top of page

ஊட்டி பெத்லகேம் ஆசிரியப் பயிற்சி பள்ளி மாணவிகளுக்குப் பயிற்சி

Updated: Dec 19, 2021


1981 டிசம்பர் 4ம் தேதி ஊட்டி பெத்லகேம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் வைத்துத் தான் பாஞ்சாவை (பிரான்சிஸை அப்படித்தான் செல்லமாக அழைப்போம்) முதன் முதலில் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! இதோ!! 2021 டிசம்பர் 4ம் தேதி. மிகச்சரியாக 40 வருடங்கள். அவரைப்பற்றிய என் நினைவலைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்.


1980ல் நானும், இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று நம்மால் அழைக்கப்படுகிற நம்மாழ்வார் அண்ணாச்சியும், ஆஸ்வால்டு குவிண்டால் மற்றும் பெரியநாயக சாமியும் இணைந்து ‘குடும்பம்’ என்கிற தன்னார்வச் சேவை அமைப்பை உருவாக்கியிருந்தோம். அதன் தலைவர் நம்மாழ்வார். செயலர் நான்.


நாங்கள் நால்வரும், ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு சமூக அறிவியல் மற்றும் தலைமைப்பண்பு பயிற்சி கொடுப்பதற்காக ஊட்டியில் உள்ள பெத்லகேம் ஆசிரியப் பயிற்சி பள்ளிக்கு வந்திருந்தோம். கிட்டத்தட்ட 30, 40 மாணவிகளுக்கு இடையே சுறுசுறுப்பாக ஓர் இளைஞன், சிரித்த முகத்துடன் வலம் வந்துகொண்டிருந்தான். அழகிய முகவெட்டு. நட்புடன் பழகக்கூடிய. இயல்பு.


“ என் பேரு ஜான். நீங்க?’ என்றேன்.

“ பிரான்சிஸ்” என்றவாறு கைகளை இறுக்கிப் பற்றிக் கொண்டார்.

அன்றைக்குப் பற்றிய கைகள்! அன்றைக்கு பற்றிய நட்பு நெருப்பு!!

நாற்பது வருடங்களாக தொடர்கிறது. என்ன வியப்பு!! அதே சுறுசுறுப்பு. அதே நட்பு.


***


ஊட்டி தொடர்வண்டி நிலையத்திலிருந்து அண்ணாந்து பார்த்தால், பெத்லகேம் ஆசிரியப் பள்ளி இருக்கிற வளாகம் தெரியும். வெள்ளை மேகங்களுக்கும், உயரிய மரங்களுக்கும் இடையே பொலிவோடு இருக்கும் கட்டிடத்தில், பயிற்சி பள்ளியின் தலைமையாசிரியர் அருட்சகோதரி ஜோஸ்பின் அவர்களின் வேண்டுதலின் பேரில் தான் வந்திருந்தோம்.


“எல்லோரும் வட்டமா உக்காருங்க” என்று எப்பொழுதும் போல நம்மாழ்வார் பயிற்சியைத் துவங்கினார். அப்போது எனக்கு 20, 21 வயது இருக்கும். பிரான்சிஸிக்கும் அப்படியே.


சமூகத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளைக் களைய இளைஞர்கள் தலைமைப்பண்புடன் செயலாற்ற வேண்டிய தேவை பற்றியெல்லாம் நாங்கள் நால்வரும் வகுப்பு எடுத்தோம். ஒரு கட்டத்தில் வசதி மிக்கோர்ர ஏழை எளிய மக்களை எப்படி வாட்டி வதைக்கிறார்கள் என்பதை காட்சிப் படுத்த முனைந்தோம்.


நான் மெலிந்து சின்னதாய் இருப்பேன். ஆஸ்வால்டு நல்ல வாட்ட சாட்டமாக இருப்பார். நான் நான்கு கால்களில், கால்நடை போல இருக்க, ஆஸ்வால்டு என் மேல் அதிகாரத் திமிருடன் அமர்ந்து என்னை, சாட்டை கொண்டு ஓட்டுவார். நடிப்பிற்காக முகத்தை ஏழு கோணலாக்கி நகர முடியாமல் நகர்வதாக ஆசிரியப் பயிற்சி பள்ளி மாணவிகள் நினைத்தார்கள். ஆனால் உண்மையாகவே என்னால் அவரைத் தூக்கிக் கொண்டு நகர முடியவில்லை.


அவரது ஆஜானு பாகுவான உடலைத் தூக்கிக் கொண்டு இஞ்ச் இஞ்ச்’சாக நகர படாத பாடு பட்டேன். மாணவிகள் என் கஷ்டத்தைப் புரிந்து வாய்விட்டு, ‘த்சோ!’ ‘த்சோ!’ என கொஞ்சம் சத்தமாகவே சொல்லத் துவங்கினார்கள். பணக்காரத் தோரணையில் உட்கார்ந்து என்னை மிரட்டி விரட்டியவர் மீது மாணவிகளுக்கு கடுங்கோபம் வந்தது. பயற்சி அறையில் ஒரு சுற்று சுற்றிவருவதற்குள் கண் பிதுங்கிப் போனது. அந்தக் காட்சிக்குப் பிறகு சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிப் பேசினோம்.


இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பிரான்சிஸ் எங்களிடம் வந்தார்.


“காட்சி சிறப்பாக இருந்தது. இந்த பயிற்சி மாணவிகளுக்கு ஒரு நாடகம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அதை உங்களுக்குப் போட்டுக் காண்பிக்கட்டுமா?” என்று கேட்டார்.


“ தாராளமாக….” என்றதும், இரவு உணவு முடித்து விட்டு, பயிற்சி அறையில் அமர்ந்தோம்.

