top of page

செவப்புச் சேல

Updated: Oct 28

ree



 

த சதவென்று இருந்த சகதியில் இறங்கினாள் அஞ்சலை.


தாவணியையும் பாவாடையையும் எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டாள். அவளது அப்பாவின் மேல்சட்டையைப் போட்டிருந்தாள். தலையில் ஒரு துண்டை இப்படியும் அப்படியுமாகச் சுத்திக் கட்டியிருந்தாள்.


இடது கையில் நெல் நாத்து கத்தையொன்றை லாவகமாகப் பிடித்து, வலது கையால் சிலதை எடுத்து சேற்றில் இறக்கினாள். அஞ்சலையோடு சேர்த்து, பத்துப் பதினைந்து பேர் வரிசையாக குனிந்து நாத்து நட்டுக்கொண்டிருந்தார்கள்.

 

காலைச் சூரியனின் கதகதப்பு இன்னும் முழுமையாக வரவில்லை.


மேற்குப் பார்த்த வெள்ளிமலை நாதர் கோயிலிலிருந்து மணி ஓசை கிளம்பியது. அந்த மணியோசை வெண்தாமரையும் செந்தாமரையும் பூத்திருக்கும் குளத்தில் அலைகளைப் பரப்பிவிட்டு, எதிரேப் பெண்கள் நாத்து நடும் அழகை ரசிக்க விரைந்து வந்தது.


தென்னைமரங்கள் மணிஓசையை வரவேற்று, தங்கள் மட்டைகளில் அமர இடம் கொடுத்தன. அதைக் கண்டப் பனை மரங்கள், 'கோயில் மணி ஒசையே! இங்கே வாருங்கள்' என்று தங்கள் பக்கம் அழைத்தன.

 

எங்களை வைத்துத் தான் திருத்தெங்கூர் என்று இந்தக் கிராமத்திற்கு பெயர் வந்திருக்கிறது ஆகவே எங்கள் பக்கம் வாருங்கள் என்றுச் சொல்லி, கோயில் மணி ஓசையை தங்கள் வசமே தங்கச் சொல்லி, தென்னை மரங்கள் வற்புறுத்தின.


இல்லையில்லை! திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய ஊர் இது, அது எங்கள் பனை ஓலை வழி தான் கிடைத்தது. ஆகவே, எங்களிடம் தங்குங்கள் என்று பனைமரங்கள் தங்கள் மட்டைகளை அசைத்து அழைத்தன.

 

அந்தப் பட்டிமன்றத்தைக் கேட்டுக்கொண்டே, கோயில் மணியோசை, தென்னை மரங்களிலும் பனை மரங்களிலும் பட்டு, நாத்து நடும் பெண்களின் காதுகளில் போய் அமர்ந்தது.

 

அஞ்சலையின் கெண்டைக்கால் பாதி வரை சேற்றில் அமுங்கியிருந்தது.


தன்னன்னான.… தானனானே எனத் துவங்கி ஒரு பெண் நடவுப்பாடலைப் பாட மற்றவர்கள் திரும்பிப் பாடும் போது, அவர்களைத் தீண்டிச் சென்ற தென்றல், திரும்பி வந்து வரப்போரத்தில் உள்ள புற்களில் உட்கார்ந்து தெம்மாங்குப் பாடலைக் கேட்டு தலையசைத்தது.

 

"கடிய நடவும் பொண்ணே, உன் கால் அழகைப் பாப்போம்.

வீசி நடவும் பொண்ணே, உன் விரல் அழகைப் பாப்போம். 

குனிஞ்சி நடவும் பொண்ணே, உன் குரல் அழகைப் பாப்போம்.

முன்னே நடவும் பொண்ணே, உன் முக அழகைப் பாப்போம்" என வாய் ஒரு பக்கம் வாசிக்க, கை ஒரு பக்கம், அந்த இசைவுக்கேற்றவாறு நாத்துகளை நட்டுக் கொண்டிருந்தது.

 

களத்தில் இருந்த எலந்தைப் பழ மரத்தில், இரண்டு செம்போத்து பறவைகள் உட்கார்ந்து அந்தப் பாட்டை உன்னிப்பாகக் கவனித்தன. தங்கள் சிவந்த கண்களை உருட்டி, நாவல் நிற உடம்பை ஆட்டி, செம்மையான இறக்கைகளை விரிப்பது நாத்து நடும் பெண்களின் நாட்டுப்புறப் பாடலுக்கு நடனம் ஆடுவது போலவே இருந்தது. வாலிலும், கீழ்ப்பகுதியிலும் உள்ள வெண்மைக் கோடுகள் தாளத்திற்கேற்றவாறு நளினமாய் அசைவது அதனை உறுதிப்படுத்தியது.

 

அஞ்சலை, திருத்தெங்கூர் அழகி.

 

கருங்குவளைக் கூந்தல் மழை. மலைத் தொடர் மயங்கும் புருவங்கள். சந்திர முகத்தில் விண்மீன்களாய்க் கண்கள். அந்தக் காட்சி, கருமை மழையின் பின்னணியில் மலைத்தொடரின் வரிசையில், சந்திரனும் விண்மீன்களும் ஜொலிப்பது போல் இருக்கும். தாமரைக் குளத்தில் தவிக்கும் கண் மீன்கள் வழுக்கி விழுந்து விடாமல் தடுக்கும் பவளக் கன்னங்கள். ஊசி போல் நாசி. மல்லிகைப் பற்களைக் காக்கும் ரோஜா இதழ்கள். பனித்துளிப் பார்வையில் தேன்துளி நேர்மை. கொன்றை மலர் புன்னகை. அழகான கருப்பு நிறம்.

 

திடீரென ஒரு பெண், “அடி! ஆத்தாடி!!…யாரு அங்க உளுந்து கெடக்கறது?” என்று வரப்போரம் மயங்கிக் கிடந்த இளைஞனைப் பார்த்துக் கத்தினாள். கையில் வைத்திருந்த நாத்துகளை அப்படியேப் போட்டுவிட்டு எல்லோரும் அவனை நோக்கி ஓடினார்கள்.


"நம்ம சிவநேசன்! டிராக்டர் ஓட்டுற பையன்..."


"வாயில நொரை தள்ளியிருக்கு…கடிச்ச எடத்தை தேடுங்கடி…."


