6. அஞ்சு காசு மூஞ்சு வாத்தியார்

"வாங்க பரிசுத்தம் சார்"


வீட்டுக்கு முன்பு சிறிய கேட். அதைத் திறந்துக் கொண்டு ஆஞாவும் நானும் போனோம்.

ரெண்டு படிகள் ஏறினோம். அஞ்சுகாசு மூஞ்சு வாத்தியார் வேட்டியைக் கட்டிக் கொண்டு மேலே எதுவும் அணியாமல் பெரிய திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.


"அது யாரு பையனா?"

"ஆமா" என்ற ஆஞா தொடர்ந்து "சௌக்கியம் தானே" எனக் கேட்டார்கள்.

"சௌக்கியத்துக்கு என்ன கொறைச்சல்! மாரியம்மா எல்லாரையும் காப்பாத்துறா” என வெத்தலைப் பாக்கை குதப்பிய வாயுடன், வெற்றிலை எச்சில் கீழே விழுந்துவிடாதவாறு தலையை சற்றேத் தூக்கி சொல்லிவிட்டு, எச்சிலை கீழே துப்ப எழுந்தார். வேட்டி அவிழ்ந்திருக்கும் போல, எடுத்துக் கட்டிக் கொண்டு திண்ணையில் தூணில் சாய்ந்தவாறு ‘பொலிச்’ சென துப்பினார். அந்தச் சத்தத்தைக் கேட்டு கீழே சுருண்டு படுத்திருந்த நாய் திடுக்கிட்டு எழுந்து கொஞ்சம் தள்ளிப் போய் படுத்துக் கொண்டது.


“சரசு! சரசு!!” என வீட்டை நோக்கிக் கூப்பிட்டார். அவருடைய மனைவி பெயர் ஞாபகம் இல்லாததால் சும்மா சரசு என வைத்துக் கொண்டேன்.


நீங்க உக்காருங்க எனப் பெரிய திண்ணையை கைகளால் காட்டினார். ஆஞா உட்கார்ந்தார்கள். ஆஞாவின் கால்களுக்கிடையே நான் நுழைந்துக் கொண்டேன். எனது வலது கையை ஆஞா தனது வலது கையால் பிடித்துக் கொண்டு, இடது கையால் என் தலையைப் பற்றிக் கொண்டார்கள்.


"பிள்ளையாண்டான் என்ன சொல்றான்" எனக் கேட்டுக் கொண்டே "சரசு சாருக்கு காப்பி எடுத்துட்டு வா" என்றார். "பிள்ளையாண்டான் காபி குடிப்பானா?" எனக் கேட்டுக் கொண்டார்.

"எதுக்கு காபி எல்லாம்..சிரமம் வேண்டாம்" என்றார்கள் ஆஞா.

"இருக்கட்டும். அதுல என்ன சிரமம்? என்ன காலங்கார்த்தாலே சாரு விஜயம்?"

"ஆபீஸூக்குப் போறதுக்கு முன்னாடி உங்களைப் பாத்துடலாம்னு…நீங்க வேற ஸ்கூலுக்குப் கெளம்பனுமே!"

"ஆமா! இன்னக்கி என்னமோ ஸ்கூல் இன்ஸ்பெக்டர் வேற வர்றாராம். அது மதியானம் தான். சொல்லுங்கோ. என்ன விசேஷம்?"

"தம்பியை (என்னைத்தான்) பள்ளிக்கோடத்துல சேர்க்கனும்."

"பேஷா சேத்துடலாம்.. பள்ளிக்கூடத்துக்கு அழைச்சிட்டு வாங்க. சேத்துடலாம். கொஞ்சம் மிட்டாய் வாங்கிக்கிங்க. வரும்போது மேல் சட்டையைப் போட்டு அழைச்சிட்டு வாங்க."


இதுலேர்ந்து என்ன தெரியுது? அவரு வீட்டுக்கு போயிருக்கும் போது நான் சட்டை ஏதும் போடாம போயிருப்பேனோ?


"என்னக்கி வர?"

"இன்னக்கி கூட வரலாம். உங்க தோது தான். (ஏதோ யோசனை பண்ணிவிட்டு) இன்னக்கி வேண்டாம். ஸ்கூல் இன்ஸ்பெக்டர் வந்துட்டு போவட்டும். ஒரேயடியா திங்க கிழமை வர்றீங்களா?"

"திங்க கிழமை வர்லாம். பிடிஓ ஆபீஸ்ல திங்கட் கிழமை காலைல வாரக் கூட்டம் இருக்கும். அத முடிச்சிட்டு வரவா?"

"அப்படி திங்கட்கிழமை இல்லன்னா…. ம்!…. செவ்வா கிழமை வேண்டாம். புதன் கிழமை நல்ல நாள். அப்ப புதன் கிழமையே வந்துடுங்க."


