top of page

வலங்கைமானில் ஆரம்பப் பள்ளி


தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே அமைந்த ஊர்தான் வலங்கைமான். மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது வலங்கைமானில் அருள் பாலிக்கும் சாட்சாத் அருள்மிகு மாரியம்மன் தான். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, இந்தக் கோயில் சிறிய கோயிலாக இருந்தாலும், திருவிழாவிற்காக பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடும் கோயிலாக இது திகழ்வதற்கு முக்கிய காரணம், ஆத்தாவின் சக்தி மேல் மக்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை தான்.


இந்த ஊரில் புதுத்தெருவில் இருக்கும் போது தான் என்னை பள்ளியில் சேர்த்தார்கள். புதுத்தெரு வீடு பற்றி நான் எழுதிய கட்டுரையை இங்கே படிக்கவும்.) எனக்கு மூன்று வயது இருக்கும் போதே ஜூலி அக்காவோடும் அல்போன்ஸ் அக்காவோடும் சேர்ந்து அவர்கள் படிக்கும் அரசு ஆரம்பப் பள்ளிக்கு போய் வருவேன். எனக்கு நான்கு வயது முடியும் போது என்னை நேரடியாக இரண்டாம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள். (நான் பள்ளியில் சேர்ந்தக் கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.)


முதல் வகுப்பும் இரண்டாம் வகுப்பும் அந்தப் பள்ளியில் தான் படித்தேன். அந்தப் பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை இந்தக் கட்டுரையில் எழுதியுள்ளேன். அதனால் இங்கே வலங்கைமான் ஊரைப்பற்றி சில விடயங்களை இங்கே எழுதலாம் என்று இருக்கிறேன்.


காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் சிற்றாறு குடமுருட்டி ஆறு. அது வலங்கைமான் வழி தான் ஓடுகிறது.இந்த உடைந்த பாலம் கொண்ட படம் தான் கிடைத்தது. இந்த ஆறில் எங்கள் அம்மா அடித்துச் சென்ற கதை ஒன்று இருக்கிறது. இந்த பாலத்திலிருந்து ஒரு பர்லாங்கு தூரம் தான் எங்கள் வீடு. அங்கு மிக விசேஷமாக கொண்டாடப்படுவது மாரியம்மன் கோவில் திருவிழா. அதில் வாழ்வதற்காக செத்தது போல பாடைக் கட்டி தூக்கி வருவது சிறப்பாக இருக்கும். பலவித காவடிகளை சுமந்து வருவார்கள். இதோ! நீங்களே பாருங்கள்.

பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சுத்துபட்டி கிராமங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். கண்ணாடி வளையல் கடையிலிருந்து, மிட்டாய் கடை வரை ஒரே குதுகூலமாகவே இருக்கும். நல்ல உடல் நலம் தர வேண்டிக் கொண்டு பக்தர்கள் பாடை கட்டி அதிலே படுத்து வருவார்கள்.

ஒருவர் தீச்சட்டி ஏந்தி வருவார். மற்றவர் வேப்பிலை தூக்கி வருவார். குடும்பத்தார்கள், உறவினர்கள் நண்பர்கள் என சுற்றி வருவார்கள். நோய்கள் தீர்ந்து நலம் கூடும் என்பது ஐதீகம். இதையொட்டியே மீன் திருவிழா நடக்கும். ஆறு, குளம், கடல் என்று எல்லை வகை மீன்களும் சல்லிசு காசுக்கு கிடைக்கும். சூட்டினால் அம்மை கண்டால் உஷ்ணம் போக்கி, குளுமையாக்கி நோயை அகற்றுவாள் அம்மை என்பது நம்பிக்கை.

கோயில் தவிர வலங்கைமான், உறுதியான செங்கல்லுக்கு பெயர் போனது. அந்த பகுதி மண் அப்படிப்பட்ட சிறப்பான மண். சுற்றி சுற்றி செங்கல் காளவாய் போட்டுக்கொண்டே இருப்பார்கள். நல்ல விலைக்கு மக்கள் வாங்கிப் போவார்கள். நாங்கள் 2018ல் பண்ணை வீடு கட்டும் போது கூட வலங்கைமானிலிருந்து தான் செங்கல் வாங்கினோம்.

இன்னொரு சிறப்பு நாட்டு வெடிக்கடைகள் அதிகம் உண்டு. சுற்றுவட்டார மக்கள் வலங்கைமான் வந்து தான் நாட்டு பட்டாசுகளும், சிவகாசி பட்டாசுகளும் வாங்கிப் போவார்கள். மற்ற ஊர்களில் தீபாவளி சமயத்தில் தான் கிடைக்கும். ஆனால் இங்கே வருடத்தில் 365 நாட்களும் கிடைக்கும். எங்க ஊர் வடகாரவயல் நாகமாரியம்மன் கோயிலில் எங்கள் குடும்பத்திற்கு ஒரு நாள் முழு மண்டோபடி இருக்கிறது. அன்றைய நாள் வாணவேடிக்கைக்கு வலங்கைமானிலிருந்து தான் வெடி வாங்குவோம்.


இப்படிப்பட்ட சிறப்பான ஊரில் தான் என் கல்விப் பயணம் துவங்கியது. ( அப்படிப்பட்ட தென்னை மரத்தில் தான் இந்த மாட்டைக் கட்டுவார்கள்.) புரிந்தவர்கள் சிரித்துக் கொள்ளலாம். புரியாதவர்கள் கருத்துப் பகுதியில் கேளுங்கள். சொல்கிறேன்.


ஒன்றாவது இரண்டாவது படிப்புக்குப் பிறகு தஞ்சை வளனார் துவக்கப்பள்ளியில் மூன்றாவது நான்காவது படித்தேன். அது பற்றி அடுத்த பதிவில்.


*****

15 views0 comments

Comments


bottom of page