top of page

6. காசும் மரியாதையும்

Updated: Jan 19, 2021



நாடகத்தில் பங்கு பெறும் பாத்திரங்கள்

இரும்பொறை - அண்ணன் (25 வயது)

கூத்தபிரான் - தம்பி (22 வயது)

பண்ணையார் - (65 வயது)



காட்சி 1


இடம்: பாலைப்பட்டி கிராமம், கூத்தபிரான் வீடு

காலம்: மாலை 6:00 மணி

பாத்திரங்கள்: இரும்பொறை, கூத்தபிரான்


(பாலைப்பட்டி கிராமம். தம்பி கூத்தபிரான் வீட்டின் முன் உட்கார்ந்து தென்னை கீற்று பின்னிக்கொண்டிருக்கிறான். அண்ணன் இரும்பொறை தென்னை மரத்திலிருந்து இறங்கிக்கொண்டே தம்பி கூத்தபிரானிடம் பேசுகிறான்.)


இரும்பொறை:

தம்பி கூத்தபிரான், அம்மாவுக்கு மருந்து குடுத்திட்டியா?


கூத்தபிரான்: ( வாசல் படியில் உட்கார்ந்து கீத்து பின்னிக் கொண்டே)

அண்ணா! குடுத்துட்டேன் அண்ணா! அம்மா நல்லா தூங்குறாங்க.


இரும்பொறை:

இந்தா! ரெண்டு எளநி கொண்டுட்டு வந்துருக்கேன். அப்படி ஓரமா வையி. நான் போய் கொளத்துல குளிச்சிட்டு வாரேன்’


(அண்ணன் இரும்பொறை, துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிழக்கே போகிறான்.)


கூத்தபிரான்:

அண்ணா! நாளைக்கு நீ தான் வேலைக்குப் போகனும். நான் வீட்டுல இருந்து அம்மாவை கவனிச்சுக்கனும். இன்னக்கு நான் வேலைக்குப் போய் வாங்கிட்டு வந்த கூலி நாலு காசு, விளக்கு மாடத்துல வச்சுருக்கேன்.’


இரும்பொறை:

‘சரிடா கூத்தா!’ என்று வேலியைத் தாண்டி போய்க்கொண்டே இரும்பொறை சொன்னான்.


(பாலைப்பட்டி கிராமத்தில் இரும்பொறையும் கூத்தபிரானும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது தந்தை இறந்து விட்டார். தாய் நோய் வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாக இருக்கிறார். அதலால், அண்ணன் வேலைக்குப் போனால், தம்பி வீட்டில் இருந்து அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டும். தம்பி வேலைக்குப் போனால், அண்ணன் வீட்டில் இருந்து அம்மாவைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.)


*****


காட்சி 2


இடம்: பாலைப்பட்டி கிராமம், பண்ணையார் வீடு

காலம்: காலை 8:00 மணி

பாத்திரங்கள்: இரும்பொறை, பண்ணையார்

இரும்பொறை:

பண்ணையார் ஐயா! இன்னக்கி ஏதாவது வேலை இருந்தா குடுங்க ஐயா!


(பண்ணையாருக்கு வேலையாள் தேவை தான். ஆனா அத வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.)


பண்ணையார்:

ஒன்னும் வேலை இல்லையப்பா


இரும்பொறை:

ஐயா! அப்படி சொல்லாதீங்க ஐயா!! ஒங்கள விட்டா எங்களுக்கு வேற கதி ஏதுங்கய்யா!


பண்ணையார்:

சரி! நீ ரொம்ப கெஞ்சி கேக்கறதால இன்னக்கி வேலை செய். சாயந்திரம் மூணு காசு தான் கூலியா தருவேன். (தனக்குள்) எல்லா இடத்திலும் நாலு காசு கூலி. அதைக் குறைக்கத் தான் ‘வேலை இல்லை’ ங்ற வேடத்தைப் போட்டேன். (மறுபடியும் தொண்டையைக் கனைத்துக்கொண்டு இரும்பொறையிடம்) அப்பறம், இப்பயே இன்னொன்னயும் சொல்லிடறேன். நான் ஏதாவது ஒரு வேலையைச் சொல்லி நீ செய்ய முடியல’ன்னா, நீ செய்ய முடியாத ஒவ்வொரு வேலைக்கும் ஒரு காசைக் கொறைச்சிடுவேன்’


இரும்பொறை:

‘சரிங்கய்யா!’


