித்தார். ஊது பத்தியைக் கொளுத்தி வைத்து விட்டு, நெற்றியில் பட்டையாக விபூதியைப் போட்டார். அதில் சின்னதாக குங்குமப் பொட்டை வைத்தார். என்ன பக்திப் பாட்டு போடலாம் என்று மொபைலில் தேடினார். மகா கணபதி சுப்ரபாதம், திருப்பதி வெங்கடாசலபதி சுப்ரபாதம், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் என்று வரிசையாக வந்தது. கடைசியில் கந்த சஷ்டி கவசத்தைப் போட்டார். அன்ன பட்சி விளக்கு ஒன்றில் கொஞ்சம் எண்ணையை ஊற்றி, திரியை எடுத்து விட்டு, பாக்கெட்டில் இருந்து நெருப்புப் பெட்டியை எடுத்து பற்ற வைத்தார். ஊதுபத்தியைக் கொளுத்தி எல்லா சாமிகளுக்கும் காட்டிவிட்டு காலண்டரின் ஒரு பகுதியில் குத்தி வைத்தார்.

 

ஒவ்வொரு நாள் இதைச் செய்யும் போதும் செல்வமணி அங்கு இருப்பது வழக்கம். காலை நடைப் பயிற்சியை முடித்து விட்டு, நாயர் கடையில் டீ குடித்துவிட்டு, டெய்லர் கடைக்கு வந்து பேப்பர் படித்து விட்டு, இரண்டு தெரு தள்ளி இருக்கும் தன் வீட்டிற்குச் செல்வது செல்வமணியின் பழக்கம். அன்றைக்கு செல்மணியின் முகம் வாடியிருப்பதை டெய்லர் பார்த்து விட்டார். பூசை புனஸ்காரங்களை முடித்து விட்டுப் பிறகு கேட்கலாம் என்று இருந்தார்.

 

“ என்ன சார்? இன்னைக்குக் கொஞ்சம் சொணக்கமாத் தெரியுதே?” ஒரு விளக்கமாறை எடுத்துக் கூட்டிக் கொண்டே கேட்டார் டெய்லர்.

 

“அது ஒண்ணுமில்ல சாமி….பொண்டாட்டிக்கு ரெண்டு நாளா ஒடம்பு சரியில்ல…பெரியாஸ்பத்திரிக்குப் போயி காமிச்சா, உறவுக்காரங்க எல்லாம் ஒரே பிடியா பிடிச்சுக்குவாங்க…தன்மானம் தடுக்குது. பிரைவேட்டுக்கு அழைச்சிட்டுப் போகலாமின்னா அஞ்சு ரூவா வரை தேவைப்படும்…அது தான் நேத்துலேர்ந்து ஒரே யோசனை…”

 

கூட்டிக் கொண்டிருந்த டைலர், மேசையின் கீழ் குனிந்து கூட்டும் போது, நேற்று காணாமல் போயிருந்த சாக்கட்டி வந்து விழுந்தது. “நீ இங்க இருக்கியா?” என்று கேட்டுக் கொண்டே அதை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டார் டைலர். அப்பொழுது டைலரின் மொபைல் ஒலித்தது. எடுத்து காதில் வைத்து, “ஹலோ!…” என்றார். எதிர்முனையில் யாரோ பேசப் பேச டைலரின் முகம் பிரகாசிக்கத் துவங்கியது.

 

“சரி..சரி..சாயந்திரம் ஆறு மணிக்கா? ஆறு மணிக்கு…இங்க தான் இருப்பேன்…ஓ! அப்படியா?...இல்ல...இல்ல...ஆறு மணிக்கு…எங்கயும் போகல..ஆமா..இருப்பேன்…நல்லது…நன்றி” என்று சொல்லிவிட்டு மொபைலை சார்ஜில் போட்டார்.

