1. இளவரசருக்கானப் போட்டிகாட்சி - 1


இடம்: நாற்சந்தி, விரகாலூர் கிராமம்

நேரம்: காலை 10.00 மணி

பாத்திரங்கள்: எழிலன், முரசறிவிப்பவன், கிராமத்தார்கள்


(கிராமத்தார்கள் கூடி இருக்கிறார்கள். முரசறிவிப்பவர் முரசை தட்டி அறிவிப்பு செய்கிறார். எழிலன் வந்து கூட்டத்தில் இணைகிறான்.)


முரசறிவிப்பவர்: டும்! டும்! டும்!. ….இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், நம்ம ராஜாவுக்கு பிள்ளைகள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். தமது வாரிசை மக்களிடமிருந்தே பெற நினைக்கிறார் அரசர். அதனால், அடுத்த ராஜாவாகிறதுக்கு இப்போ இளவரசரைத் தேர்ந்தெடுக்கப் போறாங்க. வர்ற பௌர்ணமியன்று அரண்மனையிலே நேர்காணல் இருக்கு. விருப்பப்படுற எல்லா இளைஞர்களும் கலந்துக்கலாம். டும்! டும்! டும்!


எழிலன்: (முரசறிவிப்பவரிடம்) யாரு வேணாலும் கலந்துக்கலாமா?


முரசறிவிப்பவர்: யாரு வேணாலும் கலந்துக்கலாம்.


எழிலன்: நன்றி ஐயா!


(எல்லோரும் கலைந்து செல்கிறார்கள்)காட்சி - 2


இடம்: அரண்மனை வாசல்

நேரம்: காலை 10.00 மணி

பாத்திரங்கள்: எழிலன், பிச்சைக்காரர், சேவகன், வழிப்போக்கர்கள்


(எழிலன் அரண்மனை வாசலை வந்தடைந்து விட்டான்.)


வழிப்போக்கன்: (எழிலனைப் பார்த்து) இளைஞனே! எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்?


எழிலன்: இன்று பெளர்ணமி அல்லவா. இளவரசருக்கான நேர்காணல் இருக்கிறதே. அதில் கலந்துக் கொள்ளப் போகிறேன்.


வழிப்போக்கர்: உன்னைப் பார்த்தால் ஏழையாக தெரிகிறாய். கிழிந்த கசங்கிய ஆடை உடுத்தியிருக்கிறாய். உன்னை இளவசராக தேர்ந்தெடுப்பார்களா?


எழிலன்: ஐயா! தண்டோரா போட்டதிலிருந்து கடுமையாக உழைத்தேன். பணம் சம்பாரித்தேன். பட்டு வேட்டியும் துண்டும் வாங்கினேன். இதோ பையில் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து அரண்மனைக்கு வர நான்கு நாட்கள் ஆனது. போதுமான கட்டிச் சோறும் எடுத்து வந்து விட்டேன்.


( அப்பொழுது ஒரு பிச்சைக்காரர் வருகிறார்.)


பிச்சைக்காரர்: (எழிலனைப் பார்த்து) தம்பி! ரொம்ப குளிருதுப்பா! சாப்பிட்டு ரெண்டு நாளாகுது. பசிக்குது. ஏதாவது குடுங்க ஐயா! மகராசனா இருப்பீங்க’


வழிப்போக்கர்: இந்த பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகமாகி விட்டது. (பிச்சைக்காரரைப் பார்த்து) இந்தப் பையனே ஏழையாக இருக்கிறான். அவனிடமே பிச்சை கேட்கிறாயா? (எழிலனைப் பார்த்து) உன்னிடம் ஒரு நல்ல உடை தான் இருக்கிறது. இதை இவரிடம் கொடுத்துவிட்டால் என்ன செய்வது? நேர்காணலில் கலந்துக் கொள்ள முடியாது.


எழிலன்: என் தாய் சொல்லியிருக்காங்க. கொடுத்து வாழ்வதே வாழ்க்கை’ன்னு.


வழிப்போக்கர்: அது சரி. எதுக்கும் ஒரு இடம், பொருள், ஏவல் உண்டு இல்லையா? உன்னிடம் இருப்பதை இவனிடம் கொடுத்து விட்டால், நீ எப்படி இளவரசர் ஆவது. அப்பறம் எப்படி மக்களுக்கு உதவி செய்வது?


எழிலன்: பரவாயில்லை. பிறகு செய்ய வேண்டியதை இப்பொழுதே செய்கிறேன். (எழிலன் பட்டு வேட்டியையும், துண்டையும் பிச்சைக்காரருக்குக் கொடுக்கிறான்.) ஐயா! இந்தாங்க. கொஞ்சம் கட்டுச் சோறு சாப்பிடுங்க. (உணவையும் கொடுக்கிறான்.)


பிச்சைக்காரர்: நன்றிப்பா! மவராசனா இருங்க.


(எழிலன் வந்த வழியே திரும்புகிறான்.)


வழிப்போக்கர்: இளைஞனே, நீங்கள் எங்கே போகிறீர்கள்?


எழிலன்: இளவரசராக தேர்ந்தெடுக்கும் நேர்காணலில் கலந்துக் கொள்ள விரும்பினேன். ஆனால், இந்த பழைய உடையுடன் அரண்மனைக்கு உள்ளே போக கூச்சமாக இருக்கிறது. ஆகவே, நான் என் கிராமத்திற்கு திரும்பிச் செல்கிறேன்.


