top of page

14. பட்டினத்தாரும் ஆஞாவும்



ஆஞா வேலை செய்த அலுவலகம் Block Development Office (BDO) என்று சொல்லப்படுகிற பஞ்சாயத்து யூனியன் அலுவலகம். அங்கு தான் அரசு நலத்திட்டங்கள் மாநிலத்தலைமையகத்திலிருந்து, மாவட்டத்திற்கு வந்து, மாவட்டத்திலிருந்து வட்டத்திற்கு (பஞ்சாயத்து யூனியனுக்கு) வந்து, திட்டமிட்டு செயல்படுத்தப்படும்.


கிராமப்புறச் சாலைகளை அமைப்பது, நீர் நிலைகளைப் பராமரிப்பது, முதியோர் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது என்று அடிப்படை உதவிகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவார்கள். வட்டாட்சியர் அல்லது தாசில்தார் அலுவலகம் வரி வசூலிப்பதும், அப்படி வசூலித்த வரிகளை வைத்து பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் மூலமாக மக்களுக்கு உதவுவதும் வாடிக்கை.


அப்படிப்பட்ட அலுவலகத்தில் அடிப்படை பணியாளர்கள், குமாஸ்தாக்கள், பிரிவுத் தலைவர், மேலாளர் மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைமை அலுவலர் என அலுவலர்கள் இருப்பார்கள்.


ஆஞா வலங்கைமானில் கிளர்க்காக, அதாவது குமாஸ்தாவாக பணி செய்தார். அவர் பணி ஓய்வு பெறும் போது தலைமை அலுவலராக பணி ஓய்வு பெற்றார்.


தினமும் மல்லிகைப்பூ வண்ணத்தில் வெள்ளை வெளேர் என்று வேட்டியும் சட்டையும் அணிவார். சட்டைப்பையில் ‘இங்க்’ நிரப்பிய தடிமனான பேனா இருக்கும். வயதான பின்பும் அதே போன்ற ‘இங்க்’ பேனாவில் தான் எழுதுவார்.


சில வருடங்களுக்குப் பிறகு கண்ணாடி அணிவார். எளிமையான செருப்பு போடுவார். கையில் எளிய கடிகாரம் கட்டியிருப்பார். படோபடமாக தன்னை சித்தரிக்க மாட்டார். எளிய வாழ்க்கையே இனிய வாழ்க்கை என வாழ்நாள் முழுவதும் இருந்தார். இப்படி எளிமையா வாழ்வது எதற்கு? என அவரிடம் பின்னாட்களில் நான் கேட்டதற்கு இந்தக் கதையைச் சொன்னார்.


பட்டினத்தார் என்று சொல்லப்படுகிற ஒரு சித்தர் இருந்தார். அவர் பெரும் பணக்காரராக இருந்து துறவு பூண்டவர். ஒரு நாள் அவர் ஓர் ஊருக்குப் பயணமாயிருந்தார். பெரிய செல்வந்தர் அவரை வரவேற்று உபசரித்தார்.


“ இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நிறையப் பொருட்களை சேர்த்து வைத்திருக்கிறேன். என்னால் எல்லாம் முடியும். என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள்” என்று அந்தச் செல்வந்தர் கூறினார்.


அதற்கு பட்டினத்தார் ஒரு காதறுந்த ஊசியை, அவரிடம் கொடுத்து, “ ரொம்ப நல்லது, இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இறந்த பிறகு, மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும்” என்றார்.


“ இது என்ன வேடிக்கையாக இருக்கிறது! இறந்த பிறகு இந்த ஊசியை எப்படிக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டுவிட்டு அந்தச் செல்வந்தர் கிண்டலாக சிரித்தார்.


' வாது உற்ற திண் புயர் அண்ணாமலையார் மலர்ப் பதத்தைப்

போது உற்ற போதும் புகலும் நெஞ்சே இந்தப் பூதலத்தில்

தீது உற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்?

காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே.'


“இந்த தேவையற்ற ஊசியைக் கூட இறந்த பிறகு எடுத்துக்கொண்டு போக முடியாது என்று தெரிந்த உமக்குத் தேடிய செல்வத்தால் ஆணவம் வரக்கூடாது. மாறாக மற்றவர்களுக்கு கொடுத்து மகிழவேண்டும். அப்பொழுது வாழ்க்கை இனிமையாகும்” என்று பட்டினத்தார் சொன்னாராம்.