 

“சார்! ஒங்களுக்கு நல்ல காலம்….நீங்க சாயந்திரம் ஆறு மணிக்கு வாங்க. தையல் மிஷின் வித்த இடத்துலேர்ந்து காசு வருது. அஞ்சு ரூபா. மொதல்ல ஒங்க மனைவிய ஆஸ்பத்திரியில போய் காமிங்க…”

 

“அப்படியா?...எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல...இந்த ரெண்டு கையையும் காலா நெனச்சி கும்புடேறேன்...” என்று டைலரின் கைகளை இறுக்கிப் பிடித்தார் செல்வமணி. டெய்லரின் கையில் விளக்கமாறு இருந்தது. அதைக் கீழேப் போட்டு விட்டு, “இதுல என்னா சார் இருக்கு! இந்த உலகத்துல யாரும் தனியா வாழ்ந்துட முடியாது சார்…நான் தடுமாறுனா நீங்க புடிச்சிக்கனும்…நீங்க விழுந்தா நான் தூக்கி நிமித்தனும்…இது தான் சார் வாழ்க்கையோட அர்த்தம்…”

 

“உண்மையிலேயே நீங்க ஞானி தான் டெய்லரே!” என்று கையெடுத்துக் கும்பிட்டார். கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் உருண்டன.

 

செல்வமணி போனதும் டெய்லர் வேலையில் மூழ்கி விட்டார். மனைவி கொடுத்த இட்லிகளைச் சாப்பிட்டு விட்டு, மதிய நேரம் நெருங்கும் போது, ஃப்ளாஸ்கில் இருந்து கேழ்வரகு கஞ்சியைக் குடித்து விட்டு, இடையே எழுந்துச் சென்று ஒன்னுக்கு இருந்து விட்டு, நாயர் கடையில் டீக்குடித்து விட்டு, பெட்டிக் கடையில் சிகரெட்டை ஊதி விட்டு திரும்ப வந்து மோர் சோறை, வறுத்த மிளகாயோடு சாப்பிட்டு விட்டு, ஷட்டரை மூடிவிட்டு சற்றே கண்ணயர்ந்து விட்டு, மறுபடி எழுந்து வேலை செய்து விட்டு…

 

இப்படி ரொட்டீனாகத் தான் தினமும் போகும். ஆனால் அன்றைக்கு கொஞ்சம் உற்சாகமாகவே போனது.

 

என்ன ஒன்று? ஒன்றே ஒன்றுக்குத் தான் கஷ்டம். ஒன்னுக்கு இருக்க கடையில் கழிப்பறை கிடையாது. ஆகவே ஒன்னுக்கு இருக்கும் இடத்தைத் தேடி அலைய வேண்டும். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு நிமிடம் நடந்தாலே ஒரு குப்பை மேடு வரும். அதன் பின் பக்கம் சென்று, சற்றே இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு நிம்மதியாக இருந்து விட்டு வரலாம். ஆனால் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில், இப்பொழுது சுத்தம் செய்து விட்ட படியால், நாலைந்து நிமிடம் நடக்க வேண்டியிருக்கிறது. அதுவும் ரோட்டில் எந்த வாகனமும் வராமல் இருக்க வேண்டும். அப்படி ஏதாவது வந்தால், எதற்கோ நிற்பது போல் நின்று விட்டு, வாகனங்கள் கடந்து போனப் பிறகு, சீக்கிரம் இருந்து விட்டு வரவேண்டும்.

 

ஐந்தரை மணிக்கே செல்வமணி வந்துவிட்டார்.

 

சில நேரம் ஏதேதோ பற்றி சுற்றிக்கொண்டிருந்த பேச்சு பிறகு டெய்லர் வரைந்த ஓவியத்தின் பேரில் திரும்பியது.

 

“எப்படி ஓவியம் வரையக் கத்துகிட்டீங்க?”

 

“சின்ன பிள்ளையிலேர்ந்து அங்கயும் இங்கயும் கிறுக்கிக்கிட்டே இருப்பேன். இருபத்தைந்து இருபத்தாறு வயசு ஆகும் போது சென்னையில காந்தி பிறந்த நாளுக்கு ஒரு ஓவியப் போட்டி நடந்துச்சு. நான் குடுத்த ஓவியத்தை ஏற்க மறுத்துட்டாங்க. ஏன்’னு கேட்டதுக்கு ஒங்க ஓவியம் அரசியல் பேசுது. கான்ட்ரவர்சியல் ஆகிடும்’னு சொன்னாங்க.”

 

“ அது என்ன ஓவியம்?” செல்வமணி ஆர்வமானார்.

