top of page

ஊட்டி, மசினகுடியில் வீதிநாடக வனயாத்திரை

Updated: Dec 19, 2021


1980ல் இந்தியாவில் உள்ள வனப்பிரதேசத்தை காப்பதற்கென்று வனமசோதா கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப்பட்டது. அதில் மாநில அரசுகளின் உரிமைகளைக் கட்டுப்படுத்தி, காட்டுப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை சேதப்படுத்தும் வண்ணம் அம்சங்கள் இருந்தன. அதை மையப்படுத்தி அந்தச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்கும் முகமாகவும், இயற்கை வளங்களைக் காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் ‘வீதிநாடக வனயாத்திரை’ செல்வது என தேடலில் முடிவெடுத்தோம்.

இந்த தடவை, பிரான்சிஸின் சொந்த பிரதேசமான நீலகிரி மலைக்காடுகளில் உள்ள ஊர்களில் நடத்துவது என்பது திட்டம்.


மசினகுடி என்கிற கிராமத்தில் கூடினோம்.


நண்பர் வர்கிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு சாப்பாடு கடையும், பேக்கரியும் வைத்திருந்தனர். அங்கே தங்கினோம். ‘காடு’ என்கிற நாடகத்தைத் தயாரித்தோம். காடுகளின் அவசியத்தையும், அதன் வளத்தைக் காக்க வேண்டிய தேவையையும், யார் அதை தேவையில்லாமல் வேட்டையாடினாலும் அதைத் தடுக்க வேண்டிய நிலைமையில் நாம் இருப்பதையும் உறுதி செய்யும் வண்ணம் நாடகம் உருவானது. வனமசோதாவின் அம்சங்களை புரிய வைக்கும் வண்ணமும் காட்சிகளும் வசனங்களும் இருந்தன.


தேடலில் யாரோ ஒருவர் நாடகத்தை எழுதவில்லை. அடிப்படைக் கருத்துக்கள் குழுவில் பேசப்படும். சில நாடக மாந்தர்களை உருவாக்குவோம். நேர்மறை கதாபாத்திரங்களும், எதிர்மறை கதாபாத்திரங்களும் இருக்கும். ஏதோ ஒரு காட்சியில் துவங்குவோம். வசனங்கள் இயற்கையாக எழும். ஒரு கட்டத்தில் நிறுத்தி அதை ஒருவர் எழுதிக்கொள்வார். மீள்நோக்கு நடக்கும். வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு நாடகம் அடுத்தக்கட்டத்துக்கு நகரும். இப்படியா ஜனநாயகமுறையில் நாடகம், எங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும்.


ஒரு பக்கம் நாடகம் உருவாகிக் கொண்டிருந்தாலும், பிரான்சிஸின் விருந்தோம்பலுக்கு குறைச்சல் இருக்காது. இன்றைக்கு அவர் வீட்டிற்குப் போனாலும், அந்தக் குணம் குறையாமல் இருப்பதை, நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.


காலையில் எழுந்து, ஊட்டி குளிரில், பனிப்போர்வையைப் பார்த்துக்கொண்டே, மூலிகை வாசம் நிறைந்த காற்றை இழுத்து விடுவதே ஒரு சுகந்த அனுபவம். அந்த அனுபவம் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்த போது, பிரான்சிஸின் விருந்தோம்பல் உள்ளத்துக்கு குளிர்ச்சியாக இருந்தது.


வர்கீஸின் வீட்டார்,

“புட்டு சாப்புடுங்க… டீ குடிங்க” என்று அன்பு மழைப் பொழிந்தனர். நாடக அனுபவங்களைச் சொல்வதற்குள், வேறு சில விடயங்களை சொல்லிவிடுகிறேன்.


கிளன்மார்கன் என்கிற இடத்திற்கு எங்களை பிரான்சிஸ் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு பெரிய ஏரி இருக்கிறது. மிக உயரமான இடம். அங்கிருந்து ராட்சச பைப்புகளின் மூலம், தண்ணீரை வேகமாக கீழே இறக்கி மின்சாரம் தயாரிக்கிறார்கள். பொக்காரா மின் திட்டம் என்று நினைக்கிறேன். அதற்கு ‘வின்ச்’ என்கிற இழுவை வாகனத்தில் செல்ல வேண்டும். அது ஓர் ஆனந்த அனுபவம். இயற்கை காட்சிகளைப் பார்த்துக்கொண்டே மலையுச்சிக்குப் போய், ஏரியில் படகு சவாரி செய்து விட்டு, வின்ச் வழியே இறங்கி வந்தோம்.


