top of page

கொடைக்கானலில் வீதி நாடக மனித உரிமை யாத்திரை

Updated: Dec 19, 2021


“ஏறு!… ஏறப்பா!!… அதோ! அங்க கால வச்சுக்கோ… இந்தா..கையைப் புடிச்சுக்கோ!…ஏறு!”


மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. 1983. கொடைக்கானல். அனந்தகிரியில் தான் KEDS சிவா சாந்தகுமார் வீடு இருந்தது. ஏழாவதோ எட்டாவதோ தெரு. மூஞ்சிக்கல்’லில் இறங்கித்தான் அவர் வீட்டிற்குப் போக வேண்டும். அங்கு சுமை தூக்குவோர் சங்கம் உட்பட பல சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் மனித உரிமைப் பணிகளை ஆற்றி வந்தார். அவரின் அழைப்பின் பேரில் தான் தேடல் குழு அங்கும் போயிருந்தது.


மூஞ்சிக்கல் பஸ் ஸ்டாண்டில் பயங்கர மழை. சொன்னபடி நாடகம் போட பெருமாள் மலை என்ற இடத்திற்குப் போக வேண்டும். மழையில் நனைந்தபடி மூஞ்சிக்கல்லில் ஒரு கோவிலுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு லாரி வந்தது. அதில் ஓட்டுனரின் உதவியாளர் (கிளீனர்), சிவா’வைப் பார்த்துவிட்டு நிறுத்தி, விளக்கைப் போட்டுப் போட்டு அணைத்தார். சிவா தலையில் கையை வைத்து மறைத்துக் கொண்டு, கவனத்துடன் ஓடிப் போய், ஏதோ பேசிவிட்டு வந்தார். நாங்கள் லாரியில் ஏறிக் கொண்டு, பெருமாள் மலையில் இறங்கிக் கொள்வது என முடிவு. அப்பொழுது தான் மேற்சொன்ன உரையாடல் நிகழ்ந்தது.


அது விறகு ஏற்றிச் செல்லும் லாரி. கரடு முரடாக இருந்தது. அதில் ஏறி, மேலே போடப்பட்டிருந்த தார்ப்பாயிக்குள் நுழைந்து, மழையிலிருந்து காப்பாற்றிக் கொண்டு, குளிர் நடுக்கத்தில் உட்கார்ந்திருந்தோம். லாரி கிளம்பியது. வளைவு வளைவாக சாலைகள்.


ஏதோ ஒரு வளைவில், விறகு சரிய, எங்களோடு வந்த KEDS பணியாளர் ஒருவர் சறுக்கி விழப் போக யாரோ கை தூக்கி காப்பாற்ற… திரைப்படங்களில் வருவது போல் திகிலாக இருந்தது.


பெருமாள் மலை போய் சேர்ந்த போதும் மழை நின்றபாடில்லை. லாரியிலிருந்து இறங்கி ஒரு வீட்டின் முன் பகுதியில் சிலரும், எதிரே பூட்டிக்கிடந்த பெட்டிக் கடையின் முன் பகுதியில் சிலரும் என ஒதுங்கி நின்றோம்.


மழை நின்றது.


ஆனால் எங்கும் சகதி. தேடலில் ஒரு பழக்கம் இருந்தது. எந்த ஊர் சென்றாலும் நாலைந்து பேராகப் பிரிந்து, இந்த இடத்தில், இந்த நேரத்தில் நாடகம் போடப் போகிறோம் என்று அறிவிப்பு கொடுத்து வந்து, பிறகு அரங்கத்தில் நாடகம் துவங்கும். அப்படி பெருமாள் மலையில் சில தெருக்களில் ஏறி இறங்கி அறிவித்தோம். மக்கள் சிலர் குடைகளோடும், ஸ்வெட்டர் அணிந்தும், போர்வைகளோடும், குல்லா சகிதம் என பல தினுசில் வந்து நின்றார்கள்.

நாடகம் போட வேண்டிய இடத்தில் குண்டும் குழியுமாய் சகதியும் நீரும். யாரும் தயங்கவில்லை. வெளியில் தான் குளிர். உள்ளே இரத்தம் வெகு சூடாக இருந்தது. எப்போதும் போல் தரையில் உருண்டு, பிரண்டு நடித்துக் கொண்டிருந்தோம். கபடி மேட்ச் முடிந்து மனித உரிமைகள் பற்றிய புது நாடகம் ஒன்றை அரங்கேற்றிக் கொண்டிருந்த போது மழைத் துவங்கி விட்டது. ம்ஹீம்!! நாடகம் நிற்கவில்லை. தொப்பையாக நனைந்துக் கொண்டே குப்பைத்தொட்டி, புறாக்கள் நாடகம் போட்டு முடித்தோம்.