 

“நடுவுல ஒரு கண்ணாடி, கைத்தடி. மேல உயர்ந்த கட்டிடங்களோட பணக்கார வாழ்க்கை முறை. கீழ குடிசைகள் கொண்ட சேரி.…”

 

“சூப்பர்…”

 

“ ஆமா..ஆனா அத போட்டிக்கு ஏத்துக்கல. ஆனா…அதுல ஒரு பியூட்டி என்னன்னா…சில நாட்களுக்குப் பிறகு ஒரு ஒவியக் கண்காட்சியில அதே ஓவியத்தை ஆறாயிரத்து ஐநூறு ரூபா குடுத்து ஒருத்தர் வாங்கிட்டுப் போனாரு…”

 

ஆறு மணி வரை ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஆறு மணி போல டெய்லருக்கு போன் வந்தது. செல்வமணி டெய்லரின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தார். டெய்லரின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சோகமானது. “அடடா! பணம் கொடுப்பதாகக் கூறியவர்கள் இன்றைக்கு வரவில்லை என்று சொல்கிறார்கள் போல…” என்று நினைத்துக் கொண்டார். போன் பேசிவிட்டு, மொபைலை சட்டைப் பையில் வைத்தார் டெய்லர்.

 

“என்ன டெய்லரே?” என்றார் செல்வமணி.

 

“ஒன்னுமில்ல…இருங்க இதோ வந்துடறேன்…” என்று சொல்லவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தார். பத்து நிமிடத்தில் திரும்பி வந்தார். தலை கலைந்திருந்தது. பதற்றமாய் இருந்தார்.

 

“என்னாச்சு?...”

 

“எனக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தரு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களாம்…நல்ல வேளை. நான் போகும் போது கொஞ்சம் தெளிஞ்சிருச்சி. சுகர் இருக்கு..அது தான்…பக்கத்துல இருந்தவங்க பாக்கும் போது என் நம்பரைத் தான் ஒரு அட்டையில குறிச்சி வச்சிருந்தாங்களாம்…அதனால எனக்கு போன் பண்ணியிருக்காங்க…”

 

“இப்ப ஓகேவா?”

 

“இப்ப நல்லாயிட்டாங்க…நான் போறதுக்குள்ள…மூஞ்சில தண்ணியடிச்சி…முழிச்சிகிட்டாங்க. நான் பக்கத்துல ஒரு சாக்லெட் வாங்கிக் குடுத்தேன்…”

 

“யாரு?”

 

“மஞ்சுளா..ன்னு….அது.…ஒங்களுக்குத் தெரியாது…”

 

அப்பொழுது ஆட்டோவில் ஒருவர் வந்து இறங்கினார். ஆறாயிரம் ரூபாயை டெய்லரிடம் கொடுத்து விட்டு வந்த ஆட்டோவிலேயே திரும்பிச் சென்றார்.

 

“இந்தாங்க சார்… மொதல்ல போய் ஒங்க மனைவிய ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போங்க.” என்று சொல்லி ஆறாயிரம் ரூபாயையும் செல்வமணி கையில் திணித்தார் டெய்லர்.

 

“இந்த உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன்…ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு செல்வமணி நகர்ந்தார்.

 

டெய்லரின் சைக்கிள் ‘சொர்க்க’த்தை நோக்கிச் சென்றது.

 

*********

மூன்று வாரங்கள் எப்படிப் போனது என்றேத் தெரியவில்லை.

 

டெய்லர் குனிந்து தைத்துக் கொண்டிருந்தார். கண்ணன் வந்து பெஞ்சில் உட்கார்ந்தது கூடத் தெரியவில்லை. எப்பொழுதும் பேப்பரைப் படிக்கும் கண்ணன், வெறுமனே சாமி படத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ஏதோ நினைப்பில் நிமிர்ந்த டெய்லர், “வந்ததே கவனிக்கல…” என்றார்.

 

“என்ன மாப்ள?” என்று சொல்லிக்கொண்டே வரும் கண்ணன் அன்றைக்கு மௌனமாக இருப்பது வித்தியாசமாக இருந்தது.

 

“ம்…” என்ற ஒற்றைச் சொல்லோடு நிறுத்திக் கொண்டார்.

 

டெய்லர் தான் கேட்டார். “செல்வமணி சாருன்னு ஒருத்தர் கடைக்கு வருவாருல்ல…”

 

“ஆமா!”