நன்றி பிரான்சிஸ்! அந்த காட்சிகள் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கின்றன.

மசினகுடியில் மின்வாரியத்துறையில் பணி செய்வோரின் வீடுகள் இருக்கின்றன. ஈபி குவார்ட்டர்ஸ். அவர்கள் நலவாழ்வு சங்கத்தின் சமுதாயக்கூடம் ஒன்று இருந்தது. அங்கே நாடகம் போட்டோம். விவசாயப் பிரச்சனையைச் சொல்லும் ‘நியாயங்கள்’ நாடகத்திற்குப் பதிலாக, ‘காடு’ நாடகத்தைப் போட்டோம். மற்றபடி கபடிமேட்ச், வேலை, குப்பைத்தொட்டி, புறாக்கள் என்ற நாடகங்களும், புதிய பாடல்களும் என இடத்திற்கேற்றாற் போல, அங்கிருக்கும் பிரச்னைகளுக்கு ஏற்றாற் போல வசனங்களையும் காட்சிகளையும் அமைத்துக்கொண்டோம். அது தானே வீதி நாடகத்தின் சிறப்பு!


வழக்கமான தேடல் உறுப்பினர்களோடு, வனயாத்திரைக்கு எங்களோடு ‘மணா’ என்கிற லெட்சுமணன் கூடுதலாக இணைந்துக் கொண்டார். (தற்போது மணா நாடறிந்த எழுத்தாளராகவும், ஊடகவியலாளராகவும் அறியப்படுகிறார்.)

காட்டுப் பிரதேசம் ஆதலால், ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்துச் சென்று தான் நாடகம் போடவேண்டி இருந்தது. பேருந்தைப் பார்க்காத மனிதர்கள் இருக்கும் ஊர்களுக்குச் சென்றோம். அப்படி சென்ற போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்தது. சொல்லட்டுமா?

மசினகுடியிலிருந்து வாழைத்தோட்டம் என்ற ஊருக்குப் பயணமானோம். ஊரின் வாசனை முடிந்து, காடு துவங்கியது. சற்று நேரத்தில் காடு, அடர்ந்த காடானது. சுற்றி வெறும் மரங்களும், செடிகளும், கொடிகளும் காணப்பட்டதே தவிர வானமே தென்படவில்லை. பகல் நேரத்திலும், கொஞ்சம் இருட்டு கூடி, பயத்தைக் கூட்டியது.


நாங்கள் கிட்டத்தட்ட 15 பேர். ஒருவர் பின் ஒருவராக, வரிசையாக நடந்துச் சென்று கொண்டிருந்தோம். வாழைத்தோட்டம் என்ற ஆதிக்குடிகள் வாழும் ஊருக்கு எங்களை அழைத்துச் செல்ல, கொம்பன் என்கிற ஓர் ஆதிவாசி நண்பரையே பிரான்சிஸ் ஏற்பாடு செய்திருந்தார். கொம்பன் வெறும் காலில் தான் நடந்தார். அவர்தான் வரிசையில் முதல் ஆள். எறும்பு ஊர்வதை மனக்கண்ணில் கொண்டு வந்தீர்களென்றால், நாங்கள் நடந்துச் செல்லும் வரிசைக் கட்டுமானத்தை உங்களால் உருவகப்படுத்திக் கொள்ள முடியும்.


சற்றென சிறிய பாதை ஒத்தையடிப் பாதையாக மாறி, சில இடங்களில் பாதையற்று இருந்தது. கொம்பன், தன் ஒரு கையில் வைத்திருந்து பெரிய தடியாலும், இன்னொரு கையில் வைத்திருந்த நீண்ட கத்தியாலும், புதுப்பாதையை உருவாக்கிக்கொண்டு, எங்களுக்கு வழிகாட்டியாக முன்னே போய்க்கொண்டு இருந்தார்.