"அதோ! கால் கட்டைவெரல்லட்ட ரெண்டு செவப்பு புள்ளி தெரியுது பாரு…"


"ஆமா..ஆமா! எந்த பாம்பு கடிச்சிச்சோ?..."


"அடப் பாவமே! ஆள் வந்த அரவமே தெரியல…எவ்வளவு நேரமாச்சோ?"


"பள்ளத் தெரு ஜனங்க யாராவது இருந்தாலும் எதாவது செய்யலாம்…பறை ஜனங்க நம்ம என்ன செய்றது?"


"அடப் பாவமே…"

 

அஞ்சலை சடாரென தன் தாவணியைக் கிழித்தாள். சிவநேசனின் கணுக்காலுக்குச் சற்று மேல் கட்டினாள். கடித்த இடத்தில் வாயை வைத்து உறிஞ்சினாள்.


“அடிப் பாவி! ஆண்டைக்குத் தெரிஞ்சா….”


“சொம்மா இருடி…ஆவத்துக்கு பாவமில்ல..”


வாயில் வந்த இரத்தத்தைத் துப்பினாள். இரத்தம் அவளது கன்னத்தில் தெரித்திருந்தது.


செம்பில் இருந்தத் தண்ணியை ஒருத்தி எடுத்து சிவநேசன் முகத்தில் அடித்தாள். அவன் கண் விழித்தான். அதற்குள் சற்று தூரத்தில் வயல் வரப்பைச் சரி செய்துக் கொண்டிருந்த நாலைந்து ஆட்கள் ஓடி வந்தனர்.


சிவநேசனைத் தூக்கிக் கொண்டு திருநெல்லிக்காவல் ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள்.


********

சிவநேசன் டிராக்டரை எடுத்தான்.


"மில்லுகிட்ட இருக்கற அஞ்சு மாவையும் உழுதுட்டு வந்துடுடா சிவா" என்று சோமசுந்தர படையாட்சி கூறினார்.


சரி என்று தலையாட்டிவிட்டு, வயலுக்குப் போற வழியில் கிங் பேக்கரி ஓரம் டிராக்டரை நிறுத்தினான். அவன் வந்ததுமே வெட்டி வைக்கப்பட்ட செய்தித் தாளில் ஒரு வடையை எடுத்து கொடுத்தார் கடைக்காரர்.


"ஸ்ட்ராங்கா ஒரு டீ" என்று சொல்லிவிட்டு பெஞ்சில் உட்கார்ந்தான்.

 

வடையைப் பிய்த்து வாயில் போடும் போது தான் கவனித்தான். அஞ்சலை ஒரு தூக்கு வாளியோடு நின்று கொண்டிருந்தாள்.


புள்ளிப் போட்ட தாவணியில் புதுசாக இருந்தாள். அவள் இவனைப் பார்த்தாளா இல்லையா என்று இவனுக்குக் குழப்பமாக இருந்தது. ம்ஹூக்கும்! என்று தொண்டையைக் கனைத்தான். அஞ்சலை இவன் பக்கம் பார்வையைத் திருப்பவில்லை.


டீ பாய்லரில் அப்படி என்ன தான் இருக்கிறது? அதையேப் பார்த்துக்கொண்டிருக்கிறாளே என்று சிவநேசனுக்குச் சற்றுக் கோபம் கூட வந்தது. கோபம் அஞ்சலை மேல் அல்ல. டீ பாய்லரின் மேல்.

 

இரண்டாவது முறையாக தொண்டையைச் சரி செய்தான்.


அஞ்சலை தலையைத் திருப்பாமல், கண்களை மட்டும் அவன் பக்கம் சற்றேத் திருப்பிவிட்டு, மறுபடி டீ பாய்லரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவன் பெஞ்சில் சிலரும், எதிர் பெஞ்சில் சிலரும் உட்கார்ந்திருந்தனர். அதற்குள் "மாப்ள டீ!" என்றதும் போய் வாங்கிகொண்டு வந்து பெஞ்சில் உட்கார்ந்து, டீ குடிப்பது போல தலையைக் குனிந்து, பார்வையை அஞ்சலையை நோக்கி வீசினான்.


மினுக்கட்டான் பூச்சி ஒளி போல, கண நேரத்தில் அவளும் அவனைப் பார்த்துவிட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

 

சிவநேசனுக்கு உதட்டில் சிறு புன்னகைப் பூத்தது. யாரும் தன் புன்சிரிப்பைப் பார்த்து விட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். இல்லையென்று புரிந்துக்கொண்டு மறுபடி டீ குடித்துக் கொண்டே அஞ்சலையையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.


அப்பொழுது பார்கவி வந்தாள்.

 

பார்கவி சோமசுந்தர படையாட்சியின் ஒரே மகள். பார்கவியும் அஞ்சலையும் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள். அஞ்சலை அஞ்சாவதோடு நிறுத்திக் கொண்டாள். பார்கவியோ இன்னும் படித்துக்கொண்டிருக்கிறாள். இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பு.


பார்கவி கையில் வாழைப்பழம், பூ, தேங்காய் இத்யாதியுடன் கோயிலுக்குப் போய்க்கொண்டிருந்தாள். பௌர்ணமியன்று சிறப்பு பூஜை நடக்கும்.


அஞ்சலையை டீக்கடையில் பார்த்ததும் "அஞ்சலை!" என சத்தமாகவேக் கூப்பிட்டாள். பார்கவியைப் பார்த்ததும் சிவநேசன் எழுந்து நின்று கொண்டே டீயைக் குடித்துக் கொண்டிருந்தான்.

 

அஞ்சலை பார்கவியைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே, பார்கவி! என்று வாயைசைத்து புன்னகைத்தாள்.


பார்கவி அஞ்சலையின் கைகளைப் பிடித்துக்கொண்டு "நல்லா இருக்கியா?..." என்று கேட்டாள். அஞ்சலை மெதுவாக கைகளை விடுவித்துக் கொண்டு, "ம்! நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? இந்த வருஷம் பன்னெண்டாம்ப்பா?" என்றாள்.

 

"ஆமா. அடுத்த வருஷம் ஆலத்தம்பாடியில பாரத் காலேஜ் இல்லாட்டி பிரில்லியண்ட் காலேஜ். ஏதாவது ஒன்னுல சேரனும்" என்று சொல்லிக்கொண்டே மறுபடி பார்கவி அஞ்சலையின் கைகளைப் பிடித்தாள்.


