அரிசி - சிறுகதை - உயிர்மெய்யார் - 20.09.2025
- உயிர்மெய்யார்

- Sep 21
- 11 min read
Updated: 3 days ago

திங்கட் கிழமை
வருகிற வெள்ளிக்கிழமை நல்ல நாள். அன்றே அதைச் செய்துவிடுவது என்று தணிகாசலம் முடிவு செய்துவிட்டார்.
இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கின்றன. அதற்குள் எல்லாவற்றையும் செய்து விட முடியுமா? என்று யோசித்தார். முடியுமா என்ன? முடிக்கவேண்டும். அப்படி ஒரு நிறைந்த நல்ல நாள் மறுபடி கிடைப்பது கஷ்டம்.
அதற்குள் சென்டரில் போட்ட குறுவை நெல்லுக்கானப் பணம் அவரது வங்கிக்கணக்கில் வந்து விடும்.
அந்த வட்டாரத்திலேயே இல்லாத உம்பளாச்சேரி நாட்டு மாடு ஒன்று அவரிடம் இருக்கிறது.
“மாட்ட கட்ட நல்ல கயிறு வாங்க துப்பில்ல” என்று சலித்துக்கொள்ளும் மனைவி கோமதியின் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
“வள்ளலார் மடத்துல பூசை வச்சி அன்னதானம் போடனும்…நாலு மாசமா சொல்லிட்டு இருக்கேன்..அப்பா காதுல விழவேமாட்டேங்குது..” என்ற மகள் செல்வியின் நச்சரிப்பு காதைப் பிடித்து இழுத்துக் கொண்டேயிருக்கிறது.
“நம்மால முடியாதுப்பா…நெலத்தை அடமானம் வச்சிடு..பொழைக்க வேற வழியப்பாக்க வேண்டியது தான்” என்று பார்க்கும் போதெல்லாம் சொல்லும், நெஞ்சு சளிக்கு தன்னை அடமானம் வைத்துவிட்ட வயதான அப்பாவின் குரல் மண்டையில் சுத்தியலால் அடித்துக்கொண்டேயிருக்கிறது.
இன்ன பிற வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாய் வரிசையில் நின்று அவர் மூளையில், என்னை முதலில் செய், இல்லை என்னை செய் என்று ஒலித்த வண்ணம் இருந்தன. எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு முடிவு கட்டியாகவேண்டும்.
வருகிற வெள்ளிக்கிழமை எடுக்கிற முடிவு எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுபட ஏதுவாக இருக்கும் என்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும்.
உற்சாகமாக செயல்படத் துவங்கிவிட்டார்.
இருந்த பழைய சைக்கிளையும் எழுபத்தைந்து ரூபாய்க்குக் கணேசன் ஆசாரி மகனிடம் விற்றாகி விட்டது. இப்போது எப்படி ராசப்பையன் சாவடியிலிருந்து மன்னார்குடிக்குப் போவது? இந்த ஐம்பத்து நான்கு வயதில் எட்டு கிலோ மீட்டர் நடக்க தெம்பு இல்லை.
யாராவது தெரிந்தவர்கள், மன்னார்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் போனால், அவர்களோடு தொத்திக் கொள்ளலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டே, கலையரசி டீ ஸ்டாலில், டீ குடித்தார் தணிகாசலம்.
கும்பகோணத்திற்குப் போற எட்டு மணி வீரா பஸ் இந்தப் பக்கம் போயிடுச்சா என்று ஒருவர் கேட்டு, இன்னும் இல்லை என்றதும், லைட் கம்பத்தின் ஓரத்தில் பையை வைத்து விட்டு குத்துக்க உட்கார்ந்து விட்டார் அவர்.
டீ குடித்து முடிப்பதற்கும், பைரவன் மன்னார்குடி போவதற்காக இரு சக்கர வாகனத்தில் வருவதை தணிகாசலம் பார்ப்பதற்கும் சரியாக இருந்தது. தோளில் கச்சலாக இருந்த துண்டை எடுத்து ஆட்டினார். பைரவன் ஓரமாக வண்டியை நிறுத்தினான்.
"என்ன மாமா? டீ குடிச்சாவுதா?" எனக்கேட்டான்.
"ஆமா மாப்ள…நீங்க குடிக்கிறீங்களா?" என ஒரு மரியாதைக்குக் கேட்டு வைத்தார்.
"இல்ல மாமா…மன்னார்குடிக்கு அவசர வேலையா போறன்" என்றான்.
"என்னை பெருமாள் கோயில்ட்ட உட்டுடுறியா மாப்ள" எனக்கேட்டார்.
"சட்டை கிட்டை போடல. வெறும் வேட்டி துண்டு தானா? பரவாயில்ல மாமா…ஏறுங்க போவலாம்" என்று சொல்லிவிட்டு, டீக்கடைக்குள் பார்த்து, "மாமா டீ காச என் கணக்குல எழுதிக்க மாப்ள்ஏய்...." எனச் சொல்லிக்கொண்டே, அவரை ஏத்திக் கொண்டு கிளம்பிவிட்டான்.
வலது பக்கம் பாமணியாறு. இடது பக்கம் வயல்வெளிகள். அப்பொழுது தான் குறுவை அறுவடை நடந்திருப்பதால், அங்காங்கே நாற்றாங்கால் போட்டிருந்தார்கள்.
"அத்தை இன்னும் குழு பணம் கட்டல போல இருக்கு" என்று பைரவன் பேச்சைத் துவக்கினான்.
வாகனம் போகிற வேகத்தில், காற்றின் இரைச்சலில் சரியாக கேட்கவில்லை.
"என்ன மாப்ள?" என்று கேட்டார்.
"ஒங்க வீட்டுல சுயஉதவிக் குழுல கடன் வாங்கியிருந்தாங்கல்ல மாமா?"
"ஆமா!..."
"போன மாசமே கட்ட வேண்டியதாமே?..."
"ஆமா!..."
"வட்டி கூட கட்டலன்னு பால் சொசைட்டியில ஜனங்க பேசிகிட்டு நின்னுதுவோ" என்றான்.
"ஆமா மாப்ள… பேங்க்ல எடுத்த கடனுக்கும் நாலு மாசமா கட்டல...."