அதற்குள் சுடச்சுட, டவராச் செட்டில் காபி வந்தது.


"வாங்க" என வாத்தியாரின் மனைவி ஆஞாவைப் பார்த்துச் சொல்லிவிட்டு காபி டவராவை நீட்ட வாத்தியார் அதை வாங்கி ஆஞாவிடம் கொடுத்தார்.


"குழந்தைக்கு பால் ஆத்தி எடுத்துட்டு வரட்டா?" என்று வாத்தியாரின் மனைவி, சேலையை சரிசெய்துக் கொண்டே கதவோரம் நின்று கேட்டார்.


"வேணாம். வேணாம். இதுலயே ஆத்தி கொஞ்சம் குடுத்துடறேன்" என ஆஞா சொன்னார்கள்.


காபி வாசனை எனக்குப் பிடித்தது. ஆஞா தம்ளரில் இருந்த காப்பியை டவராவில் ஊற்றி ஆத்தினார்கள். "ஆமா! பிள்ளையாண்டானுக்கு அஞ்சு வயசு முடிஞ்சிருச்சுல்ல" என வெத்தலையை எடுத்து தொடையில் தடவி சுத்தம் செய்து விட்டு, காம்பை கிள்ளி எறிந்து விட்டு, இரண்டாக மடக்கி, நுனியை சிறது கிள்ளி லாவகமாக பக்கத்தில் போட்டுவிட்டு, சுண்ணாம்பு டப்பாவைத் தேடினார்.


காபியை ஆற்றிக் கொண்டிருந்த ஆஞா சற்றே நிறுத்திவிட்டு,

“இல்ல..வயசு நாலு தான் ஆகுது. 1961 பிப்ரவரி 12ம் தேதி பொறந்தான்.”

“அப்ப..ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு… ஆமா நாலு தான் ஆவுது…” சுண்ணாம்பை தடவினார்.


ஆஞா டவராவில் ஆற்றிய காபியை எனக்கு கொடுத்தார்கள். ஒரு வாய் குடித்தேன்.

“பத்ரமாக புடிச்சிக்கோ” எனச் சொல்லி டவரா காபியை என்னிடம் கொடுத்தார்கள். டம்ளர் காபியை ஆஞா குடிக்கப் போகும் முன்பு,


“ இவனோட ஒரு அக்கா அஞ்சாவது படிக்குது. இன்னொரு அக்கா மூணாவது படிக்குது. போன வருஷம் ரெண்டு அக்காக்களோடு சேர்ந்து பள்ளிக்கோடத்துல போய் உக்காந்துக்குவான். அவங்களோட போய்ட்டு அவங்களோடயே திரும்புவான். அதனால் அனா, ஆவன்னா, ஒன்னு, ரெண்டு எல்லாம் கத்துகிட்டான். என்னை ஒன்னாவதுல சேத்துவிடுங்க’ன்னு அழுவுறான்.”


அஞ்சு காசு மூஞ்சு வாத்தியார் என்னைப் பார்த்தார். நான் டவரா செட்டை கையில் பிடித்துக் குடித்துக் கொண்டே, தலை குனிந்தவாறு, கண்களை மட்டும் உயர்த்தி அவரைப் பார்த்தேன்.

“ அனா, ஆவன்னா தெரியுமாடா தம்பி” ன்னார்.

தெரியும் என்பது போல் தலையாட்டினேன். வாயிலிருந்த காபி கொஞ்சம் வழிந்து விட்டது. ஆஞாவின் வேட்டிய எடுத்து துடைத்துக் கொண்டேன்.


“பையன் சூட்டிக்காகத்தான் இருக்கான். ஒன்னு செய்வோம். பள்ளிக்கூடத்துக்கு அழைச்சிட்டு வாங்க. எழுதப் படிக்க எவ்வளவு தூரம் தெரியறதுன்னு பார்ப்போம். அப்பறம் முடிவு செய்வோம்” என்றார். அடுத்த வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவிக் கொண்டே,“அப்பறம் ஆபிஸெல்லாம் எப்படி சார் போவுது” ன்னு கேட்டாரு.


அதற்குப் பிறகு ஏதோ பேசிக் கொண்டார்கள். என் கவனம் முழுக்க கேட்டுக்குப் பக்கத்தில் போய் படுத்த நாயின் மேல் இருந்தது. நான் அதைப் பார்க்கும் போது அது ஒரு கண்ணை மட்டும் பாதி தூக்கி என்னைப் பார்த்து, வாலை லேசாக நகர்த்தி வைத்தது. பிறகு கண்ணை மூடிக் கொள்ளும். அதற்குள் நான் காப்பியை ஒரு இழு இழுத்து விட்டு திரும்பவும் ஓரக்கண்ணால் பார்த்தால், அதுவும் தூக்கத்தையும் நிறுத்தாமல் என்னைப் பாதி கண்ணால் பார்ப்பதையும் நிறுத்தாமல் ஒரு பார்வை பார்க்கும்.