பயிற்சி ஆசிரிய மாணவிகள் சிலர் கை கோர்த்து நடுவிலே நின்றனர். கைகளை பார்வையாளர்கள் பக்கம் நீட்டி, “சித்ரவதை” “சித்ரவதை” என்று ஒவ்வொருத்தராகச் சொன்னார்கள். சொன்னார்கள் என்பதை விட உச்ச ஸ்தாயியில் கத்தினார்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்.


சத்தம் முடிந்து மயான அமைதி. எல்லோர் கண்களும், என்ன நடக்கப் போகிறதோ எனப் பார்த்துக் கொண்டிருந்தன.

மேசை போல இருவர் குனிந்து நின்றார்கள். நாற்காலி போல ஒரு மாணவி நாலு காலில் அமர்ந்தார். போலீஸ்காரர் போல் ஒருவர், கையில் குச்சி இல்லாமலேயே, குச்சி இருப்பது போல் பாவனை செய்து கொண்டு, திமிராக வந்து நாற்காலியில் (அதான்! அந்த மாணவி முதுகில்) அமர்ந்தார். இருவர் ஒரு கைதியை இழுத்து வந்தார்கள். போலீஸ்காரர், முகத்தில் கடுமையை வரவழைத்துக் கொண்டு, அந்தக் கைதியின் அருகில் சென்று, கம்பால் ‘சாத்து, சாத்து’ என சாத்தினார். கைதியாக நடித்த மாணவி, வலியால் துடித்து, அழுது புரண்டு, கண்களில் நீர் வழிய இங்கும் அங்கும் ஓடினார்.


போலீஸ்காரர் விடவில்லை. காலால் உதைத்தார். முட்டியை பேய்த்தார். மூக்கில் குத்தினார். முதுகில் அடித்தார். (பயப்படாதீங்க! எல்லாம் நடிப்புத் தான்). ஆனால் உக்கிரமாக இருந்தது. போலீஸ்காரரின் கண்களில் அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது. கைதியின் கண்களில் நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடியது. கைதியைப் படுக்கப் போட்டு, இருவர் பிடித்துக் கொள்ள, போலீஸ்காரர் காலில் ‘பொளேர், பொளேர்’ எனத் தன் பலம் கொண்ட வரை ஓங்கி, ஓங்கி அடித்தார். கைதியின் ஓலம் கேட்கச் சகிக்க வில்லை. “யாராவது இந்தக் கொடுமையை நிறுத்துங்களேன்.” என வாய் விட்டு கத்தும் அளவுக்கு காட்சி தத்ரூபமாக இருந்தது.


பதினைந்து நிமிடங்கள். வெவ்வேறு சித்ரவதைக் காட்சிகள். “ஐயோ! போதும், அந்தக் கைதியை விட்டுவிடுங்கள்” என மனம் கதறியது. ஓரமாக நின்று கொண்டிருந்த பிரான்சிஸைப் பார்த்தேன். சலனமற்று நின்று கொண்டிருந்தார். என் காது எந்த சத்தத்தையும் வாங்கவில்லை. நடித்த எல்லா மாணவிகளும் வட்டத்தில் சுற்றி நின்று, கையை நீட்டி ஏதோ சொன்னார்கள்.


நாடகம் முடிந்துவிட்டது என்பதை மட்டும் உணர்ந்தேன். “இப்பொழுது நான் பார்த்தது, இல்லையில்லை, அனுபவித்தது நாடகமா? நம்ப முடியவில்லை.” மிரண்டு போய் உட்கார்ந்திருந்தேன். என் கண்கள் எங்கேயோ நிலைகுத்தி நின்றிருந்தன.


ஒரு மாணவி என்னை அசைத்தார். விழித்திருந்த கண்களையே விழித்தேன்.

“ ஜான் அண்ணா! பயிற்சி முடிந்து எல்லோரும் கிளம்பிட்டாங்க..”

“ இந்த நாடகம்?” என்றேன்.

“ பிரான்சிஸ் அண்ணா தான் எங்களுக்குச் சொல்லி கொடுத்தாங்க” என்றார்.

“ அக்னேஸ்” என்று யாரோ அழைக்க, அந்த மாணவி, “ சரி, வரண்ணா!” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.


(இந்த அக்னேஸ் என்ற பாத்திரத்தை நினைவில் கொள்ளுங்கள். அவரைப் பற்றிய ஓர் உண்மையை பிறகு சொல்கிறேன். ம்க்கூம்! நீங்களே கண்டு பிடித்துவிட்டீர்களா? அப்பறம் என்ன! அதே தான். பிரான்சிஸின் இணையாளாக பிறகு அவரது வாழ்க்கையில் சேர்ந்துக்கொண்ட அக்னேஸ் டீச்சர்தான் அந்த மாணவி.)

நான் பயிற்சி அறையின் வெளியே வந்து, பிரான்சிஸ் கையைப் பிடித்துக் கொண்டேன்.


“ அற்புதம்… பிரான்சிஸ்…நாடகம் அற்புதம். உடலையே பொருளாக்கி, குரலையே ஆயுதமாக்கி, சமூகப் பிரச்னையை கருப்பொருளாக்கி, இவர்களுக்கு இந்த நாடகத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். எப்படி?” என்றேன்.

அன்று நான் கேட்டது, என் வாழ்க்கையை எப்படி வெகுவாக புரட்டிப் போட்டது என்பது தனிக்கதை. இது பிரான்சிஸின் கதை என்பதால் அதற்கு வருகிறேன்.


“ அதுவா? அது ஒரு சுவாரஸ்யமான கதை. வாங்க டீ சாப்டுகிட்டே பேசுவோம்” என்றார்.


***************


( தொடரும்...)

17 views0 comments

Comments


bottom of page