top of page

5. முதல் பள்ளி

Updated: Jun 25, 2021

ஜூலி அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு அவர்கள் படிக்கும் ஆரம்பப் பள்ளிக்குச் செல்வேன். கூடவே அல்போன்ஸ் அக்காவும் வரும்.


போகிற வழியில் யாருக்கோ ஒரு சிலை இருக்கும். சிலைக்காக சிறிய மண்டபம் கட்டியிருப்பார்கள். அங்கே ஒருவர் எப்போதும் உட்கார்ந்திருப்பார். குளிக்காமல் கொள்ளாமல் அழுக்குச் சட்டையோடு இருப்பார். எண்ணெயைப் பார்க்காத பரட்டைத் தலை. எல்லோரும் அவரை பைத்தியம் என்பார்கள். பக்கத்தில் யாராவது போனால் கையைத் தூக்கி விரட்டுவார். அவரைக் கண்டால் எனக்கு பயம். பிடித்து அடித்து விடுவாரோ அல்லது கடித்து தின்று விடுவாரோ என்று பயம். அவருக்கு என்ன கஷ்டமோ! ஆனால் மற்றவர்கள் பிரச்னையை நாம் எப்பொழுது கண்டு கொண்டோம்? பயத்தை எப்படியாவது யாராவது ஊட்டி விட்டு விடுகிறார்கள். பயத்திற்கு அடிமையானப் பிறகு, அந்த முதலாளிக்கு வேலை செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.


சரி, கதைக்கு வருவோம். அந்த மனநலம் குன்றியவரை, மற்றவர்கள் பைத்தியம் என்று அழைக்கட்டும். நான் பெரியவர் என்றே அழைக்கிறேன். அந்த பெரியவர் உட்கார்ந்திருக்கும் சிலை மண்டபம் வருவதற்கு முன்பே, சன்னமாகப் பிடித்திருந்த கையை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வேன். குனிந்த தலை நிமிராது. சில நேரம் கண்களைக் கூட மூடிக் கொள்வேன்.


அவரைத் தாண்டிவிட்டோம் என்றதும் தான் நிம்மதி. பெருமூச்சு வரும். அவ்வாறே பள்ளியை விட்டு வீட்டுக்குத் திரும்பும் போதும்.


ஒரு நாள்.


அக்காக்கள் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடிக்கொண்டே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். நம் இருவர் பக்கமும் இருவர் துணையாக வரும்போது, இருக்கும் ஆனந்தத்திற்கு குறைச்சல் இல்லை. பாதுகாப்பு கவசம். சுவாரஸ்யமாக எதையோ பேசிக்கொண்டே வந்திருக்கிறேன். அல்லது அக்காக்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே வந்திருக்கிறேன். ‘அவரை’ப் பற்றி மறந்தே போய்விட்டேன்.


திடீரென ‘ஏய்ய்ய்!’ ன்னு சப்தம். என்னன்னு பாத்தா ‘அவர்’. கையை நீட்டிக் கொண்டு உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்தது போல் தெரிந்தது.


அவ்வளவுதான்.


கண்ணு மண்ணு தெரியவில்லை. பிடித்தேன் ஓட்டம். அக்காக்களின் கையை உதறிவிட்டு, தலைகுப்பற அடித்து மூச்சிறைக்க ஓடினேன்.


பள்ளிக்கு சற்று முன்பு ஒரு வீடு. அதன் எதிரே தேங்காய்கள் நிறையக் கொட்டிக் கிடக்கும். இரண்டு மூன்று பேர் கடப்பாரையை தலைகீழாக மண்ணில் குத்தி, தேங்காயை உறித்துக் கொண்டு இருந்தார்கள். உறித்த தேங்காய் மட்டை மலை போல குவிந்து கிடக்கும். சாலையில் ஓடாமல் தேங்காய் மட்டை மலையை நோக்கி, தடுமாறி ஓடி இருக்கிறேன். தேங்காயை உறிப்பதற்காக கூரான கடப்பாரை நுனி வானத்தை நோக்கி நட்டு இருக்கும். ‘அவர்’ என்னைப் பிடித்து கடித்து தின்று விடக்கூடாது என்ற முடிவோடு கன்னா பின்னாவென்று ஓடுகிறேன்.


‘டேய்…தம்பி! தம்பி!! தம்பி!!!’ என யாரோ கூப்பிடுகிறார்கள். அப்படியே அங்கேயே விழுந்து விட்டேன். கொஞ்சம் தப்பியிருந்தால் கடப்பாரை கூர் பதம் பார்த்திருக்கும். அதற்குள் யாரோ எழுப்பிவிட, அக்காக்களும் மூச்சிறைக்க அங்கே வந்த சேர்ந்தனர்.


