கணேஷின் கதை
- உயிர்மெய்யார்

- 2 days ago
- 5 min read

இப்ப நான் என்ன சொல்லிட்டேன்’னு அம்மாவும் அப்பாவும் இப்படி மூலையில ஒக்காந்துட்டு அழுவுறாங்க? டின்னர் டைம் இது....பசிக்குது. சாப்பாடு போடாம...சோபாவுல ஒக்காந்துட்டு அழறதுக்கு நான் சொன்னது தான் காரணமா? அட போங்க! இந்த Gen X, Gen Y பெரியவங்களயே புரிஞ்சிக்கமுடியலீங்க! அப்படி என்ன சொல்லிட்டேன்’னு தான முழிக்கிறீங்க. இன்னக்கி காலையிலேர்ந்து எங்க வீட்டுல என்ன நடந்தது’ன்னு சொன்னாதான் ஒங்களுக்குப் புரியும். மேல படிங்க.
******
Let me introduce myself…என் பேரு கணேஷ்…I’m in Year 7. அப்போ என் வயச இன்னேரம் கண்டு பிடிச்சிருப்பீங்களே!…பொல்லாதவங்க நீங்க!! ஆமா..13 வயசு. டீன் குரூப்ல சேர்ந்துட்டேன். அரும்பு மீசை எட்டி பாக்குது. சரி! கதைக்கு வருவோம். என் தங்கச்சி லச்சுவை எழுப்பிவிடனும். இல்லாட்டி எங்க அம்மா, படியேறி வந்து பத்ரகாளி மாதிரி ஆடுவா.
“கணேஷ்!…எழுந்திருடா.. பத்து தடவை சொல்லிட்டேன்…தங்கச்சிய எழுப்பி விடு…தங்கச்சிய எழுப்பி விடு’ன்னு…எழுந்திருடா..எழுந்திரு” ன்னு சொல்லிட்டு Deebot ரோபோவை மொபைலில் ஆன் செய்துகொண்டே கிச்சனுக்கு கிடுகிடு’ன்னு போறாங்களே அவங்க தான் எங்க அம்மா.
‘பத்து தடவை’ அப்படீங்கறத அழுத்தி சொன்னத கவனிச்சீங்களா? இந்த Adults-ம் சின்ன வயசா இருந்து பெரியங்களா ஆனவங்க தானே? அப்பறம் ஏன் குழந்தைகளை இப்படி வாட்டி வதைக்கிறாங்க?
“Already wokeup அம்மா!…லச்சு தான் தூங்கறா…” என்று சத்தமாகச் சொல்லிவிட்டு மறுபடியும் படுக்கையில் படுத்திருக்கேன். சும்மா படுத்திருக்கேன்’ன்னு நெனக்கிறீங்களா? இல்ல…மொபைல் கேம் விளையாடிக்கிட்டு இருக்கேன்.
இன்னும் ஒரு நிமிஷத்துல இன்னொரு ஆர்டர் வரும் பாருங்க. ஒன்னுலேர்ந்து அறுபது வரைக்கும் எண்ணுங்களேன்…எண்ணிட்டீங்களா?
“எழுந்திட்டீன்னா…போய் குளி…இப்ப மாடிக்கு வந்தேன்னா…மொபைல புடுங்கி அப்பாட்ட குடுத்துடுவேன்…”
பாத்தீங்களா? அடுத்த ஆர்டர் வந்திருச்சா?? இந்த அடல்ட்ஸ் என்ன சொல்வாங்க... எப்ப சொல்வாங்க...எல்லாம் எங்களுக்கு நல்லாத் தெரியும். ஆனா தெரியாத மாதிரி நடிப்போம். இன்னும் எழுந்திரிக்கலன்னா...அவ்வளவு தான்...காட்டு கத்து கத்துவா எங்க அம்மா. இருக்கட்டும்! இந்த கேம்-ல 76 ஆவது ஸ்டேஜ் வந்துட்டேன்..இன்னும் 5 நிமிஷம் விளையாண்டா..77 ஆவது ஸ்டேஜ்..
******
அம்மாவின் மொபைல் சிணுங்குது. யாரு கூப்பிடுவா? நீங்களே அந்த கான்வர்சேஷனைக் கேளுங்க.