"இல்ல மாமா… நா கூட பேங்ல கடன் எடுத்தேன். ஆனா நம்ம செட்டியார்ட்ட கடன வாங்கி அதைக் கட்டிபுட்டேன். செட்டியார்ட்ட கொள்ளை வட்டி தான். என்ன பண்றது? அது மாதிரி ஏதாவது ஏற்பாடு பண்ணனும் மாமா…"
என்று சொல்லிக்கொண்டே ஸ்பீட் பிரேக்கரில் மெதுவாக ஏறி இறங்க தோதுவாக வாகனத்தின் வேகத்தைக் குறைத்தான்.
பின்னால் உட்கார்ந்திருந்த தணிகாசலம் ஆமா என்று தலையை அசைத்தது அவனுக்குத் தெரியாததால், ‘என்ன மாமா நா சொல்றது?’ என்று கேட்டான்.
"ஆமா மாப்ள ஆமா…கடன் வாங்கித் தான் வெத வாங்குனன். வடநாட்டு பொம்பளங்க வந்து நட்டாங்கல்ல அவங்களுக்குக்கூட பாக்கியிருக்கு… எல்லாத்தையும் பைசல் பண்ணனும்…"
என்று பேசிக் கொண்டிருக்கும் போதே மேலப்பாலம் வந்து விட்டுது. அங்கிருந்து தெப்பக்குளம் திரும்பி, ராஜகோபாலசாமி கோயிலுக்கு வந்துவிட்டார்கள்.
"ஒன்றியத்தோட ஆபீஸூக்கு போறேன் மாமா. வரட்டா.." என்று சொல்லிவிட்டு அவன் போக, தணிகாசலம் இறங்கி கோயிலுக்கு எதிரே உள்ள சாலையில் நடக்கத் தொடங்கினார்.
வீட்டில் கோமதியும் செல்வியும் என்ன சாப்பிட்டார்கள் என்று தெரியவில்லை. மருந்து மாத்திரை வாங்க முடியாததால், அப்பாவுக்கு மாத்திரை கொடுத்திருக்க மாட்டார்கள். வள்ளலார் மடத்தில் விளக்கு ஏத்தி பூசை செய்யும் வேளாரைப் போய் பார்க்கச் சொல்லியிருந்தார். செல்வி போனாளா இல்லையா என்று தெரியவில்லை. மாட்டுக்கு கழனி தண்ணியை வைத்திருப்பார்களா? யோசித்துக்கொண்டே போகும் போது, கண்ணபிரான் உழவர் மையம் போர்டு கண்ணுக்குத் தெரிந்தது.
ஐயோ! அவர் பார்த்து விடக்கூடாதே. போன போகத்துக்கு யூரியாவும் பொட்டாஷூம் கடன் சொல்லித் தான் வாங்கிட்டுப் போனோம். பூச்சிக் கொல்லி மருந்து கூட விலைக்கு வாங்கி அடிக்கமுடியாம சண்முகத்துட்ட சொல்லி அவன் அடிச்ச பாக்கியைத் தான் அடிச்சோம்.
துண்டை வலது காதோரம் வெயிலுக்குக்காக பிடிப்பது போல் பாசாங்கு காண்பித்து அந்தக் கடையைக் கடந்தார்.
சே! போலீஸ் ஸ்டேஷன் ரோடு வழியா வந்து தாமரைக் குளம் தாண்டி பந்தலடிக்கு வந்திருக்கலாம் என்று தன்னையே கடிந்துக் கொண்டார்.
அப்பாடா! ஒரு வழியாக தாண்டியாகிவிட்டது.
சிவன் ஏஜென்சிஸ் கடையில் ஏறினார். மூன்று படிகள் ஏறித்தான் மேலே போகவேண்டும். மூச்சு வாங்கியது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு,
"வடக்கயிறு வேணும்" என்றார். ஒடிசலான ஒரு ஆள் "எத்தனை மீட்டர்" என்று கேட்டுக் கொண்டே, நீட்ட குச்சி ஒன்றை எடுத்து வந்தார்.
"மூணு மீட்டர்….இல்லல்ல… நாலு மீட்டர் குடுங்க" என்றார்.
"எதுக்கு" என்று கேட்டதற்கு..ஒரு நிமிடம் யோசித்து விட்டு, "மாட்டுக்குத்தான்..." என்றார்.
வேட்டியில் மடித்து வைத்திருந்த காசை எடுத்துக் கொடுத்து விட்டு பூஜை சாமான்கள் கடைக்குச் சென்றார்.
அங்கே பிச்சிக்குட்டி உட்கார்ந்திருந்தான்.
முப்பது வயசிருக்கும். ஒண்டிக்கட்டை. அவனுக்கென்று குடும்பம் இல்லை. சோறு கண்ட இடம் சொர்க்கம்.
"டேய் பிச்சுக்குட்டி இங்க என்ன பண்ற?" என தணிகாசலம் கேட்டார்.
"நேத்து பெரிய கோயில்ல பிரதோஷம். அதான் நைட்டே வந்து, உண்ட வாங்கி தின்னுட்டு, கொடிமரத்து கட்டையிலேயே படுத்துட்டன். இன்னக்கி சாமி ஊர்வலம் இருக்கு. நாளைக்குத் தான் ஊருக்கு வருவேன். மத்த நேரத்துல இதோ இங்க பட்டச்சாமி கடையில தான் இருப்பேன்." என்றான் பிச்சுக்குட்டி.
"ஓன் பொழப்பு அப்படி போவுது..."எனச் சொல்லிக்கொண்டே பூசை சாமான் கடையை நோட்டம் விட்டார் தணிகாசகலம்.
"பூசை சாமான் வாங்க வந்திருக்கியே! என்ன? அத்தைக்கு அடுத்த புள்ள பொறக்கனும்னு வேண்டிகிட்டு சாமி கும்பிடப்போறியா" என்று தமாஷாகக் கேட்டான்.
"நீ ஒருத்தன் போடா..." என்று தன் லிஸ்ட்டை கடைக்காரர் பட்டச்சாமியிடம் சொன்னார்.