இப்படி எங்கள் சமாச்சாரம் தொடர, காபி முடிந்து விட்டது. வாத்தியாரும் ஆஞாவும் பேசி முடித்திருப்பார்கள் போல. ஆஞா என்னை நகர்த்திவிட்டு, காலி டவராவை வாங்கி திண்ணையில் வைத்துவிட்டு எழுந்தார்கள். வாத்தியாரும் மரியாதைக்கு எழுந்தார். ஏனோ மறுபடியும் வேட்டியை அவிழ்த்து கட்டினார்.

“அப்ப புதன்கிழமை வந்துடுங்க”

“வந்துடறோம்.”

இப்பொழுது கேட்டை தாண்ட வேண்டும்.

“சே!…” என வாத்தியார் தன் துண்டை எடுத்து வீசி நாயிடம் சைகை காட்ட, அது ‘டபக்கு’ன்னு எழுந்து முதலில் தான் படுத்திருந்த தூண் அருகே வந்து படுத்துக் கொண்டது. நாங்கள் கேட்டைத் திறந்துக் கொண்டு வெளியில் வந்தோம்.

“ நா மூடிக்கிறேன் நீங்க போங்க… வரும் போது முட்டாய் வாங்கிக்கிங்க…மேல் சட்டை போட்டு அழைச்சிட்டு வாங்க..”


அந்த புதன் கிழமை வந்தது.


அம்மா, ஆஞா நான் மூவரும் பள்ளிக்கு நடந்து போனோம். வழியிலேயே மிட்டாயோடு பழங்களும் வாங்கிக் கொண்டார்கள். ஏற்கனவே ஜூலி அக்காவும் அல்போன்ஸ் அக்காவும் அந்தப் பள்ளிக்குச் சென்றிருந்தார்கள். பெரிய அக்கா வேறு பள்ளிக்கு (உயர் நிலைப்பள்ளிக்குச் ) சென்று விட்டார்கள்.


அஞ்சு காசு மூஞ்சு வாத்தியார் ‘பத்து’ காசுக்கு சிரித்துக் கொண்டே எங்களை வரவேற்றார்.

‘வாங்கம்மா’ என்று எங்கள் அம்மாவை அழைத்துவிட்டு ஒரு பெஞ்சில் எங்களை உட்கார வைத்தார். நான் அம்மாவின் கால்களுக்கிடையே நின்று கொண்டேன். ஆஞா ஒரு தாம்பாளத்தில் பழம், சூடம் இத்யாதிகள் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.


ஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு பீரோவுடன் அந்த பெஞ்ச் போட்டிருந்ததால் வேறு யாராவது வந்தால் நின்று கொண்டே பேசுகிற அளவுக்கு சிறிய அறை. அஞ்சுகாசு மூஞ்சு வாத்தியார் தான் பள்ளி ஹெட்மாஸ்டர் என்று பிறகு தான் தெரிந்தது.


அவருடைய வலது பக்கத்தில் இருந்த கம்பி போட்ட ஜன்னல் வழியே வெயில் அவர் மீது பட்டது. அவருக்குப் பின்னே கரும்பலகையில் ஏதோ எழுதியிருந்தது. அந்த ஜன்னல் வழியே யாரையோ கூப்பிட்டார்.


ஒடிசலான ஒருவர் வந்து கதவருகே நின்றார்.


“சார் பிடிஓ ஆபீஸ்ல கிளர்க்கா இருக்கார். அவர் புள்ளையாண்டானை சேக்கனும்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே “இந்த பையன் தான சார். அவன் நம்ம ஜூலி அல்போன்ஸோட தம்பி சார். அடிக்கடி வந்து அவங்களோட வகுப்புல ஒக்காந்துக்குவான். பாத்துருக்கேன்” என்றார்.

“வயசு பத்தல… அதான்… சரி! எழுதப் படிக்க என்ன தெரியுதுன்னு பாருங்க…”

ஒடிசலான ஆள் ஒரு சிலேட்டை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார்.

“அனா, ஆவன்னா” எழுது என்றார்.

அம்மாவுக்குப் பக்கத்தில் பெஞ்சில் சிலேட்டை வைத்து ஃ வரை எழுதினேன். அஞ்சு காசு மூஞ்சு வாத்தியார் எழுந்து எங்கேயோ சென்றார்.