“சொல்லுங்க மேரி ஆண்ட்டி…ரெடி ஆண்ட்டி. நேத்து இட்லிக்கு அரைச்சு வச்ச மாவைக் கிண்டிக்கிட்டு இருக்கேன் ஆண்ட்டி….சரிங்க ஆண்ட்டி…சரிங்க ஆண்ட்டி…இதோ!..எப்பொழுதும் போல எட்டரைக்கு ரெடியாயிடுவேன் ஆண்ட்டி. இன்னும் அரை மணி நேரம்…. வந்துடறேன் ஆண்ட்டி…”
போச்சி! அடுத்த வீட்டுல ஒரு பாட்டி இருக்காங்க. அம்மாவும் அந்தப் பாட்டியும் தான் தெனைக்கும் வாக்கிங் போவாங்க. சீக்கிரம் கெளம்பனும்’னு இருக்கற டென்சன்ல மறுபடி கத்துவாங்க பாருங்க…வெயிட்..வெயிட்…ஆங்!..இதோ வந்திருச்சி…
“டேய் கணேஷ்!…லச்சுவ எழுப்பி விட்டியா?…நான் மேரி ஆண்ட்டியோட வாக்கிங் போயிட்டு வந்தோன்ன…பொங்கல் ஷாப்பிங் பண்ண கெய்சி சென்டர் போவனும்….லச்சுவ எழுப்பி விட்டியா?…”
77ஆவது ஸ்டேஜ்!…இன்னும் கொஞ்ச நேரந்தான். என்னமோ அம்மா கத்தறது கேக்குது….ஆனா..சரியா புரியல. ஒங்களுக்கு கேட்டுச்சா? என்ன சொன்னாங்க? இருங்க...வெயிட்....அப்பாடா!....சுட்டு தள்ளிட்டேன். ஆள் குளோஸ். 77 ஆவது ஸ்டேஜ்! அடுத்து 78...ஆமா? அம்மா என்ன சொன்னாங்க. இப்ப சொல்லுங்க.
“லச்சு!…ஏந்திரிடி…பத்ரகாளி வர்றதுக்குள்ள….ஏந்திரிடி…”
“அண்ணா!…ஒதைக்காத அண்ணா…இன்னும் five minutes…it’s holiday Anna!…”
********
கட் பண்ணி அடுத்த சீனுக்குப் போறேன்.
வாக்கிங் முடிச்சி அம்மா வந்துட்டாங்க. மேரி ஆண்டியோட டோர்கிட்ட நிக்குறாங்க.
“ டேய் கணேஷ்! கீழ எறங்கி வா!”
நான் 78 ஆவது ஸ்டேஜ்ல தான் இருக்கேன். இன்னும் லச்சு தூங்கிகிட்டுத் தான் இருக்கா. விளையாட்டை Pause mode -ல வச்சுட்டு, வேண்டா வெறுப்பா படியில இறங்கிப் போறேன். “சீக்கிரம் வாடா…கழுதை!!!” என்ற வசனம் வரும் பாருங்க.
“சீக்கிரம் வாடா…கழுதை!”
“கம்மிங் அம்மா!…” ஒரு பேச்சுக்குச் சொல்லிக் கொண்டே கதவை நோக்கி நடந்தேன். மேரி ஆண்ட்டி, இந்தியாவுக்குப் போயிட்டுப் போன வாரம் தான் வந்திருந்தாங்க. கையில் ஏதோ வச்சிருந்தாங்க.
“ பாரு! ஒனக்கும் லச்சுவுக்கும் மேரி ஆண்ட்டி இந்தியாவுலேர்ந்து இத வாங்கிட்டு வந்திருக்காங்க…”
“ இந்தா தங்கச்சிக்கும் குடு…” மேரி ஆண்ட்டி குடுத்தாங்க.
“ ம்..!” என்று சொல்லிவிட்டு நான் வாங்கிக் கொண்டேன்.
“டேய்! நன்றி பாட்டி’ன்னு சொல்லுடா….”
“ நீ சொல்லிக்கோ…” என்று அவசரம் அவசரமாகச் சொல்லிவிட்டு, படியேறி மேலே ஓடினேன். 78 ஆவது ஸ்டேஜ் கேம் எனக்காகக் காத்திருந்தது.
அம்மா கத்திக்கொண்டே இருந்தாள்.
********
மதிய நேரம். அடுத்தது அப்பா.
இவர் வேறு விதம். அம்மா கட கட’ன்னு கத்துவா. ஆனா, அப்பா வேற மாதிரி பயமுறுத்துவார். கனிவா சொல்ற மாதிரி இருக்கும். ஆனா அதுல, ‘இத-நீ-செய்யல-அப்பறம்-இது-தான்-தண்டனை’ங்ற செய்தி ஒளிஞ்சிருக்கும். சின்ன பிள்ளையா இருக்கும் போது நல்லா பின்னி எடுத்துருக்கார்.