‘பயந்துட்டியாடா தம்பி’ எனச் சொல்லிக் கொண்டே சட்டை மேல் இருந்த மண்ணை தள்ளி விட்டனர். யாரோ ஒருவர் “ அவன் சொன்னா கேக்க மாட்டேங்குறான். அங்க தான் ஒக்காருவேன்’னு அடம் பிடித்துக் கொண்டு ஒக்காந்துருக்கான். புள்ள பாவம் பயந்துட்டான்” னு சொன்னார். அவன் சொன்னது அவரை. புள்ள’ன்னு சொன்னது என்னை.


அப்படிச் சொன்னவர், பக்கத்தில் இருந்த சொம்பில் இருந்த தேங்காய் தண்ணியை எடுத்து “ தேங்கா தண்ணி குடிக்கிறயா?” என்றார். அக்கா ‘வேணாம்’ எனச் சொல்லும் போதே ‘குடிக்கிறேன்’ என்று தலையை பெரிதாக ஆட்டினேன். சட்டையில் ஒழுக ஒழுகக் குடித்து விட்டு அவரைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு பள்ளிக்குச் சென்றோம்.


அந்தப் பள்ளியைப் பற்றிச் சொல்ல வேண்டும். நான் சென்ற முதல் பள்ளி. பள்ளிக்கென்று தனிக் கட்டிடம் இல்லை. அரசு துவக்கப் பள்ளி ஒரு சாதாரண வீட்டில் தான் நடந்தது.


படி ஏறினால் திண்ணை வரும். திண்ணையில் ஒரு வகுப்பு. ஒரு வேளை ஒண்ணாம் வகுப்பாக இருக்கலாம்.


உள்ளே போனால், எங்கள் புதுத்தெரு வீடு போலவே முத்தம் (முற்றம்) வரும். வலது பக்கத்தில் ஒரு மர ஸ்கிரீன் போட்டு மறித்து இரண்டாம் வகுப்பும் மூன்றாம் வகுப்பும் நடக்கும். அல்போன்ஸ் அக்கா இரண்டாம் வகுப்பு. அங்கு போய் அக்காவின் அருகில் உட்கார்ந்துக்கொள்வேன். அப்பொழுது அதற்கெல்லாம் அனுமதித்திருக்கிறார்கள். நானும் நல்ல பிள்ளையாச்சா! பிரச்னை ஏதும் பண்ணாமல் உட்கார்ந்திருப்பேன். சாரோ, டீச்சரோ பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆசிரியர், ஆசிரியை என்றெல்லாம் கூப்பிட மாட்டார்கள். ஆங்கில பாதிப்பு. சார், டீச்சர். அது என்னவோ ஆண் ஆசிரியர்களுக்கு சார். பெண் ஆசிரியைகளுக்கு டீச்சர். எப்படி டீச்சருக்கு பெண்பால் ஒட்டிக்கொண்டது?


ஒவ்வொரு வகுப்புப் பிள்ளைகளும் எதையாவதைச் சொல்லி சத்தமாகப் படித்துக் கொண்டிருப்பார்கள்.


நாலாம் வகுப்பு முத்தத்திலோ அல்லது சிறிய அறை ஒன்று இருக்கும், அதிலோ மாற்றி மாற்றி நடக்கும். ஐந்தாம் வகுப்பு (அஞ்சாம் வகுப்பு அல்லது அஞ்சாப்பு என்று தான் சொல்வோம்) அடுக்களையில் நடக்கும். அவர்களுக்கு மட்டும் தரையிலிருந்து ரெண்டு இன்ஞ் உயரத்தில் உட்கார நீண்ட பெஞ்ச் இருக்கும்.


அடுக்களையைத் தாண்டினால் கொல்லைப் பக்கம். அங்கு தான் சிறுநீர் கழிக்கப் போக வேண்டும். கொல்லையத் தாண்டி ஒரு பெரிய குளம் இருக்கும். குளத்தில் யாராவது மீன் பிடித்துக் கொண்டோ, மாடு கழுவிக் கொண்டோ, குளித்துக் கொண்டோ இருப்பார்கள். நிறையத் தாமரைப் பூக்கள் இருக்கும்.


இரண்டாம் வகுப்பில் உட்கார்ந்திருக்கும் நான் சிறுநீர் கழிப்பாதக இருந்தால், அல்போன்ஸ் அக்காவிடம் சொல்லிக் கொண்டு (வாத்தியாரிடம் எல்லாம் சொல்ல வேண்டியத் தேவை இல்லை போலும்) கொல்லை பக்கம் போவேன்.


அன்றும் அல்போன்ஸ் அக்கா இடுப்பைத் தட்டினேன்.


