top of page

13. அம்மை வார்த்திருந்தது. அப்பொழுதும் தேர்வை எழுதினார்


கலைமணி அக்கா பதினோறாவது வகுப்புக்கு வந்தாச்சு.


பதினோறாவது வகுப்புதான் உயர் நிலைப்பள்ளியின் கடைசி வகுப்பு. அதற்குப் பிறகு பல்கலைக்கழகத்துக்கு முந்தைய வகுப்பு (Pre-University Course - PUC) என்று இருந்தது. அதை முடித்தால் மூன்று வருட இளங்கலைப் பல்கலைக் கழகப்படிப்பு (Under Graduate Course - UG), பிறகு இரண்டு வருட முதுகலைப் பல்கலைக் கழகப் படிப்பு (Post Graduate Masters - PG) என்று இருந்தது. அதற்குப் பிறகு Master of Philosophy - M.Phil, Doctor of Philosophy - Ph.D. என நீண்டன.


1980 களின் கடைசியில் தான் 10+2+3 என முறை மாறியது. நான் படிக்கும் போது, பதினோராம் வகுப்பு, Secondary School Leaving Certificate - SSLC என்று அழைக்கப்பட்டது. எட்டாம் வகுப்பிலும் பதினோராம் வகுப்பிலும் மாநிலம் தழுவிய கேள்வித்தாளுடன் கூடிய தேர்வு இருந்தது. அந்தத் தேர்வில் வெற்றி பெறுவது கடினம். என்ன நன்றாக பதில்களை எழுதியிருந்தாலும், மதிப்பெண்களை குறைத்துத்தான் போடுவார்கள் எனச் சொல்வார்கள். ஏன் என்று தெரியவில்லை.

கலைமணி அக்கா பொதுவாகவே நன்றாகப் படிப்பார். பரிட்சை அடுத்த வாரம் என்றால், இந்த வாரம் அக்காவுக்கு பெரியம்மை போட்டுவிட்டது. உடலெல்லாம் ‘தக,தக’ வென கொதிக்கிறது. அம்மைப் புண்கள் ‘நர, நர’ வென அரிக்கிறது. சோர்ந்து சோர்ந்து விழுகிறார்.


இந்த நிலையில் எப்படி படிக்க முடியும்?

ஆனால் எங்கள் அம்மா மனம் தளரவில்லை. அம்மா ஒன்றை நினைத்துவிட்டால் அதை நிறைவேற்றிக் காண்பிப்பார். அப்படிப்பட்ட மனபலம்.

அக்காவை பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வார். பாயில் போர்வையைப் போர்த்திக் கொண்டு அக்கா உட்கார்ந்திருப்பார். சுற்றி வேப்ப இலைகள். மொந்த வாழைப்பழம். இளநீர் போன்ற, உடல் சூட்டைத் தணிக்கிற உணவு வகைகள் இருக்கும். அம்மா ஒவ்வொரு நூலாக எடுத்துப் பாடங்களைப் படித்துக் காண்பிக்கிறார்.


எட்டி நின்றே வில் வித்தையைக் கற்றுக் கொண்ட ஏகலைவன் போல, அம்மா படிக்கப் படிக்க அக்கா கண்களை மூடி, காதுகளைத் திறந்து கேட்டுக்கொண்டே இருப்பார். அம்மா படிக்கப் படிக்க, அக்கா கேட்டுக்கொண்டிருக்கட்டும். அதற்குள் கல்விமுறை எப்படி இருந்தது, எப்படி மாறியமு எனச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.


1947ம் ஆண்டு ஆங்கிலேயர்கள், அரசு அதிகாரத்திலிருந்து போனார்கள். அதற்குப் பிறகும் ஆங்கிலேயக் கல்வி முறை தொடர்ந்தது. ஆட்சியாளர்களுக்கும், மாறி மாறி வருகிற தொழிற்துறை, வணிகத் துறை, தொழிற்நுட்பத்துறை மற்றும் அறிவியல் துறைக்கு ஏற்றாற் போல கல்விமுறை மாறிக்கொண்டே வருகிறது. 19ம் நூற்றாண்டில் ஆங்கில ‘மெக்காலே கல்வி முறை’ அங்கில காலனியாதிக்க ஆட்சிக்குத் தேவையான ‘அதிகாரிகளை’ உருவாக்குகிற கல்வி.

18ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனி கட்டுப்பாட்டில் கல்வி. அதற்கு முன்பு தமிழகத்தை ஆண்ட தெலுங்கர்கள், மராட்டியர்கள், சாளுக்கியர்கள், மொகலாயர்கள் எல்லாம் அவரவர்களுக்குத் தேவையான கல்விமுறையை, மொழியை, பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினர். புத்த, சமண, ஜைன, பிராமணிய, இஸ்லாமிய, கிறித்துவ மடாலயங்களும் அவரவர் பங்குக்கு அவரவர் கருத்துக்களை புகுத்தும் நோக்கில் கல்விச் சாலைகளையும், குருகுலங்களையும், பள்ளிகளையும், விகாரைகளையும், மதரசாக்களையும் நடத்தினர்.

இப்பொழுது ஆங்கில மொழி மேலோச்சுவது போல சில கட்டங்களில் தெலுங்கும், பல கட்டங்களில் சமஸ்கிருதமும் மேலோச்சியிருந்திருக்கின்றன. அதற்கும் முன்பாக, சங்க கால கல்வி மன்றங்கள் இருந்துள்ளன. தமிழ் மொழி மேலாதிக்கம் பெற்று யாரும் கற்கலாம் என்கிற நிலையும் இருந்திருக்கிறது. திண்ணைப் பள்ளிகள் காலமும் இருந்திருக்கிறது.


‘கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற காலம்.


சரி! கதைக்கு வருவோம்.

அம்மா படிக்கப் படிக்க அக்கா கூர்ந்து கவனிப்பார். பாடங்களை மனதில் ஏற்றுக் கொள்வார்.

பரிட்சை நாள் வந்தது.


உடல் முழுக்க அம்மையோடு எப்படி பரிட்சை எழுத முடியும்? அவ்வளவு நேரம் ஒரே இடத்தில் இருந்து எழுத முடியுமா? அப்படி அக்கா எழுதினாலும் மற்றவர்களுக்குத் தொற்றிவிடும் என்று கூறி தேர்வை எழுத அனுமதிப்பார்களா?


இங்கு தான் ஆஞாவின் செல்வாக்கு வந்தது!

பள்ளி நிர்வாகத்தோடு என்ன பேசினார்களோ தெரியவில்லை. அக்கா முக்காடு போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போய், சற்றே தள்ளி உட்கார்ந்து எழுத உட்கார்ந்துக் கொண்டார்கள். ஆஞா, கலைமணி அக்கா, நான் மூவரும் சில நாட்கள் பள்ளிக்குப் போவோம். சில நாட்கள் அம்மா, கலைமணி அக்கா, நான் மூவரும் பள்ளிக்குப் போவோம். ஆஞா ஒரு குடையைப் பிடித்துக் கொண்டு, அக்காவை பத்திரமாக தாங்கிப் பிடித்துக்கொண்டு, நிழலிலேயோ அழைத்துச் செல்வார்கள். நான் பக்கத்தில் நடந்து வருவேன்.


என்னை பள்ளிக்கு எதிரே இருந்த, ஆரம்ப சுகாதார நலையம் என்று அழைக்கப்பட்ட மருத்துவமனையில் உட்கார வைத்து விட்டு, என்னிடம் இளநீர் உள்ள கூஜாவையும், வாழைப்பழம் இத்யாதி கொண்ட பையையும் வைத்துவிட்டு, அக்காவைப் போய் பள்ளியில் விட்டு விட்டு வருவார்கள். திரும்பி வந்து என்னோடு உட்கார்ந்துக் கொள்வார்கள்.


எனக்கு குச்சி ஐஸோ, கமார்க்கட் மிட்டாயோ வாங்கித் தருவார்கள். நான் ஆஸ்பத்திரிக்குப் போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். அம்மா வந்தால் எனக்கு அரிசி முறுக்கோ, பொரி உருண்டையோ வாங்கித் தருவார்கள். சில நேரம் அவர்கள் மடியில் தூங்கி விடுவேன்.


அக்கா தேர்வை எழுதிவிட்டு வந்ததும், குடையில் பத்திரமாக அழைத்துப் போய் விடுவோம்.


“ பரிட்சை நல்லா எழுதியிருக்கியா?”

“ ம்!”

“ சோர்வா இருந்துச்சா?”

“ ம்!”


வீட்டுக்குப் போனதும், சுருட்டிக் கொண்டு படுத்துவிடுவார் அக்கா. எனக்கு மட்டும் தெரிந்தது. அக்காவுக்கு எல்லா பதிலும் தெரிந்திருந்தாலும், உடல் நிலை சரியில்லாததால் எழுத முடியாமல் போயிருக்கிறது.


பாவம் அக்கா!


“ பரவாயில்லை! இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும், அடுத்த வருடம் எழுதிக்கொள்ளம்” எனப் பேசிக் கொண்டார்கள்.


ரிசல்ட் வந்தது.

அக்கா பாஸ்!


*****


20 views0 comments

Comments


bottom of page