Tullialan School எதிரே ஒரு பார்க் இருக்கும் பார்த்திருக்கீங்களா? அந்த பார்க்’ எதிர ஒரு மாமா வீட்டுக்கு அப்பா அடிக்கடிப் போவார். அப்பா அம்மாவோட ஃப்ரண்ட் வீடு அது. அந்த வீட்டில் இருக்கும் அகமது பாய் மாமா ஒரு Boomer uncle. சில நேரம் எங்கள் வீட்டிற்கும் வருவார். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். அவரும் எங்கள் அப்பாவும் சேர்ந்துட்டா பல மணி நேரம், நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு தடவையும் என்னையும், லச்சுவையும் பார்க்கும் போது, “ நல்லா படிக்கனும்..என்ன பிள்ளைங்களா? படிப்பு தான் முக்கியம். பிற்காலத்துல அது தான் நம்மள காப்பாத்தும்.” ன்னு தேஞ்ச ரிக்கார்டு பிளேயர் மாதிரி (பழைய உதாரணம் தான்! எங்க பாஷையில சொல்றதா இருந்தா… ‘Loop-ல போன song மாதிரி’) சொல்லுவார்.
இன்னக்கி அந்த பூமர் அங்கிள் வீட்டுக்குத் தான் அப்பா போயிருக்கார். மதிய lunch-க்கு வீட்டுக்கு வர்ற நேரம் தான். 78 ஆவது ஸ்டேஜ் ஏறக்குறைய முடிக்கப் போறேன். அவர் வந்ததும் எங்கள ஏதாவது நோண்டுவார். அப்ப சொல்றேன். அதுவரைக்கும் இதோ, இந்த கொரியன் சீரியலை lap top-ல பாத்துகிட்டே, mobile-ல கேம் விளையாடுற சொகமே வேற.
கொஞ்சம் காத்திருங்க!
********
“ தீபா! Garage கதவத் தொற…இத அப்படியே garden area-வுக்குப் போயி வக்கனும்…”
அப்பா வந்துட்டார். “டேய் கணேஷ்! கீழ வா…” ன்னு அரசர் ஆணையிடுவார் பாருங்க. இரண்டு நிமிஷம் கூட போகல…
“டேய்! கணேஷ்!..கீழ வா…”
பாத்தீங்களா? வந்திருச்சா? Gen Z, Gen Alpha -வையெல்லாம் கொறைச்சி மதிப்பிடாதீங்க. நாங்க வேற லெவல்.
78 ஆவது ஸ்டேஜ் முடிய இன்னும் நாலஞ்சு நிமிஷம் விளையாடினா போதும். ஆனா அரசர் ஆணைய மீற முடியுமா? யான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெற வேண்டாமா?... “லச்சு! நீயும் வா...அப்பா கார்டனுக்குக் கூப்பிடுறாரு..”
“போடா அண்ணா...லெகோ வெளையாண்டுகிட்டு இருக்கேன். வாட்ஸ் அப்புல என் ஃப்ரெண்டு அதப் பாத்துட்டே இருக்கா. நாங்க ஒரு மணி நேரமா கால்ல இருக்கோம்..”
ம்! நான் மட்டும் தான் போகனுமா? ஐயோ! ஒரு அஞ்சு நிமிஷம் பொறுத்துக்க முடியாதா? 78 ஆவது ஸ்டேஜ்-ஐ கிளியர் பண்ணிடுவேன். ஆனா அதுக்குள்ள கிச்சன்ல இருக்கற பத்ரகாளி அப்பா சொன்ன அர்டரை ஃபாலோ பண்ணி கத்துவாளே.
“டேய் கணேஷ்! அப்பா கூப்பிடுறாரு பாரு…காதுல உழுவல..சனியனே!”
வந்துருச்சா!
********
கார்டன்.
அப்பா ஒரு வாழைக்கட்டையோடு நின்று கொண்டிருந்தார்.
“அகமது பாய் மாமா வீட்டுல வாழைமரம் வாழைக்குலைத் தள்ளி, சுத்தி பக்கக் கன்றுகள் வந்திருக்குப்பா…(வந்திருக்குடா…என்று தான் சாதாரணமாக வரும். வந்திருக்குப்பா…என்று சொல்கிறார் என்றால்…அதைப் புதைக்க என் உதவி தேவைப்படுகிறது என்று அர்த்தம்)
“ம்!…”
“இதை எங்க வைக்கலாம் சொல்லு…” (என்னுட்ட ஐடியா கேட்டு, ஐனநாயக முறைப்படி நடந்துக்கறதா காமிச்சிக்கிறார்ல…ஆனா நட வேண்டிய எடத்தை அவர் ஏற்கனவே முடிவு பண்ணிருப்பாரு…)
“அம்மாவ கூப்பிடு…கேக்கலாம்” (இதுவும் ஒரு விளையாட்டு தான். ‘அட ஏங்க! அங்க வச்சிங்க. அது துணி காயப் போடற எடம்…என்ன ஒரு வார்த்தை கேட்டீங்களா?’ என்று அம்மா கேட்டுவிடக்கூடாதே என்று அப்பா விளையாடும் விளையாட்டு.)