அதுவரை டீச்சரைப் பார்த்து ஆத்திச்சூடியையோ வாய்ப்பாட்டையோ கத்திக் கொண்டிருந்த அல்போன்ஸ் அக்கா, ‘என்ன?’ என்பது போல் தலையசைத்துக் கேட்டது. நான் சுண்டு விரலை மட்டும் நீட்டி, மற்ற விரல்களை மடக்கிக் காட்டினேன். அப்படிக் காண்பித்தால் அல்போன்ஸ் அக்காவுக்கு மட்டுமல்ல, உங்களுக்கே அதன் அர்த்தம் தெரியும்.


‘போ’ என்பது போல் தலையை ஆட்ட, கால்சட்டையா இழுத்து கையில் பிடித்துக் கொண்டு மூணாங்கிளாஸ், நாலாங்கிளாஸ்களைத் தாண்டி, அடுக்களையில் உள்ள அஞ்சாங்கிளாஸ்க்கு வந்தேன். ஜூலி அக்கா அங்குதான் இருந்தது. ஏதோ வாய்ப்பாடு போல இருக்கு. எல்லோரும் எழுந்து நின்று சத்தமாகச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். நான் நுழைந்ததும் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். மறுபடி தலையை ஆசிரியர் பக்கம் திருப்பிக் கொண்டார்கள். நான் அவர்கள் ஊடே நுழைந்து கொல்லைப்பக்கம் கதவருகே போனேன். ஜூலி அக்கா மாத்திரம் நைஸாக என்னை திரும்பி பார்த்துக் கொண்டே, புருவங்களை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்டது.


மறுபடி சுண்டு விரலை மட்டும் நீட்டி காண்பித்தேன். ‘போ’ என்பது போல தலையை லேசாக அசைத்தது. நான் படிகளில் இறங்கி தரையில் நடந்துப் போய் ஒன்னுக்கு இருக்கும் இடத்தில் ஒன்னுக்கு இருந்து விட்டு பள்ளிக்கு திரும்ப நினைக்கும் போது,

“இங்க பாரு, கெண்டை மீனு மாட்டிகிச்சி” என்கிற சத்தம் குளத்திலிருந்து வந்தது.


சரி! அதைப் பார்த்துவிடலாம் என குளத்தருகே போனேன். இரண்டு பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் பெரிய மீனைப் பிடித்து அதன் வாயிலிருந்து முள்ளை லாவகமாக எடுத்து விட்டு, பக்கத்தில், கொஞ்சம் நீருடன் இருந்த பானைக்குள் போட்டார்.


இன்னொருவர் தூண்டிலை குளத்தில் போட்டுவிட்டு, தக்கை அசைகிறதா எனப் பார்த்துக் கொண்டே, குத்த வச்சி உட்கார்ந்திருந்தார். மீனைப் பிடித்தவர் மறுபடி அவரது தூண்டிலில் உள்ள முள்ளில் மண்புழுவை நுழைத்தார். பிறகு தூண்டிலின் ஒரு முனையை கையில் பிடித்துக் கொண்டு மறுமுனையை குளத்தில் தூக்கி எறிந்தார். நான் அருகே போய்ப் பார்த்தேன்.


“டேய் தம்பி! குளம் ரொம்ப ஆழம்டா! உளுந்துடாதே. பள்ளிக்கோடத்துக்குப் போ” எனச் சொல்லிவிட்டு தன் வேலையில் மும்மரமானர். நான் இன்னும் கொஞ்சம் இறங்கினேன். திடீரென முழ்கி விட்டேன். கத்தக்கூட முடியவில்லை. யாரோ ஒருவர் ஓடிவந்து தூக்கினார்கள். யாரும் கவனிக்காமல் இருந்திருந்தால்,குளத்தோடு போயிருக்க வேண்டியது தான் என்கிற கவலையை விட, முழுக்க நனைந்து விட்டது என்கிற கவலை மேலோங்கியிருந்தது.


பள்ளியை நோக்கி நடந்தேன். பள்ளியின் (வீட்டின்) பக்கத்தில் உள்ள சந்து வழியில் போனால் தெருவுக்கு வந்து விடலாம். அந்த சந்து வழியே ஜவ்வு மிட்டாய்காரன் மணியடித்துக் கொண்டே போவது தெரிந்தது. உலக்கை போன்ற கம்பத்தில் மேலே கலர் கலராக மிட்டாய் பாகு இருக்கும். அதன் உச்சியில் இரண்டு பொம்மைகள் ‘ஜிங் சக்’ என அடிப்பது போல இருக்கும். அந்த பொம்மைகளில் கட்டியிருக்கும் கயிறு விற்பவரின் கால் வரை வரும். அதை அவர் இழுத்தால் பொம்மைகள் இரண்டும் அருகருகே வந்து ‘ஜிங் சக்’ எனக் கைகளைத் தட்டி சத்தம் போடுவது போல அமைந்திருக்கும்.


