top of page
Writer's pictureJohn B. Parisutham

தாமிரபரணி ஆற்றங்கரையில் வீதி நாடகப் பயிற்சி

Updated: Dec 19, 2021


1984.

திருநெல்வேலியில் உள்ள கீழப்பாட்டம் என்ற ஊர்.


“நளன் கூப்டுருக்காரு. வாங்க ஜான். அங்க சிமெண்ட் ஃபாக்டரியில வேலை செய்யற இளைஞர்களுக்கு நாடகப் பயிற்சி கொடுக்கனும்.” பிரான்சிஸ் அழைக்கப் போகாமல் இருக்கு முடியுமா? அவருடன் கூட இருப்பதே சுகமாச்சே!


நளன் வீடு. மச்சு வீடு. ஒரு திண்ணை ஹாலோடு சேர்ந்த அடுக்களை. ஒரு சிறு அறை. நானும் பிரான்சீசும் கேட்டுக்கும் வீட்டுக்கும் இடையில் இடது பக்கம், இருவர் படுக்கும் அளவுக்கு இருந்த இடத்தில் பாய் போட்டு படுத்துக் கொள்வோம். காலையில் எங்களை எழுப்பிவிட தனியாக ஒருவர் வருவார். அவர் எங்களை எழுப்பிவிடுவதே தனி சுகம்.


அவர் யார்? அவர் எப்படி எழுப்பிவிடுவார் என்று இந்த அத்தியாயம் முடிவதற்குள் சொல்லி விடுகிறேன். அவர் கேட்டை சத்தமிடாமல் திறந்துக் கொண்டு வருவதை நளனின் மனைவி எப்படியோ தெரிந்து விடுவார். எங்களுக்காக காபி போட்டு வந்து கொடுப்பார். அதைக் குடித்து விட்டு, பக்கத்தில் வேப்பங்குச்சியை ஒடித்து இருவரும் பல் விளக்கிக் கொண்டே, நடைதூரத்தில் இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு காலார நடப்போம்.

கைலியைக் கட்டிக் கொண்டு போகும் நாங்கள் வரும் போது துண்டு கட்டிக் கொண்டு, கைலியை துவைத்து தோளில் காயப் போட்டவாறு வருவோம். பிரான்சிஸிக்கு படோபடம் பிடிக்காது. எளிமை விரும்பி. யதார்த்தமாக வாழவேண்டும் என்று அடம் பிடிப்பார். நாடக அரங்கிற்குள் மட்டுமே அழகாக நடிப்பார். அரங்கிற்கு வெளியே நடித்தால் பிடிக்காது.

தாமிரபரணியில் குளிப்பது அலாதி சுகம். அந்த ஊர் மக்கள் போலவே, அந்த ஆறு நம்மோடு கொஞ்சி விளையாடும். நம்மை விட்டுப் பிரிந்து போக மனம் வராமல் நீர் நம்மைச் சுற்றிச் சுற்றி வரும். கரையில் உள்ள மரங்கள் நம்மைக் கண்டு கண்சிமிட்டி சிரிக்கும். சில நேரம் குருவிகளை அனுப்பி காதல் தூது விடும். நாங்கள் குளிக்கப் போகும் போது, சூரியனும் தயாராகி குளிக்க வந்து விடும். எங்களோடு சேர்ந்து குளிக்கும். நீரை தங்கமயமாக்கி, பிறகு வெண்கலம் அடுத்து வெள்ளிநிறம் என மாற்றி மாற்றி விளையாடும்.


தாமிரபரணிக்கு தற்காலிகமாக டாடா காட்டிவிட்டு, நளன் வீட்டுக்கு வந்தால் சூடு பறக்க இட்லியும் தொக்கும் தட்டில் தயாராக இருக்கும்.

சாப்பிட்டு விட்டு அன்றையப் பயிற்சிக்கு தயார் செய்வோம். கண்ணாடி விளையாட்டு, நம்பிக்கை விளையாட்டு, கற்பனை விளையாட்டு, பாத்திரங்களை உருவாக்குதல் விளையாட்டு, உடலை பொருளாக்குதல் விளையாட்டு, சக்தி பரிமாற்றம் என பிரான்சிஸ் வெவ்வேறு இடங்களில் கற்றுக் கொண்டதையும், நான் வெவ்வேறு இடங்களில் கற்றுக் கொண்டதையும் பரிமாறிக் கொள்வோம். நான் சிறந்த பயிற்சியாளன் என்று பெயர் வாங்க வேண்டும் என்று இருவருமே விரும்பியதில்லை. பயிற்சி சிறக்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருப்போம்.