அஞ்சலை மறுபடியும் மெதுவாக கைகளை உருவிக்கொண்டே, "இலுப்பூர் பாலத்துட்ட நம்ம வயல்ல தான் நாத்து நடவு நடக்குது. ஜனங்களுக்கு டீ வடை வாங்கிட்டு போகலாமின்னு வந்தேன்" என்றாள்.

 

இது எல்லாவற்றையும் டீ குடித்துக்கொண்டே சிவநேசன் ஜாடையாய் பார்த்துக் கொண்டிருந்தான்.


அப்பொழுது பார்கவி சிவநேசனை ஒரு பார்வை பார்த்தாள். சிவநேசன் பார்கவியைப் பார்க்காதது போல் திரும்பி நின்றுக் கொண்டான்.

 

அதற்குள் "இந்தாம்மா நாலு பார்சல் டீ, எட்டு வடை" என்று கடைக்காரர் தூக்குவாளியை அஞ்சலையை நோக்கி காண்பித்தார்.


அதை வாங்க அஞ்சலை நகரும் போது, பார்கவி அவள் காதில் மெதுவாகச் சொன்னாள். “ஒன்னுட்ட ஒரு விஷயம் சொல்லனும்”.


"என்ன?" என்பது போல் அஞ்சலை அவளைப் பார்க்க, "பிறகு சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு பார்கவி நகர்ந்தாள். அப்பொழுதும் ஒரு தடவை சிவநேசனைப் பார்த்து விட்டு கோயில் பக்கம் நடந்தாள் பார்கவி.

 

அஞ்சலை தூக்கு வாளியையும் வடையையும் வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். பத்தடி நடந்ததும் சடாரென்று கழுத்தைத் திருப்பி சிவநேசனைப் பார்க்க, அப்பொழுது அவன் தன் புருவத்தை மட்டும் தூக்கி சைகைக் காட்டினான்.


அவள் தன் வாயை இங்கும் அங்கும் அசைத்து பளித்து விட்டு வயலை நோக்கி நடந்தாள். இருந்தாலும் அவளிடம் அதைக் கேட்டுவிடுவது என்று சிவநேசன் நினைத்தான்.

 

இன்றைக்கு டீக்கடையில் நடந்தது, அவன் பாம்பு கடித்து, ஆஸ்பத்திரிக்குப் போய், குணமாகி நான்கு நாட்களுக்குப் பிறகு நடந்தது.


டீக்கும் வடைக்கும் அவசரம் அவசரமாகக் காசு கொடுத்து விட்டு டிராக்டரைக் கிளப்பினான். மில்லுக்குப் பக்கத்தில் உழவேண்டிய வயலுக்குத் தான் அவன் போகனும். ஆனால் போகவில்லை. அஞ்சலை போகும், இலுப்பூர் பாலம் பக்கம் போனான்.

 

அஞ்சலை தூக்கு வாளியை எடுத்துக்கொண்டு நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவள் நடையே ஓர் அழகு தான்! என்று சிவநேசன் நினைத்துக் கொண்டு அஞ்சலை அருகே வந்து விட்டான்.


டிராக்டர் சத்தம் கேட்டு அவள் சாலையை விட்டு ஒதுங்கி நடந்தாள். அவன் பக்கத்தில் போனதும், “ரொம்ப தேங்க்ஸ்” என்றான். அவள் முறைத்தாள்.

 

"சாயந்திரம் நடை மூடியதும் அழகர் கோயில் குளத்துப் பக்கம் வர்றியா?" என்று தைரியமாகக் கேட்டு விட்டான்.


"யாராவது பாத்தா, கட்டி வச்சி உறிச்சிடுவாங்க. போய் பொழுப்பப் பாரு" என்று சத்தமாகச் சொல்லிவிட்டு, ,நேராக நடந்துக் கொண்டே அவனுக்குப் பதில் சொன்னாள்.


அதற்குள் இலுப்பூர் பாலம் வந்துவிட, அவள் திரும்பினாள்.


யாரும் வருகிறார்களா? என்று பார்த்து விட்டு "ஆறு மணிக்கு, மேல கொளத்தாங்கரைக்கு வந்துடு" என்று சற்றே உரக்கக் கத்தினான்.


அவள் திரும்பி முறைத்து விட்டு நடையில் வேகத்தைக் கூட்டினாள்.


**************

ஞ்சலை தயங்கித் தயங்கி வந்தாள்.


அவள் வீட்டிலிருந்து பின்பக்கமாக நடந்து, சில கருவேல மரங்களைக் கடந்தால், திருமேனி அழகர் திருக்கோயிலும் அதன் தெற்கே இருக்கிற குளமும் வந்துவிடும். மேல குளக்கரையில் நாணல் மண்டியிருந்தது. அதை ஒட்டி திருநெல்லிக்காவல் வரை வயக்காடு தான். குளக்கரையிலிருந்து பார்த்தால், திருநெல்லிக்காவல் வழிச் செல்லும் ரயில் பாதை நன்கு தெரியும்.

 

இருள் கொஞ்சம் கொஞ்சமாகப் பகலைத் தின்றுக் கொண்டிருந்தது.


சற்று நேரத்தில் இருட்டிவிடும். ஆனால் நல்லவேளை! இன்று பௌர்ணமி. நடக்கும் தடம் தெரிந்தது.


கோயிலுக்குப் பின்புறம், மேலக் குளக்கரையொட்டியிருந்த படித்துறையில் ஓர் உருவம் உட்கார்ந்திருந்தது பச பசவென்று தெரிந்தது. சிவநேசனா? இல்லை வேறு யாருமா? அவனே தான்.


அவள் பக்கத்தில் வந்ததும் அவன் எழுந்துக் கொண்டான்.

 

"நீ வருவன்னு எனக்குத் தெரியும்." சிவநேசன் கண்களைச் சிமிட்டினான்.


"ம்!…வெவ்வே.." என பளித்தாள்.


"டீக்கடையில ரொம்ப பந்தா பண்ணுன?" என்று சீண்டினான்.


"ம்ம்ம்ம்!..நாலு பேரு இருக்கற எடத்துல அப்படித் தான் பருந்து மாதிரி பாப்பாங்களாக்கும்…" என்று பதில் கொடுத்தாள்.


"என் உசிரு..நா பாக்குறேன்..எவன் என்னா சொல்றது...." என்று மிரட்டும் தொனியில் மீசையை முறுக்கினான்.