(முழு நாளும் பல வேலைகளை இரும்பொறை செய்கிறான். மாலை கூலி வாங்க வேண்டிய நேரம். முகம், கை கால்களை கழுவி, துண்டால் துடைத்துக் கொண்டு, பண்ணையார் முன் போய் நிற்கிறான். அவர், வாய் நிறைய வெத்தலை பாக்கு போட்டு குதப்பிக் கொண்டிருக்கிறார். வாயில் ஒரு பாட்டை முணு முணுத்துக் கொண்டிருக்கிறார்.)



மழையை நம்பி ஏலேலோ மண்ணு இருக்க ஐலசா

மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா

என்னை நம்பி ஏலேலோ நீ இருக்க ஐலசா

உன்னை நம்பி ஏலேலோ யார் இருக்கா ஐலசா


இரும்பொறை: (தலையை சொறிந்துக் கொண்டே)

ஐயா! வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சு.


பண்ணையார்: (பாட்டிலேயே பதில் கொடுக்கிறார்)


வேலை எல்லாம் ஏலேலோ முடிஞ்சிடுச்சா ஐலசா

முடிஞ்சிடுச்சுன்னு ஏலேலோ யாரு சொன்னா ஐலசா?


இரும்பொறை: (தனக்குள்)

ஐயா என்ன சொல்றீங்க? புரியலயே.


பண்ணையார்: ( மறுபடியும் பாட்டிலேயே பதில் கொடுக்கிறார்)


பெரிய பானை ஏலேலோ அங்க இருக்கு ஐலசா -அத

சின்ன பானையில் போட்டுதான் எடுத்துட்டு வா ஐலசா


இரும்பொறை:

‘ஐயோ! அதெப்படிங்கய்யா முடியும். பெரிய பானையை சின்னப் பானைக்குள்ள போட்டு எடுத்துட்டு வர முடியாதுங்கய்யா. முடியாதுங்கய்யா’


பண்ணையார்:

ஏற்கனவே ஏலேலோ சொன்ன மாதிரி ஐலசா

ஒரு காசு ஏலேலோ கொறைச்சுடுவேன் ஐலசா


இரும்பொறை:

‘பரவாயில்லங்கய்யா! மீதி ரெண்டு காசாவது குடுங்கய்யா. அம்மாவுக்கு மருந்து வாங்கனும்.’


(பண்ணையார் வெற்றிலை சாறை ஓரமாகத் துப்புகிறார்.)


பண்ணையார்:

‘இருப்பா! பாக்கி வேலை இருக்கே! அந்த கூரை வீட்டுல, வேகவச்ச ஈர நெல் இருக்கு. அதை வீட்டை விட்டு வெளியில எடுக்காம காய வைக்கனும்.’


இரும்பொறை:

‘ஈர நெல்லு. வெளியில எடுக்காம காய வைக்க முடியாதுங்கய்யா’


பண்ணையார்:

‘அப்ப. ….. ‘ஏற்கனவே ஏலேலோ சொன்ன மாதிரி ஐலசா

ரெண்டு காசு ஏலேலோ கொறைச்சுடுவேன் ஐலசா’


இரும்பொறை:

‘பரவாயில்லங்கய்யா! மீதி இருக்கற ஒரு காசாவது குடுங்கய்யா. ஏதோ வந்ததுக்கு, ஒரு காசையாவது வாங்கிட்டுப் போறேன். குடுங்கய்யா.’


பண்ணையார்: (வெத்தலையில் சுண்ணாம்பைத் தடவிக் கொண்டே)

குடுத்துடலாம் ஏலேலோ குடுத்துடலாம் ஐலசா

இன்னுமொரு வேலையை குடுத்துடலாம் ஐலசா

(என்று பாடி விட்டு)

‘இது கொஞ்சம் எளிதான வேலை. மூளைக்கு வேலை. இதுக்கு பதிலை சொல்லிட்டு அந்த ஒரு காசை வாங்கிட்டு சந்தோஷமா போ. மத்தவங்க காசு நமக்கு எதுக்கு?’

‘என்னோட மொத்த எடை 140 கிலோ. இதுல என் தலையோட எடை மட்டும் துல்லியமா எவ்வளவு’ன்னு சொல்லு. சரியா சொல்லிட்டீன்னா, பாக்கி கூலியை உடனே தூக்கிப் போட்டுடுவேன்.’