“ஒன்னு, ரெண்டு எழுது” என்றார். எச்சிலைத் தொட்டு அழித்துவிட்டு 10 வரை எழுதினேன். ஒன்னாங் கிளாஸ் புத்தகத்தை கொடுத்து எதையோ படிக்கச் சொன்னார். எழுத்துக் கூட்டி படித்தேன். வீட்டில் அம்மா தினமும் சொல்லிக் கொடுத்தது கை கொடுத்தது.


அஞ்சு காசு மூஞ்சி வாத்தியார் யாரையோ திட்டிக் கொண்டே அறைக்குள் வந்தார். அதற்குள் ஜன்னல் வழியாக வெளிப்புறம் அல்போன்ஸ் அக்கா நின்று கொண்டு சிரித்தது. நானும் சிரித்தேன்.


“பிள்ளையாண்டான் என்ன சொல்றான்” என்றார் வாத்தியார்.

“ஒன்னாவதுல இருக்கறது எல்லாம் அவனுக்குத் தெரியுது சார்” என அந்த ஒடிசலான ஆள் சொன்னார்.

“ அப்படியா?....ரொம்ப நல்லதாப் போயிடுச்சி...அப்பறம் என் ஒரு வருஷத்தை வீணடிக்கனும்...பேசாம ரெண்டாவதுல சேர்த்துடலாமே!”

“ஒண்ணாவதுல சேர்க்கறதுக்கு வயசு பத்தலேன்னு சொன்னீங்களே சார்!…”

“ ஆமா! அட்மிஷன் ரிஜிஸ்டர்ல பிறப்பு வருஷத்தை பின்னாடி போட்டு… ரெண்டாவதுல சேத்துருங்க. என்ன பரிசுத்தம் சார்… அப்படி பண்ணிடலாமா? ஏன்னா? பையன் சூட்டிக்கா இருக்கான். என்ன நான் சொல்றது” என்றார்.


ஆஞாவும் அம்மாவும் தலையை ஆட்டியிருக்க வேண்டும். பழத்தட்டை வாத்தியாரிடம் கொடுத்துவிட்டு எழுந்தார்கள் ஆஞாவும் அம்மாவும். வாத்தியார் தட்டிலிருந்து கொஞ்சம் மிட்டாய்களை அள்ளி என்னிடம் கொடுத்தார். கன்னத்தைக் கிள்ளி “நல்லா படிக்கனும் என்ன?” என்று சொல்லிவிட்டு “நாளைக்கு அவன் அக்காவோட அவனை அனுப்பிச்சிடுங்க” என்றார்.


“நான் வீட்டுக்கு வரல… இங்கேயே இருக்கேன்” என்று சொல்லியிருக்கிறேன்.

“சரி! புள்ளையாண்டான் ரொம்ப அவசரப்படுறான்.. இவனோட அக்காவை கூப்பிடுங்க” என்றார். ஜூலி அக்கா உள்ளே வந்தது. என்னைப் பார்த்ததும் சிரிக்கும் என்று நினைத்து சிரிக்கத் தயாராய் (அணியமாய்) இருந்தேன். ஆனால் பயபக்தியுடன் உள்ளே நுழைந்து எங்களை யாரையுமே பார்க்காமல், கழுத்தில் போட்டிருந்த மணியை ஒரு கையால் திருகிக் கொண்டே, திருவிழாவில் வெட்டப்படுகிற ஆட்டைப் போல, பெரிய சாரையேப் பார்த்துக் கொண்டிருந்தது.


“எத்தனாங் கிளாஸ்”

“அஞ்சாங் கிளாஸ்” என்று மெல்லிய குரலில் சொன்னது.

“தம்பியை அழைச்சிகிக்டு போய் உன்னோட உட்கார வச்சுக்க…”

நான் என்ன சொன்னேனோ என்னவோ

“சரி! சரி! ரெண்டாங்கிளாஸ் டீச்சரை கூப்பிடுப்பா…”

கண்ணாடி போட்டுக்கொண்டு ஒரு டீச்சர் வந்தார்கள்.

“பையனை ரெண்டாவதுல சேத்துருக்கு. ஒங்க கிளாஸ்க்கு கூட்டிட்டு போங்க.”

“சரிங்க சார்.”

அதற்குள் ஜூலி அக்கா போய்விட்டிருந்தது.


அம்மா ஆஞாவுக்கு ‘டாடா’ சொல்லிவிட்டு டீச்சரின் கையைப் பிடித்துக் கொண்டு ‘ரெண்டாங்கிளாஸூக்குச்’ சென்றேன். நான்காம் வயதிலேயே ரெண்டாங்கிளாஸ். என் பள்ளிப் பயணம் இப்படித் தொடர்ந்தது.

9 views0 comments