"ம்க்கும்!..சும்மா கனவு காண வேண்டியது தான்…" என்று சொல்லிவிட்டு தாவணி நுனியை திருகிக்கொண்டேயிருந்தாள்.


சற்று நேரம் மௌனம். மௌனத்தை உடைத்தான் சிவநேசன்.


"நீ மட்டும் அன்னைக்கு விஷத்தை எடுக்கலைனா இந்நேரம்……."என உணர்ச்சியோடு சொன்னான்.


"எனக்கு பயமா இருக்கு…." என்றாள் அஞ்சலை.


"ஏன்? என்ன பயம்?..."


"பரத்தெருலேர்ந்து பள்ளத்தெருவுக்கு யாராச்சும் கட்டிட்டு போவாங்களா?...அதெல்லாம் நடக்கற காரியமா?" அவள் குரல் தழதழத்தது.


"அதனாலென்ன…எனக்கு ஒன்ன புடிச்சிருக்க..ஒனக்கு என்ன புடிச்சிருக்கு…அப்பறம் என்ன?" என்று ஏதோ ஒரு வீராப்பில் சிவநேசன் சொன்னான்.


"அது சரி…எங்க வூட்டுல தெரிஞ்சிது….உப்புக்கண்டம் தான்." என்று முனவினாள்.

…………….

…………………..

"பயப்படாத… ஒன்னக் கட்டிகிட்டு இதே ஊர்ல குடும்பம் நடத்தலேன்னா என் பெயர மாத்திக்கிறேன்." என்று தரையில் பொடேர் என அடித்தான்.


"அதுக்கும் ஒன்னும் கொறச்ச இல்ல…பேர மாத்திக்கிறாராம் பேர..." என்று சொல்லிவிட்டு தலையைத் திருப்பிக்கொண்டாள்.


கண்ணில் திரளும் கண்ணீரை அந்த இருட்டிலும் அவன் பார்த்துவிடக் கூடாது என்று தான் அவள் திரும்பியிருக்கக் கூடும்.


"ஒன் கைய குடு சத்தியம் பண்றேன்...." என்றான்.


"இந்தா!..தொடுற வேலையெல்லாம் வச்சிக்காத…" என்று சொல்லி கொஞ்சம் அருகே வந்தாள்.


"ஒனக்கு இந்த மஞ்சள் கலரு தாவணி சூப்பரா இருக்குது. டீக்கடையில பாத்தேன்" என்று சிரிப்புடன் சொன்னான்.


" ஆனா எனக்கு செவப்பு கலரு தான் புடிக்கும்...." என்றாள் கட்டையில் சாய்ந்தபடி.


"என்னப் பத்தி ஒனக்குத் தெரியாது….நம்மள பத்தி சொன்னா, என் தம்பி சசிக்குமார் ஒத்துக்குவான். காலேஜ் படிக்கிறான்ல!…." என்று சொல்லி உற்சாகமானான்.


"அது கேட்டா போதுமா? ஒன்ன பெத்தவங்க!...ஊரு ஒலகம்?..." என்று மருண்டாள்.


"ஊராவது ஒலகமாவது? ஒரு நாள் பாரு..." என நிச்சயமான குரலில் சொன்னான்.


"என்ன பண்ணுவ?" தலையை நிமிர்த்திக் கேட்டாள்.


"திடீர்னு பழம் தட்டெல்லாம் எடுத்துட்டு ஓன் வீட்டு வாசல்ல வந்து நிப்பேன்."


"நிப்ப…..நிக்கிறதுக்கு கால் இருந்தா தான…எங்க அப்பா ரெண்டையும் ஒடிச்சி அடுப்புல போட்டுருவாரு." என்று தீர்மானமாகச் சொன்னாள்.

…………………

"ஒன்னோட அம்மாகாரி ஏற்கனவே நாலு தெரு தாண்டுவா…நா வீட்டுக்கு வந்தன்னா…அவ்வளவு தான்!" என்று அவளே அமைதியைக் கலைத்தாள்.


"அதெல்லாம் நான் சரி பண்ணிடுவேன்." என்றான்.

 

"யார்றா அங்க? இருட்டுல?" என்று சத்தம் கேட்டது. சிவநேசனும் அஞ்சலையும் நாணலில் புதைந்துக் கொண்டார்கள். கோயில் பூசாரி டார்ச் லைட் அடித்துப் பார்த்தார்.


"சரக்கடிக்க வேற எடம் கெடக்கலையா? பூச்சி பொட்டு கடிச்சி பொட்டுன்னு போயிடாதீங்கடா..வூடு போய் சேருங்க" என்று சொல்லி சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

 

"வீண் கனவெல்லாம் காணத…எனக்கு ஒன்னப் புடிக்கும் தான். ரெண்டு வருஷமாவே நீ டிராக்டர் ஓட்டுற அழகைப் பாத்து ரசிச்சிருக்கேன். கட்டுனா ஒன்ன மாதிரி ஒரு ஆம்பளையத் தான் கட்டிக்கனும்னு ஆசைப் பட்டுருக்கேன். எங்கப்பா பஞ்சாயத்து செய்தியை ஊருக்கே பறையடிச்சி சொல்றவரு. ஒங்க அப்பா படையாட்சிக்கு வெள்ளாமை பண்றவரு. நீ வேற தெரு நா வேற தெரு. அதனாலத்தான் ஆசையை உள்ளாரயே போட்டு அமுக்கி வைச்சிருக்கேன். வெதை நெல்ல கோட்டைக்கட்டி பாதுகாக்கற மாதிரி. நமக்கு இது தோது படாது. நீயும் என்ன மறந்துடு…நானும்.."என்று சொல்லிக்கொண்டே குலுங்கினாள்.


சிவநேசன் அவளை அணைக்க, அவள் அவன் நெஞ்சில் படர்ந்தாள்.


************

 

பார்கவி அஞ்சலை வீட்டிற்கு வந்தாள்.


'இவ ஏன் இங்க வாரா?'

சாம்பாருக்கு வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த அஞ்சலை திடுக்கிட்டு எழுந்து, "என்ன பார்கவி?" என்று கேட்டுக் கொண்டே எழுந்தாள்.


 "சும்மா தான் ஒன்ன பாக்கலாமின்னு...." என்று இழுத்தாள் பார்கவி.