இன்னும் நிறைய கூத்து இருக்கு.
“அம்மா!…Come here” கத்திவச்சேன்.
கிச்சனில் மிக்சி ஓடும் சத்தம் கேட்டது. “இங்க இருந்து கத்தாதேப்பா… (கத்தாதடா…) போய் கூப்டு வா.”
அம்மா வந்தாள். ஒரு வழியாய் எடத்தை முடிவு செய்து, வாழை மரத்தை நட்டோம். அதுவல்ல கதை. அதுக்குப் பிறகு தான் கதை.
“அகமது பாய் மாமாவுக்கு போன் போட்டுத் தாரேன்…வாழைக்கட்டை குடுத்ததுக்கு தேங்க்ஸ் சொல்லுடா” (கவனிச்சீங்களா… ‘டா’ சேந்துடுச்சி. அதான் வேலை முடிஞ்சிருச்சே!)
“போப்பா…நீயே சொல்லிக்க!”
அப்பாவும் அம்மாவும் கிச்சனில் ஏதோ சத்தமாய் கத்திப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் 78 ஆவது ஸ்டேஜ் முடிச்சி 79 ஆவதுக்குத் தாவினேன்.
********
டின்னர் டைம். இது தான் கிளைமாக்ஸ்.
லச்சு போனை எடுத்துக் கொண்டு மாடிக்கு ஓடி வந்தாள். “அண்ணா!..டேய்… மதுரை தாத்தா வீடியோ கால் பண்ணிருக்காரு..நான் பேசிட்டேன்..நீ பேசு..”
79 ஆவது ஸ்டேஜ். விளையாடிக்கொண்டிருக்கேன்.
மதுரை தாத்தாவை எனக்குப் பிடிக்கும். அளவாகப் பேசுவார். நான் குழந்தையாக இருந்த போது, இந்தியாவுக்குப் போயிருந்தேன். அப்பொழுது என்னைத் தூக்கியே வைத்திருப்பார். இரண்டாவது தடவை போயிருந்த போது, சாக்லேட் வாங்கிக் கொடுத்தார். புதுச்சட்டை வாங்கிக் கொடுத்தார்.
“பேராண்டி! நல்லா இருக்கியா? போன வருஷம் பொங்கலுக்கு ஊருக்கு வந்திருந்தீங்க. ஞாபகம் இருக்கா பேராண்டி?”
“இருக்கு தாத்தா…”
“சூப்பர்டா செல்லம்..என்ன ஞாபகம் இருக்கு?”
“ ம்!…கரும்பு, சக்கரைப் பொங்கல்…அப்பறம் வீடு பூரா…அது என்னது?…வெள்ளை கலர்ல டிசைன் வரைஞ்சி இருந்தது…தாத்தா”
“ கோலத்த சொல்றியாடா கண்ணு?….”
“ஆமா தாத்தா! கோலம்….அப்பறம்..என்னை paddy fields - க்கு அழைச்சிட்டுப் போகும் போது, பொங்கல் பத்தி நீங்க explain பண்ணிட்டே வந்தீங்க…”
“அட! அது கூட ஞாபகம் இருக்காப்பா?”
“ இருக்கு தாத்தா…புது நெல்லு வச்சி சூரியனுக்கு, nature-க்கு thanks பண்ணறது. விவசாயத்துக்கு உதவி செய்ற cows-க்கெல்லாம் thanks பண்றது. Friends, relatives எல்லாருக்கும் thanks பண்றது…”
“அட சக்க நனனா!…என் பேராண்டியா கொக்கா?.…ஆமாடா பேராண்டி! நம்ம எப்பொழுதும் மற்றவங்களுக்கு நன்றி சொல்ல மறக்கவே கூடாது. அத நெனவு படுத்தத் தான் வருஷா வருஷம் நாம பொங்கல் கொண்டாடுறோம்…”
***********
நான் படிக்கட்டுல கீழ இறங்கி போனேன். அப்பாவையும் அம்மாவையும் கூப்பிட்டு, “ சாரி அப்பா! சாரி அம்மா!! மேரி ஆண்டிகிட்டயும், அகமது பாய் மாமாகிட்டயும் proper ஆ நன்றி சொல்றேன். போன் போட்டு குடுங்க…” என்று சொன்னேன்.
இதச் சொன்னதுக்குத் தாங்க!…emotional ஆகி…அப்பாவும் அம்மாவும் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாங்க….
அடுத்த அடுத்த ஸ்டேஜ் game-ல மட்டும் இல்ல life-லயும் எங்களால மாற முடியும். மொறையா சொன்னா சரியா செய்வோங்க.
அட! என் கதைய கேட்டதுக்கு ஒங்களுக்கு நன்றிங்க. பாருங்க..நன்றியெல்லாம் சொல்றேன்.
*******



Comments