இரும்பொறை: : (பாவமாக)

’அதெப்படிங்க ஐயா முடியும். தலையோட எடையை மட்டும் சொல்ல முடியாதுங்கய்யா’ இரும்பொறை சோகத்துடன் சொன்னான்.

பண்ணையார்:

ஒப்பந்தப் படி ஏலேலோ ஒன்னுமில்ல ஐலசா

மூணு காசும் ஏலேலோ முழசா இல்ல ஐலசா

நியாயஸ்தானா ஏலேலோ நான் இருக்க ஐலசா

ஓட்டாண்டியா ஏலேலோ நீ இருக்க ஐலசா


இரும்பொறை:

நான் வாரேங்கய்யா!


(பண்ணையார் பாடிக் கொண்டிருக்கும் போதே, இரும்பொறை அங்கிருந்து கிளம்பி, வெறுங்கையுடன் விட்டிற்கு கிளம்புகிறான்.)


*****


காட்சி 3


இடம்: பாளையப்பட்டி கிராமம், கூத்தபிரான் வீடு

காலம்: மாலை 7:00 மணி

பாத்திரங்கள்: இரும்பொறை, கூத்தபிரான்


கூத்தபிரான்: (ஆவலுடன்)

’ அண்ணா! வந்துட்டியா? ஒலைக்கு அரிசி வாங்கிட்டு வந்தியா? அம்மாவுக்கு மருந்து வாங்கிட்டு வந்தியா?’


இரும்பொறை:

தம்பி! அத ஏண்டா கேக்குற. பண்ணையாரு வேலை தந்தாரு. மூணு காசு தான் கூலியா தருவேன்னு முன்னாடியே சொல்லிட்டாரு.


அவரு சொல்லி நான் ஏதாவது வேலை செய்யலன்னா, செய்யாத ஒவ்வொரு வேலைக்கும் ஒரு காசு குறைச்சுடுவேன்னு சொன்னாரு. நம்மதான் குடுத்த வேலையை எல்லாம் செஞ்சிடுவோமேன்னு, சரி பரவாயில்லன்னு, சொல்லிட்டேன்.


எல்லா வேலையும் செஞ்சிட்டு கூலி வாங்கப் போனேன். அப்ப பெரிய பானையை சின்ன பானைக்குள்ள போட்டு எடுத்துட்டு வா’ன்னு சொன்னாரு. அதெப்படிப்பா முடியும்? முடியாதுன்னு சொன்னேன். அதுக்கு ஒரு காசு கொறைச்சுட்டாரு.


அப்பறம் கூரை வீட்டுலேர்ந்து வெளியே எடுக்காம ஈர நெல்லை காய வையின்னாரு. அது எப்படி தம்பி முடியும்? முடியாதுன்னேன். ரெண்டாவது காசு கம்மி பண்ணிட்டாரு.


அப்பறம் மூளைக்கு வேலைன்னு சொன்னாரு. அவரு தலை எடை மட்டும் எவ்வளவுன்னு கேட்டாரு. நமக்கு என்ன தெரியும். அதையும் செய்ய முடியாதுன்னு சொன்னேன்.


நான் குடுத்து மூணு வேலையை செய்யல. அதனால மூணு காசும் குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாருப்பா. அவருகிட்ட முட்டிகிட்டா இருக்க முடியும். பேசாம வந்துட்டேன்.


கூத்தபிரான்:

அப்படியா சேதி. வயித்துல ஈரத்துணியைப் போட்டு தூங்க வேண்டியது தான். அம்மாவுக்கு கொஞ்சம் பழைய கஞ்சி இருக்கு. மருந்து தான் இல்லை.


இரும்பொறை:

எனக்கு அசதியா இருக்கு. குளிச்சிட்டு வாரேன்


( இரும்பொறை குளத்திற்குப் போக, கூத்தபிரான் சிந்தனையில் ஆழ்ந்தான்.)



*****


காட்சி 4


இடம்: பாளையப்பட்டி கிராமம், பண்ணையார் வீடு

காலம்: காலை 8:00 மணி

பாத்திரங்கள்: இரும்பொறை, பண்ணையார்

(இன்றைக்கு கூத்தபிரான் தான் வேலைக்குப் போகவேண்டும். இரும்பொறை வீட்டில் இருந்து அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதன் படி கூத்தபிரான் பண்ணையார் வீட்டிற்குப் போகிறான்.)


பண்ணையார்:

’ என்ன கூத்தா! வேலை வேணுமா?’