"மஞ்சள், சந்தனம், குங்குமம், கற்பூரம், தூபம், படி, விளக்கு என்றதும் அவர் ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துக் கொடுத்தார்.
"ம்! ஒனக்கு என்னப்பா… ஒத்தப்பொண்ணு…அஞ்சு மா நெலம்…அசத்துறப் போ!" என்று சொல்லி பிச்சிக்குட்டி சிரித்தான்.
"ஒரு மாலையும் கொஞ்சம் உதிரிப் பூவும் வாங்கனும் பிச்சிக்குட்டி" என்றதும், "காசு குடு நா வாங்கியாறன்" என்று சொல்லி காசு வாங்கிக்கொண்டு ஓடினான். காக்கி நிறத்தில் கால்சட்டையும், அழுக்கான சட்டையும் போட்டிருந்தான்.
"விபூதி, தீப்பெட்டி, நெய் குடுங்க..." என்று வாங்கிக்கொண்டார்.
"சீயக்காயும் மண்ணெண்ணையும் வேணும் பிச்சிக்குட்டி" என்றார்.
"இதோ எதுத்தாப்புல வாங்கிக்கலாம். அப்படியே வா ஐயர் கடை டீயும் வடையும் நல்லா இருக்கும்..…வா திங்கலாம்" என்றான்.
"சாமான் எல்லாத்தையும் ஒரு பையில போட்டு வையுங்க" என்று சொல்லிவிட்டு பிச்சிக்குட்டிக்கு டீ வடை வாங்கிக்கொடுத்தார்.
"நீ திங்கல?" என்று கேட்டான்.
"இல்ல. நீ சாப்புடு" என்று சொல்லிவிட்டு, "திரும்ப ரிஷியூர் பஸ் எப்ப நம்ம ஊருக்குப் போவும்" என்று கேட்டார்.
"ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு வாட்டிதான் இருக்கே" என்றான் பிச்சிக்குட்டி.
"வேட்டி ஒன்னு வாங்கனும்" என்றார்.
"பரசு சில்க்ஸ்ல வாங்கு" என்றான். "எதுக்கு ஒனக்கு புது வேட்டி? சாந்தி முகூர்த்தமா? ..."என்று கேட்டுவிட்டு, டம்ளரில் டீ குலுங்க குலுங்க வெடிச் சிரிப்புச் சிரித்தான்.
"போடா! முட்டாப் பயல.". என்று சொல்லிவிட்டு டீக்கும் வடைக்கும் காசு குடுத்து விட்டு, போய் வேட்டியை இருவரும் வாங்கி வந்தார்கள்.
"நா கெளம்புறன் பிச்சிக்குட்டி. பஸ்ஸ்டாண்டுல வெத்தல பாக்கு வாங்கிட்டு ரிஷியூர் பஸ்ல போறேன்."
"விசேஷத்துக்கு முன்னமேயே சொல்லிடு. நா வந்து எல்லாத்தையும் பாத்துக்கறேன்" என்றான் பிச்சிக்குட்டி.
"நீ தாண்டா பாத்துக்கனும். நீ இல்லாமலா?" என்று கேட்டுவிட்டு, துண்டை தலையில் போட்டுக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போனார்.
ரிஷியூர் பஸ் நின்றது. ஏறினார்.
மூணு பேர் உட்கார்கிற சீட்தான் கிடைத்தது. ஜன்னலோரம் உட்கார்ந்தார்.
உட்கார்ந்ததும் மேலத்தெரு பார்வதி தன் ஏழு எட்டு வயது மகளுடன் பஸ்ஸில் ஏறினாள். தணிகாசலம் உட்கார்ந்திருக்கும் சீட்டில் மகளை நடுவில் உட்காரவைத்து விட்டு, ஓரத்தில் அவள் உட்கார்ந்தாள்.
"என்ன வெயில்!..." என்று சொல்லிக்கொண்டே முந்தானையில் முகத்தைத் துடைத்தாள்.
வசீகரமான முகம். நெற்றியில் பெரிய பொட்டு வைத்திருக்க வேண்டியவள், இரண்டு வருடமாக வைப்பதில்லை. பூவும் அணிவதில்லை.
"சாமான் எல்லாம் பலமா இருக்கே! என்ன விசேஷம்?..." என்று தணிகாசலத்திடம் கேட்டாள்.
"நல்ல விசேஷம் தான்." என்று சொல்லிவிட்டு அவள் பார்வையை விலக்கினார்.
அவள் விடவில்லை.
"ஓம் மவளுக்கு நிச்சயமா?..." எனக் கேட்டாள்.
"ம்க்கூம்! எங்க? போன மாசம் நல்ல வரன் வந்திச்சி. அவுக கேட்டத நம்மளால குடுக்க முடியல. விவசாயத்துல என்ன வருமானம் வருது? உழுதவன் கணக்குப் பாத்தா ஒழக்குக்கூட மிஞ்சாதுன்னு சும்மாவா சொன்னாங்க. வாயிக்கும் வயித்துக்குமே பத்தல. இதுல கல்யாணம் வேறயா?" என்று அலுத்துக்கொண்டார்.
பார்வதியின் மகள் "ஐஸ் வேணும்" என்றாள். சைக்கிளில் ஐஸ் பெட்டியை வைத்துக்கொண்டு சாய்ந்து நின்று வியாபாரம் செய்தவரிடம், ஜன்னல் வழியாக, ஒரு ஐஸ் வாங்குமாறு காசு கொடுத்தாள் பார்வதி.
தணிகாசலம் வாங்கி அவள் மகளிடம் கொடுத்தார். "என்ன படிக்கிற?" என்று வினவினார்.
"ஆமா! இதப் படிக்க வச்சி, வேலை வாங்கி, கலெக்டராக்கி… அடப்போயா…நாலாப்போட நிறுத்திட்டோம். வீட்டுக்கு வீடு வாசப்படி. இங்க வயித்த கழுவவே இந்தா அந்தா’ங்குது. அப்பறம் பொட்டப்புள்ளக்கு படிப்பெதுக்கு? இந்தக் கண்றாவியெல்லாம் பாக்கக்கூடாதுன்னுதான் இவிக அப்பா தொங்கிட்டாரு…"
பேச்சு ஜோரில் பஸ் கிளம்பியதே தெரியவில்லை. பார்வதி கையில் ஒரு டாக்டர் சீட்டு இருந்தது. மனநல டாக்டர் மணிவண்ணன் என்று எழுதியிருந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்தும் தணிகாசலத்துக்கு ஐஸ் கட்டி கரைந்தது போல் தெம்பு கரைந்துப் போயிருந்தது.