எங்களோடு வந்த காமராஜ் நகைச்சுவையாப் பேசக்கூடியவர். அலுப்பு தீர ஏதோ சத்தமாகப் பேசிக்கொண்டே வந்தார். சில நேரம் சிரித்துக்கொண்டு, பெட்ரோமாக்ஸ் மண்ணெண்ணெய் புட்டி போன்ற சாமான்களைத் தூக்கிக்கொண்டு, நடப்பதில் உள்ள சிரமங்களைத் தாங்கிக்கொண்டு நடந்துக் கொண்டிருந்தோம்.

“அப்படியே நில்லுங்க!” என கொம்பன், தன் இருக்கைகளையும் அகல விரித்து எங்கள் நடையை நிறுத்தினார். ஒரு கையில் கம்பு வானத்திற்கும் மண்ணுக்குமாய். இன்னொரு கையில் கத்தி மரத்திற்கும் தரைக்குமாய் என ஏதோ ஐய்யனார் சாமி போலவே காட்சியளித்தார். சற்றே குனிந்து மிகக் கவனமாக, காதுகளை அப்படியும் இப்படியும் ஆட்டி, கவனித்தார். ஆடாமல் அசையாமல் நின்றார். அவருக்குப் பின்னே நான். எனக்குப்பின்னே பிரான்சிஸ். அவருக்குப் பின்னே காமராஜ். இப்படி வரிசை.

கொம்பன், என்னைப் பார்த்து, தன் வாயில் ஆட்காட்டி விரலை வைத்து ‘உஷ்’ என்று சொல்வது போல், ஒலி இல்லாமல் எச்சரித்தார். அவரது கண்களில் ஒரு வித பதற்றத்தைப் பார்த்தேன். எனக்கு பயம் தொற்றிக் கொண்டது. திரும்பி பிரான்சிஸைப் பார்க்கலாமா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. மெதுவாகத் திரும்பி, பிரான்சிஸைப் பார்த்து, புருவங்களைத் தூக்கி, ‘என்ன’ என்பது போல் வினவினேன். அதற்கு பிரான்சிஸ் கண்களை மூடித் திறந்து, ‘அமைதியாக இரு’ என்பது போல் சமிக்ஞை செய்தார். மற்றவர்கள் மூச்சு விடும் சத்தம் கேட்டது. என் நெஞ்சு படபடத்தது.


“ஹே!….ஹேய்ய்யய்யய்யய்ய்!!!” என்று எங்கிருந்தோ ஒருவர் கூக்குரலிடும் ஒலி கேட்டது. இரண்டு மூன்று முறை அந்த அபாயக் குரல் ஒலித்தது.


கொம்பன், தன் வலது காலை எடுத்து பின்னுக்கு வைத்தார். என்னைப் பார்த்து ‘பின்னால் போ’ என்பது போல் தலையை மெதுவாக அசைத்தார். நானும் ஓர் அடி நகர்ந்தேன். வரிசையும் நகர்ந்திருக்க வேண்டும்.

‘யானைக் கூட்டம் வந்துவிட்டதோ?’

‘சிங்கம் பில என வந்து அடித்து தின்று விடுமோ?’

‘கரடி ஒரே அடியில் ஆளை சாகடித்து விடுமாமே’

‘நரிக்கூட்டம் வந்தால் என்ன செய்வது?’

காட்டில் வாழும் மிருகங்களின் பட்டியலைத் தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு ஆபத்து! கலக்கம் உச்சிக்கு ஏறியது.

என்ன நடக்கிறது என்று தெரிந்தாலாவது, இன்ன அபாயம், இது நடக்கும் என்று யூகிக்கலாம். என்னவென்றே தெரியாமல் இருப்பது மிகப் பெரியக் கொடுமை. கொம்பன், மறுபடி என்னைப் பார்த்து, ஆட்காட்டி விரலை அப்படியும் இப்படியும் அசைத்தார். ‘சரி! நீங்கள் சொல்வது புரிகிறது. பேசமாட்டோம்! முடிந்தால் மூச்சும் விடாமல் இருக்கிறோம்’ என்று அவருக்கு சொல்வதற்கு தலையை அசைக்கலாமா? கூடாதா? என்று புரியாமல் கண்களை அகல விரித்து அவரையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவரது கண்களில் முன்பு இருந்த பதற்றம் போய், கொஞ்சம் பீதி கலந்திருப்பதாக நினைத்தேன். கொம்பனே கதி கலங்கிப்போய் இருக்கிறாரே என எண்ணிக் கொண்டிருக்கும் போது,