வெடவெட’ வென்று நடுங்கிக் கொண்டே, ஆவி பறக்கும் கொடைக்கானல் டீ குடித்திருக்கிறீர்களா? அதன் அருமை அன்று தெரிந்தது. திரும்ப அனந்தகிரி வந்தோம்.


அடுத்த நாள் பண்ணைக்காடு, மங்களம் கொம்பு என்று பயணம் தொடர்ந்தது. ஓர் இடத்தின் பெயர் மறந்து விட்டது. அது ஒரு காபி அல்லது டீ எஸ்டேட். உலகத்துக்கும் அந்த இடத்திற்கும் எள்ளவும் தொடர்பு இல்லாதது போல் இருந்தது. சாலை இல்லை. பேருந்து இல்லை. பத்து பனிரெண்டு மைல் நடந்து காட்டுக்குள் போனோம்.


போய்ச் சேர்ந்த இடத்தில், தொடர் வீட்டு வரிசை போல, முப்பது நாற்பது தங்குமிடங்கள் இருந்தன. பயந்த முகங்களுடன் சிலர் வெளிப்பட்டார்கள்.

“ இவங்க எல்லாம் யார் தெரியுமா?”

“ சொல்லுங்க.”

“ எஸ்டேட்’ல வேலை செய்ற கொத்தடிமைகள்.”

“ அப்படி கொத்தடிமைகள் இன்னும் இருக்காங்களா?”

“ இதோ! இருக்காங்களே!!”

“ அங்க வரிசையா….கட்டி வச்சிருக்காங்களே, அதெல்லாம் என்ன?”

“ அவங்க தங்கி இருக்கற அறைகள் தான்”


சிறையில் அறைகள் போல, வரிசையாக மரக்கட்டைகளால் கட்டப்பட்டிருந்த அறையொன்றில் நுழைந்தேன். உள்ளே நிமிர்ந்து நிற்க முடியவில்லை. பூச்சி பொட்டுகள் வரா வண்ணம் தரையிலிருந்து இரண்டு அடி உயரத்தில் இருந்தது. சுற்றி மரக்கட்டையால் இறுக்கி கட்டப்பட்டிருந்தது. மேலை ஒலைகள். படுத்துக்கொள்ள ஒரு படுக்கை. கொஞ்சம் தட்டு முட்டு சாமான்கள். பக்கத்திலேயே சமைக்க ஒரு ஸ்டவ். மரக்கதவு. அதன் மேல் ஒரு போர்வை தொங்கியது.


இப்படியும் வாழ்கிறார்களா? ஏதோ ஒரு சூழ்நிலையில் கடனை வாங்கிவிட்டு, காலமெல்லாம் வட்டியைக் கட்டிக்கொண்டு, குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல், உயிரைப் பணயம் வைத்து இருபத்து நான்கு மணி நேரமும் வேலை செய்துக்கொண்டு... என்ன வாழ்க்கை இது?


பிரான்சிஸூம் நானும் ஒரு மர வேரில் உட்கார்ந்தோம். இருவர் மனசும் கனத்திருந்தது. பிரான்சிஸின் கண்கள் எங்கேயோ வேர் குத்தி நின்றன. நான் தான் மௌனத்தைக் கலைத்தேன்.


“ பிரான்சிஸ்! என்னப்பா இது? இப்படி ஒரு வாழ்க்கை!!!”

“ மிருகங்கள் கூட சுதந்திரமா இருக்கும்’னு நெனக்கிறேன். அதற்கும் கீழான வாழ்க்கையா இருக்கு ஜான்.”

“ இதெல்லாம் மாறாதா?”

“ மாறனும்! நம்மைப் போன்ற ஆட்கள் இன்னும் நிறையப் பேர் வரனும்.”


நாடகம் துவங்கியது. 20, 30 பேர் அங்கங்கே உட்கார்ந்திருந்தார்கள். எல்லோர் கண்களிலும் சோகம் அப்பியிருந்தது. வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, மரங்களுக்கிடையே, மரக்கட்டைகள் போல நின்று கொண்டும், குத்துக்கால் போட்டு உட்கார்ந்துக் கொண்டும் இருந்தது இதயத்தில் வலித்தது.


சற்று நேரம் போயிருக்கும்.