செவ்வாய்க் கிழமை
புதன், வியாழன் ரெண்டு நாள் தான் இருக்கு.
இந்த வெள்ளிக்கிழமையை விட்டால் பிறகு இப்படி ஒரு யோகம் நிறைந்த நாள் கிடைக்காது. அன்றே செய்து விடுவது தான் நல்லது என்று மறுபடியும் தீர்க்கமாக முடிவெடுத்துக் கொண்டார்.
என்ன செய்யப் போகிறார் என்று மனைவிக்கும் மகளுக்கும் கூட முன்கூட்டியே சொல்வதில்லை என்று நினைத்துக்கொண்டார். நேற்று வாங்கியப் பொருட்களை எடுத்துக்கொண்டு பஞ்சாயத்தார் வீட்டிற்குச் சென்று, "இங்க இருக்கட்டும். பிறகு வாங்கிக்கொள்கிறேன்" என்று வைத்து வந்துவிட்டார்.
"மேல வாய்க்கால்ல பெரியசாமி கவணப் போட்டிருப்பான்..விரா மீனு இருந்தா ரெண்டு புடிச்சி வாயேன்" என்று தணிகாசலத்தின் மனைவி கோமதி சொல்ல, "சரி.." என்று சொல்லிவிட்டு தணிகாசலம் தெருவில் நடந்தார்.
அப்பொழுது ஒரு கார் வந்து பெரியசாமி வீட்டில் நின்ற டிராக்டருக்கு அருகில் நின்றது.
"யாரா இருக்கும்?..." என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பேண்ட்ஸ் சட்டை போட்ட நான்கு பேர் சட சட வென இறங்கினார்கள். அதில் பெரிய அதிகாரி போல இருந்த ஒருவர், கூட வந்த இளைஞரைப் பார்த்து, கையை நீட்டி ஏதோ சொல்லிவிட்டு, ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார்.
யார் இவர்கள்? தணிகாசலம் நெற்றியைச் சுருக்கிப் பார்த்தார். பெரியசாமி கைலியை தூக்கிக் கட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். தணிகாசலம் மேல வாய்க்காலுக்குப் போகாம அங்கேயே நின்று விட்டார்.
சிகரெட்டைப் பற்ற வைத்த நபர், "ம்! ஆகட்டும்" என்பது போல் தலையசைக்க, அந்த இளைஞர் டிராக்டரில் ஏறி அமர்ந்தார்.
"யாரது? ஏவூட்டு டிராக்டர்ல ஏர்றது" என்று பெரியசாமி சத்தம் போட்டார். அந்த இளைஞர் அவரைக் கண்டு கொள்ளவில்லை. தான் எடுத்து வந்திருந்த சாவியைக் கொண்டு முடுக்கினார். “ட்ர்ர்ர்ர்…ட்ர்ர்ர்ர்….” என்று ஒலி எழுப்பிய டிராக்டர் கொஞ்சமாக புகையைக் கக்கியது. ஒரு குலுக்கலுடன் திமிறியது.
பெரியசாமி தாவி ஏறி அவன் சட்டையைப் பிடித்து "கீழே இறங்குப்பா" என்றார்.
காரில் வந்த இரண்டு தடியான ஆட்கள் பெரியசாமியை இழுத்துப் போட்டார்கள். அவர் தடுமாறி விழுந்ததில் நெற்றியில் அடிபட்டு இரத்தம் சொட்டியது. தணிகாசலம் ஓடிப் போய் பெரியசாமியைத் தாங்குவதற்குள், கிராமத்து ஆட்கள் நாலைந்து பேர் ஓடிவந்துவிட்டார்கள்.
சிகரெட் ஆசாமி எந்த பதற்றமும் இல்லாமல், "நாலு மாச தவணையைக் கட்டிவிட்டு, தஞ்சாவூர்ல வந்து டிராக்டரை எடுத்துக்கோ" என்று சொல்லிவிட்டு, "ஓட்டுடா..." என்று அந்த இளைஞனைப் பார்த்து அதட்டினார்.
பெரியசாமி அவரிடம் சென்று, "இன்னும் ஒரு வாரத்துல அறுப்பு காசு வந்துடும்யா.. கட்டிப்புடுறேன்… ஊர்ல தலகாட்ட முடியாதுய்யா" என்று இரண்டு கைகளையும் தலைக்குமேல கூப்பி, மண்டி போட்டு கதறினார்.
அதற்குள் பெரியசாமியின் மனைவி எங்கிருந்தோ ஓடிவந்தாள். தெரு மண்ணை எடுத்து வாரி இறைத்து, "நாசமா போவ! கழிச்சல்ல போவ!..வருமானத்துக்கு இருக்கற அது ஒண்ணயும் எடுத்துட்டுப் போனா…நாங்க என்னதான் பண்றது?" என தலைவிரி கோலமாகக் கத்தினாள்.
பெரியசாமியின் நெற்றியில் வளைந்து நெளிந்து வழிந்த ரத்தத்தை கவனித்துவிட்டு அவள் சத்தம் இன்னும் அதிகமானது. சிகரெட் ஆசாமி இவர்கள் குமறலைக் கேட்பது போல் இல்லை. கிராமத்தில் சிலரும் ஏதோதேதோ சொல்லி, டிராக்டரை விட்டுவிட்டுப் போகச் சொன்னார்கள். தணிகாசலம் சாமி சிலை போல உறைந்து போய் நின்றார்.
பெரியசாமி, மரத்தை வெட்டிய பிறகு தரையோடு தரையாக இருக்கும் அடிக்கட்டை போல அசையாமல் தரையிலேயே உட்கார்ந்திருந்தார். அவர் ஆசை ஆசையாக உட்கார்ந்து உழவு ஓட்டும் டிராக்டர் அவர் கண்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.