இளைஞர்கள், பகலில், தொழிற்சாலைக்கு சென்று விடுவதால், மாலை 5, 6 மணிக்குத் தான் பயிற்சியைத் துவங்குவோம். பிரான்சிஸ்க்கு நேரத்தை வீண்டிப்பது பிடிக்காது. ஏதாவது பிரயோசனமாக செய்து கொண்டே இருக்க வேண்டும். பகல் நேரத்தை பல்வேறு கருத்துருக்களில் நாடகங்கள் தயார் செய்தோம். பக்கத்தில் சில குடும்பங்களுக்குச் சென்று அவர்களோடு உரையாடி, கள நிலவரத்தை, அவர்களது சமூக பொருளாதார பிரச்னைகளை தெரிந்துக் கொள்வோம்.

அப்படி ஒரு நாள், ஜோசப் என்ற ஓர் இளைஞர் வீட்டிற்குச் சென்றோம். ஜோசப் எங்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பல இளைஞர்களில் ஒருவர். பிரான்சிஸ் அப்போது சில மேஜிக்குகள் செய்வார்.


செய்தித்தாள் ஒன்றில், சிறு பை போன்ற அமைப்பை ஏற்கனவே செய்து வைப்பார். அந்த பைக்குள் கொஞ்சம் ஜீனியைப் போட்டு வைப்பார். இந்த முன்னேற்பாடு யாருக்கும் தெரியாது. ஏதோ ஒரு செய்தித்தாள் என எடுத்து, அதை மளிகைக் கடை கூம்பு போல சுற்றி, யாரையாவது கொஞ்சம் மணலைப் போடச் சொல்வார். ஜோசப்பின் தங்கை ஒருத்தி இருந்தார். அவர் தான் அந்த கூம்புக்குள் மணலைப் போட்டது. அதை கூம்பின் கீழ் பகுதியில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, திருப்பிக் கொட்டுவார். ஏற்கனவே பை போன்ற அமைப்பில் இருந்த ஜீனி கீழே கொட்டும். மணல் ஜீனியானது எப்படி என்று கேட்பார். எல்லோரும் வாயைப் பிளப்பார்கள்.

ஜோஸ்பின் தங்கைக்கு இந்த மேஜிக்கை ஜீரணிக்க முடியவில்லை. எப்படி மணல் ஜீனியானது என்ற பிரமிப்பிலேயே பிரான்சிஸை கடவுள் போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


பிரான்சிஸ் இன்னொரு மேஜிக்குக்கு தயாரானார்.


பழைய பத்து காசில் ஒரு மூலையில் முடி ஒன்றை ஒட்டி, கையில் பிடித்துக்கொண்டு, ‘வா, வா’ என்றால் கிட்டே வரும். ஒரு கைக்குட்டையின் மூலையில் ஒரு பத்து பைசா நாணயத்தை வைத்து தைத்துவிடுவார். அந்த கைக்குட்டையை அங்கு ஒருவரிடம் முன்னமயே கொடுத்து விடுவார். அதை நான் கேட்கும் போது கொடுங்கள் என்று சொல்லி விடுவார்.

சற்று நேரம் கழித்து, யாராவது ஒரு கைக்குட்டையைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்குவார். யாராவது ஒரு பத்து பைசா நாணயம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டு வாங்குவார். அந்த பத்து பைசாவை கைக்குட்டையில் வைப்பது போல் பாசாங்கு செய்து விட்டு, கைக்குட்டையில் இருக்கும் பத்து பைசாவை எல்லோரையும் தொட்டுப்பார்க்கச் சொல்வார். பிறகு உதறினால், பத்து பைசா மாயமாகிவிடும்.


ஜோசப்பின் தங்கை மிரண்டு போய்விட்டாள். எங்கே போனது அந்தப் பத்து காசு? நாங்கள், கீழப்பாட்டத்தில் இருந்த நாட்களில், பிரான்சிஸை கும்பிடாத குறையாகப் பார்ப்பாள். மற்றவர்கள் என்றால் அதோடு நிறுத்திவிடுவார்கள். இது பிரான்சிஸ் ஆயிற்றே! செய்தித்தாளில் பை அமைத்து ஜீனி போட்டதையும், பத்து பைசாவில் முடியை ஒட்டியதையும், கைக்குட்டையில் பத்து பைசாவை வைத்து தைத்ததையும் வெளிப்படுத்தினார். சமூகத்தில் ஒளிந்து கிடக்கிற ரகசியங்களை ஓவியங்கள் மற்றும் நாடகங்கள் மூலமாக புட்டு புட்டு எடுத்து வைக்கிற மக்கள் கலைஞன், சாதாரண மாயா ஜாலத்தில் மறைந்திருக்கிற ரகசியத்தை சொல்லாமல் விடுவானா?