“திடு..திடு..திடு…திடு..திடு” வனெ 50, 60 மாடுகள் எங்களின் வலப்பக்கத்திலிருந்து, இடப்பக்கத்திற்கு பத்தடி தூரத்தில் நாலுகால பாய்ச்சலில் ஓடின. மாடுகள் கத்திக்கொண்டே ஓடி வந்த சத்தம், மெதுவாக கேட்கத் துவங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து…எங்களின் குறுக்கே ஓடிய போது உச்ச ஸ்தாயியிக்கு மாறி, கன்னா பின்னா’வென்று கதறிக்கொண்டு, எங்களைத் தாண்டி ஓடிய சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சப்தமே இல்லாமல் போனது. இந்த மாடுகளை யார் அல்லது எவை துரத்துகின்றன? யோசித்துக்கொண்டிருக்கும் போதே,


“ ஆ!…ஆவ்!…ம்ஆ!…ம்ஆ!….” என்று ஒரு மருகிய குரல் கேட்டது. பத்தடி தூரத்தில், எங்களுக்கு எதிரே, பல மிருகங்கள் ஏதோ ஒன்றை அடித்து, கடித்துக் குதறுவதால் வருகிற ஈனக்குரல் என்பது மட்டும் புரிந்தது. உறுமல் சத்தம் கேட்டது.


நாடி நரம்பெல்லாம் உறைந்து போய் நின்றுகொண்டிருந்தோம். நாங்கள் நாடகத்தில் ‘ஸ்டில்’லில் நின்று பழக்கப்பட்டவர்கள் தானே!

‘அப்படியே நில்லுங்க’ என்று சொல்லி பத்து, பதினைந்து நிமிடங்கள் இருக்கும். அமைதி… பிறகு அலறல். அடுத்த அமைதி.

கொம்பன், கத்தி வைத்திருந்த வலது கையை மேலே உயர்த்தி, ‘போகலாம். ஆனால் பேசாமல் வாங்க’ என்பது போல் சைகை காண்பிக்க, நாங்கள் ஸ்லோமோஷனில் (அதுவும் தான் எங்களுக்கு பழக்கமாச்சே!!!) ஊர்ந்தோம். பத்து அடி போயிருப்போம்.

ஓர் இளங்கன்னு குட்டியின் வயிறு கிழிந்து, குடல் சரிந்து, சுற்றி இரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. ஒரு கால் ஒடிந்து கிடந்தது. பல இடங்களில் கடிக்கப்பட்டு, வாயிலிருந்து நாக்கு தள்ளி…கண்களில் மரண பயத்துடன், மூச்சை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருந்தது.

‘நிக்கக்கூடாது…அவசரம் அவசரமாக அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும்’ என கொம்பன் பேசாமலேயே அறிவுறுத்தியதன் பேரில், அதுவரை ‘ஊர்ந்து’ வந்த வரிசை, ‘அவசரமா’ ஆனால் சத்தம் இல்லாமல் நகர்ந்தது.


எல்லோருக்கும் வியர்த்து இருந்தது. பத்து பதினைந்து நிமிடம் அப்படியே ‘மொழி மறந்து’ நடந்திருப்போம். பாதுகாப்பான தூரம் வந்துவிட்டோம் என்று தெரிந்ததும், பிரான்சிஸ் தான் கொம்பனைக் கேட்டார்.

“ என்ன அண்ணே?”

“ அட ஒன்னுமில்லே! இந்த செந்நாய்ங்க இப்டித்தான் கன்னுகுட்டிகள மறிச்சி அடிச்சி திங்குங்க”

“செந்நாய்ங்க வந்தா கூட்டமால்ல வரும்”

“ ஆமா! கிட்டத்தட்ட 20, 25 செந்நாய்ங்க வந்துருக்கும்”

“கன்னுகுட்டிகிட்ட செந்நாய்ங்கள காணுமே!”