தணிகாசலம் வீட்டிற்கு வந்தார்.
"விரா மீன் எங்க" என்ற கோமதியின் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். நாலைந்து கொக்குகள் கிழக்கிலிருந்து மேற்கே மாலை போன்ற வடிவத்தில் பறந்துக் கொண்டிருந்தன.
அப்பொழுது செல்வி வந்து, "அப்பா! நீ வாய்க்கா பக்கம் போனப்ப, ஒன்ன பாக்க யாரோ ஒருத்தர் வந்திருந்தாரு. நீடாமங்கலத்துல போட்டோ கடை வச்சிருக்காராம். நீ போனப்ப அவர் இல்லியாம். இந்த நம்பர் குடுத்து போன் பண்ணச் சொன்னாரு. எதுக்குப்பா?" என்று கேட்டாள்.
"ஒன்னுல்ல..அப்பறம் சொல்றேன். பக்கத்து வீட்டு பையன் போன் வச்சிருப்பான்ல, அதுல இந்த நம்பர் போட்டு குடு பேசுவோம்" என்றார்.
அது போலவே நம்பர் போட்டு கொடுத்ததும், “ஹலோ! ராசப்பையன் சாவடியிலேர்ந்து பேசறேன்…ஆமா…சாவடி தான்..ஆமா…ஆமா..தணிகா….ஆமா…ஆமா..பாப்பா சொன்னிச்சி…ம்…..ம்…ஆமா…சரி…சரி…..இல்லல்ல…ஊர்ல ஒரு சம்பவம் நடந்து போச்சி…அதான்..ம்..வெள்ளிக்கிழமை தான். ஆமா…வர்ற வெள்ளிக்கிழமை…என்னப்பா?..சரியா காதுல விழல…ம்…இப்ப நல்லா கேக்குது…ஆமா..வெள்ளிக்கிழமை தான்…ம்..ம்…ரெண்டு பேரா…சரி. வந்துடுங்க….அதுவா?...ஒரு எட்டு மணிக்கு வந்தா சரியா இருக்கும்…ஆமா..ஒங்க கடை பையன் ஒங்கள்ட்ட போன் பண்ணிட்டு சொன்ன தொகை முழுசையும் அன்னக்கே கடையில் குடுத்துட்டு வந்தேன்.. ஓ! அப்படியா…நல்லது…சரி..சரி..தம்பி” என்று பேசி முடித்தார்.
நல்லவேளை! செல்வி பக்கத்தில் இல்லை. காது கேட்காத அவருடைய அப்பாதான் திண்ணையில் ஓரத்தில் படுத்திருந்தார்.
அப்பொழுது பிச்சிக்குட்டி வந்தான்.
கோமதி "இந்தா!..பிச்சிக்குட்டிக்கு நீராகாரம் குடு." ஏக உற்சாகத்தோடு இருந்தான். யாரோ கலர் சட்டை வாங்கிக் குடுத்தார்களாம்.
"சரி! இங்க வா…" என்று சொல்லி பிச்சிக்குட்டியை அழைத்துக்கொண்டு பஞ்சாயத்தார் வீட்டிற்குச் சென்று, நேற்று பையில் கொடுத்தப் பொருட்களை எடுத்து அவனிடம் குடுத்து, "பத்திரமா வச்சிக்க. வெள்ளிக்கிழமைக்கு இது தேவைப்படும். எங்க வச்சிக்குவ?" என்று கேட்டார்.
கொஞ்ச நேரம் யோசித்தான்.
"பெருமாள் கோயில் பக்கம் யாரும் வரமாட்டாங்க. அந்த கேட் சாவி என்னுட்ட தான் பண்டாரம் குடுத்து வச்சிருக்கார். அங்க உள்ள பிரகாரத்துல வச்சிடறேன்" என்றான். யாருக்கும் தெரியக்கூடாது என்றும் வெள்ளிக்கிழமை தான் எடுத்து வர வேண்டும் என்றும் திட்டமாகக் கூறிவிட்டார்.
அப்படி பிச்சிக்குட்டியிடம் கொடுத்து வச்சது குறித்து தணிகாசலத்துக்கு சந்தோஷமாகி விட்டது. பல நாட்களுக்குப் பிறகு அவரது முகத்தில் ஒரு புன்னகை வந்தது.
புதன் கிழமை
அதிகாலை நான்கு மணி ஆகியும் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். பனைமரத்தின் நடுவில் இருந்து வளர்ந்த அரசமரத்தின் கிளைகள் ஊடே பெரு நிலா இவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தது. ஏன் இன்று இவர் இப்படி தூங்காமல் அலைக்கழிக்கிறார் என்று கயிற்றுக் கட்டில் ஆச்சரியத்தில் விழித்திருந்தது. அம்ம்ம்ம்ம்மா என்று மாடு கத்தவும் எழுந்து விட்டார்.
தணிகாசலத்தின் கண்களைச் சுற்றியிருந்த கருப்பு வளையத்தை நாவல் பழமோ என்று எண்ணி பறந்து வந்த வௌவால், ஏமாந்து விருட்டென திரும்பி பறந்தது.
சம்பா போகத்திற்கான நாத்தாங்கால் போட, நிலத்தை உழ வேண்டும். பெரியசாமி டிராக்டரும் இல்லை. பூவனூர் சென்று கேட்கலாம். அஞ்சு மா நிலத்தை உழ கடனுக்கு யார் வருவா? என்ன பொழப்புடா இது? என்று யோசித்துக் கொண்டே, வழக்க தோஷத்தில் நிலத்திற்குச் சென்றார்.
அங்கு போய் ஒன்றும் செய்யப் போவதில்லை. இருந்தாலும் ஒரு தடவை போய் பார்த்து வருவதில் தப்பில்லை. இவர் வருவதை கவனிக்காமல் பாமணி ஆறு கோரைகளுடன் பேசிக் கொண்டிருந்தது.
"யாரு?.." என்று கேட்டுக்கொண்டே கோமதி வெளியே வந்தாள்.
"நீடாமங்கலம் வேளாண் துறையிலேர்ந்து வர்றேன் மா. ஐயாவ பாத்துட்டு போகலாம்னு வந்தேன்."