கூத்தபிரான்:

’ ஆமாங்கய்யா’

பண்ணையார்:

‘ நேத்த ஒங்க அண்ணன் வந்தான். சில வேலைகளை செஞ்சான். ஆனா, நிறைய வேலைகளை செய்யல. காலையிலயே போட்ட ஒப்பந்தப் படி, நியாயமா, எந்தக் கூலியும் வாங்காமப் போயிட்டான்.’


கூத்தபிரான்:

‘ நான் செஞ்சிடறேன்யா’


பண்ணையார்:

‘ ஒனக்கும் அதே ஒப்பந்தம் தான்’


கூத்தபிரான்:

‘ சரிங்கய்யா. மூணு காசு கூலியா கொடுப்பீங்க. நீங்க சொல்லி நான் செய்யாத வேலை ஒவ்வொண்ணத்துக்கும் ஒரு காசை கொறைச்சிடுவீங்க. அப்படித்தானய்யா’


பண்ணையார்:

‘ நீ புத்திசாலி புள்ள. கற்பூரம் மாதிரி புரிஞ்சிகிட்ட… சரி. சரி. மச மசன்னு நின்னு பேசிக்கிட்டு இல்லாம போய் வேலையைப் பாரு’


( கூத்தபிரான் பண்ணை வேலைகளை செய்துக் கொண்டிருக்கிறான்.)


(மாலை வேளை. கூலி வாங்க வேண்டிய நேரம். பண்ணையார் வெற்றிலை பாக்குப் போட்டு மென்று கொண்டே, ஈஸி சேரில் உட்கார்ந்திருந்தார். அதே பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.)



மழையை நம்பி ஏலேலோ மண்ணு இருக்க ஐலசா

மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா

என்னை நம்பி ஏலேலோ நீ இருக்க ஐலசா

உன்னை நம்பி ஏலேலோ யார் இருக்கா ஐலசா


கூத்தபிரான்:

’ஐயா! கூலி’


பண்ணையார்:

‘ இன்னும் ரெண்டு மூணு வேலை இருக்கே!’


கூத்தபிரான்:

‘ சொல்லுங்கய்யா. செஞ்சிடறேன்.’


பண்ணையார்:

‘ அந்த பெரிய பானையை எடுத்து, சின்ன பானையில் போட்டு எடுத்துட்டு வா’


(கூத்தன் பெரிய பானையை சுக்கு நூறாக உடைத்து, சிறிய பானைக்குள் போட்டு எடுத்து வருகிறான்.)


பண்ணையார்:

‘ஏ! ஏய்! ஏய்ய்ய்! என்ன பண்ற’


கூத்தபிரான்: (பாடுகிறான்.)


‘பெரிய பானை ஏலேலோ ஒடைச்சிருக்கு ஐலசா

சின்ன பானை ஏலேலோ நிறைஞ்சிருக்கு ஐலசா’


பண்ணையார்:

‘டேய்! டேய்!! டேய்ய்ய்… பானையை ஓடைச்சதும் இல்லாம, பாட்டு வேறயா’


கூத்தபிரான்: (பவ்யமாக)

’ ஐயா! நீங்க சொன்னத செஞ்சேன்யா’


பண்ணையார்: (தனக்குள்)

‘ என்ன இவன்! நம்மளே பெரிய எத்தன். இவன் நம்மள விட எத்தனா இருப்பான் போல இருக்கே. பரவாயில்ல…. இன்னும் இரண்டு வேலை இருக்குல்ல.. அதை வச்சு சமாளிப்போம்.’ (கூத்தனைப் பார்த்து) ‘சரி! அது கெடக்கட்டும். அந்தக் குடிசை வீட்டுல ஈர நெல் இருக்கு. அதைக்காய வைக்கனும். ஆனா, வெளிய எடுத்துட்டுப் போகக் கூடாது.’


கூத்தபிரான்:

‘சரிங்கய்யா!’


(கூத்தபிரான் தென்னங்கீற்றால் கூரை வேய்ந்திருந்த குடிசை வீட்டிற்கு அருகே போகிறான். சர சர வென்று கூரையை பிச்சி எறிந்து விடுகிறான்.)


பண்ணையார்: (பதறி அடித்துக்கொண்டு)

‘டேய்! டேய்!! டேய்ய்ய்… என்னடா பண்ற?


கூத்தபிரான்:

‘ நீங்க பேசாம இருங்க ஐயா! அப்பத்தான் வெயில் அடிச்சி, ஈர நெல்லு காயும்.’