"சொல்லி அனுப்பிச்சிருந்தா, நா வந்திருப்பன்ல." என்று பக்கத்தில் அரிக்கன்சட்டியில் இருந்த தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள் அஞ்சலை.


"நா வந்தது என் அம்மாவுக்கு தெரியாது." என்று ரகசியமாகச் சொன்னாள் பார்கவி.


"என்ன சேதி?" என்று அஞ்சலை கவலையுடன் கேட்டாள்.


"கொஞ்சம் தனியா பேசனும்..."என்று பதட்டமடைந்தாள் பார்கவி.


அஞ்சலை பார்கவியை இழுத்துக்கொண்டு வீட்டிற்குப் பின்னால் இருந்த கிணற்றடிக்குச் சென்றாள்.


அஞ்சலைக்கு திக் திக்’கென்று இருந்தது. என்ன சொல்லப் போகிறாளோ?


பார்கவி கையில் ஏழெட்டு மடிப்புகளாக மடித்து வைத்திருந்த பேப்பரைப் பிரித்தாள். அஞ்சலை ஆவலுடன் பார்த்தாள்.


திகில் கூடிக் கொண்டே போனது.


"என்ன பேப்பர் அது?"


"நீயே படி" என்று பார்கவி அஞ்சலையிடம் கொடுத்தாள்.


"அன்புள்ள பார்கவிக்கு….என்று துவங்கி….மானே தேனே" என்று நாலைந்து வரிகள் போனது.


அஞ்சலையின் கைகள் நடுங்கின.


செட்டியார் வீட்டு மாடுகளுக்கு கழனித் தண்ணி கலந்துக் கொடுத்துவிட்டு அப்பா வருகிற நேரம் இது. ஏதோ குழு மீட்டிங்குன்னு அஞ்சலையின் அம்மா பஞ்சாயத்து ஆபீஸ் கட்டிடத்திற்கு போயிருக்கா. எப்ப வேணா திரும்பி வந்துடுவா…


இந்த நேரம் குடியானவத் தெருவுலேர்ந்து படையாட்சி மவ, நம்ம வீட்டுக்கு வந்து ஏதோ காதல் கடிதத்தை காமிச்சிட்டு இருக்கா…


என்ன கெட்ட நேரமோ?

 

யார் இவளுக்கு கடுதாசி எழுதியிருப்பா? இவ ஏன் அதை என்னுட்ட கொண்டு வந்து காமிக்குறா? அடச்சே! நேத்து டீக்கடையில இவள பாத்திருக்கக் கூடாதோ? டீ வடைய நா வாங்கிட்டு வரல’ன்னு தான் சொன்னன்…நீ தான் போய் சுருக்கா வாங்கிட்டு வருவ’ன்னு அனுப்பி வச்சதுவோ அதுக…


மனசு கடிதத்தில் இல்லை. அலை பாய்ந்தது.

 

அப்பாடா! கடைசி வரி. இப்படிக்கு முத்தங்களுடன் என்று சொல்லி கீழே எழுதியிருந்த பெயரைப் பார்த்ததும் அஞ்சலைக்கு தலைசுற்றியது.

 

இப்படியா நடக்க வேண்டும்? விதி யாரை விட்டது?

 

இப்படிக்கு முத்தங்களுடன் “சசிக்குமார்” என்று எழுதி ரெண்டு ஹார்ட் படம் வேறு.


சசிக்குமார், சிவநேசனின் தம்பி! அஞ்சலை முகத்தில் வியர்வை முத்துக்களுடன் பார்கவியைப் பார்த்தாள். பார்கவி அஞ்சலையைப் பாவமாய் பார்த்தாள்.


"எப்படி?" என்று பாவனையில் கேட்டாள் அஞ்சலை.

 

"புதூர் ஸ்கூலுக்கு நான் பஸ்ஸூல போகும் போது அது காலேஜிக்கு போகும். அப்படித்தான்" என்று வார்த்தைகளை மென்று மென்று சொன்னாள்.


இவளை எப்படி அவள் வீட்டுக்கு அனுப்புவது என்று அஞ்சலை யோசித்தாள். முதலில் இங்கிருந்து அப்பறப்படுத்தலாம் என்று சொல்லி, வா’வென்று அழைத்துக் கொண்டு வேலியோரம் நடந்து மூங்கில் புதர் பக்கம் அழைத்துச் சென்றாள். கன்றுக்குட்டி போல பார்கவி இழுத்த இழுப்புக்குப் பின்னாலேயேச் சென்றாள்.


"இதெல்லாம் தேவையா? நீ ஆண்டை வூட்டுப் பொண்ணு. அது..." என்று எச்சரித்தாள் அஞ்சலை.


"கட்டுனா அதைத் தான் கட்டுவேன்…இல்லாட்டி.." பார்கவிக்கு அழுகை வந்துவிடும் போல் இருந்தது.


'ம்க்கூம்! இத ஒன்னு சொல்லிடுங்க…' என்று மனதிலேயே நினைத்துக்க கொண்டு, "ஒங்க வூட்டுல தெரிஞ்சா…"என்று அஞ்சலை இழுத்தாள்.


"அதான் தெரியல…சசி மெட்ராஸூக்கு ஓடிப் போயிடலாம்னு சொல்லுது...எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல...நேத்து டீக்கடையில அதோட அண்ணனை (சிவநேசன) பாத்தன். நீ சசியோட அண்ணன வயல்ல பாக்கும் போது, கொஞ்சம் எடுத்துச் சொல்றியா?...எனக்கு பயமா இருக்கு" என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள்.

 

நல்லா இருக்கு பஞ்சாயத்து!


என் கதையே கழுத்து வெட்டா இருக்கு. இதுல இதையும் இழுத்து விட்டா, உருப்புட்டாப்புல தான்…என்று நினைத்துக்கொண்டு ஆழ்ந்த யோசனைக்குப் போனாள் அஞ்சலை.


அழுகையினூடே, "இந்த மணி கூட, சசி தான் வாங்கிக் குடுத்தது" என்று, கழுத்தில் வெள்ளை வெள்ளையாக செயற்கை முத்துக்களால் ஆன மணியைக் காண்பித்தாள் பார்கவி.