"யாராவது வரும் போது தான் இவரு காணாம போயிடுவாரு. அப்படித்தான் நேத்து போட்டோக்காரன் ஒருத்தன் வந்தான். ஆள கண்ணா பொறப்புல காணோம். அப்படி உக்காருங்க." என்று திண்ணைய காமிச்சிட்டு, "செல்வி இந்தா ...சாருக்கு டீ போட்டுக் குடு." என்றாள். "டீயெல்லாம் வேணாம்மா. இப்பத்தான் குடிச்சேன்" என்றார் கண்ணாடி போட்டிருந்த சார்.
திண்ணையில் படுத்திருந்த தணிகாசலத்தின் அப்பாவை அப்பொழுது தான் அவர் பார்த்தார்.
அவர் இருமிக் கொண்டே, "நீடாமங்கலமா?" என்றார்.
"ஆமாங்க ஐயா."
""ஊரே அது தானா? இல்ல கெழக்க பொதக்குடி."
"வேல நீடாமங்கலத்துல."
"என்ன வேல?"
"ஆராய்ச்சி பண்ணி புதுசா வர்ற விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துன்னு குடுக்கறது. பணப் பயிர் சாகுபடி எப்படி செய்றதுன்னு கத்துக் கொடுக்கறது..."என்று அடுக்கிக் கொண்டே போனார்.
"எங்க காலத்துல வெவசாயம் நல்லா தான் இருந்துச்சி. நாங்களே ஏர் கலப்பை வச்சி உழுதோம். அதுக்கு காளை மாடு எங்கள்ட்டயே இருந்துச்சி. போன போகத்துல வச்சிருந்த வெதைய எடுத்து நாங்களே வெதைச்சோம். வாய்க்கால்ல வர்ற தண்ணிய கவணை போட்டு எறைப்போம். இல்லாட்டி ஏத்தம் போட்டு ஏத்துவோம். எங்க மாடு போட்ட சாணியை ஒரமா போட்டோம். வேப்பெலை கரைசல் போட்டு பூச்சி வந்தா வெரட்டுவோம். கதிர் அரிவா வச்சி அறுத்து, மாட்டை ஓட்டி நெல்ல சேகரம் பண்ணுனோம். எல்லா நல்லா தான் இருந்துச்சி. அப்பறம் ஒங்கள மாதிரி படிச்சவங்க, நீள கால் சட்டையெல்லாம் போட்டுட்டு ஊருக்குள்ள வந்தாங்க… என்று சொல்வதற்குள் மூச்சிரைத்தது.
சார் மூஞ்சில் ஈ ஆடவில்லை.
கொஞ்சம் தர்ம சங்கடமாத்தான் இருந்தது. போய்விடலாமா என்று யோசிக்கும் போது தணிகாசலம் வந்து விட்டார்.
"வாங்க சார்" என்றார்.
"மான்யத்துல உரம் குடுக்குறாங்க. அப்பறம் புதுசா திருவள்ளுவர்’னு ஒரு நெல்லை கண்டு புடிச்சிருக்கோம். இரண்டு மாசத்துல வெளஞ்சிடும். ஒங்கள மாதிரி குறு விவசாயிகள்ட்ட அறிமுகப் படுத்தறதுக்கு எனக்கு டார்கெட் குடுத்துருக்காங்க."
சார் பேசிக்கொண்டிருக்கும் போது பிச்சுக்குட்டி வந்தான்.
பக்கத்தில் முருங்கை மரத்தூறில் உட்கார்ந்தான். தணிகாசலம் பிச்சுக்குட்டியைப் பார்த்துவிட்டார். அவனிடம் சில வேலைகள் இருக்கின்றன. இவர் வேறு பேசிக் கொண்டேயிருக்கிறார் என்ற அங்கலாய்ப்பு முகத்தில் தெரியா வண்ணம் முயற்சித்தார்.
இடையே பேச வேண்டாம் என்று காத்திருந்த பிச்சுக்குட்டி ஒரு கட்டத்தில், "சார்..."என்று கூப்பிட்டான்.
அவர் என்ன என்று பார்த்தார்.
"ரொம்ப நாளா ஒங்கள்ட்ட ஒன்னு கேக்கனும்னு இருந்தேன். கேக்கலாமா" என்றான்.
"டேய் பிச்சுக்குட்டி பேசாம இரு" என்றார் தணிகாசலம்.
"இல்ல அவரு கேக்கட்டும்னு சார்" ஜனநாயகத்தின் குரலா ஒலிக்க அவன் கேட்டே விட்டான்.
"அது எப்படி சார் இவரு மாதிரி விவசாயிங்க இருபத்து நாலு மணி நேரமும் சேறுலயும் சகதியிலயும் நின்னு, காடு கழனின்னு சுத்தி, வெள்ளாம பாக்குறாங்க. ஆனா அத எதயும் செய்யாத ஆபீசருங்க, இவுங்களுக்கு கிளாஸ் எடுக்குறீங்க. அது எப்படி சார்?" எனக் கேட்டான்.
தணிகாசலம் அவனைப் பார்த்து முறைத்தார். என்ன தப்பு என்கிற முகபாவத்தில் இவன் அவரைப் பார்த்தான்.
"நான் இன்னொரு நாள் வாரேன்" என்று சொல்லிவிட்டு சார் கிளம்பிவிட்டார்.
பிச்சுக்குட்டியை அழைத்துக்கொண்டு தணிகாசலம் பெரிய தோட்டத்திற்குப் போனார். பச்சை முண்டாசு கட்டிக்கொண்டு ஒருவர் வந்தார்.
"நின்னு எரியுற மாதிரி விறகு வேணும்" என்றார்.
"வேங்கை இருக்கு, கருங்காலி இருக்கு, மருது இருக்கு என்று அடுக்கிக் கொண்டே போனார்."
தணிகாசலம் கொஞ்சம் யோசித்தார். ஒரு மரத்தைச் சொல்லி, இவ்வளவு வேண்டும் என்ற சொல்லி அதற்கானப் பணத்தைக் கொடுத்தார்.
"அட! விருந்து பலமா இருக்கும் போல இருக்கே!" என்று பிச்சிக்குட்டி கிண்டல் செய்தான்.