பண்ணையார்:

‘ கூரையை இப்படி ஒன்னுக்கும் ஆகாம பிச்சிட்டியடா.’

கூத்தபிரான்: (பாடுகிறான்)

’கூர நல்லா ஏலேலோ பிஞ்சிடுச்சு ஐலசா

ஈர நெல்லு ஏலேலோ காஞ்சிடுமே ஐலசா’

என பாண்டியன் பவ்யமாகப் பாடினான்.


பண்ணையார்: (கதறுகிரார்)

’டேய்! டேய்!! டேய்ய்ய்…இவ்வளவோ நஷ்டம் பண்ணிட்டியடா’ (தனக்குள்) இரு. இரு. கடைசி காசை புடுங்கறேன்.’ (கூத்தபிரானிடம்) என்னோட மொத்த எடை 140 கிலோ. இதுல என் தலையோட எடை மட்டும் துல்லியமா எவ்வளவு’ன்னு சொல்லு. சரியா சொல்லிட்டீன்னா, எல்லா கூலியையும் உடனே தூக்கிப் போட்டுடுவேன்.’


கூத்தபிரான்:

‘ அது ரொம்ப எளிதய்யா’


(கூத்தபிரான், தான் வைத்திருந்த அரிவாளை அவர் கழுத்தருகே வெட்டுவது போல் கொண்டு போகிறான்.)


பண்ணையார்: (பயத்தில் அலறிக்கொண்டே)

’ டேய்! டேய்!! டேய்ய்ய்… என்னடா பண்ணப்போற?’


கூத்தபிரான்:

‘தலையை வெட்டி ஏலேலோ தனியா வச்சா ஐலசா

எடையை மட்டும் ஏலேலோ எடுத்துடலாம் ஐலசா’


பண்ணையார்: (கெஞ்சுகிறார்)

’ டேய்! டேய்!! டேய்ய்ய்…வேண்டாம்டா. உட்டுடுடா. பாருடே வேட்டியெல்லாம் நனைஞ்சிடுச்சு.’


கூத்தபிரான்:

‘ அப்ப, எங்க அண்ணன் கூலி மூணு காசு, அவனை ஏமாத்துனதுக்கு தண்டனை மூணு காசு, என் கூலி மூணு காசு, மொத்தம் ஒம்போது காசு குடுக்கறேன்னு ஒத்துக்கோ. அப்பத்தான் அரிவாள கழுத்துலேர்ந்து எடுப்பேன்.’


பண்ணையார்: (கெஞ்சுகிறார்)

‘குடுத்துடறேண்டா’


கூத்தபிரான்:

‘ மரியாதை. மரியாதை’


பண்ணையார்:

‘குடுத்தடறேன்பா’


கூத்தபிரான்:

‘ மரியாதை. மரியாதை’

பண்ணையார்:

‘குடுத்தடறேன்யா’


கூத்தபிரான்:

‘ ம் ! அது’


(கூத்தபிரான் ஒன்பது காசுகளையும் வாங்கிக்கொண்டு, பாடியபடியே, வீட்டிற்கு வருகிறான்.)


குறையாத ஏலேலோ கூலி வேணும் ஐலசா

மரியாதை ஏலேலோ மாற வேணும் ஐலசா

அறிவாக ஏலேலோ யோசிக்கனும் ஐலசா

அன்பாக ஏலேலோ பேசிக்கனும் ஐலசா


(பாட்டு தென்றலில் கலந்து தெருவெங்கும் அலைகிறது.)


*************



படிப்பினை: ஆய்வுச்சிந்தனை, படைப்புச் சிந்தனை, நீதி, ஏமாறாமல் தப்பிப்பது, சாமார்த்தியம்

நாடக ஆசிரியர்: ஜான் பி. பரிசுத்தம்


23 views0 comments

Recent Posts

See All

3. அன்பழகரும் மேலோகமும்

காட்சி - 1 இடம்: ஞானியின் ஆசிரமத்தில் அன்பழகர் என்ற சீடரின் அறை. நேரம்: காலை 10:00 மணி பாத்திரங்கள்: அன்பழகர், சீடர் 1, சீடர் 2 (அன்பழகர்...

4. அரசர் ஓவியம்

நாடகத்தில் உள்ள பாத்திரங்கள் அரசர் மந்திரி குமரேசன் (ஓவியர்) அரும்பு (குமரேசனின் மனைவி) சேவகர் 1, சேவகர் 2 காட்சி 1 இடம்: குமரேசன் வீடு...

bottom of page