படிக்கறத தவிர மத்ததெல்லாம் செய்யுங்க என்று அஞ்சலை மனதில் நினைத்துக் கொண்டே, இந்த நேரத்தில் இந்த முத்துமணி பற்றிய செய்தி தேவைதானா என்று யோசித்துக் கொண்டே பார்கவியைப் பார்த்தாள். அவள் காதல் புயலில் சிக்கிய கன்னி வைக்கோல் போல சிதறிக் கிடந்தாள்.

 

"சரி! வீட்டுக்குப் போ…நா சிவநேசன்ட்ட சொல்றேன்" என்றதும் கண்களில் வழிந்த நீரை கர்சிப்பால் துடைத்துவிட்டு, அஞ்சலையிடமிருந்து கடிதத்தை வாங்கி மடித்து செருகிக் கொண்டு போனாள் பார்கவி.


அஞ்சலைக்கு அப்பொழுது தான் மூச்சு வந்தது.


**********

 

ளங்குமரனை இன்று தான் பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறார்கள்.


பிள்ளையின் பெற்றோர்கள் இருவருமே வரவேண்டும் என்று சொன்னதால் அஞ்சலையும் சிவநேசனும் பள்ளிக்கு வந்திருந்தார்கள். இளங்குமரன் புதுச்சட்டை போட்டு, பவுடர் அடித்து, நெற்றியில் விபூதி போட்டு, கையில் ஒரு மஞ்சள் பையுடன் நின்று கொண்டிருந்தான்.

 

மூக்கிலிருந்து சளி வந்ததை அஞ்சலை தன் சேலை முந்தானையால் துடைத்து விட்டாள்.


"பதவுசா இருந்துட்டு பதவுசா வரனும் சரியா" என்று சொன்னாள்.


இளங்குமரன் தலையாட்டினான்.


"சாயந்திரம் அப்பா ஒனக்கு ஐஸ் வாங்கித் தாரேன். சரியா?" என்று சிவநேசன் சொன்னான்.


"ம்!" என்றான் இளங்குமரன்.


"ஏற்கனவே மூக்கு ஒழுவுது. இதுல ஐஸ் வேறயா? பேசாம இருங்க" என்று அஞ்சலை சிவநேசனைச் செல்லமாக அதட்டினாள்.

 

அதற்குள் இளங்குமரனின் தாத்தா அங்கு வந்தார்.


"குமரா! செல்லப் பேராண்டி....இந்தா ஐஸ்…தாத்தா ஒனக்காக வாங்கிட்டு வந்தேன்" என்று அவன் கையில் கொடுத்தார்.


அஞ்சலை பேசாமல் நின்றாள். அதை வாங்கலாமா வேண்டாமா என்று இளங்குமரன் முடிவெடுப்பதற்குள் தாத்தா ஐஸை அவன் கையில் திணித்தார்.


"பாட்டி கோயிலுக்குப் போயி குங்குமம் எடுத்து வந்திச்சி. இந்தா வச்சிக்க" என்று சொல்லி தாத்தா ஏற்கனவே நெற்றியில் இருந்த விபூதிக்கு மேலே குங்குமத்தை இழுத்து விட்டு அஞ்சலையைப் பார்த்து முறைத்து விட்டு, வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு போனார்.


வாத்தியார் வந்து ஏதேதோ விபரங்களைக் கேட்டு, எதை எதையோ எழுதிவிட்டு, இளங்குமரனை அழைத்துச் சென்றார்.


அஞ்சலையும் சிவநேசனும் வீட்டிற்குத் திரும்பி வந்தார்கள். வீட்டில் அவர்களது திருமண போட்டோ சுவரில் தொங்கிங்கொண்டிருந்தது. அதைப்பார்த்ததும் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள் அஞ்சலை.


***********

 

சிவநேசன் சொன்னது மாதிரியே, அஞ்சலையை குளக்கரையில் சந்தித்த அடுத்த நாளே, தனியாளா தட்ட எடுத்துட்டு அஞ்சலை வீட்டுல வந்து நின்னான்.


வீடே கொந்தளிச்சது.


அஞ்சலையின் அப்பா தாம் தூம்னு குதித்தார். அஞ்சலையின் அம்மா மண்ணை வாரி இறைத்தாள்.


செய்தி தெரிஞ்சி சிவநேசனின் அப்பா சில ஆட்களை அழைத்துக்கொண்டு கம்பும் தடியும் எடுத்துக்கொண்டு அந்தத் தெருவுக்கு ஓடினார். வீட்டுக்கு வெளியே தட்டோடு நின்று கொண்டிருந்த சிவநேசனை ஒரு உதை விட்டார். தட்டு பறந்தது. பழங்கள் உருண்டன. சிவநேசன் பைப்படியில் போய் விழுந்தான்.

 

கும்பாபிஷேகத்திற்காக கோயிலின் முன்புறம் போடப்பட்டிருந்த பந்தலிலிருந்து சவுக்குக் கட்டைகளை பிடுங்கினர். இந்தத் தெரு ஆட்களும் உருவினர். அந்தத் தெரு ஆட்களும் எடுத்தனர்.


அஞ்சலை வீட்டுக்குள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு குத்துக்கால் போட்டு உட்கார்ந்து விட்டாள்.


"போயும் போயும் ஒரு பறச்சி தான் கெடச்சாளா ஒனக்கு" என்று ஒருத்தன் கத்தினான்.


"ஊர் மேயறதுக்குன்னே பொம்பள புள்ளய வளக்குறீங்களா" என்று இன்னொருத்தன் கத்தினான்.


அரை மணி நேரம், ஒரு மணி நேரம் அமளி துமளியா இருந்துச்சி.

 

சிலர் இரண்டு தரப்பினரையும் அச மடக்கி உட்கார வைத்தனர். பிடாரி அம்மன் கோவிலின் பக்கத்தில் இருந்த மேடையில் பேச்சு வார்த்தை நடந்தது.


சிவநேசன் விடாப்பிடியாக இருந்ததால், வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. தாலி கட்டிக்கொள்வது ஆனால் கொண்டான் கொடுத்தான்னு திரும்ப ஒட்டும் கெடையாது ஒறவும் கெடையாதுன்னு பேசி பஞ்சாயத்து முடிந்தது.


கழிசடை தொலைஞ்சதுன்னு அன்னக்கியே அஞ்சலையை அனுப்பி வைத்தார்கள் அவர்கள் வீட்டில். கட்டிய சேலையோடு சிவநேசன் வீட்டுக்கு வந்த அஞ்சலையை ஊரே கூடி தூற்றியது.