(அப்பொழுது திடீரென ஒரு காளை பாய்ந்து வருகிறது. அவன் ஓடி விடலாம். ஆனால் பிச்சைக்காரரால் ஓட முடியாதே என வருந்துகிறான். எழிலன் அதன் கொம்புகளைப் பிடித்து அடக்குகிறான். எழிலனுக்கு கையில் காயம் ஏற்படுகிறது. பிச்சைக்காரர் தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எழிலனை கனிவுடன் பார்க்கிறார். )


பிச்சைக்காரர்: ஐயோ! என்னைக் காப்பாற்ற நினைத்து உனக்கு காயம் ஏற்பட்டு விட்டதே.

(இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரண்மனை சேவகன்): தம்பி! எல்லோரையும் அனுமதிக்கச் சொல்லி உத்தரவு. நீங்கள் அரண்மனைக்குள் தாராளமாகப் போகலாம்’


எழிலன்: அப்படியா? நல்லது. போய் தான் பார்த்து விடுவோமே!


(எழிலன் அரண்மனைக்குள் போனான். அவன் அரண்மனைக்குள் போவதை அந்த பிச்சைக்காரர் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.)காட்சி - 3


இடம்: அரசவை.

நேரம்: பகல் 12.00 மணி

பாத்திரங்கள்: மந்திரிகள், முதன்மைப் புலவர், தளபதிகள், புலவர்கள், வேலையாட்கள், நேர்காணலுக்கு வந்திருந்த இளைஞர்கள், பொதுமக்கள், எழிலன்


(எழிலனுக்கு அந்த அறைக்குள் நிற்க கூச்சமாக இருக்கிறது. மன்னர் வரப்போகிற நேரம்.)


சேவகர்: ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ குல திலக, மாமன்னர் வருகிறார். பராக்! பராக்! பராக்!!!


( மன்னர் வந்து சிம்மாசனத்தில் அமர்கிறார்)


மந்திரி: அடுத்த மன்னராகப் போகும் இளவரசரைத் தேர்ந்தெடுக்க நேர்காணல் நடக்க இருக்கிறது. அதற்கு தயாராக உள்ள இளைஞர்கள் முன் வந்து நில்லுங்கள்.


(இளைஞர்கள் முன் வந்து நிற்கிறார்கள். எழிலனும் தயங்கித் தயங்கி கூட்டத்தோடு நிற்கிறான். அப்பொழுது அரசர் பேச ஆரம்பித்தார்.)


அரசர்: (எழிலனைப் பார்த்து) இளைஞனே! அருகில் வா.


(இப்படி அலங்கோலமாக உடை அணிந்து வந்ததற்கு தண்டனை கொடுக்கப்போகிறார் என எழிலன் பயப்படுகிறான். வெட்கத்தால் நெளிந்தவாறே அரசரின் இருக்கையை நோக்கி நகர்கிறான்.)


அரசர்: பெரியோர்களே! நாட்டு மக்களே!! அனைவருக்கும் வணக்கம். நான் பிச்சைக்காரர் வேடத்தில் அரண்மனையின் வெளியே நின்றிருந்தேன். குளிருது என்றேன். இந்த இளைஞன் தான் வைத்திருந்த ஒரே பட்டு வேட்டி துண்டை எனக்கு தானமாகக் கொடுத்தான். பசிக்கிறது என்றேன். உணவுகொடுத்தான். பாய்ந்து வந்த காளையிடமிருந்து என் உயிரைக் காப்பாற்றினான். தன் உயிரைத் துச்சமென மதித்தான். இவன் என் வாரிசாக வர என் விருப்பம். ஆனால் முறைப்படி அவையோர் நேர்காணல் செய்யலாம்.

(முதன்மைப் புலவர் பலரையும் நேர்காணல் செய்கிறார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை யாரிடமிருந்தும் பெறவில்லை. கடைசியில் எழிலனும் இன்னொரு இளைஞனுமே மிஞ்சுகிறார்கள்.)


முதன்மைப் புலவர்: இருவரிடமும் கேள்வியைக் கேட்பேன். பதிலைச் சொல்லுங்கள். இளைஞர்களே! பூவிலே சிறந்த பூ எது?


இன்னொரு இளைஞன்: பூவிலே சிறந்த பூ தாமரை. அது தான் நீரின் உயரத்திற்கு ஏற்றாற் போல நீளும் குறையும்.


எழிலன்: இல்லை ஐயா! பருத்திப் பூ தான் பூவிலே சிறந்த பூ. அது தான் மனிதர்களின் மானத்தைக் காக்கும்.


முதன்மைப் புலவர்: சரி! இரண்டாவது கேள்வி. ஒளியிலே சிறந்த ஒளி எது?


இன்னொரு இளைஞன்: ஒளியிலே சிறந்த ஒளி சூரிய ஒளி. அது தான் உயிர்களுக்கு ஆதாரம்.


எழிலன்: இல்லை ஐயா! கண்ணொளி தான் ஒளியிலே சிறந்த ஒளி. அது தான் அந்த சூரிய ஒளியையே காண உதவும்.


முதன்மைப் புலவர்: மூன்றாவது கேள்வி. ஆயுதங்களிலே கூரி ஆயுதம் எது?


இன்னொரு இளைஞன்: ஆயுதங்களிலே கூரிய ஆயுதம் வாள். அது த