வழக்கமாக, கொல்லைப்புறம் படிகளில் ஏறி அடுக்களையில் உள்ள அஞ்சாம் வகுப்பு வழியே போய் அப்படியே ஜூலி அக்காவோடு மதிய சாப்பாடு வரை அமர்ந்துக் கொள்வது தான் வழக்கம். ஆனால் அன்றைக்கு அப்படி போகவில்லை. சந்து வழியேப் போய் ஜவ்வு மிட்டாய்காரரைப் பார்க்கப் போய் விட்டேன்.


ஒரு காலில் கம்பை சாய்த்து வைத்துக் கொண்டு ஜவ்வு மிட்டாயை இழுத்து, வாங்குகிறவரின் கையைப் பிடித்து அதில் வாட்ச் போலச் செய்து விட்டு, கொஞ்சம் எடுத்து கன்னத்தில் ஒட்டிவிட்டார். அம்மாவிடம் சொல்லி ஜவ்வுமிட்டாய் வாங்கித் தரச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டு இப்பொழுது தெருவுக்கு வந்துவிட்ட படியாலும், சட்டை நனைந்து போயிருந்ததாலும், பள்ளியின் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டேன்.


சற்று நேரத்தில் பள்ளிக்குள் அமளி துமளி.

‘ஒன்னுக்கு இருக்கனும்’ னு காமிச்சிட்டுப் போனான்.

‘ஆமா! என் கிளாஸ் வழியாத்தான் போனான். ஆனா திரும்பியே வரலயே!!’

‘கொல்லப்பக்கம் போய் அந்த மீன் பிடிக்கிறவங்கள்ட்ட கூட கேட்டாச்சே!!’

‘குளத்துகிட்டக்க போனான்’னு சொல்றாங்க’

‘தவறி குளத்துல விழுந்து முழுகியிருப்பானோ?’

‘நல்லா பாத்தீங்களா?’

‘ஏதாவது மெதக்குதா?’


ரெண்டு பேர் அழுகை சத்தம் வேறு கேட்குது. என்னமோ பதட்டமாக நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் என்னைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்கள் எனத் தெரியாமல் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிவிட்டேன்.


மதிய உணவுக்கு மணி அடித்தது. முழித்துக் கொண்ட நான் உள்ளே போனேன்.

‘எங்கடா போன?’ எனக்கேட்டு அடிக்க, என்ன நடக்கிறது எனத் தெரியாமல் முழித்தேன். அழுகை பொத்துக் கொண்டு வந்தது.


அவர்களுக்கு, நான் கிடைத்துவிட்டதில் சந்தோஷப்படுவதா, இவ்வளவு தூரம் நம்மளை அலைக்கழிக்க வைத்து விட்டானே என்று துக்கப்படுவதா, குளத்தில் விழுந்து சாகாமல் இருந்தேனே என்பதில் மகிழ்ச்சியாக இருப்பதா எனக் குழப்பத்தில் இருக்க, அழுது அழுது விக்கல் வந்ததில், ஒன்னுக்கு இருந்து விட்டு, கெண்டை மீனைப் பார்த்துவிட்டு, குளத்தில் மூழ்கிவிட்டு, சந்து வழியாகச் சென்று ஜவ்வு மிட்டாய்காரனைப் பார்த்து விட்டு, திண்ணையில் ஏறி விட்டத்தைப் பார்த்து தூங்கி விட்டதை சொல்ல முடியவில்லை.


எப்படியோ ‘தம்பி கிடைத்து விட்டான், அம்மாவிடம் அடி வாங்க வேண்டியதில்லை’ என்கிற சந்தோஷத்தில் என் கண்களை துடைத்துவிட்டு மதிய சாப்பாடு ஊட்டிவிட்டார்கள்.


அன்றிலிருந்து ஒன்னுக்கு இருக்கப் போகிறதென்றால் இரு அக்காக்களில் ஒருவர் என்னோடு கொல்லைப்பக்கம் வந்து காத்திருந்து அழைத்துச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.


திரும்ப வரும் போது சிலையை விட்டு நாலடி தள்ளியே நடந்தோம்.


ஏனோ அவர் அங்கு இல்லை. எங்குப் போயிருப்பார்? அவருக்கு வீடு இல்லையா? ஒரு வேளை வீட்டிற்குப் போயிருப்பாரா? அவருக்குப் பிள்ளைகள் குடும்பம் என இருக்குமா? ஏன் காணோம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு வீடு திரும்பினோம். அடுத்த நாளிலிருந்து அவர் அங்கு இல்லை. அவர் இறந்து விட்டதாகப் பேசிக் கொண்டார்கள்.


அந்தச் சிலை மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தது.


*****

20 views0 comments
bottom of page