“ நீங்க பாக்கலயா? சுத்தி மறைவா நின்னுச்சுங்க. கன்னுகுட்டிய கடிச்சி கொதறும் போது, நம்ம அரவங் கேட்டு...மறைஞ்சு நின்னுச்சுங்க”

“ அப்ப…அந்த செந்நாய்ங்களத் தாண்டித் தான் வந்தோமா?”

“ ஆமா! நாம இப்ப தாண்டி வந்ததும், மறுபடி அந்த கன்னுகுட்டிய தின்னுட்டு இருக்குங்க”

இந்த உரையாடலை உற்றுக் கேட்ட காமராஜ்’க்கு அழுகை வந்துவிட்டது.

“ ஏன்யா! நடிப்பு, டான்ஸ், பாட்டுன்னு ஜாலியா இருக்கும்’னு நெனச்சு வாந்தா… பரலோகத்துக்கு பார்சல் பண்ணி அனுப்பலாம்னு நெனச்சீங்களா? இப்படி உயிரை பணயம் வச்சி நாடகம் போடனுமாயா? சாமி! என்னை ஆளவிடுங்கய்யா...” என உண்மையிலேயே கெஞ்ச ஆரம்பித்து விட்டார்.

எங்கே திரும்பி போவது? அன்றைக்கு வாழைத்தோப்பில் நாடகம் போட்டுவிட்டு, அங்கே இருக்கும் ‘உண்டு உறைவிடப் பள்ளி’யில் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் பகலில், இதே வழியில் தான், திரும்ப வேண்டும். காமராஜின் முகம் பேயறைந்து போலாகிவிட்டது. இதை எழுதும் போது தான் நினைக்கிறேன். அன்றைக்கு, எங்களில் யாருக்காவது ஏதாவது ஆகியிருந்தால்?

“வாழைத்தோப்பு போக இன்னும் எவ்வளவு நேரமாகும்?”

“ இதோ! நாலு எட்டுல போயிட்லாம்” என கொம்பன் சொன்னார். அவர் அப்படி சொல்லி கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிச்சித்தான் வாழைத்தோப்பு வந்தோம்.


ஓர் ஓடையைக் கடந்தால் ஊர். ஊரென்றால் ஊர் கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மொத்தமாக ஏழெட்டு வீடுகளே இருந்தன. கல்லு கட்டிடம் என சொல்லிக் கொள்கிறாற் போல அந்த உண்டு உறைவிடப் பள்ளி மட்டுமே இருந்தது. ஏதோ அரசாங்கத் திட்டத்தில் ‘கட்டப்பட வேண்டும்’ என்கிற கட்டாயத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்று நினைக்கிறேன்.

“சரி! ஊருக்குள் போவதற்குள், இங்கேயே உட்கார்ந்து என்ன நாடகம் போடப்போகிறோம் எனப் பேசிவிட்டுப் போகலாம்.” என்றார் பிரான்சிஸ்.


சல சல’வென்று ஓடிக்கொண்டிருந்து ஓடையில் நடுவே துருத்திக்கொண்டு சிலப் பாறைகள் எங்களை அதிசயமாகப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தன. அவைகளில் நாங்கள் போய் உட்கார்ந்தோம். கொம்பன் ஓடையில் முகம் கழுவிக்கொண்டிருந்தார்.

“என்ன பாட்டு பாடி துவங்கலாம்?” என்று கேட்டு முடித்த அந்த ஷணத்தில்,


‘தொப்…தொப்…தொப்’பென்று வானளாவிய மரங்களின் உச்சியிலிருந்து குதித்தன. சிங்க வால் குரங்குகள்!!! முப்பது நாற்பது குரங்குகள் இருக்கும். இருபது அடி தூரத்தில் ‘சட சட’ வென விழுந்து முகத்தை மட்டும் எங்களைப் பார்த்து ஆடாமல் அசையாமல் நின்றன. கால்களே மூன்று நான்கடி. அதற்குப் பிறகு உடம்பு, அதற்கு மேலே நான்கு ஐந்து அடிக்கு அதன் வால். வானத்தை நோக்கி நட்டுக்கொண்டு நின்றன. அப்படிப்பட்ட காட்சியை அதுவரை பார்த்ததில்லை. எல்லாம் ஒட்டுமொத்தமாக வந்து தாக்கினால் எல்லோரும் அம்போ!