பட்டினத்தாரின் காதறுந்த ஊசி ஆஞாவை அப்பொழுதிலிருந்தே எளிய ஆனால் இனிய வாழ்க்கை வாழ உதவியிருக்கிறது.


ஒரு நாள் ஆஞா அம்மாவிடம் சொன்னார்.

“ இன்னக்கி திடல்’ல யூனியன் ஆபீஸ் மூலமா ஒரு நாடகம் போடுறோம். நானும் நடிக்கிறேன். பிள்ளைகளை அழைச்சிகிட்டு சாயந்திரம் 6 மணிக்கு வந்துடு” என்றார்கள்.


6 மணிக்குப் போய்விட்டோம். சிறிய மேடை போட்டு விளக்குகள் போட்டு வைத்திருந்தார்கள். நாடகம் ஆரம்பித்தது. ஆஞா வேட்டியை வரிந்துக் கட்டிக்கொண்டு, மேல் சட்டை இல்லாமல் ஒரு மண்வெட்டியைத் தோளில் வைத்துக்கொண்டு தலையில் முண்டாசுடன் மேடையில் தோன்றினார்.


“தோ! தோ! தோ!… ஆஞா… ஆஞா…ஆஞா” என அம்மாவிடம் உற்சாகமாகக் காட்டினேன்.

“ ஆமா!” எனச் சொல்லிவிட்டு அம்மா, வீட்டில் செய்து தயாராகக் கொண்டு வந்திருந்த ‘கெண்டி’ முறுக்கை கொடுத்தார்கள். கெண்டி முறுக்கு வளைவு வளைவாக அழகாக இருக்கும். அதை ‘நறுக், நறுக்’ கென கடித்துக் கொண்டே நாடகத்தைப் பார்த்தேன். பின்னாளில் அது என்ன நாடகம்? ஏன் விவசாயி வேடத்தில் நடித்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு ஆஞா பின்வருமாறு கூறினார்.


“ 1960 களில் விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார்கள். விவசாயம் நட்டமாக இருந்த காலம். அதனால் அரசாங்கம் விவசாயிகளுக்கு நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்தது. விவசாயிகளை மறுபடியும் விவசாய வேலைகளுக்கு வரச் சொல்லியும், அரசாங்கத்தின் நலத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளச் சொல்லியும், பிரச்சார நாடகம் போட்டாம்” என்று கூறினார்.


இந்தக் காலக்கட்டத்தில் தான் ‘பசுமை புரட்சி’ என்கிற பெயரில் ஏர்கலப்பையை டிராக்டர் சாகடித்தது. ஆற்றுத் தண்ணீரையும், வாய்க்கால்களையும், ஏற்றத்தையும், பெருங்கிணறுகளையும் ஆழ்துளைக்கிணறு என்கிற பம்புசெட்டுகள் சாகடித்தன. சொந்த குதிருக்குள் காத்து வைத்திருந்த விதை நெல்லை, அரசாங்க மற்றும் தனியார் விதைகள் சாகடித்தன.


மாட்டு எரு சாணம் மற்றும் தழையுரத்தை பாஸ்பேட், யூரியா என்று தொழிற்சாலைகளில் உருவான புது உரங்கள் சாகடித்தன. சாம்பல் போன்ற பூச்சி விரட்டிகளை, ஃபேக்டரி பூச்சிக்கொல்லி, பூச்சி மருந்து என்ற பெயரில் சாகடித்தது. ‘பொல, பொல’ வென்று இருந்த மண் இறுகிப் போனது. ‘கல, கல’ வென்று இருந்த விவசாயிகளின் வாழ்க்கையின் மண் விழுந்தது.


****

ஒரு டிரங்க் பெட்டியில் போலீஸ் உடை போல காக்கி உடை இருக்கும். அதற்கேற்ற தொப்பி, விசில், பூட்ஸ் போன்றவையும் இருக்கும். இவையெல்லாம் என்ன எனக் கேட்டேன்.


ஆஞா பதில் சொன்னார்கள்.

“ ஹோம் கார்டு (Home Guard) என்கிற அமைப்பு ஒன்று இருக்கிறது. காவல்துறையில் பயிற்சி பெற்று பணியில் இருக்கும் காவலர்களுக்கு உதவி செய்யக் கூடிய அமைப்பு. இதில் காவல் துறைத் தவிர மற்றத் துறையில் இருப்பவர்கள் மற்றும் ஆர்வம் உள்ள தனி நபர்கள் சேரலாம். அதில் நான் உறுப்பினராக இருக்கிறேன்.