இரண்டு மூன்று வன அதிகாரிகள் வந்தார்கள். இங்கெல்லாம் வரக்கூடாது. இப்படியெல்லாம் செய்யக்கூடாது. உடனேயே வெளியேறுங்கள் என எச்சரித்தார்கள். சிவா ஏதோ பேசிப் பார்த்தார். அவர்கள் ஒத்துக்கொள்கிற மாதிரி இல்லை. பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது.

மக்களில் ஒருவரை ஓர் அதிகாரி அழைத்தார். ஏதோ விசாரித்தார். அவர் என்ன பேசினார் என்று தெரியாது. மக்கள் எல்லோரும் எழுந்துப் போனார்கள். கோபமும் சோகமும் உள்ளுக்குள்ளேயே போட்டி போட்டுக் கொண்டிருக்க, நிகழ்ச்சியின் பாதியிலேயே கொடைக்கானல் டவுன் வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள், கொடைக்கானல் பஸ்ஸ்டாண்டிலிருந்து இறங்கி ‘பஜார் தெரு’ என்கிற மார்க்கெட்டில் நாடகம். தொடர்ந்து ‘லேக் ஏரியா’விலும் பக்கத்தில் ‘பிரையான் பூங்கா’விலும் நாடகம் போட்டோம்.


கடைசி நாள். கொடைக்கானலிலிருந்து கிளம்ப வேண்டிய கடைசி நாள். நான், சிவா மற்றும் பிரான்சிஸ் மூவரும் KEDS அலுவலகத்திற்குப் போனோம். சிவா ஏதோ வேலையாக இருக்க, நானும் பிரான்சிஸூம் வெளியில் வந்து, படிப்படியாக கீழே இறங்கிக் கொண்டிருக்கும் மடிப்புகளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்தோம்.


அவர் கண்களில், அந்தக் கொத்தடிமை என்று அழைக்கப்படுகிற, உயிரும் சதையும், இரத்தமும் இதயமும் உள்ள மனிதர்களின், முகங்கள் ஒட்டிக்கொண்டிருந்தது.

“ தேடலுக்கென்று ஒரு பயிற்சி மையத்தை துவங்கனும் ஜான்!” என்றார் பிரான்சிஸ்.

“ ஆமா பிரான்சிஸ். நிஜ நாடக இயக்கம் ஐயா மு. ராமசாமி அவர்கள் மதுரை திருபுவனத்தில் ஒரு பயிற்சி ஏற்பாடு செய்திருந்தார். நான் ‘குடும்பம்’ சார்பாக போய் கலந்துக்கிட்டேன். நம்ம மதிவாணனும் கலந்துகிட்டான். புரிசை கண்ணப்பத் தம்பிரான், அவர் பையன், கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, காந்திகிராமம் சீனிவாசன் ஐயா, பரிட்ஷா ஞானி எல்லோரும் வந்து பயிற்சி குடுத்தாங்க.”

“ நம்ம குணசேகரன் எல்லாம் கலந்துகிட்டாங்களே, அந்தப் பயிற்சி தானே!”

“ ஆமா! அப்பதான் பாதல் சர்க்கார், சென்னை ஓவியர்கள் கிராமத்துல வந்து நவீன நாடகப் பயிற்சி கொடுத்துட்டுப் போயிருந்தார்”

“ அது சரி. வெங்கட் சுவாமிநாதன் கூட ‘மனதில் பதிந்த காலடிச்சுவடுகள்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளாரே!”

“ ஆமா! அந்த பயிற்சிக்குப் பிறகு, வத்திராயிருப்பில் கூட ஒரு பத்து நாள், மு. ராமசாமி ஐயா நாடகப்பயிற்சி நடத்தினார். அதில் நான் கலந்துக்கொண்டேன், பிரான்சிஸ். அது மாதிரி நாம தேடலில் வீதி நாடகப் பயிற்சிகள் நடத்தனும் பிரான்சிஸ்.”

“ நிச்சயமா ஜான். நடத்தனும். நேத்து அந்த கொத்தடிமைகள் பகுதிக்கு போய்ட்டு வந்ததிலேர்ந்து மனசே சரியில்ல.”


குளு குளு கொடைக்கானல் எல்லார் மனதையும் ‘எரித்து’ அனுப்பியது. அடுத்த மாதமே அப்படியொரு பயிற்சி, திருநெல்வேலி கீழப்பாட்டத்தில் நடக்கும் என்று அன்று நான் நினைக்கவில்லை. அங்கு, பொறுமையின் சிகரமான பிரான்சிஸையே கோபப்படுத்திய ஒருவர் இருந்தது தான் உச்ச கட்டமே!


******************

( தொடரும்...)

18 views0 comments
bottom of page