 

சிவநேசன் அம்மா அரளி விதையைக் குடித்து விட்டு, வாயில் நுரைத்தள்ள, அவளை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப் போனார்கள்.


சிவநேசன் குடும்பத்தை ஊர் தள்ளி வைத்தது.


தினமும் திட்டும் தெவட்டுமாக நாள் போனது. வீட்டில் இரண்டு அடுப்பு. சிவநேசனின் அப்பாவும் அம்மாவும் அஞ்சலையோடு பேச்சை நிறுத்திக்கொண்டார்கள். ஜாடையோடு திட்டுவது மட்டும் தொடர்ந்தது.


சசிக்குமார் மாத்திரம் “அண்ணி, அண்ணி” என்று ஆதரவாக இருந்தான்.


அன்றையிலிருந்து அஞ்சலை எந்த வேலைக்கும் போவதில்லை. நாலைந்து மாதங்கள் ஓடின. அஞ்சலை கர்ப்பமானாள்.


அஞ்சலை அம்மா அடுத்தத் தெருவில் தான் இருந்தாள். மகள் கர்ப்பம் ஆனது தெரிந்தும் வந்து பார்க்கவில்லை.


எங்கயும் போகக் கூடாது என்று சிவநேசன் அம்மா கறாராகச் சொல்லிவிட்டாள். திருநெல்லிக்காவல் பிரசவ ஆஸ்பத்திரியில் தான் சேர்த்திருந்தார்கள்.


இளங்குமரன் பிறந்தான்.

 

அந்த நல்ல செய்தியைத் தெரிவிப்பதற்காக சிவநேசன் வீட்டிற்குப் போனபோது சிவநேசனின் அம்மாவுக்கு இலுப்பு வந்து வாய் கோணி நுரை வந்துக் கொண்டிருந்தது. அவன் அப்பா இடிஞ்சி போய் பார்வை நிலை குத்தி திண்ணையில் விழுந்து கிடந்தார்.


நாலைந்து பேர் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். இரண்டு பெண்கள் சிவநேசன் அம்மாவின் வாயைக் கழுவி விட்டு, எழுப்பி உட்கார வைத்தார்கள். ஒருத்தர் நெஞ்சை அமுக்கி விட்டார். 


அழுத கண்ணு ஓயவில்லை.


என்ன என்று விசாரிக்கும் போது தான் தெரிந்தது. சசிக்குமார் பார்கவியை இழுத்துக்கொண்டு எங்கேயோ ஓடிவிட்டானாம்.


“இந்த மூதேவி செரிக்கி வந்தா…அவனுக்கு தைரியம் வந்து, இப்படி பண்ணிட்டு, நம்மளயெல்லாம் பாதாளத்துல தள்ளிட்டு போயிட்டானே!” என்று ஒப்பாரி வைத்தார்.


இந்த லட்சணத்தில் குழந்தை பிறந்த செய்தியை எப்படிச் சொல்வது?

 

பள்ளத் தெருவிலிருந்து பஞ்சாயத்துகளை குடியானத்தெருவுக்கு அழைத்தார்கள்.

"படையாச்சி பொண்ணு கேக்குதா?" என்று ஒருத்தர் உறுமினார்.


"ரொம்பதான் துளிர்த்துடுச்சி.....ரெண்டு பேரையுமே துண்டு துண்டா வெட்டலன்னா என் ஒரு பக்க மீசையை அறுத்துக்கறேன்..." என்று கையில் அரிவாளுடன் ஒரு இளைஞன் துடித்தான்.


"நாங்க படிக்க வச்சி ஆளாக்குனா...அல்வா மாதிரி கொத்திகிட்டு போவத்தான் பசங்கள பெத்து போடுறீங்களா? தீ வச்சி கொளுத்துறேன் பாரு…" என்று ஒரு இளவட்டம் கூட்டம் துள்ளியது.


ஊரே திகில் புகையில் சிக்கி மூச்சு முட்டியது.

 

மூன்று மாதங்கள் முழுசா போனது. 

 

மல்லாக்க படுத்திருந்த குழந்தை பெரண்டு படுத்தது. அஞ்சலை பாதியாய் உருக்குலைந்து, பிள்ளைக்குப் பால் கொடுக்கும் அளவுக்குக் கூட தெம்பில்லாமல் இருந்தாள். தாத்தாவும் பாட்டியும் அஞ்சலை தூங்கும் நேரம் பார்த்து கொஞ்சுவார்கள். மற்ற நேரங்களில் சபிப்பார்கள்.

 

குழந்தைக்கு இளங்குமரன் என்று பெயர் வைத்தார்கள். அந்தத் தெருவிலிருந்தும் யாரும் வரவில்லை. இந்தத் தெருவிலும் யாரும் கண்டு கொள்ளவில்லை.


இதோ வளர்ந்து பள்ளிக்கூடம் போகும் வயசு வந்து, பள்ளிக்கூடத்திலும் சேர்த்தாச்சு.


**********

ந்து வருடமாக சசிக்குமாரும் பார்கவியும் திருத்தெங்கூர் பக்கம் வரவேயில்லை.


எங்கிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் சமீபத்தில், சசிக்குமாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. பார்கவி முழுகாமல் இருப்பதாகவும், அவள் அம்மாவை அவள் பார்க்க ஆசைப்படுகிறாள் என்றும் எழுதியிருந்தது.


அஞ்சலையும் சிவநேசனும் கலந்தாலோசித்தார்கள். இன்னும் பத்து நாளில் தீபாவளி வரப் போவதால் சசிக்குமாருக்கும் பார்கவிக்கும் ரகசியமாக ஒரு கடிதம் எழுதி அனுப்ப முடிவு செய்தார்கள்.

 

அப்படியே கடிதம் எழுதி, யாருக்கும் தெரியாமல் திருநெல்லிக்காவல் சென்று போஸ்ட்ஆபீஸ்க்கு வெளியே இருந்த தபால் பெட்டியில் போட்டாள்.


தீபாவளிக்கு ஊருக்கு வரவேண்டும் என்றும் வயிறு தள்ளிக்கொண்டிருக்கிற பார்கவியைப் பார்த்தால் நிலைமையைச் சமாளித்து விடலாம் என்றும், இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது என்றும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தாள்.

 

தீபாவளி.