மாலையில் பயிற்சி துவங்குவோம். தெருவிளக்கின் அடியில் தான் பயிற்சி நடக்கும். பரதன் என்ற இளைஞர் நளனின் சமூக அமைப்பில் பணி செய்து வந்தார். அவர் இளைஞர்களை ஒன்று சேர்ப்பார். ஒவ்வொருத்தராக வர வர சேர்த்து வைத்து, நாடகப் பயிற்சி கொடுப்போம். இரவு பதினோரு மணி, பன்னிரெண்டு மணி வரை பயிற்சி நீளும். அடுத்த நாள் அவர்கள் வேலைக்குப் போக வேண்டும் என்பதால் சீக்கிரம் போய் தூங்கச் சொன்னாலும் போக மாட்டார்கள். சுற்றி உட்கார்ந்து சமூகத்தைப் பற்றி பலக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.


பரதன் விவாதித்துக் கொண்டே இருப்பார். உங்களுக்கு பயிற்சி கொடுக்கும் வழி முறை சரியாக தெரியவில்லை என்பார். சமூக மாற்றத்தில், மாற்றத்திற்கான முன்னெடுப்பு மக்களிடமிருந்து வரவேண்டும் என்கிற பார்வை சரியா அல்லது சமூகப் பணியாளர்களிடமிருந்து தூண்டுதல் வரவேண்டும் என்கிற கண்ணோட்டம் சரியா என்கிற விவாதம் வந்தது.

பரதன் ஒரு பார்வையும், பிரான்சிஸ் வேறொரு பார்வையும் கொண்டிருப்பர். ஆரோக்கியமான கலந்துரையாடல் நிகழும். கோழி தான், முட்டைக்கு சூடு கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அது கூமுட்டை ஆகிவிடும் என்று ஒருவர் சொல்லுவார். அது சரி, ஆனால் கோழிக்குஞ்சு தான் உள்ளிருந்து ஓட்டை உடைத்து வரவேண்டும், இல்லையென்றால் குஞ்சு செத்துவிடும் என்று இன்னொருவர் சொல்வார்.


கீழப்பாட்டம் இளைஞர்கள் தான் சேர்ந்து பின்னாட்களில் ‘திருநெல்வேலி தேடல்’ என்கிற அமைப்பை உருவாக்கி ஜோசப் அதன் தலைவராகி, பல சமூக மாற்றப் பணிகளில் ஈடுபட்டார்கள்.


அவ்வாறு தான் பிரான்சிஸ் இந்த 45 வருடங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் இளம் பெண்களையும் சிந்திக்க வைத்து, கலைத்திறன் கொடுத்து, சமூக செயற்பாட்டாளர்களாக ஆக்கி இருக்கிறார். தமிழகத்தில் ஏதாவது ஒரு மூலையில் ஒருவர் வீதி நாடகம் தெரிந்தவராக இருக்கிறார் என்றால், அதன் வேர் பிடித்து வந்தால் மதுரையில் பிரான்சிஸிடம் வந்து சேரும். அதற்கு முன் மாடர்ன் டிராமா என்கிற முறையில், சிலர் நாடகங்கள் நடத்தி வந்தாலும், வீதி நாடகம் என்ற பெயருக்கு ஏற்றாற் போல, யாருக்குப் போய் சேர வேண்டுமோ அவர்களுக்கு, எங்குப் போய் சேர வேண்டுமோ அங்கு போய் சேர வைத்ததில் தேடலுக்கும் பிரான்சிஸிக்கும் பெரும் பங்கு உண்டு.


காலையில் எங்களை எழுப்பிவிட ஒருவர் வருவார், அவர் யார் என்று கடைசியில் சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா! இப்பொழுது சொல்லிவிடுகிறேன். இவர் தான் பிரான்சிஸின் பொறுமையைச் சோதித்தவர்.


நாங்கள் நளன் வீட்டில் திண்ணைக்கும், காம்பவுண்டு சுவருக்கும் இடையில் உள்ள சிமெண்ட் தரையில் படுத்திருக்கும் போது எங்களை எழுப்பிவிட ஒரு சின்ன ஆட்டுக்குட்டி தான் வரும். தினமும் வரும். எங்கள் மீது ஏறும். அங்கு வருவதற்கு முன் வயிறு முட்ட தண்ணி குடித்திருக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் மீது ஏறியதும், எல்லையில்லா மகிழ்ச்சியில் அன்பு மழை பொழியும். அந்த அபிஷேகத்தில் தான் நாங்கள் எழுவோம். அவர் தான் பிரான்சிஸின் பொறுமையைச் சோதித்தவர். இந்தப் பயிற்சி தொடக்கம் தான். இந்த விதை எப்படி விருட்சமாய் வளர்ந்தது தெரியுமா?

***************

( தொடரும்...)

11 views0 comments

Comments


bottom of page