top of page

அம்மாவும் அப்பாவும்


என் தாயார் பெயர் அருள்மேரி அம்மாள். என் தந்தையார் பெயர் பரிசுத்தம்.


பொறுமை கடலினும் பெரிது என்பார்களே, அந்த பொறுமையினும் பெரிது எங்கள் ஆஞா. அப்பாவை அப்படித்தான் அழைப்போம்.


எறும்பைப் பார்த்து சுறுசுறுப்பைக் கற்றுக் கொள் என்பார்கள். ம்ஹூம். வேண்டாம். எங்கள் அம்மாவைப் பாருங்கள். ஒரு இடத்தில் உட்காராமல் எதையாவது செய்துக்கொண்டே இருக்கிற அம்மாவைத்தான் பார்க்கிறோம்.


சிறு துரும்பும் பல் குத்த உதவும். சிறு துளி பெருவெள்ளம்.

இதெல்லாம் படித்தது புத்தகங்களில் அல்ல. நேரடியாக அம்மாவிடமிருந்து. ஒரு வாழ்க்கை நெறியாக.


பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டும். உடல் நலத்தோடு வளர்க்க வேண்டும். அறிவூட்டி வளர்க்கவேண்டும். என்று தங்கள் உடல் பொருள் ஆவியை எங்களுக்காக அர்ப்பணித்த ஆத்மாக்கள்.


எங்கள் ஆஞா தனது 95வது வயதில், 2021 ஜனவரி மாதம் 25ம் தேதி இயற்கை எய்தினார். இப்படி ஒரு வரியை நான் எழுதுவேன் என்று நினைக்கவேயில்லை. வறுமையிலும் எப்படி எட்டு பிள்ளைகளையும் வளமாக வளர்க்க முடிந்தது?


"உன் வாய்க்குள் போவதிலும், அதிலிருந்து வெளி வருவதிலும் கவனமாக இரு" என்று எங்களுக்கு சொல்லாமல் சொல்லிய அறிவுரை. எங்களை யாரையும் அடித்ததில்லை. திட்டியதில்லை. எப்பொழுதுமே நிதானமாக யோசித்து முடிவு எடுக்க எப்படி முடிந்தது இவர்களால்? தன் சுயசரிதையை "நிறைவுள்ள நினைவலைகள்" என்ற நூலில் வடித்திருக்கிறார். கண்ணால் பார்க்க முடியாதே தவிர, உள்ளம் முழுக்க நிறைந்திருக்கிறார்.


இன்றைய தேதியில் (2021 ஜூன் 11) அம்மா தன் 88 ஆவது வயதில் இந்தியாவில் தஞ்சையில் நலமுடன் இருக்கிறார். எல்லோருடனும் அன்பு பாராட்டும் அழகு முகம். இதோ என் மகன் கேஸ்ட்ரோவோடு கானூரில் (எங்கள் பண்ணை வீட்டில்) எடுத்த புகைப்படத்தைப் பார்க்கிறீர்கள். அவரது நகைச்சுவை உணர்வை சுவைக்காதவர்களே இருக்கமாட்டார்கள். தன் வயிறு சுருக்கி ஒன்பது பிள்ளைகளைப் பெற்று, ஒன்றை இழந்து, மீதி எட்டு பேரையும் பேர் சொல்லும் வண்ணம் வளர்க்க எப்படி திராணி இருந்தது? ஆஞா வேலை நிமித்தம் வலங்கைமான், தஞ்சாவூர், மன்னார்குடி, மயிலாடுதுறை, சிக்கல், பேராவூரணி, லெட்சுமாங்குடி என குடும்பத்தை நகர்த்திய பொழுதெல்லாம், பின் தொடர்ந்து குடும்பத்தை பேணிக்காத்த உத்தமி.


ஆஞாவும் அம்மாவும் பிள்ளைகள் முன்போ, உறவினர்கள் முன்போ, வெளியாட்கள் முன்போ சண்டையிட்டதே கிடையாது. எவ்வளவு முரண்கள் இருந்திருக்கும்! வேறு வேறு பார்வை இருந்திருக்கும் !! ஆனால் அதையெல்லாம் அவர்களுக்குள்ளேயே 'விட்டுக்கொடுத்து' பேசி 70 வருட தாம்பயத்தை கடந்திருக்கிறார்கள். (பிறகு எப்படி எனக்கு மட்டும் 'சட் சட்' டென முன் கோபம் வருகிறது?)

என் மனைவி ஜோதியை அம்மா ஆஞா இருவருக்கும் மிகவும் பிடிக்கும். எங்கள் திருமணத்திற்குப் பிறகு, 38 வருட காலமாய் தன் பெற்றோர்களைப்போல பாவித்து அவர்களோடு அன்பு பாராட்டி வருவதால், அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.மூத்த மருமகள் என்பதால், கொழுந்தனார்களுக்கு திருமணம் செய்து வைப்பதிலிருந்து, அம்மா ஆஞாவின் உடல் நலத்தைப் பேணுவதிலிருந்து மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்வார்.

இது என் மகள் கிரென்ஃபெல். இப்பொழுது அவள் ஆஸ்திரேலியாவில் குடியேறியதால் தான் நாங்களும் ஆஸ்திரேலியாவிற்கு குடியேறினோம். இந்த புகைப்படம் கானூர் பண்ணையில் எடுக்கப்பட்டது. ஆஞா நம் புஞ்சை நிலங்களை பேத்திக்கு காண்பிக்கிறார். கிரென்னி பெரியவர்களை மதிக்கத் தெரிந்த பெண். சிறு வயதிலேயே தன் அறிவுத் திறத்தாலும் ஆற்றலாலும் பெரிய உயரங்களைத் தொட்டதால் என் பெற்றோர்களுக்கு பெருமை.


என் பெற்றோர்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. அடுத்த அடுத்த பதிவுகளில் சொல்கிறேன். அதற்கு முன் இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். இது தான் என் சகோதரிகளும் சகோதரர்களும் உள்ள புகைப்படம். 1972 அல்லது 73ல் எடுத்த படமாக இருக்கும். என் உடன் பிறந்தோரைப் பற்றி அடுத்த கட்டுரையில்.


நிற்பவர்கள் (இடமிருந்து வலம்): ஜான் பிரிட்டோ(நான்), ஜூலி (நடு அக்கா), அல்போன்ஸ் (கடைசி அக்கா)

உட்கார்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலம்): ஜேம்ஸ் (தம்பி), பரிசுத்தம் அவர்கள் (ஆஞா), அருள்மேரி அம்மாள் (அம்மா), அலெக்ஸாண்டர் (கடைக்குட்டி தம்பி, அம்மாவின் மடியில்), சார்லஸ் (தம்பி, எனக்கு அடுத்தவன்), கலைமணி என்கிற ரெக்ஸலின் மேரி (பெரிய அக்கா)

முன்னால் சேரில் உட்கார்ந்திருப்பவர்: வின்சென்ட் (தம்பி)


*****

17 views0 comments

Comentarios


bottom of page