சிவநேசன் புதுத் துணி வாங்க திருத்துறைப்பூண்டிக்குப் போயிருந்தான். சிவநேசன் அப்பா, அதிரசத்துக்கு மாவு இடிக்க நாடார் மில்லுக்குச் சென்றிருந்தார். அஞ்சலை குடக்கல்லில் இட்லிக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்தாள்.

 

சிவநேசன் அம்மா வந்து திண்ணையில் உட்கார்ந்தாள். யாரையோ பார்த்து பேசுவது போல் ஜாடையில் பேசினாள்.


"சீமைக்கு கடுதாசி போகுதாம்ல. ஏதோ நம்ம ஊரு பையன் போஸ்ட் ஆபிஸ்ல இருந்ததால தெரிஞ்சிச்சி…ஊர்ல ஒருத்தன வச்சிக்கிறா…வூட்டுல ஒருத்தன வச்சிக்கிறா…கடுதாசி போட்டு காதல் நடக்குதாக்கும்….அடச்சீ! இதெல்லாம் ஒரு பொழுப்பா…சாதிப்புத்தி போவுமா? நூலப் போல சேலை..தாயப் போல புள்ளங்ற மாதிரி தானே நடக்கும்..எல்லாம் கழிச்சல்ல போவ…நானா இருந்தா நாண்டுகிட்டு செத்தப் போயிருப்பன்....கடுதாசி ஆண்ட வூட்டுக்கு வந்திருச்சாமே… ஊர் மேய்ற செரிக்கி..வூட்டுக்கு வந்ததும் வந்தா… நல்லா இருந்த குடும்பம் சந்தி சிரிச்சி போச்சே…"என்று வாயிக்கு வந்ததெயல்லாம் பேசிக்கிட்டு இருந்தாள்.

 

அஞ்சலி ஒன்றும் பேசவில்லை. பேய் அறைந்தவள் போல் இருந்தாள்.


சிவநேசன் புதுத்துணி வாங்கிக்கொண்டு வந்துக் காண்பித்தான். அவளுக்குப் பிடித்த சிவப்பு நிறச் சேலை வாங்கி வந்திருந்தான். மகனுக்கு கோட் சூட் போன்ற ஒரு புதுவித ஆடை வாங்கி வந்தான். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் புதுத்துணிகள் வேறு. சின்னதாக ஒரு பட்டாசுப் பெட்டி.


விடிந்தால் தீபாவளி.

 

காலையில் எழுந்து தலையில் எண்ணெய் வைக்க சிவநேசன் அஞ்சலையைத் தேடினான்.


அடுக்களையில் சிவப்புச் சேலையில் தொங்கிக்கொண்டிருந்தாள். அப்பொழுது தான் தொங்கியிருக்க வேண்டும் என்று சிவநேசன் அலறிய போது, சிவநேசனின் அப்பா சுவர் மறைவிலிருந்து கிணற்றுப் பக்கம் போனது தெரிந்தது.


அப்பொழுது வெளியே ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது.


சிவநேசன் அஞ்சலையின் உடலைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, ஆசையாய் வாங்கி வந்த புது சிவப்பு சேலையை கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தான். திண்ணையில் ஒரு மூலையில் எறிந்துவிட்டு யார் ஆம்புலன்ஸில் வந்திருக்கிறார்கள் என்று பார்த்தான்.


ஆம்புலன்ஸிலிருந்து சசிக்குமார் உடலை, இரண்டு மூன்று முரட்டு ஆசாமிகள், வெளியே கொண்டு வந்து சிவநேசன் திண்ணையில் கிடத்தினார்கள்.


மண்டையிலும் நெஞ்சிலும் அடித்ததால் இரத்தம் வெள்ளமாய் வெளியேறி சசிக்குமார் உடல் வெளிறியிருந்தது.


ஆம்புலன்ஸ் உள்ளே, பார்கவி பித்துப்பிடித்தவள் போல் தலைவிரி கோலமாய் உட்கார்ந்திருந்தாள். அந்த முரட்டு ஆசாமிகள் ஆம்புலன்ஸில் ஏறி உட்கார்ந்தார்கள்.

 

திருப்பூரிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் சசிக்குமார் பாடியை இறக்கிவிட்டு, பார்கவியோடு, குடியானத் தெருவுக்குப் போனது.


ஊரே திரண்டது.

 

திண்ணையில் கிடந்த செவப்புச் சேலயை எடுத்துக் கொண்ட இளங்குமரன், எல்லாவற்றையும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

 

 

**********

3 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

வெள்ளிமலை நாதர் கோயிலிலிருந்து மணி ஓசை கிளம்புகிறது. அந்த மணியோசை வெண்தாமரையும் செந்தாமரையும் பூத்திருக்கும் குளத்தில் அலைகளைப் பரப்பிவிட்டு, எதிரேப் பெண்கள் நாத்து நடும் அழகை ரசிக்க விரைந்து வருகிறது. - அழகான பயன்பாடு. (தற்குறிப்பேற்ற அணி) திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய ஊர் இது, அது எங்கள் பனை ஓலை வழி தான் கிடைத்தது. - அழகான வரலாற்றுக் குறிப்பு பள்ளத் தெரு ஜனங்க யாராவது இருந்தாலும் எதாவது செய்யலாம்…பறை ஜனங்க நம்ம என்ன செய்றது? - சமூக நிலை கதைப் போக்கின் இடையில்கூட முடிவு இதுபோல வரும் என நினைக்கவில்லை. சமூகத்தின் நிலை இப்படித்தான் உள்ளது. ஒரு பக்கம் இனக்கலப்பு என்பது இயல்பாக மாறிக் கொண்டுள்ளது. (மலாய் இன மக்கள் இனக்கலப்பில் வருவதில்லை). மறுபக்கம் குலக்கலப்பு ஏற்றுக் கொள்ள முடியாததாகவே உள்ளது. சிவப்புச் சேல நிறக் குறியீடு அழகாகவே உணர்த்தப்பட்டுள்ளது. சிறுகதையில் அதிக வருணனை தேவையில்லை. வாழ்க குரு!

Edited
Like

வணக்கம் குரு செவப்பு - பேச்சு வழக்குச் சொல் சேலை - எழுத்து வழக்குச் சொல் செவப்புச் சேல - என்றிருந்தால் நன்றாக இருக்கும். மற்றவற்றைப் படித்தபின் எழுதுவேன்.


Like
Replying to

நன்றி குரு.

Like

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page