கும்பகோணம் லிட்டில் ஃப்ளவர் பள்ளியில் 21 நாளைக்குப் பயிற்சி கொடுத்தார்கள். வலங்கைமானிலிருந்து தினமும் காக்கிச்சட்டையைப் போட்டுக்கொண்டு, தலையில் தொப்பி அணிந்துக் கொண்டு, பெரிய பூட்ஸூடன் பஸ் ஏறி கும்பகோணம் போவேன். என்னோடு மீராவின் அண்ணன் பன்னீர்செல்வமும் வருவார். அதிகாலையிலிருந்து பயிற்சி முடித்து காலை 9 மணி வாக்கில் வீடு திரும்புவோம். பிறகு குளித்து சாப்பிட்டு விட்டு ஆபீஸூக்குப் போவோம்.


தேர்தல் நேரத்தில் வரிசைகளை ஒழுங்குபடுத்துவது, கோவில் திருவிழா நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது, எங்காவது தீ பிடித்தோ அல்லது வெள்ளம் வந்தோ மக்கள் கஷ்டப்பட்டால் ஓடிப் போய் மீட்பது என்பன போன்ற பணிகளைச் செய்வோம். இது ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் உருவாக்கிய அமைப்பு. அவர்களே உடையெல்லாம் கொடுத்துவிடுவார்கள்” என்று கூறினார்.


அக்காக்களும் சரி, நானும் சரி அந்த தொப்பியைப் போட்டுக்கொண்டு விசிலை எடுத்து ஊதி விளையாடியிருக்கிறோம்.


****


ஆஞாவோடு வேலை செய்தவர் ஸ்டீபன் என்கிற ஆஞாவின் நண்பர். அவருடைய மகன், சிறு குழந்தையாக இருந்த போது, இறந்து போனது மாதிரி மூர்ச்சையாகிப் போய், மூச்சு விடாமல் இருந்திருக்கிறார். ஆஞா பஞ்சாயத்து யூனியன் தலைமை அலுவலரிடம் ஜீப் கேட்டு வாங்கி, ஸ்டீபன் குடும்பத்தாரை சரியான நேரத்தில், கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்றார். நல்ல மருத்துவரிடம் காட்டியுள்ளார்கள்.


அவர் ஒரு மருந்து கொடுத்து, வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். ஒரு மணி நேரத்தில் நன்றாக ‘வெளிக்கிப்’ போய்விட்டால் குழந்தை பிழைத்துக்கொள்வான் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆஞா தன் நண்பர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லி, ஊக்கம் கொடுத்து அழைத்து வந்திருக்கிறார். வலங்கைமான் வந்ததும் பிள்ளை பிழைத்துக்கொண்டான்.


அந்தப் பையன் பின்னாட்களில், வளர்ந்து, கிறித்துவ குருமாராக, தஞ்சை மேற்றிராசனத்தில் பணியாற்றிய போது, ஒரு சந்தர்ப்பத்தில், நானும் ஆஞாவும் அவரைச் சந்தித்தோம். அப்பொழுது இந்தக் கதையை ஆஞா அவரிடம் சொன்னார். அவரது அப்பா இது குறித்து அவரிடம் சொல்லியிருப்பதாக அந்த பாதிரியார் ஆஞாவிடம் சொன்னார். அன்றைக்கு காப்பாற்றியதற்காக, காலம் அறிந்து உதவியதற்காக அவர் நன்றியும் கூறினார். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது இயல்பாக இருந்த காலம் அது.


*****


இன்னொரு நண்பரான பன்னீர்செல்வம், குடும்பம் பாபநாசம் ரோட்டில் இருந்த பசலிக்கீரை வீட்டை காலி செய்ய வேண்டி வந்த போது, வேறு வீடு தேடுகிற சமயத்தில், எங்கும் வீடு கிடைக்காததால், தாங்கள் பொருட்கள் போட்டு வைக்கிற ஒரு நீண்ட குடிசையைக் காட்டி ‘இதில் தங்கிக்கோ… மூணு பொம்பள புள்ளங்களை வச்சிருக்க… பையன் வேறு சின்னப் பையனா இருக்கான்’ எனச் சொல்லிச் சொல்லி வீடு கொடுத்ததாக, அதனால் மீரா வீட்டிற்குப் பக்கத்தில் வந்ததாகவும் ஆஞா சொன்னார்கள்.


குடும்ப நலனுக்காக ஆஞாவின் உழைப்பும் தியாகமும் மறக்கமுடியாத ஒன்று.


*****


42 views0 comments
bottom of page