top of page

16. வலங்கைமானிலிருந்து தஞ்சைக்கு மாற்றம் - லாரியில் பயணம்
வலங்கைமான் பி.டி.ஓ அலுவலகத்திலிருந்து தஞ்சாவூர் பனகல் பில்டிங்கில் உள்ள கலெக்டர் ஆபீஸூக்கு பணி மாற்றம். இந்த செய்தி தெரிந்தது ஆஞா, தஞ்சையில் குடும்பம் தங்குவதற்கு வீடு பார்க்கச் சென்றார்கள். அவர்கள் இரயில்வேயில் வேலை செய்த போது தங்கியிருந்த இடம் பாத்திமா நகரின் எதிரே நாஞ்சிக்கோட்டை ரோடு ஒரம், கல்லறையை ஒட்டியிருந்த யாகப்ப நாடாரின் கள்ளுக்கடை அருகே இருந்த ஓட்டுக் கட்டிடம். அந்தக் கட்டிடம், அடுத்த கல்லறை, அதற்குப் பின் அருளானந்த நகர் இருக்கிறது. அதன் முதல் குறுக்குத் தெருவில் அருள் நர்சரித் தோட்டம் இருக்கிறது.

கல்லறைக்குப் பின்புறம், அதாவது, அருள் நர்சரித் தோட்டத்தின் முன்புறம், விக்டர் வீட்டிற்கு தென்புறத்தில் ஒரு வீடு காலியாக இருந்தது. அந்த வீட்டின் தென்புறம் ரவிச்சந்திரன் வீடு. அந்த விக்டர், ரவிச்சந்திரன் எல்லோரும் பின்னாட்களில் என்னிடம் டியூசன் படித்த பையன்கள்.

அந்த வீட்டைக் கறையான் வீடு என அழைப்போம். அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். இப்பொழது வலங்கைமானிலிருந்து தஞ்சைக்கு லாரியில் பயணம். ஆஞா ஒரு லாரி பிடித்தார்கள். வீட்டுத் தட்டுமுட்டு சாமான்களை ஏற்றினார்கள். பொருட்களை லாரியில் ஏற்ற ஆஞாவின் அலுவலக நண்பர்கள் உதவினார்கள். எனக்கு ஞாபகம் இருப்பது, நான் ஏற்கனவே சொன்ன மன்னார்குடி தாத்தா வீட்டு கலைவேலைப்பாடுகள் நிறைந்த பீரோ. அது தவிர ஒரு ரேடியோ.

அந்த ரேடியோவின் இரு பக்கங்களும் மரக்கட்டை கலரில் இருக்கும். முன்புறம் மஞ்சள் கலரில் இருக்கும். அதில் வழவழ’வென்று திருகு பொத்தான்கள் இருக்கும். ரேடியோவின் வலது மேற்புற ஓரத்தில் ஒளி வரக்கூடிய இடம் இருக்கும். சரியான ரேடியோ ஸ்டேஷனில் சரியான ஒலியில், சரியான அலைவரிசையில் திருகி வைக்கும் போது, அந்த இடத்தில் மயில் பச்சையில் ஒளி வரும்.


அது முழுமையான அளவு வந்தால் சரியான ரேடியோ ஸ்டேஷன் கிடைத்துவிட்டது என்று அர்த்தம். அதுவரை சிகப்பு நிறம் காட்டும். தட்டுத் தடுமாறி சரியான ஸ்டேஷன் வரும் வரை அது சிகப்பு நிறத்துக்கும் பச்சை நிறத்துக்கும் இடையே அல்லாடும். அந்த ரேடியோவை வைக்க ஒரு ரேடியோ பெட்டி இருக்கும். பிற்காலத்தில் அந்த ரேடியோவை விற்று விட்ட பிறுகம், அந்த ரேடியோ பெட்டி மட்டும் பல காலத்திற்கு வீட்டில் இருந்தது.

அந்த ரேடியோ பெட்டியில் ஒருவர் மாற்றி ஒருவர் பள்ளி நோட்டு புத்தகங்களை வைத்திருப்போம். சில காலம் பெரிய அக்கா கலைமணி. பிறகு அவர்கள் கல்லூரிக்குப் போனப் பிறகு ஜூலி அக்கா. அதன் பிறகு அல்போன்ஸ் அக்காவும் நானும் என, ரேடியோ பெட்டிக்கு சொந்தக்காரர்கள் மாறி மாறி ஆனோம். அல்போன்ஸ் அக்காவின் தினசரி மாலை routine என்ன தெரியுமா?