"பேசாம வாடா.." என்று சொல்லிவிட்டு, "நம்ம வேளார் வீட்டுக்குப் போயிட்டு அப்படியே கருப்பசாமி கோயில் தெருவுக்குப் போய் சிவாஜியைப் பாத்துட்டு வந்துடுவோம்."
"எந்த சிவாஜி?:
"அதான் தண்டோரா போடுவானே அந்த சிவாஜி."
"ஓ! ஊரக்கூட்டி அன்னதானமா? சரி..." என்று பிச்சிக்குட்டியும் உற்சாகமாக கிளம்பினான்.
"ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்ததுன்னு யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குட்டி சொன்னதுண்டு…கதையில்ல சாமி…இப்போ காணுது பூமி" ன்னு உரக்கக் கத்திகிட்டு வந்தான்.
தணிகாசலத்தின் முகத்தில் மாத்திரம் பல எண்ண ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன.
வேளார் வீட்டில் பல பானைகளும் சட்டிகளும், அவைகளைச் செய்யும் சக்கரமும் இவர்களை வரவேற்றன. பிச்சிகுட்டி பஞ்சாயத்து பைப்பில் தண்ணீர் குடிக்க ஒதுங்கினான்.
தணிகாசலம் வேளாரைப் பார்த்து காசைக் கொடுத்து பிச்சிக்குட்டியைக் காண்பித்து எதையோ சொன்னார்.
வேளார் தலையசைத்துக் கொண்டார். சிவாஜியைப் பார்க்க அந்தத் தெருவுக்குப் போகவேண்டும். அங்கு போகும் முன்பே டீக்கடையில் சிவாஜி நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு, செய்தி சொல்லிவிட்டு திரும்பினார் தணிகாசலம்.
பிச்சிக்குட்டி அவரோடு சேர்ந்துக்கொண்டான்.
"டேய்! இந்தா இத பத்திரமா வச்சிக்க" என்று சொல்லி அவன் கையில் திணித்தார்.
"பணமா? எவ்வளவு?:
"ஆயிரம் ரூபா. "
"ஆயிரம் ரூபாவா?" என்று கேட்டுவிட்டு கால்சட்டைப் பையில் வைத்தான்.
போகிற வழியில் பண்டாரத்தைப் பார்த்து பூசைக்குத் தேவையான மணி, தட்டு எல்லாம் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டு வீடு நோக்கி வந்தார்கள்.
அப்பொழுது வீட்டின் வெளியே கும்பலாக சிலர் நின்று கொண்டிருந்தனர்.
"என்ன? என்ன?" என்று கேட்டுக் கொண்டு கூட்டத்தை விலக்கி தணிகாசலம் உள்ளே போனார்.
செல்வியைப் பெண் பார்க்க திருவாரூரிலிருந்து ஒரு குடும்பம் வந்திருந்தது.
"ஓஹோ!…என்னடா எலி கோமணம் கட்டிகிட்டு திரியுதேன்னு பார்த்தேன். எல்லாம் இதுக்குத்தானா?" என்று பிச்சிக்குட்டி நினைத்துக்கொண்டான்.
எல்லாம் கூடி வந்ததை நினைத்து தணிகாசலத்திற்கு கொஞ்சம் நிம்மதி வந்தது.
ஒரு ஆட்டோவில் இரண்டு பேர் வந்து இறங்கினார்கள். பிச்சிக்குட்டியிடம் "தணிகாசலம் வீடு? "எனக் கேட்டார்கள்.
"இது தான். பந்தல் எங்க போடனும்னு கேட்க வந்தோம்."
"வேற எங்க? இதோ இங்க தான்" என வீட்டின் முன்பகுதியைக் காட்டினான் பிச்சிக்குட்டி.
"இவர் ரேடியோ செட்காரர். மைக் எல்லாம்…"என்று அவன் சொல்வதற்குள், "என்ன முன் பணம் வேணுமா? இந்தா நூறு ரூபா" என்று சொல்லி அந்த ஆயிரத்திலிருந்து கொடுத்து விட்டு முகத்தில் ஒரு பெருமையுடன் அதே முருங்கை மரத்தில் உட்கார்ந்தான்.
வியாழக் கிழமை
இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது.
செல்வியை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்து, "நேற்று வந்த வரன் பிடித்திருக்கிறதா" என்று கேட்டார்.
அவள் சம்மதத்துடன் தலையசைத்தாள். கோமதிக்கும் "பிடித்திருக்கிறது" என்றாள். மூவரும் பக்கத்தில் உள்ள அம்மன் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டு வந்தனர்.
திரும்பும் வழியில் தணிகாசலத்தின் கூடப்பிறந்த தம்பி முருகேசன் உக்கடையிலிருந்து ராசப்பையன் சாவடிக்கு வந்தார்.
"என்ன அண்ண? வரச்சொல்லியிருந்தியாம்..."
கோமதியையும் செல்வியையும் வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு தம்பி முருகேசனை அழைத்துக் கொண்டு விஏஓ அலுவலகத்திற்குச் சென்றார். "ஒனக்கு தான் இந்த விவரம் தெரியும். என் அஞ்சு மா நெலத்துக்கு இன்சூரன்ஸ் கட்டிட்டேன். அதுல பணம் வரும். ஆனா சிட்டா அடங்கல் கேட்டா ஏதோ சர்வே எண்ல பிரச்னையிருக்குன்னு விஏஓ சொல்றாரு. கொஞ்சம் பாத்து குடுத்துட்டுப் போ..." என்றதும் முருகேசன் தபால் பெட்டி இருக்கற வீட்டிற்கு பக்கத்தில் உள்ள விஏஓ அலுவலகத்திற்கு அழைத்துப் போனான்.
ஏற்கனவே சிலர் அவர் வருகைக்காகக் காத்திருந்தனர்.
அதில் பண்ணை கார்வாரி பரமசிவமும் இருந்தான். நல்லதாப் போச்சு என்று தணிகாசலம் அவரிடம், "ஒங்க தெடல்ல இருக்கற மூங்கில் ரெண்டு வெட்டனும். ஒரு தேவைக்கு அது தேவையா இருக்கு" என்றதும், "நானே வெட்டி அனுப்புறேன்" என்று பரமசிவம் சொல்லிவிட்டான்.