தூக்கி வந்த சாமான்களை எடுத்துக்கொண்டு, பாறையிலிருந்து இறங்கி, நீரின் மேல் கால் வைத்து விட்டோம். காலில், நீர் ‘என்ன பயமா?’ என எங்களைத் தொட்டு தடவிக் கேட்டு சிரித்துக்கொண்டே போவது போன்று கல கல சப்தம். அப்படி குரங்குகள் எங்களை நோக்கி ஓடி வந்தால் ‘சல, சல’வென ஓடி ஓடையைக் கடந்து விடுவது என்று எங்களுக்குள் பேசிக் கொள்ளாமலேயே தயாராகிவிட்டோம்.

‘அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’ காட்சி நான்கைந்து நிமிடத்தைக் கடந்தது. சிங்கவால் குரங்குகள் தங்கள் உருட்டு விழியால் முறைத்த வண்ணம் இருந்தன. போகிற பாடும் இல்லை. எங்களை துரத்தின பாடும் இல்லை.

“பயப்படாதீங்க! ஒன்னும் பண்ணாது. ஓடிப்போயிடும்…” என கொம்பன் சொன்னார். அப்படி சில ஜந்துக்கள் போருக்குத் தயாராவது போல அங்கு நிற்பதைக் கண்டு கொள்ளவே இல்லாத கொம்பன், “சரி! வாங்க…சூரியன் எறங்கி நேரமாச்சு’ ஏன்றார். ஊரைப்பார்ப்பதும், குரங்குகளைப் பார்ப்பதும், மறுபடி ஊரைப் பார்ப்பதும் பிறகு குரங்குகளைப் பார்ப்பதும் எனத் தட்டுத் தடுமாறி ஓடையைக் கடந்தோம்.

எல்லோரும் காமராஜைப் பார்த்தோம். கையெடுத்து கும்பிட்டார். ஆனால் அவருக்கு சோதனை இனிமேல் தான் இருக்கிறது என்பது அப்பொது அவருக்குத் தெரியாது.


கொண்டு போன பெட்ரோமாக்ஸ் விளக்கில் மண்ணெண்ணெய் ஊற்றி விளக்கேற்றினார் ரிஷி. பிரான்சிஸ் ஒரு வீட்டிலிருந்து ஒரு அரிக்கன் விளக்கை வாங்கி வந்தார். நான், இராஜ மதிவாணன் மற்றும் சுப்புவோடு சேர்ந்து ஒவ்வொரு வீடாகச் சென்று நாடகத்திற்கு அழைத்தோம். அல்போன்ஸ், சுரேஷ், பாலா, பிரபா, மணா எல்லாம் அரங்கத்தை சுத்தப்படுத்தி தயாராகிக்கொண்டிருந்தனர்.

நாடகம் துவங்கியது. நாங்கள் மட்டும் தான் வட்டமாக நிற்கிறோம். மக்கள் யாரும் வரவில்லை. தூரத்தில் ஒரு பாட்டி, பெரிய கனத்த போர்வையைச் சுற்றிப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அங்கிருந்து அவருக்கு கண் தெரியுமா என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது. குளிர் வேறு! நாங்கள் தான் இடுப்புக்கு மேலே ஒன்றும் அணியமாட்டோமே. நடுக்கம் தொற்றிக்கொண்டது. இரண்டு மூன்று குழந்தைகள் ஓடிவந்து உட்கார்ந்தார்கள். ஒரு பாட்டு பாடி முடிக்கும் நேரத்தில், நாலைந்து ஆண்கள், போர்வையைப் போர்த்திக் கொண்டு அங்கங்கே நின்றார்கள்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்தது.


உண்டு உறைவிடப் பள்ளியில் சாப்பாடு தயார் செய்து வைத்திருந்தார்கள். அது 20 அடி நீளத்தில் 15 அடி அகலத்திற்கு ஓர் ஓட்டுக் கட்டிடம். நாலு பக்கமும் ஜன்னல்கள். இரண்டு கதவுகள்.

ஊர் பெரியவர் வந்தார்.

“எல்லாரும் இங்க படுத்துக்குங்க சாமி!”