 

“டெய்லி காலையில வாக்கிங் போயிட்டு இங்க வந்து ஒரு அட்டெண்டன்ஸைப் போட்டுட்டுத்தான் போவாரு…இந்தப் பக்கம் போகும் போது ஒரு தடவை எட்டிப் பாத்துட்டுத் தான் போவாரு. அந்தப் பக்கத்திலிருந்து வரும் போது ஒரு தடவை வணக்கம் சொல்லிட்டுத் தான் போவாரு…ரெண்டு மூணு வாரமா காணல…எங்கயாவது பாத்தியா?”

 

“நேத்து கூட பாத்தன..அவரும் அவர் பொண்டாட்டியும் காலையில வாக்கிங் போனாங்க…அங்கேந்து வந்து…நம்ம கடைக்கு முன்னாடி இருக்கற குறுக்குச் சந்துல திரும்பி, பின்னால தெருவோட சுத்தி போயிகிட்டு இருந்தாரு… நா கூட கேட்டேன்.. என்ன சார் புது ரூட்டுல போறீங்கன்னு…”

 

“என்ன சொன்னாரு?”

 

“நாய் தொல்லை இருக்குன்னு, வழக்கமான ரூட்ட மாத்திட்டேன்’னு சொன்னாரு” என்று கண்ணன் சொன்னார்.

 

டெய்லர் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு, “பரவாயில்ல..மனிதர்கள் பலவிதம்” என்று சொல்லிவிட்டு, “சரி

ஒனக்கு இன்னைக்கு என்ன கவலை?” என்று கேட்டார்.

 

“ஒன்னா ரெண்டா…”

 

“ஐயா!…மொதல்ல கவலைப் படுறத நிறுத்துங்கய்யா...கவலைப் படுறதுனால என்ன பண்ண முடியும்? ஒன்னும் பண்ண முடியாது...” தைத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார் டெய்லர்.

 

“இப்ப பாருங்க.. நம்ம கண்ட்ரோல்ல இல்லாத ஒன்னப் பத்தி கவலைப்படக்கூடாது. ஏன்னா அது நம்ம கண்ட்ரோல்ல இல்ல. நம்ம ஒன்னும் பண்ண முடியாது. அதுமாதிரி நம்ம கண்ட்ரோல்ல இருக்கக்கூடிய ஒன்னப் பத்தியும் கவலைப்படக்கூடாது. ஏன்னா அது நம்ம கண்ட்ரோல்ல இருக்கு. அதனால நாம அத மாத்த முடியும்…”

 

“கேக்கறதுக்கு எல்லாம் நல்லா தான் இருக்கு…ஆனா வாழ்க்கையில கவலைப்படாம இருக்க முடியல…”

 

“சரி! சொல்லு…இன்னைக்கு என்ன கவலை?”

 

“பையனுக்கு நேத்து பள்ளிக்கூடம் ஆரம்பிச்சிடுச்சி…..யூனிஃபார்ம் போடாம போனதால வெளியில நிக்க வச்சிட்டாங்களாம்…”

 

டெய்லர் சட்’டென எழுந்து விட்டார்.

 

“நீயெல்லாம் மனுஷனாயா? ஏன்யா புள்ளங்கள பெத்துக்குறீங்க? எல்லாரும் யூனிஃபார்ம் போட்டுகிட்டு போகும் போது இவன் மட்டும் போடாம போயி, கிளாஸ்க்கு வெளியில நிக்கும் போது என்ன வலி வலிச்சிருக்கும்...வாயில நல்லா வருது...தச்சி ஒரு வாரம் ஆகுது....இந்தா புடி..”

 

“காசு……..”

 

“காசும் வேண்டாம். ஒரு மயிறும் வேண்டாம்…போயா…மொதல்ல கடைய காலி பண்ணு…” என்று ஆவேசமாகச் சொன்னார் டெய்லர்.

 

டெய்லரின் முகமெல்லாம் சிவந்து விட்டது. கை கொஞ்சம் நடுங்கியது. இனிமேலும் அங்கு இருந்தால் கெட்டவார்த்தைகள் வந்து விழும் என்று தெரிந்து கண்ணன் யூனிஃபார்மை வாங்கிக்கொண்டு கிளம்பினார்.