விஏஓ வந்ததும், "ஒன்றுமில்லை அது சப்டிவிஷன் பண்ணியது.... நம்ம நோட்டுல ஏறாம இருந்துச்சி. ஏறாட்டி எந்த சான்றிதழும் குடுக்கறது கஷ்டம். இன்சூரன்ஸ், வருமானச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ்னு குடுக்கனும்னா, அடங்கல் நோட்டுல பதிவாகிருக்கனுமில்ல.." என்று சொன்னார்.
"இப்போ சரி பண்ணியாச்சி. நீங்க போவலாம்" என்றதும் முருகேசன் தணிகாசலத்திடமிருந்து இருநூரு ரூபா பணத்தை வாங்கி அவர் கையில் திணித்தார்.
"திருவாரூரிலிருந்து செல்வியைப் பாத்துட்டு போனாங்க. நீ வந்து அண்ணியப் பாத்துட்டுப் போ" என்று அழைத்ததால் முருகேசன் வீட்டிற்கு வந்தான்.
பிச்சிக்குட்டி அந்த முருங்கைமரத் தூறில் உட்கார்ந்திருந்தான்.
"வாங்க! வாங்க!! உக்கடைக்காரருக்கு இப்பத்தான் வழி தெரிஞ்சிச்சா" என்று கேட்டான்.
ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லி…"ஓங்கொப்பன் மவனே!" என்று முருகேசன் அவன் முகத்தில் தட்டினான்.
""போய் கலர் வாங்கிட்டு வா பிச்சிக்குட்டி என்று சொல்லி தணிகாசலம் பணத்தை எடுக்க ஒரு சில நோட்டுகளும் சில காசுகளும் கீழே விழுந்தன.
"அண்ண! பணத்தை பத்திரமா வையி" என முருகேசன் திட்டினான்.
காசுகள் உருண்டு போனதில் ஒன்று பிச்சுக்குட்டியின் காலடியில் போய் நின்றது.
லாபம் என்று சொல்லி அவன் எடுத்து கால்சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டான்.
இருபது ரூபாயை வாங்கிக்கொண்டு "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராசா. நேரம் வரும் காத்திருந்து பாரு ராசா" என்று பாடிக்கொண்டு போனான்.
வெள்ளிக் கிழமை
ஆட்டோவில் எதையோ மைக்கில் சொல்லிக் கொண்டேச் சென்றார்கள்.
தணிகாசலத்தின் வீட்டிற்கு வெளியில் சிலர் பந்தல் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
வேளார் மண் சட்டி எடுத்து வந்தார். தோட்டத்திலிருந்து விறகுகள் வந்து இறங்கின.
கார்வாரி பரமசிவம் வீட்டிலிருந்து இருவர் மூங்கிலை எடுத்து வந்தார்கள்.
சிவாஜி தன்னோடு தப்பு அடிக்க இன்னும் மூன்று பேரை அழைத்து வந்தான்.
பைரவன், கணேசன் ஆசாரி மகன், மேலத்தெரு பார்வதி, மேலவாய்க்கால் பெரியசாமி என ஒவ்வொருவராக வந்தார்கள்.
முருகேசன் வாசலில் நின்றிருந்தான்.
தணிகாசலத்தின் அப்பா இருமலுக்கிடையே, "என்ன தப்பு சத்தம்" என்று கேட்டார்.
போட்டோகிராபர் வந்தார்.
மன்னார்குடியில் அவர் வாங்கிக்கொடுத்து, பெருமாள் கோவிலில் இவன் வைத்திருந்த பையைத் தூக்கிக் கொண்டு, பிச்சுக்குட்டி, தணிகாசலம் வீட்டிற்கு வந்தான்.
புது வேட்டி, விளக்கு, குங்குமம், சந்தனம் எல்லாவற்றையும் எடுத்து வெளியில் வைத்தான். கயிறைத் தேடினான். அது மட்டும் காணவில்லை.
தணிகாசலத்தைப் பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். கழுத்தில் கயிறின் பிடி இறங்கி, இரத்தம் கட்டியிருந்த அறிகுறி இருந்தது. ஆனால் ஐந்து நாட்களில் எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்திருந்த நிம்மதி முகத்தில் தெரிந்தது.
முக்கியமாக வாரிசு சான்றிதழ்.
நேற்று எடுத்த ஒத்தைக் காசை கால்சட்டைப் பையிலிருந்து எடுத்தான் பிச்சிக்குட்டி. தணிகாசலத்தின் நெற்றியில் வைத்தான்.
துணிப் பையிலிருந்து ஒரு பிடி அரிசியை எடுத்தான் வாய்க்கரிசி போட.
*********



வணக்கம் குரு.
அருமையான கதை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்க.
காக்கி நிறத்தில் கால்சட்டையும், அழுக்கான சட்டையும் போட்டிருந்தான். அவ்வாறே வாங்கி வந்தான். இதில் அவ்வாறே என்பதற்குத் தெளிவான விளக்கம் இல்லை குழப்பம்.
பார்வதி கையில் ஒரு டாக்டர் சீட்டு இருந்தது. மனநல டாக்டர் மணிவண்ணன் என்று எழுதியிருந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்தும் தணிகாசலத்துக்கு அந்த ஐஸ் கட்டி கரைந்தது போல் தெம்பு கரைந்துப் போயிருந்தது. - அந்த ஐஸ் கட்டி - இதில் அந்த என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாம்.
தணிகாசலத்தின் கண்களைச் சுற்றியிருந்த கருப்பு வளையத்தை நாவல் பழமோ என்று எண்ணி பறந்து வந்த வௌவால், ஏமாந்து விறுட்டென திரும்பி பறந்தது. - அழகாக உவமை கையாண்டுள்ளீர்கள். வாழ்க.
பொதுவாக கதை விறுவிறுபாகச் செல்கிறது. என்ன என்னவென்று யோசிக்க வைக்கிறது.
வடவெழுத்துகளைத் தவிர்த்து எழுதியிருக்கலாம்.