அந்த ரேடியோ பெட்டியின் அருகே உட்கார்ந்து அதன் கதவுகளைத் திறப்பார். உள்ளேயிருந்து அத்தனை நோட்டுகள் மற்றும் புத்தகங்களை வெளியே தள்ளி விடுவார். ஜாமின்ட்ரி பாக்ஸ், நீட்ட ஸ்கேல், பென்சில், பேனா, ரப்பர் இத்யாதிகளை வெளியே எடுப்பார். மண்ணெண்ணை விளக்கொளியில் மறுபடி ஒவ்வொரு நோட்டாக, ஒரு பக்கம் அடுக்கி வைப்பார். மற்றொரு பக்கம் புத்தகங்களை அடுக்கி வைப்பார். இரண்டுக்கும் நடுவே ஜாமின்ட்ரி பாக்ஸ் போன்ற சிலுவண்டிகளை அழகாக எடுத்து வைப்பார். அதற்கு அரை மணி நேரம் போல ஆகிவிடும். அதற்குப் பிறகு, “ அம்மா! படிச்சாச்சு… பசிக்குது” என்று சொல்லி சாப்பிட்டு படுக்க கிளம்பி விடுவார்.


இதையெல்லாம் ஓரக்கண்டால் பார்த்துக்கொண்டிருப்பது என் வேலை. எப்பொழுது படிப்பார் என்றே தெரியாது. ஆனாலும் நல்ல மார்க்குகளை வாங்கி விடுஆர்.


பின்னாட்களில் நான் Indian Institute of Development என்கிற தன்னார்வ சமூக அமைப்பைத் தொடங்கி, சமூக மேம்பாட்டு பணிகளைத் துவங்கிய போது, முதல் கோப்புகளை அந்த ரேடியோ பெட்டிக்குள் தான் வைத்திருந்தேன்.

சரி! லாரிப் பயணத்திற்கு வருவோம்.

அந்த ரேடியோ பெட்டிக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த ரேடியோவைப் பார்த்தபடியே அதன் அருகில் நான் உட்கார்ந்திருந்தேன். ஆஞா, நாற்காலிக்கருகேயும், ஆல்போன்ஸ் அக்கா தட்டுமுட்டு சாமான்கள் அருகேயும் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா, கலைமணி அக்கா, ஜூலி அக்கா மூவரும் லாரியில் வந்தார்களா? அல்லது பேருந்தில் வந்தார்களா? என நினைவில் இல்லை.

இன்னும் என் நினைவுகளில் வேகமாக உரசிச் செல்வது வழியெங்கும் அடித்த சுகந்த காற்று தான். லாரியின் வேகத்தில், காற்று முகத்தில் அடித்துச் சென்றது எனக்கு முதல் அனுபவம். அதைப் பருகிக்கொண்டே வந்தேன். தென்னை மரங்களும், புளிய மரங்களும் நாங்கள் போகிற வேகத்துக்கு பின்னோக்கி ஓடிக்கொண்டே இருந்தன. அதுவரை பார்க்காத கொக்குகளும், நாரைகளும், தாமரையும், அல்லியும் மூடி இருந்த குளங்களிலும், பச்சை பசேலென்ற வயல் வெளியிலும் ஓடித் திரிந்தன.


சில நேரம், பறவைகள், V வடிவில் வானத்தில் பறந்து சென்றன. சாலையின் இருமருங்கிலும் வாய்க்காலில் நீர் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது. அதிலிருந்து வயலுக்குள் ஓடிய வாய்க்காலிலிருந்து சிலர் ஏற்றம் வைத்து நீரை இறைத்து வயலுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். சில இடங்களில் பெண்கள் குனிந்து நாற்று நட்டுக் கொண்டிருந்தனர்.

முகத்தில் அடித்தக் காற்றும், பச்சைப் பசேலென்ற வயல்களில் வெள்ளை நிறக் கொக்குகளும், எங்களின் பின்னே ஓடிய புளிய மரங்களும், ரேடியோ பெட்டியும் ‘பச்சக்’ என்று மனத்தில் ஒட்டிக்கொண்டது.

லாரி தஞ்சையை அடைந்தது.

இப்பொழுது அந்த கறையான் வீட்டைப் பற்றிச் சொல்ல வேண்டும். அதோடு சேர்த்து அதன் பின்னே இருந்த கல்லறை மேடுகள் பற்றியம் சொல்ல வேண்டும்.

*****

50 views0 comments
bottom of page