வரிசையாகப் படுத்தோம். களைப்பில் தூங்கத் தயாரானோம். பெரியவர் சொன்னார்,


“ கொம்பா! ஆன (யானை) வந்து சன்னல் வழியா தும்பிக்கையை விட்டு துழாவிப் பாக்கும். பயப்படவேண்டாம்’னு சொல்லிட்டியா” என்று சாவகாசமாகக் கேட்டார்.


ஜன்னல் ஓரமாகப் படுத்திருந்த காமராஜ், துள்ளிக்குதித்து, பலர் மேல் ஏறிப் பாய்ந்து, கட்டிடத்தின் மையத்திற்கு வந்தார். தன்னை அழைத்து வந்த மதிவாணனை சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்த்தார். “வீட்டுல சரியா கூட சொல்லிட்டு வரலேயே! ஏதும் நடந்தாக் கூட, இப்படி ஆச்சு’ன்னு வீட்டுல போய் சொல்ல ஒரு அருகதை இல்லயே! அத்துவான காட்டுல வந்து, இப்படி யானைக்கு இரையாகனுமா? என்னென்ன கனவெல்லாம் கண்டிருந்தேன்…மோசம் பண்ணிட்டீங்களய்யா!!! தும்பிக்கையால துழாவுமா? ஹேய்!….பிரான்சிஸ். இவ்வளவு நீட்டம் வருமா!” எனப் புலம்பித் தீர்த்தார். பயத்திலும் சிரித்துத் தீர்த்தோம்.


காலையில் எழுந்தோம். மசினகுடிக்கு திரும்ப பயணமானோம். உண்டு உறைவிடப் பள்ளியில் அருகே, கொம்பன் ஒரு தடத்தைக் காண்பித்து, “ இதப் பாத்தீங்களா… ஆனத் தடம். ராத்திரியில வந்துட்டு போயிருக்கு. அங்கப் பாத்தீங்களா.. அது ஆன சாணி”.


“தேடல்’லேர்ந்து என் மெம்பர்ஷிப்பை எடுத்துங்க பிரான்சிஸ்! ஒங்களுக்கு கோடி புண்ணியம்” என விளையாட்டாகச் சொல்லிக்கொண்டே வந்தார் காமராஜ். மசினகுடி வந்து சேர்ந்ததும் தான் முறையாக மூச்சு விட்டோம்.


அடுத்த நாள் நார்தர்ன் எஸ்டேட் என்ற இடத்திற்குப் போய் நாடகம் போட்டோம்.


அடுத்த நாள் மாவநல்லா போனோம். அங்கேயும் நிகழ்ச்சி. மாவநல்லாவில் நாடகம் முடிந்து இரவு உணவு. காட்டில் உள்ள ஒரு வித காளானைப் பறித்து வந்து ஆட்டுக் கறிக் கொழம்பு போல் ஒரு சுவையான கொழம்பு வைத்து, ஆவி பறக்க அரிசி சோறில் ஊற்றி, ஆசையாகப் பரிமாறினார்கள். அட டா! நாற்பது வருடத்திற்குப் பிறகும், இதை எழுதும் போது நாக்கு ஊறுகிறது. அந்த வாசனை மூக்கில் ஊர்கிறது. ஊருக்கு வெளியே, வயக்காட்டில் மூங்கிலைக்கொண்டு உயரமாக ஒரு கட்டுமானம் இருந்தது. மேலே இரண்டு பேர் படுத்துக் கொள்கிற மாதிரி ஓர் அமைப்பு இருந்தது.

“ அது எதுக்குன்னு தெரியுமா ஜான்?” பிரான்சிஸ் தான் கேட்டார்.

“ ம்ஹூம்! தெரியல” என்றேன்.

“ யானைகள் வந்தா, மேலேயிருந்து பார்த்து ஒலி எழுப்புவாங்க. உடனே மேளம் அடித்து கூச்சல் போட்டு யானையை தொரத்துவாங்க…”


மறுபடியம் யானைகளா?


வனயாத்திரையில் எந்த இடத்திலும், “ ஏய்! நாடகத்தை நிறுத்து.” என யாரும் தடுக்கவில்லை. ஆனால் அடுத்து நாங்கள் சென்ற கன்னியாகுமரியில் வசமான சம்பவம் காத்திருந்தது.


************


( தொடரும்...)

30 views0 comments

Comments


bottom of page