 

ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கலாம் என்று பையில் தேடினார். கிடைக்கவில்லை. கடையில் வாங்கலாம் என்று ஒரு பக்கம் சரிந்து விழுந்திருந்த முன்கூரையின் வழியே நுழைந்து வெளியே வருவதற்கும், இன்னொரு பக்க கூரையும் விழுவதற்கும் சரியாக இருந்தது.

 

முன்கூரை முழுவதுமாக விழுந்து கடையை அடைத்து விட்டது.

 

கொஞ்ச நேரம் அதையேப் பார்த்துக் கொண்டிருந்தார் டெய்லர். வில்வ மரத்திற்குப் பின்னால் இருந்த சுவரில் சாய்ந்து கடையையேப் பார்த்துக் கொண்டிருந்தார். மரத்திடம் சொன்னார். “ஒனக்கு ஞாபகம் இருக்கிறதா? இலக்கிய வட்டம் தொடங்கும் போது அதன் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராக இருந்து, பல கூட்டங்கள் நடத்தும் போது, இவன் வந்தா தான் களை கட்டுது என்று நண்பர்கள் சொல்வார்கள். ஞாபகம் இருக்கிறதா? அப்பல்லாம் வேற விதமான வாழ்க்கை. மடங்காத ஜிப்பா. ஒயிட் பேண்ட். கால்ல ஷூ. வாரியத் தலை. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தான் காபி…இதோ! முன் கூரை முழுசா உழுந்து கடையை மூடிடுச்சி….ஆனா இப்பயும் நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்.  ”

 

வில்வ மரம் காற்றில் அசைந்தது.

 

வில்வ மரத்தினூடே ஒரு உருவம் வருவதை கவனித்தார். அது அவரை நோக்கித் தான் வந்தது.

 

“ என்ன மஞ்சுளா? நீ இங்க...?” என்றார் பதறிக்கொண்டே.

 

“கையில கொஞ்சம் பணம் இருந்துச்சி. கூரை சரிஞ்சிருச்சின்னு சொன்னியே…அதான் குடுத்துட்டுப் போகலாமின்னு…”

 

“அங்கேயிருந்து நடந்தா வந்த?”

 

ஆமா என்பது போல் மஞ்சுளா தலையசைத்தாள். சிறிய மஞ்சள் பையில் சுற்றி வைத்தப் பணத்தை டெய்லரிடம் நீட்டினாள்.

 

“வேண்டாம். ஒன் மருத்துவ செலவுக்கு வச்சிக்க….” என்று சொல்லி டெய்லர் தயங்க, அவர் கையில் பிடிவாதமாகத் திணித்தாள் மஞ்சுளா.

 

“வச்சிக்க…எப்ப முடியுமோ அப்ப குடு…காசு வரும் போகும். நட்பு?” என்று சொல்லிவிட்டு நடந்தாள்.

 

டெய்லர் வில்வமரத்தைப் பார்த்தார். அது சிரித்தது. போனை எடுத்தார். யாரிடமோ பேசினார்.

 

“ஆமா…நாளைக்கு வாங்க…எடுத்துக் கட்டிடுங்க..வந்து அட்வான்ஸை வாங்கிக்குங்க..” என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

 

வீட்டில் அவரது மகள் நின்றிருந்தாள். கழுத்தை மறைத்துக் கொண்டாள்.

 

“அப்பா கண்ண மூடு..” என்றதும் கண்ணை மூடினார் டெய்லர்.

 

“இப்ப தெற..டண்டடொய்ங்..நேத்தே வாங்கிட்டு வந்து வச்சிட்டியாமே…அம்மா சொன்னிச்சி” என்று கழுத்தில் இருந்த வெள்ளை மணியைக் காட்டினாள்.

 

டெய்லர் மனைவியைப் பார்த்தார். ‘சேத்து வச்ச காசுல, பக்கத்துல போய் நானே வாங்கிட்டு வந்துட்டேன்’ என்பதை கண்ணாலேயே சொன்னார்.

 

டெய்லர் மகளை இறுக்கக் கட்டிப் பிடித்துக் கொண்டார். மனைவியைப் பார்த்து புன்னகையுடன் தலையை ஆட்டினார்.